“ஆரிய” முத்து

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 13, 2014
பார்வையிட்டோர்: 9,234 
 

ஒரு இண்டு இடுக்கு கூட விடாமல் வெயில் பிரம்மாண்டமாய் எங்கும் பரவி வழிந்துக் கொண்டிருந்தது. சல் என்று ஒரு ரீங்காரம் வேறு இருந்தது கூடவே. ஆனால் முத்துவுக்கு அந்த வெயில் எல்லாம் ஒன்றும் செய்யவில்லை. “உஸ்..உஸ்..”என்று பெருமூச்சு விட்டபடியே வேலையில் ஆழ்ந்திருந்தான் அவன். முகத்தில் வழியும் வேர்வையை கூட துடைத்துக் கொள்ள முடியாமல் கைவேலை அவனுக்கு. கையை எடுத்துக் கண்களிலோ கன்னத்திலோ வைத்தால் களிமண் அப்பிக் கொண்டு விடும். எதையும் பொருட்படுத்தாமல் தன் வேலையில் ஆழ்ந்திருந்தான் அவன். கண்களும் கைகளும் சேர்ந்து ஒரே அலைவரிசையில் உழைக்க வேண்டிய வேலை. தெரு அமைதியாக இருந்தது. ஒரு சோனி நாய் மட்டும் வெயிலைப் பொருட்படுத்தாமல் தெருவில் எதையோ தேடி சென்று கொண்டிருந்தது. தின்பதற்கு போஸ்டர்கள் கூடக் கிடைக்காத பசுக்கள் வெயிலைத் தின்று அசை போட்டுக் கொண்டிருந்தன.

சற்றைக்கொரு முறை மெல்ல தலையை எக்கி குடிசைக்குள் பார்த்துக் கொண்டான் முத்து. முனகல் சப்தம் கேட்டுக் கொண்டேதான் இருந்தது. நல்ல காய்ச்சல் கண்டிருக்கிறது அவனுடைய செல்ல மகளுக்கு. அரசாங்க ஆஸ்பத்திரிக்கு சென்றுதான் பார்த்தான். “இங்கிட்டு வேலைக்கு ஆகாதப்பா. வேற எங்கிட்டாவது கொண்டுபோ ஜல்தி.” என்று சொல்லி விட்டார் ஏழைகளின் பணத்தில் படித்து வைத்தியாரானவர். “வேறு எங்கிட்டும்” போக வேண்டுமானால் பெரிய நோட்டில் ஒன்றாவது ஆகி விடுமாம். அவ்வளவு பணத்திற்கு முத்து எங்கே போவான்? பானை சட்டி செய்து பிழைப்பவன் ஆயிற்றே!?

நேரம் செல்ல செல்ல நோயின் கடுமை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது போலிருக்கிறது. மகளின் அலத்தலும் அதிகமாகிக் கொண்டேதான் இருந்தது. கண்களில் சரளமாக நீர் வடிந்தது முத்துவுக்கு. இப்படித்தான் ஏதோ ஒரு மர்ம நோய் கண்டு அவன் மனைவி உயிரை விட்டாள். கையில் பிடித்த சர்ப்பம் போல நான்கு வருட காலம் வேகமாக நழுவி விட்டது. இப்பொழுது மகளுக்கும் ஏதோ காய்ச்சல். அடங்காத காய்ச்சல். அந்த பயமே அவனை பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தது. “இந்த குடிசையில் ஒரு வேளை மரண வாடை வீசுகின்றதோ!?” என்று மூக்கை விடைத்து விடைத்துப் பார்த்தான். ஒன்றும் புரிபட வில்லை. “என்ன எளவோ” என்று சலித்து கொள்ளத்தான் முடிந்தது அவனால்.

உடல் முழுவதும் பயம் அவனைத் தின்றுக் கொண்டேதான் இருந்தது. மனைவியை இழந்தது மாதிரியே செல்ல மகளையும் இழந்து விடுவோமே என்று அவன் இதயம் துடித்துக் கொண்டேதான் இருந்தது. “சே!சே! அப்படி ஒண்ணும் ஆயிடாது!” என்றுத் தன்னைத்தானே சமாதானப் படுத்திக் கொண்டு மீண்டும் கை வேலையில் ஆழ்ந்தான். திருமணம் ஆகி மூன்று வருடங்களுக்குப் பிறகு பிறந்தவள் அவனின் செல்வ மகள். அவனுக்கும் அவன் மனைவிக்கும் அவள் பேரில் அவ்வளவு பிரியம். இருக்காதா பின்னே!? ஆனால் அவசரம் அவசரமாகத் தன கடமை முடிந்து விட்டதைப் போல அவனை விட்டு விட்டுப் போய் சேர்ந்து விட்டாள் மகராசி. ஒண்டியாகப் பெண் குழந்தையையும் வைத்துக் கொண்டு லோல் பட்டுக் கொண்டிருந்தான் முத்து. தன் மனைவியின் பேரில் வைத்திருந்த பாசத்தையும் சேர்த்து மகள் மீது வைத்தான் அந்த உழைப்பாளி. உயிராக அவளை வளர்த்தான்.

இப்பொழுது சோதனையாக மகளுக்கும் அதே போல் ஒரு காய்ச்சல் கண்டிருக்கிறது. இரண்டு நாள் ஓடி விட்டது. இன்னமும் உடம்பில் சூடு இறங்க வில்லை. கை வைத்தியம் எல்லாம் செய்து பார்த்தாகி விட்டது. அரசாங்க ஆஸ்பத்திரிக்கும் போய் வந்தாகி விட்டது. சொஸ்தமாகவில்லை. முனகிக் கொண்டேதான் இருந்தாள் மகள். அவளை சரிப் படுத்த வேண்டுமானால் முதலில் பணம்…பணம் தேவை. அதற்காகத்தான் இந்த வேலையை தேர்ந்தெடுத்திருந்தான் முத்து. கடுமையான வேலைதான். ஆனாலும் முடித்து விட்டால் பணம் கிடைத்து விடும். முதலில் இந்த வேலையை எடுத்து செய்ய அவனுக்குத் தயக்கமாகத்தான் இருந்தது.

“புள்ளாரு பொம்மை செய்ய சொல்லோ தெய்வக் குத்தம் ஆயிடுமோ!?” என்று சிறிது யோசித்தான். ஆனால் என்ன செய்வது? ஆண்டவனே செய்தாற் போல அடுத்த நாள் விநாயக சதுர்த்தி. “ஒரு அம்பொது புள்ளாரு செஞ்சி வித்துட்டா ஒரு ஆயிரம் தேறாது!?” என்று கணக்குப் போட்டுப் பார்த்துக் கொண்டான். இருந்தாலும் மனதில் தயக்கம் இல்லாமல் இல்லை. தேவாலயத்திற்கு சென்று சாமியாரிடமும் கேட்டுப் பார்த்து கொண்டான். “அதொண்ணும் தெய்வக் குத்தம் வாராது!” என்று அவர் உறுதி அளித்திருந்தார். அதற்கு பிறகுதான் தைரியமாக ஆரம்பித்திருந்தான். தன் கடவுளை நன்றாக வேண்டிக் கொண்டபிறகுதான் களிமண்ணை கையிலே எடுத்தான்.

வழக்கமாக பொழுது சாய்ந்து விட்டாலே “போட்டுக்” கொள்ள செல்பவன் இரண்டு நாட்களாக அதை நிறுத்தி இருந்தான். வெங்காயம் பூண்டைக் கூட விலக்கிதான் இருந்தான். “சுத்த பத்தமா இருக்கணும். ஏதும் குத்தம் ஆயிடக் கூடாதில்ல. எப்படியாச்சும் புள்ளைக்கு மேலுக்கு நல்லாயிட்டா சரிதான்.” ஒரு ஜாக்கிரதைக்காக கழுத்தில் இருந்த சிலுவையை மட்டும் பிள்ளையார் விற்கும் நேரத்தில் மறைத்து விட்டுக் கொள்ளலாம் என்று தீர்மானம் பண்ணியிருந்தான். “அய்யமார் சனம் வாங்காமப் போயிடக் கூடாதில்ல!”

மகளின் அலத்தல் அதிகமாக அதிகமாக அவன் கைகளின் வேகமும் அதிகமாகிக் கொண்டே இருந்தது. பழக்கமில்லாத வேலை. சரியாக வரவில்லை என்றால் யாரும் வாங்காமல் போய் விடுவார்களே. அத்தனை உழைப்பும் விரயம்தானே. கவனமாகவும் அதே சமயம் மிக வேகமாகவும் தன் வேலையை செய்துக் கொண்டிருந்தான் முத்து. “இருட்டு கவ்வரதுக்குள்ளாற நாப்பது பொம்மயாச்சும் சேஞ்சிட்டா…பொறவு எத்தையாவது தின்னு போட்டு பாக்கியையும் செஞ்சி முடிச்சிடலாம்.”

“அது வரைக்கும் புள்ளைய நல்லா வெச்சிடு கர்த்தரே” என்று வேண்டிக் கொண்டேதான் இருந்தான் இடை இடையே. தன்னுடைய வறுமையும் அதன் காரணமான தன் கையாலாகாதனமும் ஈரத்துணியில் பட்ட மண்ணைப் போல அவனைப் அரித்துக் கொண்டேதான் இருந்தன. கண்களில் வழிந்த கண்ணீர் பார்வையை மறைக்க அருகில் இருந்த துண்டால் கண்களைத் துடைத்துக் கொண்டு கைகளை மீண்டும் களிமண் சேற்றில் நுழைத்தான் முத்து. இந்த முறை சற்று அதிகமான வெறியுடன்.

எதையோ வயிற்றுக்குக் கொடுத்து விட்டு விறுவிறுவென்று தூக்கத்தையும் மறந்து விடிய விடிய வேலை செய்தான். இரண்டு மணி நேரம் தூங்கியிருந்தால் அதிகம். அவன் நினைத்தை விடவும் அதிகமாக… அறுபது பிள்ளையார்கள் தயாரானார்கள். “ஏளு ஏளரை மணிக்குள்ளாறவே சனம் வந்து வாங்கிட்டு போயிடுமாமே!” எல்லாவற்றையும் பத்திரமாக எடுத்துக் கொண்டு கிளம்பினான் முத்து. பக்கத்து குடிசைக் காரியிடம் தன மகளைப் பார்த்துக் கொள்ளுமாறு கூறி விட்டுதான் நகர்ந்தான் அந்த பாசக்காரத் தந்தை.

நான்கு தெருக்கள் கூடுமிடத்தில் சற்று தயக்கத்துடனே கடை விரித்தான் முத்து. “பழக்கமில்லாத வியாபாரம்” நேரம் காலை ஆறரை இருக்கும். இவனைத் தவிர இன்னொரு வியாபாரியும் உட்கார்ந்திருந்தான். அவனிடம் மீறி மீறிப் போனால் இருபது பிள்ளையார்களுக்கு மேல் இல்லை. ஒரு ஆறுதல் பெருமூச்சு விட்டுக் கொண்டான் முத்து. மெல்ல மெல்ல பிள்ளையார் சிலை வாங்குபவர்கள் வரத் தொடங்கி இருந்தார்கள். கூட்டம் சேரத் தொடங்கியிருந்தது. மனதில் மிகவும் பதட்டத்துடனும் நெஞ்சு நிறைய பிரார்த்தனைகளோடும் அமர்ந்து இருந்தான் முத்து.

திடீரென்று அது நிகழ்ந்தது. சட சடவென ஒரு இருபது பேர் கடை வீதியில் வந்தனர். எல்லோரும் ஒரே வர்ண சட்டையை அணிந்து இருந்தனர். கைகளில் கொடிகளும் இருந்தன. திமு திமுவென உள்ளே நுழைந்தனர். பிள்ளையார் வாங்க வந்து கொண்டிருந்தவர்களைப் பிடித்து மூர்க்கமாகத் தள்ளி விட்டனர். இரண்டு மூன்று ஆட்கள் கீழே விழுந்தவுடன் கூட்டம் பயந்து பின் வாங்கியது. என்ன நடக்கிறதென்று புரிந்து கொள்ள முடியாமல் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு எழுந்து நின்றான் முத்து. அவன் மனதிலும் கிலி பிடித்துக் கொண்டது.

“ஆரியம் ஒழிக! ஆரியர் பண்டிகைகள் ஒழிக! ஆரியர் பண்டிகைகள் ஒழிக!” என்ற அவர்களின் கோஷம் காதைப் பிளந்தது. என்னவென்று அவனுக்குப் பிடி படவே இல்லை. வாங்க வந்தவர்களை பிடித்து விரட்டியதோடு அந்த கும்பல் திருப்திப் பட்டுக் கொள்ள வில்லை. எல்லோருக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக அங்கும் இங்குமாக கோஷம் போட்டுக் கொண்டே ஓடினார்கள். காலில் கையில் பட்டதையெல்லாம் தள்ளி விட்டார்கள், எட்டி உதைத்தார்கள். இரண்டு வியாபாரிகளும் திக் பிரமை பிடித்து செய்வதறியாமல் திகைத்து நின்றனர். அவர்கள் கண் எதிரிலேயே அவர்களின் கடும் உழைப்பால் உருவான பிள்ளையார் சிலைகள் மீண்டும் களிமண் உருண்டைகளாக ஆகிக் கொண்டிருந்தன. கண்ணிமைக்கும் நேரத்திற்குள்ளாக எல்லாமே தொடங்கி முடிந்தும் விட்டன.

முத்துவுக்கு அங்கு நடந்தது எதுவுமே புரியவில்லை. மூடியக் கண்களுக்குள் அவனின் செல்வ மகள் துடி துடிக்க “ஐயோ” என்ற அலறலுடன், வேரற்ற மரமாக கீழே சாய்ந்தான் “ஆரிய”முத்து.

Print Friendly, PDF & Email

1 thought on ““ஆரிய” முத்து

  1. தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்…

    சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்… சிறப்பு பகிர்வு :

    http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Fertilize-Part-2.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *