கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,530 
 

காலை டிபன் தயாரிப்பதில் நித்யா ஈடுபட்டிருக்க, அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், நேரம் கழித்து எழுந்த நரேன், தோட்டத்துக்கு வந்தான். அங்கு, அவன் தாய் லட்சுமி, செம்பருத்தி பூக்களை பூஜைக்கு பறித்துக் கொண்டிருக்க, “”அம்மா… அப்பா எங்கேம்மா காணோம்?”
“”அவர் விடியற்காலையிலேயே எழுந்து போயிட்டாருப்பா. அவர் சிநேகிதருக்கு, இரண்யா ஆபரேஷன் பண்ணி, ஆஸ்பத்திரியில் இருக்காராம். துணைக்கு யாருமில்லைன்னு போயிருக்காரு. சாயந்தரமா தான் வருவேன்னு சொல்லிட்டு போனாரு.”
அங்கிருந்த துணி துவைக்கும் கல்லின் மீது, அமர்ந்தவன், “”ஏம்மா… அப்பாவுக்கு என்ன சின்ன வயசா… அறுபதுக்கு மேல் ஆகப் போகுது. இவரே பிரஷர் மாத்திரை சாப்டுட்டு இருக்காரு. ஏன் இப்படி வெளியிலேயே அலையறாரு?”
உதவிஅவன் குரலில் கோபம் தெரிந்தது.
“”என்னப்பா செய்யறது… சின்ன வயசிலிருந்தே, அடுத்தவங்களுக்கு உதவ பழக்கப்பட்டுட்டாரு. தன்னால முடிஞ்சதை அடுத்தவங்களுக்கு செய்யணும்ன்னு நினைக்கிறாரு; அதை, தடுக்க முடியுமா?”
“”தடுத்து தான் ஆகணும். போன வாரம் டாக்டர்கிட்டே செக்-அப்புக்கு போனப்ப, “பிரஷர் குறையவே மாட்டேங்குது… உப்பு குறைச்சு சாப்பிடுங்க; வெயிலில் அதிகம் அலையாதீங்க…’ன்னு டாக்டர் சொன்னாரு. இவர் கேட்கிற மாதிரியே தெரியலை. நாளைக்கு இவர் படுத்துக்கிட்டா யாரு பார்க்கிறது?”
“”ஏம்பா அப்படி சொல்ற… அவர் சுறுசுறுப்பா, ஆரோக்கியமாத்தானே இருக்காரு. அவரால முடியறதாலே செய்யறாரு. நீ ஏன் கோபப்படறே?”
“”உங்களுக்கு நான் என்ன சொல்ல வர்றேன்னு புரியலை. அடுத்தவங்களுக்கு உதவி செய்த வரைக்கும் போதும். வரட்டும்… வீட்டிலேயே ரெஸ்ட்டா இருங்கன்னு கண்டிச்சு சொல்லப் போறேன்.”
மாலை நேரம் —
மேல் துண்டால் முகத்தை துடைத்தபடி உள்ளே நுழைந்தவரை, ஹாலில் உட்கார்ந்து, “டிவி’ பார்த்துக் கொண்டிருந்த நரேன் அழைத்தான்.
“”அப்பா… இங்கே வாங்க… எங்க போயிட்டு வர்றீங்க?”
“”அம்மாகிட்டே சொல்லிட்டு போனேனே நரேன். என் பிரெண்ட், ஆபரேஷன் பண்ணி ஆஸ்பத்திரியில் இருக்கான். அவனுக்கு உதவிக்கு இருந்துட்டு வர்றேன்.”
“”உங்களுக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். உங்க ஆரோக்கியம் தான் முக்கியம். உங்க உடம்பை பாருங்க. வயசாயிடுச்சு, அலைய வேண்டாம்ன்னு சொல்றதை கேட்க மாட்டீங்களாப்பா?”
“”என்னடா இது… மனுஷனா பொறந்துட்டோம். அடுத்தவங்களுக்கு நம்மால முடிஞ்ச உதவி செய்யறது தப்பா? என் உடம்பு நல்லாதானப்பா இருக்கு… நீ கவலைப்படாதே!”
“”அப்பா… அப்படி நினைச்சுக்கிட்டு, உங்க உடம்பை நீங்களே கெடுத்துக்காதீங்க. நாளைக்கு நீங்க படுத்தா, நாங்க தானே சிரமப்படணும்; அதைப் புரிஞ்சுக்குங்க. இனி, இது மாதிரி உதவி செய்யறேன்னு அனாவசியமா வெளியே அலைய வேண்டாம். வீட்டிலேயே ரெஸ்ட் எடுங்க. ஒரு வயசுக்கு மேல, பிள்ளைங்க சொல்றதை கேட்கணும்பா. உங்க நல்லதுக்கு தான் சொல்றேன்… புரியுதா?”
“”சரிப்பா… நீ கோபப்படாதே. இனி எங்கேயும் போக மாட்டேன்; போதுமா?”
சொன்னவரின் குரலில் வருத்தம் இழையோடுவதை, லட்சுமியால் புரிந்து கொள்ள முடிந்தது.
ஒரு வாரமாக, மகன் சொல்லுக்கு கட்டுபட்டு, வீட்டிலேயே இருந்தார். ஆனால், சுறுசுறுப்பாக இல்லாமல், எப்போதும் சோர்ந்து படுத்தபடியே… லட்சுமிக்கு அவரை பார்க்க சங்கடமாக இருந்தது.
“”என்னங்க… வெளியே போகாட்டி என்ன? வீட்டுக்குள்ளேயே பொழுது போக எவ்வளவோ விஷயம் இருக்கே. “டிவி’ பாருங்க… சுவாமி புத்தகங்கள் இருக்கு; எடுத்து படிங்க… ஏன் இப்படி சோர்ந்து படுத்துக்கிறீங்க?”
“”இல்லை லட்சுமி… கோவில்களை பத்தி புத்தகத்தில் படிச்சு தெரிஞ்சுக்கிறதை விட, நேரில் போய் தெரிஞ்சுக்கணும்ன்னு பிரியப்படறவன் நான். ஒரு வாரமா வாக்கிங் மட்டும் தான் போறேன். வீட்டிலேயே அடைஞ்சு கிடக்கறது கஷ்டமா இருக்கு. என்ன செய்யறது… நரேன் சொல்றதிலும் ஒரு நியாயம் இருக்கு.”
“”அடுத்த வாரம் நரேனுக்கு இரண்டு நாள் லீவு வருதாம். எல்லாரும் திருச்செந்தூர் முருகனை போய் தரிசனம் பண்ணிட்டு வரலாம்ன்னு சொன்னான். எல்லாம் உங்களுக்காகத் தான்; சந்தோஷம் தானே?”
“”அம்மா… தஞ்சாவூர் மாரியம்மன் கோவிலில், நித்யாவின் தங்கை குழந்தைக்கு காது குத்தி, முடி இறக்கறாங்களாம்… வரச் சொல்லி போன் பண்ணினாங்க. நானும், நித்யாவும் போயிட்டு வந்திடறோம். அப்பாவை வெளியில் எங்கும் அலைய வேண்டாம்ன்னு சொல்லி வைங்க.”
இருவரிடமும் விடைபெற்று, மனைவியுடன் காரில் கிளம்பினான் நரேன்.
கோவிலில் விசேஷம் முடிய, மாலை நான்கு மணி ஆயிட்டுது.
“”நாலு மணி நேரம் போகணும் நித்யா. கிளம்பு…”
தங்கையுடன் பேசிக் கொண்டிருந்த நித்யாவை, அவசரப்படுத்தி அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.
பனிக்காலம் என்பதால், ஆறு மணிக்கே இருட்ட ஆரம்பிக்க, சீரான வேகத்துடன் வந்து கொண்டிருந்த கார், திடீரென்று நரேனின் கட்டுப்பாட்டை இழந்து ஓட, திடுக்கிட்டு பிரேக்கை அழுத்தி, வண்டியை நிறுத்தினான். “கடகட’வென்ற சப்தத்துடன் வண்டி நிற்க, “”என்னாச்சு?” நித்யாவின் முகத்தில் அதிர்ச்சி.
கதவை திறந்து இறங்கி பார்த்தவன், வண்டியின் ஆக்சில் உடைந்து இருக்க, நல்லவேளை… பெரிய விபத்திலிருந்து தப்பியதை உணர்ந்தான்.
“”நித்யா… இனி வண்டி கிளம்பாது. ஆக்சில் உடைஞ்சிருக்கு. சரி பண்ணினால் தான் எடுக்க முடியும். புதுக்கோட்டைக்கு இன்னும் 10 கி.மீ., இருக்கும்ன்னு நினைக்கிறேன். இப்ப என்ன செய்யறது… பொழுதும் இருட்டிட்டு வருது.” அவன் குரலில் பதட்டம்.
கையிலும், கழுத்திலும் நகைகளை போட்டுக் கொண்டு இப்படி தனியாக… அவனுக்கு மேல் பயந்தாள் நித்யா.
“”காரை பூட்டிட்டு, வர்ற பஸ்சில் எதுலயாவது ஏறிப் போயிடுவோங்க. இப்படி நடுரோட்டில் நிக்கவா முடியும்?”
தூரத்தில் கார் வெளிச்சம் தெரிய, அருகில் நெருங்கியவுடன், கையசைத்து காரை நிறுத்தினான்.
முன்பக்கத்தில், டிரைவருக்கு அருகில் உட்கார்ந்திருந்த பெரியவர், கார் கண்ணாடிய இறக்கி, காரின் முன் பரிதவிப்புடன் நிற்கும் அவர்களை பார்த்தார்.
“”என்னாச்சு… டயர் பஞ்சரா… மாத்தணுமா?”
“”இல்லைங்க. ஆக்சில் உடைஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன். நாங்க தேவக்கோட்டை போக வேண்டியவங்க. தஞ்சாவூருக்கு ஒரு விசேஷத்துக்கு வந்தோம். இப்ப என்ன செய்யறதுன்னு புரியலை. நீங்க ஏதாவது உதவ முடியுமா?”
சிறிது யோசித்தவர்…
“”ஒண்ணு செய்யுங்க… என் டிரைவர் உதவியோடு, வண்டியை ஓரமா நிறுத்தி பூட்டிட்டு, என்னோடு வாங்க. புதுக்கோட்டையில் தான் என் வீடு. புதுக்கோட்டை போனதும், டிரைவரோடு மெக்கானிக்கை அனுப்பி, சரி செய்து எடுத்துட்டு வரலாம். என்ன சொல்றீங்க?”
அவர் சொல்லும் யோசனை சரியென்று தோன்ற, வண்டியை, அவர் சொன்னபடி ஓரமாக நிறுத்தி பூட்டினான். அவர்கள் காரின் பின்புறம் ஸ்கீரின் போட்டிருப்பதிலிருந்து, அவர்கள் முஸ்லிம் என்பது அவனுக்கு தெரிந்தது. பெரியவரின் அருகில் நரேன் ஏறிக் கொள்ள, பின் சீட்டில் அமர்ந்திருந்த பெண்கள் நகர்ந்து இடம் கொடுக்க, நித்யா அமர்ந்து கொண்டாள்.
அவர்கள் முன் பலகாரங்களும், காபியும் கொண்டு வந்து வைக்க,””வேண்டாங்க… காபி மட்டும் எடுத்துக்கிறோம். கார் ரிப்பேராகி வந்து, ஊருக்கு போனால் போதும். வயசான அப்பா, அம்மா தனியா இருப்பாங்க…” நரேன் சொல்ல, “”எங்க டிரைவரோடு, மெக்கானிக்கை அனுப்பி இருக்கேன். ஒரு மணி நேரத்தில் சரி பண்ணி எடுத்துட்டு வந்துடுவாங்க. கவலைப்படாம சாப்பிடுங்க. நடந்த சம்பவத்தை சொல்லாமல், “கிளம்ப நேரமாச்சு, வந்துடறோம்…’ன்னு தகவல் மட்டும் வீட்டுக்கு சொல்லுங்க.”
பெரியவரை நன்றியுடன் பார்த்தான். வண்டியை ரிப்பேர் பண்ணி, டிரைவர் எடுத்து வர, அதற்குரிய பணத்தை கொடுத்தவன், அவர்களிடம் விடைபெற்று கிளம்பினான்.
வாசல் வரை வந்த பெரியவரிடம், “”ரொம்ப நன்றிங்க. இக்கட்டான சமயத்தில் உதவி பண்ணினீங்க. அது மட்டுமல்லாமல், நல்ல உபசரிப்பு கொடுத்தீங்க. உங்களை நாங்க என்னைக்கும் மறக்க மாட்டோம்.”
“”என்ன தம்பி இது… இந்த சின்ன உதவியை போய், இவ்வளவு பெரிசா சொல்றீங்க. இந்த உலகத்தில் மனிதர்களாக பிறந்திருக்கோம். இந்த உடம்பு மண்ணுக்கு போற வரைக்கும், நம்மால முடிஞ்ச உதவியை பிறருக்கு செய்யணும். அதற்கான சந்தர்ப்பத்தை அல்லா எனக்கு கொடுத்ததற்கு, அவருக்கு நான் நன்றி சொல்றேன். போயிட்டு வாங்க தம்பி.”
போன் மணியடிக்க, எடுத்து பேசினான் நரேன். படுக்கையில் புரண்டபடி இருக்கும் அப்பாவிடம் வந்தான்.
“”அப்பா… உங்க பிரெண்ட் துரைசாமி கிட்டயிருந்து போன். அவர் பேத்திக்கு வரன் விஷயமா விசாரிக்க, சென்னைக்கு போகும் போது, துணைக்கு வர்றதா சொல்லியிருந்தீங்களா… அவர் நாளைக்கு காரில் புறப்படறாராம். உங்களை அவசியம் வரச் சொன்னாரு. போயிட்டு வாங்கப்பா.”
உற்சாக துள்ளலுடன் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தார்.
“”நிஜமா தான் சொல்றியா நரேன்… நான் இதை போல, என்னால முடிஞ்ச சிறுசிறு உபகாரம் இனி செய்யலாமா… உனக்கு ஒண்ணும் வருத்தமில்லையே?”
அப்பாவின் கரங்களை அன்புடன் பற்றியவன், “”தேவைப்படறவங்களுக்கு நம்மால முடிஞ்ச உதவியை செய்வது, எவ்வளவு உயர்ந்த செயல்ங்கிறதை, அனுபவப்பூர்வமா உணர்ந்திட்டேன்… கடவுள் படைச்ச இந்த உடம்பு மண்ணில் போற வரைக்கும், நம்மால இயன்ற உதவியை அடுத்தவங்களுக்கு செய்யணுங்கிறதை, உங்க மூலமா தெரிஞ்சுக்கிட்டேன்பா. கடவுள், உங்களுக்கு அதுக்கான உடல் ஆரோக்கியத்தையும், மன பலத்தையும் கொடுப்பாரு. போயிட்டு வாங்கப்பா!” மகனை பாசத்துடன் அணைத்துக் கொண்டார்.

– பிப்ரவரி 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *