அவனுள் மறைவாக…!

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 2, 2019
பார்வையிட்டோர்: 9,383 
 

அவனுக்கு இப்போது வயது முப்பது. நல்ல குண்டுத்தோற்றம். சுமாரான உயரம். என்றும் புன்னகை பூத்த முகம். தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் அவனைத் தேடி அவன் அலுவலக அறைக்கு அடிக்கடி சக பணியாளர் கூட்டம் அலை மோதும்.

காலையில் கண்டவுடன் ஏதாவது ஒரு சிரிக்க வைக்கும் குறும்புக் கதை சொல்லியே வணக்கம் சொல்லுவான். அவனை யாருக்குத்தான் பிடிக்காது.

அன்றும் அப்படித்தான். அவனோடு பணியாற்றும் சக தோழி நிலாவுடன் பேசிக்கொண்டிருந்தான். “ இந்த வருடம் மிக விரைவாக ஓடிவிட்டது, காலம் வெகு வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறது, நாளை காலை கார்த்திகை முதலாம் நாள்” என்றாள் நிலா.

“ உண்மைதான், உனக்கு கார்த்திகை மாதம் பிடிக்குமா?” என்று கேட்டான் அவன். ம்ம்ம்…. என் மகன் பிறந்த மாதம் கார்த்திகை; அதனால் எனக்கு கார்த்திகை மாதம் மிகவும் பிடித்த மாதம்” என்றவள் சட்டென்று அவன் பிறந்த நாளும் நினைவுக்கு வர “ ஏன் நீ கூட கார்த்திகை மாதம்தானே பிறந்தாய்” என்றவளை நோக்கி அவன் பேசத் தொடங்கினான்.

“நான் மட்டுமல்ல; என் தம்பியும் என் அண்ணாவும் கூட கார்த்திகை மாதத்தில்த்தான் பிறந்தார்கள்” என்றவனிடம். “ ஏய் உனக்கு தம்பியும் இருக்கா?” வேறு சகோதரர்கள் இருப்பதாக நீ சொல்லவே இல்லையே….” எனக் கேட்டவளிடம்.

“ என் தம்பியும் நானும் இரட்டைப் பிள்ளைகள், என் அண்ணாவும் நானும் அரை சகோதரர்கள் ( அப்பாவின் முதல் தாரத்து மகன்) அதைவிட எனக்கு இரண்டு மூத்த சகோதரிகளும் இருக்கிறார்கள்” என்று சொன்னவனை ஆச்சரியத்தோடு பார்த்த அவள்.

“ முன்பெல்லாம் இங்கும் பெரிய குடும்பங்கள் இருந்திருக்கிறது.. இப்பொழுதுதான்; ஆளுக்கு ஒன்று என்றாகிவிட்டது” என்றவள் நிறுத்தாமல் தொடர்ந்தும் “ நீ இரட்டைப் பிள்ளையில் ஒருவரா? அற்புதம்! எனக்கு இரட்டைப் பிள்ளைகள் என்றால் விருப்பம்” என்றாள்.

அப்படியா? என்று கேட்டவனிடம் “பெண்கள் இரட்டை பிள்ளைகளாக இருந்தால்த்தான் இரட்டைப் பிள்ளைகள் பிறப்பதற்குரிய வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் பெண்களின் கரு முட்டைகள்தான் இரட்டைப் பிள்ளைகளை தீர்மானிக்கிறது” என்று நிலா சொல்லி முடிக்கவும் அவன் தொடர்ந்தான்…

“ இருக்கலாம் ஆனால் எனக்கு அது பற்றிய ஆட்சேபனையில்லை. ஏனெனில் என்னால் பிள்ளை பெற முடியாது” என்றான். அவளுக்கு ஏனோ அது ஒரு அதிர்ச்சிப் பதிலாகவே இருந்தது. சற்று அமைதிக்குப் பின். கதையை வேறு பக்கம் திருப்ப நினைத்தாள் நிலா. அதிலும் ஓர் பேரிடி பதிலாய் வரப்போகிறது என்பதை அறியாதவளாய்.

“ அது சரி; உன் தம்பி என்ன படித்தான்? இரட்டைப் பிள்ளைகளுக்கு ஒரேமாதிரியான இரசனை இருக்கும் என்பார்கள், ஆவலாக இருக்கிறது அவன் என்ன செய்கிறான் என்பதை அறிய!

“அவன் உயிருடன் இருந்தால்த்தானே!” ஏன் என்னாச்சு? “ஒரு விபத்தில் இறந்துவிட்டான்” என்றவனைப் பார்த்து “எப்படி நடந்தது? என்று கேட்டாள்

“ அவன் நான்கு வயதாக இருக்கும்போது பனியில் சறுக்கி விளையாடிக் கொண்டிருந்தான், அப்படியே வழுக்கி வாகனங்கள் போகும் ஒரு பாதையில் வந்து விழவும், சரியாக அதே நேரத்திற்கு ஓர் மகிழூந்து ( கார்) வீதியில் வந்து கொண்டிருந்திருக்கின்றது. அப்படியே அவனில் மோதியதும், சிறிது நேரம் உயிருக்கு போராடியிருக்கின்றான். பிறகு இறந்துவிட்டான்”

ஒரு குண்டூசி விழுந்தால்க்கூட சத்தம் கேட்குமளவிற்கு நிசப்தம் நிலவியது. அங்கு வேறு யாரும் இருக்கவில்லை.

இதுவரையும் வேலை செய்துகொண்டே பேசிக்கொண்டிருந்தவன்… நிலா எதுவுமே பேசாமல் அமைதியாக இருப்பதைப்பார்த்து அவனே தொடர்ந்தான்.

“ அந்தச் சம்பவம் நடந்தது நத்தார் பண்டிகை நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு; அதனால் அந்த வருடம் நரகமாகவே இருந்தது நத்தார் பண்டிகைக் கொண்டாட்டம். அந்த ஆண்டு மட்டுமல்ல அதன் பின் வந்த ஒவ்வொரு நத்தார் பண்டிகையும்தான். இன்றுவரை எனக்கு நத்தார் பண்டிகை என்றாலே விருப்பமில்லை. அதனால்த்தான் நத்தார்க் காலங்களில் வேலை செய்கின்றேன்” என்று சொல்லி முடித்தான்.

ஓரிரு குறும்பு கதைகளில் இருபது சக பணியாளர்களைக் கொண்ட அந்த அலுவலகத்தையே மகிழ்ச்சியிலாழ்த்தும் இவனுக்குள் ஒரு பெரிய சோகமே உறங்கிக் கிடந்திருக்கிறது என்பது நிலாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும் அவள் தொடர்ந்தும் அவனை வினாவத் தயங்கவில்லை.

“இரட்டைப்பிள்ளைகள் எப்பொழுதும் ஒன்றாகத்தானே எங்கும் செல்வது வழக்கம். அந்தச் சம்பவம் நடந்த அன்று நீ எங்கே? நீ போகவில்லையா அவனோடு விளையாடுவதற்கு?”

“ உண்மைதான், நாங்கள் இருவரும் சேர்ந்துதான் விளையாடுவது வழக்கம். ஆனால் அன்று எனக்கு சுகயீனம் காரணமாக நான் வீட்டில் இருந்தேன். இல்லாவிடில் இருவரும்தான் சேர்ந்து போயிருப்போம். அப்படி நடந்திருந்தால் நல்லது” என்று சொன்னவனைப் பார்த்து.

“உனக்கு நான்கு வயதுதானே, அந்த நிகழ்வு உனக்கு நினைவிருக்கிறதா?” என்று கேட்ட நிலாவைப்பார்த்து.

“ என்னால் மறக்க முடியாது. எனக்கு எல்லாமே நினைவிருக்கிறது… என்றவனிடம் இதற்கு மேலும் எதுவும் பேச விரும்பாத நிலா, அவனிடம் அருகில் சென்று இத்தனை நாள் நீ இதுபற்றி எதுவுமே சொன்னதில்லையே என்று ஆறுதல்வார்த்தை கூறினாள்.

அதற்கு அவன் “ நீயும் கேட்கவில்லை நானும் சொல்லவில்லை….. இப்போது கேட்டாய் அதனால் சொன்னேன்” என்று கூறி வழமைபோல் தன் குண்டுக்கன்னங்கள் மிளிர சிரித்தான்….

அவனுடைய அப்பா நோய்வாய்ப்பட்டு படுக்கையிலிருந்து சில மாதங்களுக்கு முன்பு இறந்தார். அப்போது அவருக்கு வயது 71 என்றும் இவன் தான் கடைசிப்பிள்ளை என்றும் அலுவலகத்தில் சிலர் கதைத்தது நினைவிருக்கிறது நிலாவிற்கு, இதைத்தவிர அவனோடு பணி புரிந்த இந்த ஒருவருட காலத்தில் அவன் பற்றி வேறு எதுவும் யாரும் தெரிந்துகொண்டதாக இல்லை…….

“உடையும் நடையும் உள்ளத்தை காட்டும் என்பார்கள், உருவம் உள்ளத்தை ஒளித்துவிடுமென்பதும் உண்மையே”

– 31.ஐப்பசி.2019

Print Friendly, PDF & Email

2 thoughts on “அவனுள் மறைவாக…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *