ஆட்டுக்கறி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 2, 2021
பார்வையிட்டோர்: 2,676 
 

அது 1960 களின் தொடக்கம்…

அவன் சொந்த ஊரான விருதுநகரில் அவன் பிறந்த குடும்பம் சாப்பாட்டில் அதிகமாக மாமிச உணவைச் சேர்த்துக் கொள்ளும் பரம்பரையில் வந்தது.

அவன் பரம்பரையினர் பொதுவாக சைவ உணவை விட அசைவ உணவை சாப்பிடுவதில் மிகவும் விருப்பம் உள்ளவர்கள். வெள்ளிக்கிழமை தவிர வாரத்தின் எல்லா நாட்களிலும் ஏதாவது ஒரு விதத்தில் அசைவ உணவு அவர்களின் சாப்பாட்டில் தவறாமல் இடம் பெற்றிருக்கும்.

அவன் குடும்பத்தினர் மாமிச உணவு சாப்பிடுவதில் காட்டும் அதே அளவு மோகம், சைவ உணவு சாப்பிடக் கொண்டிருந்தார்கள் என்று சொல்ல முடியாது.

புதன், சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் அவனுடைய குடும்பத்திலும் ஏதேனும் ஒருவேளை சமையலில் மாமிச உணவு கட்டாயமாக உண்டு. சனிக்கிழமைகளில் காலையிலும்; புதன் ஞாயிறு கிழமைகளில் பகலில் அவன் வீட்டில் மாமிசம் சமைப்பார்கள்.

எல்லா சனிக்கிழமையும் அவன் வீட்டில் காலைப் பலகாரம் இட்லி. அன்று இட்லிக்கு தொட்டுக்கொள்ள கொத்துக் கறியோ அல்லது ஈரல் கறியோ பண்ணுவார்கள். இந்த இரண்டும் ஆட்டு மாமிசத்தில் செய்யப் படுபவை. சனிக்கிழமை மாதிரி செவ்வாய்க் கிழமையும் அவன் வீட்டில் காலைப் பலகாரம் இட்லிதான். ஆனால் இட்லிக்கு அன்று தொட்டுக்கொள்ள மாமிசம் கிடையாது.

அப்போது ஐந்து அல்லது ஆறு இட்லி சாபிடுகிறவர்கள் சனிக்கிழமைகளில் தொட்டுக்கொள்ள கொத்துக்கறி ஈரல்கறி செய்யும்போது எட்டு முதல் பத்து இட்லிகள் வரை ரொம்ப சாதாரணமாகச் சாப்பிடுவார்கள். ஆனால் சனிக்கிழமைகளில் மட்டும் எத்தனையோ நாள் இட்லியையும் கொத்துக்கறியையும் கண்ணால்கூட பார்த்திராதவர்கள் மாதிரிதான் சாப்பிடுவதற்கு நான் முந்தி, நீ முந்தி என்று போட்டி போட்டுக் கொண்டிருப்பார்கள்.

அதே நேரம் சாம்பாரும் தேங்காய்ச் சட்னியும் பண்ணுகிற செவ்வாய்க் கிழமை காலையில் இவர்களை ‘இட்லி சாப்பிட’ வெற்றிலை பாக்கு வைத்து வா வா என்று கூப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டும். யாரும் லேசில் சாப்பிட வரமாட்டார்கள். இது அவன் வீட்டாரின் சுபாவம் மட்டுமல்ல. அவன் பரம்பரையின் குணமும் இதேதான்…

அவன் ஊர்க்காரர்களுக்கு சாம்பார் போன்ற சைவ உணவுகளின் மேல் ஆர்வமும் கிடையாது. மரியாதையும் கிடையாது. இதில் இன்னொரு விஷயமும் இருந்தது.

அவன் ஊர்க்காரர்களின் பண வசதிக்கு சாம்பார் போன்ற சைவ உணவுகள் மிகவும் மலிவானவை. விலை உயர்ந்த மாமிச வகைகள்தான் அவர்களின் பண அந்தஸ்துக்கு பொருத்தமானது. “அவங்க வீட்ல முக்கால்வாசி நாள் சாம்பார்தானாம்…” என்று அடிக்கடி சைவ உணவு மட்டுமே சமைக்கிற குடும்பத்தாரைப் பற்றி மாமிச உணவு அதிகம் சமைக்கிற குடும்பத்தார் இளக்காரமாகப் பேசுவதை அவன் ஊரில் நிறையவே கேட்கலாம்.

அடிக்கடியும், விதம் விதமாகவும் மாமிச உணவு சாப்பிடுவது ஒரு பெருமிதத்திற்கு உரிய விஷயமெனக் கருதும் மனோபாவம் அவன் ஊர்க்காரர்களிடம் நிறையவே இருந்தது. அவன் வீட்டில் அந்த மனோபாவம் கிடையாது. ஆனாலும் மாமிச உணவு சாப்பிடுவதில் அதிகம் ஆர்வம் உள்ளவர்களாக இருந்தார்கள். ஒவ்வொரு புதன் கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் மதியச் சாப்பாட்டில் அசைவத் தயாரிப்பு இல்லாமல் அவன் வீட்டில் சமையல் கிடையாது.

பொதுவாக அசைவ உணவு என்பது ஆட்டு மாமிசத்தின் வேறு வேறு உறுப்புகளை வெவ்வேறு முறைகளில் சமைப்பதாகவே இருக்கும். ஒருநாள் ஆட்டு மூளைக் குழம்பு; இன்னொரு நாள் ஆட்டுக் கால் குழம்பு, குஸ்கா என ஒரு ஒரு நாளும் அசைவச் சாப்பாடு ஒவ்வொரு உறுப்பைச் சேர்ந்ததாக இருக்கும்.

இதில் இன்னொரு விஷயம் இருக்கிறது. வீட்டில் ஆட்டின் எந்த உறுப்பைச் சமைத்துச் சாப்பிட நினைகிறார்களோ, அது உடனே எளிதாகக் கசாப்புக் கடையில் ‘ஜாம் ஜாம்’ என்று கிடைத்து விடாது. பொதுவாக ஆட்டுக்கறி என்றால் கேட்டதும் கிடைத்து விடும்; ஆனால் ஆட்டின் குண்டிக் கறியோ, மூத்திரக் காய்களோ கிடைக்காது. இரண்டு நாட்கள் முன்னாடியே போய்ச் சொல்லி வைக்க வேண்டும். அப்போதுகூட கிடைத்துவிடும் என்பது நிச்சயம் கிடையாது.

அதெல்லாம் கசாப்புக் கடைக்காரனுக்கு ரொம்ப ரொம்ப வேண்டிய பெரிய பணக்காரர்களின் வீடுகளுக்கு ரொம்ப ரகசியமாக பொழுது விடிவதற்கு முன்னாடியே போய்ச் சேர்ந்துவிடும். அங்கேயும் அது வீட்டில் இருக்கும் அத்தனை பேருக்கும் கிடைத்துவிடாது. சமையல் பொறுப்பில் இருக்கும் பெண்களின் புருஷன்மார்களுக்கு மட்டும் விசேஷமாக வேற யாருக்கும் தெரியாமல் பரிமாறப்படும். ஏனெனில் அந்தக் குறிப்பிட்ட உறுப்புக்கு ஆட்டின் பிற உறுப்புகளை விட ருசி ரொம்ப அதிகம்.

ஆட்டின் நாக்கைப் பார்த்தாலே வாயில் எச்சில் ஊருகிறவர்களை அவன் பார்த்திருக்கிறான். வித விதமான மாமிச உணவைத் திருப்தியாகச் சாப்பிடுவதே அந்தஸ்தான விஷயம் என்கிற மாதிரியான தோரணை அவன் ஊர்க்காரர்களிடம் நிறையவே இருந்தது.

அது மாத்திரமில்லை, சில வீடுகளில் சமைத்திருக்கும் அசைவ உணவில் ஒரு சின்ன துண்டை வாயில் எடுத்துப்போட்டு கொஞ்சம் ருசி பார்த்த மாத்திரத்திலேயே, அது எந்த ஊர்ப்பக்கத்து ஆட்டின் மாமிசம் என்பதைத் துல்லியமாகக் கண்டுபிடித்து சொல்லிவிடும் ஆசாமிகள்கூட அவன் ஊரில் இருந்திருக்கிறார்கள். இது விளாத்திகுளம் பக்கத்து ஆடு; இது கடையநல்லூர்; இது சங்கரன் கோயில் பக்கத்து ஆடு என்று துல்லியமாகச் சொல்லி விடுவார்கள். அதே ஆசாமிகள் இன்னொரு விஷயமும் சொல்வார்கள்.

கருவேல மரங்கள் நிறைந்த ஊர்ப் பக்கங்களில் மேய்ந்து வளரும் ஆடுகளின் மாமிசம் சாப்பிடுவதற்கு ரொம்ப ருசியாக இருக்குமாம். கருவேல மரங்களில் பஞ்சு மாதிரி மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூத்திருக்கும். அதெல்லாம் மண்ணில் நிறைய உதிர்ந்து கிடக்கும். அந்தப் பூக்களைத் தின்னுவதில் மேயும் ஆடுகளுக்கு இஷ்டம் அதிகம்.

தங்களின் சின்ன வாலை அப்படியும் இப்படியும் ஆட்டியபடி போட்டி போட்டுக்கொண்டு அவை கருவேலம் பூக்களை தின்று தின்று ஆரோக்கியமாக வளரும். அவற்றை அப்படித் தின்று வளரும் ஆடுகளின் மாமிசமும் அந்தப் பூக்களைப் போலவே மெத்து மெத்தென்று இருக்குமாம். அதுவும் குறிப்பாக அந்த ஆடுகளின் ஈரல் அப்படியே இலவம் பஞ்சு மாதிரி ரொம்ப மிருதுவாகவும் ரொம்ப ருசியாகவும் இருக்குமாம்.

விளாத்திகுளத்திற்கு கிழக்கில் வேம்பார்வரை பரவிக் கிடக்கும் கருவேலம் மரக் காட்டுப் பகுதியைச் சேர்ந்த ஆடுகள் சந்தைக்கு வந்திருப்பது தெரிந்தால் கசாப்புக் கடைக்காரர்கள் மடியில் ரூபாய் நோட்டுக்களை கட்டி எடுத்துக்கொண்டு போய் வரிசையில் நிற்பார்களாம் ஆடுகளை வாங்க…

அந்த ஆடுகளை அடித்துக் கறியாக விற்கும்போது அவர்களின் கடைகளின் முன்னாலும் கறிவாங்க வந்தவர்கள் அதே மாதிரி வரிசையில் நின்றாக வேண்டுமாம். இப்படி வரிசையில் போய் நின்று அடித்துப்பிடித்து வாங்குகிற அளவுக்கு அவன் வீட்டார் போக மாட்டார்கள். கூட்டம் அளவாக இருந்தால் போய் நிற்பார்கள். கூட்டம் அதிகமாக இருந்தால் கொழிமுட்டைக் குழம்பு வைத்துவிட்டு இருந்து விடுவார்கள்.

ஆனால் இந்த ஆட்டுக்கறி சமாச்சாரம் எல்லாமே சாதாரண நாட்களில் சாதாரண சம்பவங்கள்தான். விசேஷமான நாட்கள் வரும்போது ஆட்டுக்கறி மாத்திரமில்லை; கோழிக்கறியும்கூட ரொம்ப சாதாரணமாகிவிடும்.

ஐப்பசி மாதம் தீபாவளியும், பங்குனி மாதம் மாரியம்மன் பொங்கலும் வரும்போது அவன் ஊரில் முக்கால்வாசி வீடுகளில் வான்கோழிக் கறியின் வாசனை ஆளையே தூக்கும்….

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *