இந்தியன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 6,070 
 

இது விஷப் பரீட்சை என்று எனக்குத் தெரியும். கரேனிடம் வேண்டாம் என எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அவள் பிடிவாதம் பிடித்தாள்.

” கண்டிப்பா நாம நியுஜெர்ஸியிலிருக்கும் உன்னோட அண்ணன் குடும்பத்தோட ஒரு வாரம் தங்கியிருக்கப் போறோம். இந்தியக் குடும்பப் பழக்க வழக்கங்களை எல்லாம் நான் கத்துக்கப் போறேன். அப்புறம்தான் நம்ம கல்யாணம். அப்பதான் உங்க அம்மா அப்பாவுக்குப் பிடிச்ச பொண்ணா என்னால நடந்துக்க முடியும். ”

உன்னுடைய வெள்ளைத் தோலையும், பழுப்புக் கூந்தலையும், அதை நீ அலட்சியமாய்க் கோதுவதையும், நீலக் கண்களையும், அரேபியக் குதிரை மாதிரியான உயரத்தையும், விட்டேத்தியாய் அணியும் குட்டைப் பாவாடையையும், அபாயமாய் அவிழ்ந்து கிடக்கும் சட்டையின் மேல் பொத்தான்களையும் பார்த்தே கோணங்கிப்பட்டியிலிருக்கும் அம்மாவும், அப்பாவும் மிரளப் போகிறார்கள். ஒரு புயலே வெடிக்கப் போகிறது. அத்தை பெண் அம்சவேணி கண்ணைக் கசக்கப் போகிறாள். அரளி விதை ஸ்டண்ட் கூட அடிக்கலாம். மாமா கோஷ்டி அரிவாள் கம்புகளோடு வீட்டுக்கு வந்து ஒரு பாட்டம் மிரட்டிப் பார்ப்பார்கள். இந்த லட்சணத்தில் அவர்களுக்குப் பிடித்த பொண்ணாய் நடந்து கொள்ள வேண்டுமாம்.

” கரேன், அதைப் பத்தியெல்லாம் நீ கவலைப்பட வேண்டாம். நாம இந்தியாவுக்கு மின்னல் விசிட் அடிச்சிட்டு உடனே வந்துரப் போறோம். ”

” நோ. இந்தியக் கலாசாரத்தையும், குடும்பப் பிணைப்பையும் பத்தி நிறையப் படிச்சதில் அது பிடிச்சுப் போய்த்தான் உன்னை நான் காதலிச்சேன். வருஷத்தில் அட்லீஸ்ட் ரெண்டு தடவை சம்மர் வெகேஷனிலும், வின்ட்டர் ஹாலிடேசிலும் உன்னோட அம்மா அப்பாவோட போயிருக்கப் போறோம். ”

அன்றாடம் ராத்திரிகளில் குளித்து, காலையில் பல்லை மட்டும் விளக்கி, சென்ட் அடித்துக் கொண்டு ஆபிசுக்குப் போகும் அமெரிக்கப் பெண்ணே, மார்கழி மாசம் நாலு மணிக்கு எழுந்து பச்சைத் தண்ணீரில் குளித்து விட்டு திருப்பாவை திருவெம்பாவை பாடியபடி கோயிலுக்குப் போகச் சொன்னால் போவாயா? அதெல்லாம் படிப்பதற்கு நன்றாகத்தான் இருக்கும். உனக்கும் அதற்கும் ரொம்ப தூரம். என்னால் மனசுக்குள்தான் நினைத்துக் கொள்ள முடிந்தது. வெளியே சொன்னால் சட்டென்று இந்தக் காதலையே டிவோர்ஸ் பண்ணி விடுவாள்.

கலாசாரத்தையும், குடும்பப் பழக்கங்களையும் கற்றுக் கொள்ள என்னுடைய ஒன்று விட்ட அண்ணன் ராகவனைத் தேர்ந்தெடுத்ததுதான் உச்சபட்சக் கொடுமை. கல்யாணம் பண்ணிக் கொள்ள முடிவெடுத்த பின், போன வாரம் ஒரு நாள், ” உன் நெருங்கின உறவினர்கள் யாரும் இங்கிருக்கிறார்களா ? ” என்று கரேன் கேட்ட போது, ” யாருமில்லை. ” என்று சொல்லியிருக்கலாமோ என்று இப்போது க.கெ.சூ.ந பண்ணுகிறேன்.

ராகவன் ஒரு விநோதமான ஆசாமி. அவனை விதிவசத்தால் சந்திக்க நேர்ந்த என் நண்பர்கள் அத்தனை பேருமே உடனடியாய் போன் பண்ணி, ” இந்த மாதிரி ஒரு ஆளை இது வரைக்கும் நான் பார்த்ததே இல்லேடா. ரொம்பக் கஷ்டம். ” என்று ஒரு மணி நேரமாவது புலம்பித் தீர்த்து விடுவார்கள். கரேன் அவனுக்கு போன் பண்ணி பேசியும் விட்டாள். ” பேஷா வந்துடுங்க. வெதர் நல்லா இருக்கு. நாங்க நயாகரா பிளான் எல்லாம் போட்டு வெச்சிருந்தோம். நீங்களும் ஜாயின் பண்ணிக்கலாம். ” என்று கரேனை வரவேற்று என் வயிற்றில் சிட்ரிக் அமிலத்தைக் கரைத்து விட்டான்.

ராகவன் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்த ராத்திரியே பிரச்சனை ஆரம்பித்தது. ஏசி வேலை செய்யவில்லை. வேர்த்து விறுவிறுத்துப் போய் கதவைத் தட்டினாள் கரேன். நான் ரொம்ப நேரம் யோசித்து விட்டு வேறு வழியில்லாமல் ராகவனின் அறைக் கதவில் ஓசை எழுப்ப – மிஸஸ் ராகவன் தூக்கக் கலக்கத்துடன் கதவைத் திறந்து, ” ராகவ், உங்க தம்பி கூப்பிடறார். ” என்றாள். நல்லி குப்புசாமி அண்ட் கோவில் வாங்கின ஒற்றை வேஷ்டியை இறுக்கிக் கட்டிக் கொண்டே வெறும் உடம்போடு வெளியே வந்தான் ராகவன்.

” ஸாரி, ஏசி வேலை செய்யலை. என்னால தூங்கவே முடியலை. ” என்றாள் கரேன். தஸ்புஸ்சென்று மூச்சு விட்ட படி தவித்தாள். டிஷர்ட்டை எந்த நிமிஷமும் கழற்றி வீசி விடுவாளோ என்று நான் பயந்தேன்.

” டேபிள் ஃபேன் போட்டு விட்டேனே? ” என்றான்.

” அதுல வர்ற காத்து பத்தலை. ரொம்ப குட்டி ஃபேன். ஏசியில் ஏதாவது ப்ராப்ளமா? ”

” அதெல்லாம் ஒண்ணுமில்லை. கரண்ட் பில் எக்கச்சக்கமா வருது கரேன். குடும்பம் குழந்தைன்னு ஆனப்புறம் செலவெல்லாம் முடிஞ்ச வரைக்கும் கன்ட்ரோல் பண்ணணும் பாரு. அதான் நான் ஏசி போடறதில்லை. ஒண்ணு பண்றேன். எங்க ரூமிலிருக்கும் ஃபேனையும் உனக்குத் தரேன். ” என்று அவன் சொன்னதை கரேன் அவ்வளவாய் ரசிக்கவில்லை.

நான் குறுக்கிட்டேன். ” ராகவன், இந்த ஒரு வாரத்துக்கு காசைப் பத்தி கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக்கறேன். ஏசியைப் போடு. ”

” இடியட். யார் செலவு பண்ணினா என்னடா? வெட்டிச் செலவு பண்றது எனக்குப் பிடிக்காது. உன் கிட்டே நிறைய காசு இருந்தா என் கையில் குடு. கரேன், இவன் பணத்தைத் தண்ணி மாதிரி செலவழிப்பான். கல்யாணத்துக்கப்புறம் நீதான் அவனைக் கன்ட்ரோல் பண்ணணும். ” என்று அவளுக்கு அர்த்த ராத்திரியில் அறிவுரை வேறு சொல்லி கடுப்படித்தான் ராகவன். நான் ஏசி சுவிட்சை தேடிப் போய் அழுத்த – ஒரு எம்.என் நம்பியார் சிரிப்புச் சிரித்தான். ” இப்படி கன்ட்ரோல் பண்ண முடியாம ஏசியைப் போட்டுரக் கூடாதுன்னுதான் நான் �ப்யூஸைக் கழட்டி தலையைச் சுத்தி ட்ராஷ்ல வீசிட்டேன். ஏசியை அணைச்சுட்டு ஃபேன் உபயோகிச்சா ஒரு நாளைக்கு குறைஞ்சது ரெண்டு டாலர் நாப்பது சென்ட்ஸ் மிச்சம் பண்றோம் தெரியுமா? ”

அவன் ரூமிலிருந்த மின் விசிறியையும் எடுத்து வந்து கரேனின் படுக்கைக்கு நேரே ஏதோ சினிமா ஷுட்டிங்கில் புயல் சீன் எடுக்கிற மாதிரி வைத்துக் கொடுத்து விட்டுப் போனான். அதற்கப்புறம் புழுக்கத்தில் கசங்கிப் போய் அவனுடைய மூன்று வயதுக் குழந்தை அழும் சத்தம் ராத்திரி பூராவும் நை நை என்று கேட்டுக் கொண்டே இருந்தது. அந்த திகில் இரவு தூக்கமில்லாமல் ஒரு வழியாய்க் கழிய – காலையில் பாத்ரூமிலிருந்து அலறிக் கொண்டே ஓடி வந்தாள் கரேன். ” ராகவ், பாத்ரூமில் பேப்பர் டவல் தீர்ந்துருச்சு போல. ”

இப்போது ராகவனிடமிருந்து பிரகாஷ்ராஜ் சிரிப்பு. ” இருந்தால்தானே, தீர்ந்து போறதுக்கு. நான் பேப்பர் டவல், நாப்கின் எல்லாம் யூஸ் பண்றதில்லை. வாங்கி வெக்கறதுமில்லை. ”

அவனை முறைத்தேன். ” திஸ் ஈஸ் டூ மச். உன் வீட்டுக்கு வர்றவங்களுக்காகவாவது நீ வாங்கி வெக்கணும். ”

” உள்ளே சொம்பு வெச்சிருக்கேன். டேய், கரேனுக்கு சொல்லிக் குடுடா. ” என்று என்னைப் பார்த்து கூலாகச் சொன்னான். ” இந்தியாவில் என்னிக்காச்சும் நாம இந்தக் கண்றாவியெல்லாம் யூஸ் பண்ணியிருக்கமா? யு நோ வாட் கரேன்? பேக் இன் இண்டியா, இன் மோஸ்ட் ஆ�ப் தி வில்லேஜஸ் வி டோன்ட் ஹேவ் பாத்ரூம் ஆர் டாய்லெட். தேர் ஆர் ஸம் ஓப்பன் ஸ்பேஸஸ்… ” அவன் வாயைப் பொத்தி அந்தப் பக்கம் கூட்டிப் போனேன்.

கல்யாணம் ஆன பிறகு மாறி விடுவான் என்று நினைத்திருந்தேன். ஆனால் படுபாவி ராகவன் மனைவியையும் சேர்த்து மாற்றி விட்டான். அமெரிக்காவில் அளவாய் நாலே பாத்திரங்களோடு அடுப்பில் கரித் துணியைப் பிடித்துக் கொண்டு சமைக்கும் ஒரே பெண்மணி மிஸஸ் ராகவன். வீட்டில் மினரல் தண்ணீரும் இல்லை. குழாயில் �பில்டர் மாட்டவும் இல்லை. குடும்பமே தண்ணீரைக் குழாயில் பிடித்து அப்படியே குடிப்பதைப் பார்த்து அரண்டு போனாள் கரேன்.

” கரேன், ஒரு பொருளை வாங்கறதுக்கு முன்னால நான் ஒரே ஒரு கேள்வி என்னைக் கேட்டுப்பேன். இது இல்லாம என்னால உயிர் வாழ முடியுமா, முடியாதா? முடியும்ன்னு பதில் வந்தா அந்தப் பொருளை வாங்க மாட்டேன். நான் தியாகம் பண்ணின அந்தப் பொருளுக்கான காசை என்னோட அக்கவுண்ட்டில் வரவுக் கணக்கில் எழுதி வெச்சிருவேன். இதான் என் பாலிஸி. ” என்று தத்துவம் உதிர்த்து அவளை அதிர்ச்சி அடைய வைத்தான்.

அதற்கப்புறம் காரிலும் ஏசி போடாமல் ஜன்னலைத் திறந்து வைத்துக் கொண்டே நயாகரா கூட்டிப் போய் பெட்ரோல் மிச்சம் பண்ணினதில், அங்கே இருபது டாலர் குறைத்துக் கேட்டு ஹோட்டல் ஹோட்டலாய் அலைந்ததில்… என் தலையெழுத்தை யாரால் மாற்ற முடியும். இந்தியக் குடும்பஸ்தர்களின் ஒட்டு மொத்தப் பிரதிநிதி ராகவன்தான் என்று தப்பாய் நினைத்துக் கொண்ட கரேன் பொறுமை இழந்து நயாகராவிலிருந்து திரும்பும் வழியிலேயே, ” குட்பை. ” சொல்லி விட்டுப் போயே விட்டாள்.

கரேனுடனான காதல் அல்பாயுசில் போய் விட்ட கவலையில் அன்றைக்கு ராத்திரி தூக்கமே வரவில்லை. புரண்டு புரண்டு படுத்த போது ஹாலில் பேச்சு சத்தம். கதவருகே வந்து நின்றேன். ராகவன் அவன் மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்தான். ” பாவம், நம்மால அவன் காதல் முறிஞ்சு போச்சு. இனிமே அந்த கரேன் இவன் மூஞ்சியக் கூட திரும்பிப் பார்க்க மாட்டா. ”

அவன் மனைவி சொன்னாள். ” அதைப் பத்தியெல்லாம் கவலைப்படாதிங்க. அப்படி அவசரப்பட்டு ஒருத்தி போனா நஷ்டம் அவளுக்குத்தான். உங்க தம்பிக்கு இல்லை. மத்தவங்களுக்காக நீங்க உங்க பாலிஸியை மாத்திக்க வேண்டிய அவசியமில்லை. எனக்கு தூக்கம் வருது. சீக்கிரம் கணக்கை முடிங்க. ”

” சீனிவாச சித்தப்பாவோட ஹார்ட் சர்ஜரிக்கு ரெண்டு லட்சம். கணேஷ்க்கு காலேஜ் கட்டணம் முப்பதாயிரம். அப்புறம் அந்த குமாரபாளையம் கிராமத்தில் சமூகசேவை பண்றாங்களே அந்தப் பசங்களோட சங்கத்துக்கு பத்தாயிரம். புலிய குளம் பிள்ளையார் கோயிலில் வெள்ளிக்கிழமை அன்னதானம் வெக்கச் சொல்லி இந்த ஐநூறு டாலர் போட்டுரலாம். இந்த மாசம் இவ்வளவுதான் முடியும். ” ராகவன் செக் எழுதி எழுதித் தர, அவன் மனைவி கவரில் முகவரி எழுதி, ஸ்டாம்ப் ஒட்டி வைத்துக் கொண்டிருந்தாள்.

– மே 27, 2004

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *