உயிர்ப் பிச்சை…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 12, 2019
பார்வையிட்டோர்: 6,338 
 

‘ரதி..! ரொம்ப தூர பயணமா…?”

‘இல்ல மாமா…! ஆஸ்பத்திரிக்குத்தான் போறேன்..!”

‘தனியா போகாமே வீட்ல யாரையும் கூட்டிக்கிட்டுப் போகலாந்தானே..?”

“தம்பி ஸ்கூலுக்குப் போயிட்டான்.. அம்மா வீட்டு வேல செய்யணும்.. அப்பாவுக்கு கஷ்டம் குடுக்க விருப்பமில்ல…” அவளின் வருத்தம் நிறைந்த முகத்தில் சிறு புன்னகை இழையோடியது.

‘எவ்வளவு அழகான பொண்ணு…? எப்படி இருந்த பொண்ணு..? தக்காளிப் பழம் மாதிரி இருந்தவளாச்சே..! இப்ப… கருத்துப் போயி.. இந்த வயசுல ஒடம்பு தளர்ந்து… ச்சே… கடவுள் இப்பிடி சோதிக்கலாமா…?” சீரங்கன் மாமா ரொம்பவும் வருத்தப்பட்டார். தனது மகளுக்கும்¸ ரதிக்கும் ஒரே வயது.. ஒரே பள்ளிக்கூடம்… அவரது மகளை விட இவள் ரதி என்ற பெயருக்கேற்ற அழகு தேவதையாக இருந்தவள்.. இவள் தன்னை பெண் பார்க்க வந்த குடும்பங்களையெல்லாம் ஒதுக்கி வந்த ரகசியம் கடைசியில்தான் புரிந்தது… அவளுக்கு சிறுநீரகக் கோளாறு.. இந்த நோய் மருந்து மாத்திரைக்கு கட்டுப்படாது.. உறுப்பு மாற்று சிகிச்சை செய்வதை விட வேறு வழி கிடையாது. அவளின் நோயை அறிந்துக் கொண்ட குடும்பம் மௌனத்தில் ஆழ்ந்து போனது.. தனக்கு சிறுநீரகம் வழங்க முன் வந்த குடும்பத்தினரிடம் ரதி கடுமையாக நடந்துக் கொண்டாள். அண்ணனோ… அக்காவோ.. முன் வந்தால்¸ தான் தற்கொலை செய்துக் கொள்வதாக பயமுறுத்தினாள். அவளை பொறுமையாக அணுக வேண்டுமென்று குடும்பத்தினர் பேசிக் கொண்டனர்.

ஒரு காலத்தில் சிறுநீரகம் வழங்குவது தானமாகவிருந்தது.. இப்போது அதுவும் வியாபாரமாகிவிட்டது. பணமில்லாதவர்கள் உறவுகளின் உயிரைக் காப்பாற்றுவதற்கு தங்களது உறுப்புக்களை கொடுக்க முன்வருவதைத் தவிர வேறு அவர்களால் என்ன செய்ய முடியும்..? ரதி விஞ்ஞான கல்வியில் உயர் தரம் முடித்தவள். பல் கலைக் கழகம் போக முடியாது¸ இரண்டு புள்ளிகள் குறைவாகப் பெற்ற மன வேதனையிலிருந்தே… இந்த வருத்தமும் மறைவாக அவளைத் தொடர்ந்தது. உள் மனம் ஊமையாகிப் போனதால் உடலும் தளர்ச்சியடைந்தது.. அவள் மனச் சாந்திக்காக ஆசிரியர் வேலை தேடி வந்த பிறகே அவளும் தன்னை சுதாகரித்துக் கொண்டு வாழ்க்கையில் பிடிப்பை தற்காலிகமாக ஏற்படுத்திக் கொண்டாள்.

அவளுக்கு மருத்துவம் பார்க்கும் டாக்டர்¸ அவளிடம் மனோ ரீதியாக தைரியத்தை வளர்த்துக் கொண்டு வந்தார். ‘ரத்தம் சுத்தம் செய்து கொள்ளுங்கோ… பயப்படத் தேவையில்ல… நாட்டில தொன்னூறு வீதமானவங்களுக்கு இந்த வருத்தம் இருக்கு. ‘டோனர்” ஒருத்தரத் தேடிக் கொள்ள முயற்சி செய்யுங்கோ..!’ என்று அன்பு ததும்பும் ஆதரவான வார்த்தைகளைச் சொல்வார்.

ஒரு சிறு நீரக நோயாளி¸ நோய் கண்ட காலத்தில் மாற்றுறுப்பு சிகிச்சை செய்துக் கொள்ள வேண்டும். அது வரை செயற்கை ரத்தச் சுத்திகரிப்பு எவ்வளவு காலந்தான் செய்துக் கொண்டிருப்பது..?

ரதி செல்வந்தக் குடும்பத்தைச் சாராதிருந்தாலும் ஓரளவு வீடு¸ வாசல்¸ தொழில் வருமானம் என்ற மத்திய தர குடும்பமாகவிருந்தாள். அரசாங்க ஆஸ்பத்திரிக்குப் போய் டாக்டர்மார்களைச் சந்தித்து மருந்து வாங்கி வருவது ஓர் சாதனையாகவே இருந்தது. நீரிழிவு¸ சிறு நீரக வருத்தம் உள்ளவர்கள் ஆயிரம் ஆயிரமாக அரச வைத்தியசாலைகளில் நிறைந்திருப்பார்கள். முட்டி மோதிக் கொண்டு ஒரு போராட்டமாகவே அந்த ஆஸ்பத்திரி சூழல் அமைந்திருக்கும். நோயாளிகள் என்று கூட பாராமல் அங்கு தொழில் செய்வோரின் சுடு சொற்கள்… அவமரியாதைகள் வெறுப்பூட்டிக் கொண்டிருக்கும். மணிக் கணக்கில் வரிசையில் நின்று துண்டு எடுத்து¸ பதிவு பண்ணி போராட்டத்தின் உச்ச கட்டமாக இறுதியில் டாக்டர் அருகில் அமர்ந்து உயிரின் நம்பிக்கைக்கு உத்தரவாதம் வழங்கும் தெய்வமென அவரின் முகத்தையே பார்த்துப் பேசினாலும்¸ அவரது கொதிப்பு¸ அவரது அவதி¸ அவரது எரிச்சல் என அனைத்தும் நிறைந்தவராக¸ நோயாளியின் நோட் புத்தகத்தில் தொடர்ந்து எழுத வேண்டிய மருந்துகளை எழுதி ஆசனத்தை விட்டு அகன்று செல்லும்படி செய்து¸ அடுத்த நோயாளியின் நோட் புத்தகத்தை வாங்கி மருந்தெழுதும் ஒரு மருத்துவனின் மேல் எப்படி வருத்தக்காரர்கள் நம்பிக்கைக் கொள்வர்..?

நாட்டின் குடி சனத் தொகையில் அரைவாசி பேர் அந்த ஆஸ்பத்திரிக்குள் குவிந்திருப்பார்களோ..? ரதி பலமுறை இந்த நரக வேதனைகளுக்கு முகம் கொடுத்தவள்.. தனியார் மருத்துவமனையை நோக்கினாள். தனியார் மருத்துவமனைகள்¸ நாட்டின் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட கொள்ளையர்களின் நிறுவனமாக¸ பல மாடிக் கட்டிடங்களோடு உயர்ந்து நிற்கின்றது. நான்கு மணிநேரம் டயலோஸிஸ் செய்வதற்கு எட்டாயிரம் ரூபாய் கட்டவேண்டும். பண வசதி படைத்தவர்கள்… பணத்தைத் தேடிக் கொண்டிருப்பவர்கள் மட்டுமே இவ்வாறான ஆஸ்பத்திரிக்கு வர முடியும். இங்கே சிற்றூழியர்கள் நாய்களைப் போல உறுமிக் கொண்டிருக்க மாட்டார்கள். லஞ்சப் பணம் கேட்டு நச்சரித்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

அரச வைத்தியசாலையில் சுடு சுடு முகத்தோடு ரதியை பல முறை சோதித்த அதே டாக்டரே புன் முறுவலோடு அந்த அழகிய தனியறையில் அமர்ந்து நோயாளிகளைப் பார்வையிடுகின்றார். அந்த ஒரு மணி நேரத்து வாடகைக் கதவில் அவரது மருத்துவப் படிப்பை விளம்பரப் படுத்தும் பெயர்ப்பலகை மாட்டப்பட்டிருந்தது.

