ஆத்திரத்துக்கு அப்பால்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 28, 2020
பார்வையிட்டோர்: 4,450 
 

இனி சரிப்படாது. இவ்வளவு தூரத்துக்கு அவமானப் பட்டப் பிறகு இங்கு இருப்பது முறையாகாது.

தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பவனைச் சும்மா விடலாமா…?நாம் போய்விட்டாள்

எவ்வளவு செய்திருக்கிறோம். அத்தனையும் மறந்து தம்பி அடாவடி செய்கிறானென்றால்….. நெஞ்சு கொதிக்க நடந்து கொண்டே இருந்தேன்.

இரவு தம்பி என்னுடைய தற்போதைய புது இரு சக்கர வாகனம் ஹீரோ ஹோண்டாவைக் கேட்டான். அவனுக்கு எப்போதுமே புதிது என்றால் பிடிக்கும். கொடுக்கவில்லை. காரணம்..?

ஒரு மொபெட் லூனா, ஒரு டி.வி.எஸ். 50. ஒரு ஸ்கூட்டர் என்று அனைத்து வாகனங்களையும் கண் மண் தெரியாத வேகத்தில் ஒட்டி விழுந்து நொறுக்கி விட்டான். இதில் ஸ்கூட்டர் நொறுங்கியதுதான் கொடுமை. ஆள் தப்பியதே அதிசயம்.

80. கிலோ மீட்டர் வேகத்தில் சென்று, ஒரு பேருந்தை முந்தி…., எதிரில் இடைப்பட்ட ஒரு எல்லைக் கல்லில் மோதி, ஒரு நகராட்சி குடி நீர் குழாய் உடைத்து… வண்டி சுக்கு நூறு.

“வண்டி இப்படி நொறுங்கிக் கிடக்கே. ஆள் பிழைத்தானா..? “என்று பார்த்தவர்களெல்லாம் கேட்டார்கள்.

மோதிய வேகத்தில் ஆள் எம்பி, எகிறி….. எந்த புண்ணியவானோ வீடு கட்ட இறக்கி வைத்திருந்த ஒரு லாரி லோடு மணல் மீது விழுந்து.. எந்தவித காயமுமில்லாமல் ஆள் பிழைப்பு, அதிசய பிறப்பு.

அப்படிப்பட்டவனுக்கு மீண்டும் வண்டி கொடுக்க முடியுமா..? தம்பிதானென்றாலும் எவ்வளவு பொருள், பண இழப்பு. ?! அதெல்லாம் கூட போனால் பரவாயில்லை. சம்பாதித்துப் புதிதாய் வாங்கிக் கொள்ளலாம். உயிர்..???

மறுத்த விளைவு…காலையில் கண் விழித்துப் பார்த்தால்…புது வண்டியின் இருக்கை மொத்தமும் பிளேடால் கிழிக்கப் பட்டு , ஆக்ஸிலேட்டர் ஒயர், பிரேக்… எல்லாம் துண்டிக்கப் பட்டு….. அனைத்தும் நாசம் !!

அவ்வளவுதான் எவருக்குப் பொறுக்கும்..? ஆத்திரம் !

”ராஸ்கல் ! ஏன்டா இப்படிப் பண்ணினே..? “வெளியே சென்று வீட்டிற்குள் நுழைந்தவனை நடு வீட்டில் விட்டு சட்டையைப் பிடித்து எகிற….

சத்தம் கேட்ட அடுத்த வினாடி…

அடுப்படியிலிருந்த அவன் மனைவி பதறி அடித்துக் கொண்டு ஓடிவந்தாள்.

கண்ணில் பட்ட காட்சியைப் கண்டவள்…

“கையை எடுங்க..”கத்தினாள்.

ஆத்திரம் அவள் பக்கம் திரும்ப …முறைத்தேன்.

“என் புருஷன் சட்டையிலிருந்து மரியாதையாக கையை எடுக்குறீங்களா.. இல்லையா..? ..”- முகம் சிவந்து குரல் கறார், கடுமையாக வந்தது.

‘எவ்வளவு பெரிய வார்த்தை ! புகுந்த வீட்டிற்கு வந்து மூன்று மாதங்கள் கூட ஆகாத நிலையில்.. அதுவும் மூத்தார் என்கிற நினைவில்லாமல் கொழுந்தனைப் பார்த்து…!!’ – அதிர்ந்து கையை எடுத்தேன்.

அதிர்ச்சியில் மரமாகி நின்ற தம்பி கசங்கிய சட்டையை இழுத்து சரி செய்து கொண்டு கொல்லைக்குச் சென்றான்.

அவனைத் தொடர்ந்த அவன் மனைவி மீண்டும் அடுப்படிக்குள் சென்றாள்.

பொருள் நஷ்டம், பணம் நஷ்டம், எல்லாவறையும் விட தன் கணவனுக்காக.. மூத்தார் என்று கூட நினைக்காமல், கொழுந்தன் என்றும் பார்க்காமல்…

“கையை எடு ! “என்கிற வார்த்தைகள் ஓங்கி மிதித்து துவசம் செய்ய..

இனி இங்கு இருப்பது முறையா…?

வெகு தூரம் நடந்து ஒரு மரத்தடியில் அமர்ந்தேன்.

இவனுக்காகப் பட்ட கஷ்டங்கள். !

நான் பதினைந்து வயதாக இருக்கும்போது ..இவனைப் பெற்றுப் போட்ட …எனது தாய் , தந்தை இருவரும் ஒருவர் பின் ஒருவராக போய் எங்களை அனாதையாக்கிட… இவனுக்குத் தாயாய் இருந்து, தந்தையாய்ப் பராமரித்து, வளர்த்து, படிக்க வைத்து, ஆளாக்கி, விழாதவன் காலில் விழுந்து , ஒரு அரசாங்க வேலைக்கும் அமர்த்தி , திருமணமும் முடித்து…

தப்பு. அவனுக்குத் திருமணம் முடித்ததும்…. நீ போறீயா, நான் போகட்டுமா என்று பிரிந்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல் பாசத்தில் கூட்டுக் குடும்பமாய் இருந்தது தவறு.

நல்ல வேளையாக என் மனைவி ஊரில் இல்லை. இருந்திருந்தால்… ஏக களேபரமாகி இருக்கும். வீடு ரணகளப்பட்டு அப்போதே பிரிந்திருக்கும்.

இனியும் இருப்பது முறை இல்லை. ஆள் வந்ததும் தனிக்குடித்தனம்தான். ! – திரும்பி வந்து வீட்டு படி ஏறினேன்.

உள்ளே…

“அண்ணன் தம்பிக்குள்ள ஆயிரம் இருக்கும். நீ இடையில் வந்திருக்கக் கூடாது. மரியாதையாக கையை எடுங்கன்னு பெரிய வார்த்தைகள் பேசி இருக்கக் கூடாது. என்னை… தாய் தந்தையாய் இருந்து வளர்த்தவர். நானே சொல்ல தகுதி இல்லாத வார்த்தை. கேட்ட அடுத்த நிமிசமே உன்னை அறைஞ்சி கண்டிச்சிருப்பேன். அது மனுசத் தன்மை இல்லேன்னு பொறுத்தேன்.

“வித்யா ! சட்டையைப் புடிச்ச என் சகோதரன் சட்டையை நான் திருப்பி பிடிக்கக் கூடாதா.? தாக்க பலமில்லையா..? இருக்கு. ஏன் செய்யல..? எங்களுக்குள் ஒரு பந்தம், பாசம், மரியாதை. என் முன் கோபம், ஆத்திரம்…தப்பு செய்திட்டேன். தவறு செய்த என்னை கண்டிக்க அவருக்கு உரிமை இருக்கு.”

“இல்லீங்க. நீங்க அவரைத் திருப்பித் தாக்கிடக்கூடாது என்கிற எண்ணத்தில் இப்படி பேசி திசை திருப்பி… ”

“நீ ஆயிரம் சமாதானம் சொன்னாலும் நான் ஏற்க போறதில்லே. திரும்பி வந்ததும் அவர் கால்ல விழுந்து மன்னிப்புக் கேள். அப்போதான் என் மனசு சமாதானமாகும் ! ”

“சரிங்க…”

எப்பேர்ப்பட்ட தம்பி. புத்திசாலி மனைவி ! – எனக்குள் மனம் சமாதானமாக..

மெல்ல வீட்டிற்குள் அடி எடுத்து வைத்தேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *