Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

ஆயிரம் அர்த்தங்கள்!

 

வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்தார் ராகவன். அதன் பொருட்டு வேஷ்டியை அகர்றிவிட்டு பேண்ட் போட முனைந்த போது மிகவே சிரமப்பட்டார். அவ்வளவு பெரிய தொந்தி! மேலே சட்டையைப் போட்டுக் கொண்டு கண்ணாடி முன் நின்றபின் தலையை வாரிக் கொண்டபோது சீப்பின் பற்கள் அவர் தலை வழுக்கையில் கீறலிட்டு லேசாக வலி எடுத்தது.

வெளியே சென்றவர் காத்திருந்த பைக்கை எடுத்து சிரமப்பட்டு அதன்மேல் ஏறி அமர்ந்தார். உதைக்கத் தேவையில்லை. பட்டன் ஸ்டார்ட்!

அதுவும் சீரிக் கொண்டு கிளம்பியது.

ஆயிரம் அர்த்தங்கள்

பார்த்துக் கொண்டே இருந்தார் ராகவனது வயதான அப்பா சந்தானம். காலேஜூக்கு புறப்பட்டுக் கொண்டிருந்த ராகவனின் இளைய மகன் மணிவண்ணனிடம் “உங்கப்பா எங்கடா கிளம்பிட்டான்?’ என்று கேட்டார்.

“ஜோசியரை பாக்க தாத்தா…’

“அப்ப உன் அக்கா லதாவுக்கு புதுசா ஜாதகம் வந்துருக்கா?’

“அப்படித்தான் நினைக்கிறேன்.’

“ஹும்… இதாவது நல்லபடி அமையட்டும்.’

ஜோதிடர் கஸ்தூரிரங்கன் ஜாதகத்தைப் பார்த்து முடித்தவராக “இதை தாராளமாக சேர்க்கலாம். எதுக்கும் பையன் பத்தி நல்லா விசாரிச்சிக்குங்க. ஆட்சிபெற்ற சுக்ரன் பையனை கொஞ்சம் அப்படி இப்படி அலைய விட சான்ஸ் இருக்கு’ என்றார்.

“நல்லதையும் சொல்லி இப்படி கெட்டதையும் சொன்னா எப்படி ஜோசியரே..’

“என்ன செய்ய… இரண்டும் கண்ணுல படும்போது சொல்லிடறதுதானே தொழில் தர்மம்?’

- அதற்குமேல் அவரிடம் பேசாமல் புறப்பட்டார் ராகவன். வெளியே வந்த நிலையில் சட்டைப் பாக்கெட் செல்போன் கைக்கு வந்தது.

“ஹலோ சஞ்சய்…’

“சொல்லுங்க சார்…’

“ஒரு ஜாதகம் ஓ.கே. ஆகியிருக்கு. கொஞ்சம் விசாரிக்கணும்.’

“தொழிலே அதுதானே சார். அட்ரஸ் கொடுங்க.’

“பாத்து… பையன் கொஞ்சம் அப்படி இப்படி இருக்க சான்ஸ் இருக்காம். ஜோசியர் சொன்னார்.’

“இன்னிக்கு இல்லைன்னாதான் சார் அது ஆச்சரியம்.’

“நீங்க என்ன சொல்றீங்க?’

“இதை எல்லாம் ரொம்ப பாக்காதீங்க சார். நல்ல வேலை… சம்பளம், நல்ல ஆயுசு இதைப் பாத்தா போதும் சார்.’

“சஞ்சய், சமயத்துல நீங்க எங்க அப்பாவை சாப்ட்டுடறீங்க. நான் சொன்னபடி விசாரிச்சுட்டு வேகமா நல்ல பதிலைச் சொல்லுங்க.’

“சரிங்க சார்’

செல்போன் பாக்கெட்டில் திரும்ப அடங்கியது. பைக்கும் கிளம்பியது.
லதா சுடிதாரில் பார்க்க அழகாகத்தான் இருந்தாள். நெற்றியில் மட்டும் பூனை நக்கியது போல மிகச் சிறிய பொட்டு.

ராகவனும் பைக்கை நிறுத்திவிட்டு வீட்டுக்கு உள்ளே வந்தார். லதாவரையில் அவர் இது போல நூறு இரு நூறு முறை வந்து விட்டார். அதாவது ஜோசியரைப் பார்த்துவிட்டு…. வந்தவரை அப்பா சந்தானம், மனைவி ஜானகி என்று கூர்மையாக ஏறிட்டார்கள்.

“என்னங்க, இதாவது அமைஞ்சிச்சா?’ ஜானகி ஆரம்பித்தாள்.

“பார்ப்போம். ஜாதகம் ஓ.கே… பையனப்பத்தி விசாரிக்க சொல்லியிருக்கேன்..’

“யார்கிட்ட… உன் சி.ஐ.டி கிட்டயாடா?’ … சந்தானம் அதட்டலாக கேட்டார்.

“ஆமாம்… சி.ஐ.டின்னு என்ன கிண்டல். சஞ்சய் ஒரு டிடெக்டிவ் ஏஜெண்ட். அவங்கள்லாம் இருக்கறது எவ்வளவு உதவியாக இருக்கு தெரியுமா?’

“அடப்போடா… உன் பொண்டாட்டிய நான் சி.ஐ.டவி. வெச்சா பிடிச்சேன்? இல் உன் மாமனார்தான் அப்படி விசாரிச்சாரா?’

“அப்ப என்ன.. விசாரிக்காம கண்ண மூடிக்கிட்டு பொண்ணைக் கொடுன்னு சொல்றீங்களா? இந்தக் காலத்துப் பசங்களப் பத்தி உங்களுக்குத் தெரியுமா? என் அபீஸ்ல விசாரிச்சு பண்ணி வெச்ச அந்த கல்யாணங்கள்லயே எவ்வளவு சிக்கல் தெரியுமா?’

… ராகவன் ஆவேசமாகப் பேச ஆரம்பிக்க, சந்தானம் அதற்கு மேல் பேசவில்லை. ஜானகியும் பேசவில்லை. ஆனால் லதா பேசினாள்.

“அப்பா…. எனக்கு கல்யாணமே வேண்டாம்பா.. விட்ருங்க இதோட’ என்றாள் கோபமாக….

இதுபோன்ற வாதப்பிரதிவாதம் அந்த வீட்டுக்கு ஒன்றும் புதிதில்லை.
இரவு நேரம்!

மொட்டை மாடிக்கு வந்து நாலாபுறமும் பார்த்து விட்டு இடுப்பில் ஒளிந்திருந்த டாஸ்மாக் பாட்டிலை எடுத்து திறக்கவும், “நினைச்சேன்’ என்று ஒரு குரல்.

திரும்பினார் ராகவன். எதிரில் ஜானகி!

“மோப்பம் பிடிச்சு வந்துட்டியா?’

“கவலைப்படாதீங்க. பாட்டிலை பிடுங்கிப் போட வரலை. உங்களுக்கு கம்பெனி கொடுக்கத்தான் வந்திருக்கேன்.’ – ஜானகி சொன்ன பதில் ராகவன் கன்னத்தில் அறையாமல் அறைந்தது.

“ஜானகி விளையாடாதே…’

“ஏங்க மனக்கவலைங்கறது உங்களுக்கு மட்டும்தானா? எனக்கு இல்லையா? எனக்கும் லதா பொண்ணுதானே..?’

“ஹும்… ஏன் பெத்தோம்னு இருக்கு. என்ன பாவம் பண்ணோமோ.. முன்னூரு ஜாதகம் பார்த்தும் ஒண்ணு கூடத் தேறலை.’

“நானும் எதுல குறை வெச்சேன்… போகாத கோயில் உண்டா? செய்யாத பரிகாரம் உண்டா? வேளாங்கண்ணி, நாகூர் தர்கானன்னு ஏசு, அல்லானு ஒரு சாமிய விடலியே…?’

- ஜானகி குரலில் விம்மல் தொடங்கியது.

ராகவனும் பாட்டிலை மேலிருந்த படியே தூக்கி எறிந்தார். இருட்டில் எங்கே விழுந்ததோ..?

“இப்ப நான் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லப்போறேன்….’

“என்ன ஜானகி…?’

“மத்யானம் சிவகாமி அம்மா வீட்டுக்கு வந்திருந்தாங்க. கைலாஷ் யாத்திரை போயிட்டு வந்துருக்காங்க. பிரசாதமும் தந்தாங்க..’

“நல்ல விஷயம் தானே?’

“அப்ப லதா கல்யாணப் பேச்சும் வந்தது…’

“என்ன சொன்னாங்க.. நேரம் வரலை – வந்தா நடந்துடும்னு வேதாந்தமா பதில் சொன்னாங்களா?’

“இல்லைங்க…’

“அப்புறம்…?’

“எந்த பரிகாரத்துக்கும் அடங்காத விஷயம் இழுத்துக்கிட்டே போகுதுன்னா ஏதோ சாபம் இருக்கணும்னாங்க..’

“சாபமா?’

கேட்கும்போதே ராகவனிடம் பலத்த திகைப்பு.

“ஆமாங்க… அப்படி இருந்தாதான் இப்படி இழுக்குமாம்.’

“என்ன ஜானகி… இந்தக் காலத்துல போய் சாபம் வரம்னு கிட்டு…’

“என்ன நீங்க… வயிறு எரிஞ்சு கொடுக்கற சாபம் நிச்சயம் பலிக்குங்க…’

“அப்படி ஒரு தப்பைட லதா பண்ணியிருப்பான்னு நீ நினைக்கறியா?’

“மண்ணாங்கட்டி.. அவ பண்ணாத்தானா? நாமளோ இல்லை உங்க முன்னோர்களோ பண்ணியிருக்கக்கூடாதா?’

“அது எப்படி நமக்குத் தெரியும்?’

“இருக்கலாம் இல்லையா?’

“தெரியல ஜானகி… நீ புதுசா புதுசா பூதத்த கிளப்பாதே!’

“அவங்க சொன்னதைச் சொன்னேன். அந்த சாபத்துக்குத் தகுந்த பரிகாரம் பண்ணிட்டா நம்ம பொண்ணுக்கும் நல்ல மாப்ள வந்துடுவாருங்க…’

“அதுக்கு எந்த கோயிலுக்கு போகணும்… எவ்வளவு செலவாகும்?’

“தெரியலியே…?’

“சிவகாமி அம்மா கிட்டயே கேள். அதையும் செய்துடுவோம்’ – என்றார் ராகவன். அவர்கள் இருவர் பேச்சையும் சற்று தள்ளி இருளில் நின்ற நிலையில் கேட்ட படியே இருந்தார் ராகவனின் அப்பா சந்தானம்.
அவர் கண்களில் ஏனோ கலக்கம்!

ஒரு மாதம் சென்று விட்டது. திரும்ப ஒரு ஜாதகம். ஜோதிடரிடம் காட்ட புறப்பட்டுக் கொண்டிருந்தார் ராகவன்.

“எங்கடா ஜோசியரைப் பார்க்கவா?’

“ஆமாம்ப்பா..’

“இந்த இடத்தை முடிச்சிடு நல்ல இடம்.’

“ஜாதகம் பொருந்தணுமே…?’

“பொருந்தும் பார்..!’

- அவர் சொன்னபடியே பொருந்தி கஸ்தூரி ரங்கனும் சூப்பர் ஜாதகம் என்றார். அடுத்து டிடெக்டிவ் சஞ்சய்… அவரும் பையன் பத்திரை மாற்று தங்கம் என்றார்.

அடுத்து பெண் பார்க்கும் படலம். மிக முக்கிய கட்டம். ஆனால் ஒரு சலனமும் இல்லாமல் பிரமாதமாக நிறைவேறியது. பையனுக்கு பெண்ணையும், பெண்ணுக்கு பையனையும் மிகவும் பிடித்துப் போய்விட்டது. “கல்யாணத் தேதியும் முடிவாகி லக்னப் பத்திரிகையிலும் அதை குறிப்பிட்டாகி விட்டது.’

ராகவன் ஜானகியிடம் வந்து “ஜானகி, சிவகாமி அம்மா சொன்ன பரிகாரத்துக்கு இவ்வளவு எஃபெக்ட் இருக்கும்னு நினைக்கல. நாம இன்னும் அதைச் செய்யல. இனிமேதான் செய்யவே போறோம். ஆனா அதுக்குள்ள நடக்க வேண்டியது நடந்துடுச்சு பார்த்தியா?’ என்றார்.

“ஆமாங்க.. அதை மறக்காம நல்ல படியா செய்துடணுங்க’ என்று சிரித்தாள் ஜானகி. வீட்டில் எல்லோர் முகங்களிலும் சிரிப்பு. இப்படி எல்லாரும் மனம் விட்டுச் சிரித்து அதைப் பார்த்து பல வருஷங்கள் ஆகிவிட்டது. சந்தானமும் அதை பார்த்து சற்று நெகிழ்ந்தார். அப்படியே குடையை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.

அந்த முதியோர் இல்லத்தில் நுழைந்தபோது பஜனை நடந்து கொண்டிருந்தது. சந்தானம் மௌனமாக அதில் இணைந்து கொண்டார். பஜனை முடிந்து பிரசாதம் வழங்கப்பட்டது. ஒரு எழுபது வயதுப் பெண்மணிதான் பிரசாதம் தந்தாள். சந்தானத்துக்கும் தந்தபோது அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர்! அந்தப் பெண்மணி மௌனமாக ஊன்றிப் பார்த்தாள்.

“கோகிலம்! ரொம்ப நன்றி! போனதடவை வந்து நான் உன் கால்ல விழுந்தது வீண் போகலை! நீ எப்ப எதுவும் வாய் திறந்து பேசலைன்னாலும் நீ என்னை மனசார மன்னிச்சிட்டேன்னு தெரிஞ்சு போச்சு. என் பேத்திக்கு நிச்சயமாயிடிச்சு. உனக்கு நான் செஞ்ச துரோகத்தால நீ கல்யாணமே பண்ணிக்காம இப்படி ஒரு சன்னியாசியாவே வாழ்ந்துட்டே இனி உன் கூட சேர்ந்து நானும் வாழப்போறேன்’ என்றார் சந்தானம்.

“இங்க கைவிடப்பட்ட அனாதைகளுக்கு மட்டும்தான் இடம். உங்களுக்குதான் குடும்பம் இருக்கே’ என்றாள் அந்தப் பெண்மணி.

“கோகிலம்! இந்த ஆஸ்ரமம் தான் இனி என் குடும்பம். உன் பெருந்தன்மையால என்னை பாவியாவே நீடிக்க விட்டுடாதே. எனக்கு உதவி செய்து பரிகாரம் செய்ய அனுமதி கொடு…’ – அவர் குரலில் கெஞ்சல், அந்த பெண்மணி சிரித்தாள். அதில் ஆயிரம் அர்த்தங்கள்!

- ஜூலை 2013
 

தொடர்புடைய சிறுகதைகள்
வழக்கம்போல பத்து மணிக்கே பரபரப்பாக தொடங்கி விட்டது. அந்த அலுவலகத்தின் செயல்பாடுகள். ஜெர்மானிய ரோஸ்ட் பலகைகளை கொண்டு உருவாக்கப்பட்டிருந்த குட்டி குட்டி அறைகளில் இருக்கும் கம்ப்யூட்டர்களில் எல்லாம் மெயில்கள் பிரிக்கப்பட்டு பார்க்கப்படவும் தொடங்கின. அங்கே ஒரு சராசரி பட்டதாரி கூட இல்லை. எல்லோருமே போஸ்ட்கிராஜூவேட்கள் ...
மேலும் கதையை படிக்க...
ஸ்வப்னப்பரியா பார்ப்பதற்கு ஜில்லென்று இருந்தாள். அசலான நாமகரணப் பெயர் விஜய கனகம்மா நாகலா தேவி என்பது தான். சினிமாவுக்கு தான் இந்த மாதிரி ரயில் நீளப்பெயர்கள் ஆகாதவை ஆயிற்றே? அதிலும் இது சரியான காரமான அந்திய பெயர். அதை அடித்து திருத்தி ஸ்வப்னப்ரியா என்று ...
மேலும் கதையை படிக்க...
பாகீரதி… பாகீரதி…
'சரணாகதி’ முதியோர் இல்லத்தின் முன்னால் ஆட்டோ தேங்கி நின்றது. அதில் இருந்து உதிர்ந்தாள் வித்யா. 'அடுத்த இஷ்யூ... முதியோர் சிறப்பிதழ். அதுல உன் கட்டுரைதான் சிகரமா இருக்கணும்’ என்று 'மலர்கள்’ பத்திரிகையின் ஆசிரியர் மலரவன் சொன்னது அவள் காதுகளில் எதிரொலித்தது. சரணாகதி, முதியோர்களுக்கான இல்லம் ...
மேலும் கதையை படிக்க...
வதம்
ஸ்வப்னப்பரியா
பாகீரதி… பாகீரதி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)