Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

இப்படியும் ஓர் உறவு

 

எனது வைத்தியக் கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டு மலைநாட்டிலுள்ள நாகஸ்தனைத் தேயிலைத் தோட்டத்தில் வைத்தியனாகப் பதவியேற்று ஒரு வருடத்திற்கு மேலாகிறது. இந்தக் கால ஓட்டத்தில் எனக்கு எவ்வளவோ விசித்திரமான அனுபவங்கள் கிடைத்த வண்ணம் இருக்கின்றன.

கல்லூரியிலே கற்ற தொழில் முறைகளெல்லாம் இங்கு வேலை பார்க்கும்போது சில வேளைகளில் என்னைக் கைவிட்டு விடுகின்றன. தேயிலைத் தோட்டத்துத் தொழிலாளர்களுக்கு வைத்தியம் பார்ப்பதற்குப் புதுவிதமான திறமை வேண்டுமென்பது இப்போதுதான் எனக்குப் புரிகிறது.

எனக்குக் கொடுக்கப்பட்ட பங்களா, வைத்திய சாலைக்குப் பக்கத்திலேதான் இருக்கிறது. சிகிச்சைக்காகப் பலர் வைத்தியசாலையில் கூடிவிட்டார்கள் என்பதனை அவர்கள் எழுப்பிய பலமான பேச்சுக் குரலில் இருந்து புரிந்துகொண்டேன்.

எனது பங்களாவிலிருந்து புறப்பட்டு வைத்தியசாலையை நான் அடைந்தபோது, பலர் எழுந்து வணக்கம் தெரிவிக்கிறார்கள்.

“சலாங்க”

“சலாம்” நான் அவர்களுக்குப் பதில் வணக்கம் தெரிவித்து விட்டு வைத்தியசாலைக்குள் நுழைகிறேன்.

‘மருந்துக்காரன்’ அதாவது வைத்தியசாலையில் வேலை செய்யும் தொழிலாளி அறையைச் சுத்தமாகக் கூட்டித் துடைத்துக் கிருமிநாசினி தெளித்திருந்தான். அதன் வாசனை அறையெங்கும் நிறைந்திருந்தது. தினந் தினம் நுகர்ந்து பழகிப்போன அந்த வாசனை என் மனதுக்கு இதமாக இருந்தது; வெளியே சிலர் மூக்கைச் சுழித்தார்கள். நோயாளர்கள் ஒவ்வொருவராக உள்ளே வந்து தங்களது நோய்களைக் கூறிச் சிகிச்சை பெற்றுக் கொண்டு திரும்பிய வண்ணம் இருக்கிறார்கள்.

அடுத்துக் கறுப்பையாக் கங்காணி வருகிறார். மலையில் பெண்கள் கொழுந்தெடுக்கும்போது இவர்தான் மேற்பார்வை செய்பவர். அவர் அணிந்திருக்கும் ‘கோட்’டும் காவிபடிந்த பற்களால் உதிர்க்கும் சிரிப்பும், குழைந்து பேசும் நயமும் கங்காணிமார்களுக்கே உரித்தான தனிச் சிறப்புக்கள்.

“சலாமுங்க”

“சலாம்” கங்காணி, என்ன வேணும்?

“கொழந்தை பொறந்திருக்குங்க; பேர் பதியணும்”

நான் கங்காணியை உற்றுப் பார்க்கிறேன். அவரது தலையில் நரைத்திருந்த கேசங்கள் எனக்குப் பல கதைகள் சொல்லுகின்றன.

எனது சிந்தனைப் பொறிகளில் ஒருகணம் தாக்கம் ஏற்படுகின்றது; நான் மௌனமாகின்றேன்.

கங்காணியின் மனைவி கறுப்பாயி நேற்றுத்தான் காலில் ஏற்பட்டிருந்த காயத்திற்கு மருந்து கட்டுவதற்காக வைத்தியசாலைக்கு வந்திருந்தாள். அவளது தோற்றத்தை எனது மனக்கண்ணின் முன்னால் நிறுத்திப் பார்க்கிறேன். கறுப்பாயி கர்ப்பிணியாக இருக்கவில்லையே!

“யாருக்குக் கங்காணி குழந்தை பிறந்திருக்கு? கறுப்பாயிக்கா?”

