Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

அவதாரம்

 

கே .வரதராஜனுடன் இரு சந்திப்புகள்:

சந்திப்பு 1:

”குழந்தைத் திருமண வயசுன்ன என்ன “

எரிச்சலுடன் கேள்வி கேட்ட அவரைப் பார்த்தேன்.அவரின் சவரம் செய்யப்படாத முகம் ஒரு வகைக் கோணலாகியிருந்தது.கண்களுக்குக் கீழ் இருந்த அழுத்தமானகருப்பு அச்சம் தருகிற விதமாய் இருந்தது. வாயை ஒரு வகையான கோணலுடன்தான் வைத்திருந்தார். உதடுகள் புகை பிடிப்பவரைப்போல் கருத்திருந்தன.

“ குழந்தைகளுக்கு கல்யாணமெல்லா கூடாது…குடிக்க யாரும் வயசெக் கேட்கறதில்லெ. படிக்கற குழந்தைகளுக்கு கல்யாணமெல்லா எதுக்கு , எப்பிடி “

“ ஹைஸ்கூல்லே படிக்கறவங்களும், காலேஜ்ல படிக்கறவங்களும் எப்படி குழந்தைகளாவாங்க “

கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தவருக்கு அறுபது வயதாவது இருக்கும்.ஓரிரு கேள்விகளுக்குப் பின் அமைதியாகி விடுவார் என்றுதான் நினைத்தேன். அவர் ஓயாமல் கேட்டுக் கொண்டிருந்தார்.கேள்விகளுக்கான பதில்களைப் பெறுகிற வரை பேசுகிறவர் போலத்தான் தெரிந்தார். பதிலுக்காக ஆவலுடந்தான் இருந்தார்.

“ ஓட்டுப் போடற வயசு தெரியும் உங்களுக்கு.. கல்யாணம் பண்ற வயசு தெரியாதாக்கும்” .

ஒரு உணவு விடுதியின் பின்புறபக்கத்தின் இரட்டைச் சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் தற்காலிக மணமேடையாகியிருந்தது. இரட்டைச்சக்கர வாகனங்களில் புழுதி படர்ந்திருந்தவை மட்டுமே ஓரமாய் ஒதுங்கி நின்றிருந்தன. அவை பல நாட்களாய் கிடத்தப்ட்ட அடையாளமாய் தூசு நிறைந்திருந்த்து. நீளமான ஒரு மரபெஞ்சை போட்டிருந்தார்கள். இரண்டு மாலைகள் விஸ்தாரமாய் பெஞ்சை ஆக்கிரமித்திருந்தன..ஒரு எவர்சிலவர் தட்டில் இருந்தவைகளை மறைத்துக் கொண்டு வெற்றிலையின் பச்சைத்தனம் மினுங்கியது. தடுப்பிற்கு அந்தப்புறம் சிவாஜி வீதியில் வாகனங்கள் வழக்கமான இரைச்சலுடன் ஒன்றையொன்று துரத்திக் கொண்டிருந்தன. அவற்றின் வேகத்தை கிரிச்சிடும் வாகனங்களின் நிதானமற்ற சப்தங்கள் காட்டின.

“பையன் எங்கிருக்கறான் “

“ ரூம்லே “

முதல் மாடிக்கு தடதடவென் யாரோ ஓடினார்கள். பெஞ்சின் ஓரத்தில் நின்றிருந்த பெண் மலிவான விலையில் பட்டுப் புடவையொன்றை உடுத்தியிருந்தாள். கவரிங்க் நகை நெக்லஸ் தன் அடையாளத்தைக் காட்டிக் கொள்ளாமல் ஒதுங்கியிருந்தது. தூக்கமின்மை கண்களின் கீழ் கறுப்பைக் கூட்டியிருந்தது. வியர்வைத்துளிகள் கண்களின் ஓரத்திலும் பூத்திருந்தன.வீதியின் பக்கமிருந்து வந்த நடுத்தர வயதுப் பெண்மணி மணப்பெண்ணின் அருகில் சென்று நின்று கொண்டாள். கெஞ்சும் பார்வையில் அவளின் கணகள் தத்தளித்தன. அம்மாவாக இருக்க வேண்டும் . அப்பெண்ணை அங்கிருந்து கிளப்பிக் கொண்டு போனால் போதும் . எல்லாம் சுபமாகிவிடும் என்ற நம்பிக்கையில் அவள் என்னைப்பார்த்தாள். அம்மாவின் பார்வை. ஒரு சாதரண அம்மா. கேவலத்திற்கும் அவமானத்திற்கும் சுலபமாக ஆட்படுகிற அம்மா. அவளிடம் நான் இதற்கு முன்பும் அதிகமாய் ஒன்றும் கேட்கவில்லை. அதற்கே கண்களில் மாலை மாலையாய் கண்ணீர் கோர்த்துக் கொண்டது.

அப்பாவிடன் எதுவும் பேசவில்லை. கோபமும் எரிச்சலும் குறைந்து போய் நிதானத்திற்கு வந்திருப்பார் போலிருந்தது. அவரின் நாலைந்து நாள் முக மயிரில் சோகம் ஒட்டிக்கொண்டிருந்தது.

தலைகுனிந்த படி நாலைந்து பேருடன் அந்த இலைஞன் படிகளிலிருந்து கீழிறங்கி வந்து என்னருகில் நின்றான். வெள்ளைச் சட்டையும் வெள்ளை வேட்டியும் அவனை மாப்ப்பிள்ளையாகவே சரியாகக் காட்டியது.

அவனுடன் இருந்தவர்களெல்லாம் கட்டம் போட்ட சட்டைகள்தான் போட்டிருந்தனர்,. எல்லோர் தலை மயிர்களும் வெவ்வேறு வாக்கில் சிலிர்த்துக் கொண்டிருந்தன.

“ நான் இப்போ போலீசோட வர்லே. வேணும்னா போலீசீசெ வரச்சொல்வேன் “ அவன் தயங்காதவன் போல் சொன்னான். முன்பே தீர்மானித்த வார்த்தைகள் போல் வெளிவந்தன.

“ இல்லே.. நான் போயர்றேன் :”

“ அப்போ அந்தப் பொண்ணே அவங்கப்பா, அம்மா கூட போகச் சொல்லாமில்லையா “

“ செரிதா ..”

வார்த்தைகளை அரைத்தபடிச் சொன்னான்.இளைஞன். கல்லூரி மாணவனாக இருக்க வேண்டும். அப்பெண்ணின் அருகில் முதியவர்கள் இருவர் வந்து நின்று கொண்டனர். வெளிச்சமாய் ஏதோ அவர்களுள் குடிபுகுந்து கொண்டது.கொஞ்சம் சுதாகரித்துக் கொண்ட்து போல் இருந்தார்கள். மெல்ல வீசிய காற்று காரணமாக இருந்திருக்கலாம்.

கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்த அறுபது வயதுக்காரர் “ எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு நெனைக்கறீங்களா “ என்றவர் என்னைப் பார்த்தார். “ போலீஸ் வந்துதா முடிக்கனும்ன்னா நான் தயார் “ ” எப்பிடியோ ஒரு கல்யாணத்தெ நிறுத்திட்டிங்க மறுபடியும் கேட்கறேன் எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு நெனைக்கறீங்களா “

“ வயசுக்குத் தகுந்த மாதிரி பேசுங்கய்யா.. பள்ளிக்கூடம் போற மேஜர் ஆகாத பொண்ணெ இழுத்துடுட்டு வந்து கல்யாணம் பண்னுனா சும்மா வுட்டுடுருவாங்களா . பெரிய கேசாயிரும் “

நகரத்தின் மத்தியில் உள்ள ஒரு சாதாரண தங்கும் விடுதியின் பின்புறத்தில் ஒரு திருமணம் நடத்த எப்படி துணிச்சல் வந்திருக்கும். யார் துணிச்சலைத் தந்திருப்பார்கள். காதல் எல்லா தைரியத்தையும் தந்திருக்கும் என்பதை நினைத்துக் கொண்டேன்.இளம் வயதுக்காரர்களின் தைரியம் அங்கு கூட்டமாகியிருந்தது.

பெண்ணின் தகப்பனாரின் பார்வை என்மேல் பதிந்தது. கைகூப்பி நின்றார். அவரின் மனைவியின் கைகூப்பல் முன்பே நிரந்தரமாகியிருந்தது. ”இந்த உதவியெ எப்பவும் மறக்க மாட்டேன் . வாழ்க்கை முழுக்க “ என்று சொல்வதாக கற்பனைத்துக் கொண்டேன்.

” உங்க பேரு என்னன்னு தெரிஞ்சுக்கலாமா ”

“ கே. வரதராஜன் “

“ ஊரு “

அவரை ஆறு மாத இடைவெளிக்குப் பின் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. சிறார் திருமணம் நடக்கிறது என்று அந்த விடுதியில் தங்கியிருந்த ஒரு நண்பர் சொல்ல, புறப்பட்டுப் போய் அதை நிறுத்தி விட்டேன். அந்தப் பெண் மறுபடியும் பள்ளிக்குப் போவாள். படிப்பைத் தொடர்வாள் என்று நிச்சயமாக நம்பினேன். அந்தப்பையனுக்கு என்னவாகியிருக்கும் என்பதில் எனக்கு அக்கறையில்லாமல் இருந்தது. அவன் கல்லூரி மாணவனாக இருக்கலாம் என்று முன்பே யூகித்தேன். படிப்பது தவிர எல்லாவற்றையும் இப்போதைய மாணவர்கள் செய்வதாக வீட்டில் மனைவி அங்கலாயித்துக் கொள்வது மனதில் வந்தது.

பஞ்சாலையில் சுமங்கலித் திட்டத்தில் பல பெண்கள் அடைபட்டிருக்கிறார்கள் என்ற புகாரை விசாரிக்க அந்த பஞ்சாலைக்கு வந்திருந்தேன். மனித உரிமை அமைப்பைச் சார்ந்த நால்வர் அந்தக் குழுவில் இருந்தனர். ஒன்றும் பெரிதாய் செய்து விட முடியாது என்பதும் எனக்குத் தெரியும். சட்டத்தில் ஆயிரம் ஓட்டைகள். தங்கியிருக்கும் இளம் பெண்கள் பயிற்சி காலத்திலிருக்கிறோம் என்று கையொப்பமிட்டு கடிதம் தருவார்கள். பஞ்சாலை நிர்வாகமும் அதேபோல் தரும். பயிற்சி காலத்திலேயே எப்படி வசதிகள் பார்த்தீர்களா.. மூன்று வேளை சாப்பட்டு, ஓய்வறை. டிவி அறை. பிள்ளையார் கோவில்.. யோகாசன அறை என்று எல்லாம் காட்டுவார்கள்.. அதற்கு மறுபுறமாய் 15 மணி முதல் 20 மணி நேர உழைப்பு, உழைப்புச் சுரண்டல், குறைந்த சம்பளம் என்பது பற்றியெல்லாம் பெரிய யோசிப்பு இருக்காதுதான். அடைந்து கிடக்க வேண்டும். பல ஏக்கர் காம்பவுண்டை விட்டு எங்கும் போக முடியாது. படம் பார்க்க தொலைகாட்சிகள். பேன்சி அயிட்டங்கள் வாங்க மாதம் ஒரு ஞாயிறில் தனிப்பேருந்தில் ஆட்கள் காவலுடன் போய் வரலாம். பஞ்சு உடம்பை உருக்கினாலும் கைவிலங்காய் நிறைய விசயங்கள் இருந்தன. கால் விலங்காக இன்னும் பத்து விசயங்களும் இருந்தன.

தெற்குப்பாளையத்திடில் இருந்த பஞ்சாலையில் ஒரு பெண்ணின் கை இயந்திரத்தில் சிக்கி மணிகட்டுவரைக்கும் துண்டாகி விட்டது. அதையொட்டி வந்த புகார் இந்த நல்லிக்கஞ்சம் பாளைய பஞ்சாலைக்கு என்னைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

சந்திப்பு 2:

“ என்ன இங்க “

“ நீங்க “

“ உங்க பொண்ணு கல்யாணத்தெ வந்து நிறுத்துணமே.. போலீசுன்னு தேவையே இல்லாமெ அந்தப் பையன் பின்வாங்குனானே .. அந்த லாட்ஜிலே.. கோமளா லாட்ஜ் “

நண்பர் ஒருவர் தங்கியிருக்கும் விடுதி என்பதால் விடுதியின் பெயரும் சரியாக ஞாபகத்தில் இருந்தது. அவர்தான் எனக்கு அந்த்த் திருமணம் பற்றிச் சொன்னவர்.

“ ஆமா ஞாபகம் வருதுங்க.. “

“ இங்க என்ன ‘

“ அந்தக் கல்யாணத்தே நீங்க நிறுத்திட்டுப் போயிட்டிங்க . அப்புறம் என்னெல்லா நடக்கும் ..எதுவும் நடந்துடக்கூடாதுன்னுதா “

பெண்ணை பள்ளிக்குப் போக உறவினர்கள் அனுமதிக்கவில்லை. “ ஸ்கூலுக்குப் போறன்னுதா எவனோகூட போக தயாராயிட்டா. மறுபடியும் அவனோடவே கண்காணாத இடத்துக்குப் போகமாட்டாள்ன்னும் என்ன நிச்சயம் .. ஜாதி மொறையைத் தாண்டி நடந்தா என்ன நடக்குமுன்னு தெரியாதா “

சாதி மாறி காதல் செய்தவனை சாதி பார்த்து கொன்று தண்டவாளத்தில் எறிந்தார்கள். மாறுகால் , மாறுகை வெட்டினார்கள். தலையைக் கொய்து போட்டார்கள். குடிசைகளைத் தீக்கிரையாக்கினார்கள்.

“ என்னென்ன நடக்குதுன்னு தெரியுதே “

“ அந்தப் பையனையும் காப்பாத்தணும் . எம்பொண்ணையும் காப்பாத்தனும் ..பொண்ணெ வூட்லே வெச்சுட்டு பாதுகாக்க முடியலே.அந்தப் பையன் அங்கியே அலஞ்சு பொண்ணெக் கெடுப்பான்.பொண்னு மனசு மாறிட்டா சிரமம். சுமங்கிலித் திட்டமுன்னு ஆள் தேடுன புரோக்கர் நான் பாத்துக்கறன் . மில்லுலே பைரவர், கண்காணிச்சு காப்பாத்துவார்னான்.யாரும் நுழையக்கூட முடியாது. இந்த மில்லுக பாதுகாப்புன்னு கொண்டுட்டு வந்து வுட்டுட்டன் .. மாசத்திக்கு ஒருதரம் வந்து கண்ணாற பாத்துட்டுப் போறம். மத்ததெல்லா இருக்கு. இல்லீன்னு சொல்லலே. உசிரோட வெச்சிருக்க வேறே ஒன்னும் வழி உடனே தெரியலே. பக்கத்திலெ வடவள்ளி. எங்க குலதெயவம் கோவில். அந்தக் குலதெய்வம்தா எங்களையெல்லா காப்பாத்துதுன்னு ஒரு நம்பிக்கை. வடவள்ளிக்கு வந்தமாதிரியுமாச்சு . பொண்ணெ பாத்த மாதிரியுமாச்சு“

ஆய்வாளன் , எழுத்தாளன் என்ற அவதாரங்களின் மகிமையால் அந்த சிறார் திருமணத்திற்கு தடை ஒன்றைத்தான் நான் போட முடிந்திருக்கிறது.,

வேறு அவதாரத்திற்கு வழியேயில்லை என்பது தெரிந்தது. 

தொடர்புடைய சிறுகதைகள்
அம்மா என்று வலியால் மோகன் அலறியபோது போலீஸ்காரரின் குண்டாந்தடி மோகனின் உடம்பில் எங்கே பட்டது என்பது சுசிக்குத் தெரியாமலிருந்தது. அநேகமாக முதுகில் எங்கோ பட்டிருக்க வேண்டும் என்று நினைத்தாள். அவன் உடம்பைக் கயிற்றைச் சுருட்டிக் கொள்வது போல் சுருட்டிக்கொண்டு தரையில் விழுந்தான். போலீஸ்காரர் ...
மேலும் கதையை படிக்க...
“ இனி உன்னோட ஆட முடியுமுன்னு தோணலே சுபா “ “ஏன் அப்பிடி சொல்றீங்க .” “முடியாதுன்னு தோணுது. மனசு பலவீனமாயிருச்சு.” அவரின் எதிரில் இருந்த குதிரைகளும் ராஜாக்களும் படைவீரர்களும் செயலிழந்தது போல் சதுரங்க அட்டையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.இது இனி அவசியமில்லாதது என்பதாய் பார்த்தார்.அவளும் சட்டென ...
மேலும் கதையை படிக்க...
தாகம்
செளதாமினி வீதி முக்கைக் கடக்கும்போது "கனவு இல்லம்' என்ற போர்டு இருந்த வீட்டைப் பார்த்தாள். கேட் பூட்டியிருந்தது. முகம் இருளடைந்ததுபோல் இறுக்கமாகியது. அரை பர்லாங் தூரம் போனால் புதிதாக எழும்பிக் கொண்டிருக்கும் கட்டடம். அந்தக் கட்டடத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தாள். அவள் ...
மேலும் கதையை படிக்க...
அவனுக்கு நேர்ந்த நிர்வாணம் எதேச்சையானது என்பது குற்றவுணர்வாய் அவனுள் எழுந்தது. சந்திரா என்ன அம்மணக்குண்டியோட நிக்கறே என்று சொன்னதில் எரிச்சல் தெரிந்தது. அவள் இது போன்ற சம்யங்களில் நமட்டுச் சிரிப்பை உதிர்ப்பாள். இப்போதைய வார்த்தைகளில் இருந்த கோபமான நிராகரிப்பு அவன் உடம்பைக் ...
மேலும் கதையை படிக்க...
“ துண்டுத்துணி ஒன்னு ஆகும்போல இருக்குது. நெய்யறேன் ”” “ மல்லிகா சொன்னாள். அவள் கண்களில் புதுத்துணி பல வர்ணங்களுடன் மின்னியது.பட்டாம்பூச்சியொன்று பறந்து போனது.. “நாளைக்குதானே பாவு. நெய்யி. எப்பிடியும்  இன்னிக்கும், நாளைக்கும் சும்மா இருக்கறது தானே. நெய்யி” ராதிகா அப்பாவின் தறிப்பக்கம் வந்து ...
மேலும் கதையை படிக்க...
ஆண் மரம்
தற்காலிகமாய் நிறுத்தப்படும் ஆட்டம்
தாகம்
நிர்வாணி
துண்டுத்துணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)