அழுகுரல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 2, 2017
பார்வையிட்டோர்: 8,203 
 

அடுத்த அறையிலிருந்து குழந்தையின் அழுகுரல், விசுக்கென்று கையைபிடித்து இழுத்ததுபோலவிருந்தது. செங்குத்தான பாதையில் பயணித்து, சட்டென்று வழுக்கி பள்ளத்தாக்கில் விழுந்ததுபோல குரல் விசும்பலும் தேம்பலுமாக நொண்டியபொழுது, புரிதல் ஒரு செம்மறி கிடாவென நெஞ்சை முட்ட பதட்டத்துடன் விழித்தேன். சுற்றிலும் ஆழ்கிணற்றின் நீர்போல இரவு உறைந்துக் கிடந்தது. கண்கள் தங்கள் இயல்புக்கு வந்ததன் அடையாளமாக இருள் பூசிய சுவர்; நாற்காலி, மேசையும் அதில் இறைந்துகிடந்த புத்தகங்களும் பிறவும் மெல்ல மெல்ல பார்வையை நிரப்புகின்றன. இழுத்து மூடப்படாத சன்னல் திரையின் நெளிவுகளில் விழுந்து கட்டிலில் தெறித்த நிலவொளி கொஞ்சம் தரை, கொஞ்சம் சுவரென சிந்திக்கிடந்தது. நிசப்தத்தின் அவ்வளவு குரல்களையும் முந்திக்கொண்டு குழந்தையின் அழுகுரலில் இரவின் சுதியாகவும் தாளம்போலவும் வழமையாக ஒலிக்கிற மனவியின் குறட்டையும் சுவர்க்கடிகாரத்தின் இயக்கமும் தமது முக்கியத்துவத்தை இழந்திருந்தன.

ஒருவாரமாக தொடரும் அனுபவம். குழந்தையின் அழுகைக் கேட்டுப் பழகியதென்றாலும் அடர்த்தியான இரவுதோப்பில் ஒற்றையாக அழுகுரலை கேட்கிறபோது இதய துடிப்பு அதிகரிக்கிறது, மூச்சை அடைக்கிறது, அறையின் குளுமை வெப்பமாக உடலைக் கவ்வுகிறது. உறக்கத்தை தொடரமுடியாத எரிச்சலில் கண்கள். மிச்சமிருந்த உறக்கத்தின் சுமையை இறக்கிவைக்க கண் இரப்பைகள் தோளை உயர்த்தின. மூடிய அறைக்கதவிற்கும் தரைக்குமான இடைவெளியை எதிர் அறையிலிருந்த வந்த மின்சார ஒளி நிரப்புகிறது. இரு கைகளையும் தலைக்குப் பின்புறம் கொண்டுசென்று கைவிரல்களை பிணைத்து நெட்டைமுறித்து, போர்வையை விலக்கி வலது காலை தரையில்வைத்து கட்டிலைவிட்டு இறங்கினேன். மின்சாரவிளக்கைப் போடவேண்டுமென்ற அவசியங்களில்லை. கண்களிரண்டும் மென்மையான இருளுக்குப் பழகிக்கொண்டிருந்தன. தலைகீழாக உள்வாங்கப்படும் நிழல்பிம்பங்களை நேராக நிறுத்தி அடையாளப்படுத்த பார்வைக்கு முடிந்தது. இறங்கி கதவை நோக்கி நடந்தேன்.

தனக்காக அழும் எந்தக்குரலையும் வெறுக்கும் மனநிலைக்கு வந்திருந்தேன். அதில் யாசிக்கும் மனோபாவம் இருக்கிறதென்பது காரணம். அதற்காக மற்றவர்களுக்காக அழுகிறவன் என்பதெல்லாமில்லை. அழுது மட்டுமே தனது தேவையை பூர்த்திசெய்துகொள்ளவேண்டிய கட்டாயத்திலிருந்த குழந்தையின் பின்னிரவு அழுகை ஓர் அதிர்வாக என்னுள் இறங்ககாரணமென்ன என்பதை கடந்த ஒரு கிழமையாக பால்கணியின் நின்று மௌனத்தில் ஆழ்ந்திருக்கிற மரங்களைப் பார்க்கிறபோதும், உரக்கமற்ற முன்னிரவுகளிலும், குளித்து முடித்து துவட்டிக்கொள்ளும்போதும் யோசிக்கிறேன். பதில்களின் இருப்பு அடிவானம்போல காட்சிக்குக் கிடைத்தது. அருகாமையில் இருப்பதுபோல தோற்றம் தரினும் நெருங்க நெருங்க விலகிச் செல்கிறது. அழுகையை ஊரில் பெய்யும் மழையோடு ஒப்பிட்டிருந்த கவிஞன் போல் வெர்லன் நினைவுக்கு வந்தான். குழந்தையின் அழுகுரல் மழையா சாரலா?

எங்கள் அறைக்கு எதிர்பக்கத்தில்தான் மாப்பிள்ளையும் மகளும் அவள் குழந்தையும் இருக்கிறார்கள். ஏற்கனவே நான்கு முறை குழந்தை அழுதிருக்கிறான். அப்போதெல்லாம் திடுக்கிட்டு எழுந்திருப்பதும், குரல் ஓயும் வரை அமைதியின்றி உட்கார்ந்திருப்பதும், சிற்சில நேரங்களில் எழுந்து இரு சுவர்களுக்கான இடைவெளிகளை தன்னிசையாக அளப்பதுமென்று கழிந்திருக்கிறது. அழுகையைத் தொடர்ந்து அவ்வழுகைக்கான காரணத்திற்கேற்ற காரியங்களை அவனைப்பெற்றவள் செய்கிறாள். கைகால்களை உதைத்து, கண்களை சுருக்கி, நெற்றி தசைகள் நெளிய அழுகிறபோது திறந்திருக்கும் குழந்தையின் வாயைப்பார்க்க சூல்தண்டுதெரிய இதழ்விரித்த பூப்போல இருப்பான். அண்மை தொடும் மனிதர் நடமாட்டத்தையும், சமாதான வார்த்தைகளின் தராதரமறிந்தும் குழந்தையின் குரல் குறையவோ கூடவோ செய்யும். அர்ச்சகர் தரும் புஷ்பங்களை கைகளில் வாங்கிக்கொள்வதுபோல குழந்தையை எனது மனைவியும் மகளும் கையாளுவார்கள். குழந்தையின் இமைமயிர் முனைகளில் கோர்த்திருக்கும் ஒன்றிரண்டு கண்ணீர் துளிகள் அப்புஷ்பங்களில் சொட்டும் தீர்த்தம்போல.

ஊரிலிருந்த வந்த முதல் நாள் இப்படித்தான் பின்னிரவில் திடீரென்று குழந்தை வீறிட்டு அழுதது. பதறிக்கொண்டு கண்விழித்தேன். எழுந்தவன் மின்சாரவிளக்கைப்போட்டுவிட்டு அடுத்த அறைக்கதவைத் தட்டி மகளை எழுப்பலாமா? என்று யோசித்தேன். நள்ளிரவில் எதற்காக அழுகிறான்? பசியாக இருக்கலாமா? குழந்தை அடிக்கடி பாலெடுக்கிறான், ஒழுங்காய் பாலைக்குடிப்பதில்லையென்று மகள் கூறியிருந்தாள். ஒரு முறை இந்திய ரயிலில் பயணித்த பொழுது இரவு முழுக்க குழந்தையொன்று வீறிட்டு அழுததும், பயணத்தொடக்கத்தில் குழந்தையை எடுத்துக்கொஞ்சிய நானே பின்னர் எரிச்சலுற்றதும் நினைவுக்கு வந்தது. மனித இயல்புப்படி அவ்வாறான மனப்பிடுங்கல்கள் இப்போதில்லை. ஒரு குழந்தை அழ ஆயிரத்தெட்டு காரணங்கள், நாம்தான் ஊகித்தறியவேண்டும்: பசியாக இருக்கலாம், அறையில் நிலவும் வெப்பம் அல்லது குளிர் காரணமாக இருக்கலாம், டையப்ப்பர் மாற்ற வேண்டியதாக இருக்கலாம் அல்லது ‘இத்தனைபேர் என்னைச் சுற்றி நிற்கிறீர்களே? என்னைத் தூக்கக்கூடாதா? என்பதுகூட காரணமாக இருக்கலாம். உடல்நலத்தில் பிரச்சினையா? கிரைப் வாட்டர் கைவசமிருக்குமா? பிரான்சுநாட்டில் நேரங்காலம் பார்க்காது தவிர்க்கமுடியாத அவசரமெனில் வீட்டிற்கு மருத்துவர் வருவார் அமெரிக்காவில் எப்படி? நாம்தான் மருத்துவமனைக்கு போகவேண்டுமா? நிறைய எனக்குள் கேள்விகள். வழக்கம்போல பதில்களின்றி மேலும் மேலும் கேள்விகளின் எண்ணிக்கையை மனதிற் பெருக்கிக்கொண்டிருந்தேன். எல்லா கேள்விகளுக்கும் எப்போதும் ஏதேனும் ஒரு பதிலை தயாராக வைத்திருக்கும் என் மனைவி அமைதியாக உறங்கிகொண்டிருக்கிறாள். அவளுடைய நிம்மதியான உறக்கம் என்னை எரிச்சலடைய செய்தது.

– ஏம்மா.. குழந்தை அழறானே?

– –

– உன்னைத்தான். ச்சே இப்படியா தூங்கறது. குழந்தை அழறான். என்னண்ணு போய்ப் பாரு?

– கொஞ்சம் மெதுவாப் பேசுங்க. எல்லோரையும் எழுப்பிடுவீங்க போலவிருக்கு.

– எழுந்திருக்கட்டும். குழந்தை இப்படி அழவிட்டு உங்களுக்கு என்ன அப்படித்தூக்கம் வேண்டிகிடக்குது.

– சும்மா படுங்க, பெற்றவங்களுக்குத் தெரியும் குழந்தையோட அருமை. நாள்பூரா ஏதோ நீங்கதான் குழந்தையை சுமக்கிறமாதிரி..

– ச்சே.. என்று சலுத்துக்கொண்டேன்.. எத்தனை நேரம் கட்டிலில் உட்கார்ந்திருந்தேனோ நினைவில்லை. எதிர் அறையில் மின்சாரவிளக்கின் ஒளியும், தொடர்ந்து மகளின் நடமாட்டமும் குழந்தையை சமாதானப்படுத்தும் அவள் குரலையும் கேட்ட பின்பு படுத்திருப்பேனென நினைக்கிறேன்.

இன்றும் மனைவியை எழுப்பினால் என்ன பதில் வருமெனதெரியும். எழுந்துசென்று எதிர் அறை கதவைத் தட்டலாமா என நினைத்து நெருங்கியபொழுது, வெளிச்சம் தெரிந்தது. மாப்பிள்ளையும் பெண்ணும் பேசிக்கொள்வதும் கேட்டன. கதவிடுக்கு ஒளியில் நிழல்கள் வந்துபோகின்றன.

ஒன்றிரண்டு நொடிகள் தயங்கிய பிறகு கதவைத் தட்டினேன்.

கதவு திறந்தது. எதிரே மகள். பால் மாவைக் கலப்பதற்காக மேசைமீது பாட்டில்-வார்மரில் தண்ணீர் சுட்டுக்கொண்டிருந்தது.

– என்னப்பா?

– குழந்தை வெகுநேரம் அழுதிருப்பான் போலிருக்கிறதே?

– இருக்காதே! உடனே எழுந்துட்டேனே.

– அம்மாவை வேண்டுமானா எழுப்பட்டுமா.

– வேண்டாம்பா நான் பார்த்துப்பேன். அம்மா தூங்கட்டும். பகலெல்லாம் அவங்கதானே பார்த்துக்கிறாங்க. இராத்திரியிலே நான்கைந்து தடவை எழுந்திருக்கவேண்டியிருந்தது. அதனாலே கொஞ்சம் அசந்து தூங்கிட்டிருக்கேன்.

– முகத்தைப் பார்த்தேன். கண்களைச் சுற்றி மையில்போட்டதுபோல வளையம், வெண்படலம் சிவந்திருந்தது. கண்களில் அரிப்பு இருக்கவேண்டும் புறங்கை ஆட்காட்டிவிரலை பூமொக்குபோல மடித்து ஒருமுறைக்கு இருமுறையாக வலது கண்ணைத் தேய்த்தாள். எனக்கும் நெஞ்சில் எவரோ பாரத்தை இறக்கியதுபோல இருந்தது. கண்களில் நீர்கோர்த்தது, அதைக்காட்டிக்கொள்ள மனமின்றி திரும்பினேன். எனக்குப் பின்புறம் கதவு மூடப்படும் சத்தம்.

விளக்கைப்போடாமல் தட்டுதடுமாறி நடந்தேன். அறைகளுக்கான நடைபாதை தரை விரிப்பில் பைய கால் புதைய நடந்து வரவேற்பறை சோபாவை நெருங்கி கால் நீட்டி உட்கார்ந்தேன். நெஞ்சத்தில் இதுவரை காணாத இறுக்கம். மூச்சுமுட்டியது. நீராவிபோல சுவாசத்தை உணர்ந்தேன். உடல்கொள்ள குளிர்காற்றை இட்டு நிரப்பவேண்டும்போலிருந்தது. வரபேற்பறையை பால்கணியுடன் பிரித்திருந்த தள்ளு கதவை உபயோகித்து பால்கணிக்கு வந்ததும் அங்கே நிரந்தரமாக விரித்திருந்த நிழற்குடையின் கீழ் போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தேன். எதிரே இருள்பிரியாத வெளியில் மனித வாழ்க்கையின் அத்தனை கூறுகளையும் படித்த இறுமாப்புடன் ஆனைக்கூட்டம்போல மரங்கள். தலைக்கெதிரே கட்டிடங்கள் தொடுவானத்தில் பசைபோட்டு ஒட்டப்பட்டதுபோல தெரிந்தன. எனது மனநிலைக்கு முரண்பட்டவைபோல மேகக்கூந்தலில் பிறை நிலா. மல்லிகைச்சரம்போல நட்சத்திரங்கள். இரவு பறவைகள் ஓய்வெடுத்திருக்கவேண்டும், இல்லையெனில் அப்படியொரு நிசப்த அனுபவத்தை காண நேர்ந்திருக்காது. நாள் அதிகாலையிலேயே விழித்துக்கொண்டதன் சாட்சியாக வாகனங்களின் ஓட்டம். ஆம்புலன்ஸ் ஒன்றின் சைரன் ஒலி, கொடிய வனவிலங்கிடமிருந்து தப்பியோடும் அப்பிராணிபோல அபயக்குரலெழுப்பிக்கொண்டு பாய்ச்சலிடுகிறது. ஆம்புலன்ஸைத் தொடர்ந்தும் அழுகை ஒரு கேவலாகவோ, விசும்பலாகவோ பின் தொடரக்கூடும். குழந்தையின் அழுகையில் சுயநலம்? குழந்தையை பெற்றவள் அதை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டாலும் எனக்குள் அடைபோல ஊமுட்கள். ட்விக் ட்விக்கென்று சத்தமிட்டுக்கொண்டு சடசடவென்று பறந்து அடர்ந்த மரக்கிளைகளுக்கிடையே இடம் தேடும் இரவு பட்சி. சட்டென்று எனது முதுகு மனிதர் சுவாசத்தின் வெப்பத்தை உணர்ந்தது. திரும்பினேன் -மனைவி.

– என்னது? எதற்காக பனியில் நிற்கறீங்க, தூக்கம் வரலையா?

– இல்லை. என்ன ஜென்மம் நீ? கண்ட கண்ட நேரத்திலெல்லாம் குழந்தை விழித்துக்கொண்டு அழறான். நீ என்னடான்னா தூக்கத்தையே காணாதவ மாதிரி தூங்கற.

ஒன்றிரண்டு நொடிகள் தலையை நேரிட்டு என்கண்களப் பார்த்தாள்:

– ம். உங்க கவலை எதைப் பத்தினது? உங்கப் பெண்ணும் குழந்தையாய் இருந்தப்போ இப்படி அர்த்தராத்திரியில் அழுதவள்தான், அப்போதெல்லாம் நீங்கள் இதுபோல விழித்துக்கொண்டதில்லை.

– ஜனவரி 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *