கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 10,233 
 

கதவைத் திறந்த அம்மாவின் முகத்தில் புன்னகை அது இன்ப அதிர்ச்சியா, ஆச்சரியமா என முருகேசனால் அனுமானிக்க முடியவில்லை. அவள் கண்கள் அவனுக்குப் பின்னால் யாரையோ தேடின.

“வாப்பா…! நல்லாயிருக்கியா…? வசந்தியையும் நந்தினியையும் அழைச்சிட்டு வரலியா?”

“இல்லம்மா!” ஒற்றை வார்த்தையோடு முடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தான். உள்கூடத்தில் காலடிபட்டதும் மனம் ஒருவித அமைதியாகிவிட்டதைப்போல உணர்ந்தான்.

உயிரின் உறவேஇருபத்தைந்து ஆண்டு காலம் அவன் தவழ்ந்து, நடந்து, ஓடி, விளையாடி வளர்ந்த வீடு. ஆங்காங்கே உதிர்ந்த காரை சுவடுகள். ஓரத்தில் கயிற்றுக் கட்டில். சமையல் கூடத்தில் பாத்திரங்கள் அடுக்கியிருக்கும் நேர்த்தி. கம்பீரமாய் நிற்கும் மர மேசை. அதன் மேல் அமர்ந்திருக்கும் பெரிய வானொலிப்பெட்டி எல்லாம் அப்படியே தான் இருந்த இடத்தில் இருக்கின்றன.

சுவரில் புகை படிந்து கறுத்திருந்த அப்பாவின் படம். ஊதுபத்தி வாசனையைத் தந்துகொண்டிருந்தது.

அம்மா சாப்பிடுகிறாளோ இல்லையோ தினம் சாயங்காலத்தில் படத்தைப் பார்த்து வணங்கி திருநீறை இட்டுக்கொள்வது தவறாது.

இப்போது ஏனோ தாயை ஏறிட்டுப் பார்க்கும் துணிச்சல் வரவில்லை. அடுப்பை பற்ற வைத்தவள், எதையோ நினைத்துக் கொண்டவள் போல, “இரு…தம்பி! காப்பி பொடி இல்லை…! பக்கத்து வீட்டுல வாங்கிட்டு வந்துடறேன்…!”

ஓடினாள்.

சொந்த வீட்டிலேயே விருந்தாளியாக ஓர் அந்நியனாக உட்கார்ந்திருக்கும் மனநிலையில் முருகேசன்.

தான் வந்திருக்கும் காரணத்தை சொன்னால் அம்மா தாங்கிக் கொள்வாளா? என்ற யோசனை அவனுள் ஓடியது. தைரியமாக அவள் முகத்தை நேருக்கு நேர் பார்க்க இயலாமல்

குழம்பினான்.

வந்தவள் மறுபடியும் ஓடினாள்.

“பொறு! முருகேசா!! சொசைட்டில பால் லாரி போயிருக்காது… பால் வாங்கிட்டு வந்துடறேன்…!”

முதுமைதான், ஆனாலும் மகன் வருகை அவளை இளமை ஆக்கியிருந்தது. மீண்டும் ஓடினாள். அம்மாவின் அன்புக்கு ஈடேது என ஞானிகளும் கூட தத்துவம் உதிர்க்கும் மண் இது. கொடூரமான காதலிக்காக தாயைக் கொன்று அவளின் இதயத்தை எடுத்துச் சென்ற மகன் கால் தடுக்கி விழ, “பார்த்துப் போப்பா” என்று சொன்ன கதை கூட அவனது நினைவுக்கு வந்தது.

“வயிற்றில் இருந்தபோது உதைத்தது என்று வளர்ந்த பின்னும் புறக்கணிப்பால் உதைக்கின்றோமே. இந்த வலிகளை மனதுக்குள் தாங்கிக்கொண்டு எப்படி சிரிக்கிறாள்’ என மனதுக்குள் குமைந்தான்.

முருகேசன், நினைவுகளின் வழியே ஓடி சிறுவனானான்….

நான்கு வயதில் அவன் தந்தை இறந்துவிட, வீட்டில் கிடத்தி வைத்திருந்தபோது அவன் சட்டை நனையும் அளவு இறுக்கிப் பிடித்துக்கொண்டு அழுது புரண்டதை நினைக்கும் போது இப்போதும் உடல் பதறுகிறது. குடும்பம் மேடேற தொழிலையும் தேர்ந்தெடுத்துவிட்டாள்.

மாலை நேரமெல்லாம் வியர்க்க, விறுவிறுக்க மாவு அரைத்து மறுநாள் காலை இட்லி சுட்டு விற்க கிளம்பும் முன் முதல் போனி அவனுக்குத்தான்.

