அளவுக்கு மீறினால்…

 

“ராகவா, எல்லாம் செஞ்சு மேஜை மேலே வைச்சுருக்கேன். கொட்டிக்கிட்டு ஊர்கோலம் போகச் சொல்லு”.

காபி குடித்துக் கொண்டிருந்த ராஜி, மாமியார் பாக்கியத்தின் குரல் கேட்டுத் திரும்பினாள். தினசரி கேட்கும் வார்த்தைகள் தான். புதிதாக ஒன்றுமில்லை.

பக்கத்தில் எதுவும் காதில் விழாதது போல் அமர்ந்திருந்தான் ராகவன். அவன் கண்கள் டீ.வியில் இருந்தன.

ஒரு வருடத்துக்கு முன்பு வரை இப்படியில்லை. ராகவனுக்கு திடீரென்று வேலை போனதும், ராஜி வேலைக்குப் போகத் தொடங்கினாள். சிறிய நிறுவனமாக இருந்தாலும், ஆறே மாதத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வு இரண்டுமே கிடைத்தன.

அப்போது ராஜிக்கு இருந்த மரியாதை, ராகவனுக்கு மீண்டும் வேலை கிடைத்ததும் பறி போனது. பாக்கியம் தூபம் போடவே, அடி மனத்தில் இருந்த சந்தேகம் விருட்சமாய் வளர்ந்து குடும்பத்தின் ஆணி வேரையே அசைத்துக் கொண்டிருந்தது.

வேலையை விட முடியாதபடி வாங்கியிருந்த புது வீடும் அதன் கடன் சுமையும் பயமுறுத்த, ராகவனால் ராஜியை வேலையை விடச் சொல்லவும் முடிய வில்லை. ராஜியைச் சந்தேகப்படாமல் இருக்கவும் முடியவில்லை.

“என்னவோ போ!, எனக்கு எதுவுமே சரிபடல……நீயும் தான் படிச்சிருக்க? உனக்கென்ன கிடைச்சுது?” என்று பாக்கியம் வேப்பிலை அடித்ததில், ராகவன் சின்னச்சின்ன விஷயத்துக்கெல்லாம் ராஜியைக் குத்திக் குதறி மகிழ்ந்தான்.

“என்ன மகாராணி, இந்த மாசம் எவ்வளவு இன்க்ரிமெண்ட்? பேசாம சுடிதார் போட்ட பெண்ணா பொறந்து இருக்கலாம். அப்போ எனக்குக் கூட ப்ரமோஷன் கிடைச்சிருக்கும்’ என்று கிண்டலாகப் பேசுவான்.

மருமகள் கை நிறையச் சம்பாதித்து, மகனும் அவளைக் கொண்டாடினால், வீட்டில் தன் அதிகாரம் என்ன ஆவது என்ற பயத்தில் ராஜியை வேலையை விட்டு நிறுத்துவதிலேயே குறியாயிருந்தாள். இ.எம்.ஐ. பற்றி பாக்கியம் என்ன கண்டாள்?

மொத்தத்தில் அடிபட்டது குழந்தை ரவி தான். அவனைக் கவனிக்கத்தான் யாருக்கும் நேரமில்லை.

இன்டர்காம் ஒலிப்பதைக் கேட்டு சிந்தனையிலிருந்து விடுபட்டாள் ராஜி. எதிர் அறையிலிருந்த ஜி.எம். தன்னை அழைத்ததைக் கேட்டு அவர் அறைக்குள் நுழைந்தாள்.

‘யூ ஆர் நாட் ஆல்ரைட் ராஜி! ஒய்? எனி ப்ராப்ளம்?”

“ஒண்ணுமில்லை சார்.”

“நோ…நோ, நான் தினமும் கவனிக்கிறேன் உன்னை. பர்சனலா ஏதாவது விஷயமானாலும் பரவாயில்லை. எங்கிட்ட சொல்லு. என்னை உனக்கு ரொம்ப வேண்டியவனா, நல்ல நண்பனா நினைச்சுக்க. நீ எவ்வளவு திறமையான பொண்ணு? புத்திசாலி! உன்னை மாதிரி வொர்க்கர்ஸ் இந்த ஆபீஸூக்கு ஒரு அஸெட் மாதிரி. நீங்க நல்லா இருந்தாதான் எங்களுக்கு நல்லது. கமான் டெல் மீ.”

சொல்லடி பட்டுப் பட்டு கன்றியிருந்த மனம், இந்தப் புகழ்ச்சியால் தலை நிமிர ராஜி சந்தோஷமானாள்.

“சார் வந்து….. வீட்டுல குழந்தையைக் கவனிச்சுக்க யாருமில்ல. மாமியார் மாட்டேங்கிறாங்க. நான் வேலைக்கு வர்றது அவங்களுக்கு இஷ்டமில்ல. டைமிங்ஸ் வேற முன்னப் பின்ன இருக்கா, டெய்லி வீட்டுக்குப் போக லேட்டாயிடுது. அதான் வேலையை விட்டுடலாம்னு…..”

“என்ன உளர்ற, இந்த நிலைமைக்கு வர எவ்வளவு கஷ்டப்பட்டிருப்ப? உன் கேரியர், ஐடென்டிடி அவ்வளவையும் தொலைக்கப் போறியா? ஆபீஸ்ல உனக்கு இருக்கற கௌரவம், உன் குடும்பத்துக்கெப்படி புரியும்?. ஓகே, நீ இங்க முக்கியம். உனக்கு முக்கியத்துவம் தராத உன் குடும்பத்தைப் பத்தி கவலைப்படறதை நிறுத்து. ஒண்ணு பண்ணலாம் நாம. நான் வி.பி. கிட்ட உனக்காகப் பேசறேன். நீ உனக்கு சௌகரியமான டைமிங்ஸ்ல ஒர்க் பண்ணு. கவலைப்படாத.”

ராஜி நிம்மதியானாள். “தாங்க்யூ சார் !” என்றாள் மனப்பூர்வமாக.

தோழி சுபாவோடு மாலையில் ஜவுளிக் கடைக்குச் சென்ற ராஜி, அங்கு அழகான நீல நிற ரெடிமேட் ஷர்ட் ஒன்றை வாங்கினாள்.

“யாருக்கு ராஜி? உன் ஹஸ்பென்டுக்கா?”

“நம்ம ஜி.எம்முக்கு. நாளைக்கு அவருக்குப் பிறந்த நாளாம். என்னை வரச் சொல்லியிருக்காரு!”

“தனியாவா போற? இது பத்தி ராகவன்கிட்ட சொன்னியா…?”

“அவருக்கிட்டச் சொல்லி என்ன ஆகணும்? நம்மைப் பிடிக்காம சந்தேகப்படறவரைவிட நமக்கு மதிப்பு கொடுக்கறவங்க மனசு சந்தோஷப்படற மாதிரிதான் நாம நடந்துக்கணும்.”

“முட்டாள் மாதிரி உளறாதே! நாளைக்கு பார்ட்டின்னு கூப்பிடறவர், அப்புறம் எங்க வேணாலும் கூப்பிடுவார்……”

“நிறுத்து….. என் கஷ்டத்தை எவ்வளவு புரிஞ்சிட்டிருந்தா கம்ஃபர்ட்டபில் டைமிங்ஸ்ல ஒர்க் பண்ணச் சொல்வார்? நல்ல மனுஷன்டி. என்னை ரொம்ப வேண்டியவனா நினைச்சு என்ன கஷ்டம்னாலும் சொல்லுன்னு சொல்லியிருக்கார்…”

“ஏண்டி, உன் புத்தியை அடமானம் வெச்சுட்டியா? வேலை வாங்கற முதலாளி, வேலை நடக்கணும்னா எப்படியும் பேசுவார்னு புரியலையா? உன் குடும்பத்துப் பிரச்னையை நீ யோசிச்சு சரி பண்ணாம, இப்படி மூணாவது மனுஷன் மூக்கை நுழைக்கறபடியா பண்ணுவ? எப்பவும் கூட இருக்கப் போறது உன் புருஷன். குடும்பத்தை விட, மூணாவது மனுஷன் நட்புக்கு மரியாதை தரத் துவங்கினா, ஒரு பொண்ணுக்கு அதைவிடப் பெரிய ஆபத்து வேண்டாம். அவர் நல்லவராவே இருக்கட்டும். ஆனா,எதுக்கும் ஒரு எல்லை உண்டு… ஆபீஸ்ல எல்லோரையும் கூப்பிட்டா, அது வேற. உன்னை மட்டும் கூப்பிட்டா, என்னடான்னு யோசனை பண்ண மாட்டியா? அன்பு காட்டற இடத்துல எல்லாம் மனசை விடக்கூடாது. தரையில் கால் இடறி விழுந்தா எழலாம். மனசு இட‌றி விழுந்தா மார்க்கமே கிடையாதுடி…”

“ஒருத்தர்ட்ட பிரியமா இருந்தா தப்பா?” கம்மிய குரலில் ராஜி கேட்க…

“கண்டிப்பா தப்பில்லை. ஆனால் அது நம்ம குடும்பத்தைப் பாதிக்காத வரைதான். அன்பை வெளியே தேடத் துவங்கினா முதல் அடி நம்ம குழந்தைகள் எதிர்காலத்துக்கும், குடும்பத்தோட மரியாதைக்கும் தான் விழும். அள‌வுக்கு மீறினால் அமுதம் மட்டுமில்ல. அன்பும் நஞ்சாகும்” என்ற சுபா ராஜியைத் தோளோடு அணைத்து ஆறுதல் சொன்னாள்.

ராஜியின் கண்கள் கலங்கினாலும் அவள் மனத்தில் தெளிவு பிறந்தது!. ‘நீல நிற‌ சட்டை, ராகவனுக்குப் பொருத்த‌மாயிருக்கும்’ என்று மனதில் தோன்றியதும் கண்ணீரைத் துடைத்தவாறே புன்னகைத்தாள்.

- ஜூலை 2011 

தொடர்புடைய சிறுகதைகள்
'வாங்க, வாங்க, உள்ளுக்க‌ வந்துருங்க...யப்பா தம்பி ஒன்னத்தே சொல்றாக... பெராக்கு பாத்துக்கிட்டு அப்புறமேட்டு நிக்கலாங்... வாறவுகளுக்கு வளி வேணுல்லா... ' கண்டக்டர் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார். சில திடீர் சமயங்களில், வெறும் நாலு இட்லி சாப்பிட்டதற்கே வயிறு நிரம்பி எருக்களிப்பது போல், ...
மேலும் கதையை படிக்க...
அம்மாவோடு வீட்டுக்குள் நுழையும் போது அத்தை மெலிதாகச் சொன்னாள். 'அவெ வந்திருக்கா...... கடப்பக்கம் போயிருக்காப்புல...' அம்மா திடுக்கிடுவது தெரிந்தது. பதில் ஏதும் வரவில்லை. அது அம்மாவின் சுபாவம். அமைதியாகக் கொல்லைப்பக்கம் போனாள் அம்மா. 'அவெ'என்ற விளி, அத்தையின் தம்பியை, அம்மாவின் கணவனை, என் தகப்பனை ஒரு சேரக் ...
மேலும் கதையை படிக்க...
சரயு வெடித்துச் சிரிப்பதன் காரணம் புரியாமல் பார்த்தாள் சுசி. அதிர்ந்து சிரிப்பதும் நடப்பதும் சரயுவின் இயல்பல்ல. ஆழங்காண முடியாத கடலமைதி அவள். தாழ்வாரத்துக் குறட்டில் அமர்ந்து அரிசியில் கல் பொறுக்கிக் கொண்டிருந்தவள் திடீரென சிரித்ததும் ஆச்சரியமானது சுசிக்கு... 'என்னாச்சுக்கா... ம்ம்.. நிமிர்ந்தாள் சரயு. முன் வகிட்டில் குங்குமச் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு சிறு மளிகைக் கடையின் முன் வைக்கப்பட்டிருந்த வாக்கு பெட்டி, என் கவனத்தைக் கவர்ந்தது. சில்லறை வியாபாரத்தில் அந்நிய பன்னாட்டு நிறுவனங்கள் நேரடியாக நுழைவதற்கு அனுமதியளிக்கக் கூடாதென்ற கோரிக்கையுடன், அதற்கு ஆதரவாக‌ வாக்களிக்க வேண்டி ஒரு பெண்கள் பத்திரிகை வைத்திருந்த வாக்குப் ...
மேலும் கதையை படிக்க...
மனதின் உயரம்….
மாறுவது நெஞ்சம்…
சரயு
நம்மில் ஒருவர்

அளவுக்கு மீறினால்… மீது 2 கருத்துக்கள்

  1. Alasiam G says:

    உள்ளங்கையில் இட்ட ஒரு துளித் தேனாய் இனித்தது இக்கதை. அருமை!. அருமை!!

    • suganthi v prabagaran says:

      soozhnilai kaithigal eppothume pengal than endru ikkadhai unarthiyadhu……vittukoduppavalum pen enbadhudhan unmai. oru unmaiyana thamizh thai indha pen.superb story. i liked it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)