ஆஷாடபூதி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 1, 2017
பார்வையிட்டோர்: 8,265 
 

I

சென்னையில் ஜெனரல் ஹாஸ்பிடலிலிருந்து வண்ணாரப் பேட்டைக்குப் போகும் தங்கசாலை வீதியும் கடற்கரையிலிருந்து ஆனைகெவுனிக்குப் போகும் கொத்தவால்சாவடி வீதியும் கலக்கிற நாற்சந்தியில் உள்ள அடிபட்ட பிள்ளையார் கோயிலுக்குக் கிழக்கே கால் பர்லாங்க் தூரத்தில் ஒரு சிறிய சந்து உண்டு. அந்தச் சந்து கோமுட்டி வர்த்தகர்கள் வசிப்பது. சந்தின் கீழண்டை வாடையில் வடகோடி வீடு ஒன்றுண்டு: அது ரங்கையசெட்டியார் என்னும் ஜவளிவர்த்தகருடைய பிதுரார்ஜிதம். வீட்டின் வாயில் வடக்கு நோக்கியது. அந்த மாடிவீட்டின் படிக்கட்டு, தெருநடையை யடுத்த சரக்காரில் தேக்கமரத்தால் அமைத்திருக்கும். மேன்மாடியில் இருபதடி நீளமுள்ள ஒருகூடமும் கூடத்தின் வடக்கிலும் தெற்கிலும் பன்னிரண்டடி நீளமுள்ள ஒவ்வோரறையும் உண்டு. கீழ்க்கட்டின் மேல்புறத்தில் முன்பக்கம் புருவாதி விசாலமாகவும் சுத்தமாகவும் இருக்கும்.
அதற்கப்பால் வெந்நீரடுப்புள்ள ஒரு ஸ்நான அறையும், கடைசியில் சமையலறையும் இருக்கும். சமையலறையின் கிழக்கில் உள்ளது உக்கிராணவறை. முன்னறை செட்டியாருடைய வரவு செலவு கணக்குகள் எழுதும் ஆபீஸ். முன்னறைக்கும் உக்கிராணத்துக்கும் இடையில் உள்ள கூடம் திருவாதானத்துக்கு உரிய இடம்: ததியாராதனத்துக்கு உரிய இடமும் அதுவே. அது எப்போதும் திரையிட்டிருக்கும்.

ரங்கைய செட்டியாருடைய கணக்குகளெல்லாம் தெலுங்கு லிபியில் எழுதியிருக்கும். அவருடைய கணக்கப்பிள்ளைகள் இங்க்லீஷில் வர்தகத்துக்குரிய சில வார்த்தைகளை அறிந்து கொள்வதான அவ்வளவு பயிற்சியே உள்ளவர்கள். செட்டியார் யாதொரு பரீக்ஷையிலும் தேறாதவராயினும், விவகாரங்களை நடத்துவதற்கு வேண்டிய அளவு இங்க்லீஷ் பயிற்சியும், எடுத்த புத்தகத்தைப் படித்தறியக்கூடிய தெலுங்கு விற்பத்தியும், பகவத்காலக்ஷேபங் கேட்டறிதற்குரிய தமிழ்ப் பழக்கமும் உள்ளவர்.
யாரிடத்திலும் இனியவார்த்தை பேசுவதின்றி எப்படிப்பட்ட ஸந்தர்ப்பத்திலும் கர்ணகடூரமான வார்த்தையைப் பேசுவது அவரிடம் கிடையாது. அவருடைய நாக்குநயமே அவருடைய வர்த்தகஸித்திக்கு முக்யகாரணம். கொஞ்சலாபம் கிடைத்தாலும் போதுமென்றிருப்பவ ராகையால், “வ்யாபாரம் த்ரோஹசிந்தனம்” என்கிற மூதுரை அவருக்கடுக்காது. ஏழைகளிடத்தில் இரக்கமும் பொதுஜன நன்மையில் நாட்டமும் பெற்றிருந்ததோடு அவர் பகவத் கைங்கர்யங்களையும் பாகவத கைங்கர்யங்களையும் இயன்றமட்டில் லோபமின்றிச் செய்து வருபவர். இத்தனையோடு ஸ்நேஹத்துக்கும் அவர் பாத்ரமானவரே.

ஒருநாள் அவர் வெளி வேலைகளைப் பார்த்துக் கொண்டு திரும்பி ஸூர்யாஸ்தமன காலத்தில் கோச் விட்டிறங்கி, மேல் மாடியில் முன்னறையில் உடுப்புக் களைந்து, கூடத்தில் வைத்திருந்த செம்புஜலங் கொண்டு முகம் கைகால்களைக் கழுவி ஈரத்தை ஒற்றியெடுத்துவிட்டு, மடி தரித்து நாற்காலியில் உட்கார்ந்தார். உடனே அவருடைய பிள்ளை கொண்டுவந்த டீயைப் பருகினார். அவ்வளவிலே பெரிய கணக்கப்பிள்ளை முனிஸிபல் ஆபிஸிலிருந்து வந்த ஒரு கடிதத்தைக் கொண்டு வந்து அடுத்த மேஜையின்மேல் வைத்து, அன்றளவில் வேறு தபால் ஒன்றும் வரவில்லையென்று சொல்லிக்கொண்டே கீழ்க்கட்டில் ஆபீஸுக்குப் போய்விட்டார்.

முனிஸிபல் ஆபீஸிலிருந்துவந்த கடிதத்தைப் பிரித்துப் பார்த்தார். இரண்டாமுறை மூன்றாமுறையும் அக்கடிதத்தை நிதானமாகப் படித்துப் பார்த்தார். கூடத்தில் உலாவினார்: சரக்காரில் உலாவினார். சற்றுநேரம் நாற்காலியில் இருந்தார்.

மீண்டும் எழுந்து உலாவினார். பல விதத்தில் சிந்தித்தார். ஒரு முடிவுக்கும் வரக்கூடாமல் சாய்வு நாற்காலியில் சாய்ந்து எண்ணமிட்டிருந்தார். பெரிய கடியாரம் டங் டங் என்று ஏழுமணி அடித்தது. எவரோ காலில் பாதரக்ஷையோடு படிக்கட்டின் மீது எறிவருகிற அரவம் கேட்டது. “யார் அது” என்று செட்டியார் கேட்டார். “ஏன் செட்டியாரே” என்று ஒருவர் வந்தார்.

வந்தவரை உபசரித்து நாற்காலியில் உட்காரச் சொல்லி, பெரிய கணக்கப்பிள்ளையை அழைத்து, “நேற்று நம்முடைய சரக்கறைக்கு வந்த சீட்டி பேல்கள் நூற்றுக்காக முதலியாருக்கு ப்ரத்யேகமாகச் சேரவேண்டியதைச் சேர்த்துவிடு” என்றவடனே, கணக்கப்பிள்ளை தனது கோட்டின் உள் பையில் வைத்திருந்த நோட்டின் கற்றையில் இரண்டு பத்து ரூபா நோட்டும் ஓர் ஐந்து ரூபா நோட்டும் எடுத்துக் கொடுத்து ஓரணாதலை யொட்டிய ஒரு ரசீது பாரத்தில் தொகையைக் குறித்துக் கையெழுத்து வாங்கிக்கொண்டு போய்விட்டார்.

அந்தத் தொகையை வந்த முதலியார் தாளிட்டு முடியும் உள்ளரைச் சொக்காயின் பையில் போட்டுப் பையை ஸந்தடி பண்ணாமல் தோவத்தியின் உள்ளே செருகி பத்ரப்படுத்திக் கொண்ட பிறகு, செட்டியாரைப் பார்த்து “என்ன செய்தி? இயற்கையாக உள்ள மகமலர்ச்சி இன்று உங்களிடம் தோன்றவில்லை: மனத்தில் ஏதோ சிந்தாகுலம் உற்றிருப்ப உங்கள் முகம் குறித்துக் காட்டுகின்றது. ஊரிலிருந்து ஏதாவது கடிதம் வந்ததோ? வீட்டில் எல்லாரும் ஸௌக்யமாக இருக்கிறார்களே” என்று கேட்ட அளவில், செட்டியார் “வேறு விசேஷம் இல்லை” என்று சொல்லி, முனிஸிபல் ஆபீஸ் கடிதத்தை எடுத்துக் கொடுத்தார்.

முதலியார் தத்தித் தொத்தி அந்தக் கடிதத்தில் கண்டுள்ள முக்ய ஸங்கதியை இன்னதென்று ஒருவாறு தெரிந்து கொண்டு அதை முன்போல் மேஜையின்மேல் வைத்துவிட்டு, “கால தவணை நிரம்ப இருக்கிறத. நீங்கள் லவலேசமும் அதைர்யம் அடையவேண்டா. இரண்டு மூன்று நாளில் இதற்குப் பரிகாரம் தேடலாம். ஸந்தோஷமாய் இருங்கள்” என்று சொல்லி எழுந்தார். செட்டியார் “என் மனநோய்க்கு மருந்தாய்ப் பகவானே உங்களை என்னிடம் அனுப்பினாரோ! செய்வது
இன்னதென்று தோன்றாமல் நிர்ஜீவனாய் விட்டேன். உங்கள் வார்த்தை எனக்குக் குற்றுயிரைத்தந்தது. இனி உங்களை நம்பியிருக்கிறேன். பகவத் கடாக்ஷம் எப்படியிருக்கிறதோ பார்ப்போம்” என்றார். முதலியார் “பகவத் கடாக்ஷம் பூரணமாயிருக்கிறது. நீங்கள் ஒன்றும் கவலையடைய வேண்டா” என்று சொல்லி விடைபெற்றுக்கொண்டார்.

II

கொத்தவால் சாவடி வீதியும் ஆக்ரா பாங்கிக்கு மேற்கில் உள்ள ஆர்மினியன் வீதியும் கலக்கிற இடத்தில் மேல்பால் உள்ள பெரிய கட்டடம் ஓர் இங்க்லிஷ் வர்த்தகசாலை. வர்த்தகசாலைக் குரியவர்கள் சொந்தத்தில் கப்பல்கள் வைத்துச் சீமை ஸாமான்களை வருவித்து மொத்த ஒப்பந்தமாக வர்த்தகம் செய்வதோடு, சென்னை ராஜ்யத்திலும் ஸிமென்ட், சுண்ணாம்பு, நூனூற்றல், வஸ்திரம் நெய்தல், தோல் பதனிடுதல் முதலான பலவித தொழிற்சாலைகளையும் வைத்து நடத்தி அனேக ஏழை ஜனங்களுக்கு ஜீவனமளித்துத் தாங்களும் நல்ல லாபம் அடைகின்றவர்கள். இந்த வர்த்தகசாலையில் மேற்படி முதலியார் முதலில் இரண்டு வராகன் சம்பளத்துக்கு எடுபிடியாளாகப் பில்லை சேவகம் செய்திருந்தவர், மேலதிகாரிகளுக்குக் கூழைக் கும்பிடுபோட்டு அவர்களுடைய தயவாலே ஜவளி டிபார்ட்மென்டில் ஒரு ஸாதாரண தரகிரியாகி மாதம் பத்து வராகன் சம்பளம் பெற்றுவந்தார். சம்பளமன்றி, பேல் ஒன்றுக்கு வர்த்தகரிடம் கால்ரூபா தரகு ப்ரத்யேகமாய் வாங்கிக் கொள்வதான மாமூலைத் தானே உண்டாக்கிக்கொண்டார். மாலையில் வீட்டுக்குத் திரும்பும்போது அந்தந்த வர்த்தகரிடம் உரிய மாமூலைப் பெற்றுக்கொண்டு போவார். இதனால் ஸராஸரியில் அவருக்கு மாதாமாதம் இருநூற்றைம்பது ரூபாவுக்குக் குறையாத வருமானம் தனியாக ஏற்பட்டது.

வர்த்தகரிடத்தில் இவர் காட்டும் ஸாமர்த்தியத்தைக் கண்டு மெச்சி, வர்த்தக சாலையின் முதல் கூட்டாளி, இவரை ஒருவருஷகாலம் தான் லீவில் போகும்போது தன்னோடு அழைத்துப்போய்ச் சீமையில் பழக்கப்படுத்தி வைத்தால், இவர் நல்ல நிலைமைக்கு வரக்கூடுமென்று நினைத்து, இவரை அழைத்தார். இவர் கப்பல் யாத்ரையின் அபாயத்தை நோக்கி அதற்கு இணங்க வில்லை. தரகிரி வேலை கிடைத்த பிறகு ஒற்றை மாட்டுப் பெட்டிவண்டி யொன்று வைத்துக்கொண்டு வருவதும் போவதுமா யிருந்தார். இவருடைய வருமானம் தரகோடு போவதில்லை. பேல்களில் சற்றுப் பழுதான பீஸ்களை விலைகுறைத்து வாங்கி அறிமுகமானவர்களுக்குக் கடைவிலைக்குக் குறைவாக விற்றுவிடுவார். அதிகம் பழுதானவைகளைப் பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் உபயோகித்துக்கொள்வார். அவருடைய வீட்டிலுள்ள அங்கவஸ்திரங்களை வரிசைக் கிரமமாகக் கட்டிவந்தால் மூன்று வருஷகாலத்திலும் ஒரு சுற்ற முடிவு பெறாது. மாதிரித்துண்டு சீலைகளை அப்போதப்போது தைத்து வீட்டில் பெண்டிரும் பிள்ளைகளும் துப்பட்டியாக உபயோகிப்பர். வீட்டுச் செலவெல்லாம் சம்பளத் தொகைக்குள் அடங்கவேண்டும். பண்டி செலவு, வைத்யன் செலவு முதலியனவும் அதற்குள்ளே அடங்கவேண்டும். இதனால் கந்தசாமி முதலியாரிடம் நூறு அயிரமாகி, ஆயிரம் பலவாயிரமாகப் பணம் வளர்ந்துவந்தது. யாராகிலும் வட்டிக்குக் கடன் கேட்டால் அறிமுகமானவர்களிடத்தில் வாங்கித் தருவதாகப் போக்குக் காட்டி, அப்படி வாங்கித் தருகிற தாக்ஷண்யத்துக்காக அவரால் பெறுதலான இதர நன்மை கொஞ்சமேயாயினும் அதைப் பெறாமல் விடமாட்டார்.

வர்த்தகர் சிலர் கையிலிருக்கிற முதற்பணம் பல சரக்குகளில் இறைந்துகிடந்தால், அப்படிப்பட்ட ஸமயங்களில் வட்டிக்குப் பணம் வாங்கி முதலாக வைத்து லாபம் ஸம்பாதிப்பது ஸஹஜம். இவருக்குத் தரகு கொடுக்கிற கோமுட்டிகள் இவரிடமே சில ஸமயங்களில் ஆயிரமாயிரமாகக் கடன் வாங்குவர். இவ்விதம் கொடுக்கிற கடன் பத்திரங்களில் ஒன்றாவது முதலியார் பேரில் இன்றி, எல்லாம் மூன்றாவது வீட்டில் உள்ள தங்கவேலு முதலியார் என்பவர் பேரிலே பதிவுசெய்திருக்கும். சிநேகிதருக்குத் தன்னால் இயன்ற உதவியைச் செய்வது தங்கவேலு முதலியாரிடம் பெற்றுவந்த உபகாரமெல்லாம் அவஸரகாலங்களில் வட்டியில்லாமல் நூறு இருநூறு கடன் வாங்கிக்கொள்வதும் எங்கேயாகிலும் போகவேண்டுமானால் அவருடைய வண்டியில் செலவில்லாமல் போய்வருவது மாகிய அவ்வளவே.

இருபதினாயிரத்துக்குக் குறையாமல் தங்கவேலு முதலியார்மீது இடைவிடாமல் கடன் பத்திரங்கள் ஏற்பட்டிருக்கும். இவர் நல்ல ஸத்யவான் என்பது கந்தசாமி முதலியாருக்கு உறுதிப் பட்டிருந்தது. அதற்கான ஆதாரங்களெல்லாம் ஸமீபத்திலே அநேகம் உண்டு. இவர்களுடைய சிநேகம் முற்ற முற்றத் தங்கவேலு முதலியாரிடம் தாக்ஷண்யம் குறைந்து லோபகுணம் சிறிய சிறிய தசாம்ச பின்னமாக வளர்ந்துவந்தது. உடன் பிறந்தவர்களுக்கு ஏதாகிலும் சீரிடுவதானால், கந்தசாமி முதலியார், “ஓய்! அதிக ஓட்டம் ஓடாதே; அடக்கிப்பிடி; இவர்களெல்லாம் நம்முடைய கையிலுள்ளதைக் கொஞ்சங் கொஞ்சமாய் உறிந்துகொண்டு போகிறவர்களே யன்றி, நமக்கு இவர்களால் பின்பு கொஞ்சமும் நன்மை கிடைக்குமென்று எண்ணவேண்டா”
என்று எச்சரிக்கைசெய்து, கேட்டதொகைக்குக் குறைவாகவே கடன் கொடப்பார். தங்கவேலு முதலியாருக்கு முன்னமே அர்த்த சாஸ்த்திரத்தில் கொஞ்சம் பயிற்சியுண்டு. அதன்மேல் கந்தசாமி முதலியாருடைய புத்திமதிகள் சர்க்கரைப் பந்தலிலே தேன்மாரி பெய்ததுபோல் இருக்கும். அப்போதப்போது நடக்கிற ஸாதாரண ஸம்பாஷணங்களால் தங்கவேலு முதலியாருக்குச் சாய்காலுள்ள இடங்கள் இன்னவை இன்னவை யென்பது கந்தசாமி முதலியாருக்கு நன்றாகத் தெரியுமாதலால், செட்டியார் வீட்டிலிருந்து வந்த மறுநாள் காலையில், தங்கவேலு முதலியார் காலக்கடன் கழிக்கச் செல்லும்போது கந்தசாமிமுதலியாரும் உடன்றொடர்ந்து, பல விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டு போகையில், பல சிநேகிதர்களுடைய க்ஷேமங்களை விசாரித்தார். விசாரிக்கும்போது இடையிலே “ஓய், ரத்தினசெட்டியார் எப்படியிருக்கிறார்?” என்று கேட்டார், “அவர் முன்னே வெறுமையான லேககராய் இருந்தவர், இப்பொழுது முனிஸிபல் ப்ரெஸிடென்டின் தயா பக்ஷத்தால் ஜெனரல் டிபார்ட்மென்டின் மானேஜராக இருக்கிறார்.
மாதச் சம்பளம் நூற்றைம்பது. புத்ரபாக்யத்துக்கும் குறைவில்லை” என்று தங்கவேலு முதலியார் உரைத்தார். அதைக்கேட்டுக் கந்தசாமி முதலியார் “அப்படியா, நிரம்ப ஸந்தோஷம். என்னுடைய ஸந்தேகம் நிவர்த்தியாயிற்று. என் எண்ணம் பலிக்கு மென்றே உறுதி ஏற்படுகிறது” என்றார். அதன்மேல் தங்கவேலு முதலியார் “என்ன ஸங்கதி, என்ன ஸங்கதி? அவரால் உனக்காக வேண்டிய நன்மை என்ன இருக்கிறதூ நாம் இருப்பது முனிஸிபல் அத்தைக் கடந்த சைதாபேட்டை தாலூகா வல்லவோ! அவருடைய ஞாபகம் வரவேண்டிய காரணம் என்ன? உத்யோக ஸம்பந்தமாக உனக்காவது உன்னுடைய கோமுட்டி சிநேகிதர்களில் எவருக்காவது புதிய வரி ஏதாவது ஏற்பட்டதா? என்ன ஸங்கதி?” என்று கேட்டார்.

கந்தசாமிமுதலியார் “நான் பத்துவராகன் ஸம்பாதிப்பவன். எனக்குப் புதிய வரி என்ன இருக்கிறது? எனக்குத் தெரிந்த கோமுட்டிகளெல்லாம் பலத்த வியாபாரிகளாயிருக்க, அவர்களுக்கு ஏற்படக்கூடிய வரி முதலான விஷயங்கள் என் காதுவரையில் ஏன் எட்டப்போகின்றன? நெற்றுமாலையில் நம்முடைய நண்பர் ரங்கைய செட்டியாரைக் காணும்படி நேரிட்டது” என்றவளவில், தங்கவேலு முதலியார் “ஓஹோ தண்டலுக்காகப் போயிருந்தாயோ?” என்று பரிஹாஸமாகக் கேட்டார்.

கந்தசாமி முதலியார் நகைத்துக் கொண்டே “ஒரு கார்யமாகப் போயிருந்தேன். செட்டியார் முகக்குறிப்பால் அவருக்கு ஏதோ மனக்கவலை உண்டாயிருப்பதாகத் தெரிந்துகொண்டு, அவரை அதன் காரணம் என்னவென்று உசாவினேன். அவர் முனிஸிபல் ஆபீஸிலிருந்து வந்து மேஜையின்மேல் கிடந்த ஒரு கடிதத்தை எடுத்துக் காட்டினார்.” என்றவளவில், தங்கவேலுமுதலியார் “அந்தக் கடிதத்தில் மனக்கவலை யடைவதற்கான விஷயம் என்ன? என்று கேட்டார். அதற்கு விடையாகக் கந்தசாமி முதலியார் பின்வருமாறு விரித்துரைத்தார்.

கொத்தவால் சாவடியின் கிழக்கிலும் மேற்கிலும் சிறிது தூரம் வரையில் வீதி விசாலமாக இல்லாமையால், கட்டை வண்டிகள் ஒன்றோடொன்று முட்டிக்கொள்வதும், அவஸரமாகப் போகவேண்டிய உத்யோகஸ்தர்களுடைய குதிரை வண்டிகள் தடைப்பட்டு ஆலஸ்யமடைவதும், குதிரைகள் மிரண்ட ஆபத்து நேரிடுவதுமாக இருப்பதால், வீதியை விசாலமாக்கக் கருதி முனிஸிபல் ஸபையார் “வீதியின் இருபுறத்திலுமுள்ள வீடுகளில் முன்பிதுங்கலாக உள்ளவைகளை வேண்டிய அளவு மதிப்பிட்ட வாங்கி அவ்வளவாக இடித்தெடுத்து விடவேண்டும்; மதிப்பிட்ட தொகையைப் பெற்றுக்கொண்ட வீட்டுக் குரியவர்கள் தங்கள் வீடுகளை ஒழுங்குபடுத்திக் கொள்வ” தென்று தீர்மானம் பண்ணி, அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றும்படி ப்ரெஸிடென்டுக்கு ஸர்வாதிகாரமும் கொடுத்துவிட்டனர். இந்த ஸங்கதியைப் பற்றிய தாக்கீது, மேற்கில் அடிபட்ட பிள்ளையார் கோயில் வரையிலும் கிழக்கில் பழைய மார்க்கெட் (இப்பொழுது லோன் ஸ்க்வேர் என்று வழங்கு மிடம்) வரையிலும் எல்லா வீட்டுக்காரர்களுக்கும் மண்டிக்காரர்களுக்கும் ஒவ்வொரு பிரதியனுப்பிவிட்L, ப்ரெஸிடென்ட் அந்தந்த அளவின்படி மதிப்பு ஜாபிதா தயார் செய்யும்படி இரண்டு முனிஸிபல் ஓவர்ஸீயர்களை நியமித்தார். இப்பொழுதுதான் அந்த ஓவர்ஸீயர்கள் அளவெடுத்து வருகின்றனர். இதைப்பற்றிய தாக்கீதே ரங்கைய செட்டியார் எனக்குக் காண்பித்தது. செட்டியாருடைய வீட்டிற்குக் கிழக்கில் சில வீடுகள் உள்ளடங்கியிருக்கிற அளவாக இடித்தாலும், செட்டியார் வீட்டின் முன்பக்கத்தில் உள்ள ஆபீஸ் அறையும் அதன்மீதுள்ள மாடியறையும் மேல்புறத்திலுள்ள புருவாதியும் பரிஷ்காரமாய்ப் போய்விடும். வீடு அதிக நீள மில்லாமையால், இப்போது ஸம்ஸார கார்யங்களுக்கு ஒரவிதத்தில் போதுமான வீடு, இடித்த பிறகு எவ்விதத்திலும் அவருடைய வாஸத்துக்க யோக்யமாகாது. வர்த்தகர்களுக்கு வசதியான வேறிடம் அந்தப் பக்கத்தில் எளிதில் கிடைக்காதே. அதனால்தான் செட்டியார் அதைர்யமடைந்து ஏக்குற்றிருக்கிறார். நான் கொஞ்சம் தைர்யம் சொல்லிவந்தேன்.

தங்கவேலு முதலியார். -ஆமாம். நாலுபேருக்குள்ளது செட்டியாருக்கும். மற்றவர்களும் இதற்கு ஈடுபட்டுத்தானே தீரவேண்டும். இதற்கு எவர்தான் என்ன பரிகாரம் செய்வது இயலும்? நீ அவருக்கு எவ்விதத்தில் தைர்யம் கொடுத்து வந்தாய்?

கந்தசாமி முதலியார்.- நான் உன்னைப்பற்றியும் யாதொரு ப்ரஸ்தாபமும் செய்யவில்லை. உன்னுடைய ஒருசாலை மாணாக்கரான செட்டியாரால் கூடுமானால் இதற்குப் பரிகாரம் தேட முடியும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு தைர்யம் கொடுத்ததே தவிர வேறில்லை.

தங்கவேலு முதலியார்.- ஸரி. உனக்கு ஏதாவது யோசனை தோன்றுகிறதா? நாம் சென்ற வருஷம் செட்டியார் வீட்டில் ஒர விசேஷத்துக்குப் போயிருந்தபோது, நான் பேச்சுப் பராக்கில் வீட்டையும் வீடு இருக்கிற இடத்தையும் ஒருசிறிதும் கவனிக்கக் காரணமில்லாமல் போய்விட்டது. நீ அடிக்கடி அவர் வீட்டுக்குப் போவதனால் உனக்கு ஏதாவது பரிகாரம் தோன்றுகிறதா?

கந்தசாமி முதலியார்.- நீ கேட்ட பிறகு இதைப்பற்றிச் சிந்திக்கையில் ஒரு பரிகாரம் என் மனத்தில் தோன்றுகிறது.

தங்கவேலு முதலியார்.- நேரமாகிறது. அதை விளக்கமாகவும் சுருக்கமாகவும் சொல்லிக்கொண்டு வா.

கந்தசாமி முதலியார்.- முதலாவது செட்டியார் வீட்டுக்கெதிரில் வீதி அதிகம் அகலக்குறைவு இல்லை. செட்டியார் வீட்டுக்குக் கிழக்கில் உள்ள பத்துப் பன்னிரண்டு வீடுகள் ஏழெட்டடி உள்ளடங்கியே யிருக்கின்றன. செட்டியார் வீடுதான் முனிஸிபல் அதிகாரிகள் எடுத்திருக்கிற அளவின் கடைசி யெல்லை.

தங்கவேலு முதலியார்.- ஸரி, நீ எடுத்துக்காட்டிய ஷரத்துகள் போதுமானவை. ஒருகை நெட்டிப்பார்க்கலாம். இன்னும் காலதவணை எவ்வளவு இருக்கிறது?

கந்தசாமி முதலியார்.- ஒருமாதத்துக்கு அதிகம் இருக்கிறது. மதிப்பு ஜாபிதாவே இதற்குள் தயாராகமாட்டாது.

தங்கவேலு முதலியார்.- மெய்தான், ஆனாலும் இப்படிப்பட்ட விஷயங்களில் தாமஸம் செய்வது கூட்து. சில நாள் கழித்துப் போனால் “எல்லாம் உத்தரவாய் விட்டது. இனி எங்களால் ஆவது ஒன்று மில்லை” யென்று கீழ் உத்யோகஸ்தர்கள் கையை விரித்துவிடுவது ஸஹஜம். ரத்தினசெட்டியார் இப்பொழுது வேப்பேரியில் மூக்காத்தாள் கோயில் தெருவுக் கருகில் சொந்தவீடு வாங்கிக்கொண்டு அதில் குடியிருக்கிறார். மாலை வேளையில் உனக்குத் தண்டல் வேலை ஸரியாக இருக்கும். காலையில் நான் போஜனம் பண்ணிக்கொண்டு அவரைப் பார்த்து விட்டு அப்பால் ஆபீஸ் வேளைக்கு ஸரியாகப் போவது கஷ்டம். மேலும் காலையில் நான் போகிற ஸமயம் அவரும் புறப்படுகிற ஸமயமாக இருக்கும். ஸாவகாசமாகப் பேச நேரம் இருக்காது. உன் வண்டிக்கு எப்போது ஒழிவு கிடைக்கும்? நான் ஆபீஸிலிருந்து மாலையில் ஐந்தரை மணிக்குப் புறப்பட்டால், வேப்பேரிக்குப் போய்ச் செட்டியாரோடு கலந்துபேசி வீடுவந்து சேர இரவு ஒன்பது மணியாகும். இன்று புதன் கிழமையாகையால் இன்று மாலையே இந்த விவகாரத்துக்குரிய காலம். ஆகையால் வண்டிக்காரனுக்குத் திட்டம்பண்ணி மாலை ஐந்து மணிக்கே வண்டியை எங்களாபீஸுக்கு அனுப்பிவிடு.

கந்தசாமி முதலியார்.- ஆஹா அப்படியே செய்கிறேன்; இன்று மாலையில் நான் ரெயில் வண்டியேறி வீடுவந்து சேர்கிறேன். இந்தப்ரகாரம் முடிவு செய்துகொண்டு அவரவர் உண்டுடுத்து ஆபீஸுக்குப் போய்விட்டனர்.

தங்கவேலு முதலியார் ரத்தினசெட்டியாரிடம் பேசிவந்த விஷயங்களை அன்றிரவே அறிந்துகொண்டு மறுநாள் மாலையில் கந்தசாமி முதலியார் ஆபீஸிலிருந்து ரங்கைய செட்டியார் வீட்டுக்கு நேராகப் போனார்.அப்போது மேன்மாடியில் வர்த்தக ஸம்பந்தமான சிலகடிதங்களுக்கு இன்ன இன்ன விதமாக விடையெழுதுவதென்று தம்முடைய கணக்கப் பிள்ளைக்குத் திட்டம் செய்திருந்த செட்டியார், கணக்கப்பிள்ளையைக் கீழே அனுப்பிவிட்டு, “வாருங்கள் முதலியாரே, இப்படி உட்காருங்கள். ஆபீஸிலிருந்து நேராய் வந்தீர்களோ? நீங்கள் வழக்கமாக வருகிற வேளைக்கு நெடுநேரம் முன்னதாகவே இன்று வந்தமையால், எனக்குக் கொஞ்சம் தைர்யம் உண்டாகிறது” என்றார்.

கந்தசாமி முதலியார்.- பகவத்கடாக்ஷம் பூர்ணமாக இருக்கிறதென்று முந்தைநாளே சொல்லிக்கொண்டேனே. நல்லமனமும் எண்ணமும் உள்ள உங்களக்கு என்ன கெடுதி வரும்? நம்முடைய சிநேகிதர் என் வீட்டுக்கு மூன்றாவது வீட்டுக்காரர்
தங்கவேலு முதலியாரை நீங்கள் அறிவீர்கள் அல்லவா?

செட்டியார்.- உங்கள் வீட்டுக்கு வந்தபோதெல்லாம் அவரில்லாமல் வார்த்தையாடியதே கிடையாது. உங்களிடம் வாங்கிய கடனெல்லாம் அவர்பேரில் பத்திரம் செய்திருக்க, அவரை நான் அறிவேனா என்று கேட்பானேன்? அவரைப்பற்றி இப்பொழுது ப்ரஸ்தாபித்த காரணம் என்ன?

கந்தசாமி முதலியார்.- அவருக்கு ஒருசாலை மாணாக்கரான பேரி வகுப்பைச் சேர்ந்த செட்டியார் ஒருவர் முனிஸிபல் ஆபீஸில் ப்ரெஸிடென்டுக்கு வேண்டியவராய் பொது டிபார்ட்மென்டுக்கு மானேஜராயிருக்கிறார். நேற்றுமாலையில்தங்கவேலு முதலியார் அவரிடம் போய்வந்தார். உங்கள் கார்யம் ப்ரதிகூலமாகாதபடி இயன்றவரையில் பலங்கட்டி வந்திருக்கிறார்.செட்டியார்.- ஆமாம், இது பலபேரை பாதிக்கிற விஷயமாக இருக்கையில் நமக்கு மாத்ரம் அநுகூலம் எப்படி உண்டாகும்? நமக்கு அநுகூலமானால் அது தெய்வாதீனமென்றே எண்ணவேண்டும். என்னமோ வரதராசப்பெருமாளை நம்பியிருக்கிறேன். அவர்தான் என் குடும்பத்தை ரக்ஷிக்கவேண்டும்.

கந்தசாமி முதலியார்.- இனி நீங்கள் எவ்வளவும் இந்த விஷயத்தில் வ்யாகுலம் கொள்ளவேண்டா. வேறு வேலை கொஞ்சம் இருக்கிறது; அதைப் பார்த்துக்கொண்டு போக வேண்டும். ஆகையால் நான் செலவு பெற்றுக் கொள்ளுகிறேன். ஏதாவது விசேஷ செய்தி தெரிய வந்தால் உடனே வந்து உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.கந்தசாமி முதலியார் அப்பால் இரண்டு செட்டிமாரிடத்தில் தண்டவேண்டிய தரகைத் தண்டிக்கொண்டு வீடுபோய்ச் சேர்ந்தார்.

III

லோன் ஸ்க்வேரிலிருந்து அடிபட்ட பிள்ளையார் கோயில் வரையில் அங்கங்கே வீதியின் அகலத்தையும் வீடுகளில் இடிக்க வேண்டிய பாகங்களின் அளவையும் காட்டிய ஒரு படத்தையும், கட்டிக்கொடுக்கவேண்டிய நஷ்டங்களை விவரித்துக் காட்டும் ஒரு மதிப்பு ஜாபிதாவையும் தயார்செய்து, அவைகளை ஓவர்ஸீயர்கள் ப்ரெஸிடென்டின் பார்வைக்கு அனுப்பினார்கள்.
ப்ரெஸிடென்ட் அவைகளைப் பார்வையிட்டுக் கைநாட்டு செய்து மானேஜரிடம் அனுப்பினார். மானேஜர் அது ஸம்பந்தமான தஸ்தாவேஜுகளை வைத்தக்கொண்டு ஊன் றிப் பார்க்கையில், மதிப்பு ஜாபிதாவில் ஏற்பட்டிருக்கிற தொகை ஸபையார் முடிவு செய்த தொகைக்கு எழுபதினாயிரம் அதிகப்படுதலால் அந்த அதிகப்படி தொகையை நிர்வகிப்பதற்குப் பண்டு போதாதென்றும், அடிபட்ட பிள்ளையார் கோயிலுக்கு இப்பால் காலேயரைக்கால் பர்லாங்க் வரையில் வீதி போதுமான விசாலகுள்ளதே யென்றும் ப்ரெஸிடென்டக்கு எடுத்துக் காட்டினார். ப்ரெஸிடென்ட் எல்லாவற்றையும் ஆலோசித்து, அடிபட்ட பிள்ளையார் கோவிலிலிருந்து காலேயரைக்கால் பர்லாங்க் தூரத்துக்கு இப்பால் தொடங்கி வேலையை நடத்துவதென்று ஓவர்ஸீயர்களுக்குத் தாக்கீது செய்தார். இதனால் ரங்கைய செட்டியாருடைய வீடுமாத்திரமேயன்றி வேறு இரண்டு மூன்று வர்த்தகர்களுடைய வீடுகளும் இந்த ஆபத்தினின்று விடுதலையாயின. ரத்தினிசட்டியாரும் தங்கவேலு முதலியார் நாடிவந்த விவகாரம் அனுகூலமாகி விட்டதென்று அவருக்கு ரஹஸ்யமாகவும் குறிப்பாகவும் ஒர கடிதம் எழுதினார்.தினம் ஒரு முறையாவது தங்கவேலு முதலியாரிடம் போய்ப் பொழுதுபோக்காகப் பல விஷயங்களைப் பேசிவரும் கந்தசாமி முதலியாருக்கு இந்த ரஹஸ்ய ஸங்கதி தெரிந்த அன்று மாலையே அவர் செட்டியாரிடம்போய் அதை ரஹஸ்யமாகத் தெரிவித்தார். செட்டியார் தம்முடைய வீடு ப்ரமாதமான ஆபத்திலிருந்து தப்பினதற்காக அடைந்தமகிழ்ச்சிக்கு அளவில்லை.

பெரிய தோட்டமும் பங்களாவும் தம்மனைவிக்குச் சீதனமாகக் கிடைத்திருந்தாலும் அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சி உண்டாகாது. சற்று நேரம் வேடிக்கையாகப் பேசியிருந்து “இப்படிப்பட்ட மஹோபகாரம் பண்ணின நம்முடைய சிநேகிதருக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்” என்றார். கந்தசாமி முதலியார் ” அவர் அவ்விதம் கைம்மாறு கருதி ஒருநன்மை செய்பவரல்லர். அவர் ஒருபோக்கு” என்றார். “இருந்தாலும் என்மனம் என்னைத் தொளைக்குமே. நான் என்ன செய்வேன்” என்று சொல்லி, செட்டியார் கந்தசாமி முதலியாருடைய செவியில் சிலவார்த்தைகளை அதிரஹஸ்யமாக உரைத்து, “இனி என் விருப்பத்தை நிறைவேற்றுவது உம்முடைய பொறுப்பு. எச்சரிக்கையாக விசாரித்துக் கொண் டிருக்கவேண்டும்.” என்று வற்புறுத்தினார். கந்தசாமி முதலியார் “நல்லது, அப்படியே ஆகட்டும்” என்றுகூறி விடைபெற்று வீட்டுக்குத் திரும்பினார்.

உடனே கந்தசாமி முதலியார் தங்கவேலு முதலியாரிடம் போய் “ரங்கைய செட்டியாருக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவில்லை.

ஓய், உன்னை அவர் மஹோபகாரியாகக் கொண்டாடினார். அவரடைந்த மகிழ்ச்சியை நேரில் கண்டால், நீ அவர் பொருட்டாக எடுத்துக்கொண்ட சிரமம் சிரமமாகத் தோன்றாது. உனக்குக் கனகாபிஷேகம் செய்தாலும் தீரா தென்று அவர் மனம் அவ்வளவு உருகிவிட்டது. நல்ல உத்தமராகையால் என் நிமித்தமாக நீ அவருக்குச் செய்த உபகாரம் எனக்கு அதிக ஸந்தோஷத்தைத் தருகிறது” என்று பல உபசாரவார்த்தைகள் சொல்லிப் போய்விட்டார்.

தரகிரி வேலை கிடைத்தவுடனே கந்தசாமி முதலியார் தம் தம்பியோடு பாரிகத்துப் பண்ணிக் கொண்டார். அவருக்கு முறைப்பேறாக இரண்டு அண்பிள்ளைகளும் இரண்டு பெண் பிள்ளைகளும் உண்டு. கதை நிகழ்ந்த காலத்தில் இவருடைய மூன்றாவது இளம் பிள்ளையும் நான்காவது இளம் பெண்ணும் அதிபால்யமானவர்கள். முன்பின் பாத்திய மில்லாத ஒரு பிள்ளைக்கு இரண்டாம் பேறான பெண்ணைக் கொடுத்து, மூத்த குமாரனுக்கு அந்த மாப்பிள்ளையின் தங்கையைக் கொண்டார். தன்னுடைய தம்பிமாரில் ஒருவருக்குக் கந்தசாமி முதலியாருடைய பெண்ணைக் கொள்ளவேண்டுமென்கிற உள்ளெண்ணம் தங்கவேலு முதலியாருக்கு உண்டாயிருப்பதைக் குறிப்பால் அறிந்தம், அந்த எண்ணம் முற்றுவதற்கு முன்னே கந்தசாமி முதலியார் மூத்த பெண்ணின் விவாஹத்தைத் தங்கவேலு முதலியாருடைய உதவியைக்கொண்டே முடித்துவிட்டார். தங்கவேலு முதலியார் பாடசாலையில் கல்விகற்கும் போது படிப்பதற்கென்று ஓரறை கடிக்கூலிக்க வைத்திருந்த வீட்டுக்காரர் ஆண்திக் கில்லாதவ ராகையால், அவருடைய வாக்கு ஸகாயத்தால் அந்தக் கல்யாணம் எளிதில் முடிந்தது. சம்பந்திகள் அதிகம் பணமுடையவர்களாயினம் பூஷணரூபமாகவாவது வீடுவாயில் ரூபமாகவாவது அதிக செலவில்லாமலே உபாயமாகக் கல்யாணத்தை முடித்துவிட்டனர்.

தங்கவேலு முதலியாருக்குப் பல தம்பிமார்களும் தங்கைமார்களும் உண்டு. தம்பிமார்களைப் படிப்பிக்கவம் தங்கைமார்களைக் கல்யாணஞ்செய்து கொடுக்கவும் அடிக்கடி செலவுகள் நேரிட்டு வந்தமையால் அவர் கடன் படாமல் காலங்கழித்ததே அதிசயம். ப்ராவிடென்ட் பண்டில் சேர்மான மாகியிருந்த பணமன்றி அவரிடம் கையிருப்பாக ஒன்றுமில்லை. தம்பிமார் தங்கைமார் போக, இவர்மட்டில் ஐந்தாறு பிள்ளையும் பெண்ணும் பெற்றவராகையால், யாதொரு ஸௌகர்யமமின்றி ஸாதாரணமான உடையு முண்டியுமாகவே காலங் கழித்துவந்தார். வரவுக்க மிஞ்சின செலவு செய்வது எப்பொழுதும் இல்லாமையால் கௌரவமாகவே ஜீவனம் பண்ணிவந்தார். கொஞ்சம் நிலம்பலம் ஏற்படுத்திக்கொள்ள எண்ணமிருந்தாலும், அதை நிறைவேற்ற யாதொரு வழியும் தோன்றாமலே, சம்பளம் உயரும்போது பார்த்துக் கொள்ளலாமென்று நினைத்திருந்தார்.

வியாசர்பாடி யேரியின் ஸமீபத்தில் ஒரே சதுரமான ஒரு நிலம் ஏறக்குறையப் பதினெட்டு ஏகர் விஸ்தீரண முள்ளது. அத பத்துவருஷகாலம் சென்னை ரெயில்வே கம்பனியார் வசத்திலிருந்தது. கட்டடங்கள் கட்டுவதற்கு வேண்டிய கல்சூளை வேலைகளெல்லாம் நிறைவேறிய பின் சிலகாலம் கேள்வி முறையில்லாமல் நாகதாளிபுதர்கள் சூழ்ந்து வேலங்காடாகி ஸமீபத்திலுள்ளவர்கள் காலக்கடன் கழிப்பதற்கு வசதியாக இருந்தது.

பெரிய உத்தியோகம் பண்ணி உபகாரச் சம்பளம் பெற்றிருந்த பெரிய மனிதர் ஒருவர், முன்னே அந்த வேலங்காட்டைக் கத்தகையாக எடுத்து வேலமரங்களை வெட்டிக் கட்டை தொட்டிக் காரர்களுக்கு விற்றுப் பணமாக்கிக் கொண்டார். குத்தகைக்கும் வேலையாள்களுக்கும் காவலாள்களுக்கும் செலவானது போக மீதி பணத்தைக் கொண்டே அந்தச் சதுரத்தை ஏலத்திலெடுக்க விரும்பி, டெப்யுட்டி கலெக்ட்டருடைய உதவியால் நிலத்தை ஏலத்துக்குக் கொண்டவந்தார். அடுத்த குக்ராமங்களில் தமக்குப் போட்டியாக அதிகதொகை கொடுத்து ஏலத்தில் எவர் எடுக்கப்போகிறார் என்று கேட்டுக் கொண்டிருக்கையில், ஏல விளம்பரம் ப்ரஸித்தமா** தினம் காலக்கடன் கழிக்கிற இடமாகையால் இந்த நிலமை மேல் நெடுநாளாகத் தங்கவேலு முதலியாருக்கு நேர்மை உண்டு. அது கந்தசாமி முதலியார் அறியாத தல்ல.

இந்த நிலம் ஏலத்துக்கு வருமென்று முன்னரே குற**லறிந்திருந்த தங்கவேலு முதலியார், வெளியூரில் துரைத்தன வைத்யராக இருந்த தம்மடைய மூத்த மைத்துனருக்காவது தெரிவித்து அந்த நிலத்தை அவர் பெறும்படி செய்யவேண்டுமென்று யோசித்து, அவருக்கு அவசரமான கடிதமொன்று எழுதினார். அவர் எவ்வளவானாலும் பின்வாங்க வேண்டாமென்று அவசரத்தந்தி அனுப்பினார். இரண்டாம் பேருக்குத் தெரியாமல் அதை வாங்கித் தங்கவேலு முதலியார் ஜேபியில் வைத்துக்கொண்டார்.

IV

ஏலவிளம்பரத்தைப் பார்த்தவுடனே கந்தசாமி முதலியார் தங்கவேலு முதலியாரைத் தேடிக்கொண்டுபோய் விளம்பரத்தைக் காட்டி, “ஓய், ஓய், நிலம் பலம் தேடவேண்டு மென்கிற எண்ணம் உனக்குச் சிலகாலமாக உண்டல்லவா? அந்த வேலங்காட்டின்மேல் உனக்கு நோக்க முண்டென்பதையும் நான் குறிப்பினால் அறிந்திருக்கிறேன். இது நல்ல ஸமயம். அந்த வேலங்காடு முன்னே ஊரார் வசத்திலிருந்தபோது நெல் மிக நன்றாய் விளைந்திருந்த நன்செய்யென்று கிழங்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இது உனக்குத் தெரியாத விஷயமா? என்ன சொல்லுகிறாய்?” என்று கேட்டார்.

தங்கவேலு முதலியார்.- மெய்தான். நேற்றே இதைப்பற்றிப் புரைசல் வந்தது. அந்தப் பெரிய மனிதன் உள்ளுக்குள்ளே பெரிய கைகளைப் பிடித்து அநுகூலப்படுத்தி வைத்திருக்கிறானே. நம்மால் என்ன ஆகும்?

கந்தசாமி முதலியார்.- சில்லரை தேவதைகளைப் பிடித்துப் பூஜைபோட்டால் எவ்விதமான கார்யமும் எளிதில் முடியும். பில்கலெக்டர் அவனுடைய சேவகன் கணக்கப்பிள்ளை முதலானவர்களுக்கு ஒவ்வொரு ஸ்வர்னபுஷ்பம் ஸமர்ப்பித்** நம்முடைய எண்ணம் பலிக்கிறது பார்.

தங்கவேலு முதலியார்.- அதுவும் உண்மைதான். உன்னை நம்பாமல் என்னிடம் கையிருப்பு என்ன இருக்கிறது? இந்த வாரத்துக்குக் கையில் ரொக்கத்தொகை வேண்டுமே. கடன் வாங்க நேரமும் இல்லை. கிடைத்தாலும் சீக்ரத்தில் அதைத் தீர்க்க வழியும் இல்லை. முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப் படுதலான அவ்வளவே நான் கொள்ளும் ஆசை.

கந்தசாமி முதலியார்.- பணத்தைப் பற்றி உனக்கேன் கவலை? ரொக்கத்தொகையை நிர்வாகிக்க நான் காத்துக் கொண்டிருக்கிறேன். ஏலத்தில் நமக்கு அநுகூலமானால் தரத்துக்கேற்றபடி பப்பாதியாக நிலத்தைப் பங்கிட்டுக் கொள்ளலாம் என்பது என் உத்தேசம். உனக்குக் கிடைத்தபோது உரிய தொகையைக் கொடு. அதைப்பற்றி ஒன்றும் யோசிக்கவேண்டாம். நான் முன்னின்றால் போட்டி மிகும். எனக்கு ஸமயத்தில் மன மொப்பாமல் விட்டுவிடுவேன். இன்றைக்கு லீவு கொடுக்கும்படி உங்கள் மானேஜருக்குக் கடிதம் எழுதிவிடு. ஏல ஸம்பந்தமான ஆஸாமிகள் வேளைக்கு முன்னதாகவே வந்து விடுவார்கள். இந்த ஸமயம் நாற்பதைம்பதுக்குப் பின் வாங்கக்கூடாது. உடனே போய் டெப்யுட்டி கலெக்ட்டராபீஸில் உத்யோகமாயிருக்கிற கணக்கப்பிள்ளை நம் வீட்டுக் கருகிலிருப்பவரைக் கண்டு ஓர் உறையில் ஒருநோட்டைப் போட்டு அவர் கையில் ஸமர்ப்பித்து விடு. மற்றச் சில்லரை தேவதைகளுக்கு அவசியமானதையும் அவர் மூலமாகவே சேர்த்து விடு. நான் ஆபீஸில் மூன்று மணிக்கே லீவு பெற்றுக் கொண்டு, வேடிக்கை பார்க்க வருபவன்போல் ரொக்கத்தோடு வந்திருக்கிறேன். நீ முன்னின்று ஒருகை பார்க்கவேண்டும்.

தங்கவேலு முதலியார்.- லீவு கடிதம் எழுதி நிற்பது முன்னதாகவே ஸந்தேகத்துக் கிடமுண்டாக்கும். நாலரை மணிக்குத்தானே ஏலம் ஆரம்ப மாகப்போகிறது. ஆபீஸிக்குப்போய் மூன்று மணி வண்டியில் வந்து உடுப்புக்களைந்து தாஹசாந்தி செய்துகொண்டு நாலுமணிக்கு நிலத்தண்டை போகிறேன்.தங்கவேலு முதலியார் தமது மைத்துனர் கொடுத்த தந்தியை அடியோடு மறந்தே விட்டார்.

நிலத்தை ஏலத்துக்குக் கொண்டுவருவதற்கான வழிகளையெல்லாந் தேடிய பெரிய மனிதர் அந்த நிலத்தண்டை ஏலம் போடுகிற காலத்தில் வரவில்லை. அக்கம்பக்கத்திலுள்ள கேவலமான குடியானவர்களோடும் உத்யோகஸ்தர்களோடும் ஸரிவரிசையாக நின்று போட்டி போடுவது தம்முடைய அந்தஸ்துக்குக் குறைவென்று கொண்டு, தம்முடைய சிற்றப்பன் பிள்ளையாகிய சக்ரபாணி முதலியாரை அனுப்பினார். அவர் மாதம் இருபது ரூபா சம்பளம் வாங்கி ஒரு ஸாதாரணமான உத்யோகத்தில் அமர்ந்திருந்தவர். தமையனான பெரியமனிதருக்குக் காரியஸ்தராகப் பலவீட்டுக் கார்யங்களை நடத்தி வருபவராயினம், அவர் தைர்யம் போதாதவர். மஹா மந்தமும் கோழைத் தனமும் உள்ளவர்.

ஊரார் நூறுபேர் வரையில் வந்துகூடியிருந்தார்கள். ஸரியாக நாலரைமணிக்கு வந்து ஏலங்கூறுகின்றவர் தம்முடைய வேலையை ஆரம்பித்தார். ஏல விளம்பரத்தைப் படிக்கச்செய்து, இந்த நிலம் ஐந்நூறு ரூபா என்று ஆரம்பஞ்செய்தார்.
சக்ரபாணி முதலியார் அறுநூறு என்றார். குடியானவர்களில் ஒருவர் அறுநூற்றிருபத்தைந்து என்றார். ரெயில்வே வேலைக் கூடத்தில் கூலிவேலை செய்பவன் ஒருவன் அறுநூற்றைம்பது என்றான். ரெயில்வே வேலைக்கூடத்தைச் சேர்ந்த ஆபீஸில் இருபத்தைந்து ரூபா சம்பளக்காரனாகிய லேககன் ஒருவன் அறுநூற்றெண்பது என்றான். வெற்றிலைத்தோட்டக்காரர்களில் ஒருவன் எழுநூறு என்றான். ஊர் மிராசுதாரரில் ஒருவர் எண்ணூறு என்று போட்டிக்கு வந்தார். எண்ணூறு எண்ணூறு என்ற கூவிக்கொண்டிருக்கையில், அடுத்த க்ராமத்தில் பங்குகாரன் ஒருவன் எண்ணூற்றைம்பது என்றான். சக்ரபாணி முதலியார் “எண்ணூறு தொளாயிரத்துக்குமேல் எடுக்கக்கூடிய பெரியமனிதன் இந்த ஊரில் எவன் இருக்கிறான்? ஆயிரத்துக்குமேல் ஓடாதே யென்று தமையனார் சொல்லிவைத்திருக்கிறார்.

இங்கே போட்டியோ பலமாயிருக்கிறது. ஆயிரத்துக்குமேல் ஓடினால் அவருடைய கோபத்துக்கு இலக்காக என்னாலாகுமா? என்னசெய்வேன்?” என்று யோசித்திருக்கையில், தங்கவேலு முதலியார் தொளாயிரம் என்றார். உடனே சக்ரபாணி முதலியார் ஆயிரமென்றார். தங்கவேலு முதலியார் சக்ரபாணி முதலியாருடைய முகம் வாடுவதைக்கண்டு ஒரேநெட்டாக ஆயிரத்திருநூறு என்று தூக்கிவிட்டார்.

ஏலம் போடுவோன் “ஆயிரத்திருநூறு ஆயிரத்திருநூறு ஒருதரம் இரண்டு தரம்” என்று கூவி, இரண்டு மூன்று விநாடியளவு இருமியிருந்து, போட்டிபோடச் சிலர் தூரத்தில் யோசிக்கிற குறிப்பைக் கண்டு, “மூன்றுதரம்” என்றான். உடனே ஒருவர் குரலும் கிளம்பாமையைக் கண்ட, “தங்கவேலு முதலியார் ஆயிரத்திருநூறு” என்றான். உடன் வந்த உத்யோகஸ்தர்கள் உரிய தஸ்தாவேஜுகளில் பதிவுசெய்து கொண்டு தங்கவேலு முதலியாருடைய கையெழுத்தையும் வாங்கிக்கொண்டனர். கந்தசாமி முதலியார் ஒருவருமறியாதபடி பன்னிரண்டு நூறு ரூபா நோட்டைத் தங்கவேலு முதலியாருடைய சொக்கா ஜேபியில் விட்டு அதின்மேல் கண்ணாயிருந்தார். அதைக் குறிப்பாக அறிந்த தங்கவேலு முதலியார் நோட்டுகளை யெடுத்து எண்ணிக்கொடுத்து உரிய தஸ்தாவேஜுகளைப் பெற்றுக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினார்.

அன்றிரவே கந்தசாமி முதலியார் தங்கவேலு முதலியாரிடம் அதிக மனமகிழ்ச்சியுடனே போய் “ஓய், நல்ல ஸமயம் பார்த்து நெட்டினாய். அதற்காகத்தான் நான் உன்னை முன்னே தள்ளினேன்.” என்றார்.

தங்கவேலு முதலியார்.- இருக்கிற நோக்கத்தைக் கண்டு கொண்டேன். சக்ரபாணி அதற்குமேல் ஏறுவதாகத் தோன்றவில்லை. சில்லரை சில்லரையாக ஏற்றினால் எவனாவது குறுக்கிட்டுக்கொண்டே யிருப்பான். ஒரேயடியாய் இருநூறு தூக்கி விடவே அநேகர் ப்ரமித்து நின்றார்கள். அந்தக் குறிப்பைத் தெரிந்துகொண்ட ஏலக்காரன் நமக்கு அநுகூலமாய்க் கார்யத்தை முடித்துவிட்டான்.

கந்தசாமி முதலியார்.- அந்த நிலம் வானவாரிதானே, ஏரிப்பாய்ச்சலு மில்லையே. அதற்கு யார் இன்னும் அதிக தொகை கொடுப்பார்கள்.

தங்கவேலு முதலியார்.- ஓய் உனக்கு ஸங்கதி தெரியாது. மேலண்டையில் மேடான பாகத்தை மனைமனையாகப் பிரித்து மனை ஐம்பதுரூபா விழுக்காடு ஒருகாணியை விற்றுவிட்டால் நாம் போட்ட தொகை வந்துவிடும். மீதி அவ்வளவும் லாபந்தானே.

கந்தசாமி முதலியார்.- அந்த யோசனை என் புத்தியில் படவில்லை. இப்பொழுது ஒன்றும் அவஸரம் இல்லை. போகப் போகப் பார்த்துக் கொள்ளலாம். இனி தாமஸ மில்லாமல் நிலத்தைச் சீட்டுப் பண்ணிக்கொள்ள வேண்டும்.

தங்கவேலு முதலியார்.- ஸரிதான். எனக்கு அறுநூறு ரூபா சேர்மான மானபிறகல்லவா பாதிக்கு ஸ்வாதீனம் ஏற்படப் போகிறது. சீக்ரத்தில் அந்தத் தொகை எவ்விதம் கிடைக்கப்போகிறது. ஆகையால் சீட்டுப்பண்ணவேண்டிய ஏற்பாடுகளை உன்பேரிலேயே செய்துகொள். அதுதான்நியாயம்.கந்தசாமி முதலியார்.- என் பணம் இருபதினாயிரத்துக் கதிகம் உன்பேரால் கடன்பத்திரம் எழுதிச் செட்டிமார்களுக்குக் கொடுத்திருக்கும்போது, இந்த ஆறுநூறு ரூபாவுக்கா நம்பிக்கையில்லாமல் போய்விட்டது. என் உடம்பு இருக்கிற நிதானம் உனக்குத் தெரியாதா? நான் திடீரென்று கண்ணைமூடிக் கொள்கிற பக்ஷத்தில், நீ வேண்டுமானால் யாதொரு கஷ்டமின்றி இருபதினாயிரம் தேடிக்கொள்ளலாமே. என் பிள்ளைகளை அப்படி த்ரோஹம் செய்பவனல்ல நீ யென்பத எனக்குத் தெரியாதா? இந்த நிலம் உன்பேரிலேதான் சீட்டாக வேண்டும்.

தங்கவேலு முதியார்.- உன் இஷ்டப்படி செய். சீட்டுசெய்வதற்க வேண்டிய கட்டணத்தைக் கட்டின பிறகு காலதவணைப்படி சீட்டு வந்து சேர்ந்தது. சீட்டைத் தங்கவேலு முதலியார் கந்தசாமி முதலியாரிடங் கொடுத்தார்.

கந்தசாமி முதலியார் மறுநாள் மாலையில் ரங்கையசெட்டியாரிடம் போய்ச் சீட்டைக் காட்டி “உங்கள் அபீஷ்டத்தின்படி செய்து முடித்தேன். நீங்கள் அன்று ரஹஸ்யமாய் உரைத்த வார்த்தை நிறைவேறிவிட்டது.” என்றார். உடனே செட்டியார் படுக்கையறையில் ப்ரவேசித்த இரும்புபெட்டியைத் திறந்து ஆயிரம் ரூபா நோட் ஒன்றும் நூறுரூபா நோட் இரண்டும்
எடுத்துவந்து கந்தசாமி முதலியாரிடம் ஸந்தோஷத்தோடு கொடுத்து “இப்போதுதான் என் மனத்துக்கு நிம்மதி உண்டாயிற்று” என்றார்.

மறுநாள் காலையில் கந்தசாமி முதலியார் தங்கவேலு முதலியாரிடம் போய், “என் பெரிய பிள்ளை இந்த ஸங்கதியை அறிந்திருக்க வேண்டுமே யென்று நேற்றுச் சீட்டை வீட்டுக்குக் கொண்டுபோனேன். சீட்டு உன்னிடத்திலேயே இருக்கட்டும். உனக்குப் பணம் உண்டானபோது நிலத்தில் இஷ்டமான பாதியைப் பங்கிட்டுக் கொள்ளலாம்” என்று சொல்லிச் சீட்டை அவர்கையில் கொடுத்தார்.

கந்தசாமி முதலியார் அப்பால் கொஞ்சகாலத்தில் இவ்வுலகை விட்டு நீங்கினார். அவர் எந்த லோகத்துக்கப் போனார் என்கிற செய்தி இன்னும் தெரியவில்லை.

அவருடைய மூத்தகுமாரன் ஒவ்வொரு போக்கைச் சாக்கிட்டுக்கொண்டு தினம் ஒருமுறை தங்கவேலு முதலியாரைக் கண்டு வந்தவன், ஒருநாள் ஹிதமாகப் பேசியிருந்து “என் தகப்பனார் நிலச்சீட்டு உங்கள்பேரி லிருப்பதைக் காலமறிந்து கேட்டால் கொடுத்து விடுவீர் என்று சொல்லியிருந்தார். அது விஷயத்தில் மனஸ்தாபத்துக்கு இடமுண்டாவதாக இருந்தால், அது உங்களிடமே இருக்கட்டும். நிலத்தின் பலனை நாங்கள் அனுபவித்த வருகிறோம். நாகதாளி புதர்கள் எடுக்கும்படி நோட்டிஸ் வந்திருக்கிறது. நிலத்தின் அத்துமுதலானவைகளை அறிந்து புதர்களை எடுக்கவேண்டும்” என்றான். உடனே தங்கவேலு முதலியார் “இதைப்பற்றி நினைவே இல்லாமலிருந்தேன். இல்லாவிட்டால் முன்னமே கொடுத்துவிட்டிருப்பேன்” என்று சொல்லி, உள்ளே போய்ச் சீட்டைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டார். அந்த நிலத்தின்மேல் வைத்திருந்த ஆசையையும் அதனோடு விட்டுவிட்டார்.

– அபிநவ கதைகள் (1921)

நன்றி: http://www.projectmadurai.org

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *