Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

இது…இது… இதானே அரசியல்!

 

”ஏப்பா…. சந்திரா பொண்ணு வீட்டுக்காரங்க எப்ப பார்க்க வர்ரீங்கன்னு கேட்டு அனுப்பியிருக்காங்க.. நீ ஒன்னுமே சொல்லாம இருக்கியே…?”

“கல்யாணம் பண்ணிக்கற நிலைமையிலா இப்ப இருக்கு நம்ம் வீடு… அக்கா குழந்தைக்கு மொட்டையடிக்கிறதுக்கு போயிட்டு வந்து சீர் பத்தலைன்னு அவிங்க மாமியார்கிட்ட பேச்சு தின்ன விசனமே தீரல.. ஆச்சு தங்கச்சியோட கட்டு சோறு விருந்தும் வந்தாச்சு.. அவ குழந்தைப்பேறுக்கு வரப்போற நாளும் தூரமா இல்ல… இந்த லட்சணத்துல வர சம்பளம் வாயுக்கும், வவுத்துக்குமே சரியாயிருக்கு.. இதுல இன்னொரு டிக்கட்டை சேத்துக்கணுமா… போகட்டும்மா.. இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும் பாக்கலாம்..”

“ஏம்ப்பா. இன்னும் கொஞ்ச நாள் போனா மட்டும் எங்கனா மேல இருந்து கூரைய பிச்சிக்கிட்டுக் கொட்டப் போகுதா.. வர புள்ள நல்லா தையல் தைக்குமாம், அதுவும் நாலு காசு சம்பாதிக்காமயா இருக்கப்போவுது….”

“இல்லமா.. தங்கச்சி பிரசவமாவது முடியட்டும் பாக்கலாம்…”

அம்மாவிடம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்தாலும், வேலைக்கு வந்தும் நினைவு முழுவதிலும் அந்தப் பெண்ணின் முகமே நிழலாடியது. சம்பிரதாயமாக பெண் பார்க்கும் படலம் நடக்காவிட்டாலும், அக்காவின் நெருங்கிய உறவு என்பதால் சில விசேசங்களில் பார்த்து சொக்கிப்போன அனுபவம் இன்று வாட்டி எடுக்கிறது. தள்ளிப்போடுவதால் நட்டம் தனக்குத்தான் என்பதும் புரிந்தது. அம்மா சொன்னதுபோல, தனக்காக அவர்கள் காத்துக் கொண்டிருப்பதற்கான பெரிய சிறப்புக் காரணம் ஏதும் தன்னிடமில்லை என்பதும் தெரிந்ததுதானே.. மனதில் இருந்த குழப்பரேகை முகத்திலும் தெரிந்த்து.

“என்னப்பா சந்திரா.. இவ்ளோ லேட்டா வர்ற.. நான் தான் நேத்தே உன்னை சீக்கிரமா எட்டு மணிக்கே வான்னு சொன்னேனே , ஆயுத பூஜைக்கு தலைவருங்க படங்களையெல்லாம் கழட்டி துடைச்சு வைக்கணும்னு சொன்னேனே… ?”

அம்மா காலங்கார்த்தால ஆரம்பிச்ச பிரச்சனையில் ஆபிஸ் வேலையைப் பற்றிய சிந்தனை கொஞ்சமும் இல்லாமல் போனது. இப்போது தேவையில்லாத சங்கடம்.

“சாரி சார். இப்ப ஆரம்பிச்சிடறேன். சீக்கிரம் செய்து முடிச்சுடறேன்”

அரசுக்குச் சொந்தமான விருந்தினர் மாளிகை. முதலமைச்சர்கள் படங்கள் அழகாக அணிவகுத்திருக்கும் காட்சிகள். ஒவ்வொரு படமாக சக உதவியாளருடன் சேர்ந்து மெதுவாகக் கழட்டி துடைத்து வைத்துக் கொண்டிருந்தார்கள். மனம் முழுக்க அந்த தேவதையே ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாலும், வேலையிலும் கவனம் இல்லாமல் இல்லை. கிட்டத்தட்ட பாதி வேலை முடிந்து விட்டது. ஒரு டீ சாப்பிட்டுவிட்டு வந்து மீதி வேலையைப் பார்க்கலாம் என்று முடிவெடுத்தார்கள். கடைசியாக எடுத்த படத்தை மெதுவாக இறக்கி வைக்கும் நேரம் உதவியாளரின் கவனக்குறைவின் காரணமாக தொம்மென்று பெரிய சத்தத்துடன் கீழே விழுந்து நொறுங்கிப் போனது. நடுநடுங்கிப் போனார்கள் இருவரும். நிமிடத்தில் அனைவரும் கூடி விட்டனர். அன்று உள்ளூரில் வரப்போகிற இடைத்தேர்தல் பிரசாரத்திற்கான கட்சிக் கூட்டம் இருப்பதால், வெளியூர் தொண்டர்கள் பலர் வந்து அங்கு தங்கியிருந்தனர். மேனேஜர் வந்து சத்தம் போடவும், சந்திரா, “ஐயா தெரியாம விழுந்துடிச்சிங்க” என்றான் மிக அச்சத்துடன்.

“சரி.. சரி.. மளமளன்னு எல்லாத்தையும் அள்ளி குப்பையில கொட்டிட்டு இடத்தைச் சுத்தம் பண்ணுங்க. யார் காலிலாவது கண்ணாடி குத்திடப் போகுது…” என்றார்.

இதைக்கேட்டதுதான் தாமதம், அங்கிருந்த தொண்டர்கள் துள்ளிக் குதித்து,” தலைவரோட படத்தை உடைச்சதும் இல்லாம, அள்ளிக் குப்பைல போடுன்னு அனாவசியமா சொல்றீங்கன்னு” கலாட்டா செய்ய ஆரம்பித்தார்கள்.

மேனேஜரும், “பின்ன வேற என்னப்பா செய்ய முடியும். படம் கைதவறி உடைஞ்சி போச்சி. அதுக்காக அதை அள்ளிச் சுத்தம் செய்யாமல், கரைத்தா குடிக்க முடியும்..?” என்றார் கோபமாக..

அவ்வளவுதான் தொண்டர்கள் பிலுபிலுவென பிடித்துக் கொண்டதோடு நிற்காமல், போனைப்போட்டு எல்லோருக்கும் சொல்லி பெரிய கலாட்டாவிற்கு வித்திட்டு விட்டனர். தங்கள் தலைவர் ஆட்சியில் இல்லாதலால் திட்டம் போட்டே ஆட்சியாளர்களின் கைக்கூலியாக இப்படி ஒரு அவமானத்தைச் செய்யத் துணிந்ததாக ஒரு பெரிய சீனை உருவாக்கிவிட்டார்கள் சில நிமிடங்களிலேயே. அரசியலில் இதெல்லாமே சகஜம்தான் என்றாலும், இவ்வளவு வேகமாக இப்படி ஒரு கலவரம் காட்டுத்தீயாய் பரவும் என்று நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

குறிப்பிட்டத் தலைவருக்கு செய்தியை தெரிவிக்காமல்கூட, இதையே காரணம் காட்டி பெரிய கலவரம் உண்டு பண்ண வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. அந்தந்த மாவட்டங்களின் தலைவர்களின் மூலமாக கலவரமும், கடையடைப்பும், கொடும்பாவி எரிப்பும் என ஊரே அல்லோகல்லோலப்பட்டது. கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறுவதற்கு அவர்கள் என்ன கத்துக் குட்டிகளா.. அரசியலில் பல காலமாகத் தின்று கொட்டை போட்டவர்களாயிற்றே. சிறை நிறப்பும் போராட்டமும் நடந்து கொண்டிருந்தது. காவல்துறையினருக்கு பெரும் தலைவலியாக இருந்தது.

“ஜனநாயகத்தைக் காப்பத்த வேண்டி பல முறை ஜெயிலுக்குப்போன என் தலைவனுக்கா இந்த கதி… தர்மத்தின் வாழ்வைக் கவ்வியுள்ள சூது விலகப் போகும் நேரம். வாழ்க தலைவா… “ என்று பல்வேறு விதமாக கோஷங்கள் விண்ணைப் பிளக்க, கூட்டம் கூட்டமாக கைது செய்யப்பட்டார்கள். ஏதோ நாட்டிற்காக பெரிய தியாகம் செய்தது போல பெருமை பொங்க கையாட்டிக் கொண்டே வேனில் ஏறினார்கள் தொண்டர்கள். ஊர் முழுக்க அனைத்து செய்தித்தாள்களிலும் இதே பேச்சு… சுவரெல்லாம் விளம்பரங்கள்.. நோட்டீசுகள் என்று சரியாகத்தான் நடந்து கொண்டிருந்தது. ஊரில் கொலை, கொள்ளைகள் நடப்பதையெல்லாம் கண்டும் காணாமல் விட்டுவிட்டு கட்சித் தொண்டர்களை கைது செய்து அவர்களை மாமியார் வீடு போல அன்பாக உபசரிப்பது ஒன்றே முக்கிய கடமையாக உழைத்துக் கொண்டிருந்தார்கள். அனைவருக்கும் பிரியாணி பொட்டலமும், தண்ணீர் பாக்கெட்டும் வழங்கப்பட்டது. அங்கேயே தொண்டர்கள் கூடிக்கூடி அடுத்த திட்டத்தையும் விவாதிக்கலானார்கள். ஒரே சிரிப்பும், கும்மாளமுமாக கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.

“அண்ணே, இன்னைக்கு நம்ம ஜெயிலுல என்னண்ணே விசேசம்….? குப்பை மலையாட்டமா குமிஞ்சிக்கிடக்கு.. நியூஸ் பேப்ப்ர் முச்சூடும் நம்ம தலைவர் படமா இருக்கு. இப்புடி கசக்கி, கிழிச்சி போட்டிருக்காக. …?”

“ஆமாம்ப்பா எல்லாம் ஒன்னா வந்து சிறையை நிரப்பினா, தண்ணீ பஞ்சம், கழிவறை பஞ்சம் எல்லாம்தானே வரும்.. வேற என்ன செய்வாக பாவம்.. பிரியாணி சப்பிட்டுட்டு கை கழுவோணுமில்ல.. பைப்புல தண்ணீ வரல… இயற்கை உபாதை வேற… எல்லாரும் நியூஸ் பேப்ப்ர்ல துடைச்சு போட்டாக.. “

“ஐயோ அண்ணே, தலீவரு இப்புடி இவுககிட்ட மாட்டிக்கினு அவதிப்படறாரே பாவம்… நல்ல மனுசன் அவரு.. அவரைப்போயி கிழிச்சி, துடைச்சி, கசக்கி, சுருட்டிப் போடுறாங்களே… கடவுளே…”

“அட போப்பா.. இந்த போராட்டமே தலைவரு போட்டோவை ஒருத்தன் தெரியாம கைதவறி போட்டு உடைச்சுப்பிட்டான்னுதானே.. இது தெரியாம நீ வேற கடுப்பேத்தறே….”

“என்னது… போட்டோவை உடைச்சதுக்கா இத்தனை பெரிய கலவரம்?.. அப்ப இவுக என்ன செய்யறாங்களாம்…..? எல்லாம் கலி முத்திப்போச்சுண்ணே.. நமக்கென்ன எல்லாத்தையும் வாரிப்போட்டுக்கிட்டுப் போவோம்….” என்றான் தலையில் அடித்துக்கொண்டே..

- 26 ஆகஸ்ட், 2012 

தொடர்புடைய சிறுகதைகள்
கண்ணபிரான் குரூப் ஆஃப் கம்பெனிகள். ஊரைச்சுற்றி பல கிளைகள் இவர்களுக்கு. பலவிதமான தயாரிப்புகள்.. ஊசி முதல் கார் ஸ்பேர் பார்ட்ஸ் வரை அத்துனை சிறிய இரும்புப் பொருட்களும் தயார் செய்கிறார்கள். அம்பத்தூர் கிளையில் கட்டடங்கள் விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள் கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்ட நவீன ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: பவள சங்கரி. இன்று சனிக்கிழமை. மகள் மதிவதனி குழந்தைகளுடன் வருவதற்கு இன்னும் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டும். ஒரு வாரமாக பேரக்குழந்தைகளைப் பார்க்காமல் கண்ணில் கட்டியது போல் உள்ளது… மகளைஅடிக்கடி பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமென்றுதான் உள்ளூரிலேயே தேடிப்பிடித்து இந்த ...
மேலும் கதையை படிக்க...
மணிக்கூண்டு சிக்னல். கடைவீதியின் மிக முக்கியமான ஒரு நாற்சந்தியின் சிக்னல். ஈரோட்டின் ஜவுளிச் சந்தை கூடுமிடத்திற்கு வெகு சமீபம் என்பதாலும், அன்று சந்தை நாள் என்பதாலும் கலகலவென்று தெருவெல்லாம், சரக்கு வண்டிகளும், இருசககர, நான்கு சக்கர வாகனங்களும் அணிவகுத்து சென்று கொண்டிருந்தன. ...
மேலும் கதையை படிக்க...
ஊதுவத்தியும், பன்னீரும், வாசனைத் திரவமும், மலர்ச்செண்டுகளின் மணமும் கலந்ததொரு வித்தியாசமான வாடை.. ஆங்காங்கே பெண்கள் கூடிக்கூடி குசுகுசுவென இரகசியமும், வாயின் மீது அடித்துக் கொண்டும், புலம்பிக் கொண்டும், வயிற்றில் புளியைக் கரைக்கும் சூழல். பெரிய பட்டாசாலை முழுதும் நிறைந்த உறவுகளும், நட்புகளும், ...
மேலும் கதையை படிக்க...
உலகப்புகழ் மெரீனா கடற்கரை. பலவிதமான வண்ணங்களும், எண்ணங்களும் சுமந்துத் திரியும் மனிதர்களுடன் நாளும் உறவாடும் ஓயாத அலைகள். மாறி மாறி வரும் மக்கள் மத்தியில் என்றும் மாறாமல் அனைத்திற்கும் சாட்சியாய் நிற்கும் கடல் அன்னை. பல்லாயிரம் உயிர்களை பலி வாங்கி, விழுங்கினாலும் ...
மேலும் கதையை படிக்க...
மாறியது நெஞ்சம்
பெற்ற மனது
ரௌத்திரம் பழகு!
ஆகாயத்தாமரை!
வாழ நினைத்தால் வாழலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)