இரண்டாவது அத்தியாயம்

 

தேன் மொழிதான் அந்த ஐடியாவைக் கொடுத்தாள் அவனுக்கு.

ஹைதராபாத்தில் கல்யாணம் ஆன புதிதில், வாடகைக்கு ஒரு வீடு எடுத்து மூன்று வருடம் அவர்கள் இருவரும் வாழ்ந்ததை நினைவு படுத்தி, அங்கு நம் புது வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என்றாள் அவனிடம்.

சென்னையில் அவர்கள் இருந்ததும் வாடகை வீடு தான். அதில் தான் அந்த சம்பவங்கள் எல்லாம் நடந்தன.

பிந்துவை அவன் பார்த்த பிறகு தேன் மொழியை கொடுமை படுத்த ஆரம்பித்து விட்டான். ஆனால் தேன்மொழி அப்போது நடந்து கொண்டது, இன்று நடந்து கொள்வது எல்லாம் நம்ப முடியாத ஒன்று.

தான் பிந்துவை கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகச் சொல்லி, தேன்மொழியிடம் அவன் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடச்சொன்னபோது கூட, எதுவும் பேசாமல் உடனே கையெழுத்து போட்டு கொடுத்தாள் தேன் மொழி. அவளால் எப்படி அது முடிந்தது…

தேன் மொழியை துரத்தி விட்டு, அதே வீட்டில் பிந்துவோடு வாழ எப்படிப் பட்ட கல்நெஞ்சு அவனுக்கு இருந்திருக்க வேண்டும். இதற்கெல்லாம் கடவுள் அவனுக்கு கொடுத்த தண்டனை குறைவு என்றே அவனுக்கு தோன்றியது.

இன்று இவ்வளவுக்கும் பின் கூட தேன்மொழியால் அவன் மீது எப்படி அன்பு காண்பிக்க முடிகிறது.

பிந்து அவனை விட்டு போனவுடன் அவமானம் தாங்காமல் அந்த வீட்டை காலி செய்து விட்டான். நான்கைந்து பேரோடு பகிர்ந்து கொண்டு ஒரு அறையில் தங்கி இருந்தான். அங்கு ஒரு அலமாரி மட்டும் அவனுக்கு உண்டு. நோயில் விழுந்து மருத்துவ மனைக்கு போகும் வரைக்கும் அங்கு தான் இருந்தான்.

இப்போது, இவ்வளவுக்கும் பிறகு, திரும்பவும் சென்னையில் ஒரு வீடு தேடி அதில் தேன் மொழியோடு குடித்தனம் நடத்த அவனுக்கு வெட்கமாய் இருந்தது.

சார்மினார் எக்ஸ்பிரஸில் ஹைதராபாத் வந்து இறங்கினான். நோயில் இருந்து மீண்டதில் உடல் பலகீனமாய் இருந்தால் கூட, தேன்மொழியுடன் மீண்டும் வாழப் போவதை நினைக்கும் போது தெம்பு கிடைத்தது அவனுக்கு.

அவன் வாடகைக்கு இருந்த அந்த வீட்டை ஓடிப் போய் பார்க்க வேண்டும் என்று மனம் துடித்தது. எவ்வளவு சந்தோசமான நாட்கள் அவை..

அந்த வீடு தேன்மொழியோடு மகிழ்ச்சியாய் அவன் வாழ்ந்ததற்கான ஒரு நினைவு சின்னம் என்று தோன்றியது. அந்த எண்ணம் மனதில் ஒரு கிளர்ச்சியை உண்டு பண்ணியது.

வீட்டு ஓனரை முதலில் போய் பார்க்கலாம் என்று முடிவு செய்த அவன் சுந்தர் நகருக்கு ஸ்டேசனில் இருந்து ஆட்டோ எடுத்தான்.

அவர்கள் இருந்த அதே வீடு மீண்டும் வாடகைக்கு கிடைத்தால் எப்படி இருக்கும் என்று ஒரு ஆசை தோன்றியது.

அப்படி அந்த வீடு காலியாக இல்லாமல், அதில் யாராவது குடியிருந்தால் கூட, அவர்களிடம் கெஞ்சி கேட்டு, அந்த வீட்டிற்கு உள்ளே போய் ஒவ்வொரு அறையாக பார்த்து விட்டு வர வேண்டும் என்று மனதில் ஆசை தோன்றியது.

வீட்டு ஓனர் உடனடியாக அவனை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. அவன் விவரித்தவுடன் அவரின் கண்கள் விரிந்தன. புரிந்து கொண்டார்.

“ நீங்க வீட்டை காலி பண்ணிட்டு போய் பத்து வருஷம் ஆகியிருக்குமா..” என்றார்.

“ ஆமாங்க சார்.. அதுக்கு அப்புறம் கம்பெனி மாறிட்டேன்.. கடைசியா இருந்த கம்பெனியிலிருந்து நான் வி ஆர் எஸ் எடுத்துக்கிட்டேன்.. கையில பணம் இருக்கு.. ஹைதராபாத்திலே தங்கி ஒரு புது வேலை தேடலாம்னு இருக்கேன்.. நாங்க இருந்த உங்க வீட்டை பாக்கணும். அந்த வீட்டுக்கு பக்கத்திலே ஏதாவது வீடு காலியா இருக்கான்னு தெரியுங்களா..” நிறுத்தினான்.

“ நீங்க இருந்த வீடே இப்ப காலியா தான் இருக்குது….”

இதைக் கேட்டதும் அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

அவரே அவனுக்கு காபி போட்டுக் கொடுத்தார். அவர் மனைவியும், குழந்தைகளும் விசாகப் பட்டினம் போயிருப்பதாகச் சொன்னார்.

“ அப்புறம் உங்களுக்கு குழந்தைங்க ஏதாவது..”

“ குழந்தைங்க இல்ல சார்..” என்றான் அவன்.

வீட்டு ஓனர் எதுவும் பேசவில்லை.

“ வீட்டை நா பாக்கலாமா..”

“ நீங்க ஏற்கனவே இருந்தது தானே.. இந்த பத்து வருஷத்தில பழசாயிருக்குமோன்னு நெனக்கிறீங்களா.. பயப்படாதீங்க.. நீங்க போனதுக்கு அப்புறம் நெறைய இம்புரூவ் பண்ணி இருக்கேன்.. முழுசா மரவேலை செஞ்சிருக்கேன்.. கப்போர்டு போட்டிருக்கேன்.. பாத்ரூமுல சுடுதண்ணிக்கு கீசர் போட்டிருக்கேன்..” என்றார்..

“ அதுக்கில்ல சார்.. சும்மா ஒரு தடைவை பாக்கலாம்னு..”

“ சரி போய் பாருங்க.. சாவி கொடுக்கிறேன்.. நீங்களே போய் பாத்துட்டு வாங்க.. நா எதுக்கு கூட வரணும்.. ”

சாவியை வாங்கிக் கொண்டு போகும் போது மனம் குதூகலித்தது.

ஐந்து மாடி குடியிருப்பு. நிறைய மாற்றங்கள். வாட்சுமேனிடம் தான் பத்து வருடங்களுக்கு முன் இங்கு இருந்ததாகச் சொன்னான்.

அவன் இருந்த வீடு மூன்றாவது மாடியில் இருந்தது.

வீட்டை திறந்து கொண்டு, ஒவ்வொரு அறையாக ஓடினான்..

தேன்மொழியோடு இந்த வீட்டில் தான் வாழ்ந்த அந்த மூன்று வருடத்தையும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட அந்த நாட்களையும் நினைத்து பார்த்தான்..

அவளுடன் அந்த வீட்டில் இருந்த ஒவ்வொரு இடத்தையும் ஒவ்வொரு அங்குலத்தையும் நினைவு கூர்ந்தான்.

கண்கள் கலங்கியது.

வீடு பூட்டிக் கிடந்ததால் குப்பையும், கூளமுமாக இருந்தது.

இருந்தும் அந்த குப்பைகளுக்கு நடுவில் தரையில் படுத்து கொண்டான்.

அப்படியே இரண்டு மணி நேரம் கழிந்திருக்கும்.

வீட்டு ஓனரிடம் சாவியை திரும்ப கொடுக்கும் போது,

“ இவ்வளவு நேரம் ஆயிடிச்சே.. ஆட்டோ கெடைக்கலியா..” என்றார்..

“ ஆமாம்..” என்று சொல்லி சமாளித்தான்..

ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு நாள். அவன் கண் விழித்து பார்க்கும் போது, ஜி எச்சில் கிடந்தான். உடல் நிலை மோசமாகி போனவுடன் அறையில் உடன் தங்கியிருந்த ஒருத்தன் அவனை சேர்த்தி விட்டு போயிருந்தான்.

பக்கத்து படுக்கைகளில் படுத்து இருக்கும் மற்ற நோயாளிகளிடம் அவன் பேசுவதில்லை.

யாரையும் பார்க்க பிடிக்கவில்லை அவனுக்கு. அவமானத்தில் உடலும் மனமும் கூனிக் குறுகிப் போய் இருந்தது. சீக்கிரமே சாவு வந்து விடாதா என்று மனம் ஏங்கியது.

அந்த மருத்துவமனையில் தனக்கு தெரிந்தவர்கள் யாராவது இருந்து, தான் இருக்கும் நிலைமையைப் பார்த்து விடுவார்களோ என்று பயமாக இருந்தது. அவன் வேலை செய்த கம்பெனியில் இருந்தவர்கள், தன்னுடைய உறவினர்கள், தேன்மொழியின் உறவினர்கள்.. இப்படி யாராவது இங்கு இருந்து, அவர்கள் அவனைப் பார்த்து விடுவார்களோ…

முக்கியமாக தேன்மொழிக்கு தான் இப்போது இருக்கும் நிலைமையும், இடமும் தெரிந்து விடக்கூடாது என்று நினைத்தான்.

ஆனால் கண்டிப்பாக பிந்துவின் உறவினர்கள் கல்கத்தாவில் இருந்து யாரும் இங்கு வந்து இருக்க முடியாது. அப்படி இருந்தாலும், அவர்களுக்கு அவனைத் தெரியாது. பிந்துவைத் தவிர மற்றவர்களை அவன் பார்த்தது இல்லை.

ஒரே முறை பிந்துவின் அம்மா கல்கத்தாவில் இருந்து வந்து இருந்தாள். தன் அப்பாவைப் பற்றி பிந்து எதுவும் சொல்லியதில்லை.

இப்போது பிந்து என்ன செய்து கொண்டிருப்பாள். கல்கத்தாவில் இருப்பாளா.. அல்லது தன் கிராமத்துக்கு போயிருப்பாளா..

அவளுடன் யார் இருப்பார்கள்.. வேறு ஒரு ஆண் மகனை தேடிக் கொண்டிருப்பாளா.

டாக்டர் ரவுண்டு வந்து விட்டு போனவுடன், ரொட்டியும் பாலும் சாப்பிடக் கொடுத்தார்கள். படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தான். மற்ற நோயாளிகளுக்கு உறவினர்கள் வந்து பழங்கள் வாங்கிக் கொடுத்தார்கள். தனக்கு யாரும் வரவில்லை என்பது தெரிந்தது. வராமல் இருப்பது நல்லது…

மனதில் இப்படி ஒரு சிந்தனை ஓடிக் கொண்டிருக்கும் போது தான், அந்த வார்டுக்கு உள்ளே நுழையும் அந்த பெண்ணை பார்த்தான். துப்புறவு பணியாளருக்கான நீல நிற யூனிபார்மில் இருந்தாள் அவள்.

அது வேறு யாரும் இல்லை. தேன்மொழிதான்.

அதிர்ந்து போன அவன், உடனே படுத்து கொண்டு, போர்வையால் முகத்தை மூடிக் கொண்டான். வேறு பக்கம் திரும்பி கொண்டான்.

அவள் யாரையும் கவனிக்க வில்லை. குனிந்து தரையைப் பார்த்து துடைக்க ஆரம்பித்தாள்.

முழு வார்டையும் அவள் துடைத்து எடுக்க, ஒரு மணி நேரம் ஆனது.

அவனின் படுக்கைக்கு அருகில் தேன்மொழி வரும் போது, அவள் படுக்கையின் வலது பக்கம் துடைக்கும் போது, இடது புறமும், இடது புறம் துடைக்கும் போது, வலது புறமும் அவன் தன் முகத்தை வைத்துக் கொண்டான்.

இரண்டு நாட்கள் இப்படியே ஓடின.

அவள் தன்னை பார்ப்பதற்கு முன் டாக்டரிடம் டிஸ்சார்ஜ் வாங்கிக் கொண்டு போய் விடலாமா என்று யோசித்தான்.

மூன்றாம் நாள் தேன் மொழி அவனைப் பார்த்து விட்டாள்.

அதற்கு பிறகு காரியங்கள் வேகமாக நடந்தன. மருத்துவ மனையில் பணி புரியும் எல்லோரும் அவனை கேவலமாக பார்ப்பது தெரிந்தது. அவமானத்தில் அவன் தலை குனிந்து கொண்டே இருந்தான். அவளே எல்லாம் பார்த்துக் கொண்டாள்.

தினக்கூலி அடிப்படையில் துப்புரவு காண்டிராக்டரிடம் வேலை செய்வதாகச் சொன்னாள். அவள் அந்த மருத்துவ மனையின் சிப்பந்தி என்பதில் சில சௌகரியங்கள் இருந்தன. அடுத்த நாள் தேன்மொழியே டாக்டரிடம் சொல்லி டிஸ்சார்ஜ் வாங்கிக் கொண்டு தான் தங்கி இருந்த இடத்திற்கு அவனைக் கூட்டிக் கொண்டு போனாள்.

துப்புரவு சாமான்களை வைக்கும் குடோனில் அவளுக்கு தங்குவதற்கு இடம் கொடுத்து இருந்தார்கள். பினாயில் வாடை குமட்டியது. அவளிடம் குறைந்த பொருட்களே இருந்தன. அதில் அவர்கள் கல்யாண போட்டோவும் இருந்தது.

அந்த ஹைதராபாத் வீட்டில், சாமான்கள் இறங்க ஆரம்பித்தன. அவன் ஒரே ஒரு பெட்டியை மட்டும் தேடினான். அவன் தேடியது அவர்கள் கல்யாண போட்டோ இருந்த பெட்டி. அந்த போட்டோவை பெட்டியில் இருந்து வேகமாய் பிரித்து எடுத்து சுவரில் ஆணி அடித்து மாட்ட ஆரம்பித்தான்.

“ அந்த எலக்டிரிக் ஹீட்டரையாவது மொதல்ல பிரிச்சி எடுத்தா, உங்களுக்கு குடிக்கறதுக்கு ஏதாவது காய்ச்சி கொடுக்கலாம்னு இருந்தேன். அதை விட்டுட்டு, கல்யாண போட்டோவை எடுத்து மாட்ட ஆரம்பிச்சிட்டீங்களா..” என்றாள் தேன்மொழி.

- ‘ ஐயனார் கோயில் குதிரை வீரன்’ சிறுகதை தொகுப்பு (காவியா பதிப்பகம்) 

தொடர்புடைய சிறுகதைகள்
“ என்னோட ஒரே ஆசை எதுன்னா, நான் நடிகைங்கறத மக்கள் மறந்துடணும்.. கடைத்தெருவில நா நடந்தா யாரும் என்ன கண்டுகொள்ளக்கூடாது.... ப்ரியா இருக்கணும்... மனசுக்கு பிடிச்சதை நெறய சாப்பிடணும், வெளியில போனா, யாரும் என்ன கண்டு கொள்ள கூடாது.. இது தான் ...
மேலும் கதையை படிக்க...
நெடுஞ்சாலைத் துறை அலுவலகம். சாலை விரிவு படுத்துவதற்கான காண்டிராக்ட் யாருக்கு என்ற முடிவு அறிவிக்கப்படுவதாக இருந்தது. காண்டிராக்டர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். மருதமுத்தும் அதில் ஒருவர். முகத்தை அடிக்கடி தோளில் இருந்த துண்டை எடுத்து துடைத்து கொண்டார். ஒவ்வொரு காண்டிராக்டரும் தன்னால் எவ்வளவு தொகையில் அந்த வேலையை செய்து ...
மேலும் கதையை படிக்க...
கயிலை மலை. சிவபெருமானிடம் பார்வதி தேவியின் விண்ணப்பம். “ சுவாமி, பூலோகத்தில் எனக்கு ஒரு இளம் பக்தை. சம்பூர்ணம் என்று பெயர். அவளின் கணவன் மாரி, கிரானைட் கம்பெனியில் வேலை செய்யும் போது, கிரானைட் கற்களை தூக்கும் கிரேன் அறுந்து விழுந்து, அதனடியில் ...
மேலும் கதையை படிக்க...
பர்வதத்திற்கு தன் வாழ்நாள் லட்சியம் எது என்றால், இதே ஊரில் இருப்பதாக அம்மா சொன்ன தன் அப்பா யார் என்று முதலில் கண்டுபிடிப்பது, அப்படி கண்டுபிடித்த பிறகு அவரை நான் தான் உன் அப்பா என்று பகிரங்கமாகச் சொல்ல வைத்து, ஊர் ...
மேலும் கதையை படிக்க...
நாளுக்கு ஒரே ஒரு பாசஞ்சர் ரயில் மட்டும்தான் நிற்கும் அந்த ஸ்டேஷனில். நேரம் காலை எட்டு மணி இருக்கும். பத்து மணிக்கு வர வேண்டிய அந்த ரயிலுக்காக மூன்று பேர் மட்டும் காத்து கொண்டு இருந்தார்கள், வெறிச்சோடிக் கிடந்த அந்த ஸ்டேஷனில். ஒருவர் பேண்ட் ...
மேலும் கதையை படிக்க...
மறந்து போன நடிகை
ஐயனார் கோயில் குதிரை வீரன்
பார்வதி தேவி வாங்கிக் கொடுத்த நஷ்ட ஈடு
ஒரு மகளின் ஏக்கம்
பங்காளிகளின் குலதெய்வ வழிபாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)