அவர் பெயர் அப்பா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 1, 2013
பார்வையிட்டோர்: 8,366 
 

நான் எப்பொழுது வீட்டிற்கு நேரம் கழித்துச் சென்றாலும் அவர் இப்படித்தான் கேட்பார்.

“சினிமா எப்படி இருந்துச்சு”

நான் ஒன்றும் சினிமாவுக்கெல்லாம் செல்லவில்லை. நான் கல்லூரியிலிருந்துதான் வருகிறேன். வரும் வழியில் அப்படியே நண்பனை பார்த்து விட்டு வருகிறேன். என்னை தயவு செய்து நம்புங்கள் என்று கண்ணில் தண்ணீர் வராமல் ஆனால் தண்ணீர் வருவதற்கு முன் உள்ள குழைவில் குரல் கரகரத்தபடி அவருக்கு பதில் அளிக்க வேண்டும் என அவர் எதிர்பார்ப்பது இந்த ஜென்மத்தில்நடக்கப் போவதில்லை. அவர் ஏன் இதை புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார் என்றுதான் புரியவில்லை. அவருக்கு சளிப்பு ஏற்படுவதே இல்லை. ஆனால் எனக்கு சளித்து விட்டது.

அவருக்கு அப்படியொரு சந்தேகம். ஏதோ ம‌னைவி தடம் மாறிச் சென்றுவிடுவாளோ என பயப்படும் புது கணவனைப் போல.

அவருக்கு நறுக்கென்று பதில் சொல்ல வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் எதிர்பார்க்கிறேன். ஆனால் அந்த நிமிடத்தில் வார்த்தைகள் கிடைப்பதில்லை.

அன்று ஒருநாள் நேரம் கழித்து வீட்டிற்கு வந்த போது முகம்மது அலி களத்தில் தனது எதிரியை வெறித்துப் பார்ப்பது போல முறைத்துப் பார்த்து கண்கள் சிவக்க இவ்வாறு கேட்டிருந்தார்.

“எங்கபோய் ஊரைச் சுத்திட்டு வர்ற”

“ஊரின் கிழக்கிலிருக்கும் தாஜ்மஹாலையும், மேற்கிலிருக்கும் ஈபிள் டவரையும் சுற்றிப்பார்த்துவிட்டு வர நேரமாகிவிட்டது. மற்றபடி ஒன்றுமில்லை” என்று சிரித்துக் கொண்டே கூறியது அவரை மேலும் கோபப்படுத்தி அமைதியாக்கி விட்டது. உச்சபட்ச கோபத்தில் அவருக்கு வார்த்தைகள் வருவதில்லை.

ஆனால் அவருக்கும் யோசனையே இருப்பதில்லை. ஊரில் இருக்கும் 4 முட்டுச் சந்துகளை எத்தனை முறைதான் சுற்றி வர முடியும். அது எப்படி மனசாட்சி இல்லாமல் இப்படியொரு கேள்வியை அவர் கேட்கிறார். ஏதோ எனக்கு சோறிட்டு பாதுகாத்து வரும் புரவலரைப் போல் அவர் என்னிடம் நடந்து கொள்வது எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.

நேற்றுவரை நான் சாப்பிடுவதை ரசித்து வந்த அவர், இன்று நான் சாப்பிடும் போது தாழ்வு மனப்பான்மை ஏற்படுத்த வேண்டும் என உள்ளூர நினைக்கிறார். அது மேலோட்டமாக கூட இல்லை மிக தெளிவாகத் தெரிகிறது. முறைத்துப் பார்த்து விட்டும் செல்லும் அவரது பார்வையில் ஆயிரம் செய்திகள் வெளிப்படுகின்றன.

12ஆம் வகுப்பில் ஸ்டேட் ரேங்க் எடுக்கத் தவறிய நீ, மருத்துவப்படிப்புக்கோ, பொறியியல் படிப்புக்கோ தகுதி பெறாத நீ, ஏன் சொந்தமாக சம்பாதிப்பதைப் பற்றி இன்னும் யோசிக்க மறுக்கிறாய், அவ்வாறு சம்பாதித்த பணத்தில் உட்கார்ந்து சாப்பிடும் சுகத்தை ஏன் அனுபவிக்க மறுக்கிறாய் என்று பல்வேறு கேள்விக் கணைகள் அவரது மனதில் நிழலாடுவதை தெளிவாக உணர முடிகிறது. குதிரை பந்தயத்தில் ஓடாத குதிரை மீது பணம் கட்ட மறுக்கும் புக்கிகளிடமிருந்து அவர் எந்தவிதத்தில் வேறுபடுகிறார் என்று யோசித்துப் பார்த்தால், தொண்டைக்குழிக்குள் இருக்கும் உணவு அதற்குமேல் உள்ளே செல்ல மறுக்கிறது.

கனவு காணுங்கள் வெற்றி கிடைக்கும் என்று அப்துல் கலாம் என்னைச் சந்திக்காமல் சொல்லியிருக்கக் கூடாது என்று அவர் என்றாவது ஒருநாள் நினைத்திருக்கலாம்.

காரணம் என்னுடைய கனவு கிரிக்கெட்.

கிரிக்கெட் என்ற ஒரு விளையாட்டு ஒருகாலத்தில் இந்தியாவில் இருந்தது, அந்த விளையாட்டை இப்படித்தான் விளையாடினார்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் அடுத்த நூற்றாண்டில் கண்டுபிடிக்கப் போகிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணகர்த்தாகவாக இருக்கப் போகிறவர் அவராகத்தான் இருக்கப் போகிறார். பரதக் கலையில் உள்ள 9 பாவங்களில் வெறுப்பு என்கிற பாவனையை ஒருவரது முகத்தில் பார்க்க வேண்டும் என்று விரும்பினால் அவர் முன் சென்று கிரிக்கெட் மட்டையை காட்டினால் போதும். பாவனையை வெளிப்படுத்துவதில் தில்லானா மோகனாம்பாள் பத்மினியை இரண்டாமிடத்துக்கு தள்ளிவிடுவார் அவர்.

கிரிக்கெட் விளையாட்டுக்கு எதிராக யாரேனும் கையெழுத்து போராட்டம் நடத்தினால், அலுவலகத்திற்கு 10 நாட்கள் விடுமுறை போட்டுவிட்டு ஒரு லட்சம் கையெழுத்துக்களை விதவிதமாக எழுதி வியக்க வைக்கக் கூடிய அற்புதத்தை செய்யக் கூடியவர் அவர். ஒரு கிரிக்கெட் விளையாட்டு வீரர், ஒரு அல்கைதா தீவிரவாதி இருவரில் யாருக்கு தூக்கு தண்டனை கொடுக்கலாம் என்கிற பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தால், அந்தத் தீவிரவாதி மனமகிழ்ச்சியடைந்தவனாய் அவரது காலில் விழுந்து வணங்கி டாட்டா காட்டிவிட்டு ஹேப்பி இன்று முதல் ஹேப்பி என்ற பாடலை பாடிக்கொண்டே விடுதலை பெற்றுச்செல்வான். கிரிக்கெட் என்ற வார்த்தையை அகராதியில் இருந்து எடுக்க வேண்டும் என்கிற போராட்டத்திற்கு தலைமை பொறுப்பேற்க அவரை விட தகுதியானவர் வேறு எவரும் இல்லை.

கிரிக்கெட் மீதான அவரது இவ்வளவு வெறுப்பிற்கும் காரணம் ……… நான் இன்று வரை உயிரோடு இருக்கிறேன் என்றால்………. நான் எந்த ஜென்மத்தில் என்ன புண்ணியம்செய்தேனோ……..கடவுள் அற்புதங்களை செய்யக் கூடியவர்….

நான் திருடினேன், இல்லை லட்சயத்திற்காக திருடினேன். இல்லை இல்லை, என் எதிர்கால லட்சயத்திற்காக திருடினேன் என்றுசொன்னால் தான் பொருத்தமாக இருக்கும். குருவி சேர்த்து வைத்தாற் போல் என்று சொல்வார்கள். இனிமேல் அப்படி கூற வேண்டியதில்லை. அந்த குருவியை நான் பீட்செய்து விட்டேன். அந்த குருவியை விட மிகக் கஷ்டப்பட்டு, துன்பப்பட்டு சிறிது சிறிதாக திருடி (லட்சியத்திற்காக அவர் சட்டைப் பாக்கெட்டிலிருந்து) ஒரு ரூபாய், 2 ரூபாய் என சேர்த்து வைத்து கிட்டதட்ட ஒரு வருடங்களை செலவு செய்து வாங்கிய அந்த கிரிக்கெட் மட்டையை, அவர் உணவு சமைப்பதற்கு விறகாக பயன்படுத்திய போது, திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜைப் பார்த்து நீயெல்லாம் ஒரு வில்லனா, அவரைபார்த்து இனிமேல் வில்லத்தனத்தைக் கற்றுக் கொள் என்று மண்டையில் நறுக் நறுக்கென்று கொட்டவேண்டும் போல் தோன்றியது.

அப்பொழுது… எனக்கு ஒன்றும் தலைசுற்ற வில்லையே, எனக்கு ஒன்றும் கண்கள் இருண்டு கொண்டு வரவில்லையே, நான் ஒன்றும் மயக்கம் அடையவில்லையே, ஓடிச்சென்று கிணற்றில் குதித்து விடவில்லையே, நான் வருத்தப்படவே இல்லையே, ஆனால் ஏன் தாரை தாரையாக கண்ணீர் விடுகிறாய் என்று என் நண்பன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை. எங்கள் வீட்டில் சல்லடையாக தேடிப்பார்த்தும் விஷம் என்று கொட்டை எழுத்தில் ஸ்கெட்ச் பேனாவில் எழுதி ஒட்டி வைக்கப்பட்ட ஒரு பாட்டில் கூட கண்ணில்படவில்லை. பின் நான் எப்படி சாவது. 2 நாட்கள் நான் சாப்பிட மாட்டேன் என்றுதெரிந்து, அவனுக்கு எதுவும் சமைக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார் அவர். 3வது நாள் பொன்றம் ஹோட்டல் ஓனர் என் தந்தையிடமிருந்து 375 ரூபாயை வாங்கிக்கொண்டார். நான் மானஸ்தன் வீட்டில் சாப்பிடவில்லை. ஹோட்டலில் சென்று பிரியாணி சாப்பிட்டேன்.

பள்ளிக் காலங்களில் இவ்வளவு ஆக்கிரமிப்பாளராக இருந்த அவர் கல்லூரி காலங்களில் சற்று இளகிக் கொடுத்தார் அல்லது சற்று பின்வாங்கினார் அல்லது என்மீதான தன் வெறுப்பை மனதிற்குள்ளாக வைத்துக் கொண்டார்.

செல்போன் தயாரித்தவர் தமிழகம் வந்திருக்கிறார் என்று செய்தி முதல் நாள் தினசரியில் வந்தால், அடுத்தநாள் தினசரியில் அவர் ஓடஓட விரட்டி வெட்டிப் படுகொலை என்று செய்தி வரும். அதற்கு காரணம் அவராகத்தான் இருப்பார்.

அன்று ஒருநாள் நான் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததை பார்த்த அவர் முறைத்து பார்த்து என்னமோ முணுமுணுத்துக் கொண்டு சென்றார். என்னுடைய கேள்வி இதுதான், அவர் ஏன் சினிமாவில் நடிப்பதற்கு முயற்சி செய்யக் கூடாது. விஜய் போன்ற கதாநாயகர்களை முறைத்துப் பார்த்தால் நிறைய பணம் கிடைக்கும் தானே. அவர் கண்களிலிருந்து கிராபிக்ஸ் தீப்பொறி பறப்பது போன்றெல்லாம் கனவு வருகிறது.

பி.எஸ்.சி. படிப்பவனுக்கெல்லாம் செல்போன் தேவையில்லை என்பது அவரது எண்ணம். ஒவ்வொரு முறை தெற்கு கவரைத் தெரு காவல்நிலையத்தைக் கடக்கும் போதும் அவர் எனது பேச்சுரிமையை பறிக்கிறார் என்று புகார் கொடுத்துவிடலாமா என்று யோசிக்கிறேன். ஈபிகோ செக்சனில் பேச்சுரிமையை பறிப்பவருக்கு என்ன தண்டனை கொடுப்பார்கள் என்று வக்கீல் ஒருவரை கன்சல்ட் செய்யலாம் என்று யோசிக்கிறேன். எல்லாம் யோசனையிலேயே கழிந்து போகிறது. அந்த செல்போனுக்கு எப்படி நான் ரீசார்ஜ் செய்கிறேன் என்கிற விஷயம் அவரது உள் மனதை வாட்டி வதைக்கிறது போல.

அரசு செல்லாது என்று தெரிவித்த 5 பைசா, 10 பைசா காசுகளை கூட என் கண்களில் காண்பிக்கக் கூடாது என விரதம் மேற்கொண்டிருக்கிறார். பின் எப்படி நான் செல்போனுக்கு ரீசார்ஜ் எல்லாம் செய்கிறேன் என்று குழம்பிப் போய் உள்ளார். அந்த கிழிந்து போன 2 ரூபாய் நோட்டுக்களை பாதுகாக்கிறேன் என்கிற பெயரில் தனது பாக்கெட்டிலிருந்து எடுத்து பீரோவிற்குள் வைத்து பூட்டுகிறார்.

அவமானப்படுத்துவதில் வெளிநாடுகளுக்குச்சென்று சிறப்புப் பயிற்சி எடுத்தவர் போல அவர் செயல்பட்டதுதான் என்னை தூண்டிவிட்டது. அந்த பீரோவை உடைப்பதற்கு நான் என்ன கடப்பாரையையா உபயோகப்படுத்தப் போகிறேன். அப்படியே உடைத்தாலும் அந்த கிழிந்து போன 2 ரூபாய் நோட்டுகள் எனக்குத் தேவையில்லை என்பதை என் அம்மாவிடமிருந்து 100 ரூபாய் நோட்டுகளை புத்தகம் (சயின்ஸ் புத்தகம் மற்றும் அறிவியல் புத்தகம்) வாங்க வேண்டும் என்று கூறி வாங்குவதன் மூலம் நிரூபித்தேன்.

எப்பொழுதுமே அவரிடம் இல்லாதது மற்றவர்களிடம் இருந்துவிட்டால் அவரால் கோபத்தை கட்டுப்படுத்த முடிவதில்லை. என் தலையில் ரஜினிக்காந்துக்கு இருந்தது போல் நிறைய முடி இருக்கிறது. அதனால் நான் 20 நிமிடங்களுக்கு தொடர்ச்சியாக தலை வாரிக் கொள்கிறேன். அவர் எனக்கு அறிவுரை கூறுகிறாராம். ராணுவ வீரனைப் போல முடியை ஒட்ட வெட்டிக் கொள்ள வேண்டும் என்று. என்னவொரு குள்ளநரித்தனம். அவருக்கு தலைக்குள்ளும் ஒன்றுமில்லை. தலையின் மேலும் ஒன்றுமில்லை.

அந்தக் காலத்தில் இன்லேண்ட் லெட்டரை வாங்கி நிற்க நலம் நலமறிய ஆவல் என பக்கம் பக்கமாக எழுதி போஸ்ட் செய்து பழக்கப்பட்ட அவரால், சாட்டிலைட் உதவியுடன் செல்போனில் உடனுக்குடன் செய்திகள் பரிமாறப்படுவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. சரியான பழமைவாதியான அவரால் செல்போன் உபயோகிப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இல்லையென்றால் வேறு என்ன காரணம் இருக்கப் போகிறது செல்ஃபோன் மீது இவ்வளவு கோபம் ஏற்படுவதற்கு. உருப்படியான 2 காரணங்களைக் கூட அவரால் கூற முடியாது, நான் ஏன் செல்போன் உபயோகிக்கக் கூடாது என்று கூறுவதற்கு. எல்லாம் மோசமான குள்ளநரித்தன ஈகோ…

மேலும் நான் ஒரு பெண்ணுடன் தான் செய்திகளை பரிமாறிக் கொண்டிருக்கிறேன் என்று அவர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார். ஒரு சிறு திருத்தம் அது பெண்ணல்ல, இளம் பெண்….

19 வயதில் திருமணம் செய்து கொண்ட அவருக்கு மனசாட்சி என்ற ஒன்று இருந்திருந்தால் 21 வயதான என்னிடம் அவர் புரிதலுடன் நடந்து கொண்டிருப்பார். மனசாட்சிக்கு ஸ்பெல்லிங் தெரியாதவரிடம் எல்லாம் எத்தகைய ஜென்யூன்நெஸ்ஸை எதிர்பார்ப்பது.

எனக்குத் தெரிந்து சர்வாதிகாரிகள் தனக்கு எதிரான புத்தகங்களை தடை செய்து மீறி வரும் புத்தகங்களை ஊருக்கு நடுவில் குவித்து எரித்ததாக புத்தங்களில் படித்திருக்கிறேன். அவரும் கூட அப்படித்தான் என்னுடைய புத்தகங்களையெல்லாம் ஒரு நாள் எரித்திருக்கிறார்.

“நீ அந்த தாடி வைத்த கிழவனுடைய புத்தகங்களை படிக்கும் வரை உருப்படவே மாட்டாய்” என்று சுனாமி அறிவிப்பை பொதுமக்களுக்கு அறிவிப்பது போல் சத்தமாக கூறுவார். அந்த தாடி வைத்த கிழவனிடம் நான் அடிக்ட் ஆகிவிட்டேன் என்று குற்றம் சுமத்துகிறார். ஓஷோவை திட்டுவதற்கும் ஒரு தகுதி வேண்டாமா?

தமிழ்நாட்டில் பிறந்த ஒருவனுக்கு சுயமாக தன்னை உருவாக்கிக் கொள்வதற்குரிய உரிமைகள் சுத்தமாக மறுக்கப்படுகிறது. என்னுடைய சிந்தனைப்படி நான் இங்கு உருவாகக் கூடாது. இங்கு படிப்பு என்பது சம்பாதிப்பதற்கு மட்டும் தான். சம்பாதிப்பதற்கு உதவாத ஒவ்வொரு எழுத்தும் வீணானது என்று சமுதாயத்திற்கென உருவாகிப்போன அக மனதிற்குள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. இந்த சமுதாயத்தில் மேல்மட்டத்தில் கல்விக்கு சுதந்திரம் உண்டு, பேச்சுக்கு சுதந்திரம் உண்டு. பாலுணர்வுக்கு கூட குறிப்பிட்ட அளவு சுதந்திரம் உண்டு. ஆனால் சமுதாயத்தின் ஆழ்மனது என்கிற மற்றொரு மனதில் எல்லாவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கு காதலிப்பவன் பேடிப்பயலாகத் தெரிகிறான். மஞ்சள் புத்தகத்தைப் போலவே மற்ற புத்தகங்களையும் மறைத்து வைத்து படிக்க வேண்டியதிருக்கிறது. 35 வயதிலும் நான் ஹனுமான் பக்தன் என்று வேஷம் போட வேண்டியதிருக்கிறது. பக்கத்து வீட்டுக் காரனையும், எதிர்த்த வீட்டுக் காரனையும் பார்த்து வாழ்நாள் பூராவும் திருந்தச் சொல்லி கட்டாயப்படுத்தப்படுறேன். குறிப்பாக செல்போன் பேசக்கூடாது. பிடித்த விளையாட்டை விளையாடக் கூடாது. பிடித்த புத்தகத்தைப் படிக்கக் கூடாது. பிடித்த சினிமாவை பார்க்கக் கூடாது. எல்லாவற்றிற்கும் கண்டிக்கப்படுகிறேன். அவர் போன ஜென்மத்தில் சிறைத்துறை அதிகாரியாக வேலை பாத்திருப்பார் போல. எல்லா விஷயங்களும் சந்தேகத்திற்குரியதாக, தண்டனைக்குரியதாக இருக்கிறது அவரது பார்வையில்.

எதிர்த்த வீட்டுப் பையன் புதிதாக வாங்கிய ஹீரோஹோண்டா பைக்கில் அவனது அம்மாவை கூட்டிக்கொண்டு மார்க்கெட் போய் வருகிறானாம். என்னுடைய அம்மா என்னைப் பார்த்து கிண்டலாக கூறுகிறார். ஆனால் ஒரு விஷயம் அவருக்கு புரியவில்லை. சைக்கிள் என்று ஒரு வாகனம் இருக்கிறது. அதற்கு 2 சக்கரங்கள் உண்டு. அதை பயணம் செய்தவற்கு பயன்படுத்தலாம் என்கிற சிந்தனையே என் 14 வயதில் தானே எனக்கு கிட்டியது. அப்படி ஒரு வாகனத்தை தொட்டுப்பார்க்கும் உரிமையை நான் 14 வயதில்தானே பெற்றேன். நான் ஒரு புது ஹீரோஹோண்டா பைக்கை விளம்பரத்தில் தானே பார்த்திருக்கிறேன். இந்த விஷயங்களை பற்றியெல்லாம் அம்மாவுக்கு கவலையில்லை. அவருக்கு எதிர்த்த வீட்டுப் பையன் ஆனந்த விகடன் படித்தால் கூட அது வித்தியாசமாகத்தான் தெரியும். அந்த அளவுக்கு எனக்கு படிக்கத் தெரியாது என்று குற்றம் சுமத்துவார்.

எல்லோருக்கும் இந்த விஷயத்தில் முதல் அனுபவம் இப்படியாகத்தான் இருக்கும்.

“ஒரு டி.டி. எடுக்கத் தெரியல நீயெல்லாம் எப்படி டிகிரி படிக்கிற. வெக்கமா இல்ல.”

இவ்வாறு திட்டுபவரும் முதன் முதலாக இந்தத் திட்டை வாங்கிவிட்டுத்தான் டிமாண்ட் டிராஃப்ட் என்றால் என்ன என்பதை அறிந்து கொண்டிருப்பார். எனக்கெல்லாம் கருவிலேயே டி.டி. என்றால் என்ன என்று தெரியும் என்று அவரால் மட்டுமல்ல எவராலும் சொல்லிவிட முடியாது. எனக்கெல்லாம் பள்ளிக் கூடத்திலேயே டிமாண்ட் டிராஃப்ட் பற்றி பாடம் எடுத்தார்கள் என்றும் அவரால் சொல்லிவிட முடியாது. பின் எப்படி அவர் தெரிந்து கொண்டிருப்பார். இவரைப் போன்றே எவனாவது அசிங்கமாக ஒரு கேள்வி கேட்டிருப்பான். அதன் பிறகு வங்கிக்கு சென்று திருட்டு முழி முழித்து யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொண்டிருப்பார். பின் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல் பார்ப்பவனையெல்லாம் கேள்வி கேட்க வேண்டியது. அவர் என்னிடம் இப்படித்தான் கேட்டார்.

“ஒரு டி.டி. எடுக்கத் தெரியல நீயெல்லாம் எதற்கு உயிரோடிருக்கிறாய்”

உயிரோடு இருக்கும் உரிமையை விட்டுக் கொடுத்துவிட வேண்டியது ஒன்றுதான் ஒரே நன்மை பயக்கும் செயலாக இருக்கும் என்று தோன்றுகிறது.

அவர் சொல்கிறார்.

நானெல்லாம் சிறுவயதில் காலில் செருப்பு கூட இல்லாமல் பள்ளிக்கூடத்திற்கு நடந்தே சென்று படித்தேன் என்று. எனக்கு காலில் போடுவதற்கு ஒரு பேரகான் செருப்பு வாங்கிக் கொடுத்திருக்கிறாராம். எதைத்தான் சொல்லிக் காண்பிப்பது என்கிற விவஸ்தைக்கு இலக்கணம் வகுத்தவர் யாரென்று எங்கேயும் போய் தேடிக் கொண்டிருக்க வேண்டாம். அவர் நம் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்.

வாழ்வின் ஒவ்வொரு துயரத்தையும் நான் அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறார். துயரத்தை அனுபவிக்காமல் உயர்வு வந்து விடாது என்று உறுதியாக நம்புகிறார். அவர் மட்டுமல்ல இந்தியர்கள் அனைவரின் மனதிலும் இத்தகைய எண்ணம் தான் உள்ளது. ஏழ்மையை அனுபவிக்காதவன் உயர்வடையவே முடியாது என்று. உழைக்க கற்றுக் கொடுக்கலாம், போராட கற்றுக் கொடுக்கலாம். விடாமுயற்சியைக் கற்றுக் கொடுக்கலாம். விட்டுக்கொடுக்காத தன்மையை கட்டுக் கொடுக்கலாம். இந்தியர்கள் எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக ஏழ்மையை கற்றுக் கொடுக்கிறார்கள். ஏனெனில் அது ஒன்றே எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்துவிடுமாம்.

ஏழ்மைக்கும், வாழ்க்கையில் உயர்வுக்கும் முடிச்சு போடுவதில் எனக்கு உடன்பாடில்லை. சந்தோஷமாக போராடி சந்தோஷமாக வெற்றிபெற வேண்டும். இப்படி கூறினால் அவர் என்மேல் காரி உமிழ்ந்துவிடுவார்.

அவர் சரி என்று சொல்லும் எதையும் செய்யாத நான். நான் செய்த எதையும் சரி என்று சொல்லாத அவர், தவறான மெல்லிய இலைகளால் பிணைக்கப்பட்ட எங்களது உறவுக்கு அடிப்படையான தந்தை – மகன் என்கிற பிணைப்பு மட்டும் இல்லாவிட்டால் என்றோ முடிந்திருக்கும்.

அவரை அப்பா என்று கூப்பிட்டே வெகுநாட்கள் ஆகிவிட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *