உச்சிப் பொழுதில் அவள்

 

காலை நாலரை மணிக்கு தொழுகையில் ஈடுபட்டுவிட்டு தேர்வுக்கு படித்துக் கொண்டு இருந்தான். பிஸ்மில்லா பானு கூப்பிடுவது கூட கேட்கவில்லை. படிப்பதிலேயே ஆர்வமாக இருந்தான் அக்கிம்.

நோய்வாய்ப்பட்டு நார்க்கட்டிலில் படுத்த படுக்கையாகவே இருந்தாள் பிஸ்மில்லா பானு. இருமல்,சளி பலத்த சத்தத்துடன் காரித்து ஒரு மண் கலயத்தில் துப்பிக்கொண்டே இருந்தாள்.

சிலநாட்கள் மஞ்சள்காமாலையில் அவதிப்பட்டு சற்று குணமாகி இருந்தாள். தொடர்ந்து மழை பெய்ததால் மலேரியா காய்ச்சல் தொற்றிக் கொண்டது. ஹமீதும் ஏதேதோ வைத்தியம் செய்தும் பலனில்லை. இவரும் தொழுகையை முடித்துவிட்டு குடங்களை மரப்பெட்டியில் மாட்டி தொங்கவிட்டு பாரம்பரிய சொத்தாகிய அந்த துருபிடித்த சைக்கிளில் கட்டினார்.

” அக்கிமு… தண்ணி அடுப்புல வச்சுருக்கேன். காஞ்சதுக்கு அப்புறம் ஆரவச்சு அம்மா முகத்த கழுவி விட்ரு.கஞ்சியக் கரச்சு கொடுத்துரு. மத்தியானம் வந்தர்றேன்….” சொல்லியவாறு சைக்கிளை கெந்தி ஓட்டினார்.

அவசரமாக தண்ணியை இறக்கிவைத்து ஆர வைத்தான். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என்பதால் பரபரப்பாக காணப்பட்டான்.

” ஏன்டா….நாளுபூராவும் பயலுவளோடு சேந்து பேட் ஆடுற. இப்ப விழுந்து விழுந்து படிச்சு என்ன பண்றதுக்கு…. அல்லா என்னய சேத்துக்கவே…..” லொக் லொக்…. என இருமி சளியை காரித்து மண்கலயத்தில் துப்பினாள். இவளின் செயல் அவனுக்கு ஆத்திரத்தையே ஊட்டியது.

” காலையிலேயே கழுத்த அறுக்குறீயே…. கடைசிப் பரீட்சைதானே…யேந்தான்…. லொக்குலொக்குனு இருமுவியோ…. செத்து தொலஞ்சா என்ன…..” முனுமுனுத்துக் கொண்டே குளத்துப் பக்கம் சென்றான்.

வேகமாக குளித்துவிட்டு சோத்துச் சட்டியை தேடினான். கரிப்பிடித்த மூலையில் இருந்தது. திறந்து பார்த்தான். முந்தாநாள் ஆக்கிய பழைய கஞ்சி கொலகொலவென இருந்தது. உப்பு போட்டு கரைத்து குடித்துவிட்டு காக்கி பேண்டையும் ஒட்டுப்போட்ட வெள்ளைச் சட்டையையும் உடுத்திக் கொண்டு தேர்வுக்குப் புறப்பட்டான்.

” ஏம்பா….பக்கத்து தெருவுல நாச்சியம்மா கொடம் கேட்டாகளாம். கொடுத்துட்டு போப்பா….” மெல்லிய குரலுடன் அவள்.

” போகும் போது ஏதாவது………. சும்மா கெட….” பழைய குடத்தை தூக்கி திண்ணையில் எறிந்துவிட்டு கோபமாக சென்றான்.

” கஞ்சியாவது கொடுத்துட்டுப் போயா….” தலையை மெதுவாக தூக்கியவாறு இருமிக்கொண்டே சொன்னாள்.

காதில் வாங்காதவனாய் வேர்த்துப்போன முகத்தோடு போய்க்கொண்டே இருந்தான். மழையில் நனைந்தவன் போல் வேர்வைத் துளிகளில் அவன். சிறிய கைக்குட்டையில் முகத்தில் துடைத்துக்கொண்டே தேர்வு எழுதினான்.

உச்சிப்பொழுது நெருங்க, பள்ளிவாசலில் தொழுகை நடக்கும் சத்தம் கேட்டது. பிஸ்மில்லாவுக்கு பசி மயக்கம் வயிரை கிள்ளியது. படுத்தவாறே பக்கத்து வீட்டுக்காரர்களை அழைத்தாள். மெல்லிய சத்தம் யாருக்குமே கேட்கவில்லை.

ஓட்டை வீடு என்பதால் உச்சி வெயில் வாட்டி எடுத்தது. வேர்த்து விறுவிறுத்தது. சேலை நனைந்து கசகசவென்று இருந்தது. எழமுடியாமல் எழுந்தாள். தலைசுற்றி காது மந்தமாய் கண்கள் கலங்கின. கைகள் வெடவெடவென…கால்களும் தடுமாறின. பசி அதிகமாய் கண்கள் மயங்கின. தடுமாறியபடி குனிந்தபோது ஓட்டில் இருந்த பல்லி அவள் தலையில் விழ அதிர்ந்து தரையில் விழுந்தாள். கண்களில் ஈக்கள் மொயத்தன. மூக்கில் ரத்தம் வழிய இதயத் துடிப்பும் காணவில்லை. கை ஒன்று சட்டியில் வைத்தவாறே சோத்துச் சட்டி சாயந்து கிடந்தது.

” பானு அக்கா சத்தத்தையே காணோமே….” தனக்குள் பேசியவாறு ” பானு அக்கா….” என அழைத்தாள் நிஷா. சத்தம் இல்லாததால் வீட்டுக்குள் எட்டிப் பார்த்தவள் பிஸ்மில்லாவைப் பார்த்ததும் அலறு சத்தம் போட்டாள். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவளைத் தூக்கினர்.

சற்று நேரம் கழித்து வழக்கம்போல் வந்த ஹமீது தன் வீட்டு முன்னால் கூட்டம் கூடி இருப்பதைக் கண்டு வாசலில் சைக்கிளை நிறுத்தியவாறு தலையில் கட்டியிருந்த துணியை அவிழ்த்து தோளில் போட்டவாறு வீட்டுக்குள் நுழைந்தார். செய்வதறியாது சுவற்றில் முட்டிக்கொண்டு ” அல்லா…… என்ன சோதனை இது………..” தலையில் கைகளை வைத்துக்கொண்டு கலங்கி கதறினார்.

தேர்வு எழுதிய மகிழ்ச்சியில் வந்த அக்கிமுக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது. ஏக்கத்துடன் நுழைந்தான். சோத்துப்பானை சிதறிக்கிடந்தது. அப்போது பிஸ்மில்லா காலையில் கூப்பிட்டுக் கத்தியது நினைவுக்கு வந்தது.

வாய் திறந்தபடி நின்ற அவன் கண்களில் இரத்தம் கலந்த நீர் வழிந்து கொண்டே இருந்தது. எத்தனை நாள் பசியோ…..பாவம் சிந்திக் கிடந்த பழைய கஞ்சியை வீட்டுக்குள் நுழைந்த தெருநாய் ஒன்று நக்கிக்கொண்டே இருந்தது. 

தொடர்புடைய சிறுகதைகள்
காண்போர் யாவரையும் கவரக்கூடிய கண்கள், சிலிர்த்து நிற்கும் புருவங்கள், வசீகரப்படுத்தும் சின்ன உதடுகள், சேலைக் கட்டாமல் தாவணி போட்ட சின்ன இடை கொண்ட பத்மாவதி கஞ்சிக் கூடையை தலையில் சுமந்து கொண்டு வயலுக்கு சென்று கொண்டு இருந்தாள். "இங்கேரு நானும் வர்றேன் ...
மேலும் கதையை படிக்க...
கல்யாணத்துக்குப் பிறகு படிக்க வைப்பதாகச் சொல்லித்தான் கமலாவை திருமணம் செய்து கொண்டான் சுந்தர். இருவருக்கும் ஏழு ஆண்டுகள் வித்தியாசம். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சுந்தருக்கு போதுமான வருமானம் கிடைத்தது. கமலா ஆசைப்படி தொழிற்கல்வி டிப்ளமோ படிப்பில் சேர்த்துவிட்டான். வயது இருபதை கடந்ய அவளுக்கு படிக்க ...
மேலும் கதையை படிக்க...
"நாம அப்புடி பேசிருக்ககூடாதோ... போயும் போயும் கல்யாணம் நடக்குற எடத்துல அப்புடி நா பேசினது சரியில்ல.... இல்ல பேசுனது சரிதான் .. அப்புடி பேசுனாத்தான் மத்தவனுகளும் திருந்துவானுக நாட்ட ஆளுறதுல இருந்து நாசமா போக வைக்கிற வரைக்கும் ஏதோ ஒரு வாத்தியாருகிட்ட ...
மேலும் கதையை படிக்க...
''இந்தக் கூறுகெட்ட உலகத்துல காலம் போறதே தெரியமாட்டேனுது... எப்புடியாவது திங்ககெழம சந்தையில எலந்தப்பழத்த வித்துறனும். கனகுக்கு மாத்திக்கிறதுக்குக்கூட வேற பாவாடை இல்ல. கிடைக்கிற காசுக்கு நல்ல பாவாடைய வாங்கிட்டு இருட்டுறதுக்குள்ள வீடு வந்து சேந்துறனும். தனக்குள்ளயே பேசிக்கொண்டு கனகையும் கையில் பிடித்துக்கொண்டு ...
மேலும் கதையை படிக்க...
''மனுசனுக்கு வேதனையப் பாரு.. யாருக்கும் தொல்லையா இல்ல. வம்பு தும்புக்கு போகாத ஆளு, அவனுக்கா இப்படி....?" ''தான் உண்டுனு ஏதாவது எழுதிக்கிட்டுதான் இருப்பான். வழியக்க பேசாட்டியும் மத்தவங்க பேச்சுக்கு மரியாதக் கொடுப்பான்...'' ''பாவம்யா... பொண்ணுக்கு கல்யாணத்த முடிச்சுட்டு பையனுக்கும் அடுத்த முகூர்த்தத்துலேயே முடிச்சர்றதா எங்கிட்டயே ...
மேலும் கதையை படிக்க...
ஆட்டுக்கார ஆறுமுகம்
வார்த்தைகளால் ஒரு கோடு
மோகன் வாத்தியார்…
சாமக்கோழி..
ரெண்டாவது ரகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)