அவர்கள் சென்ற பாதை

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 26, 2016
பார்வையிட்டோர்: 17,139 
 

ராஜசேகர் திருமணம் செய்துகொள்ள மறுத்த காரணத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதேபோல அவன் திருமணம் செய்து கொள்ள சம்மதித்த காரணத்தையும் யாராலும் கண்டறிய முடியவில்லை என்பதும் உண்மை. அவன் இப்போதும் வின் நினைவாகவே இருந்தான். அவனுக்கு வருகிற ஜனவரி 20-ம் தேதி இரண்டாவது திருமணம் என முடிவாகி, அதற்கான அழைப்பிதழை எனக்கும் அனுப்பியிருந்தான். அவனுக்கு முதல் திருமணம் நடைபெற்ற அதே மண்டபத்தில்தான், இரண்டாவது திருமணமும் நடைபெற இருக்கிறது.

என் ஆச்சர்யத்தையும் கவலையையும் யாரோடு பகிர்ந்து கொள்வது எனத் தெரியாமல் இருந்தேன். அந்தச் சமயத்தில்தான் நண்பன் வாசுதேவன் அலைபேசியில் அழைத்தான். ராஜசேகர், நான், வாசுதேவன் மூவரும் நெருங்கிய நண்பர்கள். மது அருந்துவது, சினிமாவுக்குச் செல்வது, டவுன்ஹாலில் இருக்கிற அத்தனை ஒயின் ஷாப்களுக்கும் சென்று இரவு நெடுநேரம் வரை குடித்துக்கொண்டிருப்பது என, மூவரும் சுதந்திரப் பறவைகளாகத் திரிந்தோம். வேலைக்குச் செல்வதும், மாலை வந்து மேன்ஷனில் நண்பர்களுடன் சேர்ந்து சீட்டு விளையாடுவதும், இரவில் டவுன்ஹாலுக்குள் அலைவதுமாக இருந்தோம்.

”ராஜசேகரோட கல்யாணப் பத்திரிகை உனக்கு வந்திருக்கா குமார்?” என்று வாசு என்னிடம் கேட்டான்.

அவர்கள் சென்ற பாதை1”ஆமா வாசு. உனக்கும் வந்திருக்கா… நீ எப்போ கிளம்புவ?” என்று கேட்டேன். அவன் சிறிது பயந்த சுபாவம் கொண்டவன். ராஜசேகரின் முதல் திருமணத்தில் நடந்த சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து இன்னமும் அவன் மீளவில்லை. அந்தச் சம்பவத்தை மறப்பதற்காகவே டிரான்ஸ்ஃபர் வாங்கிக்கொண்டு, தஞ்சாவூர் சென்றவன்.

”நீ கல்யாணத்துக்குப் போகும்போது என்னையும் கூட்டிட்டுப் போடா. இப்பதான் ராஜசேகர் பேசினான்” என்றான்.

திருமணத்துக்கு இன்னமும் 15 நாட்கள் இருந்தன. ராஜசேகரின் முதல் திருமணத்துக்கு வாங்கிவைத்திருந்த பரிசுப்பொருள், இன்னமும் அதன் வர்ணக் காகிதப் பெட்டியோடு பீரோவுக்குள் இருந்தது. பெட்டிக்குள் இருக்கும் பரிசுப்பொருள் என்ன என்பது இப்போதும் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. மறக்க முடியாத திருமணமும், மறக்க முடியாத பரிசுப்பொருளும், மறக்க முடியாத அந்தக் கல்யாண நாளும் இப்போதும் எனக்குள் பயத்தைத் தந்தன என்றுதான் சொல்ல வேண்டும்.

மிகச் சரியாக ஒரு வருடம் இருக்கும். பனிக் காலமான கார்த்திகை மாதத்தின் முதல் வாரத்தில், ராஜசேகர் அவன் ஊருக்குப் போய்த் திரும்பினான். ஊரில் இருந்து வந்தவன், ‘எனக்கு இந்த மாசம் கடைசியில கல்யாணம் மாப்ள’ என்று, ஏதோ நியூஸ் பேப்பரில் படித்த செய்தியைச் சொல்வதுபோல சொன்னான்.

‘காலையில பொண்ணு பார்க்கக் கூட்டிட்டுப் போனாங்க மாப்ள. எனக்கும் பொண்ணு பிடிச்சுப்போச்சு. சாயங்காலமே பேசி முடிச்சு வெத்தலைபாக்கு மாத்திக்கிட்டோம். அடுத்த மாசம் கல்யாணம். மண்டபம் பேசி அட்வான்ஸ் எல்லாம் கொடுத்தாச்சு. கல்யாணம் ஞாயித்துக்கிழமை வருது’ என்று பேசிக்கொண்டே போனான். தனது தோள்பையில் இருந்து பெண்ணின் புகைப்படத்தையும் எடுத்துக் கொடுத்தான்.

ரோஸ் நிறத்தில் சேலையும், தலை நிறைய மல்லிகைப் பூவுமாக முழு உருவமும் தெரிகிற புகைப்படம் அது. பெண், மாநிறம் என்றபோதிலும் பார்ப்பதற்கு நல்ல லட்சணம். பளிங்குபோன்ற கண்களும், வெல்வெட் துணிபோல அவளது உதடுகளும் இருந்தன. மூக்கும் அதன் துவாரங்களும் கவர்ச்சியாக இருந்தன. நான் புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

‘மாப்ள… உன் அப்பாகிட்ட சொல்லி உனக்கும் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்றேன். பார்த்தது போதும், போட்டோவைக் குடுறா’ என்று கேலி செய்தான்.

எனக்கு வெட்கமாக இருந்தது. புகைப்படத்தைக் கொடுத்தேன். அவனாகத்தான் சொன்னான்… ‘பேர் ‘விமலா’. நல்லாயிருக்கா?’

‘நல்ல பேர் மாப்ள. ராஜசேகர் – விமலா… எவ்வளவு பொருத்தமா இருக்குத் தெரியுமா?’ என்று வாசு பெயர்களைச் சொல்லிக் கொண்டான்.

மேன்ஷனுக்குக் கீழே இருக்கும் பேக்கரிக்குப் போய் டீயும் கேக்கும் சாப்பிடலாம் என எங்களைக் கூட்டிப்போனான் புதுமாப்பிள்ளை. அவனுக்கு ரோட்டில் போகும் எல்லா பெண்களும் புகைப்படத்தில் பார்த்த கல்யாணப் பெண் விமலாவைப் போலவே தெரிந்தனர். வாசுவிடமும் என்னிடமும் அதைச் சொல்லிச் சிரித்துக் கொண்டான்.

திருமணத்துக்காக அவனது ஊருக்குச் சென்றோம். கல்யாணப் பெண் விமலாவைப் பார்த்தோம். புகைப்படத்தில் பார்த்தது போலவே நேரிலும் இருந்தாள். அவளுக்குப் பளிங்கு மாதிரி கண்கள். நீண்ட நாட்கள் பழகியதைப்போல விமலா எங்களோடு பேசினாள். எங்களுக்கும் சந்தோஷமாக இருந்தது. வாசு எந்தத் தயக்கமும் இல்லாமல், விமலாவை தன் சகோதரியாக ஏற்றுக் கொண்டான். இரவு முழுவதும் பாட்டும் குடியுமாகப் பொழுதுபோனது.

காலையில் திருமணம் தடபுடலாக நடந்து முடிந்தது. ராஜசேகர், விமலாவுக்கு தாலி கட்டினான். விமலா, மஞ்சள் நிறத்தில் சேலை உடுத்தியிருந்தாள். ராஜசேகரும் மஞ்சள் நிற வேட்டி கட்டியிருந்தான். இருவரும் மாலை மாற்றிக்கொண்டனர். திருமணக் கூட்டத்தில் இருந்த சிலர் எழுந்து, டைனிங் ஹாலுக்குச் சென்றனர். அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது.

புரோகிதர், மணமக்களை மாற்று உடை உடுத்திக்கொண்டு வரச்சொன்னதால் மணமக்கள் இருவரும் அவரவர் அறைக்குச் சென்றனர். மணமகனின் அறைக்குள் நாங்கள் சென்று ராஜகேசகரைக் கலாய்த்துக்கொண்டிருந்தோம்.

‘இனிமே ராத்திரியில டவுன்ஹாலுக்குள் தனியா அலைய முடியாதுடி. ஒழுங்கா வீட்டுல அடங்கு!’ என்று சொன்னேன்.

‘அதெல்லாம் நான் பேசி கரெக்ட் செஞ்சிரு வேன்டா மாப்ள’ என்று எங்களைச் சமாளித்தான் ராஜசேகர்.

அவனுக்கு பிஸ்கட் நிறத்தில் பேன்ட்டும் கோட்டும் எடுத்திருந்தனர். உள்ளே இளநீல நிறத்தில் சட்டையும் சிவப்பு நிறக் கழுத்துப்பட்டையும் அணிந்திருந்தான். நான் வேண்டுமென்றே, ‘மாப்ள… இப்ப நீ பார்க்கிறதுக்கு அப்படியே நம்ம ரெப் சண்முகம் அண்ணாச்சிபோலவே இருக்கே’ என்று சொன்னேன். சண்முகம் எங்களுடன் சிறிது நாட்கள் மேன்ஷனில் தங்கியிருந்தவர். 45 வயது வரைக்கும் கல்யாணம் செய்துகொள்ளாமல் ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருந்தார்.

ராஜசேகர் ஞாபகம் வந்தவன்போல, ‘ச்சே… மறந்துபோச்சுடா. அவருக்குப் பத்திரிகை தரணும்னு நீயாவது ஞாபகப்படுத்திருக்கக் கூடாதா?’ என்று வருத்தப்பட்டான்.

அவர்கள் சென்ற பாதை2அப்போது வெளியே சத்தம் கேட்டு, அறையில் இருந்து எட்டிப்பார்த்தோம். மணமகள் அறை முன்பு ஒரு கூட்டம் நின்றுகொண்டிருந்தது. விமலாவின் அப்பா மயங்கிக்கிடந்தார். அவரைச் சுற்றித்தான் கூட்டம் கூடி இருந்தது. விமலாவின் அம்மா அழுதுகொண்டு இருந்தார். நானும் ராஜசேகரும் வாசுவும் அங்கு வேகமாகச் சென்றோம். வாசுவைப் பார்த்ததும் எங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கினர். எங்களுக்குப் பின்புறம் ‘மாப்ள வந்துட்டாரு… மாப்ள வந்துட்டாரு..!’ எனச் சொன்னது கேட்டது. நாங்கள் அறையின் முன் போய் நின்றோம். அறை திறந்து இருந்தது. எட்டிப்பார்த்தோம். அறையில் விமலாவைக் காணவில்லை.

நான் அறையைச் சுற்றிப் பார்த்தேன். சுவரில் ஸ்டிக்கர் பொட்டுகள் ஒட்டப்பட்டிருந்தன. தரையில் கிழிந்த காகிதங்கள் கிடந்தன. ஒரு பெட்ஷீட்டை விரித்து அதன் மேல் தாம்பூலத் தட்டுகளை வைத்திருந்தனர். மேஜையின் மேல் பூச்செண்டு இருந்தது. அதன் அருகே புது பட்டுச்சேலை அட்டைப் பெட்டியுடன் இருந்தது. மேஜையை அணைத்தபடி இருந்த சுவரில் ஆள் உயரத்துக்கு அழகான கண்ணாடி ஒன்று இருந்தது. அதில் என் உருவத்தைப் பார்த்துக்கொண்டேன். எனக்குப் பின் ராஜசேகர் நின்றிருந்தது தெரிந்தது. விமலாவை அங்கு காணவில்லை.

‘டிரெஸ் மாத்த அறைக்குள்ள வந்தோம். விமலா ‘பாத்ரூம் போகணும்’னு சொன்னா. போனவளைக் காணோம்’ என்று அங்கு இருந்த பெண்கள் கூறினர். ராஜசேகர் பதற்றத்துடன், கழிவறைக்குள் சென்று தேடினான். அங்கே வேறு ஏதேனும் வழி இருக்கிறதா எனச் சுற்றிலும் பார்த்தான். மேலே ஏறிச் செல்வதற்கான வழி எதுவும் இல்லை. அறையுடன் இணைந்த கழிவறை அது. கதவைப் பூட்டிவைக்காமல் வெறுமனே சாத்தி மட்டும் வைத்துவிட்டு, கழிவறைக்குச் சென்றிருக்கிறாள். குழாயைத் திறந்துவிடுகிற சத்தமும் அதைத் தொடர்ந்து தண்ணீர் விழுகிற சத்தமும் அறைக்குள் இருந்த பெண்களுக்குக் கேட்டிருக்கிறது. சிறிது நேரம் கழித்து விமலா வந்துவிடுவாள் எனக் காத்திருந்தனர். ஆனால், நீண்ட நேரம் கடந்தும் அவள் வரவில்லை என்றதும் கதவைத் தட்டியிருக்கின்றனர். கதவு திறந்து கொண்டதும், உள்ளே பார்த்தால் அங்கே விமலா இல்லை. அவர்கள் பயத்தில் தங்களை மறந்து அலறியிருக்கிறார்கள்.

திருமண மண்டபம் முழுக்க ஆட்கள் தேடிச் சலித்தார்கள். உடை மாற்றிக்கொள்ள விமலாவோடு அறைக்குள் சென்ற பெண்கள் அனைவரும் பெண் வீட்டுக்காரர்கள். யாரைச் சந்தேகப்படுவது? கடைசியில் ‘விமலாவைக் காணவில்லை’ என திடல் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். விசாரிக்க வந்த போலீஸ், ‘யார் மேலயாவது சந்தேகம் இருக்கா, விமலாவுக்குக் காதல் ஏதாவது இருக்கா, காலேஜ் படிக்கும்போது அவள் யாரையாவது காதலித்தாளா?’ எனப் பல்வேறு கோணங்களில் விசாரித்தது. ஆனால், இன்று வரை யாராலும் விமலாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பெண் வீட்டாரோடு சேர்ந்து ராஜசேகரின் அப்பாவும் விமலாவைத் தேடி அலைந்தார்.

‘எங்கே போயிருப்பா… பாத்ரூமைவிட்டு வெளியே வராம எங்கே போயிருப்பா?’ எனத் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான் ராஜசேகர். ஏதோ ஞாபகம் வந்தவன்போல, ‘விமலா மண்டபத்தை விட்டு வெளியே போறதை நான் பார்த்தேன்… நான் பார்த்தேன்’ என்று கத்தினான்.

‘பார்த்தா கூப்பிட்டிருக்க வேண்டியது தானடா’ என்று நாங்கள் கேட்டதற்கு அவன், ‘கண்ணாடியில பார்த்தேன் மாப்ள. புது சேலை கட்டிக்கிட்டு ரோஜாப் பூ மாலை போட்டுக்கிட்டு ரோட்டுல நடந்துபோனா. நான் கண்ணாடியில பார்த்தேன்’ என்றான்.

‘எந்தக் கண்ணாடியிலடா?’

‘கல்யாண மண்டபத்துல விமலா இருந்த ரூம்ல பெரிய கண்ணாடி இருந்துச்சுல்ல, அதுல’ என்றான். எங்களுக்கு என்ன செய்வது எனப் புரியவில்லை.

ராஜசேகர், அன்றிரவு அதிகமாக மதுவைக் குடித்துவிட்டு புதுத் துணிகளைக் கிழிக்கத் தொடங்கினான். அவனை யாராலும் சமாதானப்படுத்த முடியவில்லை. வேலைக்குச் சென்றால் அவன் மனம் மாறும் என ஊரில் இருந்து கிளப்பிக் கூட்டிவந்தோம்.

ராஜசேகர், ஒரு வாரம் வரை வெளியே எங்கும் செல்லவில்லை. தற்செயல் விடுப்பு எடுத்துக்கொண்டு, ‘எங்கே போயிருப்பா… எங்கே போயிருப்பா?’ எனப் புலம்பிக் கொண்டிருந்தான்.

மேன்ஷனுக்கு துணிகள் சலவை செய்துகொடுக்கும் வயதான ஒருவர், ராஜசேகர் முகத்தைப் பார்த்துவிட்டு ”பேய் பிடிச்ச முகம்போல இருக்கு. எங்கயாவது கூட்டிட்டுப் போய் தாயத்து மந்திரிச்சுக் கட்டுங்க” என்று சொன்னார்.

ராஜசேகர், ‘ஆமாடா கக்கூஸ்க்குள்ள இருந்தவளை பேய்தான்டா பிடிச்சுத் தூக்கிட்டுப் போயிருக்கும்’ என்று கத்தினான்.

ரெப் சண்முகம் அண்ணாச்சி ஊரில் இருந்து வந்து அவனைச் சமாதானப்படுத்தினார். அவனுக்காக மிலிட்டரி கேன்டீனில் இருந்து வாங்கிவந்த விஸ்கியைத் திறந்துகொடுத்து, ”சேகர்… மனதாரக் குடி, அழு, உளறு… இல்லைன்னா பேசாமத் தூங்கி எந்திரி. எல்லாம் சரியாப் போயிடும்” என்றார்.

ராஜசேகரும் அவர் சொன்னதுபோல செய்தான். குடித்துவிட்டு என்னென்னமோ பேசினான். நிறைய உளறினான். மேன்ஷன் பால்கனியில் இருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொள்வதாகப் பேசினான்.

”தற்கொலை செஞ்சிக்கிறதுக்கு முன்னாடி ஒரு கட்டிங் குடிச்சிட்டுப் போடா” என்று சண்முகம் அண்ணாச்சி அவனை அறைக்குள் இழுத்துவந்தார். கட்டில் மேல் இருந்து அறைக்குள் புரண்டு விழுந்தான். ‘பால்கனியில இருந்து விழுந்துட்டேன். நான் செத்துட்டேன்… செத்துட்டேன்; விமலாவைப் பார்த்துட்டேன்… பார்த்துட்டேன்’ என முனகியபடியே தூங்கிவிட்டான்.

அதன் பிறகு மூன்று மாதங்களில் பல்வேறு சம்பவங்கள் நடந்துவிட்டன. முதலில் ராஜசேகர் அம்மா இறந்துபோனார். பிறகு, அவனாகவே கோட்டயத்தில் இருக்கும் எங்கள் கிளை அலுவலகத்துக்கு வேலை மாறுதல் கேட்டுச் சென்றுவிட்டான்.

ராஜசேகரைப் பற்றி நினைக்கும்போது, எனக்கு முதலில் நினைவுக்கு வருவது, கீழே குதித்துத் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என, மேன்ஷன் பால்கனி கம்பி மீது ஏறி நின்ற காட்சிதான். மேன்ஷன் பால்கனியைப் பார்க்கும்போதெல்லாம் அவன் குடிபோதையில் ஒரு காலை சாலை பக்கமும், மற்றொரு காலை பால்கனி பக்கமும் வைத்து ‘விமலா… விமலா…’ என உளறியபடி கீழே குதிக்கச் சென்ற காட்சி வேதனையாகவும் அதே நேரத்தில் சிரிப்பாகவும் இருந்தது.

கல்யாணப் பத்திரிகையைப் பார்த்தபடி கட்டிலில் உட்கார்ந்திருந்தேன். பத்திரிகையைப் படித்துக்கொண்டிருந்தபோது ராஜசேகரிடம் இருந்து போன் வந்தது.

‘என்ன மாப்ள… பத்திரிகை கிடைச்சதா? ஒழுங்கா வந்து சேருடா. ரெப் சண்முகத்துக்கும் வாசுவுக்கும் பத்திரிகை அனுப்பிட்டேன். ரெண்டு பேரும் உன் ரூமுக்கு வந்துருவாங்க. காரைப் பிடிச்சிக் கூட்டிட்டு வந்துருடா’ என்று என்னைப் பேசவிடாமல் பேசினான்.

‘டேய் மாப்ள… நீ தண்ணியைப் போட்டுக்கிட்டு மேன்ஷன் பால்கனியில் இருந்து ‘குதிக்கப்போறேன்’னு நின்னதை இப்பத்தான் நினைச்சுட்டு இருந்தேன். நீயே போன் பண்ணிட்ட’ என்று சொன்னேன்.

‘நீ இன்னமும் அதை ஞாபகத்துல வெச்சிருக்கியாடா? என்னாலயும் எதையும் மறக்க முடியலைடா. அம்மா செத்துப்போன பின்னாடி அப்பாவுக்காக கல்யாணம் செஞ்சுக்க வேண்டியதாப்போச்சு மாப்ள. உண்மையைச் சொல்லணும்னா என்னால விமலாவை மறக்க முடியலைடா. அவ ஞாபகமாவே இருக்கு’ என்று சொன்னான்.

அவன் குரல் இளகியதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இன்னமும் விமலா மீது பிரியமாக இருக்கிறான்.

விமலாவைத் தேடி அவன் செல்லாத இடம் இல்லை. செய்தித்தாளில் விமலாவின் திருமணப் புகைப்படத்தை வெளியிட்டு ‘காணவில்லை’ என விளம்பரம் செய்தான். அவளுடன் படித்து பெங்களூரில் வேலை செய்யும் ரேஷ்மாவை நேரில் போய்ச் சந்தித்தோம்.

ரேஷ்மா, கல்யாணத்துக்கு வரவில்லை. விமலா அவளுக்குப் பத்திரிகை அனுப்பியிருக்கிறாள். தனக்கு லீவ் கிடைக்கவில்லை என்பதால், கல்யாணத்துக்கு வர முடியவில்லை எனக் குறுஞ்செய்தி அனுப்பி வாழ்த்துத் தெரிவித்ததாகவும், ஊருக்கு வரும்போது விமலாவைச் சந்திக்கும் திட்டம் இருந்ததாகவும் எங்களிடம் சொன்னாள். ரேஷ்மாவுக்கு அப்போதுதான் தெரிந்தது விமலா காணாமல்போன விஷயம்.

கல்யாணத்துக்கு ரேஷ்மா வரவில்லை என்பதால், ‘கல்யாண போட்டோ ஏதாவது இருந்தா காட்ட முடியுமா?’ என்று சேகரிடம் கேட்டாள். சேகர் தனது செல்போனில் இருந்த புகைப்படங்களை அவளிடம் காட்டினான். புகைப்படங்களை ஆவலுடன் பார்த்துக்கொண்டு வந்தவள் எங்களிடம் சொன்னாள்… ‘காலேஜ்ல எங்களோடு படிச்ச விமலா மாதிரியே இவ இல்லை. போட்டோவுல வேற மாதிரி இருக்கா. அவ கண்கள் இப்படி இருக்காது. உதடு எல்லாம் வெளுத்துப்போய் ஒரு மாதிரியா இருக்கா’ என்று வருத்தத்துடன் சொன்னாள். நாங்கள் அதை பெரிதாகக் எடுத்துக்கொள்ளவில்லை.

‘என்னாடா மாப்ள… அமைதியா இருக்க’ என்று ராஜசேகர் கேட்டான்.

‘ஏதோ ஞாபகம்டா.’

‘டேய்… ஊர்ல இருந்து வர்றப்போ கார்ல வந்துருங்க. தேக்கடி போகலாம்டா. குமுளி பாதையிலே ரெண்டு, மூணு யானைங்க திரியுதாம். கோயில்ல பார்க்கிற யானையைவிட காட்டுக்குள்ள திரியுற யானைங்களைப் பார்க்கிறதுக்கு ஜாலியா இருக்கும்’ என சிறுகுழந்தையைப்போல பேசினான்.

20-ம் தேதி ஊருக்குப் போவதற்காக காருக்கு சொல்லிவிட்டு வரும்போது, சலவை செய்யும் முதியவரைப் பார்த்தேன். ‘அழுக்குப் போர்வையைத் துவைக்க வேண்டும்’ எனவும், ‘ஊரில் இருந்து வாசுவும் அண்ணாச்சியும் வருகிறார்கள்’ எனவும் சொன்னேன். அவர் என்னைப் பார்த்து, ‘ராஜசேகர் தம்பி வர்றாரா?’ என்று கேட்டார்.

‘ராஜசேகருக்குக் கல்யாணம். அதுக்குத்தான் ரெண்டு பேரும் வர்றாங்க. ஜனவரி 20-ம் தேதி கல்யாணம்’ என்றேன்.

‘கல்யாணத்துக்கு முன்னாடி ராஜசேகர் தம்பியை எங்கயாவது மந்திரிக்கிற இடத்துக்குக் கூட்டிட்டுப் போங்க தம்பி. அவர் கண்ணைப் பார்த்தப்போ, எனக்கே பயமா இருந்துச்சு.’

‘அவன் கண்ணுல அப்படி என்ன பார்த்தீங்க?’

‘பேய் கண்ணு மாதிரி, பளிங்கு மாதிரி இருந்துச்சு தம்பி’ என்றார்.

அவர் சொல்லி முடித்ததும், பளிச்சென மின்னல் வெட்டிச்செல்வதுபோல, சடாரென யாரோ கடந்து செல்வதுபோல விமலாவின் கண்கள் என் மனதில் வந்துபோயின. கூடவே ராஜசேகரின் கண்களும். நான் இதைப் பற்றி யாரிடமும் சொல்லிக் கொள்ளவில்லை.

பயணத்தின் போதுகூட வாசு என்னிடம் கேட்டான்… அண்ணாச்சியும் கேட்டார்.

”ஏன் அமைதியா இருக்க… என்ன விஷயம்?” என்று கேட்டார். நான் எதுவும் சொல்லவில்லை. அவர்கள் தேக்கடிக்குச் சென்று வருவதைப் பற்றியும், குமுளிக்குப் பக்கத்தில் இருக்கும் கண்ணகிக் கோயிலுக்குப் போவதைப் பற்றியும் பேசிக்கொண்டு வந்தனர். நான் கண்களை மூடி உறங்குவதுபோல விமலாவின் கண்களையும், ராஜசேகரின் கண்களையும் நினைத்துக்கொண்டு வந்தேன். அவர்களிடம் ‘சொல்லிடலாமா?’ என யோசித்தேன். நம்ப மாட்டார்கள் என விட்டுவிட்டேன்.

கல்யாண மண்டபத்தில் கார் நிறுத்த இடம் இருந்தது. எங்கள் காரோடு சேர்த்து இன்னும் இரண்டு கார்கள் நின்றிருந்தன. எனக்கும் வாசுவுக்கும் திருமணப் பெண்ணைப் பார்க்கும் ஆவல் இல்லை. நேராக ராஜசேகரைப் பார்க்கச் சென்றோம். அவன் கண்களைத்தான் முதலில் பார்க்க வேண்டும் என நினைத்தேன். ‘ராஜசேகர் மணமகன் அறையில் இருக்கான்’ என அவன் அப்பா அங்கே எங்களை அழைத்துப் போனார். ராஜசேகர் நாற்காலியில் அமர்ந்து யாருடனோ பேசிக்கொண்டிருந்தான். நான் முதலில் அவன் கண்களைத்தான் பார்த்தேன். கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்தான். எனக்கு ஏமாற்றம்.

எங்களைப் பார்த்ததும் எழுந்துகொண்டவன், ‘டேய் மாப்ள…” என்று கட்டிக்கொண்டான். என்னைக் கட்டிக் கொண்டபோது அவன் வயிறு முட்டியது. நறுமணத் தைலம் பூசியிருந்தான். அறை முழுக்க நறுமணம் பரவியிருந்தது. அறையில் அமர்ந்து இருந்தவரிடம், ‘இவங்க என் ஃப்ரெண்ட்ஸ்’ என்று எங்களை ஒவ்வொருவராக அறிமுகம் செய்துவைத்தான். அவர் எழுந்து நின்று ஒவ்வொருவருக்கும் கைகொடுத்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

‘விமலாவோட அப்பா மாப்ள… உனக்கு ஞாபகம் இருக்கா?’ என்று அவரைக் காட்டி என்னிடம் கேட்டான். அவரைப் பார்த்ததும் நான் கையெடுத்துக் கும்பிட்டேன். அவர் மெலிந்துபோய் கூன் விழுந்து நின்றிருந்தார். புருவத்தில் நிறைய நரை முடிகள் தெரிந்தன. அவரை உட்கார்ந்து கொள்ளச் சொன்னோம்.

‘உங்க பொண்ணைப் பத்தி ஏதாவது தகவல் தெரிஞ்சதா?’ என்று அண்ணாச்சி கேட்டார். விமலாவின் அப்பா கவலையுடன் ‘இல்லை’ என இடது – வலதாகத் தலையை ஆட்டினார். ஆனால், ஏதோ ஒரு வேகத்தில் எங்களோடு பேசினார்.

‘எங்க தாத்தா காலத்துல இந்த மாதிரிதான்… கல்யாணத்துக்கு முதல் நாள் ராத்திரி ஒரு ஆளு காணாமப்போயிட்டார். ராத்திரி முழுக்கத் தேடினோம். எங்கேயும் இல்லை. காலையில வந்துருவான்னு காத்திட்டு இருந்தோம். காலையிலயும் வரலை. கல்யாணத்தை நிறுத்திட்டோம். இன்னைக்கு தேதி வரைக்கும் அவர் என்ன ஆனார்; எங்கே இருக்கார்னு தெரியலை. அவருக்குப் பேசி முடிச்ச பொண்ணை வேறு ஒருத்தருக்குக் கல்யாணம் பேசி முடிச்சுட்டாங்க. சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க’ என்று பேச்சை நிறுத்தியவர், எங்கள் முகங்களை ஒருமுறை பார்த்தார்.

‘கல்யாணத்துக்கு எல்லா ஏற்பாடுகளும் நடந்திருச்சு. மண்டபத்துக்குப் பொண்ணை அழைச்சுட்டுப் போயிட்டாங்க. சொன்ன நீங்க நம்ப மாட்டீங்க…’ என மீண்டும் சஸ்பென்ஸ் வைத்தார்.

‘சும்மா சொல்லுங்க அண்ணே’ என்று ரெப் சண்முகம் அவருக்குத் தைரியம் சொன்னார்.

‘முகூர்த்த சேலை கட்டிட்டு வர்றதுக்கு அறைக்குள்ளே போன பொண்ணைக் காணோம். எங்கே தேடியும் கண்டுபிடிக்கவே முடியலை’ என்று கவலையோடு சொன்னார்.

நாங்கள் நால்வரும் அப்படியே அசையாமல் அவர் முகத்தையே பார்த்தோம். நான் மட்டும் திரும்பி ராஜசேகர் முகத்தைப் பார்த்தேன். அவன் கறுப்புநிறக் கண்ணாடியைக் கழட்டியிருந்தான். அவன் கண்கள் இரண்டும் பளிங்குபோல இருந்தன; விமலாவின் கண்களைப்போல. மேன்ஷனில் நள்ளிரவுக்கு மேலாக பால்கனியில் இருந்து தாவிப்போகும் பூனையின் கண்களைப்போல் இருந்தன. நான் அவன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

அன்றிரவு நிறையக் குடித்தேன். மறுநாள் காலையில் என்னால் எழுந்திருக்க முடியாது என நினைத்தேன். அப்படி ஆகவேண்டும் என்பதுதான் என் விருப்பம். அண்ணாச்சி என்னைத் திட்டினார். எனக்குக் கோபம் வரவில்லை. ‘என்னாச்சு இவனுக்கு? ஏன் இன்னைக்கு இப்படி நடந்துக்குறான்? அளவாத்தானே குடிப்பான். குடிக்கிறதும் தெரியாது; தூங்குறதும் தெரியாது’ என்று சொன்னது எனக்குக் கேட்டது. பிறகு, எப்போது தூங்கினேன் என்றே தெரியவில்லை.

காலையில் வெயில் முகத்தில் விழுந்து சுர்ரெனச் சுட்டபோதுதான் எழுந்தேன். அறையில் யாரும் இல்லை. முகூர்த்தத்துக்கு முதல் ஆளாக அண்ணாச்சியும் வாசுவும் சென்றிருப்பார்கள்போல. மண்டபத்தில் ஜனங்களின் குரலும், அதைத் தொடர்ந்து நாற்காலிகள் நகர்கிற ஓசையும், மேளதாள இசையும் கேட்டன. பல் துலக்கிய பிறகும் மதுவின் வாசம் மூக்கின் மேல் ஒட்டியிருப்பதுபோல இருந்தது. அவசர அவசரமாகக் குளித்து முடித்து வேறு உடை உடுத்திக்கொண்டு, அறையை விட்டு வெளியே வந்தேன். கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. குளிர்ந்த காற்று உடலுக்குள் இறங்கி நடுங்கச் செய்தது. எனக்குப் பதற்றமாக இருந்தது. ஏனென்று தெரியவில்லை. மின் விசிறி காற்றில் வண்ணக் காகிதங்களின் சலசலப்பு, மண்டபம் முழுக்க எதிரொலித்தது. ஒரு நாற்காலியை இழுத்துத் தள்ளிப்போடுகிற சத்தம்கூட எனக்குள் பெரிய பதற்றத்தை உண்டாக்கியது.

வாசு, சண்முகம் அண்ணாச்சி இருவரும் அமர்ந்திருந்த இடத்துக்குச் சென்று அவர்களுக்குப் பின்புறம் உட்கார்ந்துகொண்டு, கல்யாண மேடையைப் பார்த்தபடியே இருந்தேன். எனக்குள் கிரிக்கெட் மேட்சின் பரபரப்பு தொடங்கியிருந்தது. கடைசி ஆறு பந்துகளில் 20 ரன்கள் எடுக்க வேண்டும் என்பதுபோல நினைத்துக் கொண்டேன். அப்போது முதல், கடக்கும் ஒவ்வொரு மணித்துளியையும் ஒவ்வொரு ரன் போலவும் ஒவ்வொரு பந்து போலவும் எண்ணிக்கொண்டேன். நிஜத்தில் அப்படியாகத்தான் நடந்தது. இப்போது கடைசி பந்து. கடைசி இரண்டு ரன் என்பதுபோல் இருந்தது. தாலியை தட்டில் வைத்து ஆசீர்வாதம் வாங்குவதற்காக ஒரு பெண்ணிடம் கொடுத்தார் புரோகிதர். அந்தப் பெண்ணும் பார்வையாளர்களிடம் தட்டைக் காட்டி ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டே வந்தார்.

என்முன் வந்து நின்று, தட்டை நீட்டினார். நான் தாலியைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டேன். தட்டில் இருந்த அட்சதையை கை நிறைய அள்ளிக்கொண்டேன். மனம் இப்போது சற்று நிம்மதி அடைந்திருந்தது.

கெட்டிமேளம் ஒலிக்கத் தொடங்கியது. மணப்பெண்ணுக்குத் தாலி கட்டினான் ராஜசேகர். நான் அட்சதையைத் தூவி அவர்களை மனதார வாழ்த்தினேன். வாசுவும் அண்ணாச்சியும் என்னை அழைத்துக்கொண்டு மேடை நோக்கிச் சென்றனர். நாங்கள் மூவரும் மேடை ஏறினோம். ராஜசேகர் எங்களைப் பார்த்ததும், ‘ஏன்டா அங்கேயே உட்கார்ந்துட்டீங்க… நான் எவ்வளவு நேரம் உம்முனு இருக்கிறது?’ என்று கோபித்துக்கொண்டான்.

‘மாப்பிள்ளையை அழைச்சிட்டுப் போய், முகூர்த்த வேஷ்டியைக் கழட்டிட்டு வேற உடுப்பு உடுத்தி அழைச்சுண்டு வாங்கோ’ என்றார் புரோகிதர். நாங்கள் ராஜசேகரை அழைத்துக்கொண்டு மணமகன் அறைக்குள் சென்றோம்.

‘மாப்ள… என்ன ராத்திரி ஃபுல் தண்ணியாம்ல… மூக்கு வழியா ஒழுகிருச்சாம். ஏன்டா இப்படி?’ என்று ராஜசேகர் என்னைப் பார்த்துக் கேட்டான்.

நான் ”சரிடா… சரிடா… விடு” என்று சமாளித்தேன்.

அவனது புது உடைகள் மேஜை மேல் இருந்தன. அவன் தனது பூச்செண்டை அந்த மேஜையின் மேல் வைத்தான். தனது முகூர்த்த வேட்டியைத் தூக்கிக் கட்டிக்கொண்டு, ‘இருங்கடா ஒண்ணுக்கு இருந்துட்டு வர்றேன். எவ்வளவு நேரம் அடக்கிக்கிட்டு இருந்தேன் தெரியுமா?’ என்று வேகமாகக் கழிவறைக்குள் சென்றான்.

அறையைச் சுற்றிப் பார்த்தபடி நின்றிருந்தேன். தரையில் கிழிந்த காகிதங்கள் கிடந்தன. அழுக்கான ஜமுக்காளம் ஒன்று விரிக்கப்பட்டு இருந்தது. இரண்டு, மூன்று தாம்பூலத் தட்டுகள் கிடந்தன. ராஜசேகரின் பழைய செருப்பு மேஜைக்கு அடியில் கிடந்தது. சுவரில் ஆள் உயரத்தில் கண்ணாடி ஒன்று இருந்தது. நான் அதைப் பார்த்தபடி நின்றிருந்தேன். எவ்வளவு நேரம் கடந்துசென்றது எனத் தெரியவில்லை. விமலாவின் அப்பா நாங்கள் இருந்த அறைக்குள் வந்து எட்டிப்பார்த்தபோதுதான், கழிவறையில் இருந்தவனை அழைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

‘சேகர், சேகர்… வாடா வெளியே… நேரமாச்சு’ என்று அண்ணாச்சி அழைத்தார். எந்தச் சத்தமும் இல்லை. வாசு கழிவறையின் கதவைத் தட்டினான். கதவு திறந்து இருந்தது. எட்டிப் பார்த்தோம். உள்ளே ராஜசேகர் இல்லை. பயந்துபோன வாசு, கத்தினான். அவன் சத்தம் கேட்டு மணமகன் அறையின் முன் கூட்டம் கூடியது. என்னைத் தள்ளிக்கொண்டு சிலர் உள்ளே நுழைந்து பார்த்தார்கள்.

நான் தற்செயலாக ஆள் உயரக் கண்ணாடியைப் பார்த்தேன். அதில் ராஜசேகரும் விமலாவும் புது உடைகளோடும் மாலையோடும் சாலையில் நடந்து செல்வது தெரிந்தது. மண்டபத்தின் வாசலைத் தாண்டி அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். எந்த இடம் எனத் தெரியவில்லை. அறையை விட்டு வெளியேறி மண்டபத்தின் வாசலுக்கு வந்தேன். ரோட்டின் இரு பக்கங்களையும் பார்த்தேன். யாரும் இல்லை. கண்ணாடியில் அவர்கள் சென்ற பாதை எது எனச் சரியாகத் தெரியவில்லை!

– டிசம்பர் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *