கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 7, 2016
பார்வையிட்டோர்: 10,558 
 

மரத்தடி மேடையில் உட்கார்ந்திருந்த நாகு, எதிர்மரத்தில் இருந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்த குருவியை வியப்புடன் மறுபடியும் பார்த்தான். அவன் அதை விரட்டுவது போல் செய்த சைகைகளால் பாதிக்கப்படாதது போல அது உட்கார்ந்த இடத்தை விட்டு நகராமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தது.

ஒன்று, அது அவனது சைகைகளை அலட்சியம் செய்து இருக்க வேண்டும். அல்லது அது ஆழ்ந்த சிந்தனையில் இருக்க வேண்டும். அது கண்களை அப்படி இப்படி சுழற்றிக் கொண்டிருந்ததிலிருந்து அதற்குத் தெரிகிற கண்கள்தான் இருக்க வேண்டும் என்று நாகுவுக்குத் தோன்றியது. அப்படியென்றால், அது எதைப்பற்றி அல்லது யாரைப் பற்றி ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறது அதற்கும் ரஜனியைப் போல பிரச்னையைக் கிளப்பும் ஜோடி சேர்ந்திருக்கிறதோ ரஜனியால்தான் அவன் இந்த ஆஸ்பத்திரிக்கு வந்திருக்கிறான். அவள் ஐ. சி. யூ. வில் இருக்கிறாள். இப்போது அவள் நிலைமை கவலைக்கு இடமில்லாமல் இருக்கிறது என்று சற்று முன்பு அங்கிருந்து வந்த நர்ஸ் சொல்லிவிட்டுப் போனாள்

இழப்புஅன்று அதிகாலை ஐந்து மணிக்கு அவனுக்கு போன் வந்தபோது, தூக்க மயக்கத்தில் இருந்தான். கைபேசியில் காணப் பட்ட நம்பர் தெரிந்ததாக இல்லாததால், உடனடியாக அவன் எடுக்கவில்லை. ஆனால் அதுவிடாமல் அவனைக் கூப்பிட்டு கொண்டேயிருந்தது. யாராயிருக்கும் கடைசியில் ராங் நம்பர் என்று அவன் தூக்கம் போனதுதான் மிச்சம் என்று வெறுத்துக் கொண்டே எடுத்தான்.

“” யாரு நாகுவா? நான் விஜயம் பேசறேன். ரஜனியோட சித்தி”

அவள் குரலில் தென்பட்ட கலவரம் நாகுவுக்குக் கலவரத்தை உண்டாக்கிற்று.

“”நான் நாகுதான் பேசறேன். என்ன ஆச்சு?”

“”நான் ஹாஸ்பிடல்லேர்ந்து பேசறேன். ரஜனியை இங்கே சேத்திருக்கு. நீ உடனடியா கிளம்பி வரயா? மத்ததெல்லாம் நேரே சொல்றேன்” என்று ஆஸ்பத்திரி இருக்குமிடத்தைக் கூறி விட்டு, போனைக் கீழே வைத்து விட்டாள்.

அவன் குழப்பத்துடன் எழுந்து, வெளியே கிளம்பத் தயார்ப்படுத்திக் கொண்டான். ரஜனியின் சித்தி போனைக் கீழே வைத்ததிலிருந்து அவள் மற்ற விஷயங்களைப் போனில் சொல்லத் தயாரில்லை என்று தெரிந்தது.

ரஜனி அவளது சித்தப்பாவின் வீட்டில் வந்து தங்கிப் படிக்கிறாள். ஐ.ஐ.எஸ்ஸியில் மேற்படிப்புக்கு இடம் கிடைத்து பெங்களூருக்கு வந்து விட்டாள். அவளது பெற்றோர் இருவரும் ஆம்ஸ்டர்டாமில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவனுக்கு வந்தது போல், அன்று அதிகாலையில் அவளது பெற்றோர்களுக்கும் அவளைப் பற்றிய செய்தி போயிருக்கும். நாகு, நான்கு கிலோமீட்டர் தள்ளியிருந்த அவன் வீட்டிலிருந்து உடனே கிளம்பி விட்டான். அவளுடைய பெற்றோர்கள் அந்த அளவுக்கு அதிர்ஷ்டம் செய்தவர்கள் அல்லர்.

அவன் ரஜனியின் சித்தியைப் பார்த்த போது, ரஜனியின் சித்தப்பாவும் கூட உட்கார்ந்திருந்தார். அவனைப் பார்த்ததும், அவர் முகம் சிறிதாக விரிந்து பின் பழைய நிலைக்குத் திரும்பி விட்டது. அவனுடன் பேச வேண்டுமா என்று யோசிப்பதுபோல் அவர் காணப்பட்டார்.

அவன் சித்தியிடம், “”என்ன ஆச்சு? ரஜனி இப்ப எங்கே?” என்று கேட்டான்.

விஜயம், “”அவள் ஐ. ஸி. யூ வில் இருக்கா…” என்று தயங்கினாள்

அவன் ரஜனிக்கு என்ன ஆயிற்று என்கிற தன் கேள்விக்கு அவள் இன்னும் பதில் அளிக்கவில்லை என்பதைக் கவனித்தான்.

“”ஐ ஸி. யூ. விலா? என்ன ஆச்சு அவளுக்கு?” என்று மறுபடியும் காரணத்தைக் கேட்டான்.

சித்தி, சித்தப்பாவைப் பார்த்தாள். அவள் சொல்லப் போவது குறித்துத் தன் அபிப்பிராயத்தைத் தெரிவிக்க விரும்பாதவர் போல அவர் அவள் கண்களைச் சந்திக்க மறுத்து ஒரு தடவை அழுத்தமாகத் தன் முகத்தைத் துடைத்துக் கொண்டார்.

சித்தி குரலை ஒரு முறை செருமிச் சரிப்படுத்திக் கொண்டு, “”நேத்திக்கி என்ன நடந்தது?” என்று நாகுவைப் பார்த்துக் கேட்டாள்.

அவன் ஒன்றும் புரியாமல் விழித்தான். இவள் என்ன கேட்கிறாள்?

“”நீங்க ரெண்டு பேரும் நேத்திக்கி சாயங்காலம் வெளியிலே போயிருந்தேள் இல்லையா? நீதானே அவளை ராத்திரி ஆத்துல கொண்டு வந்து விட்டுட்டு போனே?”

நாகு ஆமென்று தலையை அசைத்தான். நேற்று ரஜனியை அவள் வீட்டில் கொண்டு போய் விடும்போது அவளது சித்தியும், சித்தப்பாவும் வீட்டில் இல்லை. ரஜனியை வீட்டில் விடும் போது நேரமாகிவிட்டது. அவள் வீட்டுக்கு முன்னால் அவன் காரைக் கொண்டு போய் நிறுத்திய போது , அவள் விருட்டென்று காரிலிருந்து இறங்கிச் சென்று விட்டாள். அவ்வளவு கோபம். தானும் காரிலிருந்து இறங்கிச் சென்று அவளிடம் பேசலாமா?

என்று ஒரு நிமிடம் தயங்கினான். ஆனால் அவள் அதற்கு இடம் கொடுக்க மாட்டாள். அன்று மாலை,அவனைப் பார்க்க வந்த சில நிமிஷங்களிலேயே ஆரம்பித்து விட்ட தகராறு, மேலும் வலுத்து கொண்டுதான் இருந்தது.

மறுபடியும் சித்தி அவனிடம் பேசினாள்.

“”நேத்தி நாங்க மைசூரிலேர்ந்து திரும்பறப்போ ராத்திரி பதினோரு மணி ஆயிடுத்து. ரஜனி தூங்கிண்டு இருப்பா, அவளை தொந்திரவு பண்ண வேண்டாம்னு, என்கிட்டே இருந்த சாவியால வாசக் கதவை திறந்திண்டு உள்ளே போனோம். ரஜனியோட ரூம்ல லைட் எரிஞ்சிண்டு இருந்தது. இவ்வளவு நாழிக்கப்புறம் தூங்காம என்ன பண்ணிண்டு இருக்கான்னு போய் பாத்தேன். தூக்கி வாரிப் போட்டது. அலங்கோலமா படுக்கையில கிடந்தா. பதறிண்டு போய் எழுப்பறேன், எழுப்பறேன். அசைய மாட்டேங்கிறா. அவள்ட்டேர்ந்து ஒருமுனகல் கூட இல்லே. அவ பக்கத்திலே தூக்க மாத்திரை பாட்டில். பாதி காலியா இருந்தது. எனக்கு ரொம்ப பயமா போயிடுத்து. என்னைக் காணமேன்னு இவர் அங்க வந்தார், அவருக்கும் ரொம்ப ஷாக் ஆயிடுத்து. மூக்கில கையை வச்சுப் பாத்தார். சன்னமா மூச்சு வந்துண்டு இருந்தது. அலறிப் புடிச்சிண்டு ஹாஸ்பிடலுக்கு ஓடி வந்தோம். அப்பா, நினைச்சாலே குலை நடுங்கறது..” என்று நிறுத்தினாள்.

நாகுவுக்கு திக்கென்றது. அவன் இந்த மாதிரி ஒரு செய்தியை எதிர்பார்க்கவில்லை. ரஜனியின் சித்தி என்ன சொல்கிறாள்?

“”நீங்க சொல்றதை என்னால நம்பவே முடியலை. ரஜனியா இப்படிப் பண்ணினாள்? எதுக்காக?” என்று நாகு உதடு நலுங்க சித்தியைப் பார்த்தான். சித்தி அவனைப் பரிதாபத்துடன் பார்ப்பதை அவன் உணர்ந்தான்.

“”நேத்தி நீங்க ரெண்டு பேரும் எதாவது சண்டை போட்டுண்டேளா?” என்று சித்தி கேட்டாள்.

அப்போது ஆஸ்பத்திரி சிப்பந்தி ஒருவன், “”ரஜனிங்கிற பேஷண்ட்டு கூட இருக்கிறது நீங்கதானா?” என்று கேட்டுக் கொண்டே அவர்கள் அருகில் வந்தான். “”நீங்க இன்னும் கொஞ்சம் அட்வான்ஸ் பணம் கட்டணும்னு ஆபிஸ்ல கூப்பிடறாங்க” என்றான்.

“” சரி, நான் போய்ப் பார்த்துட்டு வரேன்” என்றாள் சித்தி. அவள் கணவரும் எழுந்து அவள் கூடச் சென்றார்.

சித்தி என்ன சொல்ல வருகிறாள்? ரஜனியின் தற்கொலை முயற்சி அவனுடன் சம்பந்தப் பட்டது என்றா? அப்படியென்றால் அவன் மீது கொண்ட காதலால் ரஜனி இம்மாதிரி நடந்து கொண்டு விட்டாளா? மை காட்….

சித்தி கேட்டகேள்வி அவனுக்கு முந்திய மாலையில் நடந்த சம்பவத்தை நினைவுக்குக் கொண்டு வந்தது…

பைரே கெளடாவின் பங்களாவை நாகு அடைந்த போது ஏழு மணி இருக்கும். பணக்காரர்கள் வசிக்கும் பகுதி என்பதால், எல்லா தெரு விளக்குகளும் வெளிச்சத்தை உமிழ்ந்து இருளை விரட்டி அடித்திருந்தன. கெளடாவின் வீட்டு வாசலில் நிறையக் கார்கள் நின்றிருந்தன. அவனுடைய தொகுதியில், அவனுடைய கட்சி உறுப்பினனே தோற்று விட்டதைக் கொண்டாடத்தான் இந்த பார்ட்டி என்று முந்தின தினம் அழைக்கும் போது நாகுவிடம் கெளடா கூறியிருந்தான். இந்தத் தடவை அவனுடைய கட்சி வழக்கம் போல் நிற்கும் தொகுதியில் அவனைப் போட்டியிட அழைக்கவில்லை. அவன் கட்சி சார்பில் நின்றவனுக்கு கெளடாஆதரவு தர மறுத்து விட்டான். அவன் கட்சி மாறப் போகிறான் என்று பத்திரிகைகளில் எழுந்த கூச்சல்களை எல்லாம் சிரித்துக் கொண்டே அலட்சியம் செய்தான்.

நாகு ஹாலில் நுழையும் போது பத்துப் பதினைந்து தலைகள் தெரிந்தன. மனிதர்களின் பேச்சுச் சத்தத்தை விட, பீங்கான்களின் ஒலி மிகுந்திருந்தது.

“”ஹலோ நாக்” என்று அவனைப் பார்த்ததும் புன்னகை செய்தான் ஜெயதேவா. அவன் பெங்களூரிலிருந்து வரும் ஒரு பிரபல கன்னட தினசரியின் தலைமை நிருபர்.

“”நமஸ்காரா” என்றபடி நாகு அவன் அருகில் சென்றான். “”சென்னாகிதீரா?” என்று நலம் விசாரித்தான் அவனது கன்னடத்தை நிராகரிப்பது போல், “”ஐம் ஃ பைன்” என்று சிரித்தான் ஜெயதேவா. எங்கே ரஜனியைக் காணவில்லை? ஊரில் இல்லையா?

“” தெரிய வில்லை” என்றான் நாகு.

ஜெயதேவா அவனை ஆச்சரியத்துடன் பார்த்தான்.

நாகு சமாதானமாக, “”அவள் வீட்டு நம்பரிலும் மணி போய்க் கொண்டே இருக்கிறது. மொபைலையும் சுவிட்ச் ஆ ஃப் செய்து வைத்திருக்கிறாள்” என்றான்.

“”ரஜனி உன் கூட இல்லாமல் உன்னை நான் பார்ப்பது இதுதான் முதல் தடவை” என்றான் ஜெயதேவா சிரித்தபடி.

நாகு தோள்களைக் குலுக்கிக் கொண்டான்.

“”கெளடா கட்சி மாறப் போவது உண்மைதானே?” என்றபடி நாகு தட்டில் பானங்களை ஏந்தி வந்த பணியாளிடம் இருந்து கூல்டிரிங்ஸ் தம்ளரை எடுத்துக் கொண்டான்.

“” அது பழைய ந்யூஸ்” என்றான் ஜெயதேவா. அவன் மாறவிருக்கும் புதிய கட்சிக்குத் தன் கூட பழைய கட்சியிலிருந்து பன்னிரண்டு எம். எல். ஏ.க்களை அழைத்துக் கொண்டு போகப் போகிறான்”

அவர்கள் அருகே ஒரு பெண்மணி வந்தாள்.

“”ஹலோ மாதவி எப்டி இருக்கே?” என்று ஜெயதேவா உடைந்த தமிழில் அவளை வரவேற்றான்.

நாகு அவளைப் பார்த்து புன்னகை புரிந்தான். பதிலுக்கு அவளும்.

மாதவி அவர்கள் அருகே அமர்ந்து கொண்டாள். அவளிடமிருந்து மல்லிகையும், ரோஜாவும் கலந்த கதம்பமாக இனிய மணம் பரவி வந்தது. ஜாய் பெர்ஃப்யூமின் உபகாரம். அவளது கணவன் அமெரிக்காவில் பெரிய பதவியில் இருக்கிறான். தற்போது இந்தியா வந்திருக்கிறான்.

மாதவியின் சிரித்த முகம் எவரையும் கவரவல்லது என்று நாகு நினைத்தான். உடல், கட்டுவிடாது இளமையை எதிரொலித்தது. சுந்தரேசன், மாதவியின் கணவன், அதிர்ஷ்டசாலி என்று நினைத்தான். சுந்தரேசன்மீது அவனுக்கு ஒரு கணம் பொறாமை ஏற்பட்டது. உன் உதவாக்கரைத்தனத்துக்கு இப்படியே பொருமிச் சாக வேண்டியதுதான் என்று உள்மனதின் சலிப்புக் குரல் கேட்டது. அன்று இந்த மாதவி எவ்வளவு கெஞ்சினாள். ஆனால், அந்த சமயத்தில் அவனுக்கு அவள் மீது லேசான சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. அதன் பிறகு அவள் அவனுடன் தொடர்பு கொள்ளவில்லை. கல்யாணத்துக்குக் கூப்பிட்ட போது, போய் விட்டு வந்தான்.

அவளைக் கல்யாணம் பண்ணிக் கொண்டிருந்தாலும், அவன் மாத சம்பளத்தில் பெர்ஃப் யூம் வாங்கவே பாதிப் பணம் போக வேண்டி இருந்திருக்கும். நாசிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் வாழ்க்கைக்குத் தயாராக இருந்திருக்க வேண்டியிருக்கும்…நல்ல வேளை, தப்பித்துவிட்டேன்

“” ரஜனியை எங்கே காணோம்?” என்று மாதவி நாகுவைப் பார்த்துக் கேட்டாள்.

நாகு பதில் சொல்வதற்குள் ஜெயதேவா “”இதோ, நீ கேட்கும் புயல் வந்து கொண்டிருக்கிறது” என்று வாசலைப் பார்த்தான். ரஜனி உள்ளே வந்து கொண்டிருந்தாள் வழக்கமான வேக நடையுடன். சுற்றி அலைந்த அவள் கண்கள் அவர்களைச் சந்தித்ததும், முகத்தில் புன்சிரிப்புப் படர அவர்களை நோக்கி வந்தாள். நாகுவின் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டாள்.

“”நீ நாகுவுடன் வராததைப் பார்த்துப் பயந்து விட்டேன்” என்றான் ஜெயதேவா.

“” எனக்கும் கூட ஆச்சரியமாக இருந்தது” என்றாள் மாதவி.

“”ஆனால் நாகு கடந்த அரைமணி நேரமாக ரொம்ப நிம்மதியாக இருக்கிறான்” என்றான் ஜெயதேவா.

எல்லோரும் சிரித்தார்கள்.

“”இது எனக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை ” என்றாள் ரஜனி. கண்களைச் சிமிட்டியபடி.

“”ஆனால் நீ கோபித்துக் கொள்ளாதது எனக்கு ஏமாற்றமளிக்கிறது” என்றான் ஜெயதேவா.

நாகு ரஜனியைப் பார்த்தான். வழக்கத்திற்கு விரோதமாக பாண்ட் ஷர்ட் அணிந்திருந்தாள். அதிகமாக மேக்கப் செய்து கொள்ளாமல் அழகாக இருந்தாள்.

“”நீ ஏன் லேட்டாக வந்தாய்?” என்று மாதவி கேட்டாள்.

“”இன்று என் ரிசல்ட் வருவதாக இருந்தது. ஐந்தரை மணி வரை வரவில்லை. கம்ப்யூட்டர் முன்பு காத்துக் கிடந்ததுதான் மிச்சம். ஒருவேளை இரவு வரலாம்” என்று சிரித்தாள் ரஜனி.

“”உனக்கெல்லாம் எதற்கு ரிசல்ட் பற்றிக் கவலை?” என்றான் ஜெயதேவா.

“” ஆஹா, ஒரேயடியாய் மறந்துபோய் விட்டேன். ரிசல்ட் என்றதும் ஞாபகத்திற்கு வந்தது. நாகு, “”கங்கிராட்ஸ்” என்று மாதவி நாகுவைப் பார்த்து வலது கையை நீட்டினாள்.

ரஜனி முகத்தில் கேள்விக் குறியுடன் நாகுவைப் பார்த்தாள். ஜெயதேவாவும் கூட.

நாகு குழப்பத்துடன் மாதவியைப் பார்த்து, “”வாட் டூ யூ மீன்?” என்றான்.

“” உனக்கு ஐ. நா. ஸ்காலர்ஷிப் கிடைத்ததைப் பற்றித்தான் சொல்லுகிறேன். ஒன்றும் தெரியாததைப் போல் நடிக்க வேண்டாம்” என்று மாதவி சிரித்தாள்.

நாகுவுக்கு வயிற்றில் கல் விழுந்தாற் போலிருந்தது.

ரஜனி தன்னை உற்றுப் பார்ப்பதை அவன் உணர்ந்தான். அவளை ஏறிட்டுப் பார்த்தான். இமைக்காது பார்த்த பார்வையில், காணப்பட்ட உஷ்ணமும், தொலைவும் நாகுவைக் கலவரப் படுத்தின.

ஜெயதேவா விசில் அடித்தான். “”கங்கிராட்ஸ் மேன் ஆனால் நீ இவ்வளவு அழுத்தக்காரன் என்று நான் ஒரு போதும் நினைத்ததில்லை”

“”மாதவி, இது எப்படி உனக்குத் தெரியும்?” என்று நாகு கேட்டான். அடுத்த கணம் அக்கேள்வியை தான் கேட்டிருக்கக் கூடாது என்று தன்னையே நொந்து கொண்டான். அவன் கேள்வியின் தொனி ஏதோ மறைக்க வேண்டிய விஷயம் வெளிப்படுத்தப் பட்டு விட்டதே என்பது போல் நிச்சயம் ரஜனிக்குத் தோன்றி இருக்கும். அவன் அவளைப் பார்த்தான். அவள் அவனைப் புறக்கணித்து விட்டு, மாதவியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மாதவி அவனைப் பார்த்துச் சிரித்தபடி “”நீ சொன்னதை நீயே மறந்து விட்டதுதான் உன் துரதிர்ஷ்டம்” என்றாள். “”நாம் காபி ஹவுசில் உட்கார்ந்து ஒரு நாள் பேசிக் கொண்டிருந்த போது, இந்த ஸ்காலர்ஷிப்புக்கு விண்ணப்பித்ததைப் பற்றிச் சொன்னாயே.. தகுதி ஒன்றை வைத்தே அதுமுடிவு செய்யப்படுவதால், நீ தயக்கமில்லாமல் அப்ளை பண்ணியிருப்பதாகக் கூட சொன்னாயே?”

அது நடந்து ஒரு வருஷத்துக்கு மேலிருக்கும். ஆனால் அது ஏதோ போன மாதம் நடந்ததைப் போல மாதவி சொல்கிறாள். ரஜனி அதைப் போன வாரம் நடந்ததாக இதற்குள் தீர்மானித்திருப்பாள். அவன் மாதவியிடம் அதைக் கூறியபோது சுந்தரேசனும் உடன் இருந்தான்.. இன்று காலையில் தான் அவனுக்கு ஸ்காலர்ஷிப் கிடைத்ததைப் பற்றிய மின்னஞ்சல் வந்திருந்தது. மாலையில், பார்ட்டிக்கு வரும் ரஜனியிடம், பார்ட்டி முடிந்து திரும்பிப் போகும் போது அதைப் பற்றிச் சொல்லி அவளை ஆச்சரியப்படுத்தி, அவளது முகம் காட்டும், திகைப்பையும் சந்தோஷத்தையும் பார்த்து ரசிக்கவேண்டும் என்று எண்ணியிருந்தான்.

அப்போது மாதவியின் கணவன் அவர்கள் அருகே வந்தான். பரஸ்பர நல விசாரிப்புக்குப் பின், பேச்சு சினிமா, அரசியல், கலைச் சீரழிவு, புத்தகங்கள் என்று எங்கெங்கோ சுற்றியது. சிரிப்பும், பலத்த குரல்களும் தொடர்ந்து கேட்டன.

ஒரு மணி கழித்து ரஜனி எழுந்து விடை பெற்றுக் கொண்டாள். நாகுவைப் பார்த்து ஒரு உயிரற்ற பாவனைச் சிரிப்பைச் சிந்தி விட்டு.

நாகுவும் எழுந்து அவளைப் பின் தொடர்ந்தான். வாசலை அடைந்ததும் “”ரஜனி, ரஜனி, ரஜனி” என்று கூப்பிட்ட அவனது குரலை லட்சியம் செய்யாது,பின்னே திரும்பிப் பார்க்காமல் வேகமாக அவள் நடந்தாள்.

அப்போது கெளடா அவர்கள் எதிரே வந்தான். “”அட, ஜோடி அதற்குள் கிளம்பி விட்டீர்களா?” என்று சிரித்தபடிகேட்டான்.

இருவரும் சமாளித்துக் கொண்டு அவனைப் பார்த்துப் புன்னகை புரிந்தார்கள்.

அவன் நாகுவைப் பார்த்து, “”பார்ட்டி எப்படி?” என்று கேட்டான்.

“” சூபர்ப்” என்றான் நாகு.

“”நீ சொல்வது பொய் என்று நீங்கள் இவ்வளவு சீக்கிரமாக கிளம்புவதிலிருந்தே தெரியவில்லையா?” என்று கெளடா சிரித்தான்.

“”சரி, நீ போய் உன் காரை பார்கிங்கிலிருந்து எடுத்துக் கொண்டு வா. நான் ரஜனிக்குக் கம்பனி கொடுக்கிறேன்” என்றான்.

ரஜனி ஏதோ சொல்ல வாயெடுத்து நிறுத்தி விட்டாள்.

நாகு காரை எடுத்துக் கொண்டு வந்தான். கெளடாஅவர்களிடம் விடை பெற்றுக் கொள்ள, நாகு காரை ரஜனியின் வீட்டுப் பக்கம் செலுத்தினான். சில நிமிடங்கள் மெளனத்தில் கட்டுண்டு கிடந்தன.

ரஜனி அவனுக்கு முகம் காட்டாமல், இடது பக்கம் தலையைத் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தாள். நாகு தன் இடது கையால் அவளது வலது கையைப் பற்றினான். அவள் விருட்டென்று கையை இழுத்துக் கொண்டாள்.

“” ப்ளீஸ் ரஜனி, என் கட்சிய எடுத்துச் சொல்ல ஒரு சான்ஸ் குடு” என்றான்.

“” ஏன், இதுவரைக்கும் ஏமாத்தினது போறாதா?”

“” உனக்கு என்ன தெரிஞ்சிடுத்துன்னு இப்படியெல்லாம் பேசறே?”

“” அதுதான் பார்த்தேனே. யாருக்கும் தெரியாத ரகசியத்தையெல்லாம் ரொம்ப நெருங்கின சிநேகிதத்துக்கு மட்டும் சொல்லியிருக்கிறதை” என்றாள் ரஜனி. பிறகு அவனை நேராகப் பார்த்து, “”இப்படி என்னை ஏமாத்த உனக்கு எப்படி மனசு வந்தது?” என்று கேட்டாள். அவள் கண்கள் லேசாகக் கலங்கியிருந்தன.

“”இதோ பார், ரஜனி, இன்னிக்கி காலம்பற வந்த இமெயில்லேர்ந்துதான் எனக்கு ஸ்காலர்ஷிப் கெடச்ச விஷயம் தெரிஞ்சது. பார்ட்டி முடிந்ததும் நாம வீட்டுக்கு போகறச்சே உன் கிட்ட சொல்லி உன் முகத்ல முதல்ல அதிர்ச்சியையும், அப்புறம் சந்தோஷத்தையும் பாக்கணும்னு இருந்தேன்”

“”இதை நான் நம்பணுமாக்கும். நான் முட்டாள்தான். இன்னிக்கி சாயங்காலம் வரைக்கும். ஆனா இப்ப இல்லே” என்றாள் கடுமையான குரலில்.

ஒரு வருஷத்துக்கு முன்னால் அனுப்பிய ஸ்காலர்ஷிப் பற்றி அவன் அவளிடம் விளக்கினான். அதை அனுப்பிய அடுத்த வாரத்தில், மாதவியை யதேச்சையாக சந்திக்க நேர்ந்தது. அப்போது சுந்தரேசனும் அவள் கூட இருந்தான். ஐ. நா. வில் வேலை பார்க்கும் அவனிடம் பேச்சு வாக்கில் ஸ்காலர்ஷிப் பற்றிச் சொன்னதையும் ரஜனியிடம் விவரித்தான். அவன் பேசிக்கொண்டிருக்கும் போது அவள் அடிக்கடி தலையை அசைத்து, அவன் கூறுவதை மறுப்பது போல் செய்தது, நாகுவுக்கு எரிச்சலை மூட்டிற்று.

அவன் பேச்சை நிறுத்தினான். ரஜனி அவனிடம், “” நீ இன்னும் உன் பழைய காதலியின் பின்னால போயிண்டிருக்கேன்னு நினைச்சா எனக்கு குமட்டிண்டு வரது” என்றாள்.

நாகு நிதானத்தை இழந்து விட்டான்.

“”அப்படி நினைக்கறதுதான் உனக்கு சந்தோஷத்தையும் நிம்மதியையும் தரப் போறதுன்னா, அதை நான் தடுக்க விரும்பலை”

“”எனக்கு வெட்கமாக இருக்கு” என்றாள் ரஜனி.

“” எதுக்காக?”

“”இப்படிப்பட்ட ஆள் மீது நம்பிக்கையும் காதலும் வச்சிருந்தேனேன்னு”

அவள் குரலின் தொனி அவனை ஒரு கணம் நிலைகுலையச் செய்தது. ரஜனி என்ன சொல்ல வருகிறாள்?

அதற்குப் பிறகு ரஜனி எதுவும் பேசவில்லை. கார் அவள் வீட்டை அடைந்ததும், அவள் கீழிறங்கி, வேகமாக வீட்டிற்குள் சென்று விட்டாள். அவள் நடந்து கொண்ட விதம் வரவேற்பைத் தெரிவிப்பதாக இல்லை என்று சோர்வுடன் அவன் தன் வீட்டிற்குச் சென்றான். மனம் அலை பாய்ந்தது. ரஜனி தன் மீது உயிரையே வைத்திருக்கிறாள் என்று அவனுக்குத் தெரியும். மூன்று வருட காலமாக இந்த அன்பு அவர்களுக்குள் ஆழ்ந்த உறவாகப் பரிணமித்திருக்கிறது.

இதற்கு முன்னால் அவர்களுக்குள் சண்டையும் ஊடலும் எழுந்து மறைந்திருக்கின்றன. ஆனால்

ரஜனி நடந்து கொண்ட விதமும், அவள் பேச்சும் அவனை மிகவும் நிலை தடுமாறச் செய்வதாக இருந்தது.

நாகு, யாரோ தோளைப் பற்றி அசைப்பதை உணர்ந்து சிந்தனையில் இருந்து விடுபட்டான். ரஜனியின் சித்தி அவனைப் பார்த்துப் புன்னகையுடன், “” குட் ந்யூஸ். ரஜனிக்கு இப்ப நினைவு வந்துடுத்து. தனி ரூமுக்கு கொண்டு வந்து விட்டுட்டா?” என்றாள்.

“”தாங்க் காட்” என்றான் நாகு நிம்மதிப் பெருமூச்சுடன்.

சித்தியைப் பார்த்து, “”நீங்க அவளோட பேசினேளா?” என்று கேட்டான்.

“”ஆமா. அவள் கண்ணை திறந்து பேசினதுக்கு அப்புறம்தான் எனக்கு போன உசிரு திரும்பி வந்தது” என்றாள் சித்தி.

“”ஏன் இப்படி முட்டாள்தனமா நடந்துண்டாளாம்”

“”பைத்தியக்காரி. என்னமோ நேத்து ராத்திரி ரிசல்ட் வந்ததாம். அதுல அவள் எதிர்பார்த்த மாதிரி ரேங்க் வரலையாம். ஏமாத்தம் தாங்காம இப்படி பண்ணினாளாம். கேக்கவே சகிக்கலை. இவ்வளவு படிச்சு இப்படி கிறுக்கா இருந்து என்ன பிரயோஜனம்? நான் எப்படி எல்லார் முகத்திலையும் முழிக்க முடியும்னு அவமானம் தாங்காம இப்படி பண்ணினேங்கறா. எல்லாம் கலி காலம்” என்றாள் சித்தி.

நாகு ஏனோ ஏமாற்றமாக உணர்ந்தான்.

– மார்ச் 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *