உப்புக் கடலைக் குடிக்கும் பூனை!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 21, 2012
பார்வையிட்டோர்: 11,282 
 

கல்தூண்கள் நட்டு, கம்பிவேலி இட்ட இரண்டு ஏக்கர் பரப்புக்குள் உலகத்தின் தாவரங்களை எல்லாம் வளர்க்கும் முஸ்தீபில் மாமனார் இருக்கிறார். பாப்ளார், பேரீச்சை போன்றவற்றை அவர் பார்த்திராததால், அவ்வகை இனங்களைத் தென்மேற்குப் பருவக் காற்று வீசும் இந்தப் பரப்பில் அவர் முயற்சிக்கவில்லை.

மண் அனைத்தையும் பச்சையாகப் பூக்கவைக்க நீரும், மின்சாரமும், சோறும், சுடு குழம்பும், விதைகளும் சில தளவாடங்களும் அவருக்குப் போதுமானவை. அவரோடும் அத்தையாரோடும் என் சிறுமகள், சிறு கிராமத்தின் அத் தோட்டத்தில் வசித்தும் வாசித்தும் வருகிறாள். முளைத்து வரிசைகொண்ட முதற் பற்கள் இன்னும் விழ ஆரம்பிக்கவில்லை அவளுக்கு.

மகளைப் பார்க்கவென்று பெருநகர் நீங்கிப் பேருந்து ஏறி, வண்டி தாம்பரத்தில் நிற்கையில், அலைபேசி ஒலிக்கவும் எடுத்தேன்.

”அப்பா! பூனைக்குட்டி செத்துப்போச்சு.”

”எந்தக் குட்டி? கருவாச்சி பப்லூவா, மீச வெச்ச தாடிக்காரப் பயலா?”

”ஏம்ப்பா நேத்து வரலேன்னு கேளு. அத விட்டுட்டு நாய் செத்துப்போச்சு, பூன செத்துப்போச்சுன்னு…” என்ற அதட்டலுடன் போனை வாங்கிய மாமனார், ”தண்ணி டிரம்முல விழுந்து செத்துப்போச்சு. மாப்ள, பஸ் ஏறியாச்சா?”

”ம். ஏறியாச்சுங்க மாமா. காலைல வந்திடறேன்” என்று தொடர்பைத் துண்டிக்கையில், பேருந்து நகர்கிறது. எனது நோவாப் படகு குலுங்குகிறது. இல்லத்தரசி அதிகம் சம்பாதிக்கும் திட்டத்திலும் திடத்திலும் ஆகாய விமானம் ஏறிய பிறகு, மாமனாரின் வீட்டுக்கு மகளும் நானும் வந்தோம்.

”பாப்பாவை எங்க ஊர்ல படிக்கவெச்சிடலாமே?” என்று நான் சொன்னதற்கு மனைவி அரை மணி நேரம் உரையாற்றினாள். அதன் சுருக்கம், ”உங்க ஊர்ல நீ வளர்ந்து சாதிச்சதெல்லாம் பாத்தாச்சு. அவளாவது வளர்ந்து உருப்படியாகட்டும்” என்பதாக இருந்தது. மறுப்பதற்கான தரவுகள் இல்லாத நிலையில், மாமனார் வீடு வர ஒப்புக்கொள்ள வேண்டி இருந்தது.

கல்நார்க் கூரை வேய்ந்த இவ்வீடு தொலைவிலிருந்து காணுகையில் தேங்காய் கோடவுன் போலவோ அல்லது நாலு தறிகள் ஓடுகிற பட்டறை போலவோ இருக்கும். முகப்பு வாசல் தரை தொடும் மண் விளிம்பில் டேலியா, வாடாமல்லி, ரோஜாச் செடிகளும், கவின் மரங்களும் நடப்பட்டிருக்கும்.

ககன வெளி செய்வித்த காற்றைத் தோட்டத் தாவரங்கள் மெருகூட்டி மேலும் குளிராக்கும் சூழல். அங்கே இரண்டு வாத்துகள், இரண்டு பூனைக் குட்டிகள், இரண்டு நாய்க் குட்டிகள் என இரண்டிரண்டாக இருக்கக்கண்டு – அவற்றின் பாலின வகை பற்றிக் கவலைப்படாமல் – அதற்கு ‘நோவா படகு’ என்று பெயரிட்டேன். பண்ணையத்தின் பசுமை கண்டு, மாடியில் தோட்டம் போட்ட ஈஜிப்ட் மன்னன் ‘நெபுகத் நெசார்’ என்ற பேரை மாமாவுக்கு வைத்தேன். அந்தப் பெயர் வைத்ததை ஒரு பிரமிடுக்குள் வைத்துப் பூட்டினேன். நாய்கள், பூனைகளுக்குப் பெயரிட்ட செல்ல மகள் ஒரு பசு மாட்டுக்கு ‘லட்சுமி சுதா’ எனப் பெயரிட்டாள். கன்றுக்குட்டிக்கு மாமியார் வைத்த பெயர் ‘சில்க் சுமித்ரா’.

முதல் நாள் மாமனார் வீட்டில் இரவு தங்க நேர்ந்தபோது, பூனைகளின் இருப்பை வெறுக்காவிடினும், அவை அருகில் வந்து மூசுவதை வெறுத்தேன். அவை படுக்கையில் இடம் கேட்டன. உயர்திணைகள் தொட்டுக்கொண்டு படுத்தாலே உறக்கம் வராது எனக்கு. புரண்டே கிடப்பினும் உறங்கப் போகையில் அவரவர் தனித்தனி.

சிறுமியைத் தாவிக் கழுத்தடைந்த பூனைகள் மெத்தை விதிகளை மாற்றிப் போட்டன. பெரிய முயற்சிகள் மேற்கொண்டன அவை எனச் சொல்வதற்கில்லை. சிறுமி உயர்த்தியும் மடியிட்டும் கொஞ்சும்போது, கால் நகங்களை உட் சுருக்கிக்கொண்டன. பச்சையும் எலுமிச்சையுமாகப் படர்ந்த கண்ணில் வெட்டிய நகக் கீற்றை ஒட்ட வைத்தாற் போன்ற பார்வைப் பீலியை அருகில் வருகையில் அகலமாக்கிக்கொண்டன.

சுட்டு விரலால் தொட்டுப் பொட்டுவைத்த அளவு அவை விரியும். பின்புலத்தின் பலத்தால் ஒளிரும் கருஞ்சுடர்கள் அவை. தவிர, பூனைகளின் மெத்தென்ற தன்மை. எவ்வளவு வயதானபோதும் தூக்கிக்கொள்ளும் தரத்தில் இருக்கும் அவற்றின் இயல்புத்திறம். நாய்கள் எஜமானர்களை நேசிப்பது போல பூனைகள் இருப்பிடத்தை நேசிக்கும் எனக் கேட்டிருந்தேன். ஆனால், அவை இருப்பிடங்களாக மடி, அடிவயிறு, நெஞ்சு, தோள் எனவும் தேர்ந்துகொள்ளும் என நிரூபித்தன.

ஒரு விடுமுறை நாளின் பகலில், படுத்திருக்கும் மகளின் தோள் மீது கருவாச்சி, பப்லூ கிடந்தது. இரண்டும் நல்ல உறக்கம். ஆண்டாள் மீனாள் தோள்களில் நின்றிருக்கும் கிளிகள் நினைவாடியது எனக்கு. பாப்பா உறக்கம் புரள்கிறாள். இடது கழுத்தின் அருகேயிருந்த கருவாச்சி, அப்படியே வலது கழுத்துக்கு அருகே மாறிவிட்டது. இரண்டும், கெடாத தூக்கத்தைத் தொடர்கின்றன. ஒரு கண்ணாடிக் காட்சியைப் போல இருந்தது அது. அல்லது, ரிப்பன்களைத் திரிக்கும் மேஜிக் மேனின் தந்திரத்தைப் போல.

இரண்டு பூனைக்குட்டிகளில் மரித்தது எது?

கருவாச்சி முழுக் கறுப்பு. மீச வெச்ச தாடிக்காரப் பயல் கொஞ்ச இடங்களில் வெள்ளை பூண்டிருக்கும் கறுப்பு. வெள்ளை பாலின் நிறத்தையும் நினைவூட்டும். கறுப்பு எதன் நிறம்? பால் காம்புத் துளையின் உள்ளிருந்து நீளும் குழல் வழியின் நிறம். பாப்பா படுக்கிற நேரமெல்லாம் ஏதாவதொரு பூனைக்குட்டியுடன் கிடந்தாள். குட்டிகள் தனியாகக் கிடக்கும் வேளை பாப்பாவின் நினைவும் எப்போதேனும் பாப்பா தனியாய்ப் படுத்திருக்கையில் பூனையைக் காணுகிற பதிவும் மனதில் ஏற்பட்டிருந்தது. பேருந்துக் கடைசி இருக்கையின் இடது கோடியில் அமர்ந்த என் மூக்காந் தண்டு சிலிர்த்து, சிறு நாக்கில் சிறு கசப்பின் எச்சில் சுரந்து பின் கண்கள் கசிந்தன.

கண்ணீர்த் துளி உப்பின் சுவையினுடையது. உப்பும் முத்தும் ஒரே ஒலிச் சுவை. முத்தை அறியாதவன் உப்பை உணர்கிறேன். முத்து விளைகிற கடலும் உப்பு விளைகிற உடலும்கூட ஆழங்காண முடியாததே. பூனைகளின் கடவுளே… ஒரு குட்டி மரித்ததை என் மனைவிக்குச் சொல்லப்போவதில்லை. மகவைச் சூலாக ஏந்தி மகளாகப் பெற்றவள்; பொருள் வயின் பிரிந்தவள். முற்று முதலாக என்றோ, ஒற்றைத் தாரகம் என்றோ நேசிக்கப்படாத அவள் குறித்து நான் சிந்திப்பது உடல் நிமித்தமானதும் இருக்காதென நம்புகிறேன்.

பொழுதெல்லாம் எரிந்து தொடுவானின் கடைசிப் படிக்கட்டில் இறங்குகிற சூரியன் சருகுப் படல ஒளித் தூண்களை வீசுவதன் மூலம் தொங்கும் மேக விளிம்புகளில் தீ ஒளிரும் தங்கம் தகடாக நீள்கிறது.

கடல்கொள்ளும் நிறங்களின் மீது வானவில்லின் சுவாலைகளை வீசினாற் கிட்டுவன எல்லாம் மேற்கில் தோன்றி, கன ரக வேகத்தில் காட்சிகள் மாறிய விதம் உள்ளன. இந்தக் களைப்பில் முதலில் இரவு மேற்கில் வரும். பின் பத்துத் திசையும் இரவு வரும். அவரையும், மல்லியும், மிளகாயும், எள்ளுமாக அண்டம் பூவெடுத்து ஆகாசம் ஜொலிஜொலிக்கும்.

மனைவி வசிக்கும் கடற்கரைக்கு இன்னும் இரண்டரை மணி கழித்து இரவு வரும். இயற்கை வகுத்ததை மனிதன் இருபத்து நான்காகப் பிரித்தான்.

‘அன்பே! ஜலத்தையும் நிலத்தையும் பிரித்த பேரியற்கை உன்னையும் என்னையும் பிரித்திருக்கிறது. பிணைத்த கையேதான் அதுவும்!’

இறக்கைகொண்ட பெருமீன்களென ஆகாய விமானங்கள் நிற்கிற தாவலம். சரிபார்ப்புச் சோதனைகளுக்கும் பயணத்துக்கும் முந்தையதான கண்ணாடித் தடுப்புக்கு வெளியே ஆன பொதுப் பரப்பில், கைப்பை திறந்து முக்கிய ஆவணங்களை அவள் சரிபார்த்துக்கொண்டு இருக்கிறாள்.

”பாஸ்போர்ட், விசா, பணம், டாலர், தினார், நீ பேசும் செல்போன், வெளிநாட்டிலிருந்து எங்களிடம் பேச வெப் காமிரா பொதிவுடன் நீ வாங்கப் போகும் லேப்-டாப். எல்லாம் செவ்வகம், செவ்வகம், செவ்வகம். உலகம் உருண்டை. உலகத்தை ஆள்வது செவ்வகம்” என்கிறேன். கொஞ்சம் கண்ணீருடன் என்னை முறைக்க முயல்கிறாள்.

வார்டு எண், கதவு எண் இடப்பட்ட தலங்களில் ஆவேசமான நிகழ்வுகள் முடிந்திருந்ததால், அமைதியாகப் பதிலளித்தாள்.

”ஆம்மா. உலகம் உருண்டை. உன் மண்டை உருண்டை. உலகமெல்லாம் மண்ணு.”

”பயணம், மனிதர்களைக் கவிஞர்கள் ஆக்குகிறது. நிலம், கால்வாசி. கடல், முக்கால்வாசி!”

”நல்லது, நான் சம்பாதிப்பதில் பாதியாவது சம்பாதிக்கலாம் நீ. இனிமேலாவது.”

”நீ பணக்காரன் ஆவது பற்றிப் பேசுகிறாய். நாய் பேயெல்லாம் காசு சம்பாதிக்குது.”

”காசு இல்லேன்னா நாய்கூட மதிக்காதுன்றதுஎல்லா ருக்கும் தெரிஞ்சிருக்கு. நாய் ஆனாலும் பிஸ்கட் போடணும். பிஸ்கட், பிரெட் எல்லாம் பணம்தான்.”

”நீ பேச்சாளராக இருந்தால் வேலை நிமித்தம் இல்லாமல் வாழ்வு முறையாகவே அடிக்கடி வெளிநாடு போகலாம்.”

”நீ முதலில் பாஸ்போர்ட் எடு மண்டூ!” என்று கை குலுக்கிப் பிரிந்தவள், கண்ணாடித் தடுப்புக்கு அப்பால் போனாள்.

வேல மரத்தடியில் மண் அள்ளித் தின்றவள். உப்புத் தாள் மீது தொடக்கப் பள்ளி நாளில் முட்டிக்கால் போட்டவள். குட்டிக் காலங்களில், ஆண்களுக்கு ஆண்களும், பெண்களுக்குப் பெண்களும் பிறப்பார்கள் என நம்பிக்கொண்டு இருந்தவள். பிராமணத் தர்க்கம் பேதலித்து தொடைகளிலிருந்து தொடைகளும், கைகளில் இருந்து கைகளும், வயிற்றிலிருந்து வயிறும் வரும் என நம்பிக்கொண்டு இருந்த சிறுமி. சிறுமியல்ல இனியவள். செவிலி. குலுக்கப் பற்றிய கைத்தலம் விலகியபோது புன்னகையே வந்தது எனக்கு.

கொஞ்ச நேரத்தில் ஒரு விமானம் உயரப் பறக்கக் கண்டேன். இனி நகரத்தில் அடைந்த மூட்டைகளுடனும் முடிச்சுகளுடனும் வண்டி பிடிக்க வேண்டும்.

மத்தியத் தரைக் கடல் நாடொன்றுக்கு மனைவியை அனுப்பிவிட்டு, கல்நார்க் கூரை வீட்டுக்கு வந்ததும் மகள் கேட்டாள்…

”அம்மா என்னப்பா சொன்னா?”

”உன்ன இங்கியே விட்டுட்டு என்னய வேலைக்குப் போகச் சொன்னா.”

”நீ எங்கயும் போ வேணாம். எங்கூடயே இரு!”

”மகளே, மகளே, என் செல்ல முயலே!” என அவளைக் கட்டிக்கொண்டு உச்சி நுகர்ந்தேன். இரண்டு நாட்கள் தலைக்குக் குளிக்காவிட்டால், அவித்த நிலக் கடலையின் வாசம் வீசும் அவளுக்கு.

நான் வேலைக்குப் போவதென்றால், அந்த நிறுவனத்துக்கு நானே முதலாளியாகவும் அதிகாரியாகவும் இருக்க வேண்டும். அப்புறம் என்னை அறிந்து என்னையே ஏவுகிற ஓர் உதவியாளன் வேண்டும். இந்த உதவியாளன் கடவுளிடமும் சாத்தானிடமும் சம காலம் பணி புரிந்திருத்தல் உத்தமம்.

அயல்நாட்டில் அவள் தன் கைப் பேசிக்கு உட்கிடை (சிம்கார்டு) வாங்கிய பின் அழைத்துப் பேசிய உரையாடல் இவ்விதம் அமைந்தது…

”நலமா?”

”நலம். வீட்டில்தான் இருக்கிறேன். யாவரும் நலம். அங்கு விலைவாசி எல்லாம் எப்படி?”

”பெட்ரோல் லிட்டர் எட்டணா. தண்ணீர் எண்பது ரூபாய்.”

”குழம்பு, சோறு, ரசத்துக்கு என்ன பண்ணுகிறாய்?”

”எலெக்ட்ரிக் அடுப்பு. அந்தந்த வேளைக்கு அரிசி… ஃப்ரிஜ்ஜில் வைத்த குழம்பு அவ்வப்போது சுடவைத்து. அதாவது, ஒரு வருடம் என்பது 60 குழம்புகள்.”

”உன் வருகைக்காக நாட்காட்டியைப் பார்த்துத் தவமிருக்கிறேன். காலண்டரில் கழிகிற நாளெல்லாம் கரிப்பின் சுவை; நம் பிரிவின் வேதனை.”

”தூரம் அதிகமென்பதற்காக அடர்த்தியான பொய்களை அனுப்ப வேண்டியதில்லை. காலண்டர் கிழிப்பதென்பது குப்பை கூட்டுவது மாதிரி அன்றாடச் செயல். ராசி பலன் போடாத காலண்டர் வாங்குவது ரொம்ப நல்லது. காலண்டர், கடிகாரம் என்றெல்லாம் பேசுவதைக் காட்டிலும், உருப்படியாக வேலையைப் பார். பாப்பாவைக் கூப்பிடுகிறாயா?” – கண்படும் தூரத்தில் விளையாடிய மகள் என் கை அசைப்பினால் வருவதற்குள்ளான புள்ளிகளின் இடைவெளியில் கண்ணீர்ப் பெருக்கின் விசும்பல் கேட்டது.

பாப்பாவும் அவளும் பேசு கருவிகளில் கொஞ்சிக் கொண்டு இருந்தபோது, அழுகையின் சுவடு வறண்டு பாலைவனச் சோலையின் உணர்வடித்தது. என்றால், கடலுக்குள் நன்னீரோட்டங்கள் உள்ளன.

மூழ்கிச் செத்த பூனைக்குட்டி விழுந்த டிரம்மினுள் உப்பு நீர் ஓடியதா? குறைந்தபட்சம் பூனையின் மரணக் கண்ணீர். பூனைகள் அழுமா?

கல்நார்க் கூரையின் அகடுமுகடுகளை ஆர்மோனியப் பெட்டியின் கட்டைகளாக மாற்றிய எங்கள் கறுப்பு மற்றும் வெள்ளைப் பூனைக் குட்டிகள்.

அவை தாயைப் பிரிந்திருக்கும் ஒரு சிறுமியைத் தங்களுக்கு ‘செல்ல அம்மா’வாக மாற்றின. முன்னம் தாயார் தன்னைக் கொஞ்சிய வார்த்தைகளை அவள் குட்டிகள் மீது பூசினாள்.

ஒரு முன்னிரவில் வானத்து நிலவையும் மீனையும் ஒருப்பட வைத்தாங்கே ஒரு கதை சொல்ல நான் முயற்சிக்கும்போது, வட திசை போகும் ஒரு விமானம் பார்த்து பாப்பா ஆர்வமாகக் கூறுகிறாள்… ”அப்பா! இதுல போயிப்பா இப்பவே அம்மாவக் கடத்திக் கூட்டிக்கிட்டு வந்திரலாமா?”

ஆசை வேகத்தின் முன்னால் அகிலம் சிதறுதடி கிளியே!

சொல்லத் தொடங்கிய கதை முற்றுப் பெறவில்லை. விண்மீன்கள்தோறும் சிலந்தி இழைகள் இறங்கி, பின்னி முடிக்காத அந்த விழுதுகள் அந்திவானத்தில் தொங்க, நானும் பாப்பாவும் உறங்கப் போனோம்.

நாங்கள் கிடந்ததுதான் தாமதமென இரண்டும் தாவிப் படுக்கையில் ஏறின. குட்டிகளைப் பாப்பா அணைத்துக்கொண்டாள்.

”நான் ஒரு கத சொன்னேன்ல. நீ ஒரு கத சொல்லு.”

பாப்பா இரண்டு குட்டிகளின் தலைகளையும் ஒட்டவைத்து தன் விழிகளை அசைத்துக் கூற ஆரம்பித்தாள்.

”இது அப்பா… இது அம்மா… ஒரு நா அப்பாப் பூன என்ன பண்ணுச்சாம்…” – இயன்ற அளவு நீண்ட இந்தக் கதையும் முடியவில்லை.

கல்நார்க் கூரையைத் தொட்டுவிட்ட சிலந்தி இழைகள் மீண்டும் வானம் நோக்கிச் சுருங்க ஆரம்பித்தன.

நானும் மகளும் பூனைக் குட்டிகளும் தூங்கிப்போனோம் தனித்தனிகளாக.

பஸ் ஜன்னல் கம்பி மேல் உண்டி வில் மடித்த முழங்கையின் மீது கன்னம் ஒருக்களித்துச் சாய்ந்திருக்கிறேன். முழங்கைப் பகுதியில் குளிர்த் தூவலுடன் ஒரு சொட்டு ஈரம். என் கண் நீரோ எனத் திகைத்து, பின் கண் உயர்த்தி வானம் பார்க்கிறேன். கறுத்தலையும் மேகங்கள் கருத்தரித்துச் சாரம் விடுதலின் முதல் தொடக்கம். மின்னல், மழைத் துளிகளை தற்காலிக வைரங்களாக்குகின்றன. மின்னலின் புறத்து மேகங்களில் ஏராளம் காட்சி களும் உயிர் ராசிகளும் மெள்ள அலைகின்றன.

ஒட்டகம், மாடு, யானை, நத்தை, சிலந்தி, குயில், புறா… டிரம்மில் இறந்த குட்டி அங்கே தட்டுப்படுகிறதா என விழி கூர்கிறேன். காணவில்லை.

கருவாச்சி பல்லூவா? தாடி வெச்ச மீசக்காரப் பயலா?

செத்தது எதுவாக இருக்கும்? மத்தது அதுவாக இருக்கும்!

– மார்ச் 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *