இறுதி உரை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 31, 2020
பார்வையிட்டோர்: 5,184 
 

(இதற்கு முந்தைய ‘இறுதி நாட்கள்’ சிறுகதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது)

ஒருசில உறவினர்கள் மச்சக்காளையை ஒருமுறை சென்னை அடையாறில் இருக்கும் புற்றுநோய் ஹாஸ்பிடலுக்கு அழைத்துக் கொண்டுபோய் காட்டிவிட்டு வரலாமே என்று யோசனை சொன்னார்கள்.

புற்றுநோய் நிபுணர் டாக்டர் சாந்தா பற்றி மிகவும் சிலாகித்துப் பேசினார்கள்.

மச்சக்காளை சட்டென்று தன் கண்களை ஆசையுடன் விரித்துக்கொண்டார். மூழ்கிப்போக இருந்தவருக்கு பிடித்துக்கொள்ள ஒர் துரும்பு கிடைத்தாற்போல இருந்தது. அவரைப் பொறுத்தவரை ‘தீர்க்காயுசு’ எதுவும் தேவை கிடையாது! சில குடும்ப கடமையெல்லாம் வரிசையாக முடித்து விடுவார்! பெண்டாட்டி பிள்ளைகளுக்கு இன்னும் கொஞ்சம் பணம் சேர்த்து வைத்துவிட்டால் போதும்! அப்போது புறப்பட மச்சக்காளைக்கு ஆட்சேபணை கிடையாது! இப்போது கடவுள் கொஞ்சம் கருணை காட்ட வேண்டும்… அவ்வளவுதான்.

உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முதல் ஆளாக சென்னைக்கு கிளம்பிவிட்டாலும் மனதிற்குள் அவருக்கு மிகவும் மலைப்பாக இருந்தது. சென்னையில் உறவினர்கள் எவரும் கிடையாது. அதனால் சென்னைக்குப் போய் ஹோட்டலில் தங்க வேண்டும். ஹோட்டலுக்கும் ஹாஸ்பிடலுக்கும் அலையாய் அலைய வேண்டும். அங்கே இருக்கும் டாக்டர்கள் என்ன பண்ணுவார்களோ, ஏது பண்ணுவார்களோ; அங்கேயும் கீமோதெரபி சிகிச்சைதான் மேற்கொள்ள வேண்டும் என்றால், அதையும் ஏற்றுக்கொண்டு ஹோட்டல் சாப்பாடையும் சாப்பிடுவதென்றால் – மச்சக்காளையால் அதை நினைத்தே பார்க்க முடியாத நரக விஷயம்.

இருந்தாலும் மரணத்தில் இருந்து தப்பிக்க, இந்த நரக வேதனையை அனுபவிக்கவும் அவர் தயாராகத்தான் இருந்தார்.

சென்னை கிளம்ப நாள் குறித்தாகிவிட்டது. மூன்று பேருக்கு நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது. மச்சக்காளை கிளம்புவதற்கு தயாராகிவிட்டார். நிஜமாகத் தான் எங்கே எதற்காகக் கிளம்புகிறோம் என்பது மட்டும் அவருக்கு சிறிது சந்தேகமாகவே இருந்தது. அன்று மாலை ரயிலுக்கு அவர் கிளம்ப வேண்டும். காலையிலேயே எழுந்திருந்து ஊஞ்சலில் அமைதியாக உட்கார்ந்திருந்தார்.

கோமதியிடம் சொல்லி மகனை அவர் முன்னால் வந்து நிற்கச் சொன்னார். கதிரேசன் மார்பின் குறுக்கே கைகளைக் கட்டியபடி அவர் முன்னால் வந்து நின்றான். மச்சக்காளை பல நிமிடங்கள் மகனைப் பார்க்காமல் தரையையே பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்குள் பல எண்ணங்கள் முட்டி மோதிக் கொண்டிருந்தன. பத்து வருடங்களுக்கு மேலாக பேசாது விட்டுவிட்ட மகனுடன் இன்று அவர் சில விஷயங்களைப் புறப்படுவதற்கு முன்பு பேசிவிட வேண்டும். அப்படிப் பேசாமல் கிளம்புவதற்கு மச்சக்காளையின் மனம் சம்மதிக்கவில்லை. மெலிந்த குரலில்; தாழ்ந்த தொனியில் நிறுத்தி நிறுத்திப் பேசினார்…

“…மெட்ராஸ் போயிட்டு வரேன். நீ வீட்டைப் பத்திரமா பாத்துக்க; தம்பி தங்கச்சிகளை கவனமாப் பாத்துக்க. மெட்ராஸ்ல நாங்க எவ்வளவு நாட்கள் இருக்கப் போறோமோ.. எனக்கு எதுவும் இப்பப் புரியலை. டாக்டருங்க எதுவும் செய்ய முடியாதுன்னு கையை விரிச்சிட்டா நாங்க ஒடனே திரும்பி வந்திருவோம். இல்லேன்னா மெதுவா வந்து சேருவோம்… நீ வேலைதேடி பெங்களூருக்கோ சென்னைக்கோ போகணும்னு சொல்லிட்டு இருந்ததா உன்னோட அம்மா சொன்னா. ப்ளீஸ் அதெல்லாம் வேண்டாம்யா. இனிமே எனக்கு என்ன ஆகுமோ தெரியலை. என்னுடைய நாட்கள் எண்ணப் படுகின்றன கதிரேசு… அதுதான் உண்மை. எனக்கும் அது நன்றாகப் புரிகிறது…”

“………………..”

“அதனால நீ ஊரோட இங்கேயே இருந்திடு கதிரேசு. இருந்து பேசாம நம்ம வட்டிக்கடை வியாபாரத்தைப் பாத்துக்க. இந்தத் தொழில் வெளியில இருந்து பாக்கிறதுக்கு ஓஹோன்னு தெரியாது. ஆனால் நமக்கு இதுதான் பிக்கல் பிடுங்கல் எதுவுமே இல்லாத ரொம்ப நல்ல தொழில். நம்ம குடும்பத்துக்கு ஆகிவந்த தொழில்.

முதல்ல இதுக்கு சேல்ஸ் டேக்ஸ் கிடையாது. அதை வச்சித்தான் இந்தத் தொழிலுக்கே நான் வந்தது. சேல்ஸ் டேக்ஸ் மட்டும் இந்தத் தொழிலுக்கு இருந்துதுன்னு வச்சிக்க வருஷம் பூராவும் இந்த சேல்ஸ் டேக்ஸ் ஆபீஸ்காரங்க கூட மல்லுக்கு நான் நிக்கணும். சேல்ஸ் டேக்ஸ் நான் கட்டுறேனோ இல்லையோ, இந்த ஆபீஸ்காரங்களுக்கு முதல்ல எழவு வாக்கரிசி போடணும். நாம அதைப் போடலைன்னா நமக்கு அவய்ங்க நெசமாவே அதை போட்டு விட்டுருவான்…! அவ்வளவு மோசமானவனுங்க அவனுங்க! நீ என்னதான் யோக்கியமான கணக்கை எழுதிக்கொண்டு போய்க் காட்டு. கண்ணை மூடிட்டு நம்ப மாட்டேன்னு சொல்லிப் புடுவானுங்க. எதுக்குன்னா உன்கிட்டேருந்து துட்டுப் புடுங்கறதுக்கு!

இப்படிப் புடுங்கி புடுங்கி பெண்டாட்டி கழுத்ல நகை; காதுல நகை; பெண்டாட்டி பேர்ல வீடு; பெண்டாட்டி பேர்ல ப்ரைவேட் டாக்ஸி… இதெல்லாம் இல்லேன்னு இந்தியாவுல ஒரு சேல்ஸ் டேக்ஸ் ஆபிசரை நீ காட்டச் சொல்லு பாப்பம்…! நம்ம ஊரு தெப்பக் குளத்தைச் சுத்தி பெரிசா டெர்லின் சட்டையை மாட்டிக்கிட்டு கடலை எண்ணெய் ஆட்றேன்; புண்ணாக்கு ஆட்றேன்; நல்லெண்ணெய் ஆட்றேன்னு சொல்லிகிட்டு வியாபாரம் பண்ணிகிட்டு இருக்கிறவனுன்களைக் கேளு, ராத்திரில எவனும் ஒழுங்கா தூங்கறதில்லைன்னுதான் சொல்லுவான்.

இது வெறும் செக்ஸ் டேக்ஸ்காரனோட மட்டும் முடிஞ்சு போறதில்லை; அவனுக்கு மச்சான் இன்கம்டாக்ஸ்காரன் ஒருத்தன் வேற இருக்கான். அவனோட பிக்கல் பிடுங்கல் அதுக்கு மேல. அட்வான்ஸ் டேக்ஸ் கட்டுறான்னு கண்ல விரலை விட்டு ஆட்டுவான். சரின்னு கட்டிட்டு கணக்குப் பாத்து ரீபண்டு கடைசில எனக்கு குடுன்னு கேட்டா, நம்மை இழுத்தடிப்பான். கடைசில நம்ம துட்டை எடுத்து அவனுக்கு வெட்டினாத்தான் பைனல் ரீபண்டு செக்கை பாஸ் பண்ணுவான்.

போதும், போறாதத்துக்கு இப்ப புதுசா ஜிஎஸ்டி எழவு வேற…

இந்த எழவை எல்லாம் பாத்திட்டுத்தான் இவனுங்க சங்காத்தமே வேண்டாம்னுட்டு இந்த வட்டிக்கடை வியாபாரத்தை ஆரம்பிச்சேன் கதிரேசு. நல்லா புரிஞ்சுக்க.

எந்த சேல்ஸ் டேக்ஸ், இன்கம்டாக்ஸ்காரனுக்கும் இந்த வியாபாரத்ல என்ன வருமானம் வருது, ஏது வருதுன்னு ஒரு சொட்டுக்கூட கண்டுபிடிக்க முடியாது பாத்துக்க! இதுல வர்றதெல்லாமே நமக்கு லாபம்தான்!

அதனால எனக்கு ஏதாச்சும் ஆயிட்டாலும் இந்தத் தொழிலை மட்டும் என்னிக்கும் விட்டுடாதே… ரொம்ப நல்ல தொழில் இது. சென்னை போனதும் டாக்டருங்க என்ன சொன்னாங்க என்கிறதை ராமன் மாமாவை விட்டு உன்னிடம் பேசச் சொல்லுதேன். ஆனா நான் சொன்னது எதையும் நீ மறந்திராத. எனக்கு ஏதாச்சும் ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிடுச்சுன்னா உன் அம்மாவை நல்லபடியா பாத்துக்க…”

இதைச் சொன்னபோது மச்சக்காளையின் குரல் உடைந்து போய் கண்களில் நீர் நிறைந்துவிட்டது. அதனால் அவரின் இறுதி உரையை இந்த இடத்தில் அப்படியே முடித்துக் கொண்டார்! அவரின் இறுதி உரையின் நடுவே எந்த இடத்திலும் கதிரேசன் குறுக்கிட்டு எதுவும் சொல்லவில்லை. உரை முடிந்த பின்னும் எதுவும் சொல்லவில்லை.

ஏதாவது அவன் சொல்ல வேண்டும் என்று மச்சக்காளையும் எதிர் பார்க்கவில்லை. இருந்தாலும் அவர்கள் இருவருக்கும் இடையே ஏதோ ஒன்று பூர்ணமடைந்திருந்தது. அவர்களுக்கு இடையே இனி எந்த மிச்சமும் கிடையாது!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *