ஆல மரமாய் எழுந்திட ஒரு வேட்கை…!

 

“ சேகர் வர்ற வெள்ளிக் கிழமை நானும் மாமாவும், புறப்பட்டு சென்னை வர்றோம். மாமாவோட சொந்தக்காரங்க கல்யாணம் அங்க.. அப்படியே ஒரு எட்டு உன்ன பார்த்துட்டு இரண்டு நாள் தங்கிட்டு கிளம்பலாம்னு இருக்கோம். உங்க வீடு குடி போனப்ப எல்லாரோடும் சேர்ந்து வந்துட்டோம்.. அவ்வளவு சீக்கிரம் எங்களால கண்டுபிடிக்க முடியாது.. நாங்க கோயம்பேடு வந்ததும் போன் பண்றோம். நீ ரெடியா இருந்து ஸ்டாப்பிங் வந்ததும் அழைச்சிட்டு போயிடு..” ராமலட்சுமி போன் பண்ணியிருந்தாள்.

அக்கா வருவது சேகருக்கு சந்தோஷமாய் இருந்தது. இங்கு எந்திர வாழ்க்கையில் கிடைக்கும் ஒரு நாள் விடுமுறையில் தேனூர் சென்று அக்காவை பார்த்துவிட்டு வர நினைத்தாலும் முடிவதில்லை. கௌசல்யாவிற்கு கிராமம் என்றாலே வெறுப்பு.. அதை விட சித்தார்த்.. “ போங்க.. டாடி அங்கெல்லாம் ஒரே போர்.. வேணும்னா அத்தையை இங்க வந்து பார்த்துட்டு போக சொல்லுங்க…”

லட்சுமியக்கா கூப்பிட்டாலும் வரமாட்டாள்..” என்னப்பா தம்பி பண்றது.. நடவு நட்டிருக்கு.. மாமா விடியல்ல நாலு மணிக்கே தண்ணி பாய்ச்ச போய்டறார். ஆளுங்களையெல்லாம் நம்பி விட்டுட்டு வர முடியாது..” என்று கிராமத்தை விட்டு நகரமாட்டார்கள். எப்போது கூப்பிட்டாலும் மாடு, பயிர் அறுவடை என்று ஏதாவது சாக்கு சொல்லி கொண்டே இருப்பாள். இப்படி ஏதாவது தவிர்க்க முடியாத விசேஷங்களில் சந்தித்தால்தான் உண்டு.

கௌசல்யாவிற்கு அக்கா வருவதில் அத்தனை ஆர்வம் காட்டமாட்டாள்… ‘ பட்டிக்காடு எப்.எம் ரேடியோ மாதிரி விடாம பேசிட்டேயிருக்கும்’ என்பாள். அவள் அலட்சியப்படுத்துகிறாள் என்று கூட தெரியாமல் அக்கா வெள்ளந்தியாய் ஊர் நிலவரம் எல்லாம் சொல்லிக் கொண்டிருப்பாள். உள்ளுக்குள் பல்லை நற நறவென்று கடித்து கொண்டு இரவு பெட்ரூமில் சேகரை அர்ச்சிப்பாள்’ வந்தா இருக்கறதை சாப்பிட்டு ரெண்டு நாள் இருந்துட்டு போயிட்டேயிருக்கனும்… ஆபிசில ஆடிட்டிங் நடந்துட்டிருக்கு.. உங்க அக்கா மாதிரி வீட்டுல உட்கார்ந்துகிட்டு டி.வி. சீரியலா பார்த்துட்டிருக்கேன்..? எனக்கு நிறைய வேலை இருக்கு.. லேப்-டாப்பை எடுத்துக் கொள்வாள். மாசம் இருபத்து ஐந்தாயிரம் வாங்குகிற பந்தாவில் லட்சுமியை இளக்காரமாய் பேசுவாள்.

“ ஹேய்.. இன்னிக்கு உன் புருஷன் இந்த நிலமையில் இருக்கிறான்னா அதுக்கு அக்காதான் காரணம்.. நாலு நாள் ஒரு மனுஷாளை உபசரிக்க முடியலைன்னா உங்கிட்ட என்ன மனுஷத்தன்மை இருக்கு.. இதே உன் தங்கச்சி அடிக்கடி வந்துடறாளே அப்ப நான் எதாச்சும் சொல்றேன்…? உன் தங்கச்சி வந்தா மட்டும் உடம்பு சுறு சுறுப்பாயிடுமே. வெரைட்டி வெரைட்டியா சமைப்பே.. பீச்.. தீம் பார்க்குன்னு சுத்துவீங்க.. காரணம் உன் தங்கச்சியும் உத்தியோகத்துல நல்லா சம்பாதிக்கிறா… லைப்பை என்ஜாய் பண்றோம்னு பர்சை காலி பண்றதுக்கு ரெடியா இருக்கிங்க.. பாவம் அக்கா என்ன கேட்கிறா.. வருஷத்துல எப்போ ஒரு முறை வர்றா.. உனக்கு வேலை கூட வைக்கிறதில்ல. நான் இருக்கிறவரையாச்சும் ரெஸ்ட் எடுன்னு வந்தவுடனேயே சமைய கட்டை புடிச்சிக்கிறா….”

“ போதும் உங்க அக்கா புராணம் வந்தா தலை மேல தூக்கி வைச்சிக்கங்களேன் யார் வேணாங்கிறா..? “ வெடுக்கென்று திரும்பி கொள்வாள்.

அக்கா என்னை போல் படிக்கவில்லை. படிக்கவில்லை என்பதை விட அப்பா படிக்க வைக்கவில்லை.. அக்கா என்னை விட எட்டு வருடம் பெரியவள். அப்பா ஆண் வாரிசு வேணும்னு தவமாய் இருந்து குலதெய்வம் பிரார்த்தனை செய்து எட்டு வருஷம் கழித்து நான் பிறந்தேனாம். அம்மாவிற்கு கழனி பக்கம் போகவும், கூலி ஆட்களுக்கு பொங்கி போடவுமே சரியாக இருக்கும். அக்காதான் எப்போதும் என்னை இடுப்பில் சுமந்து கொண்டிருப்பாள். பசிக்கும் சமயங்களில் சாதத்தை குழைவாக பிசைந்து காக்காவையும், குருவியும் காட்டி ஊட்டுவாள். அவள் வயது பிள்ளைகள் தோப்பில் ஓடிப்பிடித்து விளையாட கூப்பிடுவார்கள். ஆனால் அக்கா” நான் வரலைப்பா… தம்பி ஒத்தையா அழுவான்… என்று சொல்லிவிட்டு ‘ கை வீசம்மா… கை வீசு’ என்று விளையாடுவாளாம். இதெல்லாம் அம்மா இறக்கும் போது சொன்னாள். அம்மா போய் சேர்ந்து இரண்டு வருடங்களாகிவிட்டது. “ சேகர்.. நம்ம வீட்டுக்குன்னு அவ ஒரே பொண்ணுடா அவளையும் படிக்க வச்சிருந்தா இப்படி கஷ்டப் படற பொழப்பு இருந்திருக்காது.. எங்க காலத்துக்கப்பறம் அவளை விட்டுடாத.. அவ பிள்ளைகளுக்களுக்கு தாய் மாமன்ற முறையில் குறையில்லாம நல்லது செய்யி…” என்று கைகளை பிடித்து சொன்னாள். அப்போது அக்கா ஒன்பதாம் வகுப்பு படித்து கொண்டிருந்தாள். உழைத்தே ஓடாய் தேய்ந்து போன அம்மாவை ஆஸ்துமா பிடித்து கொண்டது. வயலுக்கு ஓடவும் கூலியாட்களுக்கு சாப்பாடு போடவும் அம்மாவால் முடியவில்லை என்று அப்பா அக்காவை ஸ்கூல் விட்டு நிறுத்தினார். “போதும் .. போதும் மளிகை கணக்கு போட தெரிஞ்சா போதும்.. ஹைஸ்கூலு முடிஞ்சா நிப்பாட்ட போறதை இப்பவே நின்னுடு.. “ என்றார். கிராமத்திலிருந்து டவுனுக்கு இடம் பெயர்ந்த பங்காளி வீட்டு பெண் பிள்ளைகள் கல்லூரிக்கு சென்று படிப்பதை சொல்லி ‘ அப்பா நானும் படிச்சி உத்தியோகம் போகனும்னு ஆசையா இருக்குப்பா…” அக்கா கெஞ்சினாள்.

“ அவங்களை நினைச்சிகிட்டு கனவு கண்டுக்கிராத.. அவ அப்பனுக்கு கொட்டிகிடக்கு படிக்க வைக்கிறதுக்காகவே டவுன் பக்கம் போயிட்டான். உன்ன படிக்க வைக்கவும் எங்கிட்ட காசு இல்ல.. படிக்க வச்சி அதுக்கு தகுந்தாப்பல மாப்பிள்ளை பார்த்து கட்டி குடுக்கவும் முடியாது.. ஆம்புள புள்ளைக்கு செலவு பண்ணாலும் அர்த்தம் இருக்கு..! அப்பா வைத்துதான் சட்டம்..

மாட்டுக்கு புளியங்கஞ்சி காய்ச்சும் போது கரும்பு சோகைகளுடன் அக்காவின் ஆசைகளையும் சேர்த்து கொளுத்தினாள். எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து அக்காதான் எனக்கு முதல் டீச்சர்.. கையை பிடித்து எழுத வைத்து, தினம் வாய்பாடு ஒப்பிக்கும்படி கேட்பாள். “ சேகர் வானம் பார்த்த பூமியா இருக்கிற இந்த கஷ்ட பொழைப்பு உன்னாலதாண்டா மாறனும்.. நல்லா படி” நிறைய உதாரணம் சொல்வாள். திருச்சிப் பக்கம் நாங்கள் இருந்தது செட்டிக்குளம் என்கிற குக்கிராமம் அங்கிருந்து படிக்க மணச்ச நல்லூருக்கு போக வேண்டும். சைக்கிளில் அரை மணி நேரம் மிதி மிதின்னு மிதிச்சு கஷ்டப்பட்டுதான் பள்ளிக்கூடம் போவேன். இரவில் கால் வலியில் புரளும் போது அக்கா என் கால்களை தன் மடியில் போட்டுக் கொண்டு இதமாய் அழுத்திவிட்டு உட்கார்ந்து கொண்டே தூங்கி விழுவாள்.

பள்ளி இறுதி தேர்வில் நிறைய மார்க் வாங்கினதும் “ எதையாவது வித்தாவது தம்பியை இஞ்சினியர் படிக்க வைப்பா” என்று வாதாடினாள். ஒரு போராட்டத்திற்கு பிறகு அப்பா நிலத்தில் பாதி விற்று படிக்க அனுப்பினார். மிச்ச நிலத்தை விற்று அக்காவை பக்கத்து கிராமத்திலேயே கட்டி கொடுத்தார். அக்கா படிக்காததால் விவசாயம் பண்ணும் மாப்பிள்ளைதான் கிடைத்தது. மாமா டிகிரி படித்திருந்தாலும் வேறு வேலை தேடிக் கொள்ளவில்லை. ‘ எல்லாரும் வேலைக்கு போயிட்டா யாரு வெவசாயம் பண்றது… நான் இந்த மண்ணை விட்டு போகமாட்டேன்’ என்று அக்காவிடம் கண்டிப்பாய் சொல்லிவிட்ட லட்சியவாதி. அக்காவிற்கு புகுந்த வீட்டு சூழல் ஒன்றும் புதிதில்லை கிராமத்தில் வாழ்ந்து பழக்கபட்டவள் கிராமத்து வாழ்க்கையோடு ஒன்றிப்போனாள்.

நான் இஞ்சினியராகி எனக்கு கை நிறைய சம்பளத்துடன் வேலை கிடைத்ததும்..எனக்கு பெண் கொடுக்க உறவினர் மூலமாக போட்டி போட்டுக் கொண்டு நகரத்து மணமகள்கள். இந்த கௌசல்யாவை வெகு விமர்சையாய் கட்டி கொடுத்தார்கள். என்னோடு கடமை முடிந்து விட்டதாக நினைத்தாரோ என்னவோ அப்பா தூங்கியவர்.. விழிக்காமலே போய் விட்டார். அம்மாவை சென்னைக்கு அழைத்தால் கிராமத்தை விட்டு வரமாட்டேன் என்று சொல்லிவிட்டாள். இது கௌசல்யாவிற்கு நிம்மதியாயிருந்தது.. கடைசி வரை அம்மாவை லட்சுமியக்காவே பார்த்து கொண்டாள்.

அக்கா நினைவுகளில் மூழ்கியிருந்த எனக்கு வெள்ளிக் கிழமை
சந்தோஷ விடியலாய் இருந்தது.

“ கௌசல்யா எப்படி இருக்கேம்மா..? அடடே சித்து குட்டி உயரமா வளர்ந்துட்டு இருக்கானே.. இந்தா இதெல்லாம் எடுத்து வச்சிக்கோம்மா.. என்று மாவடு, வற்றல்.. வடகம் .. சமையல் பொடிகளோடு முறுக்கு செய்து எடுத்து வந்திருந்தாள். “ என்னவோ குசேலரை போல எடுத்து வந்திருக்கேன் .. உனக்கு பிடிக்குமோ பிடிக்காதோ..?”

“ என்னக்கா அப்படி சொல்றே .. இவ வேலைக்கு போற அவசரத்துல இதெல்லாம் செய்ய எங்க நேரம் இருக்கு.. எல்லாம் ரெடிமேட்தான். அதெல்லாம் உடம்புக்கு கெடுதி வீட்டில செய்யுன்னா யார் கேட்கிறா..?

“ இருக்கட்டும்.. தம்பி, வேலைக்கு போய் களைச்சி வந்தா யாராவது ஒரு தம்ளர் காபி போட்டு தருவாங்களான்னுதான் இருக்கும்.. வேலைக்கும் போய் வீட்டு வேலையும் கவனிக்கனும்னா எவ்வளவு சிரமமாயிருக்கும்.. நீயுந்தான் கூட மாட ஒத்தாசை செய்யனும் வீட்டு வேலைகள்ல.. பெண்களுக்கு அடுப்படிதான் என்கிற காலம் மாறிடுச்சு இல்ல.. அடுப்படியே எட்டி பார்க்காத நீங்களும் மாறித்தானே ஆகனும். அப்படித்தான் வாழ்க்கை பேலன்ஸ் பண்ணிகிட்டு சந்தோஷமா ஓடும்..”

“ அப்படி சொல்லுங்க நீங்களாவது புரிஞ்சிக்கிட்டிங்களே.. இவங்களை கவனிச்சிட்டு ஆபிசுக்கு ஓடிகிட்டு.. மிஷின் லைப் மாதிரி ஒரொரு சமயம் வேலைய விட்டுடலாமான்னு தோணும்..”

“ அப்படி சொல்லாத கௌசி.. என்னை பொறுத்தவரை நீ எவ்வளவு அதிர்ஷ்டக்காரி.. படித்துவிட்டு ஆண்களுக்கு சமமாய் உத்தியோகம் போய் சம்பாதிக்கிரே.. ஒருத்தரை கொடுங்கன்னு கேட்க வேண்டிய அவசியம் இல்லை . என்னை போல் கறிவேப்பிலை வாங்க கூட ஒரு ரூபாயை கூட கணவனை நம்பி இல்லாம பெருமையா வாழ்கிற வாழ்க்கை என்று சந்தோஷப்படு..” என்றாள்.

அக்காவின் ஆதங்கத்தில் படிக்க முடியாமல் போன கவலை புரிந்தது. பேச்சை மாற்ற சேகர், “ அக்கா சுகன்யா ஸ்கூல் பைனல் முடிஞ்சதும் என்ன பண்ணப்போறா..?”

“ என்னவோப்பா வளர்ச்சி வளர்ச்சிங்கறது எல்லாம் நகரத்துக்கு மட்டும்தான் போல.. கிராமம் கிராமாவே இருக்கு. ஹைஸ்கூலுக்கு தேனூலர்ந்து புத்தகாம்பட்டிக்கு ஓட வேண்டியிருக்கு சுகன்யா நல்லா படிக்கிறா.. எனக்கும் நிறைய படிக்க வைக்கனும் அவ சொந்தக்கால்ல நிக்கனும்னுதான் ஆசை . மாமாதான் எங்கே ஹாஸ்டல்ல சேர்த்து படிக்க வைக்கிறதுன்னு செலவுக்கு யோசிக்கிறார்.. இந்த நாள்ல பெண்களுக்கு படிப்பு இல்லைன்னா.. ப்ரயோஜனமில்ல.. வேலைக்கு போகாத பெண்களுக்கு வரன் கிடைக்கறதே குதிரை கொம்பாயில்ல இருக்கு.. அப்படியே படிக்காத பெண்ணை கட்டிகிட்டாலும் ஆம்பிளை செருப்புக்கு கீழ இருக்கிற தூசியா இல்ல இருக்க வேண்டியிருக்கு…” அக்கா பெண்ணை படிக்க வைக்க வேண்டும் என்ற ஆவேசத்தில் மாமாவின் எதிரில் கோபமாக பேசினாள்.

கல்லாமையினால் தனக்கு ஏற்பட்ட இல்லாமையின் தவிப்பு ஒரு பக்கம்.. இல்லாமையினால் தன் பெண்ணுக்கு கல்லாமை நேர்ந்துவிடுமோ என்ற துயரம் ஒரு பக்கம் அக்காவை அழுத்தி கொண்டிருந்தது அவள் பேச்சில் வெளிப்பட்டது.

“ சரிக்கா.. கிரக பிரவேசத்தப்பதான் வந்தே.. இண்டிரியர் டெகரேஷன் எல்லாம் பண்ணி நீ பார்க்கவேயில்லை இல்ல.. வாங்க வீட்டை சுத்தி பார்க்கலாம்.. மாடுலர் கிச்சன், பெட் ரூம் .. ரீடிங் ரூம் காட்டிவிட்டு “ அக்கா மேல ரூம் இருக்கு அங்கேயே அட்டாஸ்டு பாத்ரூம். நீங்களும் மாமாவும் அங்க படுத்துக்கங்க.. “ சூட்கேஸை வைத்து விட்டு “ வா அக்கா இப்படி உட்கார்ந்து பேசலாம் “ என்று பால் கனியில் அமர்ந்து கூப்பிட்டான்.

“ தம்பி பின்னால அத்தனை அகலத்துக்கு எவ்வளவோ எடம் காலியா இருக்கு.. அடுத்த வாட்டி வர்றப்ப தென்னங்கன்னு எடுத்து வர்றேன்.. பூசணி விதையும் போடு..”

“ அக்கா இந்த தொட்டியில இருக்கிறதை நீ பார்க்கலியா..?”

“இதென்னடா தம்பி.. தென்னமரமும்.. சப்போட்டா மரமும் தொட்டியில வச்சிருக்க.. இதெல்லாமா தொட்டியில வப்பாங்க..? டவுன்ல படிச்சிட்டு உனக்கு ஒண்ணுமே தெரியல.. பாரு அதான் வளராம குட்டையா போச்சு..”
அக்காவின் அறியாமை கண்டு கௌசல்யாவும், சித்தார்த்தும் கல கலவென்று சிரித்தார்கள்.

“ அக்கா இது தெரியாம் வச்சது இல்ல.. இதெல்லாம் இப்படிதான் வைக்கிறது. இதுக்கு பேரு ‘ போன்சாய்’ பெரிய ஆலமரத்தை கூட இப்படி குட்டையா வளர்க்கலாம். அப்பப்ப கிளையை நறுக்கி தொட்டி மாத்தி சின்ன மரமாக்கிட்டா பூ, காய் இல்லாம குட்டி குட்டி மரமா பார்க்க அழகா இருக்கும்…”

“ என்னவோ போ வானம் பாத்து உசந்து பூ பூத்து காய்ச்சி தழைக்க வேண்டியதை இப்படி சூன்யமா தொட்டியில முடக்கிபுட்டியே…?”
சாப்பிட்டு விட்டு உட்கார்ந்து மறுபடியும் பேசிக் கொண்டிருந்தோம். அக்காவை பார்த்த சந்தோஷத்தில் என் மனம் குதிப்பது போல.. வருணனும் கலந்து கொண்டானோ என்னவோ.. சட.. சடவென்று ஆரம்பித்த தூறல் மழையை பிய்த்து உதறியது.

“ அக்கா நீ வந்ததால.. உன் புண்ணியத்துல மழையே வந்துடுச்சி..” கேலி செய்யவும்,

அக்கா சிணுங்கி கொண்டை ஜன்னலை திறந்து வேடிக்கை பார்த்தாள். திடீரென்று அவள் முகம் பிரகாசமானது, “ தம்பி இங்க வாயேன் அந்த ஆல மரத்தடியை பாரேன்…” என்றாள்.

சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் மழைக்காக மரத்தடியில் ஒதுங்கி இருந்தார்கள்.

“ இதில் என்ன ஆச்சரியம் அக்கா?” என்றான்.

“ புரியலை பரந்து இருக்கிற இடத்துல சுதந்திரமா வளர்ந்து இருக்கறதால் கிளைய பரப்பிகிட்டு எவ்வளவு உறுதியா இருக்கு பாரு.. வெயிலுக்கு நிழலாவும், மழைக்கு குடையாவும் எத்தனை பேரு இளைப்பார முடியுது பாரு..

அதே நீ என்னமோ சொன்னியே போன்சாய்னு,. பார்க்க குடும்ப பெண் போல லட்சணமா இருந்தாலும் மென்மையா மட்டும்தான் அதால் இருக்க முடியும். அதை தினம் நீ கவனிச்சிகிட்டேதான் இருக்கனும். அதுவே ஒருத்தரை சார்ந்து இருக்கும் போது எப்படி மத்தவங்களுக்கு நிழல் தரும்? ஆண் பிள்ளைக்கும் , பெண் பிள்ளைக்கும் வளர்ப்பில் உள்ள வேறுபாட்டால்தானே பெண்கள் கூட போன்சாய் மாதிரி ஆயிடறாங்க.. இருக்கறவரை யாரையாவது சார்ந்து வாழ்ந்தே.. நான் கூட ஒரு போன்சாய் மரம்தாண்டா.. என் பெண்ணும் இன்னொரு போன்சாய் ஆகனுமா…? நா தழு தழுத்து விசும்பினாள்.

படிக்காத அக்காவின் வார்த்தைகளில் இருந்த அர்த்தங்கள் என்னை சுட்டது. ஓடிப் போய் அத்தனை தொட்டிகளையும் உடைத்து தோட்டத்தில் சுதந்திரமாய் நட வேண்டும் போலிருந்தது.

“ அக்கா நான் இருக்கும் போது இப்படி கலங்காதே..மாமாவிடம் எடுத்து சொல்லி சுகன்யாவை எங்க வீட்டிலருந்தே எவ்வளவு வேண்டுமானாலும் என் செலவில் படிக்க வைக்கிறன். கவலை படாதே.. அவளோட அறிவு ஆலமரமா வளர்ந்து தலை முறைக்கும் பெருமை தேடி தரும்…”

அக்காவிற்கு சந்தோஷம், “ எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி ..” என்று அவள் பாடிக் கொண்டிருந்ததை பார்த்தால் மீசையில்லா பாரதியாய் தெரிந்தாள். 

தொடர்புடைய சிறுகதைகள்
திண்ணையில் கேப்பைக்கூழை டம்ளரில் கலந்து வாகாக செல்விக்கு குடிப்பூட்டி கொண்டிருந்தாள் தாயம்மா. “ ஆயா.. சில்லுன்னு இருக்கு சூடா சோறு தா…” சிணுங்கினாள். “ ஆமா ஆத்தாக்காரி வந்து உனக்கு சூடா சோறு பொங்கி போடுவா.. கோபத்தில் தெறித்த வார்த்தைகளில் செல்வி கழுத்தை பின் ...
மேலும் கதையை படிக்க...
" என்ன ரம்யா சைலண்ட்டா உட்கார்ந்திருக்கே..? நமக்கு புதுசா கல்யாணமாயிருக்கு, பேசறதுக்கு நிறைய விஷயமிருக்கு..பீச்சுக்கு வந்து பத்து நிமிஷமா அந்த அலையையே பார்த்துக்கிட்டிருக்க.. ஏன் என்னை பிடிக்கலையா...?" "... அய்யய்யோ... அப்படி எல்லாம் தப்பா எடுத்துக்காதீங்க, உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு நான் கொடுத்து வச்சிருக்கணும்.,,," " ஏய்... நீ நிறைய ...
மேலும் கதையை படிக்க...
நாய் குரைக்கும் சத்தம் கேட்டு சுந்தருக்கு தூக்கம் தொலைந்தது. நாக்கு வறண்டது தண்ணீர் குடிக்கலாம் என்று கதவை திறந்தான். தாத்தா ஹாலில் மெதுவாக நடந்து பாட்டி ரூமிற்கு போவதை பார்த்து அதிர்ந்தான். அறைக்குள் தாத்தாவும், பாட்டியும் பேசி கொண்டது தெளிவாக கேட்டது. ...
மேலும் கதையை படிக்க...
அப்பா போய் பத்து நாட்களாகிவிட்டதை நம்பவே முடியவில்லை. எனக்கு அப்பா என்பதை விட நண்பனாகத்தான் நிறைய தெரியும். சரவணனுக்கு அப்படி இல்லை.... அப்பா வாத்தியாராய் இருந்த பள்ளியிலே நாங்கள் இருவரும் படித்தோம். மற்ற ஆசிரியர்கள் எல்லாம் அப்பாவிடம் சொல்வார்கள்” சார் உங்க சின்ன ...
மேலும் கதையை படிக்க...
“ ஷைலு.. இன்னிக்கு எல்லாமே உன் மெனுதான்.. எதையாவது ஆர்டர் பண்ணு..” தருண் மெனு கார்டை நீட்டினான். ஷைலு புன்னகையை உதிர்த்து ஆராய்ந்து கொண்டிருந்தாள். டிஸைனர் சாரியில் தேவதையாய் தெரிந்தாள். “ம்.. ரொட்டி பனீர், அப்புறம் ரவா மசாலா..” சொல்லிவிட்டு காத்திருந்த வேளையில் அவர்கள் மேசையில் ...
மேலும் கதையை படிக்க...
“ மேகா.. எழந்திரு டியர்.. இன்னியிலர்ந்துதான் நீ க்ளாஸ் ஜாய்ன் பண்ணப்போற.. தூங்கிட்டே இருந்தா எப்படி? சந்துரு நான் போய்த்தான் ஆகனுமா? சிணுங்கினாள். “எவ்வளவோ படிச்சிட்ட.. இது பத்து நாள் கோர்ஸ்தானே.. உனக்காகவும் நம்ம எதிர்காலத்துக்குகாகவும்தான்மா…” “ க்கும்.. சலித்து கொண்டே ரெடியாகி கிளம்பும் போது ...
மேலும் கதையை படிக்க...
விடியற்காலை.. இதமான காற்றில் நடந்து செல்வது சுகமாயிருந்தது வெங்கடேசனுக்கு.' ஆமாம்.. இன்னிக்கு என்ன ராமுவை காணோம்...? யோசித்தவாறு வீட்டுக்கு திரும்புகையில் எதிரே ராமு வந்து கொண்டிருந்தார். "வெங்கடேசன் இன்னிக்கு எழுந்ததே லேட்டுப்பா.. நான் சொல்லிட்டிருந்த மாதிரி என் பையனையும் அவன் பொண்டாட்டியையும் வெளியே அனுப்பிட்டேன்பா.. நானும் பிரேமாவும் ...
மேலும் கதையை படிக்க...
பரபரப்பான வேலைகளிடையே சைலண்ட் மோடிலிருந்து மொபைல் கிர்..கிர்ரென்று அதிரவும் எடுத்த மித்ரா, "ஹலோ..." "ஹலோ.. மித்ராவா ? நான் உங்க வாசகன் பேசறேன்.. இந்த வாரம் சலங்கையில் நீங்க எழுதியிருந்த மன ஓசை சிறுகதை நல்லாயிருந்தது...எதேச்சையாத்தான் படிக்க முடிஞ்சது..." "ரொம்ப நன்றிங்க... உங்க பேர்?" "என் பேர் ...
மேலும் கதையை படிக்க...
"பாஸ்.." குரல் கேட்டதும் திரும்பினேன். வண்டியை யூ டர்ன் அடித்து அருகில் வந்த கிரி “ என்ன மச்சான் ஊரையே மறந்துட்டியா.. வந்து வருஷக்கணக்கா ஆகுது?” “ம்.. என்ன பண்றது நிறைய வேலைகள்.. எப்படி இருக்கே?” “ ரொம்ப நல்லாருக்கேன்.. ஐயா நம்ம வார்டுக்கு கவுன்சிலர் ...
மேலும் கதையை படிக்க...
"செந்தில்... நான் ஒண்ணு கேட்கட்டுமா...? கையிலுள்ள புத்தகத்தை பிடுங்கி அவன் கண்களை ஊடுருவினாள் தேன்மொழி. " தேன்மொழி என்ன விளையாட்டு இது..? கணக்கு பாடத்தில சந்தேகம்னுதானே கூப்பிட்டுஅனுப்பினே..? " " போ.. செந்திலு... எப்பவும் உர்ருணுதான் இருப்பியா.. ? நான் சொன்னதை எல்லாம் விளையாட்டா ...
மேலும் கதையை படிக்க...
பாதை மாறிய பயணம்…!
நிழல் அது… நிஜம் இது…
இது நிஜமா…?
பணம் காய்ச்சி மரம்…
அவள் பணக்காரி…!
பள்ளிக்கூடம்
மருமகள்
மௌன மொழிகள்
கிரி, எம்.எல்.ஏ
தண்டனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)