கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 27, 2018
பார்வையிட்டோர்: 5,165 
 

ஏற்றமான இடமொன்றில் பரந்து விரிந்து கிடந்த சீக்கயெம்மின் (முதியோர் இல்லம்) கண்ணாடிக் கதவுகள் செல்வியை உள்ளே விட்டுத் தாளிட்டுக் கொண்டன. தாளிட்டதான அந்தச் சுதந்திரத்தைப் பிடுங்கும் உணர்வு நிம்மதி திருடிச் சென்றது. ஆரம்பக் காலங்களில் தோன்றாத இந்த உணர்வு இப்போது வாட்டும் நோயாகிய பரிணாமம். தாதி வேலைக்குப் படித்துவிட்டு வேலை இல்லாது வீட்டில் இருக்க இங்கு விடமாட்டார்கள். படித்த வேலையைச் செய்யும் போது ஏற்படும் மனவழுத்தங்களையும் இலகுவாகப் புறம் தள்ள முடிவதில்லை. வேலை என்பது ஐரோப்பிய வாழ்வின் உயிர் நாடி. அது நின்றுவிட்டால் குடும்பம் என்னும் சிகரம் சரிந்து, ஆழ்கடலில் அமிழ்ந்து விடலாம். தலையில் இடி விழுந்தாலும் வேலை செய்தாக வேண்டும் என்பதை உணர்ந்தவளாக உள்ளே சீருடை மாற்ற, விரும்பாத கால்களை இழுத்துக் கொண்டு வில்லங்கத்திற்குச் சென்றாள்.

செல்வி இப்பொழுது ஒஸ்லோவில் இருக்கும் பெரியதொரு சீக்கயெம்மில் வேலை செய்தாள். ஆரம்பக் காலத்தில் நோர்வேஜிய வயது வந்தவர்கள் மாத்திரம் இங்கு இருந்தார்கள். அவர்களின் தனிமை, வெறுமை, ஏக்கங்கம், மனவுளைச்சல் என்பன இவர்களின் கலாச்சாரத்தின் பக்க விளைவு என்பதாய்… தொழில்ரீதியான நோக்கோடு மனிதர்களைப் பார்ப்பதும், கடமையைச் செய்வதுமாக கவலை இன்றிக் காலத்தைப் போக்கினாள். எப்பொழுது வேலை செய்யும் இடத்தின் வாசலைத் தாண்டுவாளோ, அந்தக் கணமே, அந்த இடத்தை மறந்து, தானும் தனது வீடும்; நண்பர்களும் என்று சந்தோஷமாய் இருந்தாள். அப்போது இது மூளைக்கு ஆக்கினை இல்லாத வேலை என்பதில் அவளுக்கு ஏக திருப்தி. அந்தத் திருப்தியும் நிம்மதியும் தொலைந்து போயிற்று. இன்று எஞ்சி இருப்பது சஞ்சலம், அவஸ்தை, மனவுளைச்சல், தப்பு செய்கிறோமோ என்கின்ற ஆதங்கம்.

செல்விக்கு இப்போதெல்லாம் வேலைக்குப் போகாது நின்று விட்டால் நல்லது போன்று இருக்கும். சேர்ந்து வேலை செய்பவர்கள் செல்விக்கு ஒரு போதும் பிரச்சனையாக இருந்தது கிடையாது. நினைவுகள் அவளைத் துரத்துகின்ற ஆக்கினையில் இருந்து நிம்மதி பெறுவதற்கு அவளுக்கு வேறு வழி தெரியவில்லை. ஆரம்பத்தில் அப்பா அம்மாவின் பாதுகாப்பில், இளமையின் துள்ளலில், எந்தக் கவலைக்கும் வித்திடாத சுதந்திரத்தில் நிம்மதியாக இருந்தாள். அது கால ஓட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டது. நரையும் முதுமையும் நினைவிலும், கனவிலும் ஆட்சி செய்யலாயிற்று. முதுமை அவர்களை மெதுவாக அரிக்க, நெஞ்சு படபடக்கத் தொடங்கியது. நிம்மதி எங்கோ குடிபெயர்ந்து போய்விட்டதான தவிப்பு நிரந்தரமாகிற்று. வேலைக்குப் போய் வந்தால் அது மேலும் அதீத சக்தியோடு அவளைத் துவட்டி எடுக்கிறது.

எங்கு இருந்தாலும் அவளுக்கு அவர்கள் நினைவாக இருக்கிறது. அது இங்கு வந்துவிட்டால் அதிகம் பெருக்கெடுக்கிறது. காலத்தோடு கோலங்கள் மாறத்தான் செய்கின்றன. விரும்பியோ விரும்பாமலோ, பொருளாதார அழுத்தத்தாலோ, எங்கள் கலாச்சாரம் நொய்ந்து, அவர்கள் கலாச்சாரத்தின் ஒரு பகுதியையாவது தழுவ வேண்டியது கட்டாயமாகிற்று.

அப்பா அம்மா போன்றவர்கள் யன்னலை வெறித்த வண்ண அழுது கொண்டு இருக்கும் போது, செல்விக்கு இதயம் அறுந்து விழுவதாக வலிக்கிறது. ஓ வென்று அழுது கொண்டு சீக்கயெம்மை விட்டு ஓட வேண்டும் போல் இருக்கிறது. ‘இன்று யார் எப்படி இருப்பார்கள்?’ அவளுக்கு விளங்கவில்லை. சீருடையை எடுத்தாலும் அணிவதற்கு விருப்பம் இல்லாதவளாய் சிறு கணம் நின்றாள். பின்பும் சொந்த ஆசாபாசத்தை அடக்கி இங்கு தொழில்ரீதியாக நடக்க வேண்டுமென தனக்குத் தானே கூறிய வண்ணம் சீருடையை மாற்றச் சென்றாள்.

செல்வி சீருடையை மாற்றிவிட்டு அறிக்கை எடுப்பதற்காகக் கண்காணிப்பு அறைக்குச் சென்றாள். அங்கே நீனா, கன்ன, அஸ்திரி ஆகியோர் இருந்தார்கள். நீனாதான் இந்த பகுதிக்குப் பொறுப்பான தாதியாக இருக்கிறாள். வேலை வேண்டுவதிலும் கதைப்பதிலும் மிகவும் கெட்டிக்காரி. காலையில் வேலைத் தொடங்கினால் தானும் சேர்ந்து வேலை செய்வாள். பின்பே அலுவலக வேலைக்குச் செல்வாள். மிச்சம் பிடிக்க வேண்டும் என்கின்ற ஆசையில் சாப்பாட்டிலேயே சிலவேளை மிச்சம் பிடிப்பதும் உண்டு. செல்விக்குச் சாப்பாட்டில் மிச்சம் பிடிப்பது வயிற்றைப் பிரட்டும். அதை நேரடியாகச் சொன்னால் முக முறிவாகிவிடும் என்கின்ற அச்சத்தில் அதை அவள் எப்போதும் பின்போட்டுக் கொண்டு வந்தாள்.
உள்ளே சென்ற செல்வியைப் பார்த்து,

‘உங்களைப் பார்ப்பதே சந்தோஷம்.’ என்றாள் அஸ்திரி.

‘அது மிகவும் உண்மையே.’ என்றாள் நீனா.

‘ஏனப்பிடி?’ என்று செல்வி கேட்க,

‘நீயும் இல்லை என்றால் எங்களுக்குப் பெரிய மொழிப் பிரச்சனையாக இருந்திருக்கும். உனக்கு அது நன்றாகத் தெரியும். இப்பொழுது தமிழ் ஆட்கள், பாக்கித்தான்காரர் எல்லோரும் இங்கே வருகிறார்கள். அர்களுக்கு நொஸ்க் அதிகம் தெரியாது என்பதும் உமக்கு நன்றாகத் தெரியும். நீர் இருப்பதால் எங்களுக்கு உதவியா இருக்கிறது. இல்லாவிட்டால் நாங்கள் பெரிய சிக்கலில் மாட்டுப்பட்டிருப்போம்.’ என்றாள் நீனா.

‘தமிழராக இருந்தால் மட்டும்தான் நான் உதவி செய்ய முடியும். அது சரி அப்படி என்றால் என்னுடைய சம்பளத்தைக் கூட்டச் சொல்லிச் சிபாரிசு செய்யலாம் தானே?’ என்றாள் நீனாவைப் பார்த்து.

‘அதுக்கு இன்னும் இரண்டு மாதம் இருக்கிறது. நேரம் வரும்போது நிச்சயமா செய்கிறேன் செல்வி.’ என்றாள் நீனா.

செல்வியும் அங்கே இருந்த கதிரை ஒன்றில் இருந்த வண்ணம்,

‘கேட்க நன்றாக இருக்கிறது. நன்றி. நீங்கள் என்ன நடந்தது என்பதைச் சொல்லுங்கள்.’ என அதற்கு முற்றுப் புள்ளி வைத்தாள்.

‘சூல்வையை இன்று அம்புலன்ஸ்சில் உல்லவோல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். அவளுக்குக் காலை நெஞ்சு வலி அதிகமாகப் போய்விட்டது. அந்த அறையில் இப்போது ஒருவரும் இல்லை.’ என அஸ்திரி தொடங்கினாள்.

ஒவ்வொருவராகச் சொல்லி முடியக் கடைசியாக நீனா கதைத்தாள்.

‘106 இல புதிதாக ஒரு தமிழ் ஆள் வந்து இருக்கிறார். இராமசந்திரன் முருகமூர்த்தி என்று அவருக்குப் பெயர். சந்திரன் என்று அழைக்கலாமென அவர்கள் கூறினார்கள். அதுவே சுலபமாகத் தோன்றுகிறது. இல்லாவிட்டால் தமிழ் பெயரை உச்சரிப்பது கடினம். மகனும் மருமகளும் அவரோடு இருக்கிறார்கள். பிரச்சனை என்னவென்றால் அவரின் கோபம். அவர் அவர்களோடு கதைக்கின்றார் இல்லை. எங்களுடனும் கதைக்கின்றார் இல்லை. அவர் மிகவும் தெளிவாகச் சிந்திப்பார், கதைப்பார் என்று மகன் சொல்லுகிறார். நடை குறைந்து போய்விட்டதாம். படியால் ஏறி இறங்கமாட்டாராம். இரவில் சிறுநீர் கழிப்பதற்குப் போத்தல் வேண்டுமாம். அத்துடன் சில வேளை இங்கே வந்தது அவருக்குப் பிடிக்காமல் இருக்க வேண்டும். மருமகளின் கதையைப் பார்க்க அப்பிடிதான் தோன்றுகிறது. இது முடிந்தவுடன் நீர் ஒரு முறை அந்த அறைக்குப் போய் அவரை அறிமுகம் செய்து கொள்ளுவதோடு அவரைச் சமாதானமும் செய்ய வேண்டும். நீ அதில் கெட்டிக்காரி. தமிழ் வேறு உனக்கு மட்டும்தான் தெரியும்.’

‘நான் அதில் கெட்டிக்காரியோ இல்லையோ நீ கெட்டிக்காரி… கொப்பில் ஏத்திவிட்டு வேலை வேண்டுகிறதில் மாகா கெட்டிக்காரி.’ எனச் செல்வி மனதில் எண்ணிக் கொண்டாள்.

‘என்ன நான் சொல்வது சரியே?’ என்றாள் நீனா தனது கட்டளையை உறுதி செய்து கொள்ள.

‘ஓ… அது சரி. நான் அவருடன் கதைத்துப் பார்க்கிறேன்.’

‘நல்லது… வேறு இன்று அதிகமாக ஒன்றும் நடக்கவில்லை. நீர்தான் பின்னேரம் மருந்தும் கொடுக்க வேண்டும்.’ என்றாள் நீனா.

‘சரி.’ என்றாள் செல்வி.

‘சரி… நாங்கள் புறப்படுகிறோம்.’ என்ற வண்ணம் கன்ன புறப்பட, அவளோடு அஸ்திரியும் புறப்பட்டுச் சென்றாள். அவர்களுக்குக் ‘காத.’ சொல்லிவிட்டுச் செல்வி முதலில் கோலும் சமையல் அறையும் இருந்த பகுதிக்குச் சென்றாள். அங்கே மாலைக் கோப்பி தயாராக இருப்பதை உறுதி செய்து கொண்ட பின்பு மெதுவாக 106 அறையை நோக்கிச் சென்றாள். வயிற்றுக்குள் ஏதோ அழைவது போன்று இருந்தது. கட்டாயம் அவளைப் பிடரி பிடித்துத் தள்ளியது. கால்கள் ஒன்றுக்குள் ஒன்று கொளுவிப் பின்னடித்தன.

அறைக் கதவை மெதுவாக மூன்று முறை தட்டிவிட்டுச் சிறிது தாமதித்து கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள். ‘கொம் இன்.’ என நோர்வேஜிய மொழியில் குரல் வந்தது. உள்ளே அவர்கள் நிறைய உடுப்புகளைப் பிரித்து அடுக்கினர். அவர்கள் நோர்வேஜிய தாதியை எதிர் பார்த்து இருக்க வேண்டும். ஒரு தமிழ் பெண் வந்தது ஒருவித நெருக்கத்தைத் தந்ததான உணர்வில் மருமகள் பெண் ‘நீங்கள் தமிழ்தானே?’ எனத் தமிழிலேயே கேட்டாள்.

‘ஓம்.’ என்ற செல்வியின் பார்வை சந்திரன் என்கின்ற அந்த மனிதர் மேல் பதிந்தது. அவரது கைகள் சாதுவாக நடுங்கின. வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தவரின் பார்வை தமிழ்க் குரலைக் கேட்டவுடன் சடுதியாக செல்வியில் சிறு கணம் பதிந்து மீண்டும் வெளியே நிலை குத்திற்று.

‘உங்களுக்கு என்ன பெயர்?’ என்றாள் அந்தப் பெண்.

‘செல்வி. உங்களுக்கு?’

‘சுலோசனா… அவருக்குக் குமரன். நீங்கள் கனகாலம் இங்க வேலை செய்யிறியளோ? எப்பிடி இங்க எல்லாம் நல்லாப் பார்ப்பினமே?’

‘சொந்த உறவை உங்களாலேயே பார்க்க முடியவில்லை. கூலிக்காக வேலை செய்பவர்கள் நன்றாகப் பார்ப்பார்களோ இல்லையோ என்கின்ற கேள்வி வேறு?’ மனதுக்குள் நினைத்ததை மனதிற்கு உள்ளேயே இரகசியமாக அடக்கம் செய்துவிட்டு,

‘ஓ நல்லாப் பார்ப்பினம்.’ என்றாள். குமரன் செல்வியைப் பார்த்து ஒரு முறை புன்னகைத்தான். செல்வியும் பதிலுக்குப் புன்னகைத்தாள். பின்பு அவன் உடுப்புக்களை அடுக்குவதும் மணிக்கூட்டைப் பார்ப்பதுமாக அலமலக்கப்பட்டான். ஏதோ அவசரத்தில் அவன் இருப்பதாய் செல்வி எண்ணிக் கொண்டாள்.

‘மாமாவுக்கு இங்க வாறது பிடிக்கேல்லப் போல இருக்குது. ஒண்டும் சொல்லாமல் வெளியவே பார்த்துக் கொண்டு இருக்கிறார். எங்களுக்கும் வேலை வேலையெண்டு அலைய வேண்டி இருக்குது. கடன் இருக்கிறதால அவர் இரண்டு வேலை செய்ய வேண்டி இருக்குது. பிறகு பிள்ளையள விளையாட்டுக்கு, நீச்சலுக்கெண்டு கூட்டிக் கொண்டு போக வேணும். அப்பவெல்லாம் இவர் தனிச்சுப் போயிடுவார். நேரத்திற்கு நாங்கள் சாப்பாடும் குடுக்க முடியாமல் இருக்குது. நாங்கள் சமாளிப்பம். அவர் கஸ்ரம்தானே? அதோட மாமாவால இப்ப ஒழுங்காக நடக்கேலாது. நாங்கள் இல்லாத நேரத்தில விழுந்து கைகால் முறிஞ்சாலும் ஆபத்து எண்டுதான் இங்க கொண்டு வந்தம். அவருக்கு அது பிடிக்கேல்லப் போல இருக்குது. இங்க நிறையக் காலம் இருக்க வேண்டி வரும் எண்டு நிறைய உடுப்பும் கொண்டு வந்தம்.’ கரிசனை வழிய வழிய அவள் கதைத்தாள்.

‘அப்பா அம்மாவைவிட காரும் வீடும் அதற்கு வாங்கும் கடனுமாய் வீட்டிலே இருப்பதற்குக்கூட நேரம் இல்லாது ஓடியோடி உழைப்பது இவர்களுக்கு முக்கியமாகிப் போய்விட்டது. ஊரிலே சுதந்திரமாய் திரிந்த மனிதர்களை இங்கே கூட்டிவந்து கூட்டிற்குள் அடைத்துவிட்டு அவர்களோடு கூடவும் இருக்காது மனிதம் தொலைத்த மனிதர்களாக பணத்தைத் தேடும் பிணங்களாக… எங்கள் சமுதாயம் மனிதாபிமானத்தை விற்றுப் பொருளாதாரத்தையே வாங்குவது அருவருப்பை ஊட்டுகிறது.’ எனச் செல்வி மனதிற்குள் நினைத்துக்கொண்டாள்.

‘என்ன பேசாமல் நிக்கிறீங்கள்?’ சுலோசனா கேட்ட போதுதான் தன் நிலைமையை உணர்ந்தவளாக,

‘நீங்கள் சொல்லுறது விளங்குது. நீங்கள் உடுப்புகளை அடுக்கி மாமாவோட இருந்து கதைச்சிட்டுப் போங்க. போகேக்க வந்து ஓபீசில இல்லாட்டிக் ஹோல்ல சொல்லிப் போட்டுப் போங்க. நான் அதுக்குப் பிறகு வந்து மாமாவைப் பார்க்கிறன்.’

‘ஆங்… சரி.’ என்றாள் மருமகள். செல்வி மெதுவாக வெளியே வந்தாள். சத்தி வரும் போல இருந்தது. அவள் கழிப்பறையை நோக்கிச் சென்றாள்.

செல்வி மீண்டும் ஹோலுக்கு வந்தபோது அன்ன வந்து காப்பியும் கேக்கும் முதியவர்களுக்குக் கொடுத்தாள். செல்வியைக் கண்டவுடன்.

‘ஏதாவது புதிதாக நான் அறிய வேண்டியது இருக்கிறதா?’ என்றாள்.

‘பெரிதாக ஒன்றும் இல்ல. 106 இல் புதிதாக ஒரு தமிழ் ஆள் மட்டும் வந்து இருக்கிறார்.’

‘ஓ… அப்ப நீர்தான் அவரைப் பார்க்க வேண்டும். அதுதான் சுலபம். நீங்கள் வயது போன ஆட்களைப் பார்ப்பதில் உண்மையிலேயே கெட்டிக்காரர். எவ்வளவோ தமிழ் ஆட்கள் இருந்தும் இங்கே வருகின்ற வயது போன ஆட்கள் ஒரு சிலர்தானே? உண்மையிலேயே உங்களைப் பார்த்து நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.’

‘எங்கட சனத்தின்ர சுயநலம் உனக்கு எப்பிடித் தெரியும்? உண்மை பாதி பசப்பு மீதி.’ மனதிற்குள்ளே எண்ணியவள் அந்த ஊத்தையை வெளியே கொட்ட விரும்பாதவளாய்,

‘மனிதர் என்றால் எல்லா விதமாயும் இருப்பார்கள். எல்லாச் சமுதாயத்திலும் பெற்றோரை நன்றாகப் பார்ப்பவர்களும் இருப்பார்கள், பார்க்காமல் விடுபவர்களும் இருப்பார்கள். தமிழர் ஒண்டும் வித்தியாசம் இல்லை.’ என்றாள் செல்வி.

‘ஓ.. அப்பிடியே? அதுவும் உண்மையாகத்தான் இருக்க வேண்டும்.’

செல்வி மேற்கொண்டு அங்கே நிற்க வில்லை. மாலையில் கொடுக்கப்படும் மருந்துகளை எடுத்துச் சிறிய பிளாஸ்ரிக்கப்பில் போட்டுப் பெயர் எழுதி வைப்பதற்காகப் போனாள். இப்படிச் செய்வது உண்மையில் தவறாக இருந்தாலும் நேரம்போதாமையால் இது தவிர்க்கமுடியாத வழமையாகப் போய்விட்டது. எங்கும் பணத்தை மிச்சம் பிடிக்க வேண்டும்என்கின்ற கட்டாயத்தில் மனிதர்களின் பாதுகாப்பு சுய விருப்பு, வெறுப்பு, மனச்சாட்சி என்பன பலியாக்கப்படுவது தவிர்க்கமுடியாததாய் போய் விடுகிறது. புத்தகத்தில் கோடி கோடியாய் பணம் புரண்டாலும் சாப்பாட்டில் மிச்சம் பிடிக்கவைக்கும்பொருளாதார விதிகளை எண்ணும் போது செல்விக்கு அனல்கக்கும் கோபம் உண்டாகும். கடைசியில் ஆற்றாமையால்அவள் வாடி வதங்கிப் போய்விடுவாள்.

சிறிது நேரத்தில் குமரனும் சுலோசனாவும் செல்வியைத் தேடிக்கொண்டு வந்தார்கள். செல்வி மருந்து எடுப்பதைநிறுத்திவிட்டு அவர்களைப் பார்த்தாள்.

‘நாங்கள் போயிட்டு வரப்போகிறம். தயவு செய்து அப்பாவை ஒருக்காப் போய் பாருங்கோ. அவர் தொடர்ந்தும் எங்களோடகதைக்க மாட்டன் எண்டுறார். அப்பாவுக்குக் கோபம் வந்தா இப்பிடித்தான். கொஞ்ச நாளைக்குப் பேசாமல் இருப்பார். பிறகுவளமைக்குத் திரும்புவார். இதுவும் அப்பிடிதான் இருக்கும். நாங்கள் அடுத்த முறை வரேக்க எங்களோட நல்ல வாரப்பாடக்கதைப்பார். அவர் எங்களில ஒரு நாளும் கோபம் வைச்சிருக்கிறேல்ல. அப்ப நாங்கள் வாறம். அப்பாவைக் கொஞ்சம்பார்க்கிறியளே?’

‘ஓ… இதெல்லாம் நீங்கள் சொல்லோணுமே? இதுதானே எங்கட வேலை. நான் அவரைச் சமாதானப் படுத்துறன். நீங்கள்போயிட்டு வாங்கோ.’

அவர்கள் நீண்ட நடைபாதை வழியாக நடந்து மறையும் வரை அப்படியே பார்த்த வண்ணம் செல்வி நின்றாள். அவளுக்குஇதயத்தில் சிறிதாக வலிப்பது போன்று இருந்தது.

செல்வி மருந்துகளை மீண்டும் எடுத்துப் பெயர் எழுதி வைக்கும் வேலையை முடித்துக் கொண்டு, வண்டிலைப் பூட்டித்திறப்பை எடுத்துக் கொண்டாள். பின்பு 106 அறையை நோக்கி நடந்தாள். சந்திரன் வெளியே பார்த்துக் கொண்டு இருந்தார். சத்தம் கேட்டதும் இவளை ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் யன்னலூடாக வாழ்வின் தத்துவங்களைஆராய்வது போன்ற பாவனையில் இருந்தார்.

‘அப்பா என்ன வெளியால அப்பிடிப் பாக்கிறீங்க. எனக்கும் சொன்னீங்கள் எண்டா நானும் சேர்ந்து பார்ப்பன்.’

அவர் செல்வியை மீண்டும் ஒரு முறை பார்த்தார். அவர் முகத்தில் இருந்த இறுக்கம் சற்று குறைந்ததாய் அவளுக்குத்தோன்றியது. அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும் என்பதை நம்பியவளாக,

‘எங்களோட உங்களுக்கு என்னப்பா கோவம்? நாங்கள் இங்க வேலைக்கு வந்து இருக்கிறம். நீங்கள் எங்களோடகதைக்காட்டி நாங்கள் எங்கட வேலைய ஒழுங்காச் செய்யேலாது. அப்பிடிச் செய்யாமல் விட்டாலும் தமிழர் வேலையஒழுங்காச் செய்கினம் இல்லை எண்டுதானே சொல்லுவினம். அப்பிடிச் சொல்லுறது உங்களுக்கு விருப்பம் எண்டா நீங்கள்பேசாமல் இருக்கலாம்.’

‘அப்பிடி இல்லப் பிள்ளை. அவனில இருந்த கோபத்தில கதைக்கேல்ல. அவ்வளவுதான்.’

‘அது அவரிலதானே உங்களுக்குக் கோபம். அதுக்கு எங்களோட கோபிக்காதேங்க.’

‘சரியம்மா… நான் உன்னோட கோபிக்கேல்ல.’

‘தக் அப்பா.’

‘இதுக்கெல்லாம் எதுக்கு நன்றி. உண்மையா நான்தான் உனக்கு நன்றி சொல்லோணும்.’

‘ம்… நீங்க பார்க்க என்ர அப்பா மாதிரி இருக்கிறீங்கள். அதால உங்கள அப்பா எண்டு சொல்லுறன். நோர்வே காறர் எண்டாப்பெயர் சொல்லித்தானே கூப்பிடுவம். அப்பிடி உங்களக் கூப்பிட மனம் வரேல்ல.’ என்றாள் செல்வி.

‘சரி நீ விரும்பினமாதிரிக் கூப்பிடம்மா.’

‘நான் உங்களிட்ட ஒண்டு கேட்கலாமே அப்பா?’

‘ஓ… தாராளமாகக் கேளு பிள்ளை.’

‘உங்கட மகன்மேல ஏன் அவ்வளவு கோபம்?’

‘என்னப் பார்க்கேல்ல எண்டதவிடத் தன்னையே பார்க்கிறான் இல்லை எண்டுறதுதான் எனக்கு இருக்கிற கோபம். யாருக்காக பெரிய வீடு, புதிய வென்ஸ் காரெல்லாம் வாங்கோணும்? விரலுக்கு ஏற்பதானே வீக்கம் இருக்கோணும்? அதைவிட்டிட்டு கடனுக்கு எல்லாத்தையும் வாங்கிப்போட்டு இரண்டு மூண்டு வேலை செய்யிறதே அவன்ர வாழ்க்கையாப்போயிட்டுது. வீடு, கார், கித்தை எல்லாம் வாங்கி வைச்சிருக்கிறான். ஆனா அதை அனுபவிக்கிறதுக்கு அவனுக்கு நேரம்இல்லைப் பார். அதை நினைச்சா எனக்கு எப்பவும் நெஞ்சுக்க வலிக்குது அம்மா. போகேக்க ஒண்டும் கொண்டு போறேல்ல. அதை விளங்காமல் மொக்குப் பெடி பாய்ஞ்சு பாய்ஞ்சு உழைச்சு என்ன பிரயோசனம்? அதைவிடத் தனக்கே நேரம் இல்லாதவன் எப்பிடியம்மா எனக்கு நேரம் செலவழிக்க முடியும்? அந்திம காலத்தில கிடந்து அலையக்கூடாதெண்டுசொல்லுறது இதுக்குத்தான் போல இருக்குது.’

‘அப்பிடியெல்லாம் இல்லை. நீங்கள் பயப்பிடாதேங்கோ. மகன் இல்லாட்டியும் மருமகள் இருக்கிறாதானே?’

‘சொந்தப் பிள்ளையே பார்க்குதில்லையாம். ஊரான் வீட்டுப் பிள்ளையைப் பார் எண்டு எப்பிடிக் கேட்கிறது?’

‘நாங்கள் இருக்கிறம்தானே.’ எனச் சொல்ல வேண்டுமென எண்ணியவள் அதன் ஆத்ம சுத்தியை எண்ணி மௌனித்தாள். ‘ம்… அதுவும் சரிதான் அப்பா. அது சரி எவ்வளவு நேரம் வெளிய பார்ப்பியள்? ரீவியப் போடட்டுமே?. அதைப் பார்க்கிறியளே?’ என்றாள்.

‘அதுவும் சரிதான் பிள்ள. ரீவியைப் போடு.’

‘அப்பாட்ட இன்னும் ஒண்டு கேட்கோணும்?’

‘என்னம்மா அது?’

‘பின்னேரம் என்ன சாப்பிடப் போறியள் எண்டு சொன்னா நான் அதை எடுத்து வந்து தருவன்.’

‘எனக்கு ஒண்டும் வேண்டாம் பிள்ள.’

‘அப்பிடி இல்லையப்பா. ஏதாவது சாப்பிடோணும். பிறகு நாளைக்கு காலமைதானே சாப்பாடு தருவினம்.’

‘ம்… அதுவும் அப்பிடியே? சரி பாணுக்கு ஜாம் பூசிக்கொண்டு வாவன் பிள்ள.’

‘சரி ரீக்கு சீனி போட்டுக் கொண்டுவரவா?’

‘ஓ… பாலும் விட்டா பிள்ள.’

‘சரி நீங்கள் ரீவியப் பார்த்துக்கொண்டு இருங்கோ. நான் கொஞ்ச நேரத்தால வாறன்.’

வெளியே வந்தவளுக்குச் சற்று நிம்மதியாக இருந்தது. தனது வேலையைச் செய்ய முடிந்ததில் சந்தோசம். நடையில்துள்ளல் குடிபுகுந்து கொண்டது.

அன்று சந்திரனைப் படுக்க வைக்கவேண்டிய பொறுப்பையும் செல்வி ஏற்றுக் கொண்டாள். அவருக்கு உடுப்பு மாற்றிக்கட்டிலில் படுக்க வைக்கும் போது ஏதோ சங்கடப்பட்டவராய்
‘பிள்ள?’ என்றார்.

‘என்னப்பா?’ என்றாள் செல்வி.

‘இங்க கிட்டவாம்மா.’ என்று அழைக்கச் செல்வி கிட்டே சென்றாள். செல்வியின் கையை மெதுவாகப் பிடித்தவர்,

‘எனக்கு இப்பிடி ஒரு மகள் இல்லையே எண்டு ஏக்கமாக இருக்குதம்மா.’

‘அப்பிடி இல்ல… உங்களுக்கு ஒரு மகள் இருக்கிறா எண்டு நினையுங்க அப்பா.’ சொற்களின் உயிர்த்தன்மை பற்றிய கேள்விஒன்று அவளைப் பார்த்து நகைப்பதாகிற்று.

‘இது போதும் அம்மா. நான் இப்ப சந்தோசமாக இருக்கிறன். இன்னுமொரு உதவி செய் பிள்ள.’

‘என்னப்பா?’

‘இரவில எழும்பிப் போய் யூரின் பாஸ்பண்ணேலாது.’

‘அது ஒரு பிரச்சனையே இல்ல. நான் போத்தல் எடுத்து வந்து தாறன் அப்பா.’ கூறியவள் கழுவும் இயந்திரங்கள் இருக்கும்அறைக்குச் சென்று கழுவி வைக்கப் பட்டிருந்த இரு போத்தல்களை எடுத்துவந்து இரவு மேசையில் வைத்தாள். பின்பு இரவுவணக்கம் சொல்லிவிட்டு மின்விளக்குகளை அணைத்துவிட்டு வெளியே வந்தாள். செல்வி தான் அன்று செய்த வேலையில்திருப்தி கண்டவளாக அலுவலகத்தை நோக்கிச் சென்றாள்.

***

அடுத்த நாள் பின்னேரம் வேலைக்கு வரும் போது அந்த முதியோர் இல்லத்தில் இருந்து அம்புலன்ஸ் வண்டி ஒன்றுதிரும்பிச் சென்றது. ஒவ்வொரு நாளும் அம்புலன்ஸ் வண்டி வருவதும் போவதுமாக இருக்கும். அதில் ஒன்றுதான் இதுவும்என்பதாய் எண்ணியவள் அந்த நினைவை அத்தோடு புறம் தள்ளிச் சீருடை அணிந்து வருவதற்குச் சென்றாள்.

சீருடை அணிந்து கொண்டு அலுவலகத்திற்கு வந்த போது நீனா அங்கே வந்தாள். அவள் ஏதோ பரபரப்பில் இருப்பதைச்செல்வியால் உணர முடிந்தது.

‘என்ன நீனா… ஏன் இவ்வளவு பரபரப்பாய் இருக்கிறீர்கள்?’ என்றாள்.

‘ஓ அதுவா… சந்திரன் இறந்துவிட்டார் தெரியுமா?’

‘என்ன?’ செல்வி துள்ளி எழும்பினாள்.

‘மன்னிக்க வேண்டும் செல்வி. உனக்கு முதலில் சொல்லி இருக்கவேண்டும். மாரடைப்பால் அவர் காலை மோசம்போவிட்டார். பேப்பர் வேலையில் நான் மறந்து போய்விட்டேன். போய் வேண்டும் என்றால் பார். அறைக்குள்தான்இருக்கிறது. மகனும் மருமகளும் நிற்கிறார்கள். மருத்துவர் வருவதற்கு நேரம் ஆகும் என்று நினைக்கிறேன்.’

செல்வி அதற்கு மேல் அங்கே இருக்க முடியாதவளாய் அவசர அவசரமாய் 106 நோக்கிச் சென்றாள். உள்ளே சென்றதும்…

செல்வியைக் கண்ட குமரன் ‘அப்பா என்னோட பேசாமலே போயிட்டாரே?’ என மூஞ்சையில் அறைந்து அழுதான். சிலகணங்கள் நின்ற செல்விக்கும் அழுகை வருவது போல இருந்தது. அவள் மெதுவாக வெளியே வந்தாள்.

இதயம் அவளுக்கு இலேசாக மீண்டும் வலித்தது. இந்த வேலை எனக்கு வேண்டுமா என்கின்ற கேள்வி பிறந்தது.

நீனாவின் முன்பு போய் நின்ற செல்வி அவளைப் பார்த்து,

‘நான் இந்த வேலையை விடப்போகிறேன் நீனா.’ என்றாள்.

‘என்னது?’

‘என்னால் தாங்க முடியவில்லை. ஒவ்வொருவருடைய கவலையையும் பார்க்கப் பைத்தியம் பிடிக்கும் போல இருக்கிறது.’ கூறிய வண்ணம் செல்வி சோபாவில் இருந்தாள்.

‘ஓ செல்வி… இது எங்கள் தொழில். இதை நாங்கள் எங்கள் சொந்த உணர்ச்சியாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஆயிரம்பேர்ஆயிரம் விதமான குப்பையை கொண்டு வந்து கொட்டுவார்கள். நாங்கள் அதைத் தட்டி விட்டிட்டுப் போய்க்கொண்டு இருக்கவேண்டும். இதையெல்லாம் சொந்தத் துக்கமாக எடுத்தால் உலகத்தில் நாங்கள் வாழ இயலாது. சொந்த மகனுக்கே அப்பாவைப் பார்க்க நேரமில்லாத உலகம் இது. நாங்கள் பணத்துக்காக சேவை செய்கின்ற தாதிமார்? அவர்களின் துக்கங்களுக்கு ஆறுதல் சொல்லலாம். அதையே தூக்கிக்கொண்டு அலையக் கூடாது. நான் வேண்டும் என்றால் உன்னைவகுப்புக்கு அனுப்புகிறேன். உன் மனசைத் தேவையில்லாமல் குழப்பிக் கொள்ளாதே. விளங்குகிறதா? சொந்த உணர்ச்சிவேறு. தொழில் கருணை வேறு. இரண்டையும் குழப்பக்கூடாது.’ என்றாள் நீனா.

செல்வி யோசித்த வண்ணம் நின்றாள்.

குமரன் அவசரமாகக் கடிகாரத்தைப் பார்த்த வண்ணம் அலுவலகத்தைக் கடந்து ஓட்டமும் நடையுமாகச் சென்றான். அவன்போவதைப் பார்த்த செல்வி எழுந்து வெளியே சென்றாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *