இந்த வரன் வேண்டாம்…..!

 

தோழி வீட்டிற்கு இரண்டு நாட்கள் விருந்தாளியாகச் சென்று திரும்பிய மகள் தீபிகா வீட்டில் நுழைந்த அடுத்த நொடியே அந்த அதிர்ச்சி செய்தி சொல்லி தலையில் குண்டைத் தூக்கிப் போடுவாள் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை திருவேங்கடம்.

வரன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். வேண்டாமென்றால் கிள்ளி எறிய அது ஒன்றும் கிள்ளுக் கீரை இல்லை!

நான்கு நாட்களுக்கு முன்புதான் திருச்சியிலிருந்து தஞ்சை வந்து தீபிகாவை அம்மா, அப்பா, அருண் மூவரும் பெண் பார்த்து விட்டுச் சென்றார்கள்.

அக்கு தொக்கு இல்லாத இடம். மூத்தவனுக்கு மணம் முடித்து டெல்லியில் குடித்தனம். அருண்; இரண்டாவது. திருச்சி பாரத் எலக்ட்ரானிக் கம்பெனியில் வேலை. கை நிறைய சம்பளம். நாத்திகள் பிக்கல் பிடுங்கல் இல்லை. இரண்டுமே ஆண் மக்கள். அம்மா அப்பாக்களும் அரசு வேலையிலிருந்து ஓய்வு. பிள்ளைகள் அவர்களுக்குக் கையை அறுத்துக் கொண்டு சோறு போட வேண்டியதில்லை. முதியோர் இல்லத்திற்குக் கொண்டு விடும் அளவிற்கு அவர்களுக்கு அதிக வயதாகி படுத்தப்படுக்கை இல்லை. முதுமைத் தெரியாமல்…. சர்க்கரை, இரத்தக் கொதிப்பு, மாரடைப்பு எந்தவித நோய் நொடிகளும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். அருணும் பார்க்கக் கண்களுக்கு லட்சணம்.

அவர்களுக்கும் பெண் படிப்பு, நிறம், உயரம்… எல்லாம் பிடித்து அப்போதே சரி சொல்லி போய்விட்டார்கள். இவளும் தலையாட்டி விட்டாள். நல்ல நாள் பார்த்து இரு வீட்டார்களும் சந்தித்துப் பேசி நாள் குறித்தால் வேலை முடிந்தது. அந்த நல்ல நாளும் நாளை மறுநாள்.

இப்படியான சந்தர்ப்பத்தில் இப்படியொரு குண்டைப் போட்டால் யாருக்குத்தான் அதிர்ச்சி வராது?

பெற்ற தாய் தங்கம்மாளும் காதில் மகன் சொன்னதைக் காதில் வாங்கி வந்து தாங்க முடியாமல்…..

“என்னடி சொன்னே ? ” அதட்டி அதிர்வாய் ஏறிட்டாள்.

“இந்த வரன் வேண்டாம்ன்னேன். ” இவளும் அம்மா அதட்டல் உருட்டலுக்கு மிரளாமல் சொன்னாள்.

“ஏன் ? ”

“மாப்பிள்ளைப் பிடிக்கலை.”

“அன்னைக்குச் சம்மதித்துவிட்டு இன்னைக்கு வேண்டாம்ன்னா என்ன அர்த்தம். விபரம் வேணாமா? அவர்களுக்குச் சொல்லத் தேவை இல்லேன்னாலும் உன்னைப் பெத்த எங்களுக்குத் தெரியனும் ! ”

“அந்தக் கண்றாவியை நான் கண்ணாலப் பார்த்தேன்.!” முகத்தைச் சுளித்து வெறுப்புடன் தீபிகா சோபாவில் அமர்ந்தாள்.

“ஏன்….? திருச்சியில் உன் கண் முன்னால் அவன் எவளோடாவது கைகோர்த்து சுத்தினானா ? ”

“அப்படிச் சுத்தினாத்தான் பரவாயில்லேயே…..ஆளை ஆம்பளைன்னு ஒத்துக்குவேனே.!”

“வேற எந்த கண்றாவியைத்தான் சொல்றே ? ” பெற்றவளுக்குத் திகைப்பு.

“விலாவாரியாய்ச் சொல்றேன். என் தோழி வீட்டுக்கு அடுத்த வீடுதான் அவர்கள் வீடு. இவள் வீட்டு மாடியிலிருந்து பார்த்தால் அவர்கள் வீட்டு கொல்லைப் புழக்கவழக்கம் நல்லாத் தெரியும்.”

“சரி.!” – திருவேங்கடம் உன்னிப்பாய்க் கேட்டு தலையாட்டினார்.

“அங்கே…. இந்த வரன்….அருணை இடுப்பில் துண்டோடு தரையில் உட்கார வைச்சு பாச அம்மா…. பிள்ளைக்கு தலையிலேர்ந்து உடம்பு முழுக்க எண்ணெய்த் தேய்ச்சி விடுறா. எண்ணெய்க் குளியல்.! ”

“மகனுக்கு அம்மா எண்ணெய்த் தேய்ச்சு விடுறது ஒன்னும் தப்பு, பாவகாரியமில்லே. மேலே சொல்லு ?” திருவேங்கடம்.

தீபிகா திகைத்தாள்.

“நிஜத்தைத்தான் சொல்றார் உன் அப்பா. அதுல என்ன குத்தம் குறை ? ”

“இங்கேதான் தப்பு பண்றீங்க. புள்ளைங்களுக்கு வரன் தேடும் பெத்தவங்க இப்படித்தான் சின்னச் சின்ன விசயங்களைக் கவனிக்காமல்….. ஜோடி சேர்த்துவிட்டு பின்னால பொண்ணு சரி இல்லே, பையன் சரி இல்லேன்னு கஷ்டப்படுறாங்க.”

“விபரமாச் சொல்லித் தொலைடி சனியனே !” தங்கம்மாள் கடுப்பானாள்.

“என்கிட்ட கடுப்படிச்சு என்ன பிரயோசனம் ? அஞ்சு வயசு பையனுக்கு அம்மா ஆறஅமர எண்ணெய்த் தேய்ச்சி குளிப்பாட்டினால் அது சந்தோசம், சரி. அதுவே முப்பது வயசு பையனுக்கு செய்து விட்டால் சரியா ? ”

“அதை நீயே சொல்லு ? ” திருவேங்கடம்.

“பையன் அம்மா கோண்டு அம்மா புள்ளைன்னு அர்த்தம்.”

“இதுல என்ன விவகாரம், வில்லங்கம் இருக்கு.? ”

“இருக்கு!. பையன் அம்மாப் பையனாய் வளர்றான். அவன் அம்மா பேச்சை மட்டுமேக் கேட்பான். தாய் சொல்லைத் தட்டமாட்டான். இடையில் வந்த பொண்டாட்டி பேச்சைக் கேட்கமாட்டான். அப்படியே அரசபுரசலாய்க் கேட்டு ஆள் மனைவி மேல பாசமாய் இருந்தாலும்…. பெத்தவளுக்குப் பொறுக்காது. இத்தனை நாட்கள் தன் பேச்சைக் கேட்டு தனக்குப் பிள்ளையாய் இருந்தவன்….இன்னைக்கு வந்தவள் பேச்சைக் கேட்டு ஆடுறானேன்னு பொச்சரிப்பு, பொறாமைப் பட்டு….. பெண்ணைக் கொடுமைப்படுத்துவாள். இல்லே…. பையனிடம் மனைவியைப் பத்தி தாறுமாறாய் வத்தி வைச்சு கணவன் மனைவியைப் பிரிக்க ஏற்பாடு செய்வாள் ! இப்படி நி;றைய குடும்பம் சிதைஞ்சிருக்கு. கணவன் மனைவி வாழாமல் விவகாரத்தாகி பிரிஞ்சும் இருக்காங்க.”

“அப்பா ! ஆம்பளைப் புள்ளையாய் இருந்தாலும் பொம்பளைப் புள்ளையாய் இருந்தாலும் ஒரு வயசுக்கு மேல் தன் வேலை, தேவைகளைத் தானே செய்யப் பழக்கனும், பழகனும், பழக்கிக்கனும் செய்யனும். அப்படி செய்யலைன்னா…. அந்தப் பிள்ளை என்னைக்கும் அடுத்தவர்கள் கையை எதிர்பார்த்தே இருக்கும். இப்போ… இந்த அருண். இப்போ அம்மா கையை எதிர்பார்த்து இருக்கார். தாலி கட்டின மறுநாளிலிருந்து மனைவி கையை எதிர்பார்ப்பார்.”

“புருசன் பொண்டாட்டி கையை எதிர்பார்த்திருக்கிறது சந்தோசமான சமாச்சாரம்தானே ? ”

“இது சந்தோசமான சமாச்சாரமில்லே. தப்பு! பெண்ணுக்குத் தலைவலி. தொல்லை.! தன் சுமைக்கு மேல் இன்னொரு சுமையையும் சுமக்க… பெண் என்ன பொதிமாடா ? இன்னைக்கு அப்படிப்பட்ட சூழல்தான் சரியா ? கணவன் மனைவி வேலைக்குப் போய் வீடு திரும்பியதும்….புருசன் தொல்லை இல்லாமல் ஓய்வெடுக்க……மனைவி அலுவலக வேலை, வீட்டு வேலை, புருசன் வேலை எல்லாத்தையும் செய்யிறது எப்படி சரி ? எவ்வளவு கஷ்டம் !”

“புரியுது புரியுது…” உணர்ந்து…. புருசன் பொண்டாட்டி இருவரும் சேர்ந்தே தலையாட்டினார்கள்.

“அப்புறம்….. இந்த மாதிரி ஆட்களுக்குச் சொந்தமாய் யோசிச்சு முடிவெடுக்கும் சுயபுத்தி இருக்காது. சொல் புத்திதான் இருக்கும். அப்பா ! சொந்த புத்தியில் செயல்பட்டு தன் தேவைகளைத் தானேப் பார்த்து முடிக்கும் திறனோடு ஆம்பளை ஆம்பளையாய் இருக்கனும். பொம்பளை பொம்பளையாய் வளரனும். இதுதான் சரி. இந்த விசயத்தில் அவர் தள்ளுபடி. நான் நிராகரிக்கிறேன். வேணாம்ன்னு சொல்லிடுங்க.” தீபிகா கறாராய்ச் சொல்லி அவர்களை ஏறிட்டாள்.

திருவேங்கடம், தங்கம்மாளுக்கு எல்லாம் புரிந்தது.

ஒரு சின்ன விசயம். இந்தக் காலத்துப் பெண்கள் எவ்வளவு நுணுக்கமாய் யோசித்து தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்து வாழ்வைத் திடப்படுத்திக் கொள்கிறார்கள்.! |என்று வியந்து ஆச்சரியப்பட்டத் திருவேங்கடம்….. அடுத்த வேலையாய் பெண் சொன்னதைச் செய்ய….. தன் கைபேசியை எடுத்தார். 

தொடர்புடைய சிறுகதைகள்
கலகலப்பாய் இருக்க வேண்டிய வீடு நிசப்தம். மயான அமைதி . எல்லோர் முகங்களிலும் கலவரம். மணப் பெண்ணான சிம்ரனுக்குள் தீவிர யோசனை. எல்லாம் மாப்பிளையாக வந்த திவாகர் போட்ட போடு. அவன் இப்படி எல்லோரையும் கதிகலங்க வைப்பானென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. எல்லாம் சிறிது நேரத்திற்கு ...
மேலும் கதையை படிக்க...
சென்னையில் நண்பனின் மகளை ஐந்து வருடங்களுக்குப் பிறகு சந்திப்போமென்று கனவிலும் நினைக்கவில்லை கதிரவன். சின்னக்குழந்தையாய்க் கைகளில் தவழ்ந்தவள். அப்புறம் வளர்ந்து உருமாறி, படித்து.... திருமணத்தி;ற்குப் பிறகு அப்பன் சாவில் சந்தித்ததோடு சரி. இதோ உஸ்மான் சாலை ஒரம் நடந்து செல்ல...அருகில் ஊர்ந்து உரசியபடி ...
மேலும் கதையை படிக்க...
வாசலில் வாழை மரங்கள். மாலையும் கழுத்துமாக கூப்பிய கரங்களுடன் மணமக்கள் சிரித்தப்படி ஜோடியாக பெரிய டிஜிட்டல் பேனரில் வருகிறவர்களை வரவேற்பதுபோல் நின்றார்கள். முகப்பில்...சந்தனம், ரோஜாப்பூ, கற்கண்டு தட்டுகளுடன் அழகு வரவேற்பு மங்கைகள் என்று அந்த திருமண மண்டபம் வழக்கமான களைகட்டுதல்களுடன் இயங்கிக் கொண்டிருந்தது. முகூர்த்த ...
மேலும் கதையை படிக்க...
செய்தியைக் கேள்விப் பட்டதுமே சித்ராவிற்குக் கண் மண் தெரியாத ஆத்திரம். புறப்பட்டு வந்து ஆளை அந்த கோலத்தில் பார்த்ததும் அது இன்னும் அதிகரித்தது. வீட்டிற்குள் நுழைந்த அடுத்த விநாடி, ''அம்மா !'' அதிரடியாய்க் கத்தினாள். ''என்ன ? '' அலமேலு அமைதியாய்த் திரும்பினாள். ''உனக்கு இது ...
மேலும் கதையை படிக்க...
என் மனைவி சோறு போட... அடுப்பங்கரையில் என் தம்பி சேகர் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போதுதான். .. வாசலில் நின்ற அம்மாவைப் பார்த்து..... '' எங்கேடி அந்த தண்டச்சோறு. ..? '' என்று கோபாவேசமாகக் கேட்டுக் கொண்டே உள்ளே வந்தார் அப்பா. '' ஏன். ..? என்ன. ...
மேலும் கதையை படிக்க...
சிம்ரன்
சம்பாதிப்பு……!
புதுப் பாதை..!
அம்மா…! – ஒரு பக்க கதை
சக்கரம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)