இரு பேரப்பிள்ளைகள்

 

‘பெற்ற பிள்ளையும் கொண்ட மருமகளும் தான் தன்னை அலட்சியப்படுத்துகிறார்கள் என்றால், பேரப்பிள்ளையும் அலட்சியப்படுத்த வேண்டுமா ? – சீ, இந்த வாழ்வும் ஒரு வாழ்வா ? ‘ என்று வழக்கம்போல் அலுத்துக்கொண்டபடி, ஒளியிழந்த கண்களுக்குத் தன் கையால் ஒளியைத் தேக்கிக் கொடுத்துக் கொண்டே திண்ணைக்கு வந்தார் பெரியண்ணா.

அப்போது, ‘என்ன பெரியவரே, செளக்கியமா ? ‘ என்று கேட்டுக்கொண்டே வந்தார் எதிர் வீட்டுச் சின்னண்ணா.

சின்னண்ணாவும் அப்படியொன்றும் சிறியவரல்ல; அவரும் பெரியவரே. ஆனாலும் அந்தப் ‘பிள்ளைக்குறும்பு ‘ இன்னும் அவரை விட்டபாடில்லை ‘

‘என்னமோ, இருக்கிறேன் ‘ ‘ என்றார் பெரியண்ணா, தான் இருப்பதையே ஒரு பெரிய குற்றமாகக் கருதுபவர்போல்.

* * *

அவர்கள்தான் என்ன செய்வார்கள், பாவம் ‘ வாலிபத்தில் அவர்களுக்கு இருந்த ஒரே பொழுதுபோக்கு மனைவிமார்கள்; அந்த மனைவிமார்களை மஞ்சள் – குங்குமத்தோடு அனுப்பி வைத்துவிட்ட பிறகு, அவர்களுக்கு இருந்த இரண்டாவது பொழுதுபோக்கோ தொணதொணப்பு ‘ – அந்தத் தொணதொணப்புக்கு இந்த ‘ராக்கெட்யுக ‘த்தில் யார் அவ்வளவு எளிதில் இரையாகிறேன் என்கிறார்கள் ? அப்படியே ஓரிருவர் இரையாகக் கிடைத்தாலும் ‘படம் கொண்ட பாம்பின் வாயில் பற்றிய தேரைபோலல்லவா ‘ அவர்கள் விழுக்க ஆரம்பித்துவிடுகிறார்கள் ‘

அதற்காக அவர்கள் இருவரும் அயர்ந்து போய் விடுவதும் இல்லை; தங்களுடைய தொணதொணப்புக்கு வேறு யாரும் இரையாகவில்லையென்றால், அவர்களே ஒருவருக்கொருவர் இரையாகிக் கொண்டு விடுவார்கள் ‘

ஆம், அவருக்கு யாரும் கிடைக்காவிட்டால் அவர் இவரைத் தேடிக்கொண்டு வந்துவிடுவார்; இவருக்கு யாரும் கிடைக்காவிட்டால் இவர் அவரைத் தேடிக்கொண்டு போய் விடுவார்- அன்றைய சந்திப்புக்கும் அதுவே காரணம் ‘

* * *

காரணம் அதுவாயிருந்தாலும் காரியம் என்று ஒன்றும் இருக்கத்தான் இருந்தது. அந்தக் காரியம் வேறொன்றுமில்லை; ஒரு சிட்டிகை ஓசிப் பொடி ‘

முதலில் அதை வாங்கிப் போட்டுக் கொண்டு, ‘எப்பொழுது கேட்டாலும் ‘என்னமோ இருக்கிறேன் ‘ ‘ என்பதுதானா ? அப்படி என்ன குறைச்சல் ஐயா, உமக்கு ? ‘ என்று கேட்டார் சின்னண்ணா.

‘என்னத்தைச் சொல்வது, போங்கள் ‘ என்னுடைய பையனைப் பற்றியோ கேட்கவே வேண்டாம். அவனிடம் யாராவது வந்து, ‘என் அப்பா எனக்கு இதை வைத்துவிட்டுப் போனார், அதை வைத்துவிட்டுப் போனார் ‘ என்று அளந்தால் போதும்; ‘என் அப்பாவும் என்னை அப்படியொன்றும் வெறுங்கையுடன் விட்டுவிட்டுப் போவதாக இல்லை; திவசம் வைத்துவிட்டுப்போகப் போகிறார், திவசம் ‘ என்று என் காதில் விழும்படிச் சொல்கிறான் ‘ ‘ என்றார் பெரியண்ணா, அழாக்குறையாக.

‘சரி, விடும். நீரும் நானும் அதைத் தவிர வேறு என்னத்தை வைத்துவிட்டுப் போகப் போகிறோம் ? ‘ என்றார் சின்னண்ணா அலட்சியமாக.

‘அவன் தான் அப்படியென்றால் அவனுக்கென்று வந்து வாய்த்த மனைவிக்கோ நான் ஒரு வத்தல் ‘ ‘

‘வத்தலா ‘ ‘

‘ஆமாம்; வாசலில் வத்தலைக் காய வைத்துவிட்டு, அந்த வத்தலோடு வத்தலாக என்னையும் வெய்யிலில் காயவைத்துவிடுகிறாள் அவள் ‘ எனக்கென்ன கண்ணா தெரிகிறது, காக்காயை விரட்ட ? ‘

‘அந்த விஷயத்தில் மட்டும் நீர் கொஞ்சம் ஜாக்கிரதையாயிரும்; உம்மையும் வத்தலென்று நினைத்துக் காக்காய் கொத்திக் கொண்டு போய்விடப்போகிறது ‘ ‘

‘இந்த வீட்டில் எது நடக்கும், எது நடக்காது என்றே சொல்வதற்கில்லை. காலையில் பாருங்கள், ‘இங்கே உட்கார்ந்து கொட்டாவி விட்டுக் கொண்டிருப்பதைவிட, அங்கே வந்து உங்களுடன் பேசிக் கொண்டாவது இருக்கலாமே ? ‘ என்று நினைத்தேன். இப்பொழுதெல்லாம் நினைத்தால் நினைத்தபடி வந்து விட முடிகிறதா ? கண்தான் தெரியவில்லை என்றால், காலுமல்லவா இடறித் தொலைக்கிறது ? அதற்காகப் பேரப் பிள்ளையைக் கூப்பிட்டேன், துணைக்கு. அவன் என்னடா என்றால், ‘நீ போ தாத்தா, எனக்கு வேலை இருக்கு ‘ ‘ என்று என் தலையில் அடித்தாற்போல் சொல்லிவிட்டு வெளியே போய்விட்டான், பம்பரம் ஆட ‘ அந்தப் பயலுக்கு ஒரு முறை ‘டிப்தீரியா ‘ வந்திருந்தபோது, அவனுக்காக நான் எடுத்துக் கொண்ட சிரமம் இருக்கிறதே, அதை ஏன் கேட்கிறீர்கள், போங்கள் அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் ‘ ‘

‘உம்முடைய பேரப் பிள்ளையைப் பார்க்கும்போது என்னுடைய பேரப் பிள்ளைகள் எவ்வளவோ தேவலை போலிருக்கிறதே ? ‘

‘உங்களுக்கு ஏதய்யா, பேரப் பிள்ளைகள் ? ‘

‘ஏன் இல்லை, ஒருவருக்கு இருவர் இருக்கிறார்களே, சுவாமி ‘ ‘

‘இதே ஊரிலா ? ‘

‘ஆமாம் ‘ ‘

‘ஆச்சரியமாக இருக்கிறதே ? ‘

‘அதைவிட ஆச்சரியம் என்னவென்றால், அவர்கள் நான் கூப்பிடும்போது பம்பரம் ஆடப்போவதுமில்லை; பட்டம் விடப்போவதுமில்லை ‘ ‘

‘கொடுத்து வைத்தவர்தான் ‘ ‘

‘அவர்களுக்கு இதுவரை ‘டிப்தீரியா ‘வும் வந்தது கிடையாது; ‘டான் ‘ஸிலும் வந்தது கிடையாது ‘ ‘

‘வரவேண்டாம்; அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு எதுவுமே வர வேண்டாம். ‘

‘அவர்கள் என்னை அவமதிப்பதுமில்லை; அலட்சியப் படுத்துவதுமில்லை ‘ ‘

‘தீர்க்காயுசாக இருக்கட்டும் ‘ ‘

‘நான் எங்கே கூப்பிட்டாலும் சரி, எப்பொழுது கூப்பிட்டாலும் சரி – அவர்கள் என்னுடன் வரத்தயார் ‘ ‘

‘கிலோ கணக்கில் சாக்லெட் வாங்கி, கேட்கும் போதெல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்களோ ? ‘

‘அதெல்லாம் ஒன்றும் கிடையாது; பகவத் கீதை படிக்காமலே, பலனை எதிர்பாராமல் கருமம் செய்கிறவர்கள் அவர்கள் ‘ ‘

‘அப்படியானால் ஒரு நாள் இருபத்துநாலுமணி நேரமும் அல்லவா அவர்கள் உங்களுடன் இருந்தாக வேண்டியிருக்கும் ? ‘

‘ஆமாம்; ஒரு கணங்கூட அவர்கள் என்னை விட்டுப் பிரிவது கிடையாது ‘ ‘

‘அப்படியிருந்துமா அவர்களை நான் இதுவரை பார்க்கவில்லை ? ‘

‘உமக்குக் கண் தெரிந்தால்தானே பார்ப்பதற்கு ? ‘

‘அதனாலென்ன, அவ்வளவு அருமையான குழந்தைகளை நான் தடவிப் பார்த்தாவது உச்சி முகரக் கூடாதா ? எங்கே, அவர்களைக் கொஞ்சம் அருகே வரச் சொல்லுங்கள் ? ‘

‘இதோ அவர்கள் உங்களுக்கு அருகிலேயே இருக்கிறார்கள், தடவிப்பாருங்கள் ‘ ‘ என்றார் சின்னண்ணா, தம்முடைய பேரப்பிள்ளைகளை அவருக்கு அருகே தள்ளி.

ஆவலுடன் அவர்களைத் தடவிப் பார்த்த பெரியண்ணா, கண்களில் நீர் துளிக்கச் சொன்னார்:

‘ஆஹா ‘ மூக்குக் கண்ணாடியையும் கைத் தடியையுமே பேரப்பிள்ளைகளாகக் கொண்டுவிட்ட நீங்கள்தான் எவ்வளவு பெரிய பாக்கியசாலி ‘ ‘ 

தொடர்புடைய சிறுகதைகள்
தீபாவளியன்று காலை; கார்ப்பொரேஷன் குழாயை வைத்தே ‘கங்கா ஸ்நான’த்தை ஒருவாறு முடித்துக்கொண்டு வெளியே வந்தேன். முதல் நாள் இரவு வெடித்த பட்டாசுகள், விட்ட வாணங்கள் எல்லாம் குப்பையோடு குப்பையாகக் கலந்து, தெருமுழுவதும் விரவிக் கிடந்தன. யாரோ ஒரு சிறுவன் — வயது ...
மேலும் கதையை படிக்க...
முக்கால் கெஜம் ஜாக்கெட் துணி வாங்குவதற்காக மூன்று மணி நேரம் சைனாபஜாரைச் சுற்றிச் சுற்றி வந்த பிறகு, முரளியும், சரளாவும் வீட்டுக்குச் செல்வதற்காகப் பஸ்நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர். ‘நாக்கை வரட்டுகிறது; எங்கேயாவது ஐஸ்கிரீம் சாப்பிட்டால் தேவலையே ‘ ‘ என்று சுற்று ...
மேலும் கதையை படிக்க...
அந்த ஊரில் அரிய நாயகத்தின் செருப்புக்கடைதான் பேர் போன கடை. சொற்ப முதலுடன் ஆரம்பித்துச் சீக்கிரத்திலேயே பெரிய செருப்பு வியாபாரியானவன் அரியநாயகம். அவனிடம்தான் காத்தான் தினசரி செருப்புத் தைத்து லாபத்துக்கு விற்று வயிறு வளர்த்து வந்தான். காத்தானிடமிருந்து முக்கால் ரூபாய்க்கு வாங்கிய ...
மேலும் கதையை படிக்க...
காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த முத்தையா ‘ஊம்.. ஊம்.. ஊம் ‘ என்று ஈச்சம் பாயில் படுத்தபடி ‘ஊம் ‘ கொட்டிக் கொண்டிருந்தான். அடுத்த வீட்டுக்காரியிடமிருந்து அப்பொழுதுதான் வாங்கி வந்த அரைப்படி நெல்லை உரலில் போட்டு ‘உக்கும்..உக்கும்..உக்கும் ‘ என்று குத்திக் கொண்டிருந்தாள் அவன் மனைவி ...
மேலும் கதையை படிக்க...
‘என்னா சின்னி ‘ வயிற்றைக் கிள்ளுகிறது; சோத்தையாச்சும் வடிச்சயா ? ‘ என்று கேட்டுக் கொண்டே வந்தான் பசியால் வாடிய பொன்னையா. ‘நீயும் கேட்கிறயே ‘ வெட்ட வெளியிலே அடுப்பைப் பற்ற வச்சிட்டு நான் அவதிப்படறேன். குழந்தை வேறே பனியிலே படுத்துக் காலையிலேருந்து ...
மேலும் கதையை படிக்க...
ஊமைப்பட்டாசு
இரக்கம்
கவலை இல்லை
பதினோராம் அவதாரம்
பொன்னையா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)