“எல்லாருக்கும் முதல்” என்று பெருமிதமாய் சாப்பிடுவான்.

சிறிது வளர்ந்ததும் ஒரு நாள் அவளிடம் கேட்டான்…

“ஏம்மா சாப்பாட்டை வித்துத்தான் நாம சாப்பிடணுமா?”

அப்பாவித்தனமான அவன் கேள்விக்கு அவனைக் கட்டிப்பிடித்து அழுதாள். ஒவ்வொரு ஆண்டு தேர்வு முடிவின்போது பள்ளி வாசலுக்கே வந்து பரபரப்பாய் நிற்பாள்.

மாணவர் கும்பலில் “அம்மா! நான் பாஸ்!” என ஓடி வரும்போது அவள்முகம் சூரியனைப்போன்று பிரகாசிக்கும்.

படிப்பு முடித்த பின்பு முதன் முதலாய் வேலைக்கு வந்த இன்டர்வியு கார்டை புரியாவிட்டாலும் எத்தனை முறை கண்களில் மாற்றி மாற்றி ஒத்திக்கொண்டாள் எனக் கணக்கே இல்லை.

அவளின் கைராசியோ இல்லை சென்டிமென்ட்டோ அந்த வேலை உடனே கிடைத்தது. அன்றைய காலகட்டத்தில் இருபதாயிரம் ரூபாய் டெபாசிட் கட்ட வேண்டும் என்றபோது தடுமாறித்தான் போனாள்.

ஏதோ முடிவு செய்தவளாய் எங்கோ கிளம்பிப் போனாள். வந்தபோது அவள் கையில் தாலிக்கொடி.

“இந்தாப்பா! என்னோட தாலிக்கொடி. நம்ம மாதிரி ஏழைகளுக்கு இதுதான்ப்பா ஆபத்துக்கு கை கொடுக்கும் சாமி! மூணு பவுண் தேறும். பக்கத்துவீட்டு பெரியதனக்காரர் கிட்ட கொடுத்து வெச்சிருந்தேன். உனக்கு வேலை கிடைச்சதைவிட வேறென்னப்பா சந்தோசம் எனக்கு. போ! கொண்டுபோய் வித்து பணத்தைக் கட்டு”.

கட்டினான்.

முதல்நாள் வேலைக்கு கிளம்பும்போது படையல் செய்து அப்பா படத்தின் முன் படைத்து விழுந்து வணங்கி ஆனந்த கண்ணீர் பொங்க ஆசீர்வதித்தாள். வீட்டின் மூலையிலிருந்த அரிசிப் பானைக்குள் கைவிட்டு ஒரு சிறு கலயத்தை எடுத்துக் கொட்டினாள்.

கீழே சலசலவென கொட்டிய சில்லறைக் காசுகள்; சுருட்டிக் கிடந்த சில ரூபாய் நோட்டுகள்.

“கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வச்ச பணம், ஆயிரம் ரூவாயாவது தேறும்! வைச்சுக்க!”

காலைச் சூரிய வெளிச்சத்தில் மின்னிய காசுகள் அவளின் வேர்வையாகவும் உதிரமாகவும் தெரிந்தது அவனுக்கு.

அவன் வாங்கிய முதல் சம்பளத்தில் அம்மாவுக்கு சேலையோ இல்லை நகையோ எடுத்துக் கொடுக்க முடியாத சூழ்நிலையை உண்டாக்கிய கடவுளைத்தான் நோக முடிந்தது.

அம்மாவை சந்தோசப்படுத்த வேண்டும் என உள்ளிருந்த துடிப்பு அப்புறம் அப்புறமாய்… நீண்டு கொண்டே போய்விட்டது.

அதுவும் வசந்தி வரும் வரைதான்! அப்படியே காற்றடித்த கப்பலாய் திசை மாறிப்போய்விட்டது. அம்மாவிடம் அவளும் அன்பாகத்தான் இருந்தாள். நந்தினி பிறந்து அவளும் அம்மாவாகிப்போன பின்புதான் அந்த அன்பும் திசைமாறிய தோணியானது.

தினமும் புதுபுதுப் பிரச்னைகளைக் கிளப்பிக்கொண்டே இருந்தாள்.

“என்னங்க… நீங்க ஆபிசுக்கு போறீங்க ஏதோ போதும்ங்கற வருமானம் வருது… கெüரவத்தோட வாழ்ந்திட்டு இருக்கோம். நமக்கும் ஒரு பிள்ளை இருக்குது…ஆனா அத்தை இட்லி சுட்டு தெருவில விற்கறாங்க… நாலு பேர் சிரிக்கமாட்டாங்களா?”

நான் நடுவராக இருந்து அவளிடம் இந்த பேச்சைக் கொண்டுபோய் கேட்டதற்கு அம்மா சிரித்தாள்.

“தொழில்ல என்னடா கெüரவம்?அவங்க அவங்க கைக்கு தகுந்த வேலை… எனக்கு ஏத்த வேலையா இது இருக்கக்கூடாதா? அப்பா இறந்த பின்னாடி நம்மை இந்த அளவுக்கு உசத்தினது இந்தத் தொழில்தான்னு நெனச்சுப் பார்த்தியா? ஏதோ… என்னோட கையுங்காலும் நல்லா இருக்கறவரை செய்ய ஆசைப்படுறேன் தடுக்காதே”

வசந்தி பிடிவாதக்காரி. எதையும் அடம்பிடித்து சாதித்து விடுவாள். தனிக்குடித்தனம் போக வேண்டும் என நச்சரித்தாள்.

“அம்மா… இந்த வீடு ரொம்ப சிறுசா இருக்கு. இங்கிருந்து டவுன் ஆபிசுக்கு போயிட்டு வர்றதுல ஒரே அலைச்சல்; அசதி. அதுனால வசந்தி அங்கேயே வீடு பார்த்து தனியா போயிடலாம் அப்படிங்கறா… அவ ஆசைய…?”

முடிவை முடிக்காமல் கேள்வி வாக்கியமாய் பக்குவமாய் அவளிடம் சொன்னபோது அனுபவம் கீறிய அந்த முகத்தில் ஏற்பட்ட ஏமாற்றச் சாயல் ஒரு விநாடிதான்… சிறிதும் களங்கமில்லாது ஆசிர்வதித்தாள்.

“எங்கிருந்தாலும் சண்டை சச்சரவு இல்லாம நீங்க சந்தோசமா இருந்தா போதும்டா. அந்தப் பொண்ணை கண்கலங்காம வெச்சுக்க… உன்னையை நம்பி வந்த பொண்ணு”

அவள் வாக்கை இந்த ஐந்து வருஷமாவது காப்பாற்றியிருக்கிறான். ஆனால் நேற்று நடந்த சம்பவம், நெஞ்சில் முள்ளாய் கீறியது.

அலுவலகம் முடிந்து வந்த களைப்பில் அயர்ச்சியாய் சாய்ந்தவனை வசந்தி உசுப்பினாள்.

“என்னங்க…நாம குடியிருக்கற வீட்டு ஓனர் மத்தியானம் வந்திட்டுப் போனாரு. அவரு பொண்ணு கல்யாணச் செலவுக்கு இந்த வீட்டை விற்கப் போறாராம். தகவல் சொல்ல வந்தார். ஏங்க…நாம ஒண்ணு செய்தா என்ன…?” குழைந்தாள்.

“சொன்னாத்தானே தெரியும்?”

“பேசாம நாமளே இந்த வீட்டை வாங்கிட்டா என்னங்க? வேற யாராச்சும் வாங்கி நம்மள வீட்டை காலி செய்ய சொல்றதுக்குள்ள நாம முந்திக்கலாமே!”

“பேச்சுக்கு சரியா இருக்கலாம் வசந்தி. ஆனால் பி.எஃப். லோன் போட்டாலும் இந்த வீட்டோட மதிப்புக்கு பாதி வர்றதே சந்தேகம்…”

“அதுக்கும் ஒரு வழி இருக்குதுங்க பேசாம உங்கம்மா இருக்கற பழைய வீட்டை வித்துடலாமே? இந்த இடமும் வீடும் இதுல பாதிக்கு மேல தேறுமே?”

“என்ன உளர்றே? அம்மா நிச்சயம் ஒத்துக்கமாட்டாங்க. அந்த வீட்டுல அப்பாவோட நினைவுகளோட வாழ்ந்திட்டு இருக்காங்க. அதுலதான் ஒரு நிம்மதி, சந்தோசம் அவங்களுக்கு. அதைப்போய் எப்படி கெடுக்கறது?”

வசந்தி சீறினாள். அவள் யோசனையை தட்டிக் கழித்த ஆத்திரம் பீறிட்டது.

“அப்படி பந்த பாசம் பார்க்கிறவர் கல்யாணமே செய்துக்காம உங்கம்மா கூடவே இருக்க வேண்டியதுதானே. என்னை ஏன் கல்யாணம் செய்தீங்க? உங்களுக்கு எதுக்கு பொண்டாட்டி? எதுக்கு பிள்ளை? பாசமாம்… நினைவாம்… நல்ல அம்மா! நல்ல மகன்!”

தாயைப் பழித்த வார்த்தைகளை கேட்டது எங்கிருந்துதான் அவனுக்கு ஆவேசம் வந்ததோ, “பளார் பளார்’ என அவள் கன்னத்தில் அறைந்தான்.

வசந்தி திக் பிரமையோடு நின்றுவிட்டுப் பின் அழுதுவிட்டு எதுவும் பேசாமல் நந்தினியை கூட்டிக்கொண்டு பிறந்த வீட்டிற்குச் சென்றுவிட்டாள்.

மறுநாள் அலுவலகத்தில் வேலையே செய்ய இயலாமல் யோசனை செய்ததில் வசந்தி சொன்னதும் சரியாகத்தான் பட்டது. நமக்காக இல்லாவிட்டாலும் நந்தினியின் எதிர்காலத்திற்காவது சொந்த வீடு தேவை.

அம்மா நிச்சயம் புரிந்து கொள்வாள். அம்மாவிடம் பேசி சம்மதிக்கை வைத்தபின்பு வசந்தியிடம் சொல்லி ஆனந்தப்பட வைக்க வேண்டும். தீர்மானத்தோடு ஊருக்கு புறப்பட்டு வந்தும்விட்டான்…

மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க ஆயாசமாக வந்தவள் அடுப்பின் முன் முக்காலியில் அமர்ந்தாள்.

“இப்பவெல்லாம் ரொம்ப நடக்க முடியறதில்லை முருகேசா, எளப்பு வாங்குது. அப்பப்ப நெஞ்சில வாய்வு வலி வேற மூச்சுவிட முடியாம வதைக்குது. என்ன செய்றதுன்னே தெரியல”

நெஞ்சைப் பிடித்துக் கொண்டாள். அவனுக்கு “சுருக்’கென்றிருந்தது.

என்ன சொல்லுகிறாள்?

மகன் இருந்தும் தன்னைக் கவனிக்க முடியாத இயலாமையை குத்திக் காட்டுகிறாளா? இல்லை. உண்மையைத்தானே சொல்லுகிறாள். தன்னை நொந்துகொண்டாலும் சமாதானப்படுத்தினான்.

“உன்னய யாரு இப்படி அலயச்சொன்னது? பேசாம வீட்டுலேயே இருந்திருக்க வேண்டியதுதானே…? பணம் வேணுமின்னா நான் அனுப்பறேன். இல்லேன்னா என் கூட வந்துவிட வேண்டியதுதானே…”

நகரத்து பட்ஜெட் என்றுமே பற்றாக்குறைதான். அப்படி என்றாலும் வசந்திக்குத் தெரியாமல் சிறிதளவு கூட பணம் அனுப்ப முடியாதுதான்…

அவள் எதுவும் பேசவில்லை. கண்களைத் துடைத்துக் கொண்டாள். பழையதை நினைத்துக் கொள்கிறாளோ?

காபியை நீட்டும்போது மறுபடியும் ஆவலுடன் கேட்டாள், “முருகேசா! மருமகளையும் பேத்தியையும் கூட்டி வந்திருந்தா கண்ணு குளிர பார்த்திருப்பேனடா. அவங்களைப் பார்க்க மனசு தவியாத் தவிக்குது.”

அவள் முகத்தை பார்த்துவிட்டு ஏனோ பொய் பேச வாய் வரவில்லை.

“அம்மா சிறுசா பணப் பிரச்னை. நேத்து ராத்திரி எங்களுக்குள்ளே சண்டை. அவளை அடிச்சிட்டேன். கோவிச்சுக்கிட்டு பிறந்த வீட்டுக்கு போயிட்டா…”

அவள் முகத்தில் அதிர்ச்சி அலைகளோடு கவலை ரேகையும் ஓடியது. எதற்கும் அயராதவள் இப்போது நிலை குலைந்து போனதாகத் தோன்றியது.

“ஏம்பா! என்னதான் புருஷன் பொஞ்சாதி சண்டையானாலும் கட்டினவளை கை நீட்டியா அடிக்கிறது? அவ மனசு என்ன பாடுபட்டிருக்கும். நாளைக்கே போய் அவளைச் சமாதானம் செய்து இங்கே கூட்டிட்டு வா”

உரிமையோடு உத்தரவிட்டவள், மூலைக் கடைசியில் கீழே கவிழ்த்திருந்த மண் பானைக்குள் கை விட்டாள். பாலிதீன் பைக்குள்ளிருந்து சில கற்றை நோட்டுக்களை எடுத்தாள்.

“இதுல இருபதாயிரம் ரூபா இருக்கும். இட்லி யாவாரத்துல கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வெச்சிருக்கேன். தனிக்கட்டைக்கு என்னடா செலவு ஏதாச்சும் பணத் தேவைன்னா என்கிட்ட வா. இதுக்காக குடும்பத்துல சண்டை போட்டுக்காதீங்க!”

நீட்டிய தாயைக் கண் இமைக்காமல் பார்த்தான் முருகேசன். அவளது உருவம் இப்போது வாமன அவதாரமாகத் தெரிந்தது.

“அம்மா இதையே உன்னால் தாங்க முடியவில்லையே. வீட்டை விற்றுவிடலாம் என்று சொன்னால்…”

எந்தப் பிரச்னையும் அதிகாலையில் சொல்வதுதான், கேட்பவரின் மனதில் எளிதில் பிடிபடும். அவளிடம் சொல்லும் முடிவை காலை வரை ஒத்திப்போட்டான்.

இரவுச் சாப்பாடு அவ்வளவு மணமாயிருந்தது. ரசித்துச் சாப்பிட்டான். அவள் கைகளுக்கு மட்டும் என்ன தடவிக்கொண்டு சமையல் செய்வாள்…?

படுப்பதற்கு முன் தலைமுடியைப் பார்த்து கோபித்துக் கொண்டாள்.

“தலையை இப்படியா பரட்டையா போடுறது…? கண்ணுக்கு என்னாகும்…?”

தலை, கை, கால் என எண்ணெய் தேய்த்து அரக்கிவிட்டாள்.

இரவுத் தூக்கம் வராமல் வெகு நேரம் புரண்டான் முருகேசன். அவன் சட்டைப்பையிலிருந்த பணம் அவனை நெருஞ்சி முள்ளாய் குத்துவதுபோல தோன்றியது.

திரும்பிப் படுத்தான்.

தனக்காக இருந்த போர்வையையும் அவன் மேல் போர்த்துவிட்டு கீழே குளிரில் சேலையை இழுத்து போர்த்தி குறுக்கி படுத்திருந்தாள்.

அவன் நெஞ்சம் கசிந்தது.

மனிதனுக்கு சேவை செய்ய கடவுளே ஒவ்வொரு தாய்வடிவத்திலும் அவதாரம் எடுத்து வருகிறாரா…? ஆனால் இந்த தாய்ப்பாச சங்கிலி புதிதாய் தோன்றும் திருமணபந்தம் என்னும் நீர்பட்டு முரண்பாடு எனும் வெயில்பட்டு கவனிக்காத காற்றுபட்டு துரு ஏறிப் போய்விடுகிறதா…?

அம்மா இப்போதும்கூட பாச உணர்வால் என்பதைவிட பணத்திற்காகத்தான் உங்களைத் தேடி வந்திருக்கிறேன். இந்த வீட்டை விற்கலாம் என்று சொன்னால் என்ன செய்வாய்?

“டேய் உன்னோட அப்பா வாழ்ந்த வீடு! கடைசி வரைக்கும் அவரோட நினைவுல வாழ்ந்திட்டுப் போறேன். கெடுத்திடாதடா’ என்று மறுப்பாளா இல்லை கெஞ்சுவாளா?

அதற்கு நடைமுறையைக் காரணம் காட்டி எப்படியாவது புரிய வைக்க வேண்டும். அலை பாய்ந்த மனதின் சிந்தனை ஓட்டத்தோடு தூங்கியும் போனான்.

ஜன்னல் வழியே நனைத்த கதிரின் ஒளியில் விழித்தான்.

எப்பொழுதுமே அதிகாலையிலே எழுந்துவிடும் அம்மா இன்னும் எழாமல் படுத்திருக்க ஆச்சரியத்துடன் நெருங்கினான்.

“அம்மா எழுந்திருங்க, விடிஞ்சிருச்சி”.

உலுக்கினான்.

எந்தச் சலனமும் இல்லாமல் அவள் தலை சாய்ந்தது. ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் அவனுக்கு எல்லாமே புரிந்து போனது.

“அம்மா நான் பேசுறதுக்கு முன்னாடி நீ பேசாம பேசி போயிட்டியேம்மா… அம்மா அம்மா…!”

அவன் அலறலில் தெருவே ஓடி வந்தது. கிட்டித்துப் போயிருந்த அவளது பற்களின் இடுக்கு வழியே ஒரு மந்தகாசப் புன்னகை.

– பெப்ரவரி 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *