இளகிய மனசு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2020
பார்வையிட்டோர்: 4,404 
 

மீனாட்சி அம்மாளுக்கு ரொம்பவும் இளகிய மனசு.

அப்படித்தான் சொல்லி வாந்தார்கள் அவளை அறிந்தவர்கள் எல்லோரும். அவளும் அவ்வாறு எடுத்துக் சொல்லத் தவறுவதில்லை.

பெரிய இடத்தைச் சேர்ந்தவள் அவள். உருவத்திலும் அவள் பெரியவள்தான். பொதுவான ஸ்திரீ தர்மத்தை அவளும் அனுஷ்டித்து வந்தாள். அதனால் அவளது வயது, நின்றுபோன கடியாரத்தின் முட்கள் போல, கிழிக்கப்படாத காலண்டர் தாளைப்போல, ஒரே எண்ணில் நின்றிருந்தது. அஞ்சாறு வருஷங்களாகவே அவள் வயது இருபத்துநான்காகத்தான் இருந்தது!

அதற்காக அவளுடைய உடல் வளர்ச்சியுறாமல் போகவில்லை. கேவலம் நூற்றைம்பது பவுண்டு மாத்திரமே கனத்திருந்த அவளது தேகம் நாளடைவில் இருநூற்றுச் சொச்சம் பவுண்டு எடையாகப் பெருத்திருந்தது. வேலை எதுவுமே செய்யாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்தும், அப்படி உட்கார்ந்தே இருப்பது அலுத்துப் போனால் படுத்தும், உடலுக்குச் சுகம் தேடினால் அது பெரியதனம் பெறாதா என்ன? பெருஞ் சாப்பாட்டுக்கு இடைப்பட்ட வேளைகளில் எல்லாம் பழம் என்றும், பாதாம் பருப்பு என்றும், சாக்லெட் என்றும் உள்ளே திணித்துக் கொண்டிருந்தால், அதை எல்லாம் ஏற்றுக் கொள்கிற உடல், கொடியாகவா இருக்கும்? ஆகவே, மீனாட்சி அம்மாள் பிறப்பினால் மட்டுமல்ல, தோற்றத்தினாலும் பெரிய மனுஷியாகத்தான் விளங்கினாள்.

அவளுக்கிருந்த இளகிய மனசு அவளுடைய பெருந் தன்மையின் மற்றுமொரு எடுத்துக்காட்டு என்று தான் பலரும் சொன்னார்கள்.

“நம்ம பெரிய வீட்டு மீனாட்சிக்கு இருக்கிற தங்கமான மனசு வேறு யாருக்குமே இருக்க முடியாது. துன்பத்தைக் கண்டு சகிக்க முடியாது அவளாலே. இன்னொருத்தர் காலில் முள் தைத்துவிட்டால் அவளுக்குத் தனது கண்ணிலே குத்திவிட்டது போல் களகளவென்று கண்ணீர் வடித்து விடுவாள் அப்பாவி” இது அம்மாளை அறிந்த ஒரு அம்மையாரின் அபிப்பிராயம்.

“இதைப்போயி பெரிசாச் சொல்லுறியே! அன்னைக்கொரு நாள் நான் மீனாட்சியைப் பார்க்கப்போனேன் பாரு. அப்ப அவள் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். நான் என்னவோ ஏதோ என்று பயந்து விட்டேன். பிறகு அவளைத் தேற்றி விசாரிச்சதிலே விஷயம் புரிஞ்சது. அவள் ஒரு புத்தகத்தைப் படிச்சுக்கிட்டிருந்தாளாம். அதிலே உள்ள கதாநாயகிக்கு ஏகப்பட்ட கஷ்டமும் துன்பமும் வந்து அவள் வேதனைப்படுகிறாள். அதனாலே மீனாட்சிக்கு மனசு குழம்பி சோகம் முட்டி, அழுகை வந்துவிட்டது. ஐயோ பாவம்” என்று நீட்டி நீட்டிப் பேசினாள் பார்வதி என்றொரு அம்மாள்.

அவள் பேச்சு பொய் அல்ல. மீனாட்சியின் குணவிசித்திரங்களில் அதுவும் ஒன்று தான்.

பொழுதுபோக்கிற்காகக் கதை படிக்கிற மீனாட்சி அம்மாள், தான் படித்துக் கொண்டிருப்பது கதை என்பதை மறந்தே விடுவாள். கதா பாத்திரங்கள் அனுபவிக்கிற கொடுமைகள் அவள் உள்ளத்தைத் தொடும். உணர்வைக் கிளுகிளுக்கச் செய்யும். கண்ணின் மணிகள் நீரிலே மிதக்கும். அப்புறம் கண்ணீர் பெருகி ஓடவேண்டியது தானே!

கலியாணம் ஆகாமல் ஏக்கமடைந்து “என்று வருவானோ?” என மனம் குமைந்து புழுங்குகிற கன்னிப் பெண்களின் நிலைமை அவளுக்கு வேதனை தரும். கணவனை இழந்து வாழ்க்கை வெயிலி ல் வாடி வதங்கும் இளம் விதவையின் துயரம் அவள் உள்ளத்தில் பெருத்த துக்கத்தை எழுப்பும். மாற்றாந் தாயின் கொடுமைக்கு இலக்காகும் சிறு பிள்ளைகள், ஏழை எளியவர்கள், பொதுவாக எல்லோருடைய வேதனையும் தான் அவளைக் கண்கலங்க வைத்துவிடும். கதைகளைப் படிக்கறபோது தான்!

சில கதைக்காரர்கள் “இலக்கியம் பண்ணுகிறேன்”, “உணர்ச்சிகளைச் சித்திரிக்கிறேன்” என்று சொல்லி, எங்காவது கதையை ஆரம்பிப்பது – திடுதிப்பென்று முடித்து விடுவது – கதாபாத்திரங்களின் மனசைப் போட்டுத் தாளித்து புரட்டி துவட்டி எடுப்பது போன்ற உத்திகளைக் கையாளுகிறார்கள் அல்லவா? அவ்வித எழுத்துக்களை பெரிய இடத்து மீனாட்சி அம்மாள் படிக்க நேர்ந்தால், அவளுக்குச் சில தினங்கள் தூக்கமே பிடிக்காமல் போய்விடும். கதாபாத்திரங்களின் உளப்போராட்டங்களைப் படித்தால் அவளுக்கு ஒடுக்க முடியாதவாறு உள்ளக் குழப்பம் ஏற்பட்டுவிடும்.

கதைச் சுவைக்காக, “வீட்டை விட்டுக் கிளம்பிய அவன் இருளோடு இருளாகக் கலந்து மறைந்தான்” என்பது போல் எதையாவது எழுதிக் கதையை முடித்து விடுகிறார்களே சிலபேர். மீனாட்சி அம்மாள் எவ்வளவு கஷ்டப்படுவாள் என்பது அவர்களுக்குத் தெரியாது பாவம்!

“வீட்டை விட்டு வெளியே போனவன் சாப்பாட்டுக்கு என்ன செய்தானோ? எங்கே படுத்துத் தூங்கினானோ? என்ன ஆகிறானோ?” என்று பிரச்சினைகளுக்கு மேல் பிரச்சினைகளை அலைமோதச் செய்து தனது உள்ளத்தையே ஒரு கடலாக மாற்றிக்கொண்டு அவதியுறுவாள் அவள். என்றோ படித்த எதையாவது எண்ணிக்கொண்டு, ”பாவம், அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு கஷ்டம்! உடம்பு பூராவும் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொள்ளணும் என்றால்? ஐயோ!” என்று மனம் துணுக்குறுவாள். அவள் கண்கள் தானாகவே கலங்கிவிடும்.

“உள்ளம் உருக்கும் கதை” என்று விளம்பரப்படுத்தப்படுகிற சினிமாப் படங்களைப் பார்க்கப் போனால் மீனாட்சி அம்மாளின் கைக்குட்டை ”சொட்டச் சொட்ட நனைந்து போகும். அதற்காகப் படங்களைப் பார்க்கச் செல்லாமல் இருந்து விடுவாளா அவள்? எந்தப் பெண் தான் அப்படி நின்று விடுகிறாள்?

இவற்றினால் எல்லாம் தான் பலரும் சொன்னார்கள் “மீனாட்சி அம்மாளுக்கு ரொம்பவும் இளகிய மனசு” என்று.

“இளகிய மனசு” படைத்த பெரிய வீட்டு அம்மாள் தர்மத்துக்குப் பயந்தவள்; நியாயத்தை அனுஷ்டிக்க ஆசைப்படுபவள்.

கண்டிப்பானவள். வீட்டு வேலைக்காரர்கள் சிறு தவறு செய்து விட்டாலும் அவர்களை மன்னிக்கத்துணியாதவள். அவர்களுடைய தவறின் தன்மை அவர்கள் மனசில் உறைக்கும்படி ஏசியும், தண்டித்தும் நேர்மையை நிலை நாட்டத் தயங்காதவள்.

அவளுடைய இளகிய மனசை அறிந்தவர்கள் இக்குணங்களை எல்லாம் “பாராட்ட வேண்டிய அம்சங்கள்” என்ற கணக்கில் தான் சேர்த்தார்கள்.

இவ்வாறு பாராட்டுப் பெற்ற பண்புகள் சில சமயங்களில் ஏற்படுத்திய விளைவுகள் பாராட்டியவர்களின் மனதில் எத்தகைய எண்ணங்களையும் எழுப்பவில்லை போலும்!

ஒரு நாள் பார்வதி அம்மாள் “பெரிய வீட்டு மீனாட்சி”யைக் காணச் சென்றிருந்தாள். அப்போது அந்த வீட்டில் கூப்பாடும் அழுகையுமாக இருந்தது. வீட்டு வேலைக்காரச் சிறுமியை அதன் அப்பன் அறைந்து கொண்டிருந்தான். முதுகில் “பளார் பளார்” என்று பேயறை கொடுத்தான் அவன். எட்டு வயதுச் சிறுமி, “ஐயோ… அம்மா.. நான் இல்லே… எனக்குத் தெரியாது சாமி சத்தியமாக நான் எடுக்கலே” என்று அலறியது. விக்கலுக்கும் விம்மலுக்கும் ஓலத்துக்கும் ஊடாக எழுந்த அலறல் மிகவும் பரிதாபகரமாக ஒலித்தது.

அந்த இடத்தில்தான் மீனாட்சி அம்மாளும் நின்றாள். சிறுமியின் வேதனைக்குரல் அவள் உள்ளத்தைத் தொட முடியாமலா போய்விட்டது? ” என்ன விஷயம்?” என்று விசாரித்தாள் பார்வதி.

மீனாட்சியின் இரண்டரை வயதுக் குழந்தை கையில் நாலணாக் காசு இருந்ததாம். அது காணாமல் போய்விட்டதாம். குழந்தையைக் கவனித்து கொண்டிருந்த சிறுமிதான் திருடியிருக்கவேண்டும்; அது ஐஸ்க்கிரீம் வாங்கித் தின்றது ; ரிப்பன்காரனிடம் பேசிக் கொண் டிருந்தது என்றெல்லாம் மீனாட்சி அம்மாள் சொன்னாள். தோட்டத்தில் வேலை பார்த்து வந்தான் சிறுமியின் தந்தை. அவனிடம் தனது கட்சியைச் சொல்லி, “திருட்டுப் பிள்ளையை இங்கே வேலைக்கு
வைத்துக்கொள்ள முடியாது. கூட்டிக்கொண்டு நீயும் போய்ச்சேரு. அதுதான் தண்டனை” என அறிவித்தாள்.

அவன் கெஞ்சினான். மன்னிப்புக் கேட்டான். தனது மகளை அறைந்து நொருக்கினான்.

“இப்படிச் செய்ய வேண்டியதுதான். இதென்ன திருட்டுப் புத்தி? நாலணா போனால் போகுது என்று விட்டு விடலாம். இன்னொரு நாளைக்கு இந்தப் புள்ளெ வெள்ளிப் பாத்திரம், தங்க நகைகளை எடுத்துக்கிட்டுப் போகாது என்பது என்ன நிச்சயம்?” என்று திடமாகத் தெரிவித்தாள் மீனாட்சி அம்மாள்.

“ஆமாம். நாலணாவை. இந்தப் பிள்ளைதான் எடுத்தது என்று எப்படி நிச்சயமாகச் சொல்லமுடியும்?” என்று கேட்கத் தோன்றவில்லை பார்வதி அம்மாளுக்கு. “முளைச்சு மூணு இலை விடலே. அதுக்குள்ள இந்த மூதேவிக்கு மூளை போற போக்கைப் பாரேன்!” என்றுதான் அவள் ஆமோதித்தாள்.

“இளகிய மனம்” பெற்ற மீனாட்சி அம்மாளின் பண்பாட்டுக்கு மிகப் பெரிய உதாரணமாக விளங்கியது ஒரு நிகழ்ச்சி.

வண்டிக்காரன் வயது அதிகமானவன். இருந்தாலும் தனது கடமையை ஒழுங்காகச் செய்து வந்தான் அவன். அவனும் அவனது குடும்பத்தினரும் பெரிய வீட்டின் தோட்டத்து மூலை ஒன்றில் குடிசை அமைத்து வசித்தனர். திடீரென்று கடுமையான ஜுரத்தில் விழுந்தான் வண்டிக்காரன். அவன் குணமடைந்து எழ ஒருமாதம் பிடித்தது. அதற்குள் வேறொரு ஆளை நியமித்து விட்டதால், இனிமேல் அவன் வேலைக்கு வேண்டியதில்லை என்று எசமானியம்மாள் உத்திரவிட்டாள். உடனடியாகவே தோட்டத்துக்குடிசையையும் காலி செய்துவிட்டு அவன் போய்விட வேண்டும் என்றாள்.

“அம்மா, நான் பிள்ளைக்குட்டிக்காரன். இந்தத் தள்ளாத காலத்திலே நான் எங்கே அம்மா போவேன்? இந்த மூலையிலேயே ஒண்டிக்கிடக்கும்படி தயவுபண்ணுங்க” என்று கும்பிட்டுக் குழைந்து கெஞ்சினான். காலில் விழுந்து வேண்டினான்.

அவனும் அவன் குடும்பத்தினரும் மூலைக் குடிசையில் வசிப்பதனால் பெரிய வீட்டு அம்மாளுக்கு நஷ்டம் எதுவும் வந்துவிடாது. எனினும் “கொள்கையில் உறுதி வேண்டும்” என நம்பிய மீனாட்சி அம்மாள் வேலைக்காரர்களை ஏவி; கிழவனின் சட்டி பானை தட்டு முட்டுச்சாமான்களை எல்லாம் எடுத்து ரோட்டிலே விட்டெறியும்படி கட்டளையிட்டாள்.

கிழவன் அழுத அழுகையும் பேசிய பேச்சும் அவள் உள்ளத்தைத் தொடவில்லை; ஆத்திரத்தைத்தான் அதிகப்படுத்தின.

மீனாட்சி அம்மாளுக்கு இளகிய மனசு தான். அவளை அறிந்தவர்கள் அனைவரும் உணர்ந்த உண்மை அது.

ஆயினும் அவள் கண்டிப்பானவள். பெரிய வீட்டு அம்மாளின் குணங்களை அறிந்தவர்கள் இதையும் அறியமாட்டார்களா என்ன?

– வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள் – முதற் பதிப்பு ஆகஸ்ட், 2002 – பாவை பப்ளிகேஷன்ஸ் வெளியீடு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *