உதிர்ந்த ரோஜா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 8,598 
 

பவளமல்லிகை வீட்டு முற்றத்தில் காற்றோடு கலந்து வந்து தன் சுகந்தத்தைப் பரவ விட்டிருந்தது. மலர்கள் மொட்டவிழ்ந்து தேனீக்களுடன் உறவாடி மகிழ்ந்திருந்தன. வண்ணத்துப் பூச்சிகள் வண்ணம் வண்ணமாய் வட்டமிட்டிருந்தன. கூந்தலைத் துவாயினால் உலர்த்திய வண்ணம் புத்தம் புதிய நாளின் வருகையை ரசித்த வண்ணம் சுபா முற்றத்திற்கு வந்தாள். ஒரு ரோஜாவை முகர்ந்து பார்க்கக் குனிந்தவளின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த தாலியானது அம்மலரின் மேல் பட்டதும் அம்மலரின் இதழ்கள் உதிர்ந்து கீழே மண்படுக்கையில் தஞ்சமடைந்தன. தன்னை உருக்குலைத்த தாலியை ஒரு கணம் உற்று நோக்கினாள், சுபா.

அந்த நாளின் இனிமை எங்கோ பறந்து போயின. அம்மி மிதித்து அருந்ததி பார்த்து பெரியோர் வாழ்த்த அவள் கழுத்தில் ஏறிய அந்த மாங்கல்யம், சாத்திரம் சம்பிரதாயங்களைக் கேலி செய்வதுபோல் அவள் கண்களுக்குத் தோன்றியது.

அறிந்த குடும்பம், கௌரவமான குடும்பம், அருமையான பெற்றோர் பெற்றெடுத்த ரவி, கனடாவிலிருந்து சாவகச்சேரி வந்தடைந்தான். வாலிப்பான அவன் உடற்கட்டு அவன் வாழ்க்கை பற்றி ஆராயாது சுபா மனதுக்கு வேலி போட்டது. மூத்தோர் பெரியோர் வாழ்த்த ரவி கட்டிய மாங்கல்யம் சுபா மார்பிலே தவள்ந்தது. கல்யாணம் முடிந்தது ரவி கனடா திரும்ப வேண்டிய நாளும் வந்தது. ”எங்களுடைய கல்யாணப்படத்தைக் காட்டித்தான் உங்களுக்கு விசா எடுக்க வேண்டும். எடுத்த பிறகு அறிவிக்கின்றேன். ரிக்கட் போட்டு கனடா வாருங்கள்” என்று ரவி அழகாகக் கூறி விமானமேறிப் போனவன்தான். கழுத்தில் ஏறிய தாலியும் வயிற்றில் ஏறிய குழந்தையையும் சுமந்து அவன் விசா எப்போது பெறுவான் என்று தவமிருந்தாள், சுபா. மனதில் கவலை கவ்விக் கொண்டால் வயிற்றில் பிள்iளையும் தாக்கத்தை நோக்கும் என்னும் துயர் அறிந்தும் அறியாதவளாய்ச் சுபா பிள்ளையைப் பெற்றெடுத்தாள். ஆறுமாத காலங்களே ஆசையோடு வளர்த்த பிள்ளை அப்பா யாரென்று அறியாமலே ஆண்டவன் காலடியை நாடிச் சென்று விட்டது. இவ்வாறான சோகத்தில் இருந்தவளுக்கு அன்றொரு நாள் சுகமான செய்தியொன்று வந்தது.

விசா கிடைத்து விட்டதாகவும் கடவைச் சீட்டு எடுத்துக் கொண்டு கனடா வரும்படியும் அனைத்து விபரங்களும் அடங்கிய தபால் கிடைத்த சந்தோஷத்தில் தலைகால் தெரியாது குதித்தாள், சுபா. தன்னை வாழவைக்கும் என நம்பிய கனடா மண்ணை அவள் பாதங்கள் தொட்டது. ரவியைக் கண்டவுடன் தன் மனதுள் அடக்கி வைத்திருந்த சோகங்களையெல்லாம் கொட்டி அழுதாள். அவளுக்கு ஆறதல் கூறிய ரவி, கனடாவில் வாழும் தனது அக்கா வீட்டிற்கு அவளை அழைத்துச் சென்றான். அன்று இரவு “ஏன் எங்களுக்கென்று தனியாக வீடு எடுக்கவில்லையா” என்று சுபா கேட்டாள்.

” இந்த நாட்டில் வீடு எடுப்பது ஒன்றும் சின்ன விஷயமில்லை. இந்த வீட்டில் சமாளிப்போம். வசதியாக ஏதாவது வீடு கிடைத்தால், தனியாகப் போகலாம்” என்று கூறிச் சமாளித்தான். சுபாவும் தனிக்குடித்தனம் போகும் நாளை எண்ணிக் காத்திருந்தாள் அதுவரை இவ்வீடு அவளுக்குச் சிறையாகவே பட்டது. சுதந்திரம் என்பது சொல்லிக் கொள்ளாமலே அவளிடமிருந்து பறித்தெடுக்கப்பட்டது. கட்டுப்பாடு என்பது கணக்கு வழக்கின்றி அவ்வீட்டில் ஆட்சி புரிந்தது.

ஒருநாள் தொலைபேசி அலறியது. அதை எடுப்பதற்காக அவள் ஓடியபோது ‘ சுபா எதற்காக நீ ஓடுகின்றாய்? இங்க வரும் ரெலிபோன் அழைப்பெல்லாம் உனக்குத்தானா வருகின்றது? அதை அக்கா எடுப்பா” என்று தடுத்துவிட்டான் ரவி. ஆனால், ஜேர்மனியிலிருந்து சுபாவினுடைய அக்காதான் தொலைபேசி எடுத்துள்ளார் என்று தெரிந்ததும் ‘ சரிசரி போய்க் கதை. ஆனால், இங்கத்தைய கதை ஒன்றையும் உளறித் தள்ளாதே” என்று கட்டளையாகக் கூறிப் பக்கத்தில் இருந்து விட்டான். அந்நியநாட்டில் பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், எல்லாம் கிடைக்கும் என்றுதான் இலங்கையில் இருக்கும்போது நினைத்திருந்தாள். ஆனால், வாழ்க்கைச் சுதந்திரத்தையே கனடாவில் சுபா இழந்து நின்றாள். ரவி இரவு வேலை என்று மாதத்தில் சில நாள்களே வீட்டில் தங்குவான். எதற்கெடுத்தாலும் சுபாவில் எரிந்து விழுவான். வேலைக் கஷ்டத்தில் இவ்வாறான போக்கில் ரவி இருக்கின்றான் என நினைத்து எதுவுமே பேசாது காலத்தைக் கடத்தினாள், சுபா. தன்னுடைய துயரை வெளியில் வெளிப்படுத்த முடியாத கட்டுப்பாட்டினுள் சுபா அடைக்கப்பட்டாள்.

திடீரென ஒருநாள் ரவி, ” சுபா! இங்கு அக்காவினுடைய வீட்டில் தங்குவது பிரச்சினை போல இருக்கிறது. அடுத்த கிழமை நீ இலங்கைக்குப் போவதற்கு ரிக்கட் போட்டிருக்கிறேன். ஊருக்குப் போ. வீடு எடுத்ததன் பிறகு அறிவிக்கின்றேன். திரும்பி வா. என்ன சரிதானே? ” என்றான், ரவி. முடிவை எடுத்ததன் பின் வினா அவசியம்தான? இதற்குமேல் எதுவும் கதைப்பதற்கு சுபா மனம் இடம் தரவில்லை. கட்டுப்பாடான சூழலில் இருந்து நாட்டுக்குப் போவதே அவளுக்குச் சரியெனப்பட்டது. நகை போட்டு, உடை உடுத்து கண்ணாடி அலுமாரியில் அழகுக்கு வைக்கும் பொம்மையல்லவே அவள். ‘ சரி அம்மாவையும் பார்க்க வேண்டும் போல்த்தான் இருக்கின்றது. நான் போகின்றேன்” என்றாள்.

நாடு திரும்பும் வேளை வந்தது. விமான நிலையம் வந்தடைந்தாள். சந்தர்ப்ப வசமாக சுபா தனது பழைய சிநேகிதியைக் கண்டாள். விமானத்தினுள் அருகருகே இருப்பதற்காகப் பக்கத்தில் இருந்தவர்களின் உதவியை நாடித் தனது சிநேகிதியின் அருகே அமர்ந்து விட்டாள். அவள் சிநேகிதியும் ” என்னடி சுபா, எப்படி கனடா வந்த நீ ? எனக்கு ஒரு ரெலிபோன் எடுத்திருக்கலாமே? ரவியோட நின்றாயே? என வினாவுக்கு மேல் வினா எழுப்பினாள். ”அவரை உனக்குத் தெரியுமா? என்று கேட்டாள் சுபா. ”இதென்ன என்னுடைய மகளோடதானே ரவியின்ர மகளும் Kindergarden இலே படிக்கின்றா. நான் அடிக்கடி கதைக்கிறனான்” என்றாள் சிநேகிதி. சுபாவுக்கு நெஞ்சமே வெடித்துவிடும் போல் இருந்தது. அவளது முகமாற்றத்தை உற்று நோக்கிய சிநேகிதியும் ” ஏன் சுபா ஒரு மாதிரியாய் இருக்கின்றாய்? என்று கேட்டாள்.

”இல்லை. அவர்தான் இலங்கைக்கு வந்து என்னைக் கல்யாணம் செய்து இங்கே என்னை எடுத்தவர். அவருடைய அக்கா வீட்டில்த்தான் இவ்வளவு நாள்களும் நின்றேன். வேறு வீடு எடுத்ததன் பின் என்னைக் கூப்பிடுவதாகச் சொல்லி இலங்கைக்கு அனுப்புகின்றார். என்று கலங்கிய கண்களுடன் விபரத்தை விம்மிவிம்மி வெளிப்படுத்தினாள்.

”ரவியைப் பற்றிய விபரம் முன்னமே நீ அறியவில்லையா சுபா. ஒன்றும் விசாரிக்காமலேயா இந்தக் கல்யாணம் செய்தாய்? எதற்காக இப்போது ஊருக்குப் போகின்றாய். கனடாவிலேயே நின்றிருக்கலாமே என்று கேட்ட சிநேகிதியிடம் ”இல்லை இங்கே இருப்பதைவிட ஊருக்குப் போய் என் அம்மாவின் மடியில் விழுந்து ஓ….. என்று அழுதால்த்தான் என்னுடைய மனப்பாரம் குறையும். என் ஜீவனும் நிம்மதியடையும். என்று கூறி இலங்கை வந்தடைந்தாள்.

காலம் கடக்கின்றது. கனடா செல்லும் காரியம் நடைபெறவில்லை. அப்படியென்றால் ரவிக்கு இவள் யார்? வைப்பாட்டியா? மனைவியா? அவளைக் கனடாவிற்கு அழைத்ததன் காரணம்தான் யாது? புரியாத புதிருக்கு இன்னும்தான் சுபா விளக்கம் தேடுகின்றாள்.

தன்னை உருக்குலைத்த தாலியினால், இப்போது உருக்குலைந்து கிடக்கும் ரோஜா இதழ்களை ஒவ்வொன்றாகப் பொறுக்கி எடுத்தாள், சுபா. ஒரு கல்லாடிக் குவளையினுள் நீரிட்டு அந்த இதழ்களை அதனுள் இட்டாள். உதிர்ந்த இதழ்கள் வாடிச் சருகாகும் வரை அதற்கு வாழ்வளிக்கும் முனைப்பில் இறங்கினாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *