Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

அல்சேஷனும் ஒரு பூனைக் குட்டியும்

 

மூன்றாம் நம்பர் வார்ட்டில் நோயாளியைக் கவனித்துக் கொண்டிருந்தபோது, ‘நர்ஸ்’ ஒருத்தி என்னிடம் வந்து “ஸேர் யாரோ ஒருவர் வந்திருக்கிறார், உங்களைப் பார்க்கவேண்டுமாம். உங்களது நண்பர் என்று கூறுகிறார்” என்றாள் தயக்கத்துடன்.

‘வார்ட் ரவுண்ட்’ செய்யும்போது என்னை யாரும் குழப்புவதை நான் விரும்புவதில்லை என்பது அவளுக்குத் தெரியும். சினத்துடன் நிமிர்ந்து பார்த்தேன்.

“ஹலோ மச்சான், ஹெள ஆர் யூ? ” வாசலில் நின்றிருந்த சில்வா கலகலப்போடு கைகளை நீட்டியபடி வந்து என் தோள்களைப் பற்றிக் கொண்டான்.

“ஆ, வட் ஏ பிளஸன்ற் சேர்ப்பிறைஸ்!” என்றேன். என்னால் நம்பவே முடியவில்லை. லண்டனில் இருப்பவன் இப்படித் திடுதிப்பென என் முன்னால் வந்து நின்றால் … ஆச்சரியத்தில் ஒரு கணம் தடுமாறினேன்.

“யூ பகர், யூ நெவர் றைற் ரு மீ” – நீ எனக்குக் கடிதம் எழுதுவதில்லை எனச் செல்லமாகக் கோபித்து என் தோள்களில் இடித்தான்.

பதினைந்து வருடங்களுக்கு முன் பார்த்த அதே தோற்றம், அதே கலகலப்பு. அநாயாசமான பேச்சு, நெஞ்சைத்தொடும் இறுக்கம்… அவன் கொஞ்சங்கூட மாறவில்லை.

“எப்போது லண்டனில் இருந்து வந்தாய்?”

“சென்ற கிழமைதான்… இப்போது என் குடும்பத்துடன் நுவரெலியாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். நீ இங்கு ‘டீ.எம்.ஓ.’வாக இருப்பதாய் கொழும்பு நண்பர்கள் சொன்னார்கள். டெலிபோன் செய்தேன்… முடியவில்லை. எப்போதும் உனது லைன் அவுட் ஒஃப் ஓடர்தான்” என்று சொல்லிச் சிரித்தான்.

அந்த வார்ட்டில் உள்ள நோயாளிகள் எங்கள் இருவரையும் கவனித்துக் கொண்டிருப்பது எனக்குச் சங்கடமாக இருந்தது.

“கொஞ்சம் இருந்துகொள், இன்னும் மூன்றேமூன்று பேஷன்ட்ஸ்தான். பார்த்துவிட்டு வந்து விடுகிறேன். குவார்ட்டர்ஸில் போய்ப் பேசலாம்” என்றேன்.

அவனுக்கு எனது நிலைமை புரிந்தது.

“ஓ.கே., கம் சூன்… நான் காரில் வெயிட் பண்ணுகிறேன்.”

கொழும்பு மருத்துவக் கல்லூரியில் நானும் அவனும் ஒன்றாகச் சேர்ந்து படித்தபோதுதான் நண்பர்களானோம். படிப்பு முடிந்து இரண்டு வருடங்கள் கொழும்பு பெரியாஸ்பத்திரியில் கடமையாற்றிவிட்டு மேற்படிப்புக்காக லண்டன் சென்றவன் அங்கேயே ‘செற்றில்’ ஆகிவிட்டான். நான் இலங்கையின் பல பகுதிகளிலும் கடமையாற்றி விட்டு இப்போது மலைநாட்டில் உள்ள ஆஸ்பத்திரி யொன்றில் கடமையாற்றிக் கொண்டிருக்கிறேன். லண்டனில் இருந்து அவன் ஆரம்பத்தில் எழுதிய கடிதங்களுக்குப் பதில் எழுதினேன். எண்பத்துமூன்றில் நடந்த இனக்கலவரத்தில் நான் பாதிக்கப்பட்டபின் அவனுக்குக் கடிதம் எழுதவில்லை. அவன் எழுதிய கடிதங்களுக்கும் பதிலெழுதாமல் இருந்து விட்டேன்.

வார்ட் ரவுண்ட் முடிந்து நான் சென்றபோது ஆஸ்பத்திரியின் வெளிநோயாளர் பகுதிக்கு முன்னால் சில்வா காரில் அமர்ந்திருந்தான். என்னைக் கண்டதும் காரிலிருந்து இறங்கினான். அவனைத் தொடர்ந்து அவனது மனைவியும் இறங்கினாள்.

“எனது மனைவியை நீ பார்த்ததில்லை…. இவளது பெற்றோர் வெகு காலத்திற்கு முன்பே லண்டனில் குடியேறி விட்டனர். இவள் படித்ததெல்லாம் லண்டனிலேதான். சிறு வயதில் ஒருமுறை இலங்கைக்கு வந்தாளாம். இப்போது மீண்டும் வந்திருக்கிறாள்; பெயர் மாலினி ” என்றான் .

நான் அவளது கையைப்பற்றிக் குலுக்கினேன். அவள் லண்டன்வாசியாக இருந்தாலும் முழுக்க முழுக்க சிங்களப் பெண்ணாகவே காட்சியளித்தாள்.

“சில்வா உங்களைப்பற்றி என்னிடம் அடிக்கடி கதைப்பார்” எனக்கூறிப் புன்னகைத்தாள்.

காரின் பின்சீட்டில் அவர்களது மகள் அமர்ந்திருந்தாள். அவளுக்கு ஏழெட்டு வயதுவரை மதிக்கலாம். அவளருகே ஒரு பெரிய அல்சேஷன் நாய் அமர்ந்திருந்தது. அவள் நாயின் கழுத்தைக் கட்டிப்பிடித்து அதனிடம் ஏதேதோ பேசி செல்லங் கொட்டிக் கொண்டிருந்தாள்.

“வாருங்கள், வீட்டுக்குப் போவோம். எனது மனைவி அங்கிருக்கிறாள் . இன்று எங்கள் வீட்டிலேதான் உங்களுக்குப் பகல் சாப்பாடு ” என்றேன்.

“என்ன, இன்று உன்வீட்டில் சைவர் சாப்பாடுதானே …….. வெள்ளிக் கிழமையல்லவா? எனக்கூறிப் புன்னகைத்தான். சைவச் சாப்பாட்டை அவன் ‘சைவர்’ சாப்பாடு என்றுதான் கூறுவான்.

மாணவப் பருவத்தில் நானும் அவனும் ஒட்டியுறவாடிய நாட்கள் இனிமையானவை. மருதானையில் உள்ள சைவஹோட்டல் ஒன்றில் நாங்கள் சேர்ந்து உணவு அருந்துவோம். தோசை, வடை என்றால் அவனுக்கு உயிர். வெள்ளிக் கிழமைகளில் அவன் பகல் உணவையும் என்னுடன் சேர்ந்து சாப்பிடுவான்; சாம்பார், ரசம், பாயசம் இவற்றை யெல்லாம் ரசித்துச் சாப்பிடுவான்.

“நோ… நோ…, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இப்போது அந்த வழக்கத்தை விட்டுவிட்டேன்” என்றேன்.

“என்ன, வீட்டில் பெற்றிக்கோற் கவர்மென்றா? உன் மனைவி உன்னை மாற்றிவிட்டாள் போலிருக்கிறது.”

நான் புன்னகைத்தபடி வீட்டின் முன்புறக் கதவு மணியை அழுத்தியபோது, மனைவி வந்து கதவைத் திறந்தாள்.

“இவன்தான் சில்வா, எனது மருத்துவக் கல்லூரி நண்பன்; குடும்பத்தோடு நுவரெலியாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறான். இன்று இவர்களுக்கு எங்களது வீட்டிலேதான் லஞ்ச்” என்றேன்.

அவன் என் மனைவிக்கு வணக்கம் சொல்லிக் கைகூப்பினான்.

எல்லோரும் உள்ளே நுழைந்து சோபாவில் அமர்ந்து கொண்டோம். பின்னால் வந்த அல்சேஷன் வீட்டின் உள்ளே நுழைந்து ஒவ்வொரு அறையாகச் சுற்றத்தொடங்கியது.

என் மனைவிக்கு நாய் வீட்டுக்குள் நுழைவது பிடிக்காது. என் முகத்தைப் பார்த்தாள். நான் அதனை கவனிக்காதவன் போல நண்பனின் பக்கம் திரும்பி, “என்ன சில்வா, இது உயர்சாதி நாய்போல் இருக்கிறதே……. இதனையும் லண்டனில் இருந்து கொண்டு வந்தாயா?” என வினவினேன்.

“இல்லையில்லை, இது கொழும்பில் எனது சகோதரியின் வீட்டில் இருக்கிறது. நாங்கள் இங்கு வந்த நாள்முதல் எனது மகளோடு ஒட்டிக்கொண்டுவிட்டது. எனது மகளுக்கும் இதனை விட்டுப் பிரிய மனமில்லை” என்றான்.

சிறிது நேரத்தில் என் மனைவி எல்லோருக்கும் தேநீரும் பிஸ்கட்டும் பரிமாறினாள். அவளது முகத்தில் இருந்த பரபரப்பைக் கவனித்த சில்வா, “¨மிஸிஸ் சந்திரன், பதட்டப்படாதீர்கள், சமைப்பதில் எனது மனைவியும் கெட்டிக்காரி. அவள் உங்களுக்கு உதவி செய்வாள்…. எங்களுக்காக எதுவுமே பிரமாதப்படுத்த வேண்டாம்; நாங்கள் ஹோம்லியாகவே இருப்போம்” என்றான்.

என் மனைவி வெட்கத்துடன் புன்னகைத்தாள். எங்கோ இருந்த எங்கள் வீட்டுப் பூனைக்குட்டி இப்போது என் மனைவியின் கால்களைச் சுற்றிவந்து ‘மியாவ் மியாவ்’ எனத் தனக்கும் தேநீர் கேட்டது.

லீசா – அதுதான் அவர்களது மகளின் பெயர், ஓடிச் சென்று அந்தச் சிறிய பூனைக்குட்டியைத் தூக்கி நெஞ்சோடு அணைத்து அதனைத் தடவிக்கொடுத்தாள். “வெரி நைஸ் கற்” என்றாள்.

அல்சேஷன் உறுமியது. லீசா பூனையிடம் கொஞ்சுவது அதற்குப் பிடிக்கவில்லை. முன்னங்கால்களை நீட்டியபடி நிலத்திலே படுத்து சோகமாக முகத்தை வைத்துக் கொண்டது. இடையிடையே தலையை நிமிர்த்தி உறுமியது.

“றூத் ஸ்ரொப் இற்” எனச் சில்வா அதட்டியதும் அல்சேஷன் மௌனமாகிவிட்டது.

சிறிது நேரத்தில் எனது மனைவியும் மாலினியும் ஐக்கியமாகி விட்டார்கள் என்பதை சமையல் அறையில் இருந்து வந்த சிரிப்பொலியும் கலகலப்பும் புரிய வைத்தன. சிங்கள ஊர்கள் பலவற்றில் நான் வேலை செய்ததால் எனது மனைவி ஓரளவு சிங்களம் பேசக் கற்றிருந்தாள். மாலினியும் அவளும் சிங்களத்தில் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.

சில்வா தனது பையைத் திறந்து உள்ளேயிருந்த உயர்ரக மதுப்போத்தல் ஒன்றை எடுத்து மேசையில் வைத்துவிட்டு, “இது எனது சிறிய அன்பளிப்பு” என்றான்.

“வீ போத் வில் ஹாவ் இற்” என்றேன்.

எனது மனைவி இரண்டு கிளாஸ்களைக் கழுவிவந்து மேசையில் வைத்தாள். மாலினி ஒரு தட்டில் முட்டைப் பொரியல் எடுத்து வந்தாள்; “அதிகமாகக் குடிக்க வேண்டாம். பின்னர் கார் ஓட்ட முடியாது” என அவனை எச்சரித்தாள்.

மீண்டும் அடுப்படியில் கலகலப்பு.

சிறிது நேரத்தில் போத்தலில் அரைவாசி காலியாகியது.

“சந்திரன், யூ ஆர் வெரி லக்கி; அழகான மனைவி உனக்கு வாய்த்திருக்கிறாள்.”

“ஏன் உனது மனைவியும் அழகாகத்தானே இருக்கிறாள்” என்றேன்.

“நோ….. நோ….. அவள் ஒரு சிடுமூஞ்சி. சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் என்னோடு சண்டை பிடிப்பாள். அரைவாசி நாள் சண்டையிலேயே கழிந்துவிடுகிறது.”

“பெண்களுடைய பலமே அதுதான்; கோபத்தைக் காட்டியே கணவன்மார்களை மடக்கி விடுவார்கள். மாலினியின் கோபம் உன் மனதைக் கஷ்டப்படுத்துகிறதென்றால் அவளின் மேல் நீ அளவில்லாத அன்பு வைத்திருக்கிறாய் என்றுதானே அர்த்தம்” என்றேன்.

அவன் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். பின்னர் தாழ்ந்த குரலில் “கவிதா இப்போது எங்கே இருக்கிறாள்?” எனக் கேட்டான்.

சில்வா இன்னும் கவிதாவை மறக்கவில்லை என்பது தெரிந்தது. மருத்துவக் கல்லூரியில் படிக்கும்போது அவன் கவிதாவின்மேல் பித்தாக இருந்தான். அவளது அன்பைப் பெறத் துடித்தான். ஆனால் அவள் அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. காதற்கடிதம் எழுதிக் கொடுத்தான். அவள் பதிலெழுதாமல் இருந்தாள். ஆனாலும் சில்வா அவளை மறந்துவிடவில்லை. அவள் கண்டி வைத்தியசாலைக்கு வேலையேற்றுச் சென்றபோது தன்னைத் திருமணஞ் செய்யச் சம்மதமா என அவளிடம் கேட்டான். அவள் முடியாது என ஒரே வார்த்தையில் பதில் சொன்னாள்.

“கவிதா இப்போது எங்கே இருக்கிறாள் என்று தெரியவில்லை. எங்கோ யாழ்ப்பாணத்தில் ஒரு ஆஸ்பத்திரியில் வேலை செய்வதாகக் கேள்விப்பட்டேன்” என்றேன்.

“அவள் ஏன் என்னை விரும்பவில்லைத் தெரியுமா?”

“தெரியாது”

“எனக்குத் தெரியும். நான் ஒரு தமிழனாக இருந்திருந்தால் அவள் என்னை விரும்பி ஏற்றிருப்பாள்.”

“டோன்ற் பீ ஸில்லி.”

“சந்திரன், எதனையுமே மூடிமறைக்க எனக்குத் தெரியாது. தமிழர்களும் சிங்களவர்களும் ஒருவரை ஒருவர் வெறுக்கும் நிலைமை இந்த நாட்டில் வளர்ந்துகொண்டே வருகிறது. இரு இனங்களுக்கும் இடையே இடைவெளி கூடிக்கொண்டே இருக்கிறது.”

லீசா அணைத்து வைத்திருந்த பூனைக்குட்டி அவளது கைகளிலிருந்து பாய்ந்து இறங்கி, சில்வாவின் அருகே சென்றது. அவனது கால்களைச் சுரண்டி ‘மியாவ் மியாவ்’ என்றது.

சில்வாவின் கண்கள் சிவந்திருந்தன. முட்டைப் பொரியலில் ஒரு துண்டை பூனையை நோக்கி வீசியெறிந்து விட்டு உரத்த குரலில் என்னிடம் கேட்டான். “இதற்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா? அமைதியாக இருந்த இந்த நாட்டை அநியாயப்படுத்தியது யார் தெரியுமா?”

நானும் வழக்கத்திற்கு மாறாகக் கூடுதலாகக் குடித்து விட்டேன் போலத் தெரிகிறது ; தலை சுற்றியது.

“இதற்கெல்லாம் காரணம் பெரும்பான்மையின அரசியல் வாதிகள்தான். ஆட்சியைக் கைப்பற்ற பேரினவாதக் குரல் எழுப்பினார்கள். தமிழர்களின் உரிமைகளைப் பறித்தார்கள். மொழியுரிமை பறிக்கப்பட்டது, தொழில்வளம் பாதிக்கப்பட்டது, கல்வி பாதிக்கப்பட்டது, தமிழர்களது பாரம்பரிய பிரதேசங்கள் பறிபோயின. சாத்வீக வழியில் தமிழர்கள் தமது எதிர்ப்பைக் காட்டியபோது அவர்கள்மேல் வன்செயல்கள் கட்டவிழ்க்கப்பட்டன. 58இல் அடி, 72இல் அடி, 83இல் அடி, தமிழர்களும் அடிக்க அடிக்க ஓடிக்கொண்டே இருந்தார்கள்.” நான் இப்படிக் கூறிக் கொண்டிருந்தபோது சில்வா பூனைக்கு முட்டைப் பொரியலை சிறுசிறு துண்டுகளாக வீசிக்கொண்டிருந்தான்.

சில்வா பூனையிடம் அன்புகாட்டுவது அல்சேஷனுக்குப் பிடிக்கவில்லை. முதலில் உறுமியது. பின்னர் பாய்ந்துவந்து பூனையைக் கௌவ முயன்றது. பூனைக்கு மரணபயம்; ஓடத் தொடங்கியது. வீட்டினுள்ளே ஓடிய பூனை இப்போது முற்றத்தில் அங்குமிங்கும் ஓடியது. அல்சேஷனும் விடுவதாயில்லை. துரத்திக் கொண்டே இருந்தது. லீசா அலறியபடியே அல்சேஷனின் பின்னால் ஓடினாள். பூனை மீண்டும் ஓடிவந்து சமையல் அறைக்குள் நுழைந்து அடுப்புப் புகட்டில் ஏறிக்கொண்டது. அப்போதுதான் அல்சேஷன் பூனையைத் துரத்துவதை நிறுத்தியது.

லீசா அல்சேஷனின் கன்னத்தில் தட்டி, “யூ நோட்டி….. நோட்டி….. டோக் ; சும்மா இருக்கத் தெரியாதா?” எனச் செல்லமாகக் கடிந்தாள்.

சில்வா மௌனமாக இருந்தான். நான் கூறியவை அவன் மனதில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியதோ நான் அறியேன்.

சமையல் முடிந்திருந்தது. எல்லோரும் சாப்பாட்டு மேசையில் உட்கார்ந்தோம். எனது மனைவி உணவு பரிமாறினாள்.

சாப்பாட்டு மேசை கலகலப்பாக இருந்தது. என் மனைவியின் சமையலை விதந்து பாராட்டினான் சில்வா. ரசமும் சாம்பாரும் பிரமாதமாக இருக்கிறது என்றான்.

“மாலினி, எனது அப்பாவுக்கு யாழ்ப்பாணத்தில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர் அங்குதான் கல்வி கற்றார். நான் ஒருமுறை சந்திரனுடன் யாழ்ப்பாணம் சென்றபோது, அப்பா தனது நண்பர்களையும் பார்த்துவரும்படி கூறினார். அவர்களுக்குப் பரிசுப் பொருட்களும் தந்து அனுப்பினார்” என மனைவியிடம் கூறினான்.

யாழ்ப்பாணத்தில் எனது வீட்டுக்கு சில்வா வந்தபோது பிரமாதமான உபசரிப்பு இருந்தது. எனது தாய் தந்தையர் அவனை அன்பு மழையில் நனைத்தனர். அவனுடன் பேசுவதற்கு அவர்களுக்கு மொழி தடையாக இருந்தபோதிலும் உபசரிப்பால் அவனை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். நானும் சில்வாவும் கூவில் கள்ளுக் குடித்து, கீரிமலையில் குளித்து, வீடு திரும்பியபோது அம்மா நண்டுக்கறி சமைத்து உணவு பரிமாற நானும் அவனும் பனையோலைப் பாயில் பக்கத்தில் அமர்ந்து பகிடிகள் பேசிப் பரவசமாய் உணவருந்தியதை சில்வா அடிக்கடி கூறுவான்.

தோசை, இடியப்பம், சொதி, ஒடியல்மாப்பிட்டு, இப்படி விதம் விதமான உணவுகளால் அவனை அம்மா மகிழ்வித்தாள். அப்பு அவனுக்கு நுங்கு வெட்டிக் கொடுத்தார். எங்கெல்லாமோ திரிந்து அவனுக்காக கறுத்தக் கொழும்பான் மாம்பழம், புழுக்கொடியல், பனாட்டு முதலியவற்றைத் தேடிக் கொண்டுவந்து கொடுத்தார்.

“மாலினி, யாழ்ப்பாணம் சென்று அங்குள்ள மக்களுடன் பழகுவது எவ்வளவு இனிமையான அநுபவம் தெரியுமா? இப்போது அங்கு நிலைமை சரியில்லை. சரியாக இருந்தால் நான் உன்னை அங்கு அழைத்துச் சென்றிருப்பேன். சந்திரனது தாய் தந்தையரது அன்பும் அவர்களது எளிமையும் என் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கின்றன” என்றான்.

“சில்வா, அப்படியொரு சந்தர்ப்பம் இனி ஒருபோதும் ஏற்படாது” என்றேன்.

“ஏன் அப்படிக் கூறுகிறாய்? இனிமேல் அங்கு இருப்பவர்கள் எங்களை ஏற்கமாட்டார்களா? இனி இந்த நாட்டில் இனங்களுக்கிடையே சௌஜன்யம் ஏற்படாதா?” எனக் கேட்டான் சில்வா.

அவனைத் தொடர்ந்து மாலினி கேட்டாள், “ஏன் ‘திரஸ்தவாதிகள்’எங்களைக் கொன்று விடுவார்களா?”

“இல்லை இல்லை, நீங்கள் இருவரும் சொல்வது தவறு. உங்கள் இருவரையும் வரவேற்க இப்போது எனது தாய் தந்தையர்கள் அங்கு இல்லை. உங்களுக்குத் தெரிந்தவர்கள்கூட அங்கு இருப்பார்களோ சொல்ல முடியாது” என்றேன்.

“உனது தாய் தந்தையர் இப்போது எங்கே இருக்கிறார்கள் ?” என ஆவலோடு கேட்டான் சில்வா.

நான் எதனை அவனுக்குச் சொல்லக்கூடாதென நினைத்தேனோ அதனைச் சொல்லவேண்டி ஏற்பட்டுவிட்டது. “அவர்கள் இறந்து விட்டார்கள்” என்றேன்,

சில்வாவின் முகத்தில் கவலையின் ரேகைகள் தெரிந்தன. “ஏன் என்ன நடந்தது?” எனக் கேட்டான்.

“அவர்கள் நவாலித் தேவாலயத்தில் சமாதியாகி விட்டார்கள்….. ஷெல் தாக்குதலுக்குத் தப்ப எண்ணி தேவாலயத்தில் தஞ்சம் புகுந்தவர்கள் விமானத்திலிருந்து போடப்பட்ட குண்டுக்குப் பலியாகிவிட்டார்கள்.”

சில்வாவின் கண்கள் கலங்கின. தொண்டை கரகரத்தது பேச முடியாமல் தடுமாறினான். “என்ன கொடுமை இது” என முனகினான்.

“போரின் கொடுமை தமிழர் பிரதேசத்தை, அதன் மக்களை, அவர்தம் பண்பாட்டினை, பாரம்பரியங்களை அணு அணுவாக அழித்துக் கொண்டிருக்கிறது” என்றேன்.

சில்வாவினால் பேசமுடியவில்லை ; மாலினிதான் பேசினாள். “இந்தப் போரைத் தொடங்கியவர்கள் யார்? 83இல் தமிழ் இளைஞர்கள்தானே முதன்முதலில் இதனைத் தொடக்கி வைத்தார்கள்” எனக் கூறிக்கொண்டே என் முகத்தைப் பார்த்தாள்.

பூனைக்குட்டி மெதுவாக வெளியே வந்து ‘மியாவ் மியாவ்’ எனச் சில்வாவைச் சுரண்டத் தொடங்கியது. அவன் ஒரு பிடி சோற்றை அதற்கு வைத்தான். பூனை சாப்பிடத் தொடங்கியது. அப்போது அல்சேஷன் உறுமிக்கொண்டே அதன் அருகில் பாய்ந்து வந்தது. பூனை ஓட்டம் பிடித்தது. அல்சேஷன் துரத்தத் தொடங்கியது. பூனை தனது இருப்பிடத்தை நோக்கிக் குசினிக்குள் ஓடியது. லீசாவும் பின்னால் ஓடினாள்.

“மிஸிஸ் சில்வா. முன்பெல்லாம் தமிழர்கள் தாக்கப்பட்டபோது அவர்கள் தமது சொந்த மண்ணை நோக்கி ஓடினார்கள். ஆனால் அவர்களது சொந்த மண்ணிலேயே அவர்கள் தாக்கப்பட்டபோது அவர்களுக்கு ஓடுவதற்கு இடமில்லாமல் போயிற்று, தம்மைக் காப்பாற்றத் திருப்பித் தாக்குவதைத்தவிர வேறுவழி இருக்கவில்லை” என்றேன்,

பூனை அடுப்படி மூலைக்குள் அகப்பட்டுக் கொண்டது. துரத்திச் சென்ற அல்சேஷன் அதனைக் கௌவிக் குதறத் தாவியது. பூனைக்கு மரணபயம் ; ஓடுவதற்கு இடமிருக்கவில்லை. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ‘சுர்’ரெனச் சீறி முன்னங்கால்களை உயர்த்திப் பாய்ந்து அல்சேஷனின் முகத்தில் விறாண்டியது.

நீண்டிருந்த அதன் கூரிய நகங்கள் நாயின் கண்களிலும் தாடையிலும் காயங்களை ஏற்படுத்தின. அல்சேஷன் பின் வாங்கியது. வலியால் முனகியது. பூனை மீண்டும் மீண்டும் சீறி நாயைத் தாக்கத் தொடங்கியது. இப்போது பூனையின் அருகே நெருங்குவதற்கு அல்சேஷன் தயங்கியது. சில்வாவின் காலடியில் முன்னங்கால்களை நீட்டிப் படுத்துக்கொண்டது.

இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த மாலினி, நான் கூறிய விளக்கத்தைப் புரிந்துகொண்டு ஆமோதிப்பது போலத் தலையாட்டினாள்.

லீசா அல்சேஷனுக்குக் காயம் பட்டிருப்பதைக் கவனித்து விட்டு அழத் தொடங்கினாள். எனது தாய்தந்தையரின் மரணச் செய்தியைக் கேட்டதிலிருந்து சோகமாக இருந்த சில்வாவின் கண்களில் குளமாகத் தேங்கியிருந்த கண்ணீர் இப்போது கன்னங்களில் வழிந்தோடியது.

- வீரகேசரி 1996 

தொடர்புடைய சிறுகதைகள்
பொன்னி ! இப்போது நினைத்தாலும் என் உடலெல்லாம் சிலிர்க்குதடி! உனக்கு எவ்வளவு தியாக சிந்தை! மனிதப் பிறவியெடுத்த எவருமே செய்யத் துணியாத தியாகமல்லவா நீ செய்தது. அதனை நினைக்கும்போது என் கண்கள் குளமாகுதடி. கண்களென்றா சொன்னேன்? எனக்கேது கண்கள்? கண்கள் இருக்கவேண்டிய இடத்தில் இரு குழிகள் ...
மேலும் கதையை படிக்க...
நான் மட்டும் தனியாக இருக்கும் அந்த நேரத்தில் கதவு தட்டப்படும் ஓசை கேட்கிறது. யன்னலின் திரையை நீக்கி வெளியே பார்க்கிறேன். நான் நினைத்தது போலவே புகையிலைத் தரகர் பொன்னம்பலந்தான் நின்றுகொண்டிருந்தார். கதவைத் திறக்காமலே அண்ணன் வீட்டிலில்லை என்பதை அவரிடம் கூறிவிடலாமா என ஒருகணம் ...
மேலும் கதையை படிக்க...
கொழும்பு நகரில் பிரபல்யமானது அந்த ‘லொட்ஜ்’ அங்கு இருந்தவர்களில் அநேகமானோர் என்னைப்போலவே வட பகுதியிலிருந்து வந்தவர்களாகக் காணப்பட்டனர். வெளி நாட்டிலிருக்கும் தமது உறவினர்களுடன் தொடர்பு கொண்டு பணம் பெறுவதற்காகச் சிலரும் வெளிநாடு செல்வதற்கு வேண்டிய ஒழுங்குகள் செய்வதற்காக வேறு சிலரும் வெளிநாடுகளிலிருந்து ...
மேலும் கதையை படிக்க...
சித்திரவேலருக்கு அந்தக் காட்சி அருவருப்பாக இருந்தது. சனநடமாட்டம் நிறைந்த அந்தப் பகுதியில் காதலர்கள் போன்று ஒருவரை ஒருவர் அணைத்தபடி சல்லாபம் புரிந்துகொண்டு, கொஞ்சங்கூடச் சங்கோசப்படாத நிலையில்..... இரு ஆண்கள்! - வெள்ளையர்கள். “என்ன ‘கன்றாவி’யடா இது”- அவர் தனக்குள் முணுமுணுத்தார். அவரின் பக்கத்திலே அவரது பேரன் முருகநேசன். ...
மேலும் கதையை படிக்க...
“றைற்” கண்டக்டர் கனகு குரல் கொடுத்துவிட்டு லாவகமாக பஸ்ஸில் தாவி ஏறிக்கொண்டான். மூச்சுக்கூட விடமுடியாமல் பிரயாணிகளை நெருக்கியடைத்துக்கொண்டு யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தை விட்டுப் புறப்பட்ட பலாலி பஸ், நிறைமாதக் கர்ப்பிணியாய் அசையத் தொடங்கியபோது, உள்ளே வீசிய காற்று சனங்களுக்குச் சற்று இதமாகத்தான் இருந்தது. உரும்பராய் ...
மேலும் கதையை படிக்க...
உயிர்த் துணை
ஒளியைத் தேடி
சுதந்திரத்தின் விலை
மண்புழு
குமிழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)