Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

உயர் பாதுகாப்பு வலயம்

 

யோகேஸ்வரி அன்று அவசரமாகவே எழும்பி இருந்தாள். தன்னிடம் இருந்த ஒரே ஒரு புடவையையும் இன்றைக்கு உடுத்தவேன்டுமென்று நேற்றுதான் துவைத்துப்போட்டிருந்தாள்.வழமைக்குமாறாக இரண்டுதடவை சன் லைட் சவர்க்காரம் போட்டுத் துவைத்திருந்தாள். நல்லவேளை நேற்று மழை பெய்யாததால் அது காய்ந்து இன்றைக்கு உடுக்கத் தயராகி இருந்தது.

`டக்கென உடுப்ப போட்டுத்து வா பிள்ள‌` என்று ஸ்டெல்லாவை நச்சரித்துக்கொண்டிருந்தாள் யோகேஸ்வரி. ஸ்டெல்லா , யோகேஸ்வரியின் மகள்.

ஸ்டெல்லா , வயிற்றில இருக்கும்போது முள்ளிவாய்க்காலில் கடைசி யுத்தம் நடந்துகொன்டிருந்தது. யோகேஸ்வரியின் சொந்த இடம் தெள்ளிப்பளை ,அங்கிருந்து இடம்பெயர்ந்து கிளிநொச்சியில்தான் கனகாலமா கணவனோடும் ,தன் மூத்த மகனோடும் வாழ்ந்து வந்தாள்.முதல்ப்பிள்ளை பிறந்து பன்னிரண்டு வருசத்துக்குப்பிறகுதான் ஸ்டெல்லா கர்ப்பத்தில் முளைத்திருந்தாள்.

யோகேஸ்வரி கர்ப்பம் தரிக்கவும் யுத்தம் உச்சக்கட்டத்தை அடையவும் சரியாக இருந்தது.

யோகேஸ்வரி அப்போது ஏழுமாதக் கர்ப்பிணி. விசுவமடுவில் ஒரு பள்ளிக்கட்டடத்தில் இடம்பெயர்ந்து தங்கி இருந்தபோது திடீரென எங்கிருந்தோ வந்துவிழுந்த ஷெல் வெடித்து கண‌வனும், முதல் மகனும் பலியாகிவிட தனித்துப்போனால் யோகேஸ்வரி. இறந்துபோன மகனினதும் கணவனினதும் முகத்தைக்கூடக் கடைசிவரை அவளால் பார்க்கமுடியவில்லை . அவ்வளவு சிதைந்துபோயிருந்தன‌ அவர்களது உடல்கள்.

ஷெல் விழுந்த உடனேயே கர்ப்பிணி என்ற காரண‌த்தால் அவள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு முல்லைத்தீவு நோக்கி அனுப்பி வைக்கப்பட்டாள். அங்கே இருந்த சில இளம் பெடியன்கள் அவளின் கணவனினதும் மகனினதும் உடல்களைப் புதைப்பதாக ஆறுதல் கூறி அவளை அனுப்பி வைத்திருந்தார்கள்.

கடைசியில் முள்ளி வாய்க்காலில் வந்து நின்றபோது யோகேஸ்வரி நிறைமாதக் கர்ப்பிணி. அவள் முள்ளிவாய்க்காளில் வந்து நின்று ஆர்மியிடம் சரண‌டையும்போது அவளிடம் வயிற்றில் இருந்த ஸ்டெல்லாவை விட உடமைகள் என்று எதுவுமே இல்லை.

ஒரு தடுப்பு முகாமில் இருந்து கர்ப்பிணி என்ற காரணத்துக்காக வைத்தியசாலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டாள். அப்போதுதான் சிஸ்டர் மேரி அவளுக்கு அறிமுகமானாள். யோகேஸ்வரி வைத்தியசாலையில் இருக்கும்போதெல்லாம் சிஸ்டர் மேரி வந்து அவளுக்காக‌ செபம் செய்வது வழக்கம். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக செபத்தில் யோகேஸ்வரி காட்டிய ஈடுபாடுதான் அவளுக்கு பிறந்த பிள்ளைக்கு `ஸ்டெல்லா ` எனப்பெயர்வரக்காரணமாயிற்று.

அதுக்கு முன் தனக்குப் பெண்பிள்ளை பிறந்தாள் தான் வழிபடும் முருகனின்மனைவியான வள்ளியின் பெயரை வைப்பதாகவே எண்ணி இருந்தால்.இப்போது அவளுக்கு முருகனையே மறந்துவிட்டது.

சிஸ்டர் மேரியின் சகவாசத்தில் யோகேஸ்வரியின் மகளுக்குப் புதுப் பெயர் மட்டும் கிடைக்கவில்லை, அகதிமுகாமில் ஒரு வீடும் கிடைத்தது.அதை வீடு என்று சொல்வதைவிட வீடு மாதிரி என்று சொல்லலாம். பக்கச் சுவர்கள் தகரத்தாலும் ,கூரை யுனிசெப் கொடுத்த டென்டினாலும் கட்டப்பட்ட ஒரு குடிசை அவ்வளவுதான்.

அந்தக் குடிசையிலேயே ஒருமாதிரியாக ஏழு வருஷம் ஓடிப்போய்விட்டது.

வயலில் கூலிவேலை செய்து ஸ்டெல்லாவையும் வளர்த்துவிட்டாள்.இரண்டு மாடுகளும் அஞ்சாறு கோழிகளும் என கொஞ்சம் சொத்துக்களும் சேர்த்துவிட்டாள்.

ஸ்டெல்லா இப்போது இரண்டாம் வகுப்புப் படிக்கிறாள்.
முன்பெல்லாம் எப்போதாவது அப்பா பற்றிக் கேட்பாள். அப்போதெல்லாம் யோகேஸ்வரியின் அழுகை மட்டுமே அவளுக்குப் பதிலாகக் கிடைக்கும்.அதனாலேயே ஸ்டெல்லா இப்போதெல்லாம் அப்பா பற்றி கேட்பதேயில்லை.

ஸ்டெல்லாவுக்குக் காட்ட அவளுடைய அப்பாவின் ஒரு போட்டோ கூட மிஞ்சியிருக்கவில்லை யோகேஸ்வரியிடம். எல்லாமே இடம்பெயரும்போது தொலைந்துவிட்டது. அப்பா என்பது ஸ்டெல்லாவுக்கு ஒரு கற்பனை உருவம். அவ்வளவுதான்!
அவளுக்கு மட்டுமல்ல நிறைய தமிழ்க் குழந்தைகளுக்கும் இந்த நிலமைதான்.

இன்றைக்கு தான் வாழ்க்கையைத் தொடங்கிய தெல்லிப்பளை வீட்டிற்கு மீண்டும் போகப்போகின்றோம் என்பதே யோகேஸ்வரியின் இன்றைய இந்த சந்தோஷத்துக்கும் பட படப்புக்கும் காரணம்.

இருபது வருசத்துக்குப்பிறகு தான் வாழ்ந்த வீட்டுக்குப் போகப்போகின்றோம் என்றால் யாருக்குத்தான் மகிழ்ச்சி இல்லாமல் இருக்கும்.

இவ்வளவு காலமும் உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த அவளது காணியையும் அயலவர்களின் காணியையும் விடுவிக்க இராணுவம் ஒத்துக்கொண்டிருந்தது. அமைச்சர் வந்துதான் உங்கள் இடங்களை கையளிப்பார், ஆகவே பாதுகாப்புக்காரணத்துக்காக காலை ஏழு மணிக்கே எல்லோரும் வந்திடனும் என்று சொல்லி இருந்தார்கள். அதுதான் யோகேஸ்வரி காலில் நெருப்பைக்கட்டியதுபோல டக்கென வாபுள்ள என்று ஸ்டெல்லாவை நச்சரித்துக்கொண்டு இருந்தால்.

ஸ்டெல்லாவும் ரெடியாகிவிட ஒருமாதிரியாக நேரத்துக்குகே பிரதேச செயலகத்துக்குச் போய்ச்சேர்ந்துவிட்டார்கள்.இலவசமாகவே பஸ் ஏற்பாடு செய்திருந்தார்கள் . அவளைப்போல பல குடும்பங்கள் பல எதிர்பார்ப்புக்களுடன் பஸ்ஸில் இருந்தார்கள்.

கிளிநொச்சியில் இருந்து ஆரம்பித்த பஸ் யாழ் நகரைத் தாண்டி தெல்லிப்பளை நோக்கி பயணிக்கத்தொடங்கியது. சுன்னாகம் தாண்டி தெள்ளிப்பளை நெருங்க நெருங்க அவளுக்கு மட்டுமல்ல பஸ்ஸில் இருந்த எல்லோருக்குமே பதட்டம் பற்ரிக்கொண்டது.

தங்கள் தாய் மண்ணில் இருபது வருசத்துக்கு பிறகு கால் வைப்பதென்றால் சும்மாவா?

ஒரு மாதிரியாக பஸ் தெள்ளிப்பளையை அடைந்தது, ஆமிக்காரன் வந்து செக் பண்ணியபின் ஒரு முள்வேலி போடப்பட்டிருந்த வெட்டவெளிக்கு அழைத்துப்போனார்கள்.

அங்கே பந்தல் போட்டு அலங்கரித்து இருந்தார்கள்.

`அமைச்சர் வரும்வரை இங்கே இருங்கள்` என ஒரு ஆமிக்காரன் அரைகுறைத் தமிழில் சொல்லிவிட்டுப்போனான்.குடிக்க பென்டா சோடாவும் கடிக்க சொக்கலேட் கிறீம் பிஸ்கட்டும் கொடுத்தார்கள்.

எவருக்கும் இருப்புக்கொள்ளவில்லை, தங்கள் சொந்த வீட்டை பார்க்க வேண்டும் ,தாங்கள் விளையாடிய மண்ணில் மீண்டும் ஓடியாடித் திரிய வேண்டும் பல எதிர்பார்ப்புக்களுடன் பதை பதைத்துக்கொண்டு இருந்தார்கள்.

இருந்தாலும் என்ன செய்ய?

இரண்டுமணி நேரத்தின் பின்தான் அமைச்சர் வந்தார். அவர் வந்த பின்பு ஒரு இரண்டரைமணிநேரம் பல பேர் மாறி மாறிப்பேசினார்கள்.

சிங்களத்தில் பேசியவர்கள் ` தங்கள் சொந்த இடத்தையே பரிசாக கொடுப்பதுபோன்று பேசினார்கள்`. சில தமிழ் அரசியல்வாதிகள் தங்களால்தான் இது சாத்தியமானது என தங்களின் அரசியல் சாணக்கியத்தை புகழ்ந்து கொட்டினார்கள்.

கடைசியில் ஒருமாதிரியாக ஆமியின் பாதுகாப்புடன் அவர்களின் இடங்களுக்கு அழைத்துசெல்லப்பட்டார்கள்.

முழுவதுமாக காடு வளர்ந்த அடையாளம் தெரியாமல் போய் இருந்தாலும் யோகேஸ்வரிக்கு தன் வீட்டைக் கண்டு பிடிப்பதில் பெரிய கஷ்டம் இருக்கவில்லை .

வீட்டைப்பார்த்ததும் யோகேஸ்வரிக்குத் தூக்கிவாரிப்போட்டது. அவளது சந்தோஷம் எதிர்பார்ப்பு எல்லாம் அப்படியே சுக்கு நூறாகிப்போனது .
வீடு என்பதற்கு எந்த அடையாளமே இல்லை. எல்லாமே உடைந்து சிதைந்துபோய்க் கிடந்தது வீட்டைச் சுற்றியும் ,அறைகளுக்குள்ளும் மரங்கள் வளர்ந்து காடுமாதிரிக் காட்சி அளித்தது.

ஹால்(வரவேற்பறை) மட்டும் கொங்கிரிட் போட்டு இருந்ததால் கூரையில் சிறிய வெடிப்புகளுடன் அப்படியே இருந்தது.

வாசலில் இருந்த பற்றையை விளக்கிவிட்டு ஹாலின் உள்ளே போனால்.

சுவரெல்லாம் வெடித்து ஹாலின் கொன்ஹ்கிரிட் தூண் எப்போதும் விழலாம் என்ற நிலையில் இருந்தது. தரையில் சின்னச் சின்ன புல் முளைத்து நிலம் வெடித்திருந்தது.மிச்சமாயியிருந்த சுவர்களிலும் தோட்டாக்கள் பட்ட தடையங்கள் இருந்தன.

அந்த வீட்டில் இருபது வருசத்துக்குமுன் தான் வாழ்ந்த நினைவுகளோடு சுவரில் சாய்ந்து கண்ணீர் விட்டவளின் காலில் ஏதோ தட்டுப்பட்டது.

தட்டுப்பட்டதை குனிந்து எடுத்தவள் , சத்தமாக கத்தினாள் .

`ஸ்டெல்லா பிள்ள‌ ஸ்டெல்லா இங்க வாடி …இங்க வா… வந்து உன்ட அப்பாட முகத்தப்பாரு`.

ஆம் அது அந்தக்காலத்தில் சுவரில் பிரேம் போட்டு தொங்கவிட்டிருந்த‌ அவளது கலியாண‌ப்படம் . இப்போது அந்தப்படத்தில் அவள‌து முகம் தெளிவாகத் தெரியாவிட்டாலும் அவளது கணவனின் முகம் கொஞ்சம் தெளிவாகவே தெரிந்தது.

ஓடிவந்த ஸ்டெல்லா அப்பாவின் முகத்தை முதன் முதலில் பார்த்துவிட்டு போட்டோவை நெஞ்சிலே அழுத்தியபடி யோகேஸ்வரியின் மார்பில் சாய்ந்தாள்.

யோகேஸ்வரியின் கத்தலைக்கேட்டு ஓடிவந்த நிரூபர்கள் அழுதுகொண்டிருக்கும் இருவரையும் வீடியோ எடுத்தார்கள்.

அந்த நேரடி ஒளிபரப்பின் பிண்ணனியில் , சொந்தவீட்டிற்கு வந்த சந்தோசத்தில் அமைச்சருக்கு ஆனந்தக்கண்ணிரில் நன்றி சொல்லும் தாயும் மகளும் என அறிவிப்பாளர் சொல்லிக்கொன்டிருந்தார். 

தொடர்புடைய சிறுகதைகள்
இரண்டு கான்ஸ்டபில்கள் யாரையும் கிட்ட நெருங்க விடாமல் தடுத்துக்கொண்டிருந்தனர். ஒருபக்க சுவரிற்குப்பக்கத்திலே இரத்தக்கறையுடன் கிடந்தது கத்தி. வரவேற்பறையின் நடுவிலே கிடந்தது பிணம். அங்கே புதினம் பார்க்க வந்திருந்த சில பக்கத்துவீட்டினர் மார்பில் அடித்தபடி அழுதுகொண்டிருந்த விஷ்னுவை பிணத்துக்குப்பக்கத்தில் போக விடாமல் பிடித்துக்கொண்டனர் . விஷ்னு ...
மேலும் கதையை படிக்க...
ராஜேந்திரனுக்குப் பதட்டமாக இருந்தது. முதல் இன்டர்வியூ என்றால் யாருக்குத்தான் பதட்டம் இருக்காது. காலையில் வழமையை விட நேரத்துக்கே எழும்பி ட்ரெட் மில்லை ஓடவிட்டு அதில் எறி நின்றுகொண்டு ஓடத்தொடங்கினான். ட்ரெட் மில்லில் ஓடிக்கொன்டிருந்தாலும் அவன் மனது எங்கேயோ ஓடிக்கொண்டிருந்தது. கையில் தேநீர்க்கோப்பையுடன் வந்தாள் மனைவி ...
மேலும் கதையை படிக்க...
வைத்தியர் மூர்த்தியின் மனதில் ஏற்கனவே புகைந்துகொண்டிருந்தது, பக்கத்துவீட்டுப் பத்மா அக்கா சொன்னதைக்கேட்டு பற்றி எரியத் தொடங்கியது. கொஞ்சநாளாகவே மனைவியின் நடவடிக்கைகளில் நிறைய மாற்றங்களைப்பார்த்து அவருக்குச் சந்தேகமாக இருந்தாலும் ,இன்று பக்கத்துவீட்டுப் பத்மா அக்கா சொன்னதைக் கேட்டபின்பு அவருக்கு அந்தச் சந்தேகம் சந்தேகம் சரியாகத்தான் ...
மேலும் கதையை படிக்க...
போலிஸ் டீஜி ,இன்ஸ்பெக்டர் பாலகுமாரை தொலைபேசியில் அழைத்திருந்தார். "என்ன பாலகுமார் , இப்படிச் செய்திருக்கீங்க? நம்ம டிப்பார்ட்மென்ட் பெயரையே கெடுத்துட்டீங்களே." "சேர் என்னை நம்புங்க ...அது நான் இல்லை" "என்ன பாலகுமார் நீங்க இன்னும் அந்த வீடியோவைப் பார்க்கலையா,சின்னக்குழந்தைகூட அது நீங்கதான் என்று சொல்லிவிடுமே.ஐ எம் வெரி ...
மேலும் கதையை படிக்க...
இருளைத்தோற்கடிக்க தன் கதிர்க்கால்களால் நட்சத்திரம் ஒவ்வொன்றையும் நசுக்கிக்கொண்டு நடந்துவந்தது சூரியன். அடித்த அலாரத்தை அழுப்புடன் அடித்து அணைத்துவிட்டு தூக்கத்தைத்தொடர்ந்தான் நிலவுக்கண்ணன். நல்லவேளை அலைபேசி அழைப்புமணி அவன் தூக்கத்தை மீண்டும் களைத்தது. தெரியாத இலக்கத்தில் இருந்து வந்த அழைப்பினைப்பார்த்ததும் "ஆகா யாரோ ஒரு ...
மேலும் கதையை படிக்க...
உருகிய மெழுகு
சுத்தமான மனசு !
கானல் உலகு!
நாடு இனி முன்னேறிவிடும்!
நான் சாமியாகப்போகின்றேன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)