ஆண்டாள் பாசுரம்

 

(இதற்கு முந்தைய ‘அரசியல் ஆசை’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது)

“ஏன் இங்லீஷ் தெரியாதா?”

“பேச வராது. சின்னச் சின்ன வார்த்தைகள் புரியும். ஏபிஸிடி சொல்லத் தெரியும்… அவ்வளவுதான்.”

அறிவுக் களிம்பு துளியும் இல்லாத வெள்ளந்தியான பதில் ராஜலக்ஷ்மி என்ற கிராமத்துப் பெண்ணை சுப்பையாவுக்கு இன்னும் நெருக்கப் படுத்தியது.

ஆங்கிலத்தில் கேட்ட கேள்வியை அப்படியே தமிழில் மீண்டும் கேட்டான்.

அந்தச் ஷணமே ராஜலக்ஷ்மியின் முகம் தீவிரமாகிவிட்டது. கல்லிடைக்குறிச்சியில் வறுமையில் முடங்கிக் கிடந்த நாட்களில் இருந்து சபரிநாதனின் முதுமைக்குள் ஒடுங்கிக் கிடக்கும் இந்த நிமிஷம் வரைக்கும் ராஜலக்ஷ்மி கொட்டித் தீர்த்துவிட்டாள்.

சுப்பையா அழகான இளைஞன் என்ற காரணத்திற்காக, மாப்பிள்ளை என்று கூடப் பாராது சபரிநாதன் அவன் மேல் எப்பேற்பட்ட காழ்ப்புணர்ச்சியும், வெறுப்புணர்ச்சியும் கொண்டிருக்கிறார் என்பதெல்லாம் விவரித்துச் சொன்னாள். மோட்டார் பைக்கை பையன்கள் நோண்டிக் கொண்டிருந்ததை அவள் இயல்பாகக் கண்டித்ததற்காக சபரிநாதனிடம் அவள் அடைந்த கடைசிக் காயத்தின் வலியையும் அவமானத்தையும் பொருமலோடு சொன்னாள். அனைத்தையும் அவள் சொல்லி முடித்தபோது அந்தச் சூழலே துக்க மயமாக மாறிப் போயிருந்தது. சுப்பையாவுக்கு எல்லாமே முடிச்சு அவிழ்ந்து புரிந்தது.

“புரிஞ்சுதா? இப்ப உங்களுக்கு என் நிலைமை?” கண்ணீரை விரலால் சுண்டிவிட்டாள்.

“இதை நீங்க வேற யார்கிட்டேயும் சொன்னதில்லையா?”

“சொல்ற அளவுக்கு இந்த ஊர்ல யார்கிட்டேயும் எந்த அன்னியோன்யமும் எனக்கு இல்லையே… ஆனா விவரமா சொல்லாமலேயே இந்த ஊர்க்காரங்களுக்கு என் நிலைமை தெரியும்.”

“உங்க அம்மா கிட்டேயும், அண்ணன் கிட்டேயும் சொல்லி எதுவும் பண்ண முடியாதா?”

“இவரு வாங்கிக் கொடுத்த வீட்ல இருக்காங்க அவங்க. அதுதவிர இவரு பணம் போட்டு ஆரம்பிச்சுக் கொடுத்த பலசரக்குக் கடையாலதான் வசதியா வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க. அதனால அவங்க யாரும் எதுவும் இவரைக் கேட்க முடியாது. அதான் நான் கிடந்து தவிக்கிறேன்…”

“புரியுது… இப்போ சொல்லுங்க, நான் உங்களுக்கு எந்த வழியில எப்படிப்பட்ட உதவி செய்யணும்?”

“நீங்க உங்க குடும்பத்தை திருநெல்வேலி ஷிப்ட் பண்ணறதுக்காக ஹைதராபாத் போகும்போது ஒருத்தருக்கும் தெரியாம என்னையும் கூட்டிட்டுப் போயிடுங்க… ஏதாச்சும் அனாதை இல்லத்திலோ; அபலைப் பெண்களுக்கான விடுதியிலோ என்னை சேர்த்து விட்டுடுங்க. இங்கே இருந்து போனா போதும் எனக்கு. எங்கேயாவது போய் அனாதையா வாழ்ந்திடலாம் போல இருக்கு. ஆனா இப்படி அடிமையா கிடக்க முடியாது. இந்த உதவியை மட்டும் செஞ்சிடுங்க… என் உயிர் உள்ள வரைக்கும் உங்களை நான் மறக்கமாட்டேன்.”

சுப்பையாவுக்கு மனம் கலங்கியது. அப்போது மழைத்தூறல் விழத் தொடங்கியது.

“இதெல்லாம் எனக்கு வெறும் கனவு கிடையாதே?”

“இந்த மழைத்தூறல் சாட்சியா கனவு கிடையாது. அப்பட்டமான நிஜம்.”

“இதே மழைத்தூறல் சாட்சியா உங்களுக்கு நன்றி…”

ராஜலக்ஷ்மியின் கை ஜன்னலுக்கு வெளியில் சுப்பையாவை நோக்கி நட்புடன் நீண்டது. அதைவிட நட்புடன் அவனின் கைகளும் அவளை நோக்கி நீண்டது. ஒருவர் கையை ஒருவர் பற்றிக்கொள்ள முடியாத அந்த இடைவெளியில் நீண்டவாறே இருந்த அவர்களின் கைகளின் மேல் மழைத்தூறல் ஜில்லென்று தெறித்துக் கொண்டிருந்தது…

ராஜலக்ஷ்மிக்காக காலம் இப்படி சற்றுக் கனியத் தொடங்கியிருந்தபோது, சபரிநாதனுக்குக் காலம் கொஞ்சம் கடுமையாகப் புகைய ஆரம்பித்திருந்தது. அவர் பாட்டுக்கு முருகபூபதியையும் இழுத்துக்கொண்டு என்னமோ எம்.எல்.ஏ பதவி அவருக்காக தங்கத் தாம்பாளத்தில் வைக்கப்பட்டு காத்துக் கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டு கிளம்பிப் போய்விட்டார்.

மந்திரி அருணாச்சலம் நெல்லையில் ஒரு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தான். அவனைப் பார்க்க வந்திருந்த பிரமுகர்களின் கார்களே இருபது முப்பது வெளியே நின்றன. நூற்றுக் கணக்கில் கட்சித் தொண்டர்கள் வேறு… இரண்டு மணி நேரங்கள் காத்திருந்த பின்தான் சபரிநாதனால் மந்திரியைப் பார்க்கவே முடிந்தது. முருகபூபதிதான் விஷயத்தை மந்திரியிடம் பவ்யமாக ஆரம்பித்தார். உடனேயே அருணாச்சலம் கையை விரித்து விட்டான். சபரிநாதன் அவருடைய சுய கெளரவத்தை மூட்டைகட்டி வைத்துவிட்டு மந்திரியிடம் கெஞ்சியே பார்த்தார். மந்திரி மசியவே இல்லை! தீவிரமாக கட்சிப் பணியில் இருப்பவர்களுக்குத்தான் ஸீட் கொடுக்கப் போவதாக அடித்துச் சொல்லிவிட்டார்.

நேற்றுவரை ஊளை மோர் குடித்துக் கொண்டிருந்த இந்தப் பயலைப் போய் பார்க்க வந்த தனது புத்தியை செருப்பால் அடிக்க வேண்டும் என்ற ஆங்காரத்துடன் சபரிநாதன் அந்த அறையைவிட்டு வெளியேறினார். அப்போது இரண்டு லாரிகள் நிறைய வந்து இறங்கிய தொண்டர்கள் வேறு “மந்திரி அருணாச்சலம் வாழ்க” என்று ஆக்ரோஷத்துடன் கூச்சல் போட்டார்கள். சபரிநாதனின் ஆங்காரத்தை இது இன்னும் அதிகமாக்கியது. அவரால் ஏமாற்றத்தை தாங்க முடியவில்லை. ரொம்ப நம்பிக்கையுடன் கிளம்பி வந்திருந்தார்.

ராஜலக்ஷ்மியின் முன்னால் தன்னால் ஒரு எம்.எல்.ஏ வாக ஆகிக்காட்டவே முடியாது என்பதை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை. ஒன்று கேட்டு அது கிடையாது என்பது இதுவரை நிஜமாகவே அவரது அகராதியிலேயே கிடையாது. அட ஒன்றும் இல்லை ஐம்பத்தைந்து வயதில், இருபத்தைந்து வயது ரதியை கல்யாணம் செய்து காட்டியிருக்கிறார்! நாளைக்கு கவிழப்போகிற மந்திரி சபையில் இருந்துகொண்டு இந்த அருணாச்சலம் பயல் இந்த அலட்டல் அலட்டுகிறான். ரொம்பநாள் முன்பு சபரிநாதன் அருணாச்சலத்தின் பெண்டாட்டியைப் பார்த்திருக்கிறார். அசல் குரங்கு குசாலா மாதிரி இருப்பாள்!

சபரிநாதனை சமாதானப் படுத்துவதற்குள் முருகபூபதிக்கு போதும் போதும் என்றாகிவிட்டது! போதாததற்கு மழைவேறு நொச நொசவென்று பெய்து கொண்டிருந்தது. தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு பஸ் ஸ்டாண்டை நோக்கி நாலுகால் பாய்ச்சலில் ஓடியதில் சபரிநாதனின் வலது கால் செருப்பின் வார் அறுந்து போய்விட்டது! நேரம் சரியில்லாமல் போய்விட்டால் இப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது! அவரது நாலுகால் பாய்ச்சல் ஒருகால் பாய்ச்சலாகிவிட்டது. மணி இப்பவே எட்டு… அடுத்த பஸ் எட்டரை மணிக்குத்தான். ஏமாற்றத்தின் உச்சாணிக் கொம்பில் நின்றார் சபரிநாதன்.

கடைசிவரை ஒரு சின்னப் பண்ணையாராக மட்டும்தான் வாழ்ந்து மண்டையைப் போடப் போகிறோமோ என்ற பயத்தில் அவர் மனம் கலங்கியது. ராஜலக்ஷ்மியை இனி ஜெயிக்க முடியாதோ என்ற பயம் வேறு அவர் மனசைப் போட்டு அழுத்தியது. கொட்டுகிற மழையில் தலை விதியை நொந்தபடி நின்று கொண்டிருந்தார் சபரிநாதன்.

எட்டரை மணி பஸ் ப்ரேக்டவுன் என்றார்கள். அவர் நிலை கொள்ளாது தவித்தார். அவரின் மனக்குரங்கு சுப்பையாவின் மேல் ஒரு தாவு தாவியது! இந்த நேரம் பார்த்து இவன் ஒருத்தன்! மாப்பிள்ளையா அவன்? அவருடைய சந்தேக மனசு எப்பவோ திம்மராஜபுரம் போய்ச்சேர்ந்து விட்டிருந்தது. பேசாமல் வீட்டுத் திண்ணையிலேயே இருந்திருக்கலாம். இங்கே கிளம்பி வந்தது உலக மகா தப்பு!

சுப்பையாவின் அழகிலும் இளமையிலும் ராஜலக்ஷ்மி மனசை பறி கொடுத்து விடக்கூடாதே என்று சபரிநாதன் நிஜமாகவே பயந்தார். நிஜமாகவே கவலைப் பட்டார். இருக்கிற அழகில் அவன் வேறு அழகாகப் பாடுகிறான். இப்போதுகூட எதையாவது பாடிக் கொண்டிருக்கிறானோ என்னவோ! ஆமாம்… நிஜமாகவே அந்த நிமிஷம் சுப்பையா தன் வீட்டில் பாடிக்கொண்டுதான் இருந்தான். அவனைப் பாடச்சொன்னது வேறு யாரும் இல்லை! சாட்சாத் ராஜலக்ஷ்மியேதான்…!

இரண்டு வீட்டு ஜன்னல்களின் திறந்த இடைவெளியில் பூப்போல மழை பெய்து கொண்டிருக்க, சுப்பையா ராஜலக்ஷ்மிக்காக முதல் பாட்டைப் பாடினான்:

வாரணமாயிரம் சூழ வலம் செய்து

நாரண நம்பி நடக்கின்றா னேன்றெதிர்

பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்

தோரணம் நாட்ட கனாக் கண்டேன் தோழி நான்…

இதைப் பாடியபின் ‘நாளை வதுவை மணமென்று நாளிட்டு…’ என்று அடுத்த பாடலை ஆரம்பித்தபோது ராஜலக்ஷ்மி அவசரமாக, “ஒரு நிமிஷம், இப்பப் பாடினீங்களே வாரணமாயிரம்னு; அதை திருப்பியும் பாடிக் காட்டுங்களேன்” என்றாள். சுப்பையா மறுபடியும் பாடிக் காட்டினான்.

“நீங்க பாடினதை இப்ப நான் அப்படியே பாடிக் காட்டவா?”

“ஏற்கனவே உங்களுக்கும் இந்தப் பாடல் தெரியுமா?”

“தெரியாது. ஆனா ரெண்டு மூணு தடவை மனசைத் தொடற மாதிரியான பாட்டு எதைக் கேட்டாலும் உடனே அப்படியே அதைப் பாடிக்காட்டிட என்னால் முடியும்.”

“எங்க இப்பப் பாடுங்க பாக்கலாம்…”

ராஜலக்ஷ்மி அப்படியே பாடிக் காட்டினாள். அவளிடம் இதை அவன் எதிர்பார்க்கவே இல்லை. மனசால் அவள் அவனுக்கு இன்னும் ரொம்ப நெருக்கமாகி விட்டாள்.

“உங்ககிட்ட இருக்கிற இந்த அப்ஸர்வேஷன் திறமை வேற யாருக்காவது தெரியுமா?”

“எங்க ஊர்ல என் பக்கத்து வீட்ல எஸ்தர் டீச்சர் இருக்காங்க, அவங்களுக்கு மட்டும்தான் தெரியும்.”

“என்னோட மாமனாருக்கு?”

“என்ன கேள்வி இது? என் தனித்தன்மை எதையுமே தெரிஞ்சிக்கப் பிடிக்காது அவருக்கு..”

“உண்மைதான்… அங்கீகரிக்கப் பிடிக்காதவங்களுக்கு முதல்ல தெரிஞ்சிக்கவே பிடிக்காது.”

“இதான் எனக்குத் தாங்க முடியாதது… மனசால பாடத் துடிக்கிற குயிலா இருந்துக்கிட்டு பாட முடியாத குயிலா இருக்கேன்…”

“தெரிஞ்சுதான் உங்களை குயில்னு சொன்னீங்களோ என்னவோ, ஆனா குயில் கொஞ்சம் தனிமையான சோகமான பறவை… யாருடைய கண்ணிலும் அது அதிகமாகப் படாது…”

“அனாதைகள் இல்லத்துக்கு குயில் போயிட நினைக்கிறது சரியான முடிவுதானே?”

“இல்லை ராஜலக்ஷ்மி; குயில் இருக்க வேண்டிய இடம் அனாதைகள் இல்லம் கிடையாது…” அவன் குரல் உடைந்தது.

“ஜெயிலுக்கு, அனாதை இல்லம் ஒசத்திதானே?”

“இல்லை ராஜலக்ஷ்மி; குயில் இருக்க வேண்டிய இடம் நந்தவனம்.”

“ஊமைக் குயிலுக்கும் அப்படியெல்லாம் கூட அதிர்ஷ்டம் வருமா?”

“இதற்கான பதிலை காலம் சொல்லும்.”

“குயில் அதற்காக காலம் பூராவும்கூட காத்திருக்கும்.”

“இன்னொரு பாசுரம் சொல்றேன். கேட்டுட்டு அதை திருப்பிப் பாடறீங்களா?”

“இப்ப நீங்க பாடினீங்களே, வாரணமாயிரம் அது எதைச் சேர்ந்தது?”

“ஆண்டாள் பாசுரம்…”

ராஜலக்ஷ்மிக்குள் பொரித்துக் கிடக்கும் குயில் குஞ்சுக்கு இறக்கைகள் சிலிர்த்தன. அவளுடைய உணர்வுகளில் ஆண்டாள் என்ற பெயர் மின்னோட்டம் போல் பாய்ந்தது. அந்தப் பாய்ச்சலில் மனம் பொல பொலவென்று உதிர, உணர்வுகள் ஆறாகப் பெருகிவிட்டன. ஜன்னல் கம்பிகளை ராஜலக்ஷ்மி ஆக்ரோஷத்துடன் முறுக்கினாள். கம்பிகளில் தலையைப் புரட்டி புரட்டி அவள் அழுத அழுகை சுப்பையாவுக்கு இம்சையாக இருந்தது. என்ன சமாதானப் படுத்தியும் அவள் கண்ணீர் நிற்கவில்லை. அவளின் அழுகை நிற்காத மழையாக குமுறிக் கொண்டிருந்தது. பார்த்தான் சுப்பையா…

அவனுடைய கான மழையைக் கொட்ட ஆரம்பித்துவிட்டான். “நடமாடித் தோகை விரிக்கின்ற மாமயில்காள்…” என்ற ஆண்டாள் பாசுரத்தை அவன் பாட ராஜலக்ஷ்மியின் அழுகை உடனே நின்று போயிற்று. சுப்பையா பாடிய பாசுரத்தை அப்படியே அவள் திருப்பிப் பாட, “பாடும் குயில்காள்! ஈதென்ன பாடல்…” என்ற இன்னொரு பாசுரத்தை சுப்பையா பாடிக் காட்டினான்.

குயிலும் திருப்பி அதைப் பாடியது. அடுத்தது, “நல்ல என் தோழி! நாகணைமிசை நம்பார்…” அதற்கு அடுத்தது “கற்பூரம் நாறுமோ; கமலப்பூ நாறுமோ…” அத்தனையையும் குயில் பிள்ளை கிளிப் பிள்ளையாக திருப்பிப்பாட, கொட்டித் தள்ளிய பிறகு ஒருவழியாக பாசுர மழை ஓய்ந்தது.

இந்த ஒரே மழையில் சிறைக் கூடத்தின் எல்லாச் சுவர்களும் விழுந்து விட்டாற் போல இருந்தது ராஜலக்ஷ்மிக்கு! சுப்பையா ஒருவிதமான களைப்புடன் கேட்டான், “ஆண்டாள்னு சொன்னதும் ஏன் அப்படி உணர்ச்சி வசப் பட்டுட்டீங்க?” 

தொடர்புடைய சிறுகதைகள்
என் பெற்றோர்கள் எங்களைப் பார்க்க பெங்களூர் வந்து மூன்று நாட்களாகிவிட்டன. அதனால் தினமும் சீக்கிரமாக அலுவலகத்தை விட்டு வீட்டிற்கு கிளம்பிச் செல்ல வேண்டிய அவசியம் எனக்கு. அதற்குக்காரணம் அவர்கள் மீதிருக்கும் அன்போ மரியாதையோ அல்ல. ஏற்கனவே அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியிருக்கும் என் மனைவி ...
மேலும் கதையை படிக்க...
சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு காசியில் ஒரு பிராமணக் குடும்பம் இருந்தது. மனைவியை இழந்த கணவன், தன் ஒரே மகள் காயத்ரியை செல்லமாக வளர்ப்பதோடு, நிறைய தர்ம சாஸ்திரங்களும் கற்றுத் தருகிறார். காயத்ரி வயசுக்கு வந்ததும், தந்தைக்கு அவள் திருமணம் பற்றிய பொறுப்பு வந்து ...
மேலும் கதையை படிக்க...
கதை கேட்க: https://www.youtube.com/watch?v=bSDLT_ORioU அப்பா இனி பிழைக்க மாட்டார் என டாக்டர்கள் கையை விரித்து விட்டனர். அவரை வீட்டிற்கு கொண்டு வந்து ஒரு தனியறையில் படுக்க வைத்தோம். உறவினர்களுக்கு உடனே தெரிவிக்கப் பட்டது. எல்லோரும் வந்து அப்பாவின் இறப்பிற்காக காத்திருந்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை. காத்திருந்து ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘மூன்று வாரிசுகள்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) இசக்கி அண்ணாச்சி வேறு எந்த நினைப்பும் இல்லாமல் மூன்று வாரிசுகளை கண்ணும் கருத்துமாய் வளர்ப்பதிலேயே கவனத்துடன் இருந்தார். அந்தக் கவனத்தில் வருசங்கள் அது பாட்டுக்கு ஓடியது கூடத் தெரியவில்லை. பெரியவன் ...
மேலும் கதையை படிக்க...
பெங்களூர் விமான நிலையம். இரவு எட்டரை மணி டெல்லி புறப்படும் தனியார் விமானத்திற்காகக் காத்திருந்தேன். விமானம் வந்து நின்றதும் அதில் ஏறி என் இருக்கையைத் தேடி அமர்ந்து கொண்டேன். விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்கள் முன்பு, ஒரு பதினைந்து இந்திய ராணுவ வீரர்கள் வேக ...
மேலும் கதையை படிக்க...
அதிர்ந்து போனான் முத்து. ஒரு கணம் திகைத்தவன், அடுத்த கணம் தான் பார்த்த உண்மையின் அசிங்கம் உறைக்க, உடனே தன் வீட்டுக் குடிசையின் வாசலிலிருந்து மெளனமாக விலகினான். உடம்பு பட படத்தது. மனம் வலித்தது. குடிசையின் பின் புறமுள்ள சிறிய பிள்ளையார் கோவிலின் அரச ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘கருப்பட்டிச் சிப்பம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) அடுத்த திருப்பதி உண்டியல் கோழிக்கோட்டில் வைக்கலாம் என்று ஒரு கருத்துக் கணிப்பை நடத்திப் பார்த்துவிட்டு, வேணுகோபால் திம்மராஜபுரம் வந்து இறங்கினார். மூன்றாவது மகளுக்கு எந்த டாக்டருக்குப் படித்த பையனைப் பார்த்து ...
மேலும் கதையை படிக்க...
முதலிரவு. பவதாரிணி சோகமாக கண்ணீருடன் அந்த அறையில் காத்திருந்தாள். கதவு திறக்கப்பட சட்டென்று கண்களைத் துடைத்துக்கொண்டாள். அவளுடைய கணவன் கதிரேசன் அருகில் வந்து அமர்ந்தான். “முதல்ல அழுகையை நிறுத்து பவம்... என்மேல் உனக்கு இன்னமும் நம்பிக்கை வரல, அப்படித்தானே?” “அப்படி ஒன்றுமில்லை கதிர்...” கதிரேசன் அவள் கண்ணீரைத் துடைத்தான். ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘கொசுத்தொல்லை’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). மொத்தம் ஐந்து கொசுவலைகள் தைக்க வேண்டும். டெய்லர் சிவன்பிள்ளை எங்களுடைய படுக்கை அறைகளை நேரில் வந்து பார்த்து அளவெடுத்து ஒரு பெரிய பேப்பரில் குறித்து எடுத்துப் போயிருந்தார். வீட்டில் நானும் என் தம்பி ...
மேலும் கதையை படிக்க...
அவர் தமிழகத்தில் ஒரு பிரபலமான சாமியார். அவருடைய பெயர் ஸ்ரீ ஸ்ரீ பாபா சங்கர். வயது அறுபது. தக்காளிப்பழ நிறத்தில் நீண்ட தாடியுடன்; கோல்ட் ப்ரேம் கண்ணாடியில் தள தளவென இருப்பார். அவர் சென்னையில் நேற்று ஒரு ஆன்மீக சத்சங்கத்தில் ஈடு பட்டுக் கொண்டிருந்தபோது திடீரென ...
மேலும் கதையை படிக்க...
கொள்ளி
தர்மம்
கொள்ளுத் தாத்தா
இசக்கி ஒரு சகாப்தம்
பயணம்
அதிதி
குண்டாஞ்சட்டி மனைவிகள்
காதல் ஓய்வதில்லை
டெய்லர் சிவன்பிள்ளை
இறையருள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)