அவன் சட்டையில் இவன் மண்டை…

 

ஹோலி பண்டிகையின் அந்தி நேரம். கிராமப் பையன்கள் அநேகர், வேப்பமரத்தின் கீழ் கூடிநின்று, ஒருவர் மீது ஒருவர் மண்ணை வாரி வீசி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

அம்ரித்தும் ஐசபும் கைகோர்த்து வந்தனர். மற்றவர்களோடு சேர்ந்தனர். இருவரும் புதிய ஆடைகள் அணிந்திருந்தார்கள். நிறம், அளவு, துணிரகம்-அனைத்திலும் ஒரே மாதிரியாக விளங்கிய அவை அன்று தான் தைக்கப்பட்டிருந்தன. இரண்டு பேரும் ஒரே வகுப்பில், ஒரே பள்ளியில் படித்தார்கள். தெருமுனையில் எதிர் எதிராக இருந்த வீடுகளில் வசித்தார்கள். அவர்களின் பெற்றோர் விவசாயிகள். இருவருக்கும் ஒரே அளவு நிலம் இருந்தது. கஷ்ட காலங்களில் சமாளிக்க அவ்வப்போது இருவரும் வட்டிக்காரனிடம் பணம் கடன் வாங்கினார்கள். சுருக்கமாக, இரண்டு பையன்களும் எல்லா விதங்களிலும் சமம் தான். ஆனால், அம்ரித்துக்கு அப்பாவும் அம்மாவும் மூன்று சகோதரர்களும் இருந்தனர். ஐசபுக்கு அப்பா மட்டுமே இருந்தார்.

இரண்டு பையன்களும் வந்து, நடைபாதையில் உட்கார்நதார்கள். இருவரும் ஒரே மாதிரி ஆடை அணிந்திருப்பதைக் கண்டதும், ஏ அம்ரித் ஐசப், நீங்கள் இருவரும் உங்கள் அடையாளங்களை மாற்றிக் கொண்டீர்களா?” என்று இதர பையன்களில் ஒருவன் கேட்டான்.

இது இன்னொருவனுக்கு விஷம எண்ணம் ஒன்றைத் தந்தது. நீங்கள் இருவரும் ஏன் மல்யுத்தம் புரியக் கூடாது? நீங்கள் இரண்டு பேரும் பலத்திலும் ஒரே ஈடாக இருக்கிறீர்களா அல்லது ஒருவன் மற்றவனை விட வலிமை உடையவனா என்று பார்ப்போமே” என அவன் கூறினான்.

இது அருமையான எண்ணம் என முதல் பையன் கருதினான். “ஆமா, அம்ரித், ஐசப். உங்களில் யார் சிறந்தவர் என்று பார்க்கலாம்” என்றான்.

“வாங்க சும்மா வேடிக்கை தான்” என்று வேறொருவன் கத்தினான்.

ஐசப் அம்ரித்தைப் பார்த்தான். “வேண்டாம். என் அம்மா என்னை உதைப்பாள்” என்று அம்ரித் உறுதியாய்ச் சொன்னான்.

அவன் பயம் நியாயமானதே. அவன் வீட்டிலிருந்து புறப்படுகையில் அவன் அம்மா எச்சரித்து அனுப்பினாள். “புது ஆடைகள் வேண்டும் என்று அடம்பிடித்தாய் அவற்றைக் கிழித்தாலோ, அழுக்கு ஆக்கினாலோ உனக்குச் சரியானபடி உதை கொடுப்பேன்” என்றாள்.

அம்ரித் தன் பெற்றோரைப் பாடாய்ப்படுத்தினான் என்பது உண்மை தான். ஐசப் ஒரு புதுச்சட்டை வாங்குகிறான் எனக் கேள்விப்பட்டதும், ஐசப் சட்டை மாதிரியே தனக்கும் ஒன்று வேண்டும், தராவிட்டால் பள்ளிக்கூடம் போகமுடியாது என்று முரண்டு பிடித்தான். அவன் அம்மா எவ்வளவோ எடுத்துச் சொன்னாள். “மகனே, ஐசப் பண்ணையில் வேலை செய்ய வேண்டும். அவன் உடுப்புகள் கிழிந்துள்ளன. உனக்கு எல்லாம் புதுசு மாதிரி நன்றாக இருக்கின்றன” என்றாள்.

அம்ரித் தன் சட்டையிலிருந்த ஒரு கிழிசலை விரலை விட்டுப் பெரிதாக்கியபடி, “யார் அப்படிச் சொன்னது?” என்று கத்தினான்.

அம்மா வேறொரு தந்திரத்தைக் கையாண்டாள். “ஐசபுக்கு புதுச் சட்டை வாங்கித் தருவதற்கு முந்தி அவன் அப்பா அவனை நன்றாக உதைத்தார். உனக்கும் அறை கொடுக்கவா?” என்றாள்.

அம்ரித் பின்வாங்கவில்லை. “சரி. என்னை கட்டிப் போடு. அடிகொடு. ஆனால் ஐசப் சட்டை மாதிரி எனக்கும் ஒன்று வாங்கியாக வேண்டும்” என்று அவன் திடமாக அறிவித்தான்.

“சரி, போய் உன் அப்பாவிடம் கேள்” என அம்மா தட்டிக் கழித்தாள்.

அம்மா இல்லை என்று சொல்லிவிட்டால், அப்பாவும் சம்மதிக்க மாட்டார் என அம்ரித் அறிவான். ஆனால் அவன் விட்டுவிடக் கூடியவன் அல்ல. அவன் பள்ளி செல்ல மறுத்தான், சாப்பிட மறுத்தான், இரவில் வீட்டுக்கு வரவும் மறுத்தான். முடிவில், அம்மா மனம் மாறினாள். அவனுக்குப் புதிய ஆடைகள் வாங்கும்படி அப்பாவைக் கட்டாயப்படுத்தினாள். அம்ரித் ஒளிந்து கொண்டிருந்த ஐசப் வீட்டு மாட்டுத் தொழுவத்திலிருந்து அவனை அழைத்து வந்தாள்.

அழகாக ஆடை அணிந்து வீட்டிலிருந்து கிளம்பிய அம்ரித் தனது உடுப்புகளைப் பாழ்பண்ணக் கூடிய எதையும் செய்ய விரும்பவில்லை. முக்கியமாக, ஐசபுடன் சண்டையிட அவனுக்கு மனமில்லை.

அவ்வேளையில், கும்பலின் போக்கிரிப் பையன்களில் ஒருவன் அம்ரித்தின் கழுத்தைத் தன் கையால் வளைத்துக் கொண்டு,”வா, நாம் குஸ்தி போடலாம்” என்றான். அம்ரித்தைத் திறந்த வெளிக்கு இழுத்து வந்தான்.

அவன் பிடியிலிருந்து நழுவ அம்ரித் முயன்றான். “பார் காலியா, நான் குஸ்தியிட விரும்பவில்லை. என்னை விட்டுவிடு” என்றான்.

காலியா அவனை விட்டுவிட மறுத்தான். அம்ரித்தைப் பிடித்துத் தரையில் தள்ளினான். இதர பையன்கள் மகிழ்வோடு கூவினார்கள். அம்ரித் தோத்துப் போனான். காலியா வென்றான்! காலியாவுக்கு வெற்றி! ஜே! ஜே!”

ஐசப் ஆத்திரம் அடைந்தான். அவன் காலியாவின் கையைப் பற்றி, “வா, உன்னோடு நான் சண்டை போடுவேன்” என்றான்.

காலியா தயங்கினான். ஆனால் மற்றப் பையன்கள் அவனைத் தூண்டினார்கள். இரண்டு பேரும் கட்டிப்பிடித்துப் போராடினர். ஐசப் காலியாவின் காலை இடறி, அவனை மண்ணில் குப்புற வீழ்த்தினான். காலியா சத்தமிட்டு அழுதான்.

விளையாட்டாகத் தொடங்கியது வினையாக முடிந்தது என்பதைப் பையன்கள் உணர்ந்தார்கள். காலியாவின் தந்தை அடிக்க வருவார் என்று பயந்து, அவர்கள் நாலாபுறமும் சிதறி ஒடினார்கள்.

அம்ரித்தும் ஐசபும் அந்த இடத்தை விட்டு அகன்றனர். சில அடிதூரம் நடந்ததும், அம்ரித்தின் பார்வை ஐசபின் சட்டை மீது படிந்தது. அதன் பையுடன் வேறு இடத்திலும் நீளமாய் கிழிந்திருந்தது. அவர்கள் மேலே செல்லாமல் அங்கேயே நின்றனர். பயத்தால் அரண்டு போனார்கள். சட்டையின் கிழிசல்களை ஆராய்ந்தார்கள். ஐசயின் அப்பா வீட்டிலிருந்து, “ஐசப் எங்கே?” என்று கூச்சலிடுவது வேறு அவர்களுக்கு கேட்டது.

இருவர் நெஞ்சங்களும் பயத்தால் துடித்தன. தங்களுக்கு சரியானபடி கிடைக்கும் என அவர்கள் அறிவர். ஐசபின் அப்பா சட்டை கிழிந் திருப்பதைக் கண்டதுமே, அவன் தோலை உரித்துவிடுவார். வட்டிக் காரனிடம் அவர் கடன் வாங்கி, நிறைய நேரம் செலவுசெய்து நல்ல துணியாகத் தேர்ந்து, சட்டை தைத்திருந்தார்.

மறுபடியும் ஐசயின் தந்தை கத்தினார்: “யார் அழுவது? ஐசப் எங்கே?”

சட்டென அம்ரித்துக்கு ஒரு யோசனை தோன்றியது. அவன் ஐசபை ஒரு பக்கமாக இட்டுச் சென்றான். “என்னோடு வா. ஒரு விஷயம்” என்றான். இரண்டு வீடுகளுக்கும் இடையிலிருந்த சந்தில் நுழைந்ததும், அம்ரித் தனது சட்டையை கழற்றலானான். உம், நீ உன் சட்டையை கழற்று. என் சட்டையைப் போட்டுக் கொள்” என்று கூறினான்.

“உன் விஷயம் என்ன? நீ எதை அணிவாய்?” என்று ஐசப் கேட்டான்.

“நான் உன் சட்டையை அணிவேன் என்று பதிலளித்தான் அம்ரித். “சீக்கிரம். யாரும் நம்மைப் பார்ப்பதற்குள் அணிந்து கொள்.”

ஐசப் தன் சட்டையைக் கழற்றத் தொடங்கினான். ஆனால் அம்ரித்தின் திட்டத்தைப் புரிந்து கொள்ள இயலவில்லை அவனால். “சட்டைகளை மாற்றிக்கொண்டால் அப்பா உன்னை அடிப்பாரே.”

“நிச்சயமாக என்னை அடிப்பார். ஆனால் எனக்கு அம்மா இருக்கிறாள். அவள் என்னைப் பாதுகாப்பாள்” என்றான் அம்ரித்.

அம்ரித்தின் அப்பா அவனை அடிக்க முயல்கையில் அவன் அம்மா பின்னே பதுங்கிக் கொள்வதை ஐசப் அடிக்கடி கவனித்திருக்கிறான். அவன் அம்மாவிடம் ஒரிரு அறைகள் வாங்க நேரிடும். சந்தேகமில்லை. ஆனால் அம்மாவின் மென்மையான அடிக்கும், தன் அப்பாவின் முரட்டுக் கைவேகத்துக்கும் வித்தியாசம் உண்டு தான்.

ஐசப் தயங்கினான். அந்நேரத்தில் அருகே யாரோ இருமுவதை அவன் கேட்டான். இருவரும் வேகமாய் சட்டைகளை மாற்றிக் கொண்டு, சந்திலிருந்து வெளிப்பட்டு, எச்சரிக்கையோடு வீடு நோக்கி நடந்தார்கள்.

அம்ரித்தின் நெஞ்சு பயத்தால் பதைபதைத்தது. அவனுக்கு அதிர்ஷ்டம் தான். அன்று ஹோலிப் பண்டிகை. முரட்டு விளையாட்டு நடக்கத் தானே செய்யும் அவன் சட்டை கிழிந்திருப்பதை அம்மா பார்த்து முகத்தைச் சுளித்தாள். ஆனால் அவனை மன்னித்து விட்டாள். ஊசியும் நூலும் எடுத்து, கிழிசலைத் தைத்தாள்.

பையன்களின் பயம் போய்விட்டது. அவர்கள் திரும்பவும் கை கோர்த்தவாறு, ஊருக்கு வெளியே நிகழும் பண்டிகை சொக்கப் பனையை வேடிக்கை பார்க்கப் போனார்கள்:

சட்டை மாற்றத்தை கண்டு கொண்ட ஒரு பையன், “ஒகோ, நீங்கள் பரஸ்பரம் மாற்றிக் கொண்டீர்களா?” என்று கேலி பண்ணி அவர்கள் மகிழ்ச்சியைக் கெடுத்தான்.

தாங்கள் சட்டைகளை மாற்றிக் கொண்டதை அந்தப் பையன் பார்த்திருக்கிறான் என அஞ்சி, அம்ரித்தும் ஐசயும் நழுவி ஒட முயன்றார்கள். இதற்குள் இதர பையன்களும் அறிந்து விட்டனர். நடந்ததைப் புரிந்துகொண்டு “சட்டை அங்கே, மண்டை இங்கே!” என்று கத்தினர்.

இருவரும் தப்பிச் செல்ல முயன்றனர். ஆனால் அந்தக் கும்பல் அவர்கள் பின்னாலேயே “சட்டை அங்கே மண்டை இங்கே, மண்டை அங்கே, சட்டை இங்கே” என்று கூவியது. விஷயம் அப்பா காதை எட்டும் என அஞ்சிய இருவரும் நண்பர்களும் அவரவர் வீட்டுக்கு ஒடினார்கள்.

ஐசயின் அப்பா, வீட்டு முற்றத்தில், புகை பிடித்தபடி ஒரு கட்டிலில் இருந்தார். அவர் இருவரையும் கூப்பிட்டார். “நீங்கள் ஏன் உங்கள் நண்பர்களிடமிருந்து ஒடி வருகிறீர்கள் வாங்க, என் பக்கத்தில் உட்காருங்கள்” என்று உத்தரவிட்டார்.

அவரது மென்மையான குரல் பையன்களை குழப்பியது. “நாம் பயந்தது சரிதான். அவர் உண்மையை அறிந்திருக்கிறார். பிரியமாக இருப்பது போல் பாசாங்கு பண்ணுகிறார்” என்று நினைத்தார்கள்.

ஐசயின் தந்தை, ஒரு பட்டாணியர், பத்து வயது அம்ரித்தை தன் கைகளால் அள்ளி அணைத்தார். “வகாலி அண்ணி, இன்று முதல் உங்கள் மகன் அம்ரித் என் பையனும் தான்” என்று உரக்கச் சொன்னார்.

வகாலி அண்ணி தன் வீட்டிலிருந்து வெளியே வந்தாள். சிரித்தாள். “ஹசன் அண்ணா, உங்களால் ஒரு பையனையே வளர்க்க முடியவில்லை; இரண்டு பேரை எப்படிச் சமாளிப்பீர்கள்?” என்றாள்.

“வகாலி அண்ணி, இன்று முதல் நான் இருபத்தோரு பையன்களை வளர்க்கத் தயார். அவர்கள் அம்ரித் மாதிரி இருந்தால்” என்றார் ஹசன். அவரது குரல் உணர்ச்சியால் கம்மியது.

அவர் தொண்டையைச் செருமி விட்டுப் பேசினார். இரண்டு பையன்களும் சந்தினுள் போனதை அவர் பார்த்தாராம். “பையன்கள் என்ன செய்கிறார்கள் என்று கவனிக்க எண்ணினேன்” என்றார்.

அவர் சொல்வதைக் கேட்க அண்டை அயல் பெண்கள் அனைவரும் கூடிவிட்டார்கள்.

அவர் சொல்வதற்கு நெடுநேரம் பிடிக்கவில்லை. பையன்கள் சட்டைகளை மாற்றிக் கொண்டதைச் சொன்னார். ஐசப், ‘உன்னை உன் அப்பா அடித்தால் என்ன பண்ணுவாய்?’ என்று அம்ரித்தைக் கேட்டான். உங்கள் அம்ரித் என்ன பதில் சொன்னான் தெரியுமா? ‘எனக்காவது அம்மா இருக்கிறாளே, காப்பாற்றுவாள்’ என்றான்.”

கண்களில் நீர் பெருக, அந்த பட்டாணியர் கூறினார்: “எவ்வளவு உண்மை அம்ரித்தின் பதில் என்னை மாற்றிவிட்டது. எது உண்மையான மதிப்பு உடையது என்பதை அவன் எனக்குக் கற்றுத்தந்தான்.”

அம்ரித்தும் ஐசபும் கொண்டிருந்த பாசத்தைக் கேள்வியுற்ற பெண்கள் உணர்ச்சி வசப்பட்டார்கள்.

பண்டிகை சொக்கப்பனை பார்த்து விட்டுத் திரும்பிய இதர பையன்கள், அம்ரித்தையும் ஐசபையும் சூழ்ந்தனர். “இவன் சட்டையில் அவன் மண்டை, அவன் சட்டையில் இவன் மண்டை” என்று கூச்சலிட்டார்கள்.

இப்போது அம்ரித்தும் ஐசபும் குழப்பம் அடையவில்லை. மாறாக, அந்தக் கூச்சல்களால் மகிழ்ச்சி கொண்டார்கள்.

அவர்கள் சட்டை மாற்றிக் கொண்ட கதை ஊர் முழுதும் பரவியது. அது ஊர் தலைமைக்காரர் அந்தப் பையன்கள் ஊருக்கே ஒரு உதாரணமாக விளங்குவதாய் அறிவித்தார். அம்ரித்துக்கும் ஐசபுக்கும் பெருமை பிடிபடவில்லை!

- பன்னாலால் படேல் (குஜராத்திக் கதை), சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் தொகுப்பு. 

தொடர்புடைய சிறுகதைகள்
பால்வண்ணம் பிள்ளையைப் பார்த்தவர்கள் உறுதியாக எண்ணினார்கள். அவர் பிழைத்து எழுவது கஷ்டம் என்று. டாக்டருக்கு நிச்சயமாகத் தெரிந்துதானிருந்தது. பிள்ளையின் வியாதி குணமாவது அரிது என்பது. இருப்பினும் அவர் தமது கடமையை ஒழுங்காகச் செய்யத்தானே வேண்டும்? ஆகவே டாக்டர், பிள்ளையை அடிக்கடி பரிசோதித்தார்; வேளை ...
மேலும் கதையை படிக்க...
சிலரைப் பற்றிக் குறிப்பிடுகிறபோது, அவனுக் கென்ன! கொடுத்து வைத்தவன்" என்று சொல்வார்கள். திருவாளர் நமசிவாயம் அவர்கள் அவ்வாறு குறிப்பிடப்பட வேண்டிய அதிர்ஷ்டசாலிகளுள் ஒருவர் அல்லர். "பாவம், கொடுத்து வைக்காதவர்" என்று தான் அவரை அறிந்தவர்கள் கூறுவார்கள். திருவாளர் நமசிவாயம் தமாஷாகச் சொல்லுவார்: "நம்ம ...
மேலும் கதையை படிக்க...
காதுகளை உறுத்தும் பேரோசை சுயம்புவின் கவனத்தை ஈர்த்தது. அவன் பார்வை தானாகவே வெளியே பாய்ந்தது. ரோடில் பயங்கர வேகத்தில் ஒடியது ஒரு மோட்டார் பைக். உல்லாசியான இளைஞன் ஒருவன். அவன் பின்னால் அவனை ஒட்டியவாறு ஒரு இளம் பெண். அவள் சிரித்துச் சிரித்து ...
மேலும் கதையை படிக்க...
"உந்தன் மனநிலையை நான் தெரிந்து கொண்டேனடி தங்கமே தங்கம்!" என்று சொல்லி, வளைகள் கலகலக்கும் படியாகக் கைகொட்டி, களி துலங்கும் குலுக்குச் சிரிப்பு சிந்தினாள் ராஜம்மா. "என்னத்தையடி கண்டு விட்டாய் பிரமாதமாக?" என்று சிடு சிடுத்தாள் தங்கம். அவள் சிநேகிதி சிரித்தபடி சொன்னாள்: “நெல்லுக்குள்ளே ...
மேலும் கதையை படிக்க...
அதோ, என் எதிரே, அந்த மரம் மீண்டும் பூத்துக் குலுங்குகிறது. முகமெல்லாம் சிரிப்பேயாகி, சிரிப்பினால் முழு உருவமும் தனியொரு எழிலேயாகி நிற்கும் அழகுப் பெண் போல, அது முழுவதும் சிரிக்கும் மலர்களாகவே விளங்குகிறது. சரம் சரமாகத் தொங்கும் மஞ்சள் பூக்கள். பெயருக்குக்கூட ...
மேலும் கதையை படிக்க...
மனோபாவம்
கொடுத்து வைக்காதவர்
சுயம்பு
தோழி நல்ல தோழிதான்!
பொன்கொன்றை பூக்கும்போது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)