Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

உன் இதயம் பேசுகிறேன்

 

சுவர்ண விருட்சம் நிதி நிறுவனம் கண்ணாடி உடம்போடும், ஐந்து மாடிகளோடும் தெரிய, யாழினி ஒப்பணக்கார வீதியின் கார்னரிலேயே
ஆட்டோவை நிறுத்தி இறங்கி கொண்டாள்.

அந்த நிதிநிறுவனத்தின் வாசலை தொட்டாள். கனமான கண்ணாடிக் கதவை திறந்து கொண்டு தயக்கமாய் உள்ளே நுழைந்தாள். வெள்ளை
பேண்ட், வெள்ளை சர்ட் அணிந்து டை கட்டிய ஒரு நபர் எதிர்கொண்டார்.

என்ன என்பது போல பார்வையிலேயே கேட்டார்.

யாழினி உலர்ந்து போன உதடுகளை தயக்கமாய் பிரித்தாள்.

கொஞ்சம் நகை அடகு வைக்கணும்.

எவ்வளவு பவுன்?

இதுபத்தைஞ்சு பவுன்

அதோ… அந்த கேபினுக்குள்ளே போம்மா

யாழினி கேபினுக்குள் நுழைந்து அந்த வழுக்கை மனிததை பார்த்து வணக்கம் சொல்லி விட்டு உட்கார்ந்தாள். தயக்கமான குரலில் நகையை
அடகு வைக்கணும். என்று சொல்லிக்கொண்டே தன் கையில் வைத்து இருந்த மஞ்சள் பையை பிரித்து நான்கு வளையல்களையும் இரண்டு
செயின்களையும் எடுத்து மேஜையின் மீது வைத்தாள்.

அப்ரைஸர் அந்த நகைகளை எடுத்து ஒவ்வொன்றாய் பார்த்து கொண்டு இருக்கும் போதே அவருக்கு பக்கத்தில் இருந்த இண்டர்காம் மெலிதாய்
முணுமுணுத்தது. ரிஸீவரை எடுத்து கொதுக்கு பொருத்தினார்.

மறுமுனையில் நிதி நிறுவனத்தில் டைரக்டர் கஜபதி பேசினார்.

பரமசிவம்

ஸார்…

உங்க கேபின்ல ஒரு பொண்ணு இருக்காளா?

ஆமா ஸார்

கஸ்டமரா?

ஆமா ஸார்…! நகையை அடகுவைக்கிறதுக்காக வந்திருக்கு…

சரி.. அந்த பொண்ணை என்னோட ரூமுக்கு அனுப்பி வை. அந்த பொண்ணை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு. நான் மொதல்ல அவகிட்ட பேசிட்டு உன்னோட கேபினுக்கு அனுப்பி வைக்கிறேன்.

சரி… ஸார் என்று சொன்னவர் ரிஸீவரை வைத்து விட்டு யாழினியை ஏறிட்டார்.

இந்த கம்பெனியோட எம்.டி. உன்னை கூப்பிட்டாராம்மா. போய் பார்த்து பேசிட்டு வா…

எதுக்காக கூப்பிடறார்…?

எனக்கு தெரியாதம்மா… ஒரு சில சமயங்களில் கஸ்டமரை அவரே டீல் பண்ணுவார். நகைகளை எடுத்துட்டே போம்மா…

யாழினி நகைகளை எல்லாம் எடுத்து மறுபடியும் பையில் போட்டுக் கொண்டு எம்.டி. அறை எது என்று கேட்டுக்கொண்டு பளபளக்கும் அந்த கிரானைட் தளத்தில் நடந்தாள்.

மேஜையின் மேல் இருந்த கம்ப்யூட்டரில் எதையோ உற்று பார்த்து கொண்டிருந்த அந்த அறுபது வயது கஜபதி தன்னுடைய அறைக்குள் நுழைந்த யாழினியை பார்வையில் வாங்கியதும் கம்ப்யூட்டரை அணைத்து விட்டு எதிரில் இருந்த நாற்காலியை காட்டினார்.

உட்கார்ம்மா…!

யாழினி நுனி நாற்காலியில் அவஸ்தையோடு உட்கார்ந்தாள்.

அதே விநாடி பக்கத்து அறையிலிருந்து முப்பது வயது இளைஞன் புயலாய் வெளிப்பட்டான். பேசிய வார்த்தைகளில் அனல் வீசியது.

அப்பா இந்த கேடு கெட்டவளை எதுக்காக உங்களுக்கு சமமாய் உட்கார்த்தி வெச்சு பேசிட்டு இருக்கீங்க? மொதல்ல அவளை தொரத்துங்க. ரெண்டு வருஷத்துக்கு முந்தி பெத்தவங்களையும் கூட பொறந்தவனையும் தலை முழுகிட்டு பஞ்சப்பயல் ஒருத்தனுக்கு கழுத்தை நீட்டியவளுக்கு இங்கே என்ன வேலை?

கஜபதியின் கண்களிலும் இப்போது தீக்கனல். இறுகிப்போன முகத்தோடு யாழினிடம் நிமிர்ந்தார்.

என்ன உன்னோட அண்ணன் சொன்னது காதுல விழலையா…எந்த முகத்தை வெச்சுகிட்டு இந்த கம்பெனியோட படியேறியிருக்கே? தாலிகட்டின அந்த பிச்சைக்காரன் சோறு போட வக்கில்லாமே தொரத்திட்டானா?

அப்பா….! யாழினி கோபமாய் குரலை உயர்த்த கஜபதி கையமர்த்தினார். என்ன…? உன் மேல உயிரையே வெச்சிருந்தா உன்னோட அம்மா. நீ ஒருத்தனோட ஓடிப்போன ஏக்கத்திலேயே அவளும் போய் சேர்ந்துட்டா. இப்ப நீ எதுக்காக வந்து இருக்கே நானும் உன்னோட அண்ணன் சம்பத்தும் உயிரோடு இருக்கோமா இல்லையான்னு பார்க்க வந்தியா…?

யாழினியின் கண்களில் நீர் பளபளத்தது.

அப்பா…! உன்னோட கோபமும், அண்ணனோட ஆத்திரமும் நியாயமானதுதான். ஒத்துக்கிறேன். என் மனசுக்கு விரும்பின ஒருத்தரோடு என்னோட வாழ்க்கை இணைச்சுகிட்டேன். அவர் ரொம்பவும் நல்லவர். இந்த நிமிஷம் வரைக்கும் என்னை அன்பாய் தான் நடத்திட்டு வந்திருக்கார். இந்த ரெண்டு வருஷ காலத்துல நான் ஒரு தடவை கூட கண்ணைக் கசக்கினது இல்லை. நான் சந்தோஷமாய் தான் இருக்கேன்.

நீ சந்தோஷமாய் வாழற லட்சணம் தான் இப்ப தெரியுதே! நகையை அடகு வெக்க வர்றது தான் சந்தோஷமான வாழ்க்கையா?

அப்பா… அது… வந்து…!

நீ என்னை அப்பான்னு கூப்பிடாதே….!

ஓ.கே. நான் அப்பான்னு கூப்பிடலை…! ஸார்ன்னு கூப்பிடலாமில்லையா…? இதோ பாருங்க ஸார்… என்னோட கணவர் தன் நண்பர் ஒருத்தருக்காக அஞ்சு லட்ச ரூபாய் கடன் வாங்கி தந்து அதுக்கு ஜாமீன் கையெழுத்தையும் போட்டிருந்தார். அந்த நண்பர் கடன்காரங்களுக்கு பயந்து தலைமறைவாயிட்டார்.

கடன் கொடுத்த நபர் இப்போ ஜாமீன் கையெழுத்து போட்ட என்னோட கணவர் கிட்டே பணம் கேட்டு லாயர் நோட்டீஸ் விட்டிருக்காங்க. கேஸ் போட்டு ஜெயிலுக்கு அனுப்பப்போறதாய் மிரட்டறாங்க… கோர்ட்டு கேஸுன்னு போய் பெயரை கெடுத்துக்க என் கணவர் விரும்பலை… அதனால எனக்கு அவர் பண்ணிப்போட்ட நகைகளை…இங்கே அடகு வைக்க வந்தியாக்கும்?

ஆமா… ஸார்…!

சம்பத் குறுக்கிட்டு எகத்தாளமாய் கேட்டான். இந்த கோயம்புத்தூர்ல எவ்வளவோ அடகு கடைகளும் நிதி நிறுவனங்களும் இருக்கு. அங்கே போக வேண்டியது தானே?

அண்ணா என்று சொல்லி ஏதோ பேச முற்பட்ட யாழினி சம்பத் தன் இடதுகையின் ஆட்காட்டி விரலை உயர்த்தி மௌனமாக்கினான்.

என்னை அண்ணான்னு கூப்பிடாதே… என் உடம்பு மேல ஏதோ சேறு பட்ட மாதிரி இருக்கு.

யாழினி குரலை உயர்த்தினாள். ஓ.கே. மிஸ்டர் சம்பத் இனி உங்க உடம்பு மேல சேறு படாமே பார்த்துக்கிறேன்… இந்த ஊர்ல எவ்வளவோ நிதி நிறுவனங்களும் அடகுக் கடைகளும் இருக்கு ஆனால் விசாரிச்சு பார்த்த அளவில் உங்க நிறுவனத்தின் பேர்ல தான் மக்கள் அதிக அளவில் நம்பிக்கை வெச்சிருக்காங்க…வட்டியும் குறைச்சல். அதனால் தான் இங்கே வந்தேன்.

ஸாரி… மேடம்… உங்க மாதிரியான நம்பிக்கை துரோக கஸ்டம்ர்களுக்கு இங்கே இடமில்லை… நீங்க போகலாம்…

யாழினி விதிர்த்து விதிர்த்து போய் நிற்க. கஜபதியும் சீறினார்.

என்ன… சொன்னது காதுல விழலையா…? மொதல்ல இடத்தை காலி பண்ணு. புருஷன் மானம் போகப்போகுதுன்னு காப்பத்த வந்து இருக்கியே? எங்க மானம் போனதுக்கு காரணமே நீ தானே?

அப்பா… அவகிட்டே பேசி ஏன் நேரத்தை வீணாக்கிட்டு இருக்கீங்க? இவ முன்னாடி இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு நெருப்பின் மேல நிக்கற மாதிரி இருக்கு.

எனக்கு மட்டும் என்ன..? பிபி எகிறிட்டு இருக்கு. இவ இன்னும் ஒரு ரெண்டு மிநிஷம் இங்கே இருந்தா எனக்கு என்னாகும்ன்னு எனக்கே தெரியாது…

யாழினி இரண்டு பேரையும் ஒரு தீப்பார்வை பார்த்து விட்டு விருட்டென்று வெளியேறினாள்.

தகிக்கிற உடம்போடும், மனத்தோடும் கட்டடத்தை விட்டு வெளியே வந்து ஒப்பணக்கார வீதி போக்குவரத்தில் கலந்து நடக்க ஆரம்பித்தாள் யாழினி. கண்களில் நீர் கீறியது.

இனி வேறு ஏதாவது நிதி நிறுவனத்துக்கு போக வேண்டியது தான்.

நகைகள் இருந்த மஞ்சள் பையை சுருட்டி வலது கையில் கெட்டியாய் பிடித்து கொண்டு விரைந்து வழியே நடந்தாள். சாலையில் பாதி தூரத்தை கடந்து இருப்பாள். பின்பக்கம் காரின் ஹார்ன்சத்தம் கேட்டது. யாழினி திடுக்கிட்டு போய் திரும்பி பார்த்தாள். அப்பாவின் கார். ட்ரைவிங் இருக்கையில் இருந்து கஜபதி எட்டிப்பார்த்து மெலிதாய் புன்முறுவல் பூத்தார்.

கார்ல ஏறம்மா!

அ..அ…. அப்பா…!

மொதல்ல கார்ல ஏறம்மா….

அவர் குரலில் தெறித்த அவசரத்தை உணர்ந்து காரில் ஏறிக் கொண்டாள் யாழினி.

கார் நகர்ந்தது.

கஜபதி காரை ஓட்டிக்கொண்டே தன் கையில் வைத்து இருந்த ஒரு கவரை நீட்டினார். இதுல அஞ்சு லட்ச ரூபாய்க்கான செக் இருக்கு. நீ நகையை எங்கேயும் அடகு வைக்க வேண்டாம்.

அ… அ… அப்பா…!

உன் மேல எனக்கு கோபம் இருந்ததும்மா. ஆனா அந்த கோபம் எல்லாம் ஒரேமாசத்துக்குள்ளே காணாமே போயிடுச்சு. உன்னோட கணவர் நல்லவர். நீ ஒரு சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கேன்னும் தெரியும். அதை பார்த்து நான் சந்தோஷப்பட்டுகிட்டு இருந்தேன். ஆனா உன்னோட அண்ணன் இருக்கானே சம்பத்…உன்னோட பேரை சொன்னாலே போதும்… எமோஷனல் ஆயிடுவான். ஒரே காட்டு கத்தல் தான். நீ சொன்னா நம்ப மாட்டே. இப்போ வீட்ல உன்னோட பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கூட இல்லேம்மா… எல்லாத்தையும் கொளுத்திட்டான். உன் மேல அவனுக்கு அப்படியொரு வெறுப்பு. உன் மேல் எனக்கு ஒரு நூலிழை அளவு பாசம் இருக்கிற மாதிரி அவனுக்கு தெரிஞ்சா போதும். அவன் ஒரு துர்வாச முனிவராய் மாறிடுவான்.

“அ…அ…அப்பா…! இப்படியொரு நிலைமையில எனக்கு நீங்க பணம் தர்றது… அவ்வளவு சரியா என்னோட மனசுக்குப் படலை!’

“பயப்படாதேம்மா! இது என்னோட பர்சனல் அக்கௌண்ட் செக். சம்பத்துக்குத் தெரிய வாய்ப்பில்லை.’

“அ….அ….அப்பா!’ யாழினியின் கண்களில் நீர் பீறிட்டது.

“சொல்லும்மா…!’

“நான் இதை கடனாய்தான் வாங்கிக்குவேன். கொஞ்சம் கொஞ்சமாய் திருப்பிக் குடுத்துடுவேன்..!’

“உன் இஷ்டம் போல் செய்யம்மா…! உன்னோட அண்ணனுக்கு மட்டும் இந்த விஷயம் தெரிய வேண்டாம். வாரத்துக்கு ஒரு தடவையாவது என்கூட செல்போன்ல பேசும்மா. இது என்னோட பர்சனல் நெம்பர்’

தன் விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினார்.

கண்ணீரோடு தலையாட்டினாள் யாழினி.

“கண்டிப்பாய் போன் பண்றேன்ப்பா…’

“நான் அஸோஸியேஷன் மீட்டிங்குக்கு போகணும். நீ ஒரு ஆட்டோ பிடித்து வீட்டுக்குப் போயிடும்மா. நகைகள் பத்திரம். உன்னோட வீட்டுக்காரரை ரொம்பவும் கேட்டதாய் சொல்லு.’

ரோட்டோரமாய் காரை நிறுத்தினார் கஜபதி.

யாழினி ஒரு ஆட்டோ பிடித்து ராம் நகரில் இருந்த தன் வீடு போய் சேர்ந்தபோது முகத்தில் வியப்பு பரவியது.

வாசலில் ஒரு கார் நின்றிருந்தது.

“யார் வந்திருக்கிறார்கள்?’

ஆட்டோவை அனுப்பிவிட்டு வாசற்படி ஏறி பக்கவாட்டு ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்தாள்.

இதயம் முழுவதும் அதிர்வலைகள்.

அண்ணன் சம்பத் தன் கணவர்க்கு எதிரே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தான். “மாப்ளே! அண்ணன்னு நான் ஒருத்தன் இருக்கும்போது என்னோட தங்கச்சி நகையை அடகு வைக்கலாமா…? இது என்னோட பர்சனல் அக்கௌண்ட் செக். அப்பாவுக்கு தெரிய வாய்ப்பு கிடையாது….
அப்பாவுக்கு யாழினி மேல அப்படியொரு கோபம். நான் ஏதாவது பரிஞ்சு பேசினாலே எரிஞ்சு விழறார். அவரை எப்படி சமாதானப்படுத்தறதுன்னே தெரியலை. நான் இங்கே வந்ததும் சரி, பணம் கொடுத்ததும் சரி…தெரிய வந்தா போதும். ஒரு எரிமலையாய் மாறிடுவார்… ஆனா… இந்த விஷயம் தெரியப் போறது இல்லை… தயவு பண்ணி இந்த செக்கை வாங்குங்க மாப்ளே..!’

“அ…ண்…ணா!’ என்று பெரிய குரலில் கதறியபடி வீட்டுக்குள் ஓடினாள் யாழினி. 

தொடர்புடைய சிறுகதைகள்
ஓர் ஆனந்த பைரவியும் சில அபஸ்வரங்களும்
‘தண்ணீர்ப்பந்தல் பாளையம் ஊராட்சி ஒன்றியம் உங்களை மகிழ்வுடன் வரவேற்கின்றது’ என்கிற பெயர்ப்பலகை கிராமத்து எல்லையிலேயே வரவேற்க, தம்முடைய காரின் வேகத்தைக் குறைத்தான் ரகுராம். காரின் பின் சீட்டில் உட்கார்ந்திருந்த மூன்று நண்பர்களைத் திரும்பிப் பார்த்தான். "கிராமத்துக்குள்ளே நுழையப் போறோம். அதோ! அந்த வேப்பமரத்துக்குக் கீழே ...
மேலும் கதையை படிக்க...
மறுபடியும் ஒருதடவை!
ஏர்போர்ட்டில் இறங்கி டாக்ஸி பிடித்த பளபளப்பான பிளாஸ்டிக் ரோட்டில் பயணம் செய்து பாங்காக்கின் சிறந்த ஹோட்டல்களில் ஒன்றான ஹனி ட்யூனில் இறங்கியபோது என் மனதுக்குள் கலர் ஃபவுண்டன்கள் எல்லாத் திசைகளிலிருந்தும் பீறிட்டன. ஹோட்டலின் வரவேற்பறையில் காத்திருந்த அந்த நபர், “பொக்கே’யோடு மெல்லிய குரலில் ...
மேலும் கதையை படிக்க...
இரண்டாவது இன்னிங்ஸ் நியூ ஜெர்ஸியில், ஃபைனல் சொல் யூஷன் சாஃப்ட்வேர் கம்பெனி. லன்ச் இடை வேளை. கேன்ட்டீனில் உட்கார்ந்து சிக்கன் சீஸையும், யோகார்டையும் கொறித்துக் கொண்டு இருந்தபோது, மெர்ஸி வந்தாள். ‘‘என்ன ஷிவா... ரீட்டாவைக் காதலிக்கிறி யாமே, நிஜமா? உன்னோட பி.சி&யில் அவ போட்டோ, ...
மேலும் கதையை படிக்க...
அவள் பெயர் தமிழச்சி
ஜன்னலுக்கு வெளியே அமெரிக்காவின் மின்னிசோட்டா நகரம், அந்த ராத்திரி 10 மணி வேளையில் மின்மினிப் பூச்சிகளின் கூட்டம் போல் தெரிய, கயல்விழி அதைப் பார்த்தபடி அசையாமல் நின்றாள். ஏதோ ஒரு ஸ்டில் போட்ட மாதிரி தெரியும் அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டே இருப்பதில் ...
மேலும் கதையை படிக்க...
இளம்பிறையின் இரவுகள்
அன்று முழுமதி நாள்.இரவின் முதல் ஜாமம் முடிந்து இரண்டாவதுஜாமம் தொடங்கியிருந்தது. மேல் மாடத்தைஒட்டிய உப்பரிகையில் உட்கார்ந்திருந்த மகாராணிதேவசேனாவை, மேற்கு வானத்தில்வைரத்துண்டுகளாய் ஒளிர்ந்த சப்தரிஷி மண்டலவிண்மீன் கூட்டமோ, அருகாமையில் இருந்தஅந்தப்புர நந்தவனத்திலிருந்து வெளிப்பட்டநறுமண பூங்காற்றோ மகிழ்ச்சியில் ஆழ்த்த முடியாமல் தோற்றுப் போயிற்று. காரணம், மகாராணியின் ...
மேலும் கதையை படிக்க...
ஓர் ஆனந்த பைரவியும் சில அபஸ்வரங்களும்
மறுபடியும் ஒருதடவை!
ராஜேஷ்குமார் நிமிடக் கதைகள்!
அவள் பெயர் தமிழச்சி
இளம்பிறையின் இரவுகள்

உன் இதயம் பேசுகிறேன் மீது ஒரு கருத்து

  1. யோகராணி கணேசன் says:

    உறவுகள் மட்டும் உன்னதமாய் இருந்தால் உலகத்தையே வென்றுவிடலாம் என்பதை சொல்லாமல் சொல்லிச் சென்றிருக்கிறார் கதாசிரியர் ராஜேஷ்குமார். வாழ்த்துக்கள். இவ்வாறான பண்புகள்தான் இன்றைய நம் சமுதாயத்திற்கு தேவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)