Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

ஆப்பிள்

 

சாயந்திர நேரம். நான் என் அலுவலகத்தை விட்டு கிளம்பும் நேரம். லேப்டாப்பை மெதுவாக ஷட்டவுன் பண்ணிவிட்டு லெதர் கேரி பேகினுள் வைத்தேன். கூடவெ என்னுடைய லஞ்ச் பேக்கையும் எடுத்துக்கொண்டேன். அதை தொடும் போது, மதியம் சாப்பிட்ட சாம்பார் சாதமும், உருளைகிழங்கு வறுவலும் ஞாபகம் வந்தது. அபாரமான ருசி. சாதரணமாகவே என் மனைவி சமையலில் ஒரு கலக்கு கலக்குவாள். இன்று பிண்ணியெடுத்திருந்தாள்.

போதக்குறைக்கு காலையிலே “எண்ணை கொஞ்சம் அதிகமானாலும் பரவாயில்லை. உருளைகிழங்கை நல்லா வறுத்து வை” என்று சொல்லியிருந்தேன் அவளிடம்.

இந்த இடத்தில் என் மனைவியை பற்றி கொஞ்சம் சொல்லியாக வேண்டும். கல்யாணாமாகி இந்த பத்து வருஷத்தில் நான் அவளை பற்றி புரிந்து கொண்ட ஒரே விஷயம் என்னவென்றால் ‘புரிந்துகொள்ளுவதற்கெல்லாம் அப்பற்பட்டவள் அவள் என்பதே’.

‘கீழ்கண்ட நான்கு பதில்களில் சரியான பதிலை தேர்தெடுக்க’ என்று பரீட்சையில் கேள்வி வந்தால், அவள் ஐந்தாவதாக ஒரு புது பதிலைத்தான் எழுதிவிட்டு வருவாள். அப்படிபட்டவளிடம் இந்த உருளைகிழங்கை நல்லா வறுத்து வை” என்று மீண்டும் சொன்னேன்.

வழக்கமாக மேலே கேட்கப்பட்ட கேள்விக்கு ரெண்டே பதில்தான் தரமுடியும். ஒன்று “சரி. வறுத்து வைக்கிறேன்!”. இரண்டவது “இல்லை வறுத்து வைக்க மாட்டேன்”.

ஆனா என் மனைவியோ, வழக்கம் போல, சம்மந்தமே இல்லாத வேறொரு டாபிக்குக்கு ஹைப்பர்லின்க் போட்டு போய், நான் சற்றும் எதிர் பார்க்காத பதில் தந்தாள்.

“ஜிம்முக்கு தெண்டத்துக்கு பணம் கட்டறீங்க. ஒழுங்காகவே போறதில்லை. ஆக்சுவலா ஜிம் சேர்ந்ததக்கப்புறம் தான் நீங்க ஒரு சுத்து பெருத்திருக்கீங்க. இன்னையிலேர்ந்து ஒழுங்கா போறேன்னு சொல்லுங்க. கூடவே டெய்லி ஏதாவது ஒரு புரூட் சாப்பிடுவேன்னு சொல்லுங்க. நான் உருளைகிழங்கை நல்லா வறுத்து தருகிறேன்” என்று என்னை வழக்கம் போல ஸர்ப்ரைஸ் பண்ணினாள்.

தெரு கிரிக்கெட் விளையாடும் போது, பக்கத்து வீட்டு கனகா ராவ் தான் பவுலிங் போடப்போகிறான் என்று பேட்டோடு நிற்கும்போது, திடீரென்று கபில் தேவ் வந்து பவுலிங் போட்டால் எப்படியிருக்கும்? மூளை ஒரு நிமிடம் குழம்பிடுமல்லவா? அந்த மாதிரி மூளை குழம்பியதாலும், வறுத்த உருளைகிழங்கு மேல் இருக்கும் பாசத்தாலும், என் மனைவி கூறிய அனைத்துக்கும் அவசர அவசரமாக ஒத்துக்கொண்டேன்.

ஆக இன்று மதியம் சாம்பார் சாதத்தையும், கூடவே மிக அருமையாக வறுக்கப்பட்ட உருளைகிழங்கையும் வெளுத்து கட்டினேன். என்ன அருமையான ருசி. ஆஹா!

ஒரு வழியாக லஞ்ச் கனவிலிருந்து விடுபட்டேன்.

சீக்கிறம் கிளம்பி, என் மகள் படிக்கும் பள்ளிக்கு சென்று அவளை பிக்கப் பண்ண வேண்டும்.

காரை எடுத்துக்கொண்டு, வீட்டுக்கு போகிற வழியில், என் மகள் படிக்கும் பள்ளிக்கு சென்று அவளை பிக்கப் பண்ணிக்கொண்டேன். அவள் தன்னுடைய ஸ்கூல் பேக்கையும் லஞ்ச் பேக்கையும் எடுத்துக்கொண்டாளா என்று செக் பண்ணிக்கொண்டேன். ஓரு வழியாக காரை ஓட்டிக்கொண்டு எங்கள் அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸில் நுழைந்தேன்.

கொஞ்ச தூரம் உள்ளே வந்ததும், எங்கள் பிளாட்டுக்கு கீழே நிறுத்தினேன். முதல் மாடியில் உள்ளது எங்கள் பிளாட். என் மகள் கதவை திறந்துக்கொண்டு அவளது தனது ஸ்கூல் பேக்கையும் லஞ்ச் பேக்கையும் எடுத்துக்கொண்டு ஓடினாள்.

நான் காரிலுள்ள, என்னுடைய தேவையான பொருள்கள் மற்றும் லேப்டாப் பேக், லஞ்ச் பேக் போன்றவற்றை எடுத்துக்கொண்டு என் அபார்ட்மெண்டை அடைந்தேன்.

உள்ளே நுழையும் போதே, சமையலறையிலிருந்து என் மனைவி சத்தமாக பேசுவது கேட்டது. அவளெதிரே என் மகள் அழுவது போல் நின்றுகொண்டிருந்தாள். எதற்கோ என் மனைவி அவளை திட்டிக்கொண்டிருந்தாள்.

“எதுக்கும்மா குழந்தை உள்ளே வந்ததும் வராததுமா திட்டறே?” , நான் என் மனைவியை பார்த்து கேட்டேன்.

“பின்ன என்னங்க? இவ லஞ்ச் பேக்கை பாருங்க. மத்தியானம் சாப்பிடறதுக்கு ஒரு டப்பாவுல ஒரு பட்டர் சாண்ட்விச்சும், கூடவே இன்னொரு சின்ன டப்பாவுல, ஒரு முழு ஆப்பிளை, ஸ்லைஸ் ஸ்லைஸா கட் பண்ணி கொடுத்திருந்தேன். இவ என்னடான்னா, பட்டர் சாண்ட்விச்சை மட்டும் சாப்பிட்டு விட்டு ஆப்பிளை அப்படியே திருப்பி கொண்டுவந்திருக்கா. ஹெல்தியா ஒரு புரூட் கூட சாப்பிடமாட்டேங்கிறா. நீங்களே அவளை ஒரு வார்த்தை கேளுங்க” என்றாள்.

நான் என் மகளைப் பார்த்து கேட்டேன், “ஏண்டா செல்லம், ஆப்பிளை சாப்பிடலை?”

“எனக்கு ஆப்பிள் பிடிக்கலைப்பா”

“அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. ஆப்பிளெல்லாம் சாப்பிடனும். ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், நம்ப உடம்பு ரொம்ப ஸ்டிராங்காயிடும்னு டாக்டெரெல்லாம் சொல்றாங்க தெரியுமா”

“எங்கிட்ட எந்த டாக்டர் அங்கிளும் அப்படி சொல்லலையே”

“இவ வாய் கொழுப்பை பாருங்களேன்” என்று என் மனைவி கொதிக்க ஆரம்பித்தாள்.

“கொஞ்ச நேரம் பொறு. நாந்தான் குழந்தை கிட்ட பேசிகிட்டு இருக்கேனில்ல” என்று என் மனைவியை அடக்கினேன். பிறகு என் மகளிடம் பேசலானேன்.

“நீ எந்த டாக்டர் அங்கிளிடம் இதைப்பத்தி கேட்டாலும் சொல்லுவாங்க. நீ கேட்டதில்லை. அதனால அவங்களும் சொன்னதில்லை” என்றேன்.

“ஆப்பிள் சாப்பிட்டா என்னால நல்லா ஸ்விம் பண்ண முடியுமா?” என்று கேட்டாள் என் மகள். அவளுக்கு எங்கள் அபார்ட்மெண்டிலிருக்கும் ஸ்விம்மிங் பூலில் ஸ்விம் பண்ணுவதென்றால் கொள்ளை இஷ்டம்.

“கண்டிப்பாக” என்றேன்.

“அப்படீன்னா ஓகேப்பா. இனிமேல் நான் டெய்லி ஆப்பிள் சாப்பிடுவேன்” என்று ஒரு ஆப்பிள் ஸ்லைஸை எடுத்து வாயில் போட்டுகொண்டாள் என் மகள். பிறகு மற்றவைகளை எடுத்து ஒரு பிளேட்டில் வைத்து என் மனைவி தர, அதை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு சென்றாள்.

நான் பெருமை பொங்க என் மனைவியை பார்த்து ஒரு லுக் விட்டேன். பின்னே, அவளாள் சாதிக்க முடியாததை நான் சாதித்து விட்டேனல்லவா.

“பரவாயில்லையே” என்றாள் என் மனைவி.

“பின்னே, ஐய்யாவை பத்தி என்ன நினைச்சே”

“சரி சரி. போதும் உங்க தற்பெருமை. உங்க லஞ்ச் பேக்கை கொடுங்க. காலி டப்பாவை விளக்க போடனும்” என்றபடியே அதை வாங்கி திறந்தாள். திறந்து பார்த்தவள் என்னை முறைத்துப் பார்த்தாள்.

உள்ளே சாம்பார் சாதம் இருந்த டப்பா காலியாக இருந்தது. ஆனால் கூடவே அவள் கொடுத்தனுப்பியிருந்த ஆப்பிள் அப்படியே மீதமிருந்தது.

- ஆகஸ்ட் 16 2007 

தொடர்புடைய சிறுகதைகள்
ஒரு ஊருல ஒரு பாட்டி இருந்தாங்க. அவங்க தினமும் நூறு வடையை சுட்டுகிட்டு பக்கத்து ஊருக்கு எடுத்துக் கொண்டு போய் வித்து, வாழ்ந்துகிட்டு இருந்தாங்க. பக்கத்து ஊருக்கு போகிற வழியில ஒரு காடு இருந்தது. அந்த காட்டை தினமும் கடந்துதான் இவங்க ...
மேலும் கதையை படிக்க...
நாதன் அமர்ந்திருந்த பஸ் மெதுவாக மேம்பாலத்தில் ஏறியது. அவன் இறங்க வேண்டிய இடம் சற்று நேரத்தில் வந்துவிடும். தன்னுடைய செல்·போனை எடுத்து பார்த்தான். காலை 5:45 மணி என்று காட்டியது. அவன் முகத்தில் ஒரு மெல்லிய கவலை ரேகை வந்து போனது. 'ஒரு வேளை ...
மேலும் கதையை படிக்க...
'தாத்தா!' என்று ஓடி வந்த பேத்தி ராகவியை அணைத்துக்கொண்டு உச்சிமுகர்ந்தார் பெரியவர் சிங்கமுத்து. அந்த கிராமத்திலே இருக்கும் வீடுகளிலே மிகப்பெரிய வீடானா ஜமீன் மாளிகைக்கு சொந்தக்காரர் அவர். அதில் தன் மனைவி ராஜேஸ்வரி, மகள், மருமகன் மற்றும் பேத்தியுடன் வாழ்ந்து வருகிறார். ராகவிக்கு தன் ...
மேலும் கதையை படிக்க...
சோபாவில் ஜம்பமாக சாய்ந்துகொண்டு உட்கார்ந்துகொண்டிருந்தாள் அந்த பெண்மணி. மாப்பிள்ளையின் தாய் என்பதால் ஒரு பெருமிதம். பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் அவள் கணவர். 'கெக்க பிக்க' என்று சிரித்துக்கொண்டே, தட்டில் இருந்த பஜ்ஜிகளை காலி பண்ணிக்கொண்டிருந்தார். மாப்பிள்ளையும் கம்பீரமாக முகத்தை தூக்கிகொண்டு உட்கார்ந்திருந்தார். கவர்ன்மெண்ட் ...
மேலும் கதையை படிக்க...
எம்.எல்.ஏ பாண்டுரங்கன் தான் புதிதாக ஆரம்பித்த பொறியியல் கல்லூரியில், தன்னுடைய அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு இருந்தார். தன் கையில் இருந்த பயோடேட்டாவையும், தன் எதிரில் அமர்ந்திருக்கும் அந்த பயோடேட்டாவுக்கு சொந்தக்காரரையும் மாறிமாறி பார்த்தார். பிரின்சிபால் வேலைக்கு நேர்முகத் தேர்வு நடத்திக்கொண்டிருக்கிறார். "நீங்க இதுக்கு ...
மேலும் கதையை படிக்க...
காக்கா.. பாட்டி.. வடை.. நரி.
விசா
பொய் மான்
வரதட்சினை
தகுதி

ஆப்பிள் மீது ஒரு கருத்து

  1. Muthu says:

    ha ha ha.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)