“இல்லீங்க சாமி, செகப்பாயிக்கு”

“யார் அந்த சிகப்பாயி?” நான் கங்காணியிடம் கேட்கிறேன்.

“என்னோட கொழுந்தியா தானுங்க. சம்சாரத்தோட தங்கச்சிங்க, நான் ரெண்டாந் தாரமா எடுத்துக்கிட்டேனுங்க”

எனது பொறிகள் கலங்குகின்றன. சிகப்பாயியை எனக்கு நன்றாகத் தெரியும். அவள் தினமும் காலையில் வைத்தியசாலையின் வழியாகத்தான் மலைக்குக் கொழுந்தெடுக்கச் செல்வாள். அப்பொழு தெல்லாம் சிகப்பாயியின் அழகை நான் பலமுறை இரசித்திருக்கிறேன்.

பெயருக்கேற்ற நிறம், அழகான வதனம், கருவண்டுக் கண்கள், கொஞ்சிப் பேசும் குரல், கொழுந்துக் கூடையைப் பின் புறத்தில் மாட்டிக்கொண்டு நாகஸ்தனைத் தோட்டத்திற்கே ராணிபோல அவள் நடந்து செல்லும் அழகே அலாதியானது. தோட்டத்து வாலிபர்களின் உள்ளங்களையெல்லாம் கிறங்க வைத்த அந்தச் சிகப்பாயியா இந்தக் கிழவனை மணந்து கொண்டிருக்கிறாள்!

என் மனதுக்குக் கஷ்டமாக இருந்தது.

“சிகப்பாயியை எப்போது கலியாணஞ் செய்தாய்?” நான் ஆவலோடு கறுப்பையாக் கங்காணியை வினவுகின்றேன்.

“கலியாணஞ் செய்யல்லீங்க, எடுத்துக்கிட்டேனுங்க” இதைக் கூறும்போது வெட்கத்தோடு தலையைச் சொறிந்துகொண்டே குழைந்தார் கங்காணி.

முறைப்படி விவாகம் செய்யாதவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் பிறப்பைப் பதிவு செய்யும் போது, தாய் தந்தையரின் கையொப்பத்தையும் பதிவுப்புத்தகத்தில் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதனைக் கங்காணியிடம் விளக்கமாகக் கூறி, இருவருடைய கை யொப்பத்தையும் பெற்றுக்கொள்வதற்கு நேரில் அவர்கள் வசிக்கும் லயத்திற்கு வருவதாகவும் சொல்லிக் கங்காணியை அனுப்பி வைத்தேன்.

அதற்குப்பின் எனது வேலை என் கருத்தில் அமையவில்லை. வைத்தியத்திற்கு வந்தவர்களை ஒவ்வொருவராக அனுப்பிவிட்டு, மருந்துக்காரனையும் கூட்டிக் கொண்டு சிகப்பாயி வசிக்கும் லயத்திற்குப் போகிறேன்.

லயத்தில் சிகப்பாயி இருக்கும் ‘காம்பரா’வுக்குள் நுழையும் போது கங்காணி என்னை வாசலிலே நின்று வரவேற்கிறார். சிகப்பாயியின் தாயும் தந்தையும் எனக்குச் சலாம் வைக்கிறார்கள்.

எனக்கு அவர்களைப் பார்க்கும்போது எரிச்சலாக இருந்தது. அழகான கிளிபோன்ற பெண்ணை வளர்த்து, இந்தக்கிழட்டுப் பூனையிடம் கொடுத்துவிட்டார்களேயென என் மனம் ஏங்குகிறது.

நான் சிகப்பாயியைப் பார்க்கிறேன். சிகப்பாயிக்கு என்ன நேர்ந்துவிட்டது? அவளது உடலெல்லாம் மெலிந்து பெலவீன மடைந்திருக்கிறாள். அவளது முகத்திலே ஏன் இவ்வளவு சோகம்? ஏன் அவளது கண்கள் கலங்குகின்றன? தோட்டத்து வாலிபர்களை ஏங்க வைத்த சிகப்பாயியா இவள்!

சிகப்பாயியையும் அவளது குழந்தையையும் பரிசோதனை செய்தபின்னர், குழந்தையின் பிறப்பைப் பதிவுசெய்யவேண்டிய எல்லா விபரங்களையும் ஒவ்வொன்றாகக் கேட்கிறேன்.

ஏன் சிகப்பாயி மௌனமாக இருக்கிறாள்? கங்காணியும் சிகப்பாயியின் தாய் தந்தையரும் எனக்கு வேண்டிய விபரங்களைக் கூறுகிறார்கள். அவற்றைக் குறித்துக்கொண்ட பின்னர், கங்காணி பிறப்புப் பதிவுப் புத்தகத்தில் கையொப்பமிடுகிறார்.

சிகப்பாயியின் பெருவிரலை மையில் தோய்த்துப் புத்தகத்தில் ஒப்பமாக அழுத்துகிறேன். அவளது விரல்கள் நடுங்குகின்றன. அவளையும் மீறிக்கொண்டு ஒரு விம்மல் சோகமாக என் காதுகளைத் துளைக்கிறது. மறுகணம் அவள் மயக்கமடைந்துவிட்டாள்.

அவளது நாடித்துடிப்பை நான் அவசர அவசரமாகச் சோதனை செய்கிறேன். பயப்படும்படியாக ஒன்றுமில்லை. அவளுக்கு ஏதோ அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அவளுக்கு இப்போது பூரண ஓய்வு தேவை. அவள் மனதை அலட்டிக்கொள்ளாமல் நிம்மதியாக நித்திரை செய்யும் வண்ணம் வேண்டிய மருந்தை ஊசிமூலம் அவளது உடலிலே பாய்ச்சிவிட்டு வைத்தியசாலைக்குத் திரும்புகிறேன்.

எனது மனம் குமைச்சல் எடுக்கிறது. சிகப்பாயி ஏன் திடீரென்று மயக்கமடைந்தாள்? அவளுக்கு அதிர்ச்சி ஏற்படக் காரணமென்ன? அவள் ஏன் மௌனம் சாதிக்கிறாள்?

ஏழெட்டு நாட்களாகச் சிகப்பாயியின் சோக உருவம் இடையிடையே என் மனதிலே தோன்றி என்னை அலைக்கழித்த வண்ணம் இருந்தது.

ஒருநாள் இரவு நடுநிசி நேரத்தில் எனது பங்களாவின் கதவு அவசர அவசரமாகத் தட்டப்படும் ஓசை கேட்கிறது. யாருக்கோ கடுமையான சுகவீனமாக இருக்கவேண்டும். நான் கதவைத் திறக்கிறேன்.

முனியாண்டி வாசலில் நின்றுகொண்டிருந்தான். அவன் தோட்டத்திலுள்ள படித்த வாலிபர்களில் ஒருவன். அவனிடம் எப்பொழுதும் எனக்கு ஓர் அபிமானம் உண்டு. அவன் எதைப் பேசும் போதும் நிதானத்துடனும் முன்யோசனையுடனுந்தான் பேசுவான். அவனது பேச்சில் ஒருவித தனிக்கவர்ச்சி இருக்கும். முனியாண்டி மிகவும் களைத்துப் போயிருந்தான். எங்கிருந்தோ அவசரமாக ஓடிவந்ததால் அவனுக்கு மூச்சு வாங்குகிறது.

“ஐயா, செகப்பாயிக்கு ரெம்ப வருத்தமுங்க. வெரசா வந்து பாருங்க”. அவனது குரலில் பதற்றம் தொனிக்கிறது.

நான் உடையை மாற்றிக்கொண்டு மருந்துப்பெட்டியுடன் அவனைப் பின்தொடர்கிறேன்.

சிகப்பாயி இருக்கும் காம்பராவுக்குள் நுழைந்த போது, அங்கு பலர் கூடியிருந்தார்கள். எனது வரவை அவர்கள் எதிர்பார்க்கவில்லைப் போலத் தெரிகிறது. என்னைக் கண்டதும் எல்லோரும் எழுந்து நிற்கிறார்கள். சிலர் சமாளித்துக்கொண்டு ‘சலாம்’ வைக்கிறார்கள்.

என்னுடன் வந்த முனியாண்டியை உள்ளே நுழையவிடாமல் அங்கு நின்ற சிலர் தடுத்துவிட்டார்கள். அவர்கள் கோபத்தோடு முனியாண்டியைப் பார்த்த பார்வை பயங்கரமாக இருந்தது. நான் நிதானத்துடன் அங்கிருந்த சூழ்நிலையை அவதானித்தேன்.

அந்த அறையின் ஒரு பகுதியிலே தோட்டத்துப் பூசாரி ஒருவன் கையில் உடுக்கு ஒன்றை வைத்து அடித்தபடியே தாளத்துக்கேற்ப ஏதோ மந்திர உச்சாடனம் செய்துகொண்டிருந்தான். அவனது கண்கள் சிகப்பாயியை வெறித்துப் பார்த்தவண்ணம் இருந்தன. சிகப்பாயியைச் சுவரோடு சாய்த்து இருத்தி, சாய்ந்து விடாமல் இருப்பதற்காக இருவர் அவளைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். அவளது கேசங்கள் கலைந்திருந்தன. பூசாரியின் மந்திர உச்சாடனம் உச்சஸ்தாயியை அடையும் போதெல்லாம் அவன் பக்கத்திலே கிடந்த செம்பிலிருந்து தண்ணீரை எடுத்துச் சிகப்பாயியின் முகத்தில் அடித்தான்.

எனது வரவை யாரோ பூசாரிக்குச் சொல்லியிருக்க வேண்டும். அவன் சமாளித்துக்கொண்டு எழுந்திருந்தான். அசடு வழியக் குழைந்துகொண்டே “செகப்பாயிக்குப் பேய்க் கோளாறுங்க, அதுதான் சாமி பார்க்கிறமுங்க” என்றான்.

எனக்குப் பொங்கிவந்த கோபத்தில் எதையுமே என்னால் பேச முடியவில்லை. நான் அங்கு இருந்தவர்களின்மேல் வீசிய பார்வையின் பயங்கரத்தில் எல்லோரும் ஒடுங்கிப்போய் நின்றார்கள்.

சிகப்பாயியைத் தூக்கிப் பக்கத்திலே கிடந்த சாக்கில் படுக்க வைக்கும்படி கங்காணியிடம் கூறினேன்.

கங்காணியும் வேறு சிலரும் அவளைத் தூக்க முயன்றபோது ஈனசுரத்தில் அவள் கூறினாள்:

“அடே, கறுப்பையா கங்காணி, என்னைத் தொடாதேடா.”

கங்காணி இதை எதிர்பார்க்கவேயில்லை. செய்வதறியாது திகைத்து நின்றார். அங்கு நின்ற பெண்கள் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். கங்காணியின் பெயரைச் சிகப்பாயி சொல்லியது அவர்களுக்கு வெறுப்பைக் கொடுத்தது. தோட்டத்துப் பெண்கள் வாழ்நாளில் தவறுதலாகக்கூடத் தங்கள் கணவன்மார்களின் பெயரைச் சொல்லமாட்டார்கள்.

நான் சிகப்பாயியைப் பரிசோதனை செய்தேன். எனது இதயம் ஒரு துடிப்பை இழந்து மீண்டுந் துடித்தது.

சிகப்பாயியின் நாடித் துடிப்புக் குறைந்து விட்டது. அவளது இதயம் பலவீனமாகத் துடித்துக் கொண்டிருந்தது. இனிச் சிகப்பாயி பிழைக்கமாட்டாள்.

அவளது இதயத் துடிப்பையும் சுவாசத்தையும் துரிதப்படுத்த எண்ணி ‘கொறாமின்’ ஊசிமருந்தை அவளது உடலிலே பாய்ச்சுகிறேன். காலங்கடந்த இந்த முயற்சி ஏற்ற பலனைத் தராது என்று எனக்குத் தெரிந்துங்கூட என்னால் சும்மா இருக்க முடியவில்லை.

எல்லாமே எனக்கு ஒரு நொடிப்பொழுதில் விளங்குகின்றன. சிகப்பாயிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி அவளுக்குச் சித்தப்பிரமையை ஏற்படுத்தியிருக்கிறது. பேய் பிடித்து ஆட்டுகிறதென்ற மூட நம்பிக்கையில் அவளுக்கு ஏற்ற வைத்தியம் செய்விக்காமல், அவளுக்குத் தேவையான ஓய்வு உறக்கத்தைக் கொடுக்காமல் இரவு பகலாக அவள் பூசாரியின் சித்திரவதைக்கு ஆளாகியிருக்கிறாள். இந்த மூடநம்பிக்கைதான் அவளின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி யிருக்கிறது.

சிகப்பாயி மெதுவாகக் கண்விழித்துப் பார்த்தாள்; நான் ஆவலோடு அவளை நோக்கியவண்ணம் இருந்தேன். ஏக்கம் நிறைந்த அவளது பார்வை யாரையோ தேடியது. அங்கிருந்த ஒவ்வொருவரின் மேலும் வரிசையாக அவளது பார்வை திரும்பியது. திடீரென்று கண்களில் மலர்ச்சி தோன்றுவதை என்னால் அவதானிக்க முடிந்தது.

சிகப்பாயி மிகவும் கஷ்டத்தோடு முனகினாள்.

“என் ராசா வந்திட்டாரு.”

“யார் சிகப்பாயி, யார் வந்தது? யார்…….?” நான் ஆவலோடு அவளிடம் கேட்கிறேன்.

அவள் பதில் பேசவில்லை. வாழ்வு அணைந்துபோகும் அந்த நேரத்திலும் அவளது வதனத்தில் இலேசாக நாணம் பரவுவதைக் கண்டேன். அவள் தனது ராசாவின் பெயரைச் சொல்லமாட்டாள்,

சிகப்பாயியின் கண்கள் முனியாண்டியை நோக்கிய வண்ணம் இருந்தன.

முனியாண்டி மற்றவர்களின் பிடியிலிருந்து திமிறிக்கொண்டு உள்ளே ஓடிவந்தான். அவனைத் தடுத்து நிறுத்த முயன்றவர்களை எனது அதிகாரத் தொனியில் அடக்கி வைத்தேன். அப்போது அங்கிருந்த சூழ்நிலையில் எல்லோரும் எனது பேச்சுக்குக் கீழ்ப்படிய வேண்டித்தான் இருந்தது.

அங்கு கூடியிருந்தவர்கள் கதைத்த கதைகளிலிருந்து எனக்குச் சில விஷயங்கள் தெரியவந்தன.

முனியாண்டியும் சிகப்பாயியும் காதலர்கள். முனியாண்டி குறைந்த சாதிக்காரனாக இருந்தபடியால், தங்களது காதலுக்கு மற்றவர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என எண்ணிய அவன், தோட்டத்து மாரியம்மன் கோவிலின் தனிமையான சுற்றுப் புறங்களில் சிகப்பாயியை அடிக்கடி சந்தித்திருக்கிறான்.

அப்பொழுதெல்லாம் தங்களது குலதெய்வமான மாரியம்மன் தான் இந்த உறவுக்குத் துணைநிற்கவேண்டுமென அவன் அடிக்கடி வேண்டிக்கொள்வான்.

சிகப்பாயி கர்ப்பவதியாகிச் சில மாதங்களின் பின்பு தான் அவளது தாய்தந்தையருக்கு விஷயம் தெரியவந்திருக்கிறது. அவர்கள் அவளை வெளியே செல்லவிடாமல் வீட்டினுள்ளேயே வைத்துக் கண் காணித்திருக்கிறார்கள். முனியாண்டியால் எந்தவழியிலும் சிகப் பாயியைச் சந்திக்க முடியவில்லை.

சிகப்பாயிக்குக் குழந்தை பிறந்ததும் அவளைப் பயமுறுத்தி, முனியாண்டியிடமிருந்து நிரந்தரமாகப் பிரித்துவிட அவளது தாய்தந்தையர்கள் சூழ்ச்சி செய்திருக்கிறார்கள். கறுப்பையாக் கங்காணியும் அவர்களுக்கு உடந்தையாக இருந்திருக்கிறார்.

உள்ளே வந்த முனியாண்டி சிகப்பாயியின் அருகில் அமர்ந்து அவளது தலையைத் தூக்கித் தனது மடியில் வைத்தான்.

அவள் அவனிடம் ஏதோ கூறுவதற்கு முயன்றாள்.

அவன் அவளது வதனத்தை நோக்கிக் குனிந்தான். அவனது கண்கள் கலங்கியிருந்தன.

“ராசா…….. ராசா…….” அவள் முனகினாள் . அதற்கு மேல் பேசுவதற்கு அவளிடம் சக்தியிருக்கவில்லை. மறுகணம் அவளது தலை சாய்ந்துவிட்டது.

நான் கண்களை மூடிக்கொண்டேன்.

அங்கு நின்றவர்கள் யாருமே எதையும் பேசவில்லை. எங்கும் ஒரே நிசப்தம்.

எல்லாமே முடிந்துவிட்டன.

சிகப்பாயி பெற்றெடுத்த அந்தப் பச்சிளங் குழந்தை திடீரென்று வீரிட்டு அழத்தொடங்கியது. அந்த ஒலி அப்பிரதேசத்தையே துன்பத்தில் ஆழ்த்துவதுபோல் சோகமாக ஒலித்துக்கொண்டிருந்தது.

- வீரகேசரி 1970 

தொடர்புடைய சிறுகதைகள்
சித்திரவேலருக்கு அந்தக் காட்சி அருவருப்பாக இருந்தது. சனநடமாட்டம் நிறைந்த அந்தப் பகுதியில் காதலர்கள் போன்று ஒருவரை ஒருவர் அணைத்தபடி சல்லாபம் புரிந்துகொண்டு, கொஞ்சங்கூடச் சங்கோசப்படாத நிலையில்..... இரு ஆண்கள்! - வெள்ளையர்கள். “என்ன ‘கன்றாவி’யடா இது”- அவர் தனக்குள் முணுமுணுத்தார். அவரின் பக்கத்திலே அவரது பேரன் முருகநேசன். ...
மேலும் கதையை படிக்க...
“ஐயா ........!” ‘...................’ ‘ஐயா:........... ஐயா............!’ தொடர்ந்து யாரோ கதவைத் தட்டுகிறார்கள். வேலாயுதர் விழித்துக் கொண்டார். படுக்கையிற் கிடந்தபடியே கைகளை நீட்டிச் சோம்பல் முறித்துக் கொண்டு வெறுப்போடு கதவின் பக்கம் நோக்குகிறார். மூலையில் சிறிதாக எரிந்துகொண்டிருந்த விளக்கின் வெளிச்சம் கதவின் மேல் மங்கலாக விழுந்து சிதறுகின்றது. எங்கோ ...
மேலும் கதையை படிக்க...
மூர்த்தி ஐயர்:- என்னுடைய பெயர் மூர்த்தி ஐயர். எல்லோரும் என்னை மூர்த்தி என்றுதான் கூப்பிடுவார்கள். பள்ளிக் கூடத்திலை மாத்திரம் முழுப்பெயர் சொல்லிக் கூப்பிடுவினம். எங்களுடைய வகுப்பில் பரமகுருதான் அடிக்கடி சோதனையில் முதலாம் பிள்ளையாய் வருவான்; ஏனென்று எனக்குத் தெரியும். பரமகுருவினுடைய அப்பாதான் எங்களுடைய ...
மேலும் கதையை படிக்க...
பொலிஸ் நிலையத்தில் இருக்கும் அந்தச் சிறிய அறைக்குள் என்னைத்தள்ளி இரும்புக் கதவைக் கிறீச்சிட இழுத்துச் சாத்தியபோது நான் கதவின் கம்பிகளைப் பிடித்தவாறு கெஞ்சினேன். “ நாளை எனக்குச் சோதனை.... என்னைச் சோதனை எழுத அநுமதியுங்கள்.... நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை.” இந்த இரண்டு வருடப் ...
மேலும் கதையை படிக்க...
இரவு எட்டு மணியாகிவிட்டால் எனக்கு நித்திரை வந்துவிடும். சாப்பிட்டுவிட்டுப் படுத்துவிடுவேன். இன்றைக்கு நான் இன்னும் படுக்கைக்குப் போகவில்லை. கொஞ்ச நேரத்துக்கு முன்புதான் மணி ஒன்பது அடித்தது. எனக்கு நித்திரை வரவில்லை. கொழும்பிலிருந்து யாழ்தேவி ‘றெயிலில்’ அக்கா வருவா. அவவுடன் அத்தானும் வருவார். ...
மேலும் கதையை படிக்க...
மண்புழு
விஷ வைத்தியம்
கால தரிசனம்
சோதனை
ஒரு சின்னப் பையன் அப்பாவாகிறான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)