உதிரத்தில் உதித்த உறவு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 21, 2022
பார்வையிட்டோர்: 4,626 
 

கருவேல மரத்தை வெட்டி, சுள்ளிகளை சேகரித்து கட்டி, சும்மாடை சுருட்டி தலையில் வைத்து, யாரும் தூக்கி வைக்க ஆள் வருகின்றனரா என்று நோட்டமிட்டாள் செல்லாயி.

“ஆத்தா, என்ன சுமையை தலையில் ஏத்தணுமா?” குரல் கேட்டு திரும்பியவள், வேலன் நிற்பதை பார்த்தாள்.

“ஆமாம் பா… நேரமாச்சு, தூக்கி வை. இனி வீட்டுக்கு போயி உலை வைக்கணும்.”

அவன் தூக்கி வைக்க, தலையில் வாங்கியவள் நடக் கத் துவங்கினாள்.

“ஆத்தா, உன் மகன் விடுதலையாகி வந்துட்டான் போலிருக்கு…”

ஒரு கணம் நின்றவள், “என்ன, தங்கராசு வந்துவிட்டானா?” திரும்பி பார்த்தவளிடம், “ஆமாம், ஆத்தா. நேத்து வேலூர் போயிருந்தப்ப என் மச்சான் சொன்னாரு. தங்கராசு ஏழு வருச தண்டனை முடிஞ்சு போன வாரம் ரிலீஸாயிட்டானாம். இன்னும் உன்னை பார்க்க வரலையா?” அவன் பேசிக் கொண்டே போக, அவள் மனமெல்லாம் தங்கராசு நிறைந்தான்.

ஒரே மகன் தங்கராசு, தான்தோன்றி தனமாக வளர, இடிந்து போனாள்.

ஒருநாள் நண்பர்களுடன் சீட்டாட்டத்தில் ஏற்பட்ட தகராறில், ஒருவனை அரிவாளால் வெட்ட, ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவன், இரண்டு நாள் ஆஸ்பத்திரியிலிருந்து உயிரை விட்டான்.
அவனுடன் இருந்த இன்னொரு நண்பன் துரை, தங்கராசுக்கு எதிராக சாட்சி சொல்ல, ஏழு வருட தண்டனை விதிக்கப்பட்டு, ஜெயலில் அடைக்கப்பட்டான். அழுது புலம்பினாள் செல்லாயி. ஊரே அவளை கொலைகாரனை பெற்றவளாக பார்க்க, தலை குனிந்து குறுகி போனாள்.

மனதை தேற்றி, திருந்தி வரப்போகும் மகனுக்காக காத் திருக்க ஆரம்பித்தாள்.

“விடுதலையாகி ஒருவாரம் ஆகிவிட்டதா? இன்னும் தங்கராசு ஆத்தாவை தேடி வரலையே…’ மனம் புலம்ப, உலை வைக்க கூட தோன்றாமல், குடிசையில் சுருண்டு படுத்தாள்.

காலையில் குடிசையின் படல், படபடலென்று தட்ட, வாரி சுருட்டி எழுந்த செல்லாயி கதவை திறந்தாள். மகன் தங்கராசுவை பார்த்து கண் கலங்கினாள்.

“தங்கராசு, வாப்பா… உன்னை பார்க்கணும்ன்னு தான் உசிரை வச்சுட்டு இருந்தேன். கோபத்தாலே உன் வாழ்க் கையை ஜெயிலில் கழிச்சிட்டு நிற்கிறயே. வயசான காலத்தில் நீ தான் ஆதரவுன்னு நினைச் சிட்டிருக்கேன்பா…”

மவுனமாக அமர்ந்திருக்கும் மகனை பார்த்தாள். பெற்ற வயிறு மகனின் நிலைகண்டு கலங்கியது.

“என்னப்பா… இப்படி இடிஞ்சு போயி உட்கார்ந் திருக்கே. போனது போகட்டும். இனியாவது நல்ல வாழ்க்கை வாழ ஆரம்பி. படிக்காட்டி என்னப்பா… உழைக்கிறதுக்கு கை, கால் இருக்கு, நல்ல வேலை தேடிக்க”.

“போன வாரம் உன் அத்தை மக கனகு வந்தா. உன்னை கல்யாணம் கட்டிக்க தயாராக இருக்கா. அவளை உனக்கு கட்டி வைக்கிறேன். புது வாழ்க்கை தொடங்கு. நாமும் எல்லாரையும் போல், குடும் பம், குடித்தனம்ன்னு சந்தோஷமாக இருக்கலாம்பா. நீ நல்லா வாழ்றதை இந்த ஆத்தா மனசு குளிர பார்க்கணும்…”

“ஏழு வருடம் ஆத்தா…என்னோட வாழ்நாள் எல்லாம் ஜெயலிலேயே போயிடுச்சி. எல்லாரும் தான் சண்டை போட்டாங்க. நான் மட்டும் இல்லையே. ஏதோ ஆத்திரத்திலே அரிவாளை தூக்கிட்டேன். படாத இடத்தில் பட்டு, போய் சேர்ந்தான். அதுக்கு என்னை மட்டுமே பலிகடா ஆக்கிட் டாங்க; கூட இருந்தே குழி பறிச்சுட்டாங்க.

“அந்த நாயி துரை மட்டும் சாட்சி சொல்லாம இருந் திருந்தா எனக்கு தண்டனை கிடைச்சிருக்காது. என்னை இப்படி ஏழு வருஷம் முடக்கி போட்டுட்டானே பாவி…”

ஜெயிலில் அடைப்பட்டிருந்த ஆத்திரம் குரலில் ஒலித்தது.

“சரிப்பா விடு… இன்னுமா கோபத்தை மனசிலே வச் சிருக்கே? ஏதோ உன் போதாத நேரம், இப்படி ஆயிடுச்சி. அதுக்கான தண்டனையும் அனுபவிச்சு முடிச்சாச்சு. இனி அதை பற்றி நினைக்காதே.

“துரையும் இப்ப திருந்திட் டான்பா. கல்யாணம் பண்ணி, இரண்டு பிள்ளைகள், ஒழுங்காக குடித்தனம் நடத்தறான். டிராக் டர் வாங்கி ஓட்டறான். போன மாசம் என்னை பார்த்தான்.

“அப்போ, “ஆத்தா… தங்கராசு வந்தா என்கிட்டே சொல்லு. ஏதோ வயசு கோளாறு, தப்பு செஞ்சுட்டான். நானும் இப்ப பழைய சகவாசத்தை ஒழிச்சு, திருந்தி வாழறேன். அவனும் என்னை மாதிரி திருந்தி நல்லா வாழணும் ஆத்தா. நானே அவனுக்கு நல்ல வேலை வாங்கி தரேன்!’ அப்படின்னு சொன்னான்பா. நீ போயி அவனை பாரு… நிச்சயம் உனக்கு நல்லது செய்வான்.”

“பார்க்கத்தான் போறேன். என் வாழ்க் கைய கெடுத்துட்டு அவன் நல்லா வாழறானா? என்மனசு பத்திக் கிட்டு எரியுது. இந்த ஏழு வருஷம் நான் பட்ட கஷ்டம், வேதனை அவனுக்கு தெரியுமா? இப்ப நல்லவன் மாதிரி பேசறானா…”

ஆத்திரத்தில் முகம் சிவந்து கத்தினான்.

“வேண்டாம்பா. சொன்னா கேளு. இந்த ஆத்திரம் தான் உனக்கு எதிரியா இருக்கு. நிதானமா யோசிச்சு பாரு. இனியும் கோபப்பட்டு, ஆத்திரப்பட்டு எந்த தவறும் செய்யாதே. ஏழு வருஷத்தில் மனசு திருந்தி வந்திருப்பேன்று நினைச்சேன். பழைய தங்கராசுவாக பேசற… வேண்டாம்பா. இது உனக்கு நல்லதில்லை…”

“ஆத்தா, சாராய கடை வரைக்கும் போய்ட்டு வரேன். நெத்திலி கருவாடு போட்டு காரசாரமாக குழம்பு வை. உன் கையால சாப்பிட்டு எத்தனை வருஷமாச்சு. துரை விஷயத்தை விடு. அது என் கவலை. நான் பார்த்துக்கிறேன்…”

சொன்னவன் வெளியேற, விக்கித்து நின்றாள் செல்லாயி.

“இவன் திருந்தவில்லை; எத்தனை ஜென்மம் எடுத்தாலும் திருந்தப் போவதில்லை. மகன் திருந்தி வருவான், அவனுக்கு ஒரு நல்ல வாழ்க் கையை காட்டி, அவனுடன் மனம் குளிர வாழலாம் என்று காத்திருந்த என் கனவு நனவாக போவதில்லை. இப்படி ஒரு பிள்ளை பிறக்காமலே இருந்திருக்கலாம்…’ அவள் கண் களில் கண்ணீர் வழிந்தது.

மறுநாள் காலை விடிந்தும், விடியாத நேரத்தில் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் குத்திட்டு அமர்ந்திருந்த செல் லாயியை பார்த்தார் ஏட்டு.

“என்ன ஆத்தா. ஏன் இப்படி குளிர்ல இங்க வந்து உட்கார்ந்திருக்க?”

“என் மகனை சாப்பாட்டில் விஷம் வச்சு கொன்னுட்டேன் ஐயா. என்னை கைது பண் ணுங்க. வீட்டுக்கும், நாட்டுக் கும் உதவாத பிள்ளை. ஆத்திரத்தில் ஒருத்தனை கொன் னுட்டு, ஜெயிலுக்கு போனவன், ஏழு வருஷம் கழிச்சி திருந்தி வருவான்னு காத்திருந்தேன்.

“திரும்பவும், இன்னொரு குடியை கெடுக்க வந் திருக்கான்னு தெரிஞ்ச பிறகு, இவனை இனியும் விட்டு வைக்கிறது நல்லதில்லேன்னு தோணிச்சு. எந்த கையால, சீராட்டி, பாராட்டி வளர்த் தேனோ, அதே கையால விஷம் வச்சு கொன்னுட்டேன் ஐயா.

“என் பிள்ளையை, என் ரத்தத்தில் உதித்தவனை நானே கொன்னுட்டேன். எனக்கு தண்டனை கொடுங்க. அந்த பாவியை பெத்ததற்கு தண்டனை கொடுங்க…”

கதறி அழுத செல்லாயியை பரிதாபமாக பார்த்தார் ஏட்டு.

– Oct 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *