ஆத்ம திருப்தி!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,883 
 

இரவில் தூங்குகிறாளோ, இல்லையோ… அதிகாலையில், திருச்செந்தூர் செல்லும் ரயில் சப்தம் கேட்டதுமே எழுந்து விடுவாள் அஞ்சலை.
மணி நான்கு. இப்போதே எழுந்து வேலையை துவங்கினால் தான், ஆறு மணிக்கு எல்லாம் தயாராகிவிடும். இட்லி, சாம்பார், சட்னி, மெதுவடை செய்ய வேண்டும். பத்து, இருபது இல்லை… இருநூறு இட்லி, இருநூறு மெதுவடை, அதற்கேற்ப சாம்பார், சட்னி செய்ய வேண்டும்.
ஆத்ம திருப்தி!ஒரு மாதம் முன்பு வரை, தினமும் ஐம்பது இட்லியோ, இருபது, முப்பது வடையோ தான் செய்வாள் அஞ்சலை. அந்த பலகாரங்களை தயாரிக்க, 6 மணிக்கு எழுந்தால் போதும். ஒரு மணி நேரத்தில் செய்து விடுவாள். சாம்பார், சட்னி என, தனித்தனியாக செய்ய மாட்டாள்.
சட்னி மட்டும் தான் அம்மிக்கல்லில் அரைப்பாள். அம்மியை வழித்தெடுக்கும் போதே, அம்மிக் குழவியில் போதிய தண்ணீர் விட்டு விடுவாள். அரைத்த சட்னியை, அலுமினிய தூக்கில் போட்டு, அடுப்பில் இரும்புக் கரண்டியை வைத்து, அது காய்ந்ததும் எண்ணெய் விட்டு, லேசாக புகையத் துவங்கியதும், கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து, சட்னியில் கொட்டுவாள். அதே கரண்டியால், சட்டினியைக் கலந்து, ஒரு துளி எடுத்து நாக்கில் இட்டு, உப்பு, காரம் சரியாக இருக்கிறதா என டேஸ்ட் பார்ப்பாள்.
பின், முதல் நாள் இரவே ஊறப் போட்டிருந்த உளுத்தம் பருப்பை களைந்து, ஆட்டுக்கல்லில் போட்டு, கூடவே பச்சை மிளகாய் நாலு, உப்பு, பெருங்காயம் போட்டு, வடை செய்யும் பதத்துக்கு அரைத்துக் கொள்வாள்.
இரண்டு அடுப்பை பற்ற வைத்து, ஒரு அடுப்பில் இட்லி குண்டானை வைத்து, மாவு ஊற்றுவாள். அது வெந்து கொண்டிருக்கும் போதே, இன்னொரு அடுப்பில் வாணலியைப் வைத்து, எண்ணெய்விட்டு காய்ந்ததும், மெதுவடை தட்டுவாள். இரண்டையும் ஒரே நேரத்தில், மாற்றி, மாற்றி செய்தால், ஒரு மணி நேரத்தில் எல்லாம் தயாராகி விடும்.
அடுப்பை அணைத்துவிட்டு, இட்லி, வடை, சட்னியை கொண்டு வந்து, குடிசை வாசலில் வைப்பாள் அஞ்சலை. கை கழுவ பக்கெட்டில் தண்ணீரும், பிளாஸ்டிக் குடத்தில் குடிக்க தண்ணீரும் கொண்டு வந்து வைப்பாள்.
தையல் இலை தைத்ததும், தைக்காததுமாக சுருட்டி வைத்திருப்பதை பிரித்து, ஒருமுறை அதை கையால் நீவி விட்டு, அது மீண்டும் சுருண்டு கொள்ளாதபடி, அதன் மீது மிளகு, சீரகம் பொடிக்கும் கல்லை வைப்பாள்.
இட்லி, வடை சாப்பிடவும், வீட்டிற்கு வாங்கிச் செல்லவும், அக்கம் பக்கத்திலுள்ள மக்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பிப்பர். இட்லி, வடை எதுவானாலும் ஒரே விலை தான். இட்லி, வடை தலா ஒன்றரை ரூபாய். கடை போட்ட கொஞ்ச நேரத்துக்குள்ளாகவே, இட்லி, வடை விற்று தீர்ந்து விடும்; சட்னி பாத்திரம் காலியாகி விடும்.
அவள் சாப்பிடக் கூட மிச்சமிருக்காது. அதற்காக கவலைப்பட மாட்டாள் அஞ்சலை. இன்னும் சிறிது நேரத்தில், அவள் வேலை செய்யும் வீட்டில் காபி கொடுப்பர். காலையில் டிபன் செய்திருந்தால், ஒரு தட்டில் கொஞ்சம் போட்டு கொடுப்பர். அது, அநேகமாக இட்லியாகவோ, வடையாகவோ இருக்காது. பூரி, சப்பாத்தி, உப்புமா, பொங்கல் போன்று ஏதோ ஒரு உணவாக இருக்கும்.
மத்தியான சாப்பாட்டுக்கும், இரவு சாப்பாட்டுக்கும் வழி வேண்டுமே? அதற்காகத்தான், காலையில் தன் குடிசையின் முன், இட்லி கடை போடுவாள். செலவு போக, பத்து, இருபது லாபம் கிடைக்கும். ஒரு ஆழாக்கு அரிசி வாங்கி, சோறு ஆக்குவாள். ஊறுகாய் பொட்டலம் வாங்கிக் கொள்வாள். வேலை செய்யும் வீடுகளில், குழம்பு, ரசம் மிச்சமிருந்தால் கொடுப்பர். அவற்றை வைத்து நாளை ஓட்டிவிடுவாள் அஞ்சலை.
அதெல்லாம் ஒரு மாதத்துக்கு முன்பு வரை; இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
நிறைய இட்லி, வடை, அதற்கேற்றபடி சட்னியும், சாம்பாரும் செய்ய வேண்டி இருக்கிறது. இட்லி மாவு, வடை மாவு நிறைய ஆட்ட வேண்டியிருக்கிறது. சாம்பாருக்கு துவரம் பருப்பு நிறைய வேக வைக்க வேண்டியிருக்கிறது. அதில் போட தக்காளி, வெங்காயம் நறுக்க வேண்டியிருக்கிறது. சட்டினிக்கு நிறைய தேங்காய் துருவ வேண்டியிருக்கிறது. பச்சை மிளகாய், பொட்டுக்கடலை எல்லாம் போட வேண்டியுள்ளது.
சாம்பார் பொடி கடையில் வாங்கி கட்டுப்படி ஆகவில்லை. அதனால், மிளகாய், தனியா, வெந்தயம், கடலைப் பருப்பெல்லாம் போட்டு, நான்கு நாட்களுக்கு ஒருமுறை, மாவு மில்லில் அரைத்து வைத்துக் கொள்வாள். இட்லி, வடையை போட்டு வைக்க, ஒரு பெரிய அன்னக் கூடையும், ஒரு சின்ன அன்னக் கூடையும் வாங்கி வைக்க வேண்டியிருக்கிறது. சட்னி, சாம்பார் வைக்க, சில்வரில் இரண்டு குத்துப் போணி வேண்டியிருக்கிறது.
எல்லாவற்றையும் விட, காலை மூன்றரை மணிக்கு, திருச்செந்தூர் ரயில் போகும் சப்தம் கேட்டதுமே எழ வேண்டியிருக்கிறது.
ஒருநாள் —
சின்னச் சின்ன வியாபாரிகள், வேலைக்குச் செல்பவர்கள், சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு சாப்பிட, ட்ரை சைக்கிளில் ஒருவன் வந்தான். வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, அஞ்சலை முன் குந்தி உட்கார்ந்து, நான்கு இட்லி, இரண்டு வடை வாங்கி சாப்பிட்டான்.
இட்லி, வடை, சட்னி மிகவும் சுவையாக இருந்ததால், இன்னும் இரண்டு இட்லி, ஒரு வடை வாங்கி சாப்பிட்டு, தண்ணீர் குடித்தான்; வயிறு நிரம்பியது. சின்னதா ஒரு ஏப்பம் கூட வந்தது.
“ஆறு இட்லி… மூன்று வடை. எவ்வளவு காசு பாட்டி?’ என்று கேட்டான் அவன்.
மனதுக்குள்ளேயே கணக்குப் போட்டுப் பார்த்த அஞ்சலை, “பதிமூணு ரூபா, அம்பது காசு…’ என்றாள்.
“ரொம்ப சல்லிசா இருக்கே… ஒரு இட்லி, ஒரு வடை எவ்வளவு பாட்டி?’ எனக் கேட்டான்.
“ஒவ்வொண்ணும் ஒண்ணரை ரூபா தான்…’ என்றாள் அஞ்சலை.
“கட்டுப்படியாகுதா பாட்டி?’ எனக் கேட்டான்.
“இந்த கிராமத்துல, இதுக்கு மேல விலை வச்சா விக்காது…’ என்றாள்.
அவன் போய் விட்டான்.
இரண்டு நாட்கள் கழித்து திரும்பவும் வந்தான்.
“பாட்டி… இட்லி, வடை கொஞ்சமா போட்டு விக்கற உனக்கு, லாபம் கொஞ்சம் தானே கிடைக்கும்?’
“ஆமாம்!’ என்றாள் அஞ்சலை.
“நிறைய செஞ்சிப் போட்டா, நிறைய லாபம் கிடைக்கும்ல?’
“கிடைக்கும் தான் தம்பி… ஆனா, அத்தனை இட்லி, வடையையும் வாங்க யார் இருக்காங்க?’ என்றாள் அஞ்சலை.
“நான் தெனம் வந்து வாங்கிட்டுப் போறேன் பாட்டி…’ என்றான் அவன்.
“அம்புட்டு இட்லியும், வடையுமா!’ என்று, நம்ப முடியாதவளாக கேட்டாள் அஞ்சலை.
“ஆமாம் பாட்டி… பக்கத்து டவுன்ல வெல்ல மண்டி, அரிசி மண்டி, தேங்காய் மண்டி, மளிகைக் கடை எல்லாம் வச்சிருக்கேன். மாசம் ஒரு லட்சம் ரூபாய்க்கு வியாபாரம் ஆகும்; நல்ல லாபம் வரும். ஆனா, எனக்கு ஒரு குழந்தை கூட இல்ல பாட்டி…
“அதனால, ஸ்கூல் போற பசங்களுக்கு, அங்கே மதிய சோறு போடுறாங்க. ஆனா, அநேகமா எல்லா குழந்தைகளும், காலையில ஸ்கூலுக்கு போறப்போ, சாப்பிடாம பட்டினியாகத்தான் போகுதுங்க… ஒரு ஸ்கூல் இருக்கு. அதுல நூறு, நூத்தம்பது பிள்ளைங்க படிக்குது… காலை வேளையில, ஒவ்வொரு பிள்ளைக்கும், இட்லி, வடை, சட்னி, சாம்பாரோட கொடுக்கலாம்ன்னு இருக்கேன் பாட்டி…’ என்றான்.
“நல்ல காரியம்பா நீ செய்ய நினைக்கிறது. சின்னப் பிள்ளைங்க பசியை போக்கறது பெரிய விஷயம்பா… நீ நல்லா இருக்கணும். இந்த மாதிரி நல்ல மனசு யாருக்கும் சுலபமா வந்துடாது. தெனம் எவ்வளவு இட்லி, வடை வேணும்ன்னு சொல்லு… செய்து தர்றேன்…’ என்றாள் அஞ்சலை.
“இருநூறு இட்லி, நூறு வடை…’ என்றான் அவன்.
“செய்து தர்றேன் பா… அது சரி… உன் பெயர் என்னன்னு சொல்லலியே…’ என்றாள் அஞ்சலை.
“மாரியப்பன்… “மாரி மாரி…’ன்னு கூப்பிடுவாங்க!’ என்றான் அவன்.
மறுநாள் —
அதிகாலையிலிருந்து, ட்ரை சைக்கிளில், இரண்டு பெரிய குத்துப் போணி, ரெண்டு அலுமினிய தூக்கு எடுத்து வர ஆரம்பித்தான் மாரி.
தன் ஒருத்தியால், காலையில் இவ்வளவு சீக்கிரமாக எழுந்து செய்ய முடியாதென, பெண் வயிற்றுப் பேத்தி பொன்னியை வரவழைத்து, வைத்துக் கொண்டாள் அஞ்சலை.
பொன்னி மகா சுறுசுறுப்பு. பத்து பனிரெண்டு வயது தான் இருக்கும். பம்பரமாக சுழன்று வேலை செய்தாள். வடைக்கு அரைப்பது, சட்னி அரைப்பது அவள் தான். பாட்டியோடு போட்டிப் போட்டு, மாரி வருவதற்கு முன்பே, எல்லாவற்றையும் தயார் செய்து வைத்து விடுவாள்.
முன்பணமாக ஆயிரம் ரூபாய் கொடுத்திருந்தான் மாரி. அன்றாடம் வாங்கும் பொருட்களுக்கு, மறுநாள் காலையில் சரக்கு எடுக்க வரும்போது, ஒரு பைசா பாக்கியில்லாமல் கொடுத்து விடுவான்.
உழைப்புக்கு சரியான ஊதியம் கிடைத்து வந்ததால், குடிசை வீட்டிலிருந்து, ஓட்டு வீட்டுக்கு மாறினாள் அஞ்சலை. கிரைண்டர் வாங்கினாள்; “டிவி’ வாங்கினாள். பெரிய, பெரிய பாத்திரங்கள் வாங்கினாள். காஸ் அடுப்பு வந்தது. கட்டில், மெத்தை, தலையணை, போர்வை, கம்பளி வாங்கினாள். கூடவே மூட்டுவலியும் சேர்ந்து கொண்டது.
வாழ்க்கைத்தரம் உயர்ந்தாலும், இந்த தொழிலை அவள் நிறுத்தவில்லை.
மாரியப்பன் ஒருமுறை வந்தபோது, “”தம்பி… ஸ்கூலு பிள்ளைங்க ஒருவேளை பசியாற, தினம் தினம் பணத்தை செலவழிக்கிறீயே… அந்த பசங்களுக்கு நீ செய்ற உதவியில, எனக்கும் ஒரு சின்னப் பங்கு தர்றீயா?” எனக் கேட்டாள் அஞ்சலை.
“”எனக்கு நிறைய வருமானம் வருது… பிள்ளைக்குட்டி இல்லை. பசங்களுக்கு உதவி செய்றேன். உனக்கு என்ன பாட்டி சம்பாத்தியம் இருக்கு?” எனக் கேட்டான் மாரி.
“”நீ மொத்தமா என் கிட்டேயிருந்து வாங்கறதால, என் வீட்டு நிலைமை இப்போது அபிவிருத்தியாகி, நாலு காசு கையில சேர ஆரம்பிச்சிடுச்சு தம்பி… அதான், நானும் உன் கூட சேர்ந்து, பசங்களுக்கு என்னாலான சின்ன உதவி ஏதாவது செய்யலாம்ன்னு நினைக்கிறேன்!” என்றாள் அஞ்சலை.
“”உன்னால என்ன செய்ய முடியும் பாட்டி?”
“”இட்லி, வடை ஒவ்வொண்ணுக்கும், 25 காசு விலை குறைச்சுத் தர்றேன்!” என்றாள் அஞ்சலை.
“”சரி பாட்டி!” என்றான் மாரி.
அன்றிலிருந்து, ஒவ்வொன்றுக்கும் 25 காசு குறைக்கப்பட்டது. இருநூறு இட்லி, நூறு வடை… எழுபத்தைந்து ரூபாய் அஞ்சலையின் பங்கு!
மனநிறைவும், மகிழ்ச்சியும் அடைந்தாள் அஞ்சலை.
“”பாட்டி… இப்போ நம்ம இட்லி கடை பெரிசாயிடுச்சி. அரிசி, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பெல்லாம் நிறைய வாங்க வேண்டியிருக்கு. டவுன்ல போய், மூட்டை கணக்குல வாங்கினா, விலை குறைவா கிடைக்கும். நாமும், தினசரி உள்ளூர் கடையில அதிக விலை கொடுத்து வாங்க வேண்டாம்!” என்றாள் பொன்னி.
“”நீ சொல்றது சரிதான் பொன்னி… மூட்டுவலியால கஷ்டப்படற நான், எங்கே டவுனுக்கு போவேன். மளிகை சாமானெல்லாம் வாங்குவேன்?” என்றாள் அஞ்சலை.
“”நீ வர வேண்டாம் பாட்டி. நானே டவுனுக்குப் போயி, மளிகை சாமானெல்லாம் வாங்கி, ராவுத்தர் குதிரை வண்டியில போட்டுக்கிட்டு வந்துடறேன். ரெண்டு, மூணு தடவை போயிட்டு வந்தா பழகிடும்!” என்றாள் பொன்னி.
“”சரி பொன்னி!” என்றாள் அஞ்சலை.
டவுனுக்குப் போய், ஒரு கடைக்கு நான்கு கடை ஏறி இறங்கி, விலையை விசாரிச்சு, பொருள் தரம் பார்த்து வாங்கினாள் பொன்னி. ராவுத்தர் வண்டியில் அவற்றை ஏற்றிக் கொண்டு, ஊர் திரும்பினாள்.
வழியில் ஒரு சின்ன டீ கடை முன் வண்டியை நிறுத்திய ராவுத்தர், “”ஒரு டீ குடிச்சுட்டு வர்றேம்மா… நீயும் வாயேன்…” என்றார்.
“”நீங்க சாப்பிட்டுட்டு வாங்க பாய்!” எனக் கூறிவிட்டு, காபி கடையை நோட்டம் விட்டாள் பொன்னி.
“மாரியப்பன் காபி டிபன் கடை’ என்ற போர்டு கண்ணில் பட்டது. கடையினுள் பார்வையை செலுத்தினாள் பொன்னி.
பெரிய அலுமினிய தட்டில், இட்லி, வடை குவிக்கப்பட்டிருந்தது. அருகே சட்னி, சாம்பார் தூக்கு. நிறைய பேர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். மாரி தான் பரிமாறிக் கொண்டிருந்தான். அவன் மனைவி கல்லாவில் உட்கார்ந்து, காசை வாங்கி போட்டுக் கொண்டிருந்தாள்.
அதைப் பார்த்து திடுக்கிட்டாள் பொன்னி.
ஏழை குழந்தைகளுக்கு காலை உணவளிக்க தான், இட்லி, வடை வாங்கிச் செல்வதாக மாரி சொன்னது அப்பட்டமான பொய். பாட்டியிடம் பொய் சொல்லி, குறைந்த விலையில் இட்லி, வடை வாங்கி வந்து, டீ கடை நடத்துறான். வெளியே இருந்த போர்டில், இட்லி இரண்டு ரூபாய், வடை மூன்று ரூபாய் என்று எழுதியிருந்தது.
பொன்னியின் மனம், மாரியின் வஞ்சக செயலை எண்ணி துடித்தது; அழுதது; கதறியது. பாட்டியிடம் ஓடிப் போய், மாரியின் வேஷத்தை சொல்ல வேண்டுமென்று பரபரப்பானாள்.
அவளை அடக்கியது மனம். வேண்டாம்… மாரி பொய் சொன்னாலும், பாட்டிக்கு நல்ல வியாபாரம் நடக்குது. நான்கு காசை சேர்க்க முடிகிறது. எல்லாவற்றையும் விட, பாட்டியின் மனதில், ஏழை குழந்தைகளுக்கு தானும் உதவுகிறோம் என்ற ஆத்ம திருப்தி இருக்கிறது. அதை கலைக்க வேண்டாம்; அப்படியே இருக்கட்டும்.
தன் மனதை அடக்கிக் கொண்டாள் பொன்னி.

– பிப்ரவரி 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *