Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

இல்லாள்

 

“சாப்பிட வரலாமா மரகதம்..?”

சபரிநாதன் கூடத்தில் நின்றுகொண்டே, சமையல் அறையில் சுறுசுறுவென இருந்த மனைவியை அன்புடன் கேட்டார். .

“வரலாமுங்க… தோ வந்துட்டேன்.”

சபரிநாதன் பெரிய பெருமூச்சுடன் சாப்பாட்டு அறைக்குப் போய் டேபிளின் முன்னே நாற்காலியில் அமர்ந்தார். மரகதம் அவசர அவசரமாக நுனி வாழை இலையை போட்டு தண்ணீர் எடுத்து வைத்தாள்.

“பெருமாளே” என்றபடி இலையை டம்ளர் தண்ணீரால் துடைத்துக்கொண்ட சபரிநாதன், சமைத்து எடுத்து வைத்திருந்த பாத்திரங்களைப் பார்த்தார். கடைந்த பருப்புக் கீரை; தக்காளி ரசம்; சிறு கிழங்குப் பொரியல்; பீர்க்கங்காய் கூட்டு; மாம்பழ பச்சடி… எல்லாம் காலையில் வயலுக்குக் கிளம்பி போனபோது சபரிநாதன் சொல்லிய சமையல்தான்.

இது இன்று நேற்று ஏற்பட்ட வழக்கமில்லை. முப்பது வருஷத்துக்கும் மேலாக ஒவ்வொரு நாளும் சபரிநாதன் பின்பற்றி வரும் சாப்பாட்டு வழக்கம் இது. மதியம் என்னென்ன சமைக்க வேண்டும் என்பதை காலைப் பலகாரம் சாப்பிட்ட வாயோடு சொல்லிவிட்டுத்தான் வயலுக்கோ தோப்புக்கோ கிளம்புவார். ஒவ்வொரு வேளை சாப்பாடும் அத்தனை முக்கியம் அவருக்கு.

ஆனால் கல்யாணத்திற்கு முந்தி, இந்தக் கறி வை; அந்தக் குழம்பு வை; என்று அவரால் அம்மாவை அதிகாரம் பண்ண முடியவில்லை. அம்மா சமைத்ததை அமைதியாக சாப்பிட்டுவிட்டு எழுந்து விடுவார். அது மரியாதை காரணமாக இருக்கலாம். இருந்தும், அவருடைய அம்மா மகன் கேட்காமலேயே விதம் விதமாக சமைத்துப் போடுவாள்.

தனக்கு கல்யாணமாகி பொண்டாட்டி வரட்டும்; விதவிதமாக இஷ்டப் படுவதையெல்லாம் அவளைச் சமைத்துப்போடச் சொல்லி ஆசை தீர சாப்பிட்டுத் தள்ளலாம் என்ற எண்ணத்தில் சபரிநாதன் அவரின் கல்யாணத்திற்காக காத்திருந்தார்.

அவருடைய அம்மா பெண் பார்க்க ஆரம்பித்தபோது, பாலுணர்வுப் பிரக்ஞையைவிட, சபரிநாதனின் சாப்பாட்டு பிரக்ஞைதான் நங்கூரம் விலகினாற்போல் குலுங்கியது.

பெண்ணின் பெயர் மரகதம். ஊர் கோவில்பட்டி. குடிக்க ஒருவாய் தண்ணீர் கிடைக்காத ஊர் அது. கோக்குமாக்குப் பெண் என்றாலும், கோவில்பட்டியில் பெண் கொடுக்கக் கூடாது என்பார்கள். ஆனால் தாராளமாகப் பெண் எடுக்கலாம்…

கல்யாணமான முதல் மாதத்தில் சபரிநாதனின் சாப்பாட்டு பித்தத்தைப் பார்த்து, மரகதம் பிரமித்துப்போய் பித்துப் பிடித்தவள் போல ஆகிவிட்டாள்.

திடீரென்று சாயந்தர பலகாரமாக பால்போளி செய்யச் சொல்வார்; அல்லது அடை அவியல் பண்ணேன் என்பார். நினைப்பு வந்துவிட்டால் இடியாப்பம் சொதி. இதில் மத்யானம் செய்த குழம்பையோ, ரசத்தையோ; கறியையோ ராத்திரியில் சபரிநாதன் தொட்டுக்கூட பார்க்கமாட்டார். மறுபடியும் புதுசாக குழம்பும், உருளைக்கிழங்கு வறுவலும் வேண்டும். அதற்கும்மேல் ஒரு தேங்காய்த் துவையல்; சீனி அவரைக்காய் வத்தல்… கூடவே கொஞ்சம் நெல்லி அல்லது இஞ்சித் துவையலும் அரைத்து வைத்து விட்டால் சந்தோஷம்…!

பாவம் மரகதம், கண்ணைக் கட்டி சமையல் அறைக்குள் விட்டமாதிரி இருக்கும். இன்னென்ன குழம்புதான் பண்ண வேண்டும், இன்னென்ன காய்தான் பண்ண வேண்டும் என்ற சபரிநாதனின் சாப்பாட்டு அதிகாரம் மரகதத்தைப் போட்டு பாடாய்ப் படுத்தியது.

காலையில் இட்லி அவித்தால், தொட்டுக்கொள்ள தக்காளிச் சட்னியா; தேங்காய் சட்னியா என்பதைக்கூட சபரிநாதன் இரண்டொரு நிமிஷம் யோசனை செய்து பார்த்துவிட்டுத்தான் சொல்வார். “இதுலேயும் யோசிக்கிறதுக்கு என்னதான் இருக்குமோ?” என்று மரகதம் அலுப்போடு ஒருநாள் கேட்டதற்கு, பதில் சூடான இட்லி போல் வந்தது..!

“பத்துப் பன்னிரண்டு இட்லி திங்கலாம் என்கிற மாதிரி வயிறு இருந்தா தக்காளிச் சட்னி; சும்மா ஏழெட்டு இட்லி மட்டும் திங்கலாம்னு இருந்தா தேங்கா சட்னி!”

சபரிநாதனின் இந்த விளக்கத்தைக் கேட்டதும் ‘போதும்டா சாமி’ என்று கோவில்பட்டிக்கு தலை தெறிக்க ஓடிவிட வேண்டும்போல இருந்தது மரகதத்திற்கு. அதற்காக அப்படியெல்லாம் ஓடி விடவா முடியும்? நாணம், மடம், பயிர்ப்பு என்கிற குடும்பப் பெருமைகள் கனம் கனமான சங்கிலிகள் கழுத்தைச் சுற்றி பின்னிப்பிணைந்து கிடக்கின்றனவே… அந்தச் சங்கிலிகளை மரகதத்தால் உடைக்க முடியவில்லை. புருஷனின் சாப்பாட்டுக் கெடுபிடிகளுக்கு அடங்கிப் போய்விட்டாள். நாளடைவில் நல்ல புரிதலுடன் கணவனுடன் இணக்கமானாள்.

அதன்பிறகு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து வளர்ந்து பெங்களூரிலும், ஹைதராபாத்திலும் நல்ல இடங்களில் திருமணம் செய்தும் கொடுத்தாயிற்று.

தவிர, இதில் வேறொரு கோணம் ஒன்றும் இருந்தது.

சபரிநாதன் சாப்பாட்டு ராமனாக மட்டும் உண்டு கொழுத்து மந்தபுத்தி உள்ளவராக இருந்திருந்தால் மரகதம் அடங்கிப் போயிருக்க மாட்டாள். அவர் கம்பீரமான கிராமத்து சுந்தர புருஷர். பரம்பரை பணக்காரர். பாளையங்கோட்டை சேவியர்ஸ் போர்டிங் ஸ்கூலில் படித்த ஒழுக்கம், இறுக்கம் அவருடைய அசைவுகளில் புலப்படும். சாப்பாட்டு நிபந்தனைகள் தவிர, மனதைப்போட்டு நெருடுகிற மாதிரியான வேறு அதீத மனநிலை எதையும் சபரிநாதனிடம் மரகதம் உணர்ந்ததில்லை.

ஆனால் அவரிடம் இரண்டு விதமான தேவையற்ற குணங்களை மரகதம் கண்டுபிடித்து வைத்திருந்தாள். புருஷனின் நிஜமான மனசு என்னவென்று தெரிந்துகொள்ள மரகதமும் பாளையங்கோட்டை போர்டிங் ஸ்கூலுக்குத்தான் போகணுமா என்ன?

மனிதர் அவரைவிடப் பணக்காரர்களைப் பார்த்தால் பொறாமைப் படுவார்; அவருடைய வயது ஒத்தவன் யாருக்காவது ரொம்பவும் அழகான பெண்டாட்டி கிடைத்திருந்தால் மனசுக்குள் பொறாமைப் படுவார். ஆனால் வெளியில் வார்த்தை மட்டும் வேறு மாதிரி வரும். “பொண்ணு கிளி கணக்கா இருக்கான்னு சொன்னீயளே… மூக்குத்தான் அவளுக்கு கிளி கணக்கா! மத்தபடி கணபதி வாகனம்தான்…”

இன்னொரு நிஜமும் அவளுக்குத் தெரியும்…

தனக்கு வாய்த்தவள் அழகானவளாக இல்லாமல் போய்விட்டாளே என்ற ‘ஆவலாதி’ மட்டும் சபரிநாதனின் மனதில் ஒரு இம்மியளவுகூட தோன்றியதில்லை. புருஷனிடம், அதுவும் அழகான புருஷனிடம் ஒரு பெண்டாட்டிக்காரிக்கு இதற்குமேல் என்ன வேண்டும்? இதெல்லாம் சேர்ந்துதான் சபரிநாதனின் சாப்பாட்டுக் கெடுபிடியை மரகதம் அப்படியே ஜீரணித்துக் கொண்டுவிட்டாள்.

அதுவும் தவிர சபரிநாதன் எப்போதுமே அவளிடம் ஏராளமான வாஞ்சையுடன் நடந்து கொள்வார். குரலை உயர்த்திப் பேச மாட்டார். வெளியே எங்கு சென்றாலும், உறவினர்கள் வீட்டு விசேஷங்களுக்கு போகும்போதும், மரகதம் இல்லாமல் போகமாட்டார். இரவுத் தூக்கத்தின்போது நடுவில் எழுந்திருந்து சிறுநீர் கழித்துவிட்டு வந்து, லைட்டைப் போட்டுவிட்டு, அயர்ந்து தூங்கும் மரகதத்தை அமைதியாக சிறிதுநேரம் பொங்கும் வாஞ்சையுடன் பார்ப்பார். அவள் நெற்றியில் சிறிதும் கலையாது இருக்கும் பெரிய வட்ட குங்குமத்தையும் அதன்மேல் தீற்றலான வீபூதியையும் பார்த்து மரியாதை கொள்வார். தனக்கு வாய்த்தவள் ஒரு பெண் தெய்வம்தான் என்று எண்ணி பெருமூச்சு விடுவார். பிறகு லைட்டை அணைத்துவிட்டு மரகதத்தை அணைத்தபடி படுத்துக்கொள்வார்.

சபரிநாதன், வாழ்க்கையில் தனக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் மரகதம் என்று திடமாக நம்பினார். அதேபோல் மரகதமும் அவர்மேல் பாசத்துடன் உயிரையே வைத்திருந்தாள்.

ஆனால் வாழ்க்கை என்பது எப்போதும் ஒரே சீராக ஓடாதே..!

கொஞ்சமும் எதிர்பாராமல் சபரிநாதனின் ஐம்பத்தாறாவது வயதில் மரகதம் செத்துப்போன துக்கத்தை அவரால் ஜீரணித்துக் கொள்ளவே முடியாமல் போய்விட்டது. இப்படி திடீரென்று மனைவி போய்ச்சேர்ந்து விடுவாள் என்பதை அவர் கற்பனை செய்துகூடப் பார்த்தது கிடையாது.

மனைவியின் மரணத்தில் நிலைகுலைந்து போனார். அவருக்குள் நிறைய பயங்கள் வந்துவிட்டன. மிச்சமுள்ள வாழ்க்கையை எப்படித் தனியாக மரகதம் இல்லாமல் ஓட்டுவது? யார் அவருக்கு இனிமேல் வகை வகையாக அவர் சொல்கிற மாதிரியெல்லாம் ருசியாக சமைத்துப்போடப் போகிறார்கள்?

முப்பது வருட தாம்பத்திய வாழ்க்கை பூராவும் கனவாகத் தோன்றியது.

“இனிமே எங்ககூட வந்து இருங்கப்பா…” என்று மகள்கள் இருவருமே அவரைக் கூப்பிட்டனர்.

மரகதம் இல்லாமல் அவர்களிடம் போவது வேறு நாதியற்றுப் போவது மாதிரி… அதற்கு சபரிநாதனின் சுயமரியாதை முதலில் இடம் கொடுக்காது. தவிர மகள்கள் வாழும் அடுக்குமாடி வாழ்க்கை அவருக்கு கண்டிப்பாக தோதுப்பட்டு வராது. கடற்கரை மாதிரியான பெரிய வீட்டில் நினைவு தெரிந்த வயதில் இருந்தே புழங்கிப் பழகியவர் அவர். அவருக்கு எப்படி சதுர அடிக் கூண்டு மாடிகள் சரிப்பட்டு வரும்? குளிப்பதற்கு கஷ்டம்; கக்கூஸ் போவது அதைவிடக் கஷ்டம்.

நகர வாழ்க்கையில், எப்போதும் காலில் றெக்கை கட்டிப் பறந்து கொண்டிருப்பார்கள்… வேண்டாம் அந்த நரக வாழ்க்கை….

மரகதம் இறந்த சில நாட்களிலேயே வெற்றிடத் தனிமையை உணர்ந்தார். ‘இல்லாள் இல்லாத இல்லம் சுடலை’ என்கிற நிதர்சமான உண்மையை உணரத் தொடங்கினார். (இல்லாள்-மனைவி; சுடலை-சுடுகாடு; இல்லம்- வீடு).

மனைவிதான் ஒரு குடும்பத்தின் அச்சாணியே. மனைவியே குடும்பம். அவள் இல்லாத வீடு கண்டிப்பாக சுடுகாடுதான்.

நாட்களை சோகத்துடன் கடத்தினார். வளப்பமாக இருந்த சபரிநாதன் மனைவியின் பிரிவால் வதங்கிப் போனார். தனிமையில் அவர்களின் திருமண ஆல்பத்தை அடிக்கடி எடுத்து வைத்துக்கொண்டு, அதில் மரகதத்தைப் பார்த்து பார்த்து அவளை விரல்களால் தடவி தடவி கண்ணீர் விடுவார்…

கணவன் இறந்துவிட்டால் ஒரு மனைவி தன் எஞ்சிய வாழ்நாளை எதிர்கொண்டு சமாளித்து வாழ்ந்துவிடலாம். ஆனால், மனைவி இறந்தபின் ஒரு கணவன் தன் எஞ்சிய வாழ்நாளை ஓட்டுவது என்பது மிகவம் பரிதவிப்பானது; வேதனையானது; கொடுமையானது.

அந்தக் கொடுமையை தற்போது சபரிநாதன் அனுபவிக்கிறார்.

அவருடைய ஒரே கடைசி ஆசை, அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் மரகதமே மறுபடியும் தனக்கு மனைவியாக வரவேண்டும், அவளை அன்புடன் உட்காரவைத்து, தான் விதம் விதமாக சமைத்து அவளுக்கு அன்புடன் பரிமாற வேண்டும் என்பதுதான். 

தொடர்புடைய சிறுகதைகள்
"என்னங்க மத்தியானத்திலேர்ந்து இதுவரை ஒரு பாக்கெட் சிகரெட்டுக்கு மேல பிடிச்சிருப்பீங்க...இப்படியே போனா உடம்பு என்னத்துக்கு ஆகும்?" பாஸ்கரின் கையில் புகைந்து கொண்டிருந்த சிகரெட்டை பிடுங்கி ஜன்னலுக்கு வெளியே எறிந்தாள் மாலதி. ஏதோவொரு புத்தகத்தில் லயித்திருந்த பாஸ்கருக்கு, மாலதியின் இந்தச் செய்கையினால் முனுக்கென்று ...
மேலும் கதையை படிக்க...
எனக்கு வயது ஐம்பத்தைந்து. பெங்களூரில் சொந்தவீடும் வாசலுமாக பகவத் சங்கல்பத்தால் ஆரோக்கியமாக, சந்தோஷமாக இருக்கிறேன். என் வீட்டில் மனைவி சரஸ்வதி; மகன் ராகுல்; மருமகள் ஜனனி ஆகியோரின் உபயோகத்திற்காக மொத்தம் மூன்று கார்கள் இருக்கின்றன. நான்காவதாக எனக்கென்று ஒரு பென்ஸ் கார் வாங்க வேண்டுமென்பது, ...
மேலும் கதையை படிக்க...
பெங்களூரில் ஒரு இன்டர்வியூவிற்காக மறுநாள் காலை மும்பையிலிருந்து வருவதாகவும். ஏர்போர்ட் வரும்படியும் திவ்யா போனில் சொன்னதும், திவாகருக்கு அலுவலகத்தில் வேலையே ஓடவில்லை. திவாகரின் மனைவி ராதிகாவும் ஊரில் இல்லாததால் அவனுக்கு திவ்யாவின் வரவு படபடப்பான சந்தோஷத்தை அளித்தது. திவ்யா... வயது இருபத்தியெட்டு. ராதிகாவின் அத்தை ...
மேலும் கதையை படிக்க...
*** சிறுகதைகள்.காம் தளத்தில் திரு. எஸ்.கண்ணன் அவர்கள் எழுதிய 100வது சிறுகதை. *** ஸ்ரீராம், பத்து வருடங்களுக்குப் பிறகு தன் நண்பன் முகுந்தனைப் பார்க்க, பெங்களூருக்கு கிளம்பினான். அகமதாபாத்திலிருந்து ஒரு வேலையாக சென்னைவரை வந்தவன், அப்படியே முகுந்தனையும் பார்த்து விடுவது என்று முடிவு ...
மேலும் கதையை படிக்க...
வனஜாவுடன் திருமணம் ஆனபோது எனக்கு இருபத்தைந்து வயது. நான் உடனே பெங்களூரில் தனிக் குடித்தன வாழ்க்கையைத் தொடங்கி விட்டேன். கல்யாணமானவுடனே மனைவியுடன் தனிக்குடித்தன வாழ்க்கை கிடைப்பது அதிர்ஷ்டமானது. தாம்பத்ய வாழ்க்கையின் ஆரம்ப நாட்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் மிகவும் அற்புதமானவை. மனைவியின் சின்னச்சின்ன பார்வைகள்கூட கணவனை ...
மேலும் கதையை படிக்க...
சிகரெட்
பெருமாள் கடாட்சம்
உஷ்ணம்
மனிதர்கள்
புதுமனைவி மோகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)