இந்தத் தடவையாவது…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 10, 2014
பார்வையிட்டோர்: 22,160 
 

“ கொஞ்சம் இருண்ணே . இன்னும் ஒரு டிக்கெட் வரலை . ரிசர்வ் பண்ணது . அஞ்சு நிமிஷம் இருக்கில்ல . பார்த்துட்டுப் புறப்படுவோம் . “ என்றார் நடத்துனர் .

நடத்துனர் அனுமதித்த ஐந்து நிமிடம் முடிந்ததும் ஓட்டுனர் வண்டியை பின்னால் ஓட விட்டு நகர்த்தினார் .
அந்த இளைஞன் ஒரு பெட்டியைத் தூக்கியவாறு திருவள்ளுவரை நோக்கி ஓடி வந்தான் . பெட்டி கனமானதுதான் .

பஸ்ஸில் ஏறியவன் மருதுவின் பெட்டிக்கு அருகில் காலியாக இருந்த இடத்தில் பெட்டியை வைத்தான் . மருதுவின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு மருதுவைப் பார்த்துப் புன்னகைத்தான் .

மருதுவின் பார்வை அவன் பெட்டியின் மீது பாய்ந்தது . இரண்டு பெட்டிகளும் ஒரே மாடல் . ஒரே கலர் . நடுவில் கூடுதல் பூட்டு வைத்த மாடல் . இரண்டிலும் ஒரே மாதிரி பளபளா .

மருது தீர்மானித்து விட்டான் . இந்த தடவை எப்படியாவது பெட்டியை மாற்றிவிட வேண்டும் .

நடத்துனர் எல்லா டிக்கெட்டுகளையும் பார்த்துவிட்டு விளக்கை அணைத்ததுமே பக்கத்து ஸீட் வாலிபன் சாய்ந்து தூங்கி விட்டான் .

மருதுவுக்குத் தூக்கம் வரவில்லை . சிந்தனை முழுவதும் பெட்டியை மாற்றுவதிலேயே இருந்தது .
பெட்டியை மாற்றும் சிந்தனைகளில் மூழ்கியவாறே தூங்கி விட்டான் மருது .

தூக்கம் கலைந்த போது திருவள்ளுவர் நின்றிருந்தார் . எல்லோரும் இறங்கிக் கொண்டிருந்தார்கள் . பக்கத்து ஸீட் வாலிபன் ஏற்கனவே இறங்கி விட்டிருந்தான் .

மருது தன் பெட்டியை எடுத்துக் கொண்டான் . அவன் திருமணத்திற்கு சென்னை நண்பர்கள் பரிசாகக் கொடுத்திருந்த அந்த பெட்டியில் நடுப் பூட்டு ஆரம்பத்தில் இருந்தே சரியாக வேலை செய்யவில்லை . அதன் பின் நாலைந்து தடவை சென்னை வந்தும் நேரம் கிடைக்காமல் போய் விட்டது .

இந்தத் தடவை காலையிலேயே வந்த வேலையை முடித்து விட்டு மத்தியானம் எப்படியும் அந்த கடைக்குப் போய் கியாரண்டி கார்டையும் , பில்லையும் காண்பித்து வேறு பெட்டி மாற்றிக் கேட்க வேண்டும் என்று எண்ணியவாறு மருது தன் பெட்டியோடு லாட்ஜ் நோக்கி நடந்தான் .

– 02-09-1993 தேதியிட்ட குமுதம் வார இதழில் வெளிவந்த ஒரு பக்கக் கதை .

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *