இது அழகிகளின் கதையல்ல..!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 13, 2016
பார்வையிட்டோர்: 11,439 
 

‘ஒரு உறைக்குள்ள ரெண்டு கத்தி இருக்க முடியாதே. ஒரு எடத்தில ரெண்டு அழகிக இருக்க முடியாதே!’ -மணிகண்டன் சிரித்துக்கொண்டே சொன்னான். பேருந்தில் ஜன்னல் ஓர இருக்கையில் லலிதாவும் சுகன்யாவும் உட்கார்ந்திருந்தனர். சுகன்யா இறுகிய முகத்தில் இருந்து புன்னகையை உதிர்த்தாள். லலிதா, தூரத்தில் எங்கோ வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.

மணிகண்டன், சுகன்யாவைப் பார்க்கிறபோதெல்லாம், ‘அழகி எப்படியிருக்கிங்க?’ என்று கேட்பான். ‘அழகி’ படம் பார்த்துவிட்டு அழுத கண்களோடு திரையரங்கில் இருந்து வந்த அவளைப் பார்த்துக் கிண்டலடித்தான். அதன் பின் அவளைப் பார்க்கிறபோதெல்லாம் ‘அழகி’ என்று கூப்பிடுவது வழக்கமாகிவிட்டது. லலிதா அந்தக் கிராமத்தில் ஓரளவு லட்சணமானவள். எப்படியோ லலிதாவுக்கு சுகன்யாவைப் பிடிக்காமல் போய்விட்டது. ஒரே தெருவைச் சேர்ந்தவர்கள் என்றாலும் சரியாகப் பேசிக்கொள்ள மாட்டார்கள். முனியப்பன் கோயில் திருவிழாவில் சுகன்யா உடுத்தி வந்த சேலையைப் பற்றி லலிதாவிடம் கேட்டபோது, அது விலை உயர்ந்ததாகவும், சூரத்தில் இருந்து வந்த புடைவை என்றும் சொன்ன பிறகு, ஏனோ பொறாமை அவள் மனதில் விருட்சமாகிவிட்டது. திருவிழாவில் ராட்டனந்தூரி விளையாட்டில் அவளோடு விளையாடுவது பிடிக்கவில்லை. அதன் பின் பெரும்பான்மையான திருவிழாக்களிலும், கல்யாண விசேஷங்களிலும் அவள் அந்தப் புடைவையுடன் தென்பட்ட போதெல்லாம் லலிதாவுக்குப் பேசத் தோன்றவில்லை. அதுவே பெரிய இடைவெளி ஆகிவிட்டது.

இது அழகிகளின் கதையல்ல1

”புது இடத்துக்குப் போறீங்க. பாத்து ஒற்றுமையா இருங்க. ஒரே ஊர்க்காரங்கங்கிற பாசமாச்சும் இருக்கட்டும். ஆமா சுகன்யா, உங்கப்பா எதையோ பறிகுடுத்தவர் மாதிரி உட்காந்திருக்கார். நாலு வார்த்தை பேசிட்டு வாயேன்!”

”என்னத்தப் பேச… எப்பப் பாரு… கண்ணு கண்ணுனு கொஞ்சிட்டு இருப்பாரு. நான் என்ன சின்னக் கொழந்தையா? வேலைக்குப் போறன்னு சொன்னப்புறம் அசலூரு அது இதுனு மொகம் கோணிருச்சு. என்ன சமாதானம் சொல்றது? ‘போற எடத்திலே வாச்சா வாச்சதுதான்… ஏச்சா ஏச்சதுதான்’னு வேற சொல்றார்!”

”நானும் சொல்லியாச்சு. ராமசாமி அண்ணன் விலாவாரியா சொல்லியிருக்கார். ஏதோ நாலைஞ்சு வருஷம் வேலை பாத்தா பெரிய தொகை கெடைக்கும். கல்யாணத்துக்குப் பிரயோஜனம் ஆகும்னு… காதுல கேட்டுட்ட மாதிரி தெரியலே. எதுக்கும் பஸ் கௌம்பறதுக்கு முந்தி பேசிட்டு வாயேன்!”

சுகன்யாவின் அப்பா நசிந்திருந்த சால்வையைத் திரும்பத் திரும்ப இழுத்துவிட்டுக்கொண்டிருந்தார். வாயில் இருந்த பீடியின் புகை, லேசான பனியில் கரைந்துகொண்டிருந்தது. சுகன்யா, அவர் அருகில் சென்று மூட்டமாக இருந்த வானத்தைப் பார்த்தபடி நின்றாள்.

”மனசைப் போட்டுக் கொழப்பிக்காதீங்கப்பா…’

‘செரி… நீ தீர்மானம் பண்ணிட்டே…’

‘நான் மட்டுமா போறன்? இந்த ஊர்ல இதுவரைக்கும் 40 பேரு போயாச்சு; இப்போ 10 பேரு. எல்லாம் நல்லதாத்தா நடக்கும்.’

‘தனியாப் போற. அதுதா…’

‘எவ்வளவு பேரு போயிருக்காங்க! அங்கிருக்கிற ஹாஸ்டல் பத்தி எல்லாருந்தா சொல்றாங்களே… பாக்கலாம்.’

‘செரி… பாக்கலாம்…’

வேலைக்குப் போகிற இடத்தில் மூன்று வருடங்கள் இருந்தால், பெரிய தொகை கிடைக்கும். கல்யாணத்துக்கு ஆகும். அதற்கு சுமங்கலித் திட்டம், கண்மணித் திட்டம் என்றெல்லாம் பேர் சொல்லிக்கொண்டார்கள். கல்யாணத்துக்கு தங்கத் தாலியும், மொத்தமாக 30 ஆயிரம் பணமும் கிடைக்கும். டீன் ஏஜ் பெண்கள் மட்டுமே திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.

அப்படிப் போனவர்களில் நாலைந்து பேர் ஊருக்கே திரும்பவில்லை. டவுன்காரப் பசங்களை கல்யாணம் செய்துகொண்டு அங்கேயே இருந்துவிட்டார்கள். இரண்டு பேர் அவர்கள் போன நகரத்தின் ஓரச்சாலைகளில் பெட்ரோல் ஊற்றிக் கட்டைக்கரியாகச் செத்து அநாதைப் பிணமாகக் கிடந்தார்கள். காதல், கல்யாண விவகாரம், பாலியல் துன்புறுத்தல் என ஒவ்வொரு கட்டைக்கரிப் பிணத்துக்கும் பின்னால் ஒரு கதை இருந்தது. கடைசியாகக் கடத்திக்கொண்டு போகப்பட்ட நாலைந்து பெண்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. வடக்கில் இருக்கும் தீவிரவாதிகளின் ஆட்கள் கடத்திக்கொண்டுபோனதாகச் செய்திகள் கசிந்தன.

லலிதாவுக்கு சுத்த ஜாதகம்தான். ஆனால், கல்யாணம் கூடி வரவில்லை. கல்யாண செலவுக்கு எனக் கடைசியாக வந்த கொடுமணல் மாப்பிள்ளை வீட்டில் பணம் கேட்க, அவர்கள் நழுவிவிட்டார்கள்.

செத்துப்போன அம்மாவின் புற்றுநோய், எல்லா சொத்தையும் கரைத்துவிட்டு அவளை வேலைக்குப் போகவைத்தது. ஐந்து பவுனுக்குக் குறைவாக யாரும் பேச்சு எடுக்கவில்லை. லலிதாவுக்கு எல்லாம் தள்ளிக்கொண்டுபோனது.

லலிதா பேருந்துக்கு வருவதற்குக் கொஞ்ச நேரம் முன்னால், சுந்தரவடிவேல் வீட்டுக்கு வந்திருந்தான். அவன் கையில் இருந்த கவரில் சில புகைப்படங்கள் இருந்தன. முனியப்பன் கோயில் திருவிழாவில் சுந்தரவடிவேல் எடுத்த புகைப்படங்கள் அவை.

”இது எதுக்கு எங்கிட்டனு கொண்டுட்டு வந்தேன். எதுவும் தப்பாயிரக் கூடாது பாரு’ – ஜாதகம் கேட்பவர்களுக்குத் தர என்று புகைப்படங்கள் எடுத்திருந்தான்.

”மனசுக்குள்ள தொடச்செறியற மாதிரினு பண்றியாடா வடிவு!”

”அப்பிடித்தா வெச்சிக்கோ லலிதா. எதுக்கு பல பேருக்குச் சிரமம்னு…”

”ஆமா. போற எடத்திலே மூணு வருஷம் முடிச்சாத்தா, அந்தத் தாலியும், தங்கமும், பணமும் கெடைக்கும்!”

”அதிலேயாச்சும் வழி பொறக்கட்டும்!”

”அவனுக யாரு எங்க கல்யாணத்தை முடிவு பண்றதுக்குனு எரிச்சலா இருக்கு!”

”ஆமாமா… கையாலாகாத எரிச்சல்ல வர்ற கோபம் அது. கட்டுப்படுத்திக்கோ. பொழக்கிற வழியைப் பாரு.”

சுகன்யாவுக்கு தோஷ ஜாதகம். ராகு, கேது தோஷங்கள் அவளை அலைக்கழித்தன. எல்லாம் கூடிவருவதாக இருக்கும். அப்புறம் அது சரியில்லை, இது சரியில்லை என்று விலகிப்போய்விடும். எந்தக் காரணத்துக்காக செட் ஆகவில்லை என்று சரியாகத் தெரியாமல் போய்விடும். திருநள்ளாறு, கும்பகோணம் கோயில்கள், சோமனூர் குலதெய்வம் என எல்லா இடங்களுக்கும் போய் பரிகாரம் பண்ணிக்கொண்டு வந்தாயிற்று. எதுவும் அமையவில்லை. அம்மாவும் மகளும் கொஞ்ச நாள் பிரிந்திருக்க வேண்டும் என்று தென்னம்பாளையத்து ஜோசியக்காரன் சொல்லிவிட்ட பின்புதான், அவள் அப்பா இப்படி வெளியில் வேலைக்குப் போகச் சம்மதித்தார்.

திடுமெனப் பல மஞ்சள் நீர் திருஷ்டித் தட்டுகள் முளைத்துவிட்டன. ஆரத்தித் தட்டு விஷயத்தை யார் கிளப்பிவிட்டது என்று தெரியவில்லை. அவரவர் வீட்டுப் பெண்களுக்கு முன்பாக ஒரு தட்டு நீண்டது. இளஞ்சிவப்பு நிறத் தண்ணீரில் வெற்றிலைத் துணுக்குகள் மிதந்தன. வலது புறமும் இடது புறமுமாக மூன்று முறை சுற்றிவிட்டு வர்ண நீரை கால்களுக்குஅடியில் ஊற்றினார்கள். ‘என்னமோ வீர வெளையாட்டுக்குப் போற மாதிரி நமக்கு மரியாதை கிடைக்குது பாரேன்’

– நமுட்டுச் சிரிப்பு உரத்ததாக மாறிச் சிதைந்தது.

லலிதா வீட்டில் இருந்து யாரும் வரக் காணோம். சுகன்யா அக்காதான் லலிதாவையும் சேர்த்து நிற்கவைத்து ஆரத்தி எடுத்தாள். ஆரத்தித் தண்ணீரின் இளஞ்சிவப்பு நிறம் லலிதாவுக்கு கொஞ்சம் பயம் தருவதாக இருந்தது.

விஜயா, வெரசாகப் பேருந்தை நெருங்கிக்கொண்டிருந்தாள். அவள் கையில் தூக்கி வந்துகொண்டிருந்த கனத்த பை நழுவித் தரையில் விழுந்தது. விஜயா அதைத் தூக்கியபோது அதில் ஒட்டியிருந்த மண் தூசி பரப்பியது. பட்பட்டெனப் பட்டாசு வெடிக்கும் சத்தம் தொலைவில் எதிரொலித்துக்கொண்டிருந்தது.

”என்ன பேக் கைப்பிடி கிழிஞ்சுபோச்சு… எதுக்கு இத்தனை கனம்?”

”நாலஞ்சு வருஷம் இருக்கப்போறம்ல…’

”ஒண்ணாச் சேத்துக் கொண்டாந்தியாக்கும்” என்றபடி சுகன்யா அவளோடு ஒட்டி நடந்தாள். சுகன்யாவின் அப்பா உட்கார்ந்த பாறாங்கல்லில் இருந்து எழுந்து அவர்களைப் பார்த்தார். பட்டாசு சத்தம் திடுமெனக் கிளம்பி மறைந்தது.

”இன்னும் பட்டாசு வெடிக்கிறானுக…’

”நோம்பி இன்னும் நாலு நாளைக்கு இருக்கத்தானே செய்யும்.”

‘இன்னும் ரெண்டு நாள் கழிச்சு கௌம்பலாம்னு மணிகண்டன் அண்ணன்கிட்ட சொல்லிப் பாத்தாச்சு. கேக்கலே… கௌம்பு கௌம்புனு அவசரம். வுட்டா பட்டாசைக் கையில் இருந்து புடிங்கிப் போட்டுட்டு ‘வா’னு தரதரனு இழுத்துட்டுப் போயிருவாருபோல.’

‘அவர் அவசரம் அவருக்கு… அய்… என்ன கண் புருவமெல்லா செதுக்கியிருக்கே… எங்க போனே?’

‘நானே பண்ணிட்டேன். புது ஊருக்கு, புது எடத்துக்குப் போறமில்ல… கொஞ்சம் நல்லா போலாம்னு…’

‘ஜமாயி விஜயா…’

பேருந்துக்குள் கசகசவெனக் குரல்கள் கிளம்பி நிறைந்தன. லேசான குளிரையும் மீறி ஜன்னல் கதவுகள் திறந்திருந்தன. தொலைக்காட்சிப் பெட்டியில் கரகரவெனக் கோடுகள் கிளம்பி மறைந்தன. புதுப் படமாகப் போட்டால் நன்றாக இருக்கும் என நினைத்தாள் சுகன்யா.

இது அழகிகளின் கதையல்ல2

‘புதுப் படங்க போடுவாங்களா?’ – விஜயாவைப் பார்த்தபடி கேட்டாள். விஜயா கையில் இருந்த துணிப்பையை இறுக்கி மார்போடு அணைத்துக்கொண்டாள். ‘புதுப் படங்கதா போடுவாங்க. பழசெல்லா யாரு பாப்பா?’ – விஜயாவோடு இன்னோர் இருக்கையில் உட்கார்ந் தாள். லலிதா, என்ன என்று பார்ப்பதுபோல பார்த்தாள்.

‘லலிதா… விஜயாவோட உட்கார்ந்துக்கிறேன். அரட்டை அடிக்க சௌகரியமா இருக்கும்’ -ரொம்ப நாளைக்கு அப்புறம் அவளிடம் பேசின வார்த்தைகள், தொண்டை கமறுவதுபோல இருந்தது.

‘நாம போயி சேர்றதுக்குள்ளாற எத்தனை படம் போடுவாங்க?’ – விஜயா, சுகன்யாவின் கண் புருவத்துக்கு அருகில் இருந்த தூசியை விரலால் தட்டியபடி கேட்டாள். ‘மூணு, நாலு படமாச்சும் போடுவாங்க. ரொம்ப தூரந்தானே. எல்லாம் புதுப் படங்களா இருக்கணும்.’

‘ஆமா நேத்தைக்கு, தீபாவளிக்கு ரிலீஸ் ஆனப் படங்களா இருக்கும் போ…’

முன் வரிசையில் நாகஸ்வர கோஷ்டி நாகராஜன் உட்கார்ந்திருந்தான். அவன் கையில் நாகஸ்வரத்தை துணியில் சுருட்டிக்கொண்டதுபோல் ஏதோ நீண்டிருந்தது.

‘என்ன நாகராசா. நீயும் பஞ்சம் பிழைக்க பட்டணம் வர்றியா? அங்கே போயி எங்களை வரவேற்க, நாதஸ்வரம் வாசிக்க உன்னியே ஏற்பாடு பண்ணிட்டாங்களாக்கும்!”

”நீயும் அங்க வந்துட்டா அப்புறம் நம்மூர் கல்யாணத்துக்கு நாதஸ்வரம் வாசிக்க ஆள் இல்லாமப்போயிரும்!”

”நாங்கெல்லா மூணு, நாலு வருசம்னு போயித் திரும்பறப்போ, நாதஸ்வரம் வாசிக்கிறதுக்கு யாராச்சும் வேணுமில்லே…’

நாகஸ்வர மூக்குபோல் உடம்பைத் திருப்பிக்கொண்டே நாகராஜன் சொன்னான். ”அப்போ யாராச்சும் இல்லாமலா போயிருவாங்க?”

சின்ன உதறலும் கமறலுமாகப் பேருந்து புறப்பட்டது!

‘மானும் மயிலும் ஒன்றாய்த் திரியும்
நானும் நீயும் சேர்ந்து திரிவோம்! ’

தீபாவளி அன்று வெளியாகியிருந்த புதுப் படத்தின் பாடலில் மூழ்கியிருந்தாள் லலிதா.

ஆர்க்கெஸ்ட்ராவின் கனத்த இசை, அந்த காம்பவுண்ட் எங்கும் நிறைந்திருந்தது. அபரிமிதமான சத்தம் காரணமாக காது அடைத்துக்கொண்டதுபோல் இருந்தது. ஆர்கெஸ்ட்ரா ஆரம்பித்து இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது. இன்னும் எத்தனை மணி நேரம் நடக்கும் என்று தெரியவில்லை. அவளை மாதிரி ஆயிரக்கணக்கான பெண்கள் அந்தத் திறந்தவெளியில் அமர்ந்திருந்தனர். எல்லோரும் புதுத் துணியில் மினுங்கிக்கொண்டிருந்தனர். அவர்கள் எல்லாம் தீபாவளிக்கு ஊருக்குப் போக விடுமுறை தரப்படவில்லை என்றார்கள். துணி எடுக்க மட்டும் பேருந்தில் கூட்டிச்சென்று கூட்டி வந்திருக்கிறார்கள். ஊருக்குச் சென்றுவிட்டால்

திரும்புவதற்கு பத்து பதினைந்து நாட்கள் ஆகிவிடும் என்று லீவு தரவில்லையாம். பத்து பதினைந்து நாட்கள் வேலை ஆட்கள் இல்லாமல் ஆர்டர் முடிக்க முடியாமல் தடைபடும் என்று சொல்லியிருக்கிறார்கள். நேற்றைக்கு ஹாஸ்டல் வளாகத்தில் பட்டாசுக் கட்டுகளைக் கொண்டுவந்து வெடித்திருக்கிறார்கள். இன்றைக்கு காலையில் இருந்து வேலை இருந்திருக்கிறது. மாலையில் இந்த ஆர்க்கெஸ்ட்ரா.

ஊரில் இருந்து தனிப் பேருந்து நேராக ஆர்கெஸ்ட்ரா நடக்கும் இடத்துக்கு வந்துவிட்டது. ஆர்க்கெஸ்ட்ரா நிகழ்ச்சி முடிந்த பின்பு ஹாஸ்டலுக்குப் போகலாம் என்று சொல்லியிருந்தார்கள். நுழைந்தவுடனே உப்புமா, வடை, கேசரி கொடுத்தார்கள். ‘உப்புமாவில்கூட முந்திரி போடுவார்களா?’ என்று ஆச்சர்யமாக இருந்தது. வடைக்கு தேங்காய் சட்னி பொருத்தமாக இருப்பதாகப்பட்டது லலிதாவுக்கு. இரண்டு முறை சட்னி வாங்கினாள். சாம்பார் வடை என்று ஒரு தரம் சாப்பிட ஆசை வந்தது. யாரும் இரண்டாவது முறை வடை என்று கேட்கவில்லை; கேட்டிருக்கலாம் என்று பட்டது அவளுக்கு. இவ்வளவு ருசியாக வெள்ளை ரவை உப்புமாவை செய்ய முடியுமா என்று வியந்துகொண்டே இருந்தாள். பக்கத்தில் இருந்த பெண் ஒல்லியாக ஒடக்கான் மாதிரி இருந்தாள். ”ஹாஸ்டல் சாப்பாடு விதவிதமா இருக்குமாம்” என்று வெள்ளை ரவை உப்புமா ருசி பற்றி வாய்விட்டுச் சொன்னபோது, அந்த ஒல்லிப்பெண் சொன்னாள்.

மேடைக்கு அருகில் உட்கார இடம் கிடைத்தது பற்றி லலிதாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மேடையில் பாடுபவர்களை நன்றாகப் பார்க்க முடிந்தது. பாடும் பெண்கள் எல்லாம் எவ்வளவு அழகாக இருக்கிறார்கள். மேடை வெளிச்சத்தால் அவ்வளவு அழகாக இருக்கிறார்களா? இயல்பாகவே அழகு இல்லாவிட்டால், வெளிச்சத்தில் மட்டும் அது பெரிதாகத் தெரிந்துவிடாது என்ற தீர்மானத்துக்கு வந்திருந்தாள். சுகன்யா எங்கு உட்கார்ந்திருக்கிறாள் என்று தெரியவில்லை. பேருந்தில் வரும்போது அவள் பக்கத்தில் உட்கார்ந்திருந்தது வெகு சௌகரியமாக இருந்தது. தொலைக்காட்சியில் போட்ட படங்களைப் பற்றி ஏதாவது சொல்லிக்கொண்டே வந்தாள். படங்களில் வருகிற நடிகர்,

நடிகைகளைப் பற்றி அவள் நிறைய தகவல்களைச் சொன்னது ஆச்சர்யமாக இருந்தது. நடிகைகள் யார் யாருக்கு எந்த நடிகர்களோடு காதல், தொடர்பு, இரண்டாம் திருமணம், கர்ப்பக் கலைப்பு என்று நிறைய தகவல்களைச் சொன்னாள்.

”நீயுந்தா அழகா இருக்கே சுகன்யா. நல்லா மேக்கப் போட்டா சினிமா ஸ்டாரையும் மிஞ்சிருவே…”

”உனக்கு மட்டும் என்ன கொறச்சல்? கண் புருவம் செதுக்கி அழகாத்தா இருக்கே!”

”இருந்தாலும் நீ நம்மூர் அழகியில்லையா..!”

ஆர்க்கெஸ்ட்ராவில் அடுத்த பாடலும் தீபாவளிக்கு வந்த புதுப் பாடலாக இருந்தது லலிதாவுக்கு மகிழ்ச்சி தந்தது. அவளுக்குப் பிடித்தமான நடிகரின் படத்தில் இருந்து அந்தப் பாடல் அமைந்திருந்தது. காதுகளைக்

கூர்மையாக்கிக்கொண்டு பாடலைக் கேட்க ஆரம்பித்தாள். வார்த்தைகள் புரியவில்லை. இசைக் கருவிகளின் சத்தம் எல்லாவற்றையும் மூழ்கடித்துவிட்டது.

விறுவிறுவெனக் கூட்டம் கலைந்துவிட்டது. ஆர்க்கெஸ்ட்ராவில் பாடிய பாடகர்களிடம் ஆட்டோகிராப் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் புத்தகம், நோட்டு என்று எதுவும் இல்லை. பர்ஸைத் தேடினால் ரூபாய் நோட்டு கிடைக்கும். அதில்கூட வாங்கலாம். ‘ரூபாய் நோட்டில் ஆட்டோகிராப் வாங்கிற அளவு இவர்கள் என்ன சினிமாக்காரர்களா!’ என்ற எண்ணமும் வந்தது. காம்பவுண்டுக்கு

வெளியே நின்றிருந்த இன்னொரு பேருந்தில் ஆர்க்கெஸ்ட்ராகாரர்கள் உட்கார்ந்திருந்தனர். இசைக் கருவிகளை ஏற்றிக்கொண்டிருந்தார்கள்.

சுகன்யா, பேருந்தின் அருகில் நின்றிருந்தாள். அதில் வெள்ளைப் பறவை ஒன்று கண்களில் மினுக்கத்துடன் பறந்துகொண்டிருந்தது வெளிச்சத்தில் தென்பட்டது. ஏகதேசம் எல்லோரும் கூடிவிட்டனர். பேருந்தின் கதவுகள் திறக்கப்படாமல் இருந்தன. வானத்தில் ஜாலம் காட்டிக்கொண்டிருந்த பட்டாசு வெடிகளை எல்லோரும் பார்க்க ஆரம்பித்தனர். விதவிதமாக வர்ணங்கள் சிதறி மிளிர்ந்தன. இருட்டையும் குளிரையும் மீறி பிரகாசித்துக்கொண்டிருந்தது வானம்.

”ஹாஸ்டலுக்கு எவ்வளவு தூரம் போகணும்?”

”எங்கியோ இங்கதா இருக்கற மாதிரி சொன்னாங்க. மணிகண்டனும் இறங்கிட்ட பொறகு கண்ணுல தட்டுப்படலே… அவன் கமிஷன் வாங்கிட்டுக் கௌம்பிட்டான்போல!”

பேருந்தின் கதவுகள் திறக்கப்பட்டன. ஓட்டுநர் எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தான். அவன் கண்கள் சிவந்து முகம் வெளிறிப்போயிருந்தது. வியர்வையில் முகம் குளித்ததுபோல் இருந்தது.

கட்டம்போட்ட சட்டைக்காரர் ஒருவர் வந்தார்.

‘ஆர்க்கெஸ்ட்ரா நல்லா இருந்துச்சுல்ல…’

யாரும் பேசாமல் புன்னகைத்தனர்.

‘என்ன, ஆர்க்கெஸ்ட்ரா நல்லா இல்லியா..? சொன்னாத்தானே தெரியும்!”

”நல்லா இருந்துச்சுங்க சார்!”

நாலைந்து பேர் கத்தினார்கள். கசகசவெனக் குரல்கள் கிளம்பின.

”டிபன் எப்பிடியிருந்துச்சு..?”

‘நல்லா இருந்துச்சுங்க சார்…” – இந்த முறையும் நாலைந்து பேரிடம் இருந்து குரல்கள் வந்தன.

”என்ன மத்தவங்களுக்குப் புடிக்கலையா..?”

”புடிச்சிருந்துச்சு..!” – வெவ்வேறு பக்கங்களில் இருந்து குரல்கள் வந்தன.

”சரி… புடிச்சிருக்கும். ஹாஸ்டல் சாப்பாடுதா. எப்பவும் இது மாதிரி நல்ல சாப்பாடுதா… செரியா..? செரி ஏறுங்க… ஹாஸ்டலுக்குப் போலாம்!”

நிதானமாக ஒவ்வொருவராக ஏறிக்கொண்டிருந்தனர். கட்டம் போட்ட சட்டைக்காரர் லலிதாவின் அருகில் வந்தார்.

”உங்க பேர் என்ன?”

”லலிதா…’

சுகன்யாவைப் பார்த்தபடியே, ‘நீங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸா… உங்க பேரு..?’ என்றான்

‘சுகன்யா…’

‘நல்ல பேரு…’

பேருந்தின் உள்ளிருந்து சிரிப்பொலி தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது. வானத்தின் குளுமை உடம்பைச் சிலிர்க்கச் செய்வதாக இருந்தது விஜயாவுக்கு. கைகளை இறுகக் கட்டிக்கொண்டாள்.

”நீங்க ரெண்டு பேரும் இங்கே இருங்க. உங்க பையை பஸ்லேர்ந்து எடுத்துக்கங்க!”

”எதுக்கு?” – சுகன்யா பயத்தோடு கேட்டாள்.

”பங்களா வேலைக்கு ரெண்டு பேரு தேவைப்படுது. அதுதா… மத்தவங்கெல்லா கம்பனி வேலைக்கு!’

அவர்கள் இருவரும் ஒவ்வொருவரையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டார்கள். வழிகள் மாற்றிவைக்கப்பட்டிருப்பதாக ஏகமனதாக அவர்கள் மனதுக்குள் சொல்லிக்கொண்டார்கள்!

– செப்டம்பர் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *