இது அடுத்த காலம்…!

 

‘ கணவன் அலுவலகம் சென்றதும் வீட்டிற்கு இன்னொருத்தன் வருவதும் போவதும். .. என்ன பழக்கம் இது. …? என்ன கலாச்சாரம். .? ‘ – இப்படி எதிர் வீட்டைப் பற்றி தணிகாசலத்துக்குள் ரொம்ப நாளாக உறுத்தல், கேள்வி.

இவ்வளவிற்கும் எதிர் வீட்டிற்கு வருபவன், வந்து தலையைக் காட்டி விட்டுப் போகமாட்டான். பகல் முழுவதும் இருப்பான். வீட்டுக்காரன் அலுவலகம் விட்டு ஐந்தேமுக்காலுக்கு திரும்புவானென்றால் இவனும் அலுவகம் விட்டு செல்பவன் போல டாணென்று ஐந்து மணிக்கெல்லாம் இங்கிருந்து புறப்பட்டுவிடுவான். காலை வருவதும் அப்படியே அலுவலகம் வருவது போல ஒன்பது. முருகேசு புறப்பட்ட கால் மணி நேரத்திற்கெல்லாம் வந்துவிடுவான்.

யாரவன். .?! எதிர் வீட்டுக்காரிக்கு அண்ணன், தம்பி உறவா. .? அப்படித் தெரியவில்லையே. .! அப்படியே இருந்தாலும் தினமுமா வருவார்கள். .? வரட்டும் ! புருசனைச் சந்திக்காமல் நாள் முழுவதும் இவளிடம் மட்டும் என்ன அப்படி பேச்சு. .? அவளது முன்னாள் காதலன் அல்லது நண்பனாக இருக்குமோ. .? ஏதாவது தப்பு தண்டா. …? – தணிகாச்சலத்திற்கு ரொம்பவே உறுத்தியது.

இந்தத் தெருவிற்குக் குடி வந்ததிலிருந்தே எதிர்வீட்டு முருகேசு மீது தணிகாசலத்திற்கு நல்ல அபிப்ராயம். பார்த்ததுமே அவன் முகம் பிடித்துப் போயிற்று. தங்கமான பையன். அக்கம் பக்கம் யாரிடமும் அனாவசியமாகப் பேசமாட்டான். கோபப்பட்டும் பார்த்ததில்லை. யதேச்சையாக ஒரு முறை பேச… இரண்டு பேரும் நல்ல நண்பர்களாகவும் ஆகிவிட்டார்கள்.

‘ ஆனால். … இதைப்போய் அவனிடம் எப்படி கேட்பது. .? ‘ என்ற தயக்கம் தணிகாசலத்துக்கு. ஊர், உலகக் கதையெல்லாம் அவனுடன் பேசுவாரேத் தவிர இந்த விஷயத்தை மட்டும் இவர் தொட மாட்டார்.

ஆனாலும். ..இவருக்குள், எப்படியாவது அந்த ரகசியத்தைத் தெரிந்து கொண்டுவிட வேண்டும் என்ற ஆர்வம், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது.

‘ யாரைக் கேட்டால் விசயம் தெரியும். .?’ என்று மனசு கேள்வி போடும்போதே. …

எதிர் வீட்டுக்காரனான எனக்கேத்த தெரியவில்லை. வேறு யாருக்குத் தெரியப்ப போகிறது. .?

என்று அது எதிர் கேள்வி போட்டது.

‘ ஏ பெரிசு ! நீ ஒன்னும் பூர்வீக குடி இல்லே. நாலு வருசத்துல வந்த குடி. ரொம்ப வருசமா இந்த ஊர்ல இருக்கிறவங்ககிட்ட கேளு. வெவரம் தெரியப்போகுது. .?! ‘ – அதே மனது புத்தியம் சொன்னது.

அப்படியே பக்கத்து வீட்டு பெரியசாமியிடம் கேட்டு… அது முருகேசுக்குத் தெரிய வந்தால். ..????

‘ உயிர் நண்பன் போல பழகுறீங்க. என்னிடமே கேட்டிருக்கலாம். யார் யார்கிட்டேயோ கேட்டு ஏன் சார் அசிங்கப்படுத்துறீங்க. . ‘ முருகேசு கண்டிப்பாகக் கேட்பான்.

கேட்டு விட்டால். .?….

” இல்லத் தம்பி. நீங்க வருத்தப்படுவீங்களோன்னுதான் கேட்கல. கேட்க மனசு வரல. மன்னிச்சுக்கோங்க… ” – என்று சொல்லித்தான் மழுப்ப வேண்டும்.

வேறு வழி. .?

அதோடு விடுவானா. .?!

” மன்னிச்சுக்கோன்னு சொன்னா சரி யாப்போயிடுமா. .? ” என்பான்.

” இல்ல… உங்களுக்குத் தெரியுமோ, தெரியாதோ..! தெரிஞ்சுக்கத்தான். .” என்று சொல்லித்தான் சமாளித்தாக வேண்டும்.

அதுவும் சரிதான்.!! ஒரு வேளை அவனுக்கு இதெல்லாம் தெரியாமலேயே நடந்தால்.. நட்பு, நண்பனென்ற முறையில் அதை சொல்லித்தான் ஆக வேண்டும். சொல்ல வேண்டியதும் கடமை ! சொல்லாமல் விட்டால் அது நண்பனுக்குச் செய்யும் துரோகம்.

ஏதேதோ சமாதானங்களைத் தனக்குள் மாறி மாறி சொல்லிக் கொண்டிருந்தார் தணிகாசலம்.

ரொம்ப நேர குழப்பங்களுக்குப் பிறகு. …அவனிடமே கேட்க முடிவு செய்தார்.

அலுவலகம் விட்டு வரும் அவனை ஒரு நாள் தெரு முனையில் மறித்தார்.

” யாரை எதிர்பார்த்து நிக்கிறீங்க சார். .? ” வண்டியை நிறுத்திக் கேட்டான்.

” உன்னைத்தான் ! ”

” ஏன் சார். ..? ”

” ம். .. ஒரு முக்கியமான விஷயம் பேசனும். .”

சாவியைத் திருப்பி ஹோண்டாவை அணைத்தான்.

” நடு ரோட்ல வேணாம். ஒரத்துக்குப் போய்டலாம். .” இவர் நகர்ந்தார்.

” வேணாம் சார். பூங்கா. . போவோம். அப்படியே நாம டீ குடிச்சிக்கிட்டே பேசலாம். .”வண்டியைத் தள்ளிக்கொடுண்டு நடந்தான்.

இருவரும் பூங்காவை அடைந்தார்கள்.

ஆளுக்கு இரண்டிரண்டு பஜ்ஜிகளைத் தின்று, டீயும் முடித்து, பூங்கா சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார்கள்.

சிறிது நேர தயக்கத்திற்குப் பிறகு. ..

” தப்பா நினைக்காத முருகேசு. பார்த்தத்தைக் சொல்றேன். ” ஆரம்பித்தார்.

” அட ! நமக்குள்ள என்ன சார். சொல்லுங்க. .? ”

” நீ அலுவலகத்துக்குப் போன பிறகு தினமும் ஒரு ஆட்டோ உங்க வீட்டுக்கு வருது. ..அதுல ஒரு ஆள். ..” நிறுத்தி ஆள் முகத்தைப் பார்த்தார்.

” சிகப்பா ஒல்லியா உசரமா இருப்பாரே. ..!? ” இவன் தொடர்ந்தான்.

” ம்.. ஆமா. .. அவனேதான். தினம் காலை வந்து சாயந்தரம் போறான் . ”

” அவர் என் மனைவி சாந்தியின் முன்னாள் கணவன் சார். ”

” முருகேசு. ..!! ”

” அலறாதீங்க சார். நெசம் ! ”

தணிகாசலம் அதிர்ச்சியின் உச்சத்திற்குப் போனார்.

” என் மனைவி சாந்தி ஏற்கனவே விவாகரத்து ஆனவள் சார்.ஒரே ஊர்ல பிரிஞ்சிதான் இருந்தாங்க. எங்க கலியாணத்துக்கு அப்புறம் அவருக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சி. ஒண்டி ஓரியாய்க் கிடந்தார். உறவுன்னு சொல்லிக்க யாருமில்லே. நான்தான் பாவம்ன்னு நெனைச்சி என் வீட்டுக்காரி சம்மத்ததோட வீட்டுக்கு அழைச்சேன். பிடிவாதமாய் மாட்டேன்னு மறுத்தார். அதுக்கு அப்புறம் இங்கே தங்குறதுக்குப் பக்கத்துலேயே ஒரு வீடு பார்த்துக் கொடுத்தேன். அங்க தங்கிட்டு தினமும் எங்க வீட்டுக்கு வந்திடுவார். அதாவது படுக்கை மட்டும் அங்கே. பகல் இங்கே. கணிசமா ஒரு தொகை கொடுத்துட்டு எங்க வீட்லதான் சாப்பிடுறார். பாவம் சார். தனி ஆளு. எத்தனை நாள் தனியா இருப்பார்.” – சர்வ சாதாரணமாக சொன்னான் முருகேசு.

தணிகாலசத்தால் நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை.

” ஒருத்தன் ரெண்டு, மூணு சம்சாரம் வச்சி வாழ்ந்ததெல்லாம் அந்த காலம் சார்.கொஞ்ச காலமா நாமதான் கருவிலேயே பொம்பளைப்புள்ளைங்களை அழிச்சிடுறோமே. .. அவங்க எண்ணிக்கை எப்படி அதிகரிக்கும்.? இப்போ பொண்ணு கிடைக்காம திண்டாட அதுதான் சார் காரணம். நானும் என் மனைவியும் பாவ, புண்ணியம் பார்த்து செய்யற இந்த காரியம் எதிர்காலத்துல கட்டாயம் ஆனாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லே. எனக்கும் சரி, சாந்திக்கும் சரி மனசு சுத்தமா இருக்கு. அப்புறம் எதுக்கு வீண் கவலை. நாம நெனைச்சா எதுவும் சாத்தியம் சார். அதிர்ச்சி அடையாதீங்க. இது அடுத்தக் காலம்.” முடித்தான்.

தணிகாசலத்துக்குப் பேச்சே வரவில்லை.!! 

தொடர்புடைய சிறுகதைகள்
கடற்கரைக்குக் காற்று வாங்கச் சென்ற அலமேலு இடியை வாங்கிக் கொண்டு திரும்பி வந்து சோபாவில் அமர்ந்தாள். சேகரும் திவ்யாவும் நெருங்கி அமர்ந்து சுண்டல் தின்று மகிழ்ச்சியாக இருந்த காட்சி அவளால் நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. இடியின் உறுத்தலாய் இன்னும் மனதை ...
மேலும் கதையை படிக்க...
வாசலில் அழுது கொண்டிருக்கும் தன் பத்து வயது தம்பியைப் பார்க்க மனசு துடித்தது 28 வயது இளைஞன் சிவாவிற்கு. வேகமாக வீட்டிற்குள் நுழைந்தான். நாற்காலியில் அமர்ந்து அமைதியாகத் தினசரி புரட்டிக் கொண்டிருக்கும் தந்தை தணிகாசலத்தைப் பார்த்ததும்...இவனுக்குக் கோபம் தலைக்கேறியது. '' எதுக்குப்பா தம்பியை அடிச்சீங்க...? '' ...
மேலும் கதையை படிக்க...
ஒரு கைபேசி கலவரம்
இரவு மணி 10.00. அறையில் படித்துக்கொண்டிருந்த எனக்கு கை நழுவி புத்தகம் விழுந்தது நான்காவது முறை. இனி படிக்க முடியாது. தெளிவாய்த் தெரிந்தது. விழுந்த புத்தகத்தை எடுத்து மேசை மேல் வைத்து நாற்காலியை விட்டு எழுந்து அறையை விட்டு வெளியே வந்தேன். கூடத்தில் தொலைக்காட்சிப் ...
மேலும் கதையை படிக்க...
கூடத்து சோபாவில் தனித்து அமர்ந்திருந்த சந்திரசேகரனுக்கு இரண்டு நாட்களாக மனசு சரி இல்லை. காரணம், நிர்மல் விமலுக்குள் சரியான பேச்சு வார்த்தைகள் இல்லை. மனமுறிவு!. அவர்கள்; இவர் மகன்கள். நிர்மல் மூத்தவன். விமல் அவனைவிட மூன்று வயது இளையவன். இருவருக்கும் தற்போது வாலிப ...
மேலும் கதையை படிக்க...
மீனுக்குட்டி எலிகளைக் கடித்துக் குதறிவிட்டு தன் காலால் வாயைத் துடைக்கும் அழகே தனி. புலி, சிங்கம் கெட்டது. ! வீட்டு வளர்ப்பு விலங்குகளில் நாயும் பூனையும் தனித்தனி ரகம். நாய் மனித விசுவாசி. வளர்ப்பவர் எங்கு சென்றாலும் பின்னாலேயே வரும். பூனை அப்படி ...
மேலும் கதையை படிக்க...
மகளுக்காக…
ஆதங்கம்..! – ஒரு பக்க கதை
ஒரு கைபேசி கலவரம்
வேண்டாம் இந்த விபரீதம்…!
நெருப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)