ரதி தாயுடன் சென்றிருந்தாள். முகம் பூரித்து புன்னகையோடு அந்த டாக்டர்… ரதியின் அம்மாவையும் அமரச் சொல்கிறார். நோட் புத்தகத்தை ரதி நீட்டினாள். தனது கையெழுத்துக்களைக் கண்ட டாக்டர் அதிர்ச்சியைக் காட்டிக் கொள்ளாமல் மேலும் புன்முறுவல் செய்கிறார். “இந்த மருந்தோட இன்னும் இரண்டு மருந்து எழுதித் தாறன்.. அதையும் சேர்த்தெடுங்கோ… இந்த ‘டெஸ்ட்டை’ எடுத்துக் கொண்டு இன்னும் ஒரு மாதத்துக்குள்ள இங்க வாங்கோ..!” என்று வணக்கம் கூறாத குறையாக அந்த அறையிலிருந்து ரதியை வழியனுப்பி வைத்தார்.

ஒரே மருத்துவர் இரண்டு சூழல்களில் இரண்டு மனோபாவங்களில் கருமம் ஆற்றுகின்றார்!. ஒரு பக்கம் மருத்துவ வியாபாரியாக தனியார் ஆஸ்பத்திரியிலும் மறு பக்கம் அரச சம்பளம் வாங்கும் விசுவாசமற்ற ஊழியராகவும் வாழப் பழகிக் கொண்டவர்கள். ரதி நகைப்புடன் தாயைக் கூட்டிக் கொண்டு வெளியில் வருகிறாள். ‘டக்டர் சிரிச்ச மொகம்.. நல்ல மனுசனா இருக்காரு..!” அம்மாவுக்கு அந்த ஏ.சி. அறையின் மூன்று நிமிட குளிர் காற்று நல்ல அபிப்பிராயத்தைப் பொழிந்தது. ‘ அம்மா அந்த ஆளு பொல்லாத சுடுமூஞ்சிக்காரன்..! அரசாங்க ஆஸ்பத்திரியில புத்தகத்த நீட்டும் போதே புடுங்குவான்..! இங்க ரெண்டு கைகளையும் நீட்டி வாங்குவான்…” ரதியின் அனுபவம் அம்மாவின் அபிப்பிராயத்தைக் குழப்பியது. ரதி தனியார் மருத்துவமனைகளின் வருமானத்தை மேலோட்டமாக கணக்கு போட்டுக் கொண்டு போனாள்.

தனியார் மருத்துவமனைகளில் டாக்டர் பீஸ் இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய்.. அதில் மருத்துவமனைக்கு ஐந்நூறு போக டாக்டருக்கு இரண்டாயிரம் ரூபாய்.. ஒரு மருத்துவமனையில் காலை ஏழு மணி முதல் எட்டு மணி வரை கிட்டத்தட்ட பதினைந்து அல்லது இருபது நோயாளரை பார்வையிடுவார். சில நேரங்களில் பிற்பகல் ஒரு மணிக்கும் வருவார். அப்போதும் பதினைந்து பேர்.. பின்னேரம் ஐந்து மணிக்கு இருபது பேரும் வருவர். அதன் பிறகு இன்னொரு மருத்துவமனையில் இரவு எட்டு¸ ஒன்பது மணி வரையிலும் வேலை… சில டாக்டர்கள் இரவு 11 மணி வரையிலும் நோயாளர்களைப் பார்வையிடுகின்றார்கள். ஒரு நாளில் தனியார் மருத்துவ மனைகளில் நாலாபுறமும் சுற்றிவரும் ஒரு டாக்டருக்கு ஐம்பது நோயாளராவது கிடைப்பார்கள். ஒரு நாளில் ஒரு லட்சத்துக்கு அதிகமாவே உழைக்கிறார். மாதத்தில்..? அத்துடன் அரச வைத்தியசாலை சம்பளம்.. ? அத்துடன் தனியார் மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கு எத்தனை மெடிக்கல் ‘டெஸ்ட்’ எடுக்கச் சொல்கிறாரோ¸ அத்தனை டெஸ்ட்டுக்கும் கமிஷன்..? அது மட்டுமல்லாமல் மருந்து வியாபாரிகள் சிபாரிசு செய்யும் மருந்துகளை நோயாளிகளுக்கு எழுதிக் கொடுப்பதிலும் கமிஷன் உண்டு.! மருந்து விற்பனையாளர்கள் கழுத்துப் பட்டிகளைக் கட்டிக் கொண்டு நோயாளர்களுக்கு மத்தியில்¸ டாக்டரை கதவு இடுக்கில் எட்டி எட்டிப் பார்ப்பதும் ஒரு வேடிக்கையாகவிருக்கும்!. அம்மாவிடம் தன் நினைப்பை ரதி விவரித்துக் கொண்டுப் போனாள்.

‘ஆமாண்டி..! கைக் காசு ஆஸ்பத்திரியில மாட்டிக்கிட்டா.. ஒரு கிளாஸ் தேசிக்கா தண்ணிக்குக்கூட நூத்தி அம்பது ரூபா சார்ச்சு பன்னுவானுங்கலாம்..! அவள் காதுக்குக் கிட்டிய ஒரு தகவலை மட்டும் ஆதங்கப்பட்டுச் சொல்லிக் கொண்டுப் போனாள்.

ரதியும்¸ அம்மாவும் பஸ் ஏறி வீட்டுக்கு வந்தார்கள். ரதி அசதியோடு கட்டிலில் அமர்ந்தாள். அம்மாவை அருகில் அழைத்து தனது யோசனைகள் சிலவற்றைச் சொன்னாள். ரதிக்கு டயலோசிஸ் ஆரம்பத்தில் வாரம் ஒருமுறை செய்துக் கொள்ளும்படி சொல்லியிருந்தார்கள். பிறகு ஐந்து நாட்களுக்கு ஒருமுறை… இப்போது மூன்று நாட்களுக்கு ஒருமுறை செய்து கொள்ள வேண்டும் என்று சொல்கின்றார்கள். அந்தளவு அவளது உடல் நிலை பாதிப்படைந்திருந்தது. இரத்தம் சுத்திகரிப்பு சிகிச்சை இன்னும் நாடு முழுவதும் மக்களிடம் செல்ல வில்லை. ஆதார வைத்தியசாலைகளில் மருத்துவ ஊழியர்கள் சும்மா தொழில் வாய்ப்புக்காக நூற்றுக் கணக்கில் நியமிக்கப் பட்டிருந்தாலும்¸ நோயாளருக்கு அவசியமான சிகிச்சைகள் கிடைப்பதில்லை. ரதி தனது கிராமத்திலிருந்து இரத்தம் சுத்திகரிக்க வரவேண்டுமானால் நூறு கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டும். .

“பெரியாஸ்பத்திரி பக்கத்திலேயே வாடகைக்கு ஒரு அறை வாங்கி¸ தங்கிக் கொள்றேம்மா… நானே சமைச்சி சாப்பிட்டுக்கிறேன். எனக்கு பஸ் பயணம் கஷ்டமாயிருக்கு.. ஒங்களால எதுவும் இனி செய்ய முடியாது. அப்பாவுக்கும்¸ ஒங்களுக்கும் வயசு போச்சு.. அண்ணன் குடும்பமாயிட்டாரு… அவருக்கு தொந்தரவு குடுப்பது குடும்பப் பிரச்சினைய உண்டாக்கும்..! நான் யாருக்கும் இனிமேலும் தொல்ல குடுக்க விரும்பலேம்மா… இந்த ரெண்டு வருசமா நான் ரொம்ப தொல்ல குடுத்திட்டேம்மா…!” ரதியின் வார்த்தைகளை மீறி அவளது கண்கள் சுடுநீரைக் கொட்டின. தாய்க்குத் தெரியாமல் துடைத்துக் கொண்டாள்.

ஒரு சிறுநீரக நோயாளிக்கு¸ டயலோசிஸ் என்னும் ரத்தச் சுத்திகரிப்பு சிகிச்சையைத் தவிர வேறு சிகிச்சை கிடையாது. ஆதரவுக்காக மாத்திரைகள் சில கொடுப்பார்கள். இரத்தச் சுத்திகரிப்பு செய்து கொள்ளாவிட்டால்¸ இரத்தத்தில் கழிவுப் பொருள் கலந்து விடும். நிறம் கறுவலாகும். உடல் வீங்கத் தொடங்கும். வாழ்க்கையில் நிராகரிக்கப்பட வேண்டிய உறவாக ஒதுங்கிக் கொள்ளும் நிலைமை தானாகவே ஏற்பட்டு விடும்.

ரதியின் தாயார் அவளை இறுகக் கட்டிக் கொண்டு அழுதாள். “நான் என்ன பாவம் பண்ணினேனோ தெரியல்லீயே… ஆண்டவரே…! ஏம் புள்ளய இப்பிடி சோதிக்கிறியே..?” அந்த வயோதிபத் தாய் குமுறி அழுவதைத் தாங்கிக் கொள்ள முடியாத மகளும் உணர்ச்சி வசப்பட்டு விம்மினாள். சிந்திக்கத் தெரிந்த மனித மனம் நோய்களை நினைத்துப் பயந்தது. ரதி தன்னைச் சுதாகரித்துக் கொண்டு அம்மாவை ஆறுதல் படுத்தினாள். இரவில் தனிமையில் இருக்கும் போதுதான் ரதிக்கு மரண பயம் ஏற்படுவதுண்டு. இரவு 11 மணியிலிருந்து இரண்டு… மூன்று… நான்கு மணி வரை தேவையில்லாத கற்பனைகளை வரவழைத்துக் கொண்டிருப்பாள். இரவுதான் நோயாளியை பயமுறுத்தும் பொழுதாகும். ஆஸ்பத்திரிக்கு வரும் போது¸ சக நோயாளிகளையெல்லாம் பார்க்கும் போது பத்தோடு பதினொன்றாய் மனம் அவர்களோடு சேர்ந்துக் கொள்ளும். தைரியம் மீண்டும் வந்து விடும்.

அம்மா ரதியிடம் ஆறுதலாகப் பேசினாள். “ அப்பாவையும்¸ தம்பியையும் அண்ணன் குடும்பத்தோட விட்டுட்டு… ஒன்னோட வந்து தங்கிக்கிறேன்..தங்கம்…!” என்றவள்¸ மகளின் சிகிச்சைக்காக மூத்த மகன் செய்திருக்கும் ஏற்பாடுகளைச் சொல்ல வந்தவள்¸ வார்த்தைகளை அப்படியே அடக்கிக் கொண்டாள்.

“இன்னும் கொஞ்ச நாளைக்கு ரத்தம் சுத்தம் செய்யலாம். கிட்னி தர்றதுக்கு ஆள் கெடைச்சிருக்கு..! அவருக்கு அஞ்சி லச்சம் குடுக்கனும். அவருக்கு மருத்துவ சோதனை செய்றதுக்கு மூனு லச்சம் போகும். எல்லா செலவுகளுக்கும் அண்ணன் பணம் தேடி வச்சிருக்கான். நீ கவலப் படுறதுக்கு ஒன்னுமே இல்ல..” என்று ரதியின் தாய் மகளின் தலையைக் கோதி விட்டாள். அவள் “அண்ணனுக்கு எப்படி அவ்வளவு பணம் தேட முடியும்..?” என்று கிண்டி கிழங்கு தேடிக் கொண்டிருந்தாள். அம்மாவிடம் பதில் கிடைக்காதவளின் நோய்வாய்பட்ட மனச் சிறகு சுத்தி சுத்தி வெளியில் பறந்தது. மனிதரின் நோய்…. பரிதாபப் படும் உறவுகள்… கட்டாயப் படுத்தும் சிகிச்சை… வியாபாரம் செய்யும் மருத்துவச் சூழல்… குடும்பத்தாரின் தவிப்புக்கள்…

அவள் எத்தனை பத்திரிக்கை செய்திகளைப் வாசித்திருக்கிறாள்…! நோயாளிகளின் படத்தைப் போட்டு¸ வங்கிக் கணக்கு இலக்கத்தைத் குறித்து நிவாரணம் கேட்கும் நிலை… உயிர்ப் பிச்சைக் கேட்கும் நிர்க் கதி… அதை எத்தனைப் பேர் வாசிக்கின்றனர்… இரக்கம் கொள்கின்றனர்…? எத்தனைப் பேர் வங்கியைத் தேடி¸ கணக்கு இலக்கத்தை எழுதிக் கொண்டுப் போய் வைப்பிலிடுகின்றனர்..? அவதி நிறைந்த வாழ்க்கையில்¸ யார் யாரை நினைப்பர்..? ரதிக்கு ஒன்று நினைவுக்கு வந்தது.. ஆசிரியர் தொழிலுக்கு வந்தப் பிறகு ¸ இரண்டு நோயாளிகளுக்கு ஆயிரம்… ஆயிரம் என்று இரண்டாயிரம் கணக்கில் இட்ட ஞாபகம்..!

பத்திரிக்கையில் பண உதவி கேட்பவரும் உண்டு.. சிறுநீரகம் கேட்பவரும் உண்டு.. சிறுநீரகம் இன்று வருமானம் தரும் வியாபாரமாகி விட்டது. ஓர் உயிருக்கு உறுப்பு விற்பனை செய்வதற்கு இன்னொரு உயிரைத் திருடுகின்ற குரூரம் உலகமயமான வர்த்தகமாகிவிட்டது. மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ..? என்று வினா தொடுத்த பாரதி இன்றிருந்தால்¸ மனிதர் உயிரை மனிதர் பறிக்கும் வழக்கம் உருவாகியிருப்பதை பற்றி என்ன நினைத்திருப்பார்..? ரதி தன்னை வேதாந்தியாக சற்று நேரம் நினைத்துக் கொண்டு மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.

****

ரதியின் அண்ணன்¸ கிட்னி கொடுத்து உதவுபவருக்கு ஐந்து லட்சம் பணம் கொடுத்திருந்தார். அவர் தன் மண் குடிசை வீட்டைத் திருத்திக் கொள்வதற்காகவேதான் கிட்னியை விற்க சம்மதித்தாராம்.

அவரை அழைத்துக் கொண்டு சென்று அவருக்கான மருத்துவ பரிசோதனையும் முடிந்தது. மறு நாள் ரிப்போட் வரும்.. அதற்கு மறுநாள் தங்கச்சிக்கு உறுப்பு பொருத்துவார்கள். என்ற அண்ணனின் எதிர்பார்ப்பில் இடி விழுந்தது. அவரது சிறுநீரகம் நோய்வாய்ப்பட்டதென நிராகரித்து விட்டார்கள். உறுப்புக்கும்¸ சோதனைக்கும் எட்டு லட்சம் செலவு போனது.

மனம் அதிர்ச்சியில் தாக்கப்பட்டாலும் அண்ணன் தன்னை சுதாகரித்துக்கொண்டார்.பணம் செலவு போனால் பரவாயில்லை.. இன்னும் முயற்சி எடுப்போம் என்று தைரியத்தை விடவில்லை.

ரதி இப்போது அம்மாவுடன் ஆஸ்பத்திரிக்கு அருகில் வாடகை அறை எடுத்து வசதியாக சிகிச்சைக்கு சென்று வருகிறாள்.

****

இன்று சிறுநீரக நோயாளர்கள் சிகிச்சைப் பெறும் வார்ட்டில் ஒரு நடுத்தர வயதுப் பெண் ரத்தம் சுத்திகரிப்பு செய்து கொள்பவர்களுக்கு சிற்றுண்டி பொட்டலம் கொடுத்துக் கொண்டிருந்தாள். டயலோசிஸ் செய்து முடிந்ததும் நோயாளியின் உடல் களைப்படைந்து போயிருக்குமாம். அவர்களுக்கு அந்தப் பெண் வழங்கும் உணவும்¸ நீராகாரமும் பேருதவியாகவிருக்கும் என்று தனது அனுபவத்தைப் பகிர்ந்துக் கொள்கிறாள். அந்த மனிதாபிமானம் நிறைந்த பெண்ணும் சிறுநீரக சிகிச்சையின் பின் சுகம் பெற்று வாழும் ஒரு குணவதியாகும் என்பது பின்னர் தெரிய வந்தது. தான் குணமாகியது போன்று அடுத்தவர்களும் குணமடைய வேண்டும் என்பது அவளது பிரார்த்தனையாகும். இந்த புனிதமான நிகழ்வுக்குப் பின் இன்னுமொரு நிகழ்வும் அந்த வார்ட்டில் நடந்தது. அங்கே சுவற்றில் தொங்கும் ஜனாதிபதியின் படத்துக்கு முன்னால் நின்று அத்தனை நோயாளர்களும்¸ அவர் தீர்க்க ஆயுளைப் பெற்று வாழ வேண்டுமென தாங்கள் வணங்கும் தெய்வங்களை வேண்டி பிரார்த்தனை செய்தார்கள்.

ஜனாதிபதி அவர்கள் சமீபத்தில் சீன நாட்டுக்கு விஜயம் செய்திருந்த போது¸ தங்கள் நாட்டுக்கு ஒரு சிறுநீரக மருத்துவமனை கட்டித் தரும்படி கேட்டிருந்தார். அவரது வேண்டுகோளை சீன அரசும் ஏற்று மருத்துவமனை விரைவில் கட்டித் தருவதாக வாக்குறுதி வழங்கியுள்ளது என்ற தகவலை நினைவுறுத்தியே அந்த பிரார்த்தனை நடந்தது. இனி வரும் காலங்களில் சிறுநீரக நோயாளர்கள் மரணிக்கக் கூடாது. அவர்கள் அந்த நோயை வெற்றிக் கொள்ள வேண்டும் என்று நோயாளர்கள் பாடிய பிரார்த்தனை பாடல்கள் மனதை உலுக்கின.

அந்த இரண்டு நிகழ்வுகளுக்குப் பின்னர் வார்ட்டிலிருக்கும் பெண்கள் எல்லோரும் ரதியை சூழ்ந்துக் கொண்டார்கள். ரதியைப் போன்று இரண்டொரு நோயாளர்களைத் தவிர அந்த வார்ட்டில் மற்றைய எல்லோரும் கிராமத்துப் பெண்களாவர். அவர்கள் தங்களைப் பீடித்திருக்கும் நோயைப்பற்றி பெரிதாக எதையும் அறிந்திருக்க வில்லை.

ரதியும் அவளது நெருங்கிய சிநேகிதியும் இந்த நோய் பற்றிய தகவல்களை அவர்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். .

கதை கேட்டுக் கொண்டிருந்த ஒரு பெண்¸ இருதய மாற்று சிகிச்சைக்கு எட்டு ஒம்பது லட்சத்துக்குள்ளே செலவு போகும் போது¸ கிட்னி சிகிச்சைக்கு மட்டும் இருபது லச்சத்துக்கு மேலே செலவாகுவதன் காரணம் என்னவென்று கேட்டாள். மாரடைப்பு நோயை விட இது தொடர்ந்து தொல்லை கொடுத்து உயிரைப் பறிக்கும் என்பதை மட்டுமே அவர்களால் சொல்ல முடிந்தது.. பிறரின் உறுப்பை விலைக்கு வாங்குவதற்கும்¸ அந்த உறுப்புக்குரியவரை மருத்துவ சோதனை செய்வதற்கும்¸ தரகர்மார்களுக்கும் விலை உயர்ந்த மருந்துகளை வாங்குவதற்கும் பணம் செலவாகலாம்… என்றும் பதில் சொன்னார்கள்.

சிறிது நேரம் அவர்கள் தங்களோடு வார்ட்டில் இருந்து வீடுகளுக்குத் திரும்பிய சிநேகிதிகளை நினைத்து வருந்தினார்கள். நோயிடம் தோல்வி கண்டு இறந்து போன சிநேகிதிகளும் அவர்களோடு அங்கே வந்து கலந்துக் கொண்டிருப்பதாக நினைத்து அவர்களுக்கும் மரியாதை செய்தார்கள்.

சிறைச் சாலை கைதிகளிடமும்¸ வைத்தியசாலை நோயாளிகளிடமும் ஏற்படும் பரஸ்பர நட்புக்கள் வாழ் நாள் முழுவதும் நினைவில் ஆழ்ந்திருப்பவைகளாகும்……

சில நோயாளிகள் ஜனாதிபதிக்கு ஒரு வேண்டுகோள் கடிதம் அனுப்ப வேண்டும் என்றார்கள். அதாவது… நாடு முழுவதிலும் இருக்கும் ஆதார வைத்தியசாலைகளில் இரத்தம் சுத்திகரித்துக் கொள்வதற்கும்¸ மாற்று சத்திர சிகிச்சை செய்து கொள்வதற்கும் முடிந்தளவு மருத்துவமனைகள் திறக்கப்பட வேண்டும் என்று கடிதம் எழுத வேண்டும் என்றார்கள்.

வைத்தியசாலையில் சக நண்பர்களோடு குதூகலமாகக் கலந்துக் கொண்டு தங்குமிடத்துக்கு வந்ததும்¸ ரதிக்கு மயக்கமாகவிருந்தது.. சீக்கிரமாக மாற்று சிகிச்சை செய்து கொள்வதற்கு அண்ணன் முடிந்தளவு முயற்சி எடுத்துக் கொண்டிருப்பார் என்று நினைத்தாள். அம்மாவிடம் கிட்னி தானம் செய்பவர் கிடைத்திருப்பாரா என்று கேட்பதற்கு தயங்கினாள். தனக்கு எது நேர்ந்தாலும் பரவாயில்லை. பெற்றோருக்குக் கஷ்டத்தைக் கொடுக்காமல் இருந்தால் போதுமென்று மௌனமாகிவிட்டாள்.

சிறுநீரகம் தருவதற்கு முன் வந்தவர் நிராகரிக்கப்பட்ட விசயத்தை தாயிடம் கூட அண்ணன் கூற வில்லை. அம்மா கவலைப் படுவார் என்பதை அவன் அறிவான். அவனது அயராத முயற்சி மூலமாக இன்னுமொருவர் அதே வாரத்தில் கிடைத்தார். அவருக்கும் அந்த லட்சங்களை ரதியின் அண்ணன் கொடுத்தார். அவருக்கு உடற் சோதனை ஒரு வாரத்துக்குள்ளேயே நடந்து முடிந்தது.

துன்பம் வரும்போது அது தனியாக வருவதில்லை. ஒரு பட்டாளத்தையே கூட்டிக் கொண்டு வருமாம். அது போல ரதியின் வாழ்க்கையில் துயரம் தொடர் கதையாகியது. இரண்டாவது கொடையாளியை சோதித்ததன் மூலம் அவரது உடலில் பலவித கோளாறுகள் மூலம் சிறுநீரகம் தானம் பண்ணுமளவுக்கு பொருத்தமில்லை என்று மிக மிக வேதனையுடன் டாக்டர் கையை விரித்தார். ரதியின் அண்ணன் மௌனமாகி தலை குனிந்து நிற்கும் போது¸ டாக்டர் அவரை வினவினார். “பணத்துக்கு என்ன செய்யப்போறீங்க..? உங்களால் இன்னொரு முயற்சி பண்ண முடியுமா..?” என்று கேட்டார்.

“பாப்பம் டாக்டர்..” என்று கம்மிய குரலோடு கூறிவிட்டு¸ வெளியில் வந்தான். தன்னுடைய உறுப்பை தானம் செய்வதற்கு அவன் விரும்பினாலும்¸ தங்கச்சி விரும்ப வில்லையே என்று மிகவும் வேதனைப்பட்டான். எவரும் கிடைக்கா விட்டால்¸ தங்கச்சிக்கும்¸ அம்மாவுக்கும் தெரியாமல்¸ தனது கிட்னியை சோதித்து¸ அது சரி வந்தால் கொடுத்து விடலாம் என்று மனதுக்குள் முடிவெடுத்தான் எந்தச் சந்தர்ப்பத்திலும் வீட்டையும் காணியையும் விற்றுப் பணம் தேடிய விசயம் தங்கச்சிக்குத் தெரியக்கூடாது என்பதில் கவனமாகவிருந்தான்.

இன்னொரு கடைசி முயற்சி எடுப்போம் என்று தனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரை சந்திப்பதற்காக பயணமாவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் போது¸ ரதியின் தாயார் அவசர அவசரமாக வீட்டுக்கு வந்துக் கொண்டிருந்தாள். ரதி மயக்கம் போட்டு விழுந்ததாகவும்¸ ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு வருவதாகவும் சொன்னார்.

இருவரும் ஆஸ்பத்திரிக்கு விரைந்தார்கள்.

ரதியின் உடல் நிலை இரத்தம் சுத்திகரிப்புக்கு ஒத்துழைக்க வில்லை என்று நர்ஸ்மார்கள் டாக்டரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

ரதியின் தாயாரும்¸ அவளது அண்ணனும் வார்ட்டுக்கு வெளியே நின்றுக் கொண்டிருந்தார்கள். நினைத்த நேரம் வார்ட்டுக்குள் எவரும் நுழைய முடியாது.

வெள்ளைப் போர்வையால் மூடப்பட்ட ஒரு உடலை ஸ்ட்ரெச்சரில் தள்ளிக் கொண்டு வரும் ஆஸ்பத்திரி ஊழியருக்கு அவர்கள் இருவரும் வழி விட்டு ஒதுங்கி நின்றுக்கொண்டிருந்தார்கள்.

(யாவும் நடப்பவை)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *