அழுவதற்கில்லை வாழ்வு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 9,474 
 

அம்மா…..ம்….சாதியெண்டா என்னம்மா….புத்தகமொன்றினுள் மூழ்கியிருந்த எனது சிந்தனைகளில் அவளின் அந்தக் கேள்வி என் உச்சியில் வாழாய் வந்து விழுந்தது. அவளைத் திரும்பிப் பார்வையை வீசுகிறேன். அம்மா….! சாதியெண்டா என்ன…. இதோ விழுந்து விடுவேனெனும் தறுவாயில் அவள் கண்களை நிறைத்திருந்த கண்ணீர் நதி காத்திருந்தது. இஞ்சை வாங்கோ ஏனிப்பிடிக் கேக்கிறீங்க……அவளை அணைத்துக் கேட்கிறேன்.

நான் சாதிப்புத்தியைக் காட்டிறனாமெண்டு தினேஷ்ன்ரை அம்மா றோட்டிலை வைச்சுச் சொல்றாம்மா….அவள் கண்களிலிருந்து கண்ணீர் அவிழ்ந்து கன்னங்கள் வழியே வழிந்து கொண்டிருந்தது. நீங்களின்னும் அவனை மறக்கேல்ல என்ன…..அம்மா….என்னாலை முடியேல்லயம்மா…..நான் தினேஷ் உண்மையா நேசிக்கிறனம்மா….. அது வேண்டாமடா மறவுங்கோ…..எங்களுக்கும் அவைக்கும் சரிவராதடா…..இல்லையம்மா…..அவள் விழியில் ஒரு மாரிகால மழைக்காலம் குடியிருந்தது. இல்ல….மறவுங்கோ….முதல்ல படியுங்கோ….உங்கடை காலில நிக்கவேணும்….அதுக்காக நீங்க படிக்கவேணுமடா…..இந்தக்காதல் கலியாணமெல்லாம் பிறகு யோசிக்கலாமடா…. அவளைக் கெஞ்சிய என் விழிகளைக்கூடக் கவனிக்காது அழுது கொண்டிருந்தவள் என் அலமாரியில் அழகாய் அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களை இழுத்து விழுத்தி வீசியெறிந்தாள்.

எனக்குப் பிரியமான என் பிள்ளையான அவளைப்போல் நான் நேசிக்கும் புத்தகங்களை அவள் வீசியெறிந்ததில் நான் என்னையே இழந்து அவளை மாட்டுஅடி அடித்துவிட்டேன். இன்னும் என் பிள்ளை விம்மியபடி குப்புறப்படுத்திருந்தது என் இதயத்தை வேதனையால் பிழிந்தெடுத்துக் கொண்டிருந்தது.

அந்தப்பிஞ்சின் நெஞ்சை அறுத்த அந்த வார்த்தைகளைச் சொன்ன தினேஷின் அம்மா சத்தியா மீது என்னால் கோபிக்க முடியவில்லை. அதற்கு மனமும் வரவில்லை. சத்தியாவை இலக்கியவாதி , சமூகத்துச்சாக்கடைகளை அழிக்கும் வலுவுள்ள சக்திமிக்க எழுத்துகள் அவளது என்றெல்லாம் புலம்பும் இலக்கிய கர்த்தாக்கள் மீதுதான் எனக்குக் கோபம்.

சாதியிரண்டே வேறல்ல…..பெண்ணியம் சாதிய ஒடுக்குமுறை பற்றியெல்லாம் சத்தியா எழுதிய எழுத்துக்களே இந்த சமுதாயத்திலிருக்கும் சாதிய அடக்குமுறைகளைச் சிதைக்கிறது எனப்புகழாரம் சூட்டி அவளையும் அவளது சொல்லொன்றும் செயல் வேறொன்றுமான இரட்டை வாழ்வையும் ஏன் இவர்களெல்லாம் பார்க்க மறுக்கின்றார்கள்….? அதெல்லாம் அவர்களது சொந்த வாழ்வு அதிலெல்லாம் யாரும் தலையிடக்கூடாது அல்லது அதையெல்லாம் பார்க்கக்கூடாதாம்…..! ஆனால் பெரிய எழுத்தாளர்கள் என்பவர்களிடமிருக்கின்ற சாதீயத்திமிரையும் அவர்களிடமிருக்கின்ற பிற்போக்குத் தனங்களையும் போலி நடிப்பையும் யாரும் பார்க்க மறுப்பதுதான் வேடிக்கையான விந்தையோ எண்ணிக்கொண்டேன்.

“இப்படியிரு என்று ஓருவருக்கு உபதேசம் செய்யும் நான் முதலில் சொல்லின்படி வாழ்ந்தல்லவா காட்டவேண்டும்….அப்படி முடியாவிட்டால் மற்றவருக்காக மற்றவரின் உயர்வுக்காக நல்லிலக்கியமோ சமூகமாற்றத்தையோ படைக்கமுடியாது.”

அன்றொருநாள் எனது பால்யசினேகிதி சுரேக்கா மானிப்பாய் மகளீர் கல்லூரியைவிட்டு சாதி அடிப்படையில் ஒதுக்கப்பட்ட போது இறுதியாக எனக்கு எழுதிவிட்டுப் போன கடிதம்தான் அக்கணம் என் கண்ணில் நிழலாடியது. இன்னும் இவர்கள் மாறவேயில்லை. யாரோ ஒருகவிஞன் எழுதியபடி யாழ்ப்பாணத்துக் கிடுகுவேலிகளை அப்படியே பெயர்த்து வந்து ஐரோப்பா அமெரிக்கா எங்கும் நட்டுவைத்துள்ளோம் என்பதே உண்மை.

மகள்…மகள்….எழும்புங்கோ…..எழும்பி முகத்தைக் கழுவுங்கோ…..புத்தகமும் கடவுள்தானே…..! மற்றவையள் எதோ சொல்லினமெண்டதுக்காக நீங்க அப்பிடிச்செய்தது சரியில்லை….அம்மா அதுதானடிச்சனான்…..அவளை ஆதரவாய் அணைத்தபடி அருகிருந்து அழைத்தேன். போங்கோ நீங்க நானுங்களோட கோவம்….மறுபக்கம் திரும்பியபடி விம்மினாள் அவள்.

18 வயதான அவள் 3வயதில் புலம்பெயர்ந்து வந்துவிட்டாள். ஆனால் இந்த சாதிபற்றியெல்லாம் புரியவில்லை. அதையெல்லாம் நான் அவளுக்குப் போதித்ததும் இல்லை. அப்படியிருக்கும் அவளுக்கு ஊரில் நாம் இந்தச்சாதியில் பிறந்தோம்…. புலம்பெயர்ந்த பின்னாலும் நாங்கள் அப்படியேதான் அழைக்கப்படுகிறோமென்றெல்லாம் என்னால் அவளுக்கு விளக்கங்கொடுக்க முடியவில்லை. அவள் அறியாமல் என் இதயம் உடைந்து நொருங்கிப்போனது.

இவள் போல் எத்தனையோ இளையவர்கள் இன்னும் இந்தப்புலம் பெயர்நாடுகளில் சாதிபிரித்து அழைக்கப்படுவதும் அதுவே குழுச்சண்டையாளர்கள் பலர் வளர வித்திட்டது என்பதையும் இந்த எழுத்தாளர்களோ சாதித்திமிர் பிடித்த அதிமேதாவிகளோ அறியாது……இல்லையில்லை அறியாதது போலிருந்து கொண்டு உபதேசம் பண்ணுவதுதான் நிசம் என்பதாகியுள்ளது. இதையெல்லாம் ஆரிட்டைச் சொல்லியழ……

ஒருவாறு சமாதானப்படுத்தி அவளைத் தூங்கவைத்து……அவள் தூங்கி நெடுநேரமாயிற்று. என்னோடுதான் இரவு முரண்டு பிடித்துக்கொண்டிருந்தது. புலம்பெயர்ந்து ஊரில்கூட எத்தனையோ மாற்றங்கள்….ஆனால் இங்கு இன்னும் அந்தக்காலக் குணங்களையெல்லாம் பொத்திப்பிடித்துக்கொண்டு…..

சுரேக்காதான் என் கண்களுக்குள் வந்து போனாள். பள்ளிப்பருவகாலம்…..அதுவொரு இனியகாலம். ஆனால் சுரேக்காவுக்கோ எனக்கோ அது சோதனைக்காலமாக…..அஞ்சி நடுங்கிய காலமாக…..எங்கள் இதயங்களைக் கீறிக்கிழறி ரணங்களைத் தந்த காலங்களாக…..அழுவதையே அதிகம் தந்த கொடிய நாட்களாக…..இன்னும் எத்தனையோ…..என் இதயத்துள் ஒரு எரிமலை குமுறிய காலமது.

சாதியின் பெயரால் ஒதுக்கப்பட்ட அந்தக்கிராமத்துக்குள்ளிருந்து பொய்சொல்லி உயர்கல்விக்காக மானிப்பாய் மகளீர் கல்லூரியில் நான் போய்ச்சேர்ந்து விடுகிறேன். அங்குதான் சுரேக்கா எனக்கு அறிமுகமாகிறாள். என்னைப்போல் அவளும் ஒதுக்கப்பட்ட இனத்தின் தாயொருத்திக்கும் தந்தைக்கும் தனியொரு பிள்ளையாகப் பிறந்தவள். ஏனோ அவளை சகமாணவிகள் சேர்த்துக்கொள்வதில்லை. ஒருநாள் அதைக்கேட்ட போது அவள் சொன்ன பதில் என்னையும் பயமுறுத்தியது. வகுப்பில் எடுப்பாகவும் பணக்காரவீட்டுப்பிள்ளை என்கின்ற கர்வத்துடனும் தன்னை முந்த யாருமில்லை என்ற கனவில் இருந்த வனிதா என்கின்ற சகமாணவிக்கு சுரேக்காவின் அடிமுடிகள் தெரிந்திருந்தது. அதைச்சொல்லியே அவள் இவளை இவளது திறமையை இவளது ஆற்றலை எல்லாம் அடக்கி வைத்திருப்பதைச் சொன்னாள் சுரேக்கா.

பின்னொருநாள் தன்னை பாடசாலையால் நிறுத்திவிட்டார்களென அழுதபடி வந்து சொன்னாள் சுரேக்கா. நான் என்ர சாதியை மறைச்சு இஞ்சை சேந்தது குற்றமெண்டு நிப்பாட்டீட்டினம்….எனக்கும்தான் அந்தப்பயம் இருந்தது. நானும் ஒருநாள் இவள்போல் துரத்தப்படலாம் என்ற அச்சத்துடனேயே எனது உயர்கல்விப்படிப்புத் தொடர்ந்தது.

சுரேக்காவின் வெளியேற்றத்தின் பின்னொரு மதியம் உயிரியல் ஆசிரியர் என்னைத் தனியாக வரச்சொல்லி ஆளனுப்பியிருந்தா. என் உயிர் பிரிந்து விடுமோவெனுமளவிற்கு பயத்தால் விறைத்துப்போனேன். அவவுக்கு நான் யாரென்பது தெரியும். அதை அவர் போட்டுடைக்கப் போகிறாரோ என அஞ்சியபடி அவவிடம் போனேன். வணக்கம் ரீச்சர்….வணக்கம்…இதிலை இரும்….இல்லை…..வரச்சொன்னியளாம்…..ம்….சுரேக்காவுக்கு நடந்தது தெரியும்தானே….நான் அமைதியாய் அவவைப் பார்த்தேன். கவனமாயிரும் எந்தச்சந்தர்ப்பத்திலயும் உம்மைக்காட்டிக் குடுத்திடாதையும்…. நான் காட்டிக்குடுக்கமாட்டன்…..இந்தத்திமிர் பிடிச்சவைக்கு முன்னாலை நீர் நிமிர்ந்து காட்டவேணும்….உங்கடை சமூகத்துக்கு நீயொரு எடுத்துக்காட்டா வந்து காட்டவேணும்…..அதிபர் வாறா சரி நீர் போம் வகுப்புக்கு….

என்னால் தொடர்ந்து எதிலும் கவனத்தைச் செலுத்த முடியவில்லை. உயிரியல் ஆசிரியரின் வார்த்தைகள் என் சிந்தனை முழுவதையும் கவர்ந்து வைத்திருந்தது. எனக்குள் மூண்டிருந்த எரிமலையை அணையாது மூட்டிக் கொண்டேயிருந்தது உயிரியல் ஆசிரியரின் வார்த்தைகளே.

சாதியை நிலைநாட்டிய அந்தப்பாடசாலையில் உயர்கல்வியை நான் கற்று முடித்தது என்னவர்களால் மட்டுமல்ல அந்தப்பாடசாலையின் உயர்ந்தவர்கள் தாமெனமாரடிக்கும் மேதாவிகளுக்கும் தான் ஆச்சரியம். அந்தக்காலம் இன்று போல் விழிப்புணர்வோ விடுபடுதல் எண்ணமோ அற்றிருந்தவர் காலம் அதற்குள்ளிருந்து எழுந்த என்னால் இக் காலத்தாருடன் இன்று தாழ்த்தப்பட்டோருக்கான குரல்களென இப்புலம்பெயர் நாடுகளில் போற்றப்படுகின்றவர்கள் நடுவில் நிற்கவே பிடிக்கவில்லை. ஒதுங்கியே இரு என்கிறது ஆன்மா. பொய்களையே எழுத்தாக்கி , போலிகளாய் வாழ்வு நடாத்தி , பெரியவர்களாய்த் தம்மை இனங்காட்டி இன்னும் எம்மில் ரணங்களைக்கொட்டி வேடம் போடும் வேடதாரிகளையே முன்னிலைப்படுத்தும் முதலைகளின் முன்னின்று எழுத என் கைகளுக்கும் மனசுக்கும் பிரியமில்லை.

சத்தியாவின் தொலைபேசியிலக்கங்களை அழுத்தி றசீவரைக்காதில் வைத்தேன். கலோ சத்தியா. வணக்கம் சத்தியா நான் திலகா. என்ன இந்த நேரத்தில….சத்தியா ஏனிப்பிடிச் செய்றீங்கள்….? ஒரு எழுத்தாளரா சமூக சிந்தனையுள்ள பெண்ணெண்ட போரோடையிருக்கிற உங்களுக்குள்ள இப்பிடியான சின்னத்தனமான சிந்தனையா….? இது உங்கட காலமோ என்ர காலமோ இல்ல….எங்கடை பிள்ளையள்ட காலம்…..ஏனின்னும் சாதிசொல்லி மதம்சொல்லி…. குழந்தையளின்ரை மனதிலயும் நஞ்சை விதைப்பான்…..? என் கேள்விகளுக்கு அவள் தந்த பதில்…..திலகா நாங்கள் ஊரிலை நல்ல சாதியிலை பிறந்து வசதியா வாழ்ந்த ஆக்கள். உம்மைப்போல பனையோலைக் கொட்டிலுக்கை பிறந்து கஞ்சிக்கு வாசல்வாசலா அலையேல்ல…..எல்லாம் எழுதலாம் பேசலாம் ஆனால் எங்கடை சாதியை கவுரவத்தை விட்டுக்குடுக்கேலாது. அதற்குள் றிசீவர் சத்தியாவின் கணவன் சுகுமாரிடம் மாறுகிறது. ஒழுங்காப் பிள்ளையை வளவுங்கோ வெட்டுக்குத்தெண்டு எங்களை வெளிக்கிட வைக்காதையுங்கோ….தொடர்ந்து அவர்களிடம் வாதிடும் வல்லமை எனக்கில்லை. தொடர்பை நானே துண்டித்துக்கொள்கிறேன்.

மாற்றங்கள் என்பது படிப்படியாய் நிகழவேண்டியது இன்றோ மாற்றங்களை ஏற்படுத்துகிறோம் என அதிரடியான வசனங்கள் பேசியும் எழுதியும் புரட்சிசெய்வோம் என்பவர்களாலேயே பல மனங்கள் மரணிக்க வைக்கப்படுகின்றன. இதை எந்த எழுத்தாணியிடம் போய்ச்சொல்வது….? என்னால் தூங்க முடியவில்லை. நித்திரை எங்கோ ஓடி ஒழிந்துவிட்டது. மேசைவிளக்கு மட்டும் அழுது கொண்டிருந்தது. இரவு எனக்குள் இருண்டே கிடந்தது.

அந்தக்கலைவிழாவிற்கு கட்டாயமாகப்போயாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் போயிருந்தேன். நிகழ்ச்சிகள் ஆரவாரமாக நிகழ்ந்து கொண்டிருந்தது. அருகிருந்த என் மகளின் பார்வைகள் நிகழ்ச்சி மேடையைவிட்டு அகன்றதை கவனிக்காதது போல்இருந்த நான் பின்திரும்பினேன். எமக்குப்பின் இருக்கையிலிருந்த அந்த இளைஞன் என்னைப்பார்த்திருப்பதை அப்போதுதான் கவனித்தேன். அவனுக்காக ஒருபுன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டுத் திரும்பினேன்.

அது இடைவேளை நேரம். நான் சற்று ஆறுதலாக தனித்திருக்க வேளைகிடைத்தது. அடுத்த நிகழ்வாக சுகுமாரின் எழுத்துருவாக்கத்திலான நாடகம் வரப்போவதாக ஒலிவாங்கி அறிவித்தது. அதற்குமுன் 15நிமிட இடைவேளையெனவும் அந்த அறிவிப்பு வந்தது. கதிரைகளிலிருந்து மனிதர்கள் எழுந்து கூடிக்கதைப்போரும் சிற்றூண்டி உண்போருமாக மண்டபம் சலசலத்துக் கொண்டிருந்தது.

பின்னிருக்கையிலிருந்த அந்த இளைஞன் என்பக்கமாகக் கதிரையைத் திருப்பியிருந்து அக்கா உங்களோடை கதைக்க வேணும். உங்கடை கதையள், கவிதையள் நிறையப்படிச்சிருக்கிறன். பேப்பர் வந்தவுடனும் உங்கடை பேர் இருக்கோண்டு பாத்திட்டு அதைவாசிச்சிட்டுத்தானக்கா பிறகு மற்றதுகளை வாசிப்பன். கனநிகழ்ச்சியளிலை உங்களைக் கண்டிருக்கிறன் ஆனா இண்டைக்குத்தான் உங்களோடை கதைக்கக்கூடியமாதிரி இடம் கிடைச்சிருக்கு. அவன்தான் கதையைத் தொடக்கினான்.

அப்பிடியா நன்றி. எங்கடை எழுத்துக்களை வாசிக்கிறதைவிட இந்திய எழுத்துக்களை வாசிக்கிறதிலைதான் எங்கடை மக்கள் அதிகம் நாட்டம் ஆனா நீங்கள் ஈழத்து எழுத்துக்களை வாசிக்கிறீங்கள். வாசிப்போடை மட்டும் நிக்காம நல்ல விமர்சனங்களையும் எழுதுங்கோ அதுதான் எங்களை இன்னும் வளப்படுத்தும். விமர்சனமெண்டதும் ஆகா ஓகோ எண்டு புகழ்ந்து தள்ளாம குறைநிறை ரண்டையும் எழுதுங்கோ. ஓமக்கா கட்டாயமா எழுதுவன். என்ரை அக்காவும் உங்கடை கதையளெண்டா விரும்பிப்படிக்கிறவ. இந்தா இவதான் தன்முன்னிருந்த இருக்கையிலிருந்த அந்தப்பெண்ணையும் எனக்கு அவன் அறிமுகம் செய்து வைத்தான்.

அதுவரை சிரித்தபடி கதைத்தவன் விழிகள் அழுவதற்கு ஆயத்தமான அந்தக்கணங்களை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. என்னருகிருந்த என்மகள் சற்றுத்தூரம் தள்ளியிருக்க எத்தனித்தாள் அவளையும் அவனது கதையைக்கேட்கும்படி என் அருகிலேயே இருத்தினேன். பாதிமனத்துடன் அவளிருந்தாள். இவனுக்கு நாங்க முதலே சொன்னனாங்கள் ஆனா இவர்தான் அவையை நம்பினவர். இப்ப கலியாணமெண்டா வேண்டாமாமெண்டு நிக்கிறார் என்றாள் அவனது அக்கா.

நான் சத்தியா அன்ரிடை மகளைக்காதலிச்சனானக்கா…. அந்தப்பிள்ளையும் என்னை விரும்பினது. அப்ப அவளுக்குப் 16வயது. எங்கடை அப்பப்பாக்கள் ஊரிலை கட்டாடியளாம். அதாலை இவையள் எங்களைச்சாதி குறைவெண்டு செய்து தரமாட்டமெண்டாப்போலை அவளென்னோடை வந்திட்டாள். ஒருகிழமை என்ரைவீட்டிலைதான் என்னோடை இருந்தவள். பிறகு தகப்பனும் தாயுமா வந்து இப்ப அவள் படிக்கட்டும் பிறகு செய்துதாறமெண்டு கூட்டிக்கொண்டு போனவை. நானும் நம்பினனான். பிறகு அவளைக்காணேல்ல. கேக்கச்சொல்லிச்சினம் லண்டனிலை படிக்கிறாள் படிப்பு முடிய செய்து தாறமெண்டு. அதுவரையும் எந்தத்தொடர்பும் வைச்சிருக்கக்கூடாதெண்டினை…. நானும் 4வருசமா நம்பியிருக்க போனவரியம் அறிஞ்சன் லண்டனிலைபிறந்து வளந்த ஒரு கொம்பியூட்டர் இஞ்சினியருக்கும் அவளுக்கும் கலியாணம் முற்றாகீட்டுதாம். அவளும் மாறீட்டாளக்கா…..

ஏனப்பிடி நினைக்கிறியள் அம்மா அப்பான்ரை வற்புறுத்தலுக்குப்பயந்து அந்தப்பிள்ளை அவையள் சொல்ற மாப்பிளையைக்கட்டச் சம்மதிச்சிருக்கும். எனது பக்கத்து நியாயத்தை அவனுக்குச் சொன்னேன். சரி அந்தக்கதை முடிஞ்சிட்டுது இனி உங்கடை அம்மா அப்பா அக்கா சொல்றமாதிரி அவேன்ரை விருப்பப்படி செய்யலாம்தானே….. அவன் தலையைக் கவிழ்த்துக்கொண்டிருந்தான். என் மகளைப்பார்த்தேன் அவள் மௌனமாயிருந்தாள்.

அடுத்த நிகழ்ச்சி ஆரம்பமாக இன்னும் சிலவினாடிகள் இருக்கின்றன. அனைவரும் உங்கள் ஆசனங்களில் அமரும்படி தாழ்மையுடன் வேண்டுகிறோம். ஒலிவாங்கியிருந்து ஒலித்தது அக்குரல். அக்கா இந்தக்கதையையும் எழுதுங்கோக்கா. எழுதிறதொண்டும் வாழ்றதொண்டுமான உப்பிடியானவேன்ரை முகத்திரையளைக் கிளியுங்கோக்கா…..தன் இருக்கையை நேராக்கிக்கொண்டு திரும்பினான் அவன். உங்கடை ரெலிபோன் நம்பர் தருவீங்களோ…..? கேட்டாள் அவன் அக்கா. என் தொலைபேசியிலக்கம் முகவரிகளை அவளுக்கு எழுதிக்கொடுத்துவிட்டு நிகழ்ச்சியில் என் கவனம் திரும்புகிறது.

அடுத்த வாரம் சனிக்கிழமை மாலைநேரமது என்னுடன் குசினிக்குள் சமையலில் உதவிக்கொண்டிருந்த அவளிடம் சொன்னேன். நேற்றுக் கேட்டனீங்களெல்லோ அந்தத்தம்பி சொன்னதுகளை…..காதல் வாழ்க்கையிலை ஒருபகுதிதானம்மா. அதுவே வாழ்க்கையில்ல…..எல்லாம் ஒரு அனுபவம்தான்….நாங்கள் சாதிக்கிறதுக்கு நிறைய இருக்கு…..அதைச்செய்வம் முதலிலை….பிறகு ஓருகாலம் இதுகளையெல்லாம் ஓய்வாயிருந்து சிந்திக்கேக்கை தெரியும் நாங்கள் எவ்வளவத்தை இழந்திட்டமெண்றது…..இந்த நினைவுகளெல்லாம் உங்களை கனக்கச் சாதிக்கச் சொல்லித் தூண்டுறதா நினையுங்கோ உங்களுக்காக அம்மா , அப்பா , அண்ணா எல்லாரும் இருக்கிறம்…..அவள் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். ஏதோ ஒரு மாற்றம் அவளில் வந்துவிட்டதாக அவளது பார்வை சொல்லிற்று. அவள் எழுந்து போய் தொலைக்காட்சி முன்னிருந்தாள்.

யன்னலைத் திறந்து வெளியே என் பார்வைகள் சிதறுகிறது. வளமையைவிட இன்று ஏதோ குளைந்தபடி என்னை வளையவந்த கீர்த்தனைக் கேட்டேன். என்ன விசயம்…..? ம்…..அம்மா….இந்தப்படத்தைப்பாருங்கோம்மா தன் கையிலிருந்த என்வலப்பைத் தந்தான். அந்தப்புகைப்படத்தில் கீர்த்தனின் கெயெழுத்தில்…….

“என் கனவைப்பறித்து

கற்பனைச் சிறகுகட்டி

வானுக்கும் பூமிக்குமாய்

என்னைப் பறக்க வைத்த

தேவதையே யாரடி நீ…..????”

யார்ரா இது…..? இந்தப்பிள்ளைய நான் விரும்பிறனம்மா….தலையைக் குனிந்தான் கீர்த்தன். அவேன்ரை வீட்டிலை எல்லாருக்கும் விருப்பம் …..அப்பாவும் ஓமெண்டிட்டாரம்மா…..அவன் விழிகளை ஊடுருவியது என் விழிகள். யோசிக்காதையுங்கோம்மா உங்கடை ஆசைப்படி நீங்க பிறந்த நான் பிறந்த என்ரை ஊருக்கு வாசிகசாலையும் , மருத்துவமனையொண்டும் கட்டீட்டுதானம்மா மற்றதெல்லாம்…..கவிதாவும் உதவிசெய்யிறதாச் சொல்லியிருக்கிறாள். என் பார்வையில் என்னைப்புரிந்து கொண்ட கீர்த்தன் சொன்ன வார்த்தைகள் என் கனவுகள் நிறைந்துவிட்டதான உணர்வைத் தந்தது. நான் சிரித்தேன். அவனும் கூடச்சிரித்தான்.

அம்மாக்கு ரெலிபோனாம்…..மகள் அழைத்தாள். அக்கா நான் வாகீசன் கதைக்கிறன். எனக்கு அடுத்த மாதம் கலியாணம். அப்பான்ரை தங்கச்சீன்ரை மகள்.நீங்களும் வரவேணும். அழைப்பிதழ் அனுப்பினனான் இண்டைக்கு. என்ரை கதையை எழுதேக்கை இந்தக்கலியாணத்தையும் சேத்தெழுதுங்கோ…..என்ன….

அன்றொருநாள் அந்தக்கலை விழாவொன்றில் சந்தித்து தன்நிறைவேறாத காதலைச்சொல்லி விழி கலங்கியவன். இன்று எப்படி மாறிப்போனான்…..! ஆச்சரியமாய்த்தானிருந்தது. ஆனால் அவனது மாற்றம் எனக்கும் மகிழ்வாக மனநிறைவாக இருந்தது. ஏதாவதொரு நன்மைக்காக வாழ்வை இழக்கலாம் உயிரையும் அழிக்கலாம். காதலுக்காக அதுவும் இன்னொருவரோடு தன் வாழ்வைப்பகிர்ந்து விட்டவருக்காக இனிதான இவ்வாழ்வை இழப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அழுவதற்கில்லை வாழ்வு. வாழ்வதற்கே அவனுக்கு ஒருதரம் சொல்ல வேண்டும்போலிருந்தது.

மறக்காம என்ரை கதையை எழுதி என்ரை திருமணப்பரிசாத் தரவேணுமென்ன. என்ரை வருங்காலத்துணைவிக்கு என்ர பரிசா உங்கடை கதையைத்தான் குடுக்கிறது என்றான். சரி தாறன். சரியக்கா இந்தாங்கோ அக்கா கதைக்கப்போறாவாம். தொலைபேசி அவன் அக்கா கைமாறியது. அவனது திருமணம் அந்தக்குடும்பத்தை சந்தோசப்படுத்தியிருப்பதை அவளது உரையாடல் தெரிவித்தது.

சத்தியாவின் சத்தியாவின் கணவன் சுகுமாரின் எழுத்துக்களும், அவர்களின் இதர கலைவடிவங்களும் தாழ்ந்து சாய்வதாய் உணர்கிறேன். இன்னும் இக்கலையுலகில் உண்மையான கலைஞர்களும் கலைவிரும்பிகளும் இருக்கிறார்கள் என்பதை வாகீசனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சொல்லிக்கொண்டிருந்தது. என்னுள்ளும் உறுதி பிறக்கிறது. சத்தியா சுகுமார் போன்ற போலிகளின் மாயத்திரைகள் கிழிபட என் பேனா உறுதியெடுத்துக்கொண்டு வாகீசனின் கரைந்த காதலை “கண்ணீரில் கரைந்த காதல்” எனும் தலைப்பிட்டு எழுத ஆரம்பிக்கிறேன்.

– 09.08.03

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *