Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

இது என்ன வாழ்க்கை!

 

“ஐயோ, அம்மா, யாரும் இல்லியா. வலி தாங்க முடியலையே, யாராவது வாங்களே”

கலையரசி பிரசவவலி தாங்க முடியாமல் கத்தித் துடித்துக் கொண்டிருந்தாள்.

அவள் போட்ட அலறல் அந்த ஆஸ்பத்திரி வார்ட்டை மாத்திரமன்றி வெளியிலும் கேட்டு பலரையும் அதிரவைத்தது. அது வலியால் துடிக்கும் ஒரு குரலாக மாத்திரமன்றி தனக்கு உதவ யாருமே இல்லையே என்ற அவலக் குரலாகவும் இருந்தது.

அவளுக்கு பிரசவ வலியேற்பட்டபோது அவளது தந்தையும் தாயும் தான் அந்த ஆஸ்பத்திரிக்கு அவளை அழைத்து வந்து சேர்த்தார்கள். அவளது கணவன் செந்தூரன் வெளிநாடொன்றுக்கு வேலைக்குப் போய் கடந்த ஆறுமாத காலமாக அஞ்ஞாத வாசம் ஆகிவிட்டான். கிடைத்த தகவல்களின்படி அவன் வேலை பார்த்த நிறுவனத்தில் ஏற்பட்ட தகராறு ஒன்று காரணமாக மத்திய கிழக்கு நாடொன்றின் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான் என்பது மட்டும் பின்னர் தெரியவந்தது.

கலையரசி அவள் பள்ளிக்கூட காலத்தில் இருந்தே அவர்களின் பக்கத்துவீட்டில் வசித்து வந்த சந்திரமோகனைக் காதலித்து வந்தாள். ஆரம்பத்தில் சந்திரமோகனின் தந்தையும் அவளது தந்தையும் நல்ல நண்பர்களாகத்தான் இருந்தார்கள். பின்னர் அவர்கள் மத்தியில் சில கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு அது பெரிதாகி, சண்டை சச்சரவில் வந்து முடிவடைந்தது.

காலப்போக்கில் அவர்கள் இருவரும் எலியும்– பூனையும் போல் பகைவர்கள் ஆனார்கள். ஆரம்பத்தில் அவர்கள் நண்பர்களாக இருந்தபோது கலையரசி – சந்திரமோகன் காதலை அறிந்ததும் கண்டும் காணாதவர்களாகவே இருந்தார்கள்.

அவர்கள் பின்னர் திருமணம் செய்து கொள்வதிலும் அவர்களுக்கு ஆட்சேபனை இருக்கவில்லை. ஆனால் அவர்கள் எப்போது ஒருவருக்கு ஒருவர் எதிரிகள் ஆனார்களோ அன்றிலிருந்து தம் பிள்ளைகளைக் கண்டித்து வைத்தனர். அவர்கள் இருவரும் சேர்ந்து பழகக்கூடாதென தடை விதித்தனர். இருந்தபோதும் அவர்கள் இருவரும் களவாகப் பழகிவந்தனர்.

இவர்களின் கள்ளக்காதல் தொடர்வதனை அறிந்துகொண்ட இருதரப்பு பெற்றோர்களுமே கொதித்தெழுந்தனர். கலையரசியின் தந்தைதான் முதலில் முந்திக் கொண்டார். அவர் கலையரசியை கட்டாயப்படுத்தி தனது தூரத்து உறவினனான செல்வராஜாவின் மகனான செந்தூரனுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

அவர்கள் திருமணம் செய்து கொண்ட சில மாதங்களிலேயே அவள் முன்பு சந்திரமோகன் என்பவனுடன் தொடர்பு வைத்திருந்தாள் என்ற விடயம் செந்தூரன் வீட்டாருக்கும், செந்தூரனுக்கும் தெரிய வந்து விட்டது. அந்த நாளில் இருந்தே அவர்களுக்கிடையில் மனஸ்தாபம் வந்து குடிகொண்டு விட்டது.

வீட்டில் ஏற்பட்ட சின்னச் சின்ன சச்சரவுகளின் போதெல்லாம் கலையரசியின் பழைய காதலை சுட்டிக்காட்டி கணவனும் மாமியாரும் அவளை மிகக் கொச்சைப் படுத்தித் திட்டித் தீர்த்தனர். கலையரசி கொஞ்சம் கொஞ்சமாக மிக அந்தகாரமான நரகத்துக்குள் தள்ளப்பட்டுக்கொண்டிருந்தாள். அந்த வீட்டில் கணவன், மனைவி, மாமியார் , உறவுகள் மிகவும் சீரழிந்து போயிருந்த நிலைமையில்தான் அவள் கர்ப்பம் தரித்திருக்கின்றாள் என்ற விடயம் அதற்கேயுரிய இயல்புகள் வாயிலாக அவளுக்கும் வீட்டாருக்கும் தெரியவந்தது.

அப்போது அவள் மூன்றுமாத கர்ப்பிணியாக இருந்தாள்.

இந்த விடயம் தெரிந்ததும் அவர்கள் சந்தோஷப்படவில்லை. மாறாக அவள் மேல் சந்தேகம் கொண்டனர். அவள் வயிற்றில் வளரும் குழந்தை தன்னுடையதல்லவென செந்தூரன் சத்தம் போட்டுக் கத்திக்குளறினான்.எல்லாவற்றுக்கும் கலையரசி மெளனம் ஒன்றையே பதிலாக வைத்திருந்தாள். அவளது எல்லையற்ற பொறுமை அவர்களை மேலும் மேலும் எரிச்சலடையச் செய்தது. ஒருமுறை பொறுமை எல்லை கடந்து விட்ட அவளது மாமியார் அகப்பையை பழுக்கக்காய்ச்சி “அவளது வயிற்றில் வளரும் குழந்தை யாருடையது” என்று கேட்டு சூடு வைத்தாள்.
இத்தகைய ஒரு நிலைமையில் தான் அவளைப்பார்க்க அவளது தந்தை வந்தார். அவர் தன் மகளுக்கு வாய்த்திருக்கும் வாழ்க்கையை எண்ணி மிகவருத்தப்பட்டார்.

அதற்கு அவரும் ஒரு காரணம் என்று உணர்ந்தபோது அவரது தலை சற்றே சுழல்வது போன்ற உணர்வு ஏற்பட்டது. அவள் தனது சம்பந்தி வீட்டாரிடம் சண்டைபிடித்து கலையரசியை தன்னுடன் அழைத்துப்போனார். அதன் பிறகுதான் செந்தூரன் வெளிநாட்டு வேலை கிடைத்து வெளிநாட்டுக்குப் போய்விட்டான்.

அன்றிலிருந்து கலையரசி அவள் தாய் வீட்டிலேயே தங்கி விட்டாள். அவள் தன் மாமியார் வீட்டில் எப்படியெல்லாம் கொடுமை செய்தார்கள் என்பதனை தன் தாய் தந்தையரிடம் படிப்படியாக எடுத்துக்கூறினாள். அவளது தந்தை தான்செய்துவிட்ட தவறுக்காக வருத்தப்பட்டு மன்னிப்புக் கேட்டார். இப்போது அவர்களின் பிரச்சினையெல்லாம் எவ்வாறு நல்லபடியாகக் குழந்தையைப் பெற்றெடுப்பது என்பது தான்.

அவள் அந்த ஆஸ்பத்திரிக்குச் சென்று தன்னைக் கர்ப்பிணியாகப் பதிவு செய்துகொண்டு வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்கு தன்னை
ஆட்படுத்திக்கொண்டாள். வைத்தியர்கள் குறிப்பிட்டபடி மருந்துகள், விட்டமின்களை சாப்பிட்டு வந்தாள். உரிய தினத்தில் கிளினிக் சென்று
வந்தாள். இப்போது தான் அவள் கொஞ்சம் நிம்மதியாக இருந்தாள். ஒன்பது மாதமும் பதினெட்டு நாட்களும் கடந்துவிட்ட நிலையில் அவளது பிரசவத்துக்கான திகதி ஒன்றை குறிப்பிட்டு வந்து உரிய நேரத்தில் ஆஸ்பத்திரியில் சேருமாறு கூறி விட்டார்கள். அவள் சாதாரண உடல் நிலையிலேயே ஆஸ்பத்திரியில் சேர்ந்தபோதும் இறுதியாக அவளை பரிசோதனை செய்த டொக்டர் குழந்தை அவள் வயிற்றில் தலைகீழாக மாறியுள்ளதால் அவளுக்கு சிசேரியன் சத்திரசிகிச்சை மூலமே குழந்தையை வெளியில் எடுக்க வேண்டுமென்றும் அதற்கான பணம் இரண்டு
இலட்சம் ரூபாவை உடனே அவள் கட்டினால்தான் அவளுக்கு சத்திரசிகிச்சை செய்யலாம் என்றும் கூறிவிட்டார்கள்.

அப்போது தான் கலையரசியின் தந்தைக்கு தனது கையறு நிலைமை புரிந்தது.

அவசரத்துக்கு அடகு வைக்கவென வீட்டில் நகை நட்டுக்களோ கிடையாது. இந்த நிலையில் வேறு ஆஸ்பத்திரிக்கும் போகவும் முடியாது. அவர் தலையில் கை வைத்தவாறே கவலையுடன் வெளியில் சென்றார்.

இது இப்படி இருக்க, கலையரசியை தன் உயிரினும் மேலாகக் காதலித்த சந்திரமோகன் அவளுக்கு ஏற்பட்ட நிலையால் மனம்நொந்து பைத்தியக்காரன் போலானான். அவன் அவ்வவ்போது கலையரசியின் நிலையை விசாரித்து தெரிந்து கொண்டான். அன்று அவளை பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதித்திருக்கிறார்கள் என அறிந்து அவளைப் பார்க்கப் போனான்.

அப்போதுதான் அவளின் பரிதாபகரமான நிலையை அறிந்து அந்த இரண்டு இலட்ச ரூபா பணத்தை வங்கியில் இருந்து எடுத்து கட்டினான்.

உடனேயே அவளுக்கான சத்திரசிகிச்சைக்கான ஏற்பாடுகள் இடம்பெற்றன. அவளுக்கு ஒரு அழகிய ஆண் மகவு கிடைத்தது. அதனை கையில் தூக்கி கொஞ்சும் முதலாவது பாக்கியசாலியாக சந்திரமோகன் இருந்தது தொடர்பில் அவன் பெருமகிழ்ச்சியடைந்தான். 

தொடர்புடைய சிறுகதைகள்
பெருமழையாக இல்லாவிட்டாலும் ஒரு மனிதனை தொப்பையாக நனைத்து விடும் அளவுக்கு மழை பெருந்தூறலாகத் தூறிக் கொண்டிருந்தது. அதனுடன் சேர்ந்து மெல்லிய ஈரக்காற்றும் வீசியதால் தேகத்தில் நடுக்கம் ஏற்படுத்தும் அளவுக்கு குளிர் காணப்பட்டது. அந்திச் சூரியனைக் கண்டு சில நாட்கள் ஆகியிருந்தன. தொடர்ச்சியான மழை ...
மேலும் கதையை படிக்க...
அப்பா, அவருக்குக் கிடைத்த சிறிய சம்பளத்தில் அம்மாவுடன் இணைந்து எங்களது எல்லா தேவைகளையும் கவனித்துக் கொண்டதுடன் தான தர்மங்களும் செய்வார். அவர் தனக்கென்று எதனையும் செய்வதில்லை. போட்டி போட்டுக் கொண்டு போலிம்களில் முன்செல்ல முனைந்ததில்லை. பஸ்ஸிலோ, கோச்சியிலோ பயணம் செய்த போது ...
மேலும் கதையை படிக்க...
சிவநேசன் நேசையா தன் வீட்டு வாசல் முற்றத்தில் கறுத்தக் கொழும்பான் மரத்துக்கு அடியில் போடப்பட்டிருந்த அந்த சிமெண்ட் பெஞ்சியில் அமர்ந்து கடுமையாக யோசித்துக் கொண்டிருந்தார் . பத்து வருடங்களுக்கு முதல் அவுஸ்ரேலிய நாட்டுக்கு சென்று குடியேறிவிட்ட அவரது மகனும் மகளும் அங்கேயே ...
மேலும் கதையை படிக்க...
1983, ஜூலை 29ஆம் திகதி. அந்த நாளை மறந்து விட வேண்டுமென்று எத்தனை தினங்கள் நான் நித்திரையின்றி உழன்றிருக்கின்றேன். என்னை, என் குடும்பத்தை சின்னாபின்னமாக சிதைத்த நாள். என் நெஞ்சைக் கீறி, என் கனவுகளைக் கலைத்து, என் கற்பனைகளை மண்ணோடு மண்ணாக்கி இப்போதும் ...
மேலும் கதையை படிக்க...
இந்த உலகத்தில் எல்லாரையும் விட எனக்கு ரொம்ப பிடித்தது அம்மாவைத் தான். அம்மா என்றால் எனக்கு அப்படியொரு கொள்ளைப் பிரியம். நான் தூங்கும்போது அம்மாவுடன் ஒட்டிக்கொண்டுதான் தூங்குவேன். அவளது முதுகுப்புறம் ஒட்டிக்கொண்டு, வலது கையால் அவள் வயிற்றை இறுகக் கட்டிக்கொள்வேன். சிலவேளை ...
மேலும் கதையை படிக்க...
இன்னும் எத்தனை நாள்…?
அப்பா
கறுத்த கொழுப்பான் மரத்தடியில்…
கருஞ் ஜூலையின் கொடும் நினைவுகள்
அன்பை பங்கு போடுபவர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)