அலைகள் ஓய்வதில்லை!

 

ராமேஸ்வரம் கடற்கரை அலைகள் ராட்சதமாக எழும்பி கரையை செல்லமாகத் தீண்டிவிட்டுச்சென்றன.

நள்ளிரவின் கடுங்குளிரும் காதைக் கிழிக்கும் அலைகளின் இரைச்சலையும் பொருட்படுத்தாமல் கரையில் நின்று பெருங்கடலின் கடைசிவரை பார்வையைக் கூர்மையாக்கிப் பார்த்தாள் பொன்மணி.

அவள் காதுகளுக்கு ஒரே ஒலிதான் பரிச்சயம் உண்டு. அதுதான் கப்பலின் சங்கொலி.

கச்சத் தீவுக்கு மீன் பிடிக்கச் சென்ற கணவன் ரங்கராசு இன்னும் திரும்பவில்லை. அங்கிருந்த குடிசைவாசிகள் சொன்னார்கள்.

“”இத்தனை நாள் திரும்பி வராமல் இருக்கானே இன்னுமா நம்பிக்கிட்டிருக்கே…”

“”உம் பாடையெடுக்க… உன் வாயைக் கழுவு… வாயிலிருந்து நல்ல வார்த்தை வராது…?” அது மாதிரி கேட்டவளைக் கிழிகிழியெனக் கிழித்து விட்டாள்.

“”இல்ல.. பொன்மணி இலங்கைக்காரங்களும் நமக்குத்தான் ஆகறதில்லையே.. அப்புறம் எப்படி ரங்கராசு திரும்ப வருவான்னு நம்பிக்கிட்டிருக்கே.”

“”நான் கும்புட தெய்வம் என்னைக் கைவிடாது… அவரு திரும்பி வருவாரு…”

“”கையில் சுத்தமா காசில்லை. சாப்பாட்டுக்கு என்ன பண்றது பொன்மணி? நாளைக்குக் கப்பல்ல ஒரு பத்து பேர் மீன் பிடிக்கப்போறாங்க. நானும் போயாறேன்!”

சிம்னி விளக்கு வெளிச்சத்தில் துவண்டு போயிருந்த முகத்துடன் சொன்னான் ரங்கராசு.

“”வேண்டாய்யா இலங்கைக்காரனுங்க நெஞ்சுல ஈரம் இல்லாதவனுங்க… நம்மளைப் பார்த்தா சுட்டுப் போட்டுடுவானுங்க.. நாம ஏதாவது பூ வித்து இல்லை, கூடை பின்னிப் பிழைச்சுக்கலாம்!”

“”தைரியமா இரு புள்ள, கூடை நிறைய மீன் பிடிச்சுக்கிட்டு வந்து உன்னை ராசாத்தி மாதிரி வெச்சுக்கிறேன். நான் வரேன்!” என்று கிளம்பிப் போனவன்தான்… பத்து நாட்கள் மேலாகியும் வரவில்லை.

“அவரு இல்லைன்னா எனக்க நாதி இல்லைன்னு அந்த தெய்வத்துக்குத் தெரியும். நான் கும்பிடற தெய்வம் என்னைக் கைவிடாது. அவரு நிச்யம் திரும்ப வருவாரு.’

பொன்மணியின் மனத்தில் அந்த அசாரத நம்பிக்கை குரல் விடாது ஒலித்துக் கொண்டிருந்தது.

குடிசையின் அருகே கடற்பறவைகளின் கத்தல் காதை துளைத்தது. எழுத்தில் விவரிக்க முடியாதபடி ஒரு அமானுஷ்ய கத்தல். காலை இல்லை இரவு இல்லை என்று எப்போதும் சகிக்க முடியாதபடி ஒரு கத்தல். என்ன ஜன்மங்கள் இவை?

சப்தம் அதிகமாகிப் போனதால் எழுந்து குடிசையின் வெளியே வந்து பார்த்தாள். சவுக்கு மரத்தில் அமர்ந்திருந்த ஒரு கழுகு சிறகை விரித்து விமானம் பறப்பது போலப் பறந்து குடிசைகளைச் சுற்றி இருந்த வேலியில் உட்கார.. எங்கிருந்தோ இன்னும் இரண்டு கழுகுகள் கிளம்பி ஆகாசத்தில் வட்டமடித்துக்கொண்டே அடிவயிற்றிலிருந்து ஆங்காரத்துடன் கத்த ஆரம்பித்தன. என்னத்துக்கு இப்படி ஒரு ஆர்ப்பாட்டம்?

நன்றாய் எட்டிப் பார்த்தவள் வேலியில் உட்கார்ந்திருந்த கழுகு அதன் கால்களில் பந்து போன்ற ஒரு பொருளை இடுக்கிக் கொண்டிருந்தது. மேலே வட்டமடித்துக்கொண்டிருந்த கழுகுகளைச் சற்றும் லட்சியம் செய்யாமல் தன் கூரிய அலகால் அந்த சாம்பல் நிறப் பொருளைக் குத்தி இழுத்தது.

பொன்மணிக்கு புரிந்து போயிற்று. எங்கோ செத்துக் கிடந்த பெருச்சாளியையோ, வேறு எதையோ காலால் எடுத்து வந்து இங்கமர்ந்து சுகமாய் உண்ணுகிறதா? காலின் நகங்களால் அந்த எலியை அழுந்த பிடித்துக் கொண்டு மூக்கால் அதன் உடம்பைப் பல இடங்களில் குத்திச் சித்திரவதைகளில் பண்ணுவதைக் கண்டபோது பொன்மணிக்குக் குமட்டியது.

சும்மாவா சொன்னார்கள் பிணம் தின்னும் கழுகுகள் என்று. சனியன் வேறெங்காவது போய்த்தின்னக் கூடாது? இங்கு வந்து என் கண்ணிலா பட வேண்டும்?

“”ஏலே…! பொன்மணி அங்க என்ன பண்ணிக்கிட்டிருக்கே? கடல்ல மீன் பிடிக்கப் போனவங்கள்லாம் என்னானாங்கனு செய்தியில் சொல்லிக்கிட்டு இருக்காங்க வந்து பாரு!”

அந்தக் குப்பத்து மேட்டுப் பெண்மணி மணிமேகலை உரக்கக் குரல் கொடுத்துக் கூப்பிட்டாள்.

“”நான் வரலை… அந்த ரேடியோவுல என்னைக்கி நல்ல சேதி சொல்லியிருக்கிறான் எழவெடுத்தவனுங்க. எழவு செய்தி வாசிக்கறதுக்குன்னு சம்பளத்துக்கு ஆள் போட்டிருக்கானுவ” பேசிக் கொண்டே இருந்த பொன்மணியின் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது.

கடலில் மீன் பிடிக்கச் சென்றவர்களை இலங்கைப் படையினர் ஒருவர் விடாமல் சுட்டுத் தள்ளினார்கள் என்ற பரிதாபச் செய்தி ஒலித்துக் கொண்டிருந்தது. மணிமேகலை உச்சுக் கொட்டினாள்.

“இந்த இடியான செய்தியைப் பொன்மணி எப்படித் தாங்குவாள்’ இரு கைகளாலும் மார்பைப் பற்றிக்கொண்டு திடுக்கிட்ட விழிகளோடு திரும்பிப் பார்த்தாள். பொன்மணி அங்கு இல்லை. மணிமேகலை குடிசையை விட்டு வெளியே வந்து பார்த்தாள்.

அவளை எங்கேயும் காணவில்லை.

“”ஏலே பொன்னுமணி!” குரல் கொடுத்தவாறு பதற்றத்துடன் மணலில் கால்பதிய ஓடினாள். தூரத்தில் வெகு தூரத்தில் புள்ளியாய் பொன்மணி கரையோரம் அமர்ந்திருப்பது தெரிந்தது.

மணிமேகலை அவளை நோக்கிச் சென்றாள். திடமான நெஞ்சோடு கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் பொன்மணி.

“”அவரு வருவாரு! என்னை அனாதையா விட்டுட்டு எங்கேயும் போயிட மாட்டாரு. நான் கும்புடற தெய்வம் என்னைக் கைவிடாது… அவரு வருவாரு!”

பொன்மணியின் உதடுகள் முணுமுணுத்துக்கொண்டிருப்பத மணிமேகலைக்குத் துல்லியமாகக் கேட்டது.

- அனிதா குமார் (மார்ச் 2011) 

தொடர்புடைய சிறுகதைகள்
மனம் ரொம்பவே கனமா இருந்தது. அப்பாவிடம் அப்படி பேசியிருக்க கூடாது. அப்பாவும் அப்படி பேசியிருக்கக் கூடாது. நாளை தானாக சரியாகிவிடும்தான். இருந்தாலும், பழகி விட்டது. அப்பாவின் முகம் வாடியிருந்தால் எந்த வேலையுமே ஓடாது. ...
மேலும் கதையை படிக்க...
அம்மாக்கண்ணுவின் மனதில் இளஞ்சூடு பரவியது. """"என்னாங்குற! வெள்ளன வந்து சேரு..."" சொல்லிவிட்டு விடியலுக்கு முன் பெரியான் எழுந்து போய் நீண்ட நேரமாயிற்று. அவரசமாக வேலைகளை முடித்தவள் ‘பாழாப்போன மழ பேஞ்சு மூணு மாசமாச்சு’ என்ற முணுமுணுப்புடன் வெட்டுக்கூட்டையுடன் வெளியே வந்தாள். தென்றல் ...
மேலும் கதையை படிக்க...
லோகேஷைத் தெரியுமா  உங்களுக்கு?
லோகேஷைத் தெரியுமா உங்களுக்கு? கொடைக்கானலின் ஏரிக்கும் பூங்காவுக்கும் இடையில் வரிசை வரிசையான கடைகள் மட்டுமின்றி, மசாலா சுண்டல், மாங்காய் பத்தை, சோளக் கதிர், பஞ்சு மிட்டாய், ஐஸ் க்ரீம் என தள்ளு வண்டிகள் நிறுத்தப்பட்டு கனஜோராய் வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. மலர்க் கண்காட்சி ...
மேலும் கதையை படிக்க...
எங்கப் போனா இந்தத் திருட்டு முண்ட... செரியான ஓடுகாலியா கீறாளே... கால்ல சக்கரம் கிக்கரம் கட்டினிருப்பாளா... த்தூ... என்னா மனுசி இவ... கம்பம் கண்ட எடத்துல காலத்தூக்கினு ஊரலையற நாயாட்டம்... நாலுவாட்டி ஆள் மேல ஆளா சொல்லியனுப்பிச்சும் இந்நேரங்காட்டியும் வரலேன்னா என்னாங்கறது... தம் ...
மேலும் கதையை படிக்க...
மனசு அபூர்வமாக ஒரு தினம் அமைதியாக இருந்தது. மகிழ்ச்சியாக இருந்தது. இத்தனைக்கும் அன்றைய தினம் மனைவி வீட்டில்தான் இருந்தாள். வீடும் பழைய வீடுதான். சமையலும் மாமூல் சமையல்தான். டெலிபோனிலோ தபாலிலோ வாய்வழிச் செய்தியாகவோ செய்தித்தாளிலோ என் சம்பந்தப்பட்ட எந்த மகிழ்ச்சித் தகவலும் ...
மேலும் கதையை படிக்க...
பீலி பெய் சாகாடும்
உழைப்பு
லோகேஷைத் தெரியுமா உங்களுக்கு?
நமப்பு
அமைதியாக ஒரு நாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)