கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: March 18, 2013
பார்வையிட்டோர்: 15,841 
 

இருள் கவியத் தொடங்கியதும் ஜன்னத்திற்கு இரவுக்கு என்ன சமைக்கலாம் என்னும் யோசனை வந்தது. தோசையா சப்பாத்தியா என்று ஆலோசித்துச் சப்பாத்தி என முடிவெடுத்தாள். அப்போதுதான் மஃரிபு தொழுகை முடித்தாள். ஆடு யாசின் ஓதிவிட்டுக் கையோடு கிஷாவும் தொழுதுவிடலாமா என யோசித்தாள். இப்போது மாவு பிசைந்து வைத்துவிட்டால் தொழுதுவிட்டுச் சுடுவதற்குச் சரியாக இருக்கும். மாமியார் பசிக்கிறது என்று சத்தம் போட்டால் கஷ்டம்.

‘சரி இப்படியே மாவு பிசைஞ்சுடலாம்’ எனத் தனக்குள்ளேயே முணுமுணுத்தவள் கையிலிருந்த யாசீன் கிதாபைப் பீப்பாயின் மீது வைத்துவிட்டு அடுப்படிக்குச் சென்றாள்.

சுவிட்சைத் தட்டிய சமயம் எலி ஒன்று காலில் குதித்து இருட்டுக்குள் ஓடி மறைய ‘ஐய்யோ’ என்று அலறிச் சுதாரித்து ‘சனியன் பிடிச்ச எலி’ என்றாள்.

‘என்றா சத்தம்? எதுக்கு ஐயோன்னு அலர்ற?’ என அடுப்படிக்கு வந்த கதீஜா ‘என்றா எலிய நீ பாத்ததேயில்ல? இப்படிக் கத்துற. மஃரிபு நேரத்துல குடியானச்சி மாதிரி ஐயோங்கற. அல்லானு சொல்லமாட்ட?’ என்று கேட்டாள்.

மாமியார் வந்து திட்டிவிட்டுப் போனதில் ஆத்திரப்பட்டாலும் பதில் சொல்ல முடியாது என்பதால் அமைதியாகக் கோதுமை மாவுப் பாத்திரத்தைக் கையிலெடுத்தாள். வாய்க்குள் மனசுக்கு மட்டும் கேட்கும்படி ‘வேணும்னா கத்துவாங்க?’ என்று சொல்லிக்கொண்டாள்.

தனக்கு, மாமியாருக்கு, கணவருக்கு மொத்தம் பத்துச் சப்பாத்திகள் எனக் கணக்கிட்டு மாவை எடுத்துப் பிசைய ஆரம்பித்தாள். முழங்கையில் சுளீர் சுளீர் என்று வலித்தது. எதிலும் கையை இடித்துக்கொண்டோமோ என வலிக்குக் காரணத்தை யோசித்தாள். எதுவும் நினைவுக்கு வராத நிலையில் வலியோடு மாவைப் பிசைந்தவளுக்கு, நேற்று வீட்டு வாசல்படியில் நின்றுகொண்டு குழந்தைக்குச் சாப்பாடு ஊட்டிக்கொண்டிருந்தபோது ரஹீம் வேகமாக வந்து கையைப் பிடித்துத் தரதரவென இழுத்துக்கொண்டு போய் வீட்டிற்குள் தள்ளியது நினைவுக்கு வந்தது. ‘என்னத்துக்குத் தெருவுல நின்னு சாப்பாடு ஊட்டுறெ? போறவன் வறவன்ட்ட அழகக் காட்டிக்கிட்டு’ என்று கத்தினான். கை வலிக்கு அதுதான் காரணம். இன்றுதான் வலி தெரிகிறது.

இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படிக் கஷ்டப்படப்போகிறோம் என்று நினைத்துக்கொண்டாள். அம்மாவின் குரல் ஞாபகம் வந்தது. வீடுன்னா சண்டை தான், புருஷன்னா திட்டதான் செய்வாங்க.

இரவு தூங்கும் முன்பாகக் கை வலிக்கு அயோடெக்ஸ் தடவ வேண்டுமென நினைத்துக்கொண்டாள். சென்ற வாரத்தில் ஒரு நாள் இப்படித்தான் குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்று காய்ச்சல் மருந்து இருக்கிறதா எனக் கேட்பதற்காக மாடியில் வாடகைக்குக் குடியிருக்கும் வனிதாவிடம் போயிருந்தாள். அங்கே வனிதாவின் கணவன் அப்போதுதான் ஊரிலிருந்து வந்திருந்தது தெரியாமல் அவள் கதவைத் திறந்துவிட்டாள். இவள் பயந்து பயந்துதான் போனாள். பட்டென்று தலையில் இருந்த முக்காட்டை முகம் மறையும்படி இழுத்துவிட்டுக்கொண்டு ‘ஒன்னுமில்லை. பிறகு வாரேன்’ என விறுவிறுவென இறங்கி ஓடி வந்தவளை ரஹீம் கீழிருந்து முறைத்தான்.

‘என்ன அவன் இருக்கானேன்னு போய்க் காட்டப் போனியா?’ பல்லைக் கடித்தான். சட்டெனத் தலையில் ஓங்கிக் கொட்டினான். இவளுக்கு இதயமே நின்றுவிடும் போலிருந்தது. அவமானத்தில் கூனிக் குறுகியவள் பேசாமல் வீட்டிற்குள் ஓடி அறைக்கதவைத் தாழிட்டுக்கொண்டு, கேவிக் கேவி அழ ஆரம்பித்தாள். அன்றிரவு முழுக்க அழுது தீர்த்தது நினைவுக்கு வந்தது. அந்த வலியே இன்றும் இருக்கத்தான் செய்தது ‘அயோடெக்ஸாவது மண்ணாங்கட்டியாவது’ என்று முணுமுணுத்தாள்.

குழந்தைக்குப் பால் காயவைத்துப் பாட்டிலில் எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தாள்.

‘குப்பி உங்களுக்கு இப்பவே சப்பாத்தி சுடட்டுமா? இல்லை இஷா தொழுதிட்டுச் சுடட்டுமா?’ என்றாள். குரானில் கவனமாக எதையோ ஓதிக்கொண்டிருந்த கதீஜா அவசரமாகத் தலையை உயர்த்தி ‘எனக்கொன்றும் இப்பச் சுட வேணாம்’ என்றுவிட்டு மறுபடி தொடர ஆரம்பித்தாள்.

‘பெறகு மச்சானுக்குச் சுடறப்போ சாப்பிடறீங்களா?’

‘அவன் ஊருக்குல்ல போயிருக்கான். கோயம்புத்தூர்ல சரக்கெடுக்கணுமாம். நாளைக்கிதான் வருவான்’ என்ற கதீஜாவிடம், ‘எங்கிட்ட சொல்லவேயில்ல’ என்றாள். ‘ஏன் மகாராணி ஒன்கிட்ட சொல்லிட்டுத்தான் போகணுமா?’ ஆத்திரமாக ஒலித்தது கதிஜாவின் குரல்.

‘இல்லெ நீங்களாவது சொல்லியிருக்கலாம். நான் சப்பாத்திக்கு மாவு பிசையறதக் குறைச்சுருப்பேன்.’ அவமானத்தாலும் இயலாமையாலும் குரல் இறுகப் பதிலை எதிர்பார்க்காமல் தன் அறைக்குள் நுழைந்துகொண்டாள்.

தொட்டிலில் இருந்து குழந்தையைத் தூக்கி மடியில் கிடத்திப் பாலூட்டத் தொடங்கியவளுக்கு அவன் எப்போது நம்மை மதித்தான் இன்று மதித்துச் சொல்லிவிட்டுப் போக என்றிருந்தது. இப்போது அவளது ஒரே கவலை இன்று இரவு அறையில் தனியாக ரஹீம் இல்லாமல் படுக்க வேண்டும் என்பதுதான். ‘யா அல்லா எப்படித் தாங்கப்போகிறேன்?’ என்று முணுமுணுத்தாள். எத்தனைமுறை சண்டை போட்டு அம்மா வீடு போனாலும் இரவு படுப்பதற்கு இங்கு வந்து சேர்ந்துவிடுவாள்.

இந்த அவமானங்கள் எப்போது பழகுமோ தெரியவில்லை. அதற்காகக் காத்திருக்க ஆரம்பித்திருந்தாள். கொஞ்சம் பொருத்தம் பார்த்துத் திருமணம் செய்திருக்கலாம் என்று நினைத்துக்கொண்டாள். ஜோடிப் பொருத்தம் பார்க்கறது எத்தனை பெரிய துன்பமாக மாறியிருந்ததை யோசித்தாள்.

‘நீ ரொம்ப அழகுன்னு நெனப்போ மூஞ்சில ஆசிட் ஊத்திடுவேன்.

ஒருமுறை ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது சர்வரிடம் இவன் காபி கேட்டான். அவன் ஏதோ ஞாபகத்தில் காபியை இவளுக்குக் கொண்டு வந்து தந்துவிட்டுச் சென்ற பிறகு இவன் சொன்னான், ‘உன் மொகரையை மூடு. புர்கா போட்டா போதுமா? மூஞ்சிய எவன்கிட்டக் காட்டத் தொறந்துபோட்டிருக்க?’ அதற்குப் பிறகு இவன் பேசிய வார்த்தைகளை இப்போதும் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

இரவு உணவுக்குப் பிறகு படுக்கையில் குழந்தையை அருகில் போட்டு இறுக்கி அணைத்து அமர்ந்து ஆயத்தல் குர்ஷியை ஏழுமுறை ஓதி நெஞ்சில் ஊதிக்கொண்டாள். அம்மா குளத்தூர் அஜரத்திடம் மந்திரித்துக் கட்டிவிட்ட தாயத்தை நெஞ்சின் மீது வைத்து இறுகிப் பிடித்துக்கொண்டாள். ரஹீம் இல்லாமல் தூக்கம் வருமா? அப்படி வந்தாலும் கனவு வராமல் இருக்குமா? அல்லது தூங்காமல் உட்கார்ந்தே இருந்துவிடலாமா? என்றெல்லாம் யோசித்தவள் ஆயத்துக் குர்ஷியான் தாயத்தின் துணையைப் பெரிதும் நம்பித் தூங்கலாம் என முடிவுசெய்தாள். கையில் தடவிய அயோடெக்ஸை வாசனை பிடிக்காமல் முகத்தை மூடிக்கொண்டு தூங்க முயன்றாள். அதற்கும் முன்பாக ஜன்னல்கள், கதவு எல்லாமும் தாழிட்டோமா என மறுபடி பார்த்து உறுதிசெய்துகொண்டாள்.

மிக மிருதுவான அணைப்பில் கழுத்தில் பதிந்த முத்தத்தில் கிறங்கித் தவித்தாள். உடல் முழுக்க நீந்திக்கொண்டிருந்த அதன் உதடுகள் இவள் மார்புகளில் வந்து தேங்கித் தடையாகக்கிடந்த உடைகளை ஆவேசத்துடன் கழற்றி எறிய அதன் கைகளுக்குள் புகுந்துகொண்டாள்.

திடுக்கிட்டுத் தூக்கத்திலிருந்து வாரிச்சுருட்டி எழுந்து படுக்கையில் தூத்தூ என்றுவிடாமல் காரித் துப்பினாள். உடல் அருவருப்பாலும் பயத்தாலும் வியர்த்துக்கொட்டி நடுங்கிக்கொண்டிருந்தது. ‘அல்லா’ என முனகியவள் அயத்துல் குர்ஷியை மறுபடி மறுபடி சொல்லி அரற்ற ஆரம்பித்தாள். தன் கையுமறியாமல் உடலைத் தடவிப் பார்த்து உடைகளோடு தான் இருந்ததை உறுதிப்படுத்திக்கொண்டாள். தன்மீது விழுந்து உறவுகொண்ட கனத்த உருவம் எங்கே போயிற்று? கனவென்றால் இப்படித் தத்ரூபமாக எப்படி இருக்கக்கூடும் என யோசித்தாள். கைகளை இடுப்பிற்குக் கீழே கொண்டுசென்று தொட்டுப் பார்த்து மேலும் மேலும் உறுதிசெய்து ஆசுவாசப்படுத்திக்கொண்டாள். பயத்தில் அழ வேண்டும்போலிருந்தது. இன்னும் விடிய நேரமிருந்தது என்னும் நினைவு மீதி இரவை எப்படிக் கழிப்பதெனப் பயமுறுத்தியது. இத்தனை நேரம் தன்னை எழவிடாமல் உறவுகொண்ட அந்தப் பிசாசு இன்றும் இதே அறைக்குள்தான் ஏதேனும் ஓரிடத்தில் அமர்ந்திருக்கும் எனத் தோன்றியது. அந்த எண்ணம் தந்த பதற்றத்தில் அவசரமாக எழுந்து படுக்கையோரமிருந்த பீரோவைத் திறந்து குரானை எடுத்து நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள். ஒலுவின்றிக் குரானைத் தொடக் கூடாது என்னும் நினைவை உதறி எறிந்தாள்.

நிமிடத்தில் பயம் மறைந்து தெம்பு வந்ததை உணர்ந்து லைட்டைப் போட்டாள்.

நேரம்! இன்றும் நான்கு மணிநேரம் தூங்காமல் எப்படி விழித்திருப்பது என்று கவலை ஏற்பட்டது. ஊருக்குப் போன கணவனின் மீது கடும்கோபம் வந்து, ‘சனியன் புடிச்ச பேய் ஏன் என்னைய இப்புடி வெரட்டுது?’ என்று சொல்லிக்கொண்டாள். அவளுக்கு இது புதிதான விஷயமல்ல. இப்போதெல்லாம் ரஹீம் இல்லையென்றால் இந்தப் பிசாசு எப்படியும் வந்துவிடுகிறது. நிச்சயமாக அது ஆண் பேய்தான். சந்தேகமில்லை உடம்பெல்லாம் முறித்துப் போட்டது போன்ற வலி பயத்தை இரட்டிப்பாக்கியது.

முதலில் இன்னொரு அறைதான் இவர்கள் படுக்கையறையாக இருந்தது. அப்போது இந்த அமுக்கினிப் பேய் வந்தபோது இவள் ஒரே ஆர்ப்பாட்டம் செய்துவிட்டாள். ‘நான் இந்த அறைக்குள் படுக்கவேமாட்டேன்’ என்று உறுதியாகச் சொல்லிவிட்டாள். நாத்தனாரோ ‘டிவில பேய்ப் படம் பாத்துருப்ப அதான். இனி அது மாதிரி படம் பாக்காத. கண்டதையும் கனவுல கண்டு பயப்படாத’ என்று சொன்னாள்.

இவளுக்கும் அது சரிதானோ என்றிருந்தது. பிறகு வந்த நாட்களிலும் அது நிகழ்ந்தபோது கனவுக்கும் நினைவுக்கும் உள்ள இடைவெளியைப் பிரித்துப் பார்த்துக் கனவல்ல என முடிவுசெய்தாள்.

கூடவே பக்கத்து வீட்டுச் சைத்தாண்டி சொன்னாள், ‘உங்க மாமனார் இந்த இடத்தை வாங்கி வீடு கட்டுறதுக்கு முன்னாடி அது அருணாசலம் முதலியாருட்ட இருந்துச்சு. அப்ப அவுக வீட்டுப் பண்ணைக்காரன் ஒருத்தன் வேப்பமரத்துல தூக்குப்போட்டுச் செத்துட்டான். சின்ன வயசுப் பய. அந்த மரம் இந்த ரூம் கட்டுன எடத்துலதான் இருந்துச்சு.

பிறகுதான் மாமியாரிடமும் ரஹீமிடமும் அடம்பிடித்து அடுத்த அறைக்குத் தன் படுக்கையை மாற்றிக்கொண்டாள். வீட்டில் அஜரத்துகளை வைத்துச் சலாத்துன் ஆரியா பாத்திஹா ஓதினார்கள். இந்த அறைக்கு வந்த பிறகும் அதே கதைதான். அம்மா குளத்தூர் அஜரத்திடம் ஓதிவிட்டு மந்திரித்த தாயத்து கட்டிவிட்டாள். இவள் ஓதாமல் ஒரு நாள்கூடப் படுப்பதில்லை. நீண்ட நாள் போராட்டத்திற்குப் பிறகுதான் இவளுக்கு ஒரு விஷயம் புரிந்தது. ரஹீமுடன் படுக்கும்போது மட்டும் பேய் வருவதில்லை. அது எந்த அறையாக இருந்தாலும்.

எப்போதெல்லாம் பேய் வந்து தன்னுடன் உறவு கொண்டது என ஆற அமர உட்கார்ந்து யோசித்தாள். ரஹீம் இல்லாத எல்லா நாட்களும் பேய் வந்தது நினைவுக்கு வர, இனி ரஹீம் இல்லாமல் படுக்கவே கூடாது என்று வைத்துக்கொண்டாள்.

இவள் எதைச் சொன்னாலும் அவனுக்கு எரிச்சல்தான். ‘போடி போ. பேய் வந்து அமுக்குதாம்’ என்று சொல்லிவிட்டுப் போய்விடுவான். அதற்கு மேல் சொல்வதற்கு அவனுக்கு எதுவும் இருக்காது. இவள் பிறகு அவனிடம் இது பற்றிப் பேசுவதை நிறுத்திக்கொண்டாள். எதிர், பக்கத்து வீட்டுப் பெண்களிடம் மட்டும் இந்தப் பேய் விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டாள். ஒவ்வொருவருமே அந்தப் பேய் அமுக்கியதைச் சொன்னாலும், அது ஒருமுறையோ இரண்டுமுறையோதான் என்றார்கள். அந்தப் பேய் தன்னை அடிக்கடி வந்து அமுக்குவதாக இவள் சொன்னாள். ‘அப்போ உங்க வீட்டுல நிச்சயமா பேய் இருக்கு. எதுக்கும் பெரிய ஆளு யாரையாச்சும் கூப்புட்டுப் பாத்திஹா ஓதுங்க’ என்றார்கள்.

கதீஜா சொன்னாள் ‘நான் கஷ்டப்பட்டுக் கட்டுன வீடு. இதுல பேயாவது பெசாசாவது? நீதான் பெசாசு. போவியா?’ இவள் இப்போதெல்லாம் யாரிடமும் எதுவும் சொல்வதில்லை. இரவுகளில் ரஹீமுடன் இருக்குமாறு மட்டும் பார்த்துக்கொண்டாள். அவன் இல்லாமல் படுப்பதைத் தவிர்ப்பது குறித்து யோசித்துக் காரணங்களை உருவாக்கினாள். அவன் ஊருக்குக் கிளம்பும் நாட்களில் அவனில்லாமல் தூக்கம் வருவதில்லை என்று காதலில் உருகி அவனைப் போகவிடாமல் தடுத்தாள்.

தான் எத்தனைதான் அவமதித்தாலும் இவள் தன்மீது காட்டும் காதலின் தீவிரம் புரியாமல் குழம்பினாலும் அதை வெளி காட்டிக்கொள்ளாமல் அவனும் காலத்தை ஓட்டினான். மாடிக்குச் செல்கிறாளா, தெருவில் நிற்கிறாளா, வேறு எந்த ஆணிடமாவது பேசுகிறாளா என்று ரஹீம் எப்போதும் கண்காணிப்பினூடேயே நேரத்தைக் கடத்தினாலும், இவள் தன்னை நேசித்த விதம் யதார்த்தமான விஷயமாகத்தான் அவனுக்குத் தோன்றியது. மனைவிக்குக் கணவனை நேசிப்பது தவிர வேறு என்ன வேலை என அடிக்கடி தனக்குள் சொல்லிக்கொள்வதன் வழியே அவளது அதீத அன்பு குறித்த தன் சந்தேகங்களை இல்லாமலாக்கிக் கொண்டான்.

மறுபடியும் நிகழ்காலத்திற்குள் வந்த ஜன்னத் வியர்வையில் குளிர்ந்து நடுங்கிய உடலை மெதுவாகப் படுக்கையில் கிடத்தினாள். குழந்தை ஆழ்ந்த தூக்கத்திலிருந்தாள். அறையின் ஏதேனும் ஓரிடத்தில் அமர்ந்து அந்தப் பேய் தான் உறங்குவதற்காகக் காத்திருந்ததாக நம்பினாள். அந்த நம்பிக்கையின் ஊடே தூக்கத்தை அனுமதிக்கக் கூடாது என்னும் வைராக்கியத்தை ஏற்படுத்திக்கொண்டாள்..

மறுபடியும் கை வலியை உணர்ந்தாள். இந்த மருந்துக்கு வலி கேக்கவில்லை. டாக்டரிடம் போனால் சரியாகும். ஆனால் ‘நீ இழுத்துவிட்டுத்தான் கைவலி’ என்று அவனிடம் எப்படிச் சொல்வது? ‘டாக்டரிடம் காட்ட வேண்டும்’ என்று சொன்னாலும் தொலைந்தாள். ‘டாக்டரப் பாக்கணுமோ? அப்பத்தான் சரியாகுமோ?’ என்பான் இவளால் பதில் சொல்ல முடியாது. அந்தக் கேள்வி அத்தனை அசிங்கமாக இருக்கும்.

அவள் அந்த இரவைப் பயத்தின் கைகளிலிருந்து நகர்த்திக் கழிவிரக்கத்தின் மடியில் கிடத்தினாள். அதைவிட இது ஆசுவாசம் தந்ததாக யூகித்தாள். இன்றிரவு முழுக்க விழித்திருப்பதற்கும் துக்கப்படுவதற்குமான விஷயங்களைத் தன் மன அடுக்குகளிலிருந்து தோண்ட ஆரம்பித்தாள்.

மாடியில் யாரோ நடமாடிய சத்தம் சன்னமாகக் கேட்டது. வனிதாவின் கணவன் அசோக்காகத்தான் இருக்க வேண்டும். அவன் விடுமுறையில் இங்கே வந்து நான்கு நாட்களாகின்றன. அவர்கள் குடும்பம் நடத்தும் அழகைப் பார்த்து இவளுக்குப் பல சமயங்களில் ஆச்சரியமாகவும் சில சமயங்களில் பொறாமையாகவும் இருக்கும். வாய்க்குள்ளேயே பேசிக்கொள்வார்கள். ஒரு சத்தம்கூட அவனிடமிருந்து வந்து இவள் கேட்டதில்லை. இத்தனை அமைதியாக அன்பாகக் குடும்பம் நடத்த முடியுமா என அடிக்கடி யோசிப்பாள்.

மாடியை வாடகைக்கு விடலாம் என்று முடிவுசெய்தபோது கதீஜா மகனிடம் சொன்னாள். ‘சொந்தக்காரங்க யாருக்கும் வாடகைக்கு விட வேணாம். ஒழுங்கா வாடகை வராது. யாராச்சும் இந்துக் குடும்பமா பாரு.

தனியே இருக்கப் பிடிக்காமல் மாடிக்குச் சென்று வனிதாவிடம் பேசலாம் என்று இவள் எண்ணும்போது ரஹீமின் வார்த்தைகள் நினைவுக்கு வரும். ‘மாடியேறினன்னா நடக்கிறது வேற.’

இவளுக்கு அசதியாக இருந்தது. காலையிலிருந்து பார்த்த வேலைகளோடு கொஞ்ச நேரம் முன்பு பேய் படுத்திய பாடும் சேர்ந்து உடலை முறித்துப் போட்டது. வந்துவிடுவான் என்னும் சிறு ஆறுதலோடு எஞ்சிய நேரத்தைக் கழிக்கக் காலத்தில் பின்னோக்கிப் போனாள்.

சிறுவயதில் பார்த்த பேய்ப் படம் நினைவுக்கு வந்தது. இவளும் அக்காவும்தான் மாலை நேரக் காட்சிக்குச் சென்றார்கள். படத்திலிருந்த பேய் ஒவ்வொருவராகக் கொன்று போட்டுக்கொண்டிருந்தது. இவளுக்குப் பயத்தில் உடம்பெல்லாம் வேர்த்துக்கொட்ட அக்காவின் மடியில் முகம் புதைத்துக்கொண்டாள். கொஞ்ச நேரத்தில் அக்காவும் இவள் தலைமீது முகம் புதைத்துக் கண்களை மூடிக்கொண்டாள். பயத்தில் சிறுநீர் கழிக்க வேண்டும்போல இருந்தாலும் இவள் அடக்கிக்கொண்டாள். படம் முடிந்து வெளியே வந்தபோது பயத்தில் நடுங்கிய உடலை எப்படி வீடுவரைக்கும் நகர்த்திச் செல்வது எனப் புரியாமல் அக்காவின் முகத்திலும் அதே கவலையைக் கண்டாள்.

மேலைத் தெரு ஷெரீபும் சுலைமானும் சைக்கிளில் படம் பார்க்க வந்திருந்தார்கள். அக்கா சொன்னாள் ‘நீ வேணும்னா இவங்க யார்கூடயாவது சைக்கிள்ல போ. நான் மத்த பிரண்ட்ஸ்கூட நடந்தே வரேன்.’ ஷெரீபின் சைக்கிளில் அக்கா இவளை ஏற்றிவிட்டாள்.

அக்கா தன் பிரண்ட்ஸோடு சேர்ந்து வந்தாள். அவர்களைக் கூட்டமாக நடக்கவிட்டு அவள் நடுவில் புகுந்துதான் எப்போதும் வீட்டுக்கு வருவாள். வரும் வழியில்தான் சுடுகாடு இருந்தது. அதைத் தாண்டும்வரை எல்லோருடைய வாயும் ஏதாவது ஓதிக்கொண்டிருந்தது. ஒரு கிலோ மீட்டர் தூரம் கடப்பதற்குள் குரானில் உள்ள முக்கியமான ஆரா, ஆபத்துகளெல்லாம் சொல்லி முடித்திருந்தார்கள். வீட்டிற்கு வந்ததும் அம்மாவிடம் அது பற்றிச் சொன்னதற்கு அம்மா சொன்னாள், ‘அப்பிடி என்னத்துக்கு சினிமாவுக்குப் போகனும்? கண்ணோட வருதா, வாயோட வருதா?’

இவள் ஷெரீபின் சைக்கிள் கேரியரில் உட்கார்ந்துகொண்டு முகத்தை அவன் முதுகின் மீது அழுத்திக் கண்களை இறுக்கி மூடிக்கொண்டாள். வீட்டிற்குத் திரும்பிய வழியில் தியேட்டருக்குச் சற்றுத் தள்ளி இருந்த சுடுகாடைக் கடக்கும்வரை கண்களைத் திறக்கவே கூடாது என்று முகத்தை மேலும் அவனது முதுகில் அழுத்திக் கொண்டாள்.

சுடுகாட்டில் ஏதேனும் ஒரு பேய் எழுந்து நடமாடிக்கொண்டிருக்கக்கூடும் என்னும் எண்ணம் திகிலூட்டியது. ‘பேய் ஒரே ஒரு அறைதான் அறையுமாம். ரத்தம் கக்கிச் சாவணுமாம்’ அக்கா ஒருமுறை சொன்னது நினைவுக்கு வந்தது. சைக்கிளின் கிறீச் சத்தமும் மின்னெட்டாம் பூச்சி அல்லது ஏதோ ஒரு பூச்சியின் சத்தமும் கேட்டதை வைத்துச் சுடுகாட்டுக்குப் பக்கமாகப் போய்க்கொண்டிருந்ததை அனுமானித்தாள். வாய் மட்டும் ‘அல்லா . . . அல்லா . . .’ என்று விடாமல் முணுமுணுத்துக்கொண்டிருக்க, ஏதோ பாட்டுப் பாடியபடி சைக்கிள் ஓட்டிய ஷெரீபின் மீது ஆத்திரம் வந்தது. சினிமா பாட்டு பாடும் அவன்மீது கோபம்கொண்டு அல்லா பேயைக் கட்டுப்படுத்தாமல் விட்டுவிட்டால்?

‘இந்தா உங்க வீடு வந்துச்சு எறங்கு’ அதட்டிய ஷெரீபின் குரலால் ‘என்ன வந்துவிட்டோமா?’ என்று சந்தேகத்தோடு கண்களைத் திறந்து பார்த்து நம் வீடுதான் என்பதை உறுதிசெய்துகொண்டவள். ‘அண்ணே, அம்மா கதவத் தொறக்கிறவரைக்கும் நில்லுங்கோ’ என்று சொல்லிவிட்டு எக்கி நின்று காலிங் பெல்லை அடித்தாள். அன்றிரவு முழுக்கக் கட்டிலில் அம்மாவோரம் படுப்பது யார் என்ற போட்டி அக்காவுக்கும் இவளுக்கும் விடியும்வரை நடந்தது.

இப்போதெல்லாம் இவள் ரஹீமிடம் மன்றாடத் தொடங்கியிருந்தாள். ‘நீங்க எங்கே வேணா யாவாரத்துக்குப் போங்க. ஆனா ராத்திரியில வெளியில தங்காம வந்துருங்க,’ இவளது மனறாடலை அவனுக்கு எப்படிப் புரிந்துகொள்வது எனத் தெரியாததால், அதைப் பொருட்படுத்தாமலிருக்க விரும்பினான். திருமணமான புதிதில் இவள் தோற்றம் குறித்து இருந்த எரிச்சலும் அதனால் உண்டான சந்தேகங்களும் குழந்தை பிறந்த பிறகு குறைந்தன. யாராவது ஆண்கள் முன்னால் இவள் நடமாடிவிடக் கூடாது. அதை மட்டும் அவனால் தாங்கிக்கொள்ள முடியாது.

இப்போது இவள் தானில்லாமல் உறங்க மறுப்பதே தன்னுடைய சாதனையாக நினைத்துப் பெருமை கொண்டாலும், இவள் சொல்வதற்காகத் வியாபாரம் சார்ந்த தன் பயணங்களை மாற்றிக்கொள்ள முடியாது என்பதில் தீவிரமாக இருந்தான். அதோடு அம்மாவின் கோபத்திற்கு ஆளாவதையும் அவன் தவிர்க்க விரும்பினான். ‘பொட்டச்சிகள் யாபார விஷயத்துல தலையிடுறது தரித்திரம்’ என்பாள் அம்மா.

இவன் அவளது மன்றாடலை மேலும் மேலும் அதிகரிக்க விரும்பி, அதற்கேற்பத் தன் பயணத் திட்டங்களை வகுத்தான். தொடர்ந்து வாரக்கணக்கில் வெளியூர்ப் பயணங்களை ஒருங்கிணைத்தான். அவை தற்செயலாகவும் சந்தர்ப்பம் சார்ந்தும் அமைந்தன என்பதும் ஓரளவுக்கு உண்மை என்பதையும் அவன் அறிந்துகொண்டிருந்தான்.

ஸீஸீஸீ

ஜன்னத் இரவு வருவதற்காகக் காத்திருக்க ஆரம்பித்தாள். தீராத ஏக்கத்துடன் அவள் இரவுகளை எதிர்நோக்கிக் காத்திருந்தாள். முழுப்பகல் நேரத்திலும்கூட இரவு வருவதற்கான எஞ்சிய மணித் துளிகளை எண்ண ஆரம்பித்தாள். சில மணி நேரங்கள் என்பது எத்தனையோ ஆண்டுக்காலமாக மாறிக் கனக்கத் தொடங்கியதை மன அயர்ச்சியுடன் எதிர்கொண்டாள்.

ஒவ்வொரு இரவும் அவள் வாழ்க்கையில் அதி முக்கியமானதாக மாறியிருந்தது. இன்றைய நாட்களில் அவள் உலகத்தில் அவளோடு இரவுகளும் மட்டும் மிச்சமிருந்தன.

ஒவ்வொரு இரவையும் தன்னுடைய ஸ்பரிசத்தால், புத்தம் புதிதாக மாற்றிக்கொண்டிருக்கும் உறவொன்றை எதிர்நோக்கிக் காத்திருப்பவள்போலக் காதலின் தீராத வேட்கையுடனும் ஆவேசத்துடனும் அவள் நேசிக்கத் தொடங்கிய இரவுகள் அவளுடையனவாக மாறிக்கொண்டிருந்தன.

உடல் சார்ந்த பயங்களும் தயக்கங்களும் மறைந்த மேலான சுதந்திரத்தை அடைந்திருந்தாள். பயத்தின் கரங்களிடமிருந்து விடுபட்டுப் பரவசத்தின் எல்லைகளுக்குள் பயணிக்க ஆரம்பித்தாள். பயத்தில் வெறுத்து ஒதுக்கிய இரவுகள், விருப்பமானவையாக மாறித் தன்னைத் தவிக்கவைக்கும் அதிசயத்தை அதீத வியப்புடன் யோசித்தாள். இன்றைய இரவுக்காகவும் தன் உடலைப் புணர வரும் அந்த உருவத்திற்காகவும் விரகத்தில் தகிக்கும் உடலைப் படுக்கையில் கிடத்துவதற்காகவும் இரவு ஒரு பறவைபோலக் கதவுக்கு மேலாகப் பறந்து வரும் அதிசயத்துக்காக் காத்திருக்க ஆரம்பித்தாள்.

– 2013 ஆண்டு காலச்சுவடு வெளியீடாக வந்த ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கதை

Print Friendly, PDF & Email

1 thought on “இருள்

  1. சிக்மாண்ட் ஃப்ராய்டின் கோட்பாடு இந்த சிறுகதையில் நிரூபணம் பெறுகிறது. கனவுகள் ஒருவரின் ஆழ் மன ஏக்கங்களையும் ஆசைகளையும் நிறைவேற்றும் வகையில் அமையும்… உளவியல் ரீதியிலும் உடலியல் ரீதியிலும் ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு கனவுகள் நல்ல ஆறுதலாகவே இருக்கின்றன. கனவுகளில் வெளிப்படும் விடுதலை உணர்ச்சியே இதற்கு நற்சான்று. நல்ல தூக்கமும் கனவுகளும் இல்லாத பெண்கள் தங்கள் மன அழுத்தத்தை சாமியாடுதல் மூலமும் பேய்பிடித்தல் மூலமும் போக்கிக் கொள்கின்றனர். கனவுகள் காண தகுதி இல்லாதவன் பைத்தியமாக கூட மாறக்கூடும் என்கிறார் சிக்மாண்ட் ஃப்ராய்ட். மனோதத்துவ அறிவியல் புரிதலோடு கூடிய சிறுகதையாகவே இதை பார்க்கிறேன். நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *