Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

ஆளுக்கு ஒரு சட்டம்!

 

சுஜாதாவின் மனம், தாங்க முடியாத பரபரப்பில் ஆழ்ந்திருந்தது. அன்று பிற்பகல், 3 மணிக்கு, எழுத்தாளர் சிவமதியைப் பார்க்க, அவளுக்கு, அவர், அனுமதி வழங்கியிருந்தார்.
கடந்த, 25 ஆண்டுகளாக தமிழில் மட்டுமல்லாது, இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றிலும் எழுதிக் கொண்டிருக்கும் பெண் எழுத்தாளர். மூன்று மொழிகளில் எழுதும், மிகச் சில எழுத்தாளர்களில் ஒருவர் எனும் அரிய புகழுக்கு உரிய எழுத்தாளர்.
ஆளுக்கு ஒரு சட்டம்!மூன்று மொழிகளிலும் எழுதுகிற அரிதான எழுத்தாளர் என்ற காரணத்தால், அனைத்து இந்தியாவிலும், இலக்கியவாதி களாலும், இலக்கிய ஆர்வலர் களாலும் அறியப் பெற்றவர்.
அவர், யாருக்கும் பேட்டி கொடுப்பதில்லை என்பது, இலக்கிய உலகில் அடிபடும் பேச்சு. ஆனால், அவள் கடிதம் எழுதிய உடனேயே அதற்கு ஒப்புக்கொண்டு, பதில் எழுதி விட்டார்.
சுஜாதாவுக்கு ஒரே வியப்பு. முதலில், மகிழ்ச்சியும், பெருமிதமுமாய் ஒரு சின்ன பெண் போல் ஓட்டமும், நடையுமாய் அவள் கணவன் ஜெயராமனிடம் தான் அந்தக் கடிதத்தைக் காட்டினாள்.
“”ஆச்சரியமா இருக்கே… இலக்கிய ஈடுபாடு கொண்ட என்னோட நண்பர்கள்லாம் அவங்க பேட்டியே குடுக்க மாட்டாங்கன்னு சொன்னாங்களே… உனக்கு தர்றேன்னிருக்காங்க! என்ன பொடி போட்டே? நாம லவ் பண்ணினப்ப கூட, எனக்கு எந்தப் பொடியும் போடலியே நீ?” என்றவாறு கண் சிமிட்டி, அதை, அவளிடம் திருப்பிக் கொடுத்தான்.
“”ஆமா… அவங்களுக்கு என்ன எழுதியிருந்தே நீ? உன்னோட லெட்டர் காப்பி வெச்சிருக்கியா?” என்று அவன் வினவியதும், “”பின்னே… இதோ எடுத்துட்டு வர்றேன்!” என்று அவள் விரைவாக தன் அலமாரியிலிருந்து, அந்தக் கடிதத்தை எடுத்து வந்து அவனிடம் நீட்டினாள்.
அன்புக்கும், மதிப்புக்கும் உரிய மும்மொழி எழுத்தாளர் சிவமதி அவர்களுக்கு, வணக்கம்.
நான் ஓர் இலக்கிய ஆர்வலர். “தமிழகப் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்’ என்ற தலைப்பில், ஆய்வு செய்ய உள்ளேன்.
என் சொந்த ஊர் நிலக்கோட்டை. என் அப்பா வழித் தாத்தா, அவ்வூர் தாலுகா அலுவலகத்தில் தலைமை எழுத்தராய் பணி புரிந்தவர். தாங்களும், நிலக்கோட்டையைச் சேர்ந்தவர் என்பதால், ஒருக்கால் அவரைத் தங்களுக்குத் தெரிந்திருக்கலாம்; அவர் பெயர் வேலுச்சாமி.
மற்றவை தாங்கள் எனக்கு அளிக்கப் போகும் நேர்முகத்தின் போது, மிகுந்த நம்பிக்கையுடனும், பரபரப்புடனும், தங்கள் ரசிகை… சுஜாதா.
கடிதத்தை அவளிடம் திருப்பிக் கொடுத்து, வாய்விட்டுச் சிரித்தான் ஜெயராமன்.
“”பெரிய ஆள்தான் நீ… அவங்க ஊர்க்காரிதான் நீயும்ன்னு தெரிஞ்சதுமே மயங்கிட்டாங்க. ஆகக் கூடி, சொந்த ஊர்ச் சொக்குப் பொடி போட்டுத்தான், அவங்களை மயக்கி இருக்கே!”
அவள் சிரித்துக் கொண்டே அதை வாங்கி மடித்த கணத்தில், காலடியோசை கேட்டது; இருவரும் திரும்பிப் பார்த்தனர். குளியலறையிலிருந்து வந்து கொண்டிருந்தார் கணபதி.
தலையைத் துவட்டியவாறு நாற்காலியில் அமர்ந்தவரை நோக்கிய பின், சுஜாதாவிடம் திரும்பிய ஜெயராமன், “”உங்கப்பாவுக்கு அவங்களைத் தெரிஞ்சிருக்கலாமே… கேட்டியா?” என்றான்.
“”கேட்காம இருப்பேனா… “கேள்விப்பட்டிருக்கேன்; ஆனா, தெரியாது…’ன்னு சொன்னாரு!”
“”யாரைப் பத்திப் பேசறீங்க மாப்ளே?”
“”உங்க ஊர் எழுத்தாளர் சிவமதியைப் பற்றி…”
தலையில் போட்டிருந்த துண்டால், முகத்தைத் துடைத்துக் கொண்ட கணபதி, “”ஆமாமா… எங்க ஊருதான்; கேள்விப்பட்டிருக்கேன்… நான்தான், 25 வயசுலயே வேலையில அமர மெட்ராசுக்கு வந்துட்டேனே!”
“”எந்த வருஷத்துலப்பா இங்க வந்தீங்க?”
“”1970ல் வந்தோம்மா!”
“”அவங்க தன்னோட, 18வது வயசிலேயே பெரிய பத்திரிகைகள்லே எழுதத் தொடங்கிட்டாங்களாம்ப்பா. ரொம்ப வருஷமாவே சென்னையிலதான் இருக்காங்களாம். உங்களுக்கு இலக்கியத்துலே எல்லாம் ஆர்வம் இல்லையாப்பா?”
“”நம்ம ராமாயணத்துக்கும், மகாபாரதத்துக்கும் மிஞ்சின இலக்கியம், உலகளவில் கூட கிடையாதும்மா!”
“”தமிழ் இலக்கியத்துல உங்களுக்கு ஈடுபாடு இருக்கான்னு கேட்கறேன்ப்பா…”
“”அப்படி எதுவும் பெரிசா சொல்லிக்கிற மாதிரி இல்லைம்மா… அதுக்குன்னு நான் ஞான சூன்யமெல்லாம் கிடையாது. ரொம்பச் சின்ன வயசில ஆனந்த விகடன், கல்கி புத்தகங்கள்ல கதைங்க படிச்சிருக்கேன். அப்பால விட்டுப் போயிடிச்சு… “சிவகாமியின் சபதம்’ படிச்சிருக்கேன்!”
“”சிவமதியோட கதைங்க படிச்சிருக் கீங்களாப்பா?”
“”அய்யோ… இதென்ன இன்னைக்கி சிவபுராணம் மாதிரி, சிவமதி புராணம் படிக்கிறதுன்னு ஏதாச்சும் சங்கல்பமா? எனக்குப் பசிக்குது; பிளேட்டை எடுத்து வை!”
தலையைக் குனிந்தபடி, இன்னமும் தலை துவட்டிக் கொண்டிருந்த அவரை, வியப்புடன் ஏறிட்டாள் சுஜாதா.
முதன் முதலாய், அவரிடம் சிவமதி பற்றிக் கேட்ட போதும், அவர் ஏனோ, தானோ வென்று பதில் சொன்னது, இப்போது நினைவுக்கு வந்து நெருடியது.
“அவர்களை ஏதோ காரணத்தால்<, அவருக்குப் பிடிக்காது போலும்!’ என்று இப்போது, அவளுக்குத் தோன்றியது.
“ஒரு வேளை… வாலிப வயசுல அவங்க கிட்ட ஏதாச்சும் சேட்டை பண்ணி, வாங்கிக் கட்டிக்கிட்டு இருந்திருப்பாரோ!’ என்று கூட, அவளுக்கு நினைக்கத் தோன்றியது.
“அந்த விஷயத்தில யார்தான் விதி விலக்கு; அப்படித்தான் இருக்கணும்!’ என்றெண்ணி, தன்னுள் சிரித்துக் கொண்டாள் சுஜாதா.
சிவமதியே கதவை திறந்தாள்.
சிவமதியை, பத்திரிகைகளில் புகைப்படமாய்த்தான் அதற்கு முன் பார்த்திருந்தாள் சுஜாதா; நேரில், மேலும் அழகாக இருந்தார். முக்கியமாய் அந்த ஊடுருவும் விழிகள், பேசும் திறன் பெற்றவை என்று, அவளுக்குத் தோன்றியது.
ஒருவருக்கொருவர் வணங்கிக் கொண்டபின், இருவரும் உள்ளே சென்றனர்.
சிவமதி உட்கார்ந்த பின், நாற்காலியின் முன், பட்டும் படாமலும் உட்கார்ந்தாள் சுஜாதா.
“”நல்லா உட்காருங்க… நாற்காலி பெரிசுதானே!” என்று சிவமதி சிரிக்கவும், வெட்கத்துடன் பின்னுக்கு நகர்ந்து, வசதியாய் அமர்ந்தாள் சுஜாதா.
“”வயசு, புகழ் ரெண்டிலேயும், எவ்வளவு பெரியவங்க நீங்க… என்னைப் பன்மையில கூப்பிடாதீங்க…”
“”நான் அப்படியே பழகிட்டேன்; இனிமேல் மாத்திக்க முடியாது. சரி… கேளுங்க உங்க கேள்விகளை… அதுக்கு முன், லைட்டா கொஞ்சம் டிபனும், காபியும்.”
“”அய்யோ… அதெல்லாம் வேணாம்… பாத்தீங்களா… உங்களுக்கு வாங்கிட்டு வந்த பழங்களைக் குடுக்காம, நானே வெச்சுகிட்டு இருக்கேன்!” சுஜாதா வெட்கத்துடன் எடுத்து நீட்டிய பழப் பையை, “”எதுக்கு இதெல்லாம்?” எனும் சம்பிரதாயக் கேள்வியுடன், புன் சிரிப்பைக் காட்டி பெற்றுக் கொண்டபின், உள்ளே போனாள் சிவமதி.
அவள் சென்றதும், சுற்றிச் சுழன்றது சுஜாதாவின் பார்வை. சின்ன வீடு. சிவமதி, திருமணம் செய்து கொள்ளாதவள் என்று அவள் கேள்விப்பட்டிருந்தாள்.
“துணைக்கு யார் இருப்பர்!’ எனும் வினா, அவளுள் எடுத்த எடுப்பில் கிளம்பிற்று. தன் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி கேள்விகளை அவள் விரும்புவதில்லை என்று சுஜாதா கேள்விப்பட்டிருந்தாள்.
அறுபத்தைந்து வயதாகும் சிவமதி, 10 ஆண்டுகள் குறைவாய் தெரிந்தாள். அவள், மத்திய அரசுத் துறையில் பணிபுரிந்தவள் என்றும் அறிந்திருந்தாள். அழகும், படிப்பும், நல்ல வேலையும் கொண்டிருந்த சிவமதி, “ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?’ எனும் கேள்வி, அவள் மண்டையைக் குடையலாயிற்று.
“ஒரு பெண் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து விடுவதற்கு, எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். ஏழ்மை, காதல் தோல்வி, தலைப்பாடாக எடுத்துச் செய்யப் பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ இல்லாமை, ஆண்கள் பால் வெறுப்பு, சுதந்திர உணர்வு, கொடிய நோய்…’ இவற்றில் ஏதேனும் ஒன்று காரணமாய் இருந்திருக்கலாம்…
“இதை பற்றிய கேள்வியைக் கேட்கும் அளவுக்கு, சிவமதி தானாகவே அடி எடுத்துக் கொடுத்தாலொழிய, எதுவும் கேட்டுத் காரியத்தைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது…’ என்று அவள் நினைத்தாள்.
“”என்ன யோசிக்கிறீங்க?” என்று வினவியவாறு மைசூர்பாவும், பக்கோடாவும் அடங்கிய தட்டுகளை எடுத்து வந்த சிவமதி, “”டைனிங் டேபிளுக்கு வாங்க…” என்று அழைத்தவாறு, அதன் எதிரில் அமர்ந்தாள். சுஜாதாவும், எழுந்து சென்று, கை கழுவிய பின், அவளெதிரில் உட்கார்ந்தாள்.
“”சாப்பிடுங்க…”
இருவரும் சாப்பிடத் தொடங்கினர்.
“”மைசூர்பா பிரமாதம்; நீங்களே செய்ததா?”
“”ஆமாம்மா…”
“”அப்ப, நீங்க ஒரு சமையல் புத்தகம் எழுதலாமே?”
“”எழுதலாந்தான்… இது வரையில தோணல்லே. அப்படி எழுத வாய்ச்சா, முன்னுரையில உங்க யோசனைன்னு சொல்லி, நன்றி சொல்வேன்; சரியா?”
பெருமிதத்துடன் புன்னகை செய்து, “”தேங்க்ஸ்!” என்றாள் சுஜாதா.
“”என்ன யோசிக்கிறீங்கன்னு நான் கேட்டதுக்கு நீங்க பதில் சொல்லவே இல்ல.”
“”பெரிசா ஒண்ணும் இல்லே…”
“”சரி… சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம்… இவங்களுக்கு யாரு துணையாய் இருக்காங்கன்னுதானே யோசிச்சீங்க?”
சற்றே அதிர்ந்து, தலையை குனிந்து கொண்டாள் சுஜாதா.
“”சரி… நம்ம பேட்டியைத் தொடங்குறதுக்கு முந்தி, உங்களைப் பத்திச் சொல்லுங்க.”
“”எங்க தாத்தா – பாட்டிக்குச் சொந்த ஊரு, உங்க நிலக்கோட்டைதாங்க.”
“”அதான் கடுதாசியில எழுதி இருந்தீங்களே!”
“”எங்க தாத்தா தாலுகா ஆபிஸ்ல, “ஹெட்-கிளார்க்’காக இருந்தாரு; நான், அவரோட மகன் வயித்துப் பேத்தி.”
“”உங்கப்பா பேரென்னம்மா?”
“”கணபதி!”
“”அவரா… எதுக்குப் பேரு கேட்டேன்னா, உ<ங்க தாத்தாவுக்கு ரெண்டு பிள்ளைங்க… அதான்!”
“”அப்ப, அவங்களை எல்லாம் உங்களுக்குத் தெரியுமா?”
“”நிலக்கோட்டை சின்ன ஊர்தானே; அதனால தெரியும். ஆனா, அவங்க குடும்பத்தோட பழக்கம்னெல்லாம் சொல்ல முடியாது.”
“”நீங்க எப்ப சென்னைக்கு வந்தீங்க மேடம்?”
“”என்னோட, 18 வயசுல வந்தேம்மா. எனக்கு இங்க வேலை கிடைச்சுது; அதுல சேர்றதுக்காக வந்தேன். என் அம்மா சின்ன வயசிலேயே இறந்துட்டாங்க. அப்பாவோட இங்க வந்து தூரத்துச் சொந்தக்காரங்க உதவியால சின்னதா ஒரு போர்ஷன் கிடைச்சு, அதிலே இருக்கத் துவங்கினேன். சரி… என் புராணம் கிடக்கட்டும்… உங்கம்மா?”
“”அவங்க என் கல்யாணத்துக்கு முந்தியே இறந்துட்டாங்க.”
“”உங்கப்பா உங்களோடதான் இருக்காரா இல்லை, அவருக்கு வேற ஆம்பிளைப் பிள்ளைங்க இருக்காங்களா?”
“”நான் அவருக்கு ஒரே மகள். அதனால், கல்யாணத்துக்கு அப்புறம் எங்கப்பா நம்ம கூட இருக்கிறதுக்குச் சம்மதிக்கணும்ன்னு நிபந்தனை விதிச்சுத்தான், நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.”
“”லவ் மேரேஜா?”
“”ஆமாம் மேடம்!”
“”பரவாயில்லே… உங்க வீட்டுக்காரர் நல்லவரு. எல்லா ஆம்பிளைங்களும் அதுக்குச் சம்மதிக்கிறதில்லே; ஆனா, முன்னைக்கு இப்ப பரவாயில்லே.”
“”எங்க வீட்டுக்காரரும் முதல்ல உடனே சரின்னு சொல்லிடலே. இவ்வளவுக்கும், அவருக்கு அப்பா – அம்மா கிடையாது. யோசிக்கணும்… அது, இதுன்னாரு. ஆனா, நான் கண்டிப்பாகச் சொல்லிட்டேன். உங்க அப்பா?”
“”அவர் காலமாகி, 10 வருஷம் ஆச்சு… சரி… நாம கை கழுவிக்கலாம். காபி எடுத்துட்டு வர்றேன்.”
அடுக்களைக்குச் சென்று, காபி கலக்க முற்பட்ட சிவமதியின் செவிகளில், கணபதியுடன், 40 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த உரையாடல் ஒலிக்கலாயிற்று…
“அதெல்லாம் சரிப்பட்டு வராது சிவமதி… கூடவே வயசானவங்க இருந்தா, நாம ஜாலியாகவே இருக்க முடியாது!’
“கல்யாணம்கிறது வெறும் ஜாலி மட்டும் இல்லீங்க. சரி… உங்கப்பாவா இருந்தா என்ன பண்ணுவீங்க? கல்யாணம்ன்னு ஆனதும், அடிச்சுத் துரத்திடுவீங்களா?’
“இதென்ன கேள்வி? இது மாதிரி வாக்குவாதம் பண்றவங்களை எனக்குப் பிடிக்காது!’
“என்னங்க இது… நான் வாக்குவாதமா பண்றேன்? நான், அவருக்கு ஒரே மகள். மாற்றாந்தாய் வந்து கொடுமைப்படுத்தினா, என்ன செய்யறதுன்னு பயந்து, எனக்காக அவர், 36 வயசிலேர்ந்து பெண் துணை இல்லாம வாழ்ந்திட்டிருக்காரு…’
“அதை யாரு கண்டா?’
“சீச்சீ… எங்கப்பாவைப் பத்தி அப்படி சந்தேகப்படாதீங்க. அவர், அப்படிப்பட்ட ஆளில்லே!’
“சரி சிவமதி… ஒண்ணு வேணாப் பண்ணலாம். அவரு பாட்டுக்கு நீங்க இப்ப இருக்கிற போர்ஷன்ல இருந்துக்கட்டும். நாம, 15 கி.மீ., தொலைவிலதானே இதே சென்னையில இருக்கப் போறோம். அப்பப்ப போய் பார்த்துக்கலாம். அவர் செலவுக்கு மாசாமாசம் உன் சம்பளத்துலேர்ந்து குடுத்துக்க; நான் ஆட்சேபிக்க மாட்டேன். தவிர, உங்கப்பாவுக்குத்தான் சமைக்கத் தெரியுமில்ல?’
“அப்ப, என்னோட வேண்டுகோளுக்குச் சம்மதிக்க மாட்டீங்க!’
“வேண்டுகோளா இது… நிபந்தனையில்ல?’
“அப்படியே இருக்கட்டும்… ஆம்பிளைங்க அவங்கவங்க தாய் – தகப்பனைத் தன்னோட வெச்சுக்கிறதுக்கு, பொண்டாட்டிக்கிட்ட அனுமதி கேட்கறதே கிடையாது. ஏன்னா… அது அவங்களைப் பொறுத்த மட்டில எழுத்துல ஏறாத சட்டம். ஆனா, நாங்க அதை வேண்டுகோளாவும் வைக்கக் கூடாது; நிபந்தனையாகவும் வைக்கக் கூடாது… அப்படித்தானே!’
“இதை… இதை… இப்படிப் பேசுறதைத்தான் வாக்குவாதம்ன்னு சொன்னேன்!’
“அப்ப, உங்க முடிவுல மாற்ற மில்லை; யோசிச்சுப் பார்க்க மாட்டீங்களா?’
“அதான் சொல்லிட்டேன்ல… அதெல்லாம் சரிப்பட்டு வராது; எனக்குப் பிடிக்கவும் இல்லை. இனிமே, இந்தப் பேச்சையே எடுக்காதே!’
அதுகாறும் அடக்கி வைத்திருந்த ஆத்திரம், அனலாய் அவள் நெஞ்சில் எரிய, அவள் முகம் சிவந்து, உடனே எழுந்து நின்று, தன் சேலையில் ஒட்டியிருந்த கடற்கரை மணலை, உதறினாள். அவள், தன்னையும் சேர்த்து உதறினாள் என்பதை ஊகிக்காத அவன், “என்ன எழுந்துட்டே?’ என்றான்.
அவள் பதிலே சொல்லாமல், கண்ணீரைக் கட்டுப்படுத்தி கிளம்பினாள். அதன் பிறகு, அவர்கள் சந்திக்கவே இல்லை.
“அந்தக் கணபதிதான் இவளேட அப்பா என்பது தெரிந்தால், இவளுக்கு எப்படி இருக்கும்!’ என்று யோசித்தவாறு, காபிக் கோப்பைகளுடன் திரும்பி வந்து, சுஜாதாவுக்கு எதிரில் அமர்ந்தாள் சிவமதி.

- ஏப்ரல் 2011 

தொடர்புடைய சிறுகதைகள்
திருப்பம்!
குமாரிக்கு ஒரே பரபரப்பாக இருந்தது. தன் தந்தையைத் தனியாக விட்டு விட்டுக் கிளம்புவதற்கு, அவளுக்கு இன்னும் இரண்டே நாட்கள்தான் இருந்தன. தினகரனின் காதலை, மாரிசாமி ஏற்க மாட்டார் என்பதை, அவரின் ஜாதிப்பற்றுமிக்க நடவடிக்கைகளிலிருந்து அவள் அறிந்திருந்ததால் தான், அப்படி ஒரு முடிவுக்கு ...
மேலும் கதையை படிக்க...
நடிகை
ம் முழுவதும் அண்மைக் காலமாகப் பேச்சு. இருவரும் சில படங்களில் இணைந்து நடித்து, அவை வெற்றியும் பெற்றதிலிருந்து படத் தயாரிப்பாளர்கள், இருவரையும் வைத்துப் படங்களை எடுப்பதில் ஆர்வமாயினர். காதல் தோல்வியுறுவதாய் காட்டப்பட்ட ஒரு திரைப்படத்தில், இருவரும் உருகி உருகி நடித்திருந்தனர். "இருவரும் உண்மையாகவே ...
மேலும் கதையை படிக்க...
‘‘மங்களம்! இன்னைக்கு ராத்திரி பன்னண்டு மணிக்கு ஒரு கிராக்கி வருது. ‘ஜெயில்லேர்ந்து இன்னைக்குத் திரும்பி வந்திருக்குமே, அந்தப் பொண்ணு மங்களம்தான் வேணும்’னு அந்தாளு சொன்னாரு. ஒருக்கா, உன்னோட கேஸ் நடந்துக்கிட்டு இருந்தப்ப கோர்ட்டுக்கு வந்து போயிக்கிட்டு இருந்த ஆளோ என்னமோ! கரெக்ட்டா ...
மேலும் கதையை படிக்க...
மூத்தவன் பங்கு !
வெளியே உறை மீது காணப்பட்ட கையெழுத்தைப் பார்த்ததுமே, அது தன் மாமியாரிடமிருந்து தான் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்ட சரசுவதிக்கு, முகம் சுண்டிப் போயிற்று. எப்போதும் கணவன் அலுவலகத்திலிருந்து திரும்பிய பின், தன் மாமியாரின் கடித உறையைப் பிரிக்காமலே, அவனிடம் கொடுப்பது ...
மேலும் கதையை படிக்க...
ராமச்சந்திரனுக்கு வேலையே ஓடவில்லை. அவரால் நம்பவே முடியவில்லை. நேற்று வரையில் அவருக்கு எதிர்இருக்கையில் உட்கார்ந்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்த சகுந்தலா இன்று இல்லை என்பதைத்தான். முந்தியநாள் சரியாக ஐந்துமணிக்குத் தன் கைப்பையைத் தோளில் தொற்விட்டுக்கொண்டு வரேன், சார் என்று கூறிப் புன்னகை காட்டிவிட்டுக் ...
மேலும் கதையை படிக்க...
திருப்பம்!
நடிகை
நீயா! – ஒரு பக்க கதை
மூத்தவன் பங்கு !
நான் தான் குற்றவாளியோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)