Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

உன்னை விடமாட்டேன்

 

அன்று அவனது பிறந்தநாள். அந்நினைவில் விரக்திதான் எழுந்தது சுப்பையாவிடம்.

அவனுடைய மகன் மோகனுக்கும் அன்றுதான் பிறந்தநாள்.

`இப்போது எத்தனை வயதிருக்கும் மோகனுக்கு? பத்தா?’ மனக்கணக்குப் போட்டுப் பார்த்தபோது, துக்கம் பீறிட்டது சுப்பையாவுக்கு.

ஒரு குழந்தை பிறந்துவிட்டால், அவர்களுக்கிடையே ஏற்பட்டிருந்த பிளவு சரியாகிவிடும், தன் பிள்ளைக்கு ஒரு அப்பா வேண்டும் என்பதற்காகவாவது நந்தினி தன்னுடன் ஒத்துப்போவாள் என்று எதிர்பார்த்திருந்தவனுக்கு ஏமாற்றம்தான்.

அவளைச் சொல்வானேன்! தான் இருந்த இருப்புக்கு இப்படி ஒரு துணையை தேடிக்கொள்வது சரியா என்று முதலிலேயே யோசித்து இருக்கவேண்டும்.

ஏதடா, அழகும், செல்வமுமாக ஒரு பெண் தன்னையும் நாடி வருகிறாளே என்று அப்போது பூரிப்படைந்தது வடிகட்டின முட்டாள்தனம்.

சுப்பையாவைப் பார்த்தபோதே அவளுக்குப் புரிந்திருக்க வேண்டும், `இந்த மனிதன் சரியான ஏமாந்த சோணகிரி. முதலில் வசப்படுத்தினால், பிறகு கண்ணிலே விரலைக் கொடுத்து ஆட்டலாம்’ என்று!

“என்னமாப் பாடறீங்க! நீங்க மட்டும் மேல்நாட்டிலே பிறந்திருந்தா, உலகம் பூராவும் உங்க புகழ் பரவியிருக்கும்! ஒவ்வொரு கச்சேரிக்கும் லட்சக்கணக்கான பேர் வருவாங்க!”

புகழ்ந்ததோடு நில்லாது, அவனுக்காகவே அந்த கிளப்பிற்கு வருவதாக அவள் தெரிவித்தபோது, சுப்பையாவிற்கு ஜன்ம சாபல்யம் அடைந்துவிட்டதைப்போல் இருந்தது.

தன்னுடன் ஊர்சுற்ற அவள் அழைத்தபோது, மகிழ்ச்சியுடன் கூடவே அச்சமும் எழுந்தது. கோடீஸ்வரியான இவள் எங்கே, `இசையே உயிர்மூச்சு’ என்று, நிச்சயமற்ற எதிர்காலத்தைக்கொண்ட தான் எங்கே!

இறுதியில், ஆசைதான் வென்றது. நேரம் கிடைத்தபோதெல்லாம் அவளுடனேயே கழித்தான். அதுவரை யாருடனும் நெருங்கிப் பழகாதிருந்தவனுக்கு, ஏதோ வெறி ஏற்பட்டது போலிருந்தது. தன்னைப்பற்றிய எல்லா விவரங்களையும் — அப்பா தன் இசை ஆர்வத்துக்குத் தடை போட்டது, வீட்டைவிட்டு வெளியேறி, தட்டிக் கேட்க யாருமில்லாத நிலையில், திடீரென்று கிடைத்த சுதந்திரத்தில், `எப்படி எப்படியோ’ இருந்தது எல்லாவற்றையும் — ஒளிவு மறைவின்றி அவளுடன் பகிர்ந்துகொண்டான். மெல்லிய குரலில், தயங்கித் தயங்கி வெளிவந்தது அவனுடைய ஒவ்வொரு வார்த்தையும்.

இருவரும் ஓருயிராய் போனதுபோல், தனது தீட்சண்யமான பார்வையை அவனுடைய கண்களில் பதித்துக்கொண்டு, நந்தினி அவன் சொல்வதையெல்லாம் கிரகித்துக் கொண்டபோது, `இந்த உலகத்திலேயே மிகவும் மகிழ்ச்சியானவன் நான்தான்!’ என்ற பெருமிதம் ஏற்பட்டது சுப்பையாவுக்கு.

“அவ்வளவு பெரிய வீட்டிலே நான் மட்டும் தனியா இருக்கேன். அப்பா வெளிநாட்டிலேருந்து எப்பவோ வர்றதோட சரி. நீங்க என்கூடவே வந்துடுங்களேன்!” என்று நந்தினி சிணுங்கியபோது, `ஒனக்கு எந்த விதத்திலேயும் நான் ஏத்தவன் இல்லே, நந்தினி!’ என்று சொல்லத்தான் எண்ணினான். ஆனால், சுயகௌரவம் தடுத்தது.

அப்பா தலைபாடாக அடித்துக்கொண்டாரே, `பெரிய படிப்பு படிடா! அப்போதான் சமூகத்திலே மதிப்பு! இந்த பாட்டு, டிராமாவெல்லாம் என்னோட போகட்டும்,’ என்று!

அவர் சொன்னதைக் கேட்டிருந்தால், இன்று ஒரு பெண்முன் தலை குனியவேண்டி வந்திருக்காதே என்ற விசனம் எழுந்தது.

“ஒங்களைத்தான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன்னு அப்பாகிட்டே போனில சொல்லிட்டேன்!”

மேலே என்ன சொல்லிவிடப் போகிறாளோ என்று சுப்பையா மூச்சைப் பிடித்துக்கொண்டான்.

“அப்பா, `வாழ்த்துகள்!’ அப்படின்னாரு. நான் எப்பவுமே என் இஷ்டப்படிதான் நடப்பேன்னு அவருக்கா தெரியாது!” அவள் சொல்லிக்கொண்டே போனபோது, உணர்ச்சிப்பெருக்குடன், சட்டென அவள் கரத்தை எடுத்து முத்தமிட்டான் சுப்பையா. எப்பேர்ப்பட்ட பாக்கியம் இது!

அப்போது அவன் நினைத்தும் பார்க்கவில்லை, மலைக்குப் பிறகு மடுதான் என்று.

தான் நினைத்ததைச் சாதித்தபின் நந்தினி மாறிப்போனாள்.

முதலில் அவன் தயங்கித் தயங்கி விலகியபோது, அவனை அடைவதிலேயே ஒரு சவால் இருக்கிறது என்று அவள் எண்ணியிருக்க வேண்டும். ஆசைப்பட்ட பொருள் கைக்கெட்டிய பின்னர், அதன்மீது கொண்ட மோகம் குறைந்து போயிற்று.

முன்பு, காதல் மயக்கத்தில் அவன் சொல்லிய ஒவ்வொன்றையும் வைத்தே நந்தினி அவனைத் தாக்கியபோது, சுப்பையா நிலைகுலைந்து போனான்.

கிளப்பில் பாடிவிட்டு, வழக்கம்போல் நள்ளிரவுக்குப்பின் அவன் வீடு திரும்பியபோது, “எவளோட இருந்துட்டு வர்றீங்க? ஒங்களுக்குப் புதுசு புதுசா இல்ல வேணும்! பழக்கம் மாறிடுமா, என்ன?” என்று சாடினாள்.

முதலில் அதிர்ந்தான். நல்லதனமாக அவளைச் சமாதானப்படுத்திப் பார்த்தான். அன்பு வைக்க யாரும் இல்லாததால் பாதை தடுமாறிய கொடுமையை எடுத்துச் சொன்னான்.

எதுவுமே அவளிடம் பலிக்கவில்லை.

குழந்தை மோகனுக்கு நிலாவைக் காட்டி சோறு ஊட்டவில்லை நந்தினி. “ஒங்கப்பா மாதிரி இல்லாம, நீயாவது ஒழுங்கா இருடா, கண்ணா!” என்று, துக்கம் தோய்ந்த குரலில் விஷத்தை ஊட்டினாள்.

சுப்பையா அவமானத்தால் சிறுத்துப்போனான்.

`உண்மையைத்தானே சொல்கிறாள்!’ என்று எழுந்த எண்ணத்தால், அவளை எதிர்த்துப் பேசவும் வாயிழந்துபோனான். மகன் பெரியவன் ஆனதும் தன்னை மதிக்காவிட்டால் போகிறது, வெறுக்காவிட்டால் போதும் என்ற விரக்தி எழுந்ததது.

என்ன காரணத்திலோ, இவளுக்குத் தன்மேல் அவநம்பிக்கை. இனிமேல் தான் என்ன சொன்னாலும், அது இவள் காதில் ஏறப்போவதில்லை. எதற்காக இப்படி அவளையும் தண்டித்துக்கொண்டு, தன்னையும் வருத்திக்கொள்ள வேண்டும்?

இவ்வளவு அவமானங்களையும் பொறுத்துக்கொண்டு, அப்படியாவது மனைவியின் நிழலில் சுகம் காணவேண்டுமா என்று இரவு பகலாக யோசித்து, ஒரு முடிவுக்கும் வந்தான்.

“விவாகரத்தா?” நந்தினி சீறினாள். “எப்பவுமே தட்டிக்கேக்க ஆள் இல்லாம இருக்கணுமானா, கல்யாணமே செய்திருக்கக் கூடாது. என்னைச் சுத்திச் சுத்தி வந்து, இப்போ கையிலே ஒரு பிள்ளையையும் குடுத்துட்டு, நிர்க்கதியா விட்டுடப் பாக்கறீங்களா?”

அவளுக்குத் தான் தேவை என்று சொல்லாமல் சொல்கிறாள்! ஆண்மனம் பெருமிதம் கொண்டது. அவளைவிட்டு விலகும் எண்ணத்தைக் கைவிட்டான்.

ஆனால், நந்தினியின் குத்தலும் பழிப்பும் அதிகரிக்க, இவளிடம் நல்லவிதமாகப் பேசிப் பிழைக்க முடியாது என்று புரிந்துகொண்டான். இரண்டாம் முறையாக வீட்டைவிட்டு வெளியேறினான். தொலைபேசி எண்ணை மாற்றி, ரகசியமாக வைத்துக்கொண்டான்.

நந்தினி அவனைத் தேடி வராதது நிம்மதியாக இருந்தது.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, விவாகரத்து நோட்டீஸ் வந்தபோது, நந்தினி அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், மாதம் ஒரு முறை சுப்பையா தன் மகனை வெளியே அழைத்துப் போகலாம் என்று நீதிபதி வழங்கிய தீர்ப்புதான் அவளைக் கலக்கியது.

`தாலி கட்டிய என்னையே நிர்க்கதியா விட்டுட்டுப்போறவரோட என் மகன் சேர்ந்தா, நாளைக்கு இவனும் என்னை அம்போன்னு விட்டுடுவானே!’ என்ற அச்சம் பிறந்தது.

சட்டத்துக்குக் கட்டுப்பட்டு மகனை மாஜி கணவனுடன் அனுப்ப நேரிட்டபோது, `நானில்லாட்டி பிள்ளை அழுவான். ஒங்களால சமாளிக்க முடியாது!’ என்று நைச்சியமாகப் பேசி, தானும் அவர்களுடன் தொற்றிக்கொண்டாள்.

மாதத்தின் இருபத்து ஒன்பது நாட்களும் மகனுடன் கழிக்கப்போகும் தினத்தையே நினைத்து உருகியவனுக்கு, அவளை விலக்கும் அளவுக்குத் துணிச்சல் இருக்கவில்லை.

“சிரிப்புப் படத்துக்குப் போகலாமா, மோகன்?” என்று ஆசையுடன் கேட்டவனுக்கு, நந்தினிதான் பதிலளித்தாள். “அதான் வாழ்க்கையே சிரிப்பா சிரிச்சுப் போச்சே! இதில படம் வேறயா!”

சுப்பையா தலையைக் குனிந்துகொண்டான்.

அதன்பின், ஒவ்வொரு மாதமும், நிபந்தனைபோல் நந்தினி விதித்த இடங்களுக்குத்தான் மோகனோடு அவளையும் அழைத்துப்போக வேண்டியிருந்தது.

`இவன் என் மகன் மட்டும்தான்!’ என்று ஒவ்வொரு செய்கையிலும் சொல்லாமல் சொன்னாள்.

அவளுடைய தந்திரம் பலித்தது.

“அம்மாவுக்கு ரொம்ப கஷ்டம் குடுத்தீங்களாமே? ஏம்பா?’ முறைப்பாக மகன் கேட்டான்.

`என் வாழ்க்கையைக் கெடுத்தது போதாதென்று, இப்பிஞ்சு மனதையும் கலைத்து வைத்திருக்கிறாள்!’ ஆத்திரத்துடன் பல்லைக் கடித்துக்கொண்டான்.

அதுதான் அவர்களிருவருக்கும் ஒத்துப் போகவில்லை என்று சட்டபூர்வமாக விலகியாகிவிட்டதே! இன்னமும் ஏன் தன்னை விட்டு விலக மறுத்து, பிள்ளையைச் சாக்காக வைத்துக்கொண்டு இப்படிக் கூடவே வந்து கழுத்தறுக்கிறாள்?

ஒரு முறை அவளிடமே கேட்டான்.

நந்தினி விளையாட்டாய் சொல்வதுபோல் சொன்னாள். “நானிருந்த எடத்திலே இன்னொருத்தியைக்கொண்டு வரலாம்னு பாக்கறீங்களா? அதான் நடக்காது!”

சுப்பையா தீர யோசித்தான். எந்த மகனும், தன்னையுமறியாது, தந்தையைப் போலவேதான் நடக்க முற்படுகிறான். இங்கோ, `அப்பாவைப்போல இருக்காதேடா!’ என்று படித்துப் படித்துச் சொல்லி, பெற்றவளே அவனைக் குழப்புகிறாள்!

தன் வாழ்வு எப்படியோ போகட்டும்! என்றாவது ஒரு நாள், தனது கதையைப் பிள்ளையிடம் சொல்ல வேண்டும்.

`அம்மா சொன்னதை வெச்சுக்கிட்டு என்னைத் தப்பா எடைபோடாதே!’ என்று கெஞ்ச வேண்டும்.

அதற்கு இருக்கிறது இன்னும் பத்து வருடங்கள்!

இப்போது, உடனடியாகச் செய்ய வேண்டியது ஒன்றுதான்.

`அப்பா முதுகெலும்பு இல்லாதவர்,’ என்ற அபிப்ராயம் மோகனுடைய மனதில் ஆழமாகப் பதிவதற்குள் அதைக் கிள்ளி எறிய வேண்டும்.

தான் சொல்ல வேண்டியதைப் பல முறை ஒத்திகை பார்த்தான்.

“இன்னிக்கு என்னோட பிறந்தநாள். என் இஷ்டத்துக்குத்தான் எல்லாம் நடக்கணும். நான் மோகனோட தனியா போகப்போறேன்!” மிரட்டலாக நந்தினியிடம் கூறினான்.

என்றுமில்லாத தைரியம் புதியதொரு பலத்தைக் கொடுக்க, “அப்பாகூட வா!” என்றான் மகனிடம், அதிகாரமாக.

`அதிர்ந்தே பேசியிராத அப்பாவா இப்படிப் பேசுகிறார்!’ மோகன் பயந்தே போனான்.

“அம்மாவை விட்டு, நீயும் போகப்போறியா, கண்ணு?” என்று அழுகைக் குரலில் நந்தினி முறையிட்டபோது, ஓடிப்போய் அவளை அணைத்துக்கொண்டான் மகன்.

`இன்றிரவு அம்மாவிடம் அடி வாங்க மாட்டோம்!’ என்ற சிறு நிம்மதி ஏற்பட்டது அவனுக்கு.

(தமிழ் நேசன், 11-8-1996) 

தொடர்புடைய சிறுகதைகள்
நந்தினி கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டாள். ஆயிற்று. இன்னும் கால்மணிக்குள் அவள் இறங்குமிடம் வந்துவிடும். அவள்மட்டும் தனியாகப் போய் நின்றால், அம்மா என்ன சொல்வாள்? அவர்தான் ஆகட்டும், தலைதீபாவளியும் அதுவுமாய், இப்படியா தன்னை விட்டுக்கொடுப்பது! ஒரு மரியாதைக்காவது.. 'நீ கணவருக்கு மரியாதை கொடுத்தது என்ன தட்டுக்கெட்டுப் போயிற்று, அவரிடம் ...
மேலும் கதையை படிக்க...
என்றாவது வீட்டைவிட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்பது எதிர்பார்த்திருந்ததுதான். இன்றா, நேற்றா, முதன்முதலில் பெரியக்காவின் பாவாடை சட்டையை எடுத்து அணிந்துகொண்டு, கண்ணாடிமுன் நின்றபடி அழகுபார்த்தானே, அன்றே அவன் மனதில் அந்த எண்ணம் புதைந்துவிட்டது. “நாலு பொம்பளைப் புள்ளைங்களுக்கப்புறம் ஒரு ஆம்பளைப் புள்ளையாவது பொறந்திச்சேன்னு நான் எவ்வளவு ...
மேலும் கதையை படிக்க...
“சாப்பிட்டு முடிடா, செல்லம்! சமர்த்தில்லே!” ஞாயிறு தினசரியில் காளைமாட்டின் படத்தைப் பார்த்து, `நந்தி பகவானே! உனக்கு வந்த கதியைப் பாத்தியா?’ என்று, மானசீகம்மாக கைலாயத்திற்கே போய்விட்டிருந்த கமலநாதன் மனைவியின் குரலைக் கேட்டு நனவுலகிற்கு வந்தார். வீரம், பண்பாடு என்றெல்லாம் பேசுகிறவர்கள் `கருணை’ என்ற வார்த்தைக்கு ...
மேலும் கதையை படிக்க...
தீபாவளி சமயம். வீட்டில் இருந்தால், பண்டிகை விசாரிக்க வருபவர்களுடன் அர்த்தமில்லாது பேசிச் சிரித்து, பிடிக்கிறதோ இல்லையோ, அவர்களுடைய குழந்தைகளைக் கொஞ்சிவைத்து, எல்லாவற்றிற்கும் மேலாக, இடுப்பு உடைய சமையற்கட்டில் வேலை பார்த்து, இரவு, `இதில் என்ன ஹாப்பி தீபாவளி?’ என்று ஒவ்வொரு முறையும் ...
மேலும் கதையை படிக்க...
“ஒங்க கையை இப்படி என் கை பக்கத்திலே வைங்கோ!” புது மனைவியின் விளையாட்டு வேடிக்கையாக இருந்தது மணிக்கு. அவன் சற்றும் எதிர்பாராத தாக்குதல் அடுத்து வந்தது தாராவிடமிருந்து. “நம்ப ரெண்டு பேரில யாரு கறுப்பு, சொல்லுங்கோ!” தயக்கமும் அவமானமும் போட்டிபோட, ஒரு முறை அவள் ...
மேலும் கதையை படிக்க...
அழகான மண்குதிரை
நான் பெண்தான்
குற்ற உணர்ச்சியே கருணையாக…
கடற்கரை நண்பன்
பெண் என்னும் புதிர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)