Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

ஆண் மரம்

 

அம்மா என்று வலியால் மோகன் அலறியபோது போலீஸ்காரரின் குண்டாந்தடி மோகனின் உடம்பில் எங்கே பட்டது என்பது சுசிக்குத் தெரியாமலிருந்தது. அநேகமாக முதுகில் எங்கோ பட்டிருக்க வேண்டும் என்று நினைத்தாள். அவன் உடம்பைக் கயிற்றைச் சுருட்டிக் கொள்வது போல் சுருட்டிக்கொண்டு தரையில் விழுந்தான்.

போலீஸ்காரர் குண்டாந்தடியை மறுபடியும் ஓங்கியபோது ” வேண்டாங்க .. வுட்டுடங்க “ என்றாள் சுசி. சற்றே வியர்த்திருந்த போலீஸ்காரர் வலது கையை ஒரு வித வலியைத் தாங்குவது போல் கீழே கொண்டு வந்தார். கிரேனிலிருந்து இறங்கும் பெரிய் பொருள் போல் அசைவிருந்த்து. “ என்னம்மா பெரிய ரோதனையாப் போச்சு. புருசன் கொடுமைப்படுத்தறான்னு புகார் குடுக்கறே, அடுச்சா இப்பிடி நாயம் பேசறே. நடுங்கறே “

“ இல்லீங்க .. இந்த தரம் வுட்டிருங்க சார்.”

நாற்காலியில் உட்கார்ந்து கொண்ட .. போலீஸ்காரர் வலது காலைத்தூக்கி எதிரிலிருந்த பிளாஸ்டிக் நாற்காலியின் மீது வைத்தார். ஆசுவாசப்படுத்திக் கொள்வது போல் பெருமூச்சு விட்டார்.

” எதுக்கம்மா. இங்க வர்றீங்க “

” இந்த தரம் வுட்டிருங்க சார் . அப்புறம் பாத்துக்கலாம்.” மோகன் மெல்ல தன்னை சுதாகரித்துக் கொண்டு சுவரில் சாய்ந்தான். அவனின் முழுக்கை சட்டை தாறுமாறாய் சுருங்கியிருந்தது. கழுத்துப் பகுதி வியர்வையால் நிரம்பி கசகசத்தது.

” குடிக்கறான். ஒதைக்கறான்ன்னு பெண் போலீஸ் நிலையத்திலெ போயி சொல்றே.. விசாரிக்க ரெண்டு அடி போட்டா அவன் அலறதெ விட நீ பெரிசா அலற . இதிலெ கம்ள்ளைண்ட் வேற..”

“ என்ன பணறது சார். கொடுமை தாங்காமெ என்னமோ சொல்லிட்டன்” அவளின் குரல் சிதைந்து அழுகையில் தோய்ந்திருந்த்து.

“ புருசன் அடிபடறது பாத்து உனக்கும் வலிக்குதோ “

தேர்தல் முடிவில் எல்லாம் நிவர்த்தியாகும் என்றே நினைத்திருந்தாள். குடித்து குடும்பத்தைச் சீரழிக்கும் மோகனின் சித்திரவதைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க நல்ல வாய்ப்பு கிடைக்கும் .தேர்தல் முடிந்தால் ஒரு வழி பிறக்கும், தை பிறக்கப்போவதில்லை இப்போது. ஆனால் வழி தெரியப் போகிறது என்று நினைத்தாள்.மதுவிலக்கை மெல்ல மெல்ல அமுலாக்குவார்களா. ஒரே நாளில் எல்லா டாஸ்மாக் கடைகளையும் மூடி விடுவார்களா என்றக் குழப்பத்தில் இருந்தாள். ஒரு மாதங்களுக்கு மேலாக அவளின் கனவில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் வந்து போயின.மோகன் தெளிந்தவனாய் நடமாடிக்கொண்டிருந்தான். மகளை மிதிவண்டியில் உயர்நிலைப்பள்ளிக்குக் கூட்டிப் போவனாக இருந்தான்.. எல்லாம் சுமுகமாக கனவில் சென்றன.காதல் பருவத்திற்குப் பிறகு சுகமான கனவுகளை அவள் கண்டதாக எண்ணினாள்.

தேர்தல் முடிவு அவளின் தூக்கத்தை மறுபடியும் கலைத்துப் போட்டது. இனி பழையபடிதான் என்பது தெரிந்து விட்டது. மதுவிலக்கில்லை. முதலில் மூடப்படும் 500 கடைகளில் அவள் வீட்டருகே இருக்கும் குமார் நகர் கடை இருக்க வேண்டும் என்று முனியப்பனை வேண்டினாள்.

“ மெயின் பஜார்லே இருக்கற கடை.. இதை மூடுவாங்களா . இதை மூடுனாலும் கரண்ட் ஆபீஸ் கடைக்கு ரொம்ப தூரமா என்ன..ஒண்ணும் விடியப்போறதில்லெ..” சித்தி அவளின் எல்லா சிறு கனவுகளையும் தகர்த்துப் பேசினாள். அவள் கணவனை குடிக்கு பலி கொடுத்து விதவையானவள். பனியன் கம்பனி வேலை எட்டாவது, ஆறாவதும் படிக்கும் தன் மக்ன்களுக்கு சோறு போடப்போதும் என்று பெருமூச்சு விட்டபடி வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பவள். அந்த வீதியில் விதவைகளின் எண்ணிக்கை அதிகமாவது பற்றி அவளின் கவலை இருந்து கொண்டே இருந்தது. மோகனை மது மீட்பு இல்லங்களில் இரு தரம் சேர்த்து வெளிக்கொணர்ந்தாள் சுசி. ஆனால் அதிகபட்சமாய் ஒரு மாதம் குடிக்காமல் இருப்பான். மீண்டும் ஆரம்பித்து விடுவான். ஏதாவது கேட்டால் வீட்டிற்கு வருவதே அபூர்வமாகி விட்டது. பனியன் கம்பனியின் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பது திங்கள், செவ்வாய் வரை நீளும். வாரம் மூன்று நாள் வேலைக்குப் போனால் அதிகம்.. அந்த சம்பளம் போதும் குடிக்க, அவனின் செலவிற்கென்று. மற்றைய நாட்களில் குடித்து விட்டு எங்காவது கிடப்பது என்றாகிவிட்டது அவனுக்கு.. சுடுகாட்டில் இருந்த ஆயி மண்டபம் பலருக்கு தூங்கவென்று பயன்படும். மோகனுக்கும் பயன்பட்டது.

“ பெரிசா காதல் வேற. காதல் பண்ணி கண்ணாலம் கட்டிகிட்டங்க வேறே “ என்று சித்தி குத்திக் காட்டுவாள்.” என்னமோ பெரிசா சொர்க்கத்தைக் கொண்டுட்டு வரப்போறான்னு காதல் பண்ணீட்டையாக்கும்”

“ அதெல்லா அந்தக்காலம்.. போச்சு. என்னமோ ஒரு மோகம் வந்துச்சு. மோகம் கலஞ்சு போச்சு தெனம் தூக்கத்திலிருந்து எந்திரிக்கறப்போ கலஞ்சு போற கனவு மாதிரி. அதயெல்லா மறந்துட்டுதா இருக்க வேண்டியிருக்குது ”

போலீஸ்காரர் சட்டென நாற்காலியில் உட்கார்ந்தபடியே தூங்கிப்போனவர் கண்களைக் கசக்கிக் கொண்டு அவளைப் பார்த்தார். ” என்னம்மா. இன்னம் நின்னுட்டே இருக்கறையா. நான் ஒரு குட்டித் தூக்கம் போட்டு எந்திர்ச்சிசிட்டேன். உங்காளும் தூக்கத்திலெ இருக்கறான் போலிருக்கு. அடிவாங்குன பயம் இல்லாமெ தூக்கம் வந்திரிச்சு பாரு அந்த குடிகார நாய்க்கு .. செரி என்ன பண்றது… டீ குடிக்கறையா “

” இந்த தரம் வுட்டிருங்கய்யா .. அப்புறம் பாத்துக்கறன் ”

“ ரெண்டு தபா கம்ப்ளெய்ண்ட் பண்ணிட்டே.. இதுக்கு மேல என்ன பண்ண . அதுதா நாலு வீசு வீசலாமுன்னு ..”

அங்கேரிபாளையத்தில் இருந்த போது அங்கிருந்த காவல்நிலையத்தில் இருமுறை புகார் கொடுத்திருந்தாள். கணவன் குடித்து விட்டு அடிப்பதாக. அங்கும் கூப்பிட்டு விசாரித்து பயமுறுத்தி அனுப்பினார்கள். குமார் நகர் பகுதிக்கு வந்த பின் இரண்டு முறையாகி விட்டது. இந்த முறை அடியும் விழுந்து விட்டது. அவள் குடியிருப்பது லைன்வீடு என்பதால் அவன் வீட்டிற்கு வந்து ஏதாவது கலாட்டா செய்தால் வந்து கேட்க நாலு பேர் இருக்கிறார்கள் என்பதுதான் அவளுக்குப் பெரிய ஆறுதலாக இருந்தது. அங்கேரி பாளையம் காவல் நிலையத்தில் இருமுறை அவள் புகார் தந்திருக்கிறாள் என்பதை இந்த காவல் நிலையம் அறியுமானால் வேறு மாதிரி அவளை நடத்த்க்கூடும் என்ற பயம் இருந்தது சுசிக்கு. .

“ செரி ..போம்மா ..நீ அடிக்க வேண்டாங்கறே. என்னமோ பண்ணீத் தொலை. அங்க போயி கேசை வாபஸ் வாங்கிக்கறன்னு சொல்லிட்டு போ “

“ செரிங்க சார். அடிபட்டு கதறதெப்பாத்து மனசு கேக்கலீங்க “

“ இதிலே வேற காதல் கண்ணாலம் பண்ணிட்ட கேசுங்க .. போம்மா. போயி இருக்கற ஒத்தப் புள்ளையை நல்லா படிக்க வெச்சு கண்ணாலம் பண்னிக்குடு. குடிகார நாய்க எப்ப பொழைக்க வுடும்.”

ரோஹிணி மடியில் விரித்து வைக்கப்பட்டிருந்த நோட்டைப்பார்த்துக் கொண்டிருதாள்.அவளைச்சுற்றிலும் நாலைந்து புத்தகங்கள் இறைந்து கிடந்தன. பறந்து செல்ல எத்தனிக்கும் பட்டாம்பூச்சிகள் போல் பக்கங்கள் காற்றில் சிறகடித்தன.

“ என்னம்மா .. வேலைக்குப் போயிட்டு வர்றியா. சீக்கிரமா வந்துட்டே “

“ போலீஸ் ஸ்டேசனுக்கு “

“ எங்கப்பன் மேல கம்ப்ளைண்டா .. செரிதா “

அவள் உயர்நிலைப்பள்ளியில் இறுதியாண்டு படிப்பவள். பள்ளி போய்விட்டு வந்தால் இரவு முழுக்க புத்தகங்களுடனும் வீட்டுக் கொசுக்களுடனும் அல்லாடுவாள். அவள் இன்னும் பெரிய மனுசி ஆக வில்லை என்பது சுசிக்குப் பெரிய கவலை. “ பிராய்லர் கோழி திங்கறதுனாலையே சீக்கிரம் வயசுக்கு வந்திருதுக . இந்தக்காலத்துப் பொண்ணுகன்னு சொல்வாங்களே..இது இப்பிடி நிக்குதே ” என்று தனக்குள் புலம்பிக் கொள்வாள் . குமாரபாளையம் சித்தி கூட ஆண்மரம் என்ற வார்த்தையை ஒருதரம் எதேச்சையாய் சொன்னபோது வருத்தமாக இருந்த்து சுசிக்கு ” வூட்டு ஆம்பளெ கூட காஞ்சு போன மரமா கெடக்குது “ என்று பதிலுக்கு அவளும் சொல்லிவைத்தாள்.

” அடுத்த வாரம் ஸ்டடி லீவ்வுன்னு இருக்கும்மா. பாட்டி வூட்டுக்குப் போலாமா “

“ படிக்கிற லீவுலே எதுக்கு ஊருக்கு. எந்தப்பாட்டி உறவு கொறையுதுன்னு அழுகறாங்க..என் கூட பனியன் கம்பனிக்கு வாயேன்”

அவளுக்கு சிங்கர் மிஷினில் உட்கார்ந்து கொண்டு ஜன்னல் வழியே வானத்தின் நீலத்தைப் பார்ப்பது பிடிக்கும்.அவளின் வலது புறத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் மாத காலண்டரில் தென்படும் இயறகைக் காட்சிகளை பார்ப்பாள். ” உன்னெ எங்கெல்லா கூட்டிட்டுப் போவன் தெரியுமா..” என்று காதலிக்கிற காலத்தில் சொல்வான்.இங்கு கொண்டு வந்து பனியன் கம்பனியில் உட்கார வைத்து விட்டானே என்று நினைக்கையில் மனம் பதறும்.

“ அடுத்த வருஷத்துக்கு தயார் பண்றியா என்னெ… முடியாதம்மா. நான் படிக்கணும். ஆமா..வீவுலதா தனியார் ஸ்காலர்ஷி ஏதாச்சும் கெடைக்குதான்னு பாக்கணும்.. ஆமா அப்பனெ போலிஸ்ஸ்காரங்க என்ன பண்ணுனாங்க .”

“ அடிச்சானுங்க. அவர் அலறுன்ன அலறல்லே நான்தா போதுண்ட்டேன்.உனக்கு அப்பன்னு ஒருத்தன் வேணுமில்லையா “

படபடத்துச் செல்லும் புத்தகங்களின் பக்கங்களிலிருந்து பட்டாம் பூச்சிகள் பறந்தன. ரோஹிணியின் கைகள் அவற்றின் மெல்லிய இறக்கைகளைத் தொட எத்தனித்தது. 

தொடர்புடைய சிறுகதைகள்
கூரியரில் மோதிரம் வந்தது. அருணகிரிக்குக் கத்த வேண்டும் போலிருந்தது. கண்டேன் சீதையை என்று அனுமன் கத்தியது சம்பந்தமில்லாமல் ஞாபகம் வந்தது. “ அடப்பாவி கிளம்பீட்டியா “ என்றுதான் கத்தினான்.உடனே அவளைப் பார்க்கவேண்டும் போல் இருந்தது. கைபேசியை முடுக்கினான். மஞ்சள் சுரிதாரில் அவள் சிரித்துக் கொண்டிருந்தாள். ...
மேலும் கதையை படிக்க...
சந்தானலட்சுமிக்கு தினசரிகளில் தங்கத்தின் விலை நிலவரம் பற்றிப் பார்ப்பது சமீபத்திய பழக்கமாகி விட்டது. அது எப்போது ஆரம்பித்தது  எனபது ஞாபகமில்லை.இரண்டு வருடங்களுக்குள்தான் இருக்கவேண்டும். கைக்கெட்டா தூரத்தில் பறந்து கொண்டிருந்ததிலுருந்துதான் என்பது ஞாபகம்.சென்னை விலை, உள்ளூர் நிலவரம், டாலர் மதிப்பு எல்லாம் அத்துப்படி. ...
மேலும் கதையை படிக்க...
“ இனி உன்னோட ஆட முடியுமுன்னு தோணலே சுபா “ “ஏன் அப்பிடி சொல்றீங்க .” “முடியாதுன்னு தோணுது. மனசு பலவீனமாயிருச்சு.” அவரின் எதிரில் இருந்த குதிரைகளும் ராஜாக்களும் படைவீரர்களும் செயலிழந்தது போல் சதுரங்க அட்டையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.இது இனி அவசியமில்லாதது என்பதாய் பார்த்தார்.அவளும் சட்டென ...
மேலும் கதையை படிக்க...
"இந்த ஓரப்பார்வை எதுக்கு..." "என்னமோ என்னோட கண்ணு ஒன்றக்கண்ணா மாறிட்டு வருது. நிரந்தரமா ஓரப் பார்வை வந்துருமோ..." "ஓரப்பார்வைதா கிளுகிளுப்புக்கு உகந்தது." "அங்கதா கிளுகிளுப்பு ஆரம்பம்." "உதட்டுலே ஏதாச்சும் ஒரு சொல் சொல்லப்படாம தொக்கி நிற்கும் அப்புறம்..." "மன்மத லீலையை வென்றார் உண்டா..." "இந்த சினிமாக்காரங்க ஹிரோயின்க எல்லாம் கல்யாணம் ...
மேலும் கதையை படிக்க...
இங்குதான் இருந்தது கடல். கடல் தண்ணீரில் கரைந்த நம் நிர்வாண பிம்பங்களை உண்ட கடல் மீன்களுக்குப் பித்தேறின. அலைகள் கரையைத் தொட்டு விலகும்போது நமது உடல்களின் உவர்ப்பில் கொஞ்சம் உப்பு கூடிவிடுகிறது. அதே கடலருகில் சூரியனின் ஆயிரம் ஆயிரம் கரங்கள் நம் வேட்கையின் சுவர்களில் நிறங்களைப் பூசியதைக் கண்டோம். கடற்கரையின் தீராத மணல் வெளி நமது தீராத விருப்பங்களை எவ்வளவு குடித்த பிறகும் சுவடற்று இருந்தது. கடலின் ...
மேலும் கதையை படிக்க...
பாரின் சரக்கு பாலிசி
தங்கமே தங்கம்
தற்காலிகமாய் நிறுத்தப்படும் ஆட்டம்
குட்டி மேஜிக்
பேரிரைச்சல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)