இராஐதந்திரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 3, 2013
பார்வையிட்டோர்: 11,577 
 

வரவேற்பறையில் வானொலியில் காலைச்செய்தி போய்க்கொண்டிருந்தது. ரஐனியால் அழமுடியவில்லை. மனதுள் மட்டும் குமுறிக்கொண்டிருந்தாள். நேரம் மதியம் பன்னிரண்டைக்காட்டியது. படுக்கையில் புரண்டு புரண்டு படுக்கத்தான் முடிந்தது. கண்கள் எரிவதாய் தெரிந்தது. பசி வயிற்றை மெல்லிதாக கிள்ளிப்பார்ப்பதை உணர்தவளாய் படுக்கையை விட்டு எழுந்தாள்.

காலை ஐந்து மணிக்கு வேலைக்குச்சென்ற கோபிக்கு சான்விச்சும் கோப்பியும் போட்டுக்கொடுத்து வழியனுப்பிவிட்டு மறுபடியும் படுக்கைக்கு சென்றவள் இப்போது தான் எழுந்திருக்கிறாள்.

யாழ்ப்பாணத்தில் இருந்து பொதி பொதியாக கனவுகளுடனும் பலத்த எதிர்பார்ப்புக்களுடனும் விமானித்தவளுக்கு எல்லாமே கானல் நீராய் போனது குறித்து அவளுக்கு தன்மீதே வெறுப்பாக இருந்தது.

கடந்த ஆறுமாதமாக சிறையுள் அடைப்பட்டது போன்ற உணர்வு. குறுக்கும் நெடுக்குமாக நடப்பதும் அழுவதும் கோபியின் வருகைக்காக தன்னை அலங்கரித்து நிப்பதும் யன்னலே தொலைக்காட்சியாய் வெளி இயற்கையை ரசிப்பதும் வானொலிகேப்பதும் படம் பார்ப்பதும் சமைப்பது சாப்பிடுவது என வீணே பொழுதை களிப்பதாக இருந்தது. அவளது மனநிலையில் சிறுமியாகவே இருந்திருக்கலாம் என எண்ணுவாள்.

மார்கழிமாதத்து திருவம்பாவையை நினைத்தக்கொண்டாள். தான் பருவமடைந்த காலத்தில் இருந்து அம்மா சொல்லி சொல்லி உருவேற்றுவது இப்பவும் காதில் ஒலித்தது. “நல்ல புருசன் கிடைக்க வேணும் எண்டா திருவம்பாவை விரதம் பிடிக்க வேணும் விரதத்தை பிடி பிடி”என பழக்கி விட்டிருந்தாள். பிடித்த பலன் தான் இந்த வெளிநாட்டு சிறை வாழ்க்கைஎல்லாமே கானல் நீராய். ஏக்கப்பெருமூச்சொண்டு நாசி வழி போனதும் அவளிற்கு ஏதோ பெரிய பாரம் இறங்கியது போன்றிருந்தது.

அன்றும் இப்படித்தான் அப்பா கொழும்பு சென்று திரும்பி இருந்தார்.வழமையான பிரயாண களைப்பு தெரியும் முகத்தில் ஆனால் அன்று மட்டும் முகம் கொள்ளா சந்தோசத்தில் இருப்பதை உணர்த்தின.

செல்லம்மா! “ரஐனிக்கு மாப்பிளை பாத்திட்டன். வாற புதன் கிழமை நல்ல நாள். மாப்பிளை வீட்டுக்காறர் பாக்க வருகினம். அவை பெரிசாய் ஒண்டும் எதிர்பாக்கேலை. பிள்ளை படிச்சதாய் லட்சணமாய் அதுகும் வெள்ளைப்பிள்ளையாய் இருந்தா போதுமாம். அவர் சொல்லிக்கொண்டே போனார்.

அம்மா எதுவும் பேசவே இல்லை.ரஐனியும் தான். இவளுக்கு கிடைத்த வரன் பற்றித்தான் வீடு முழுக்கப்பேச்சு. அம்மா மட்டும் அடிக்கடி திருவம்பா விரதம் திருவம்பா விரதம் தந்த பரிசு எண்டு கூறிக்கொண்டிருந்தா.

அவளின் விருப்பை யார் அறிந்தார்கள். அந்த வீட்டில் யாருக்கும் அந்தளவுக்கு பெரிய மனசில்லை. தங்கை பிரியா மட்டும் “அக்கா உனக்கு நல்ல விருப்பம் தானே” என குறும்பாக கேட்டு வைத்தாள்.

அம்மா அப்பா தங்கை பிரியா இன்றோ நாளையோ என நாட்களை தொட்டு நிக்கும் தாத்தா ஒழுங்கை முகப்பில் இருக்கும் வயிரவர் கோவில் தனது ஆசிரியத்தொழில் எல்லாவற்றையும் அம்போவென விட்டுவிட்டு செல்வதா?!

அவளுக்கோ தலை சுற்றுவது போல இருந்தது. அவளை வெளிநாட்டு மாப்பிளைக்கு கட்டிக்கொடுக்க எல்லோரும் தயார் என அறிந்தபோது இது தான் நிசம் என அவள் புலன்கள் ஓங்கி அறைந்தன. முதன் முறையாக கதவை தாளிட்டு அழுது தீர்த்தாள்.

இதோ வெளிநாடு வந்த ஆறுமாதமும் ஓடிவிட்டது. வளர்த்துக்கொண்ட கனவுகள் எல்லாம் அவள் கலைத்து நிசத்தை புரியத்தொடங்கினாள்.

காலையில் ஆறு மணிக்கு வேலைக்கு போய் மாலை 5 மணிக்கு வீடு திரும்பும் கோபி. அவளுக்கோ வீட்டில் எந்த குறையும் வைத்தது கிடையாது. ஆனால் எங்கோ தன் சிறகுகள் கட்டப்பட்டதான உணர்வு.

எப்போதாவது காரில் தமிழ்கடைக்கு போவதும் சுப்பமாக்கெற் போவதும் யாராவது கோபியின் நண்பர்களின் அழைப்பின் பேரில் அவர்களின் வீட்டிற்கு போவதுமாய் காலம் போகிறது. கோபியின் அன்பை கூட அவள் இன்னமும் சரியாக புரியவில்லை. ஆனாலும் அவளுக்கு இந்த கூண்டு வாழ்க்கை முற்றிலும் வெறுத்தது.

நேற்று இப்படித்தான் பக்கத்து பில்டிங் துளசி அக்கா தான் பிரெஞ்சு வகுப்புக்கு போவதாயும் என்னையும் வரச்சொன்னவா நானும் போறன் என கோபிக்கு கூறியபோது தான் கோபியின் கோபத்தை முதன் முதல் கண்டாள் ரஐனி. அதற்குள் கோபியின் தாழ்வுமனப்பான்மையைத்தான் அவளால் இனம் காணமுடிந்தது.

இங்கை பாரும் ரஐனி “நீர் பெரிய கிறச்சுவெற்றாய் இருக்கலாம். ஆனா இங்கை படிக்கிறன் வேலை செய்யிறன் எண்டு வெளிக்கிடத்தேவையில்லை. என்ரை உழைப்பு வடிவாய் காணும். நீர் உழைச்சுத்தான் குடும்பம் முன்னேற வேணும் எண்டில்லை. பேசாமல் விட்டிலையே பிள்ளையை பெத்திட்டு நல்லதாயா எனக்கு பெண்டாட்டியா இரும் அது எனக்கு போதும். இண்டையோடை பாசை படிக்கிறன் எண்ட ஆசையை விட்டிடும” என கத்தி முடித்தான். துளசி விக்கித்துப்போனாள்.
திருவம்பாவையை மனதுள் திட்டித்தீர்த்தாள். இது கூட என் இயலாமை தான். தன் மீது தனக்கே எரிச்சலாக இருந்தது .

நேற்று காலையில் கோபிக்கு சொன்னாள் உரிமையோடு நான் இண்டைக்கு துளசி அக்காவோடை பாசை படிக்க போகப்போறன் . உங்கடை சம்மதம் வேணும். எண்டவளை முறைத்து பாத்துவிட்டு கட்டிவைத்த சான்விச்சையும் கோப்பியையும் எடுத்துக்கொண்டு கதைவை அடித்து சாத்திக்கொண்டு வேலைக்கு போனான். நேற்றில் இருந்து இருவரும் பேசவில்லை. ஏதோ ஒரு வீட்டுள் எதிரிகள் இருவர் உலாவருவது போல் வீடு. எப்படியாவது பாசையின் முக்கியத்தவத்தை புரியவைக்க வேண்டும் என கங்கணம் கட்டினாள்.

இரவுக்கொஞ்சல்கள் கூட பாசை படிக்க போகப்போறன் எண்டதும் தடைப்பட்டது. இதை எப்படியும் தந்திரமாகத்தான் வெல்ல வேண்டும் என முடிவெடுத்துக்கொண்டாள். திருமணபந்தம் ஆயிரம்காலத்துப்பயிர். மோட்டுத்தனமாக சிதைத்துவிடக் கூடாது என்பதிலும் படு ஜாக்கிரதையாக இருந்தாள்.

பசியின்கொடுமையால் மெதுவாக எழுந்து இருந்த பாணுக்கு பட்டர் ஜாம் பூசி சாப்பிட்டுவிட்டு என்ன செய்யலாம் என நினைத்தாள் எதுவும் செய்ய வேலை இல்லை வீட்டில். மீண்டும் கட்டிலில் வந்து படுத்தக்கொண்டாள். நேரத்தைப்பாத்தாள். மதியம் 1 மணி.

பொழுது போகவில்லை தான் பல நாளாய் மனதில் எழுதிவைத்த நாடகத்தை நடித்து காட்டுவோமா என நினைத்தவளாய் கோபியின் மோபைலுடன் தொடர்பை எற்படத்தினாள். ஆ எனக்கு என்னவோ செய்யுது தலை சுத்துது என தனது நடிப்பை அழகாக ஒப்பேற்றினாள். கோபி அடுத்த சில நமிடங்களுக்குள் வீட்டுபெல்லை அழுத்தினான்.

என்னாச்சு.? என பதறிப்போனான். உடனடியாக குடும்ப வைத்தியருக்குதொலைபேசி எடுத்து வருவதாக கூறி துளசியை அழைத்து சென்றான். துளசிக்கு பாசை தெரியாததால் துளசி சொல்ல சொல்ல கோபி மொழிபெயர்த்து வைத்தியருக்கு சொல்லிக்கொண்டிருந்தான். வைத்தியர் பிறசர் பாத்தார் எல்லாம் நோமலாக இருந்தது.

நான் ஏதோ எண்டு பயந்து போனன். இண்டைக்கு முழுக்க லீவை போட்டிட்டு வந்திட்டன். அதாலை இண்டைக்கு 80 பிராங் நட்டம் என கடிந்து கொண்டான். ஆஆ ! இதுக்குத்தான் சொல்லுறது எனக்கு பாசை தெரிஞ்சால் எந்த பிரச்சனையும் வராதெண்டு. எனக்கு ஏதும் வருத்தமெண்டால் நீங்கள் இப்பிடி எத்தின தரம் லீவு போட்டு வருவியள். பிறகு குழந்தை கிடைச்சாலும் குழந்தைக்கு ஏதும் வருத்தமெண்டாலும் நீங்கள் தான் ஓடி வரவேணும். நான் பாசையை படிச்சன் எண்டா ஒரு பிரச்சனையும் இல்லை. நல்ல தாயாய் நல்ல மனைவியாய் இருக்கலாம் உங்களுக்கு எங்கை நான் சொல்லுறது புரியப்போகுது என கடைக்கண்களால் அவனின் முகபாவத்தை அவதானித்தபடி கூறிக்கொண்டே போனாள். கோபியின் மனதில் இருந்த இருள் விலகி பிரகாசம் தோற்றுவதை அவன் முகத்தில் கண்டாள். இப்படியே நான் ஒவ்வொன்றொவ்வொன்றாய் எனது உரிமைகளை வென்று எடுத்துவிடுவேன் என நினைத்துக்கொண்டாள். அடியா பிடியா எண்டு குடும்பத்தை கலைக்காமல் மன தைரியத்தோடை சிலதை தந்திரமாக சாதிக்க வேணும் எண்டதை எனக்கு புத்தியிலை புகுத்தின திருவம்பாவையை மனதார வாழ்த்தினாள். இதைத்தான் சொல்லுறது இராஐ தந்திரம் என்று என மனதுள் எண்ணிக்கொண்டாள்.

ரஐனி நீர் இனிமேல் துளசி அக்காவோடை பாசை படிக்கப்போம். இங்கை பல ஆண்கள் பெண்களை படிக்க விடாமல் வீட்டுக்கை பூட்டி வைச்சதாலை எனக்கும் அந்த புத்தி தொட்டிட்டிட்டுது. நான் உம்மை படிக்க விட்டா ஆரும் ஏதும் சொல்லுவங்களோ எண்டு தான் பயந்தனான். ஆனா ஒரு பெண் அதுகும் இந்த நாட்டிலை பாசை தெரியாமல் இருக்கிறதெண்டது எவ்வளவு கடினம். பல விசயத்தக்கு பாசை படிக்கிறது நல்லது தான் என கூறியவனை மேலும் கதைக்க விடாமல் கட்டிப்பிடித்து முத்தமிட்டாள் மிகவும் அழுத்தமாக—-!

இவ்வளவு நாளும் அவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த இடைவெளியை இப்போ காணவில்லைத்தான். உடலால் உணர்வுகளால் ஒன்றிக்க வைத்த பெருமை ரஐனியையே சாரும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *