Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

அறுவடை நாள்

 

“அங்கேயே..நில்லுங்க…வீட்டுக்குள்ள நுழையாதீங்க..எத்தனை தடவை சொன்னாலும் காதுலயே போட்டுக்க மாட்டேங்கறீங்களே ஏன்?..போங்க ….போய் குளிச்சிட்டு நிலைப்படியை தாண்டி உள்ளே காலெடுத்து வைங்க…”என்று இரைந்தாள் இன்பவள்ளி.

“ஏம்மா.!..அப்பாவை குளிச்சிட்டுதான் உள்ளே வரனும்னு சொல்ற..?”கேட்ட மகனிடம்..”ம்…நம்ம பண்ணைக் காட்டுல இன்னிக்கு அறுவடையில்ல…அங்க போயிட்டு வர்றாரு..அங்க வேலைபார்க்குற கீழ்சாதி காரவங்களை தொட்டு தொலைச்சி குழப்பியிருப்பாருடா…இந்த சங்ககெட்ட மனுஷனை திருத்தறது அவ்வளவு சுலபமில்லை…அதான் அப்படி சொன்னேன்”என்றாள்.

“ஏம்மா…கீழ்சாதிக்காரங்கன்னா யாரும்மா…?..ஏன் அவங்களை தொடக்கூடாது?”என்றான் மகன்.

“போடா…போய் படி..ரொம்ப நொய் நொய்ங்கறே…புத்திசிகாமணி பெத்த சீமந்த புத்திரன்ல..போ”எரிந்து விழுந்தாள் இன்பவள்ளி.

“ஏன்டி… எதை எதையோ சொல்லி சின்னப்பிள்ளை மனசுல நஞ்சை விதைக்கிற..நீ கெட்டதோட இருக்கட்டும்…புள்ளையையாவது மனுசனா வளரவிடு..”தலை துவட்டியபடியே வந்த தயாள்நிதி சிடுசிடுத்தார்.

“போதும்..போதும்…உங்க பகுத்தறிவு சிந்தனைகளை பேசி பரீட்சைக்கு படிக்கிறவனை குழப்பாதீங்க..’மத்திய ரிசர்வ் வங்கியின் தாராள நிதிக்கொள்கை யாது.?’ங்கற கேள்விக்கு பதிலா ‘தயாள்நிதி கொள்கை’யை எழுதி வச்சிடப்போறான்.!”

“போதும் நிறுத்துடி…அப்படிதான் ஒரு தடவை அவனுக்கு பாடம் சொல்லிக்கொடுத்துகிட்டிருக்கும் போது அவன் ‘எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்.?’ன்னு கேட்டான்…அப்பதான் நீயும்…’லேடீஸ் கிளப்புலேயிருந்து கார் அனுப்பறேன்னாங்க…இன்னும் வரலியே..மணி என்னாச்சு.?’ன்னு கேட்ட…நானும் உன் கேள்விக்கு முன்னுரிமை கொடுக்கனுமேன்னு…’பத்தே கால்’ன்னு பதில் சொன்னேன்.!..அவன் அதை பரீட்சையில எழுதிவச்சதும்மில்லாம…விடைத்தாளை திருத்தி கொடுக்கும் போது ஆசிரியர் கேட்டப்ப…’எங்க அப்பா தான் சார் பத்துகால்’ன்னு சொன்னாருன்னு மானத்தை வாங்கிட்டு வரலியா..?”.

“இதோ…பாருடா கண்ணா.!..அம்மா சொல்றதெல்லாம் உண்மையில்ல..அறுவடை முடிஞ்சி களத்துல…கதிரை கசக்கி நெல்லு தனியா…வைக்கோல் தனியா…பிரிச்சி எடுப்போமே…அப்ப வைக்கோல்ல உள்ள சொனை தூதுங்க எல்லாம் காத்துல பறக்கும்…வெயில் நேரமா இருக்குறதால மேலெல்லாம் வேர்வை பிசுபிசுக்கும்…அதுல அந்த தூசுங்களும் ஒட்டிகிட்டா…அலர்ஜியாகி மேலெல்லாம் தடிச்சு அரிக்க ஆரம்பிச்சுடும்..அதான் அம்மா அப்படி சொல்றா…நீ போயி படி போ.”என்று மகனை அனுப்பிவைத்தவர்….

“ஏன்டி..புரிஞ்சிக்க மாட்டியா.?..முகப்பூச்சுல இருந்து…நகப்பூச்சு வரைக்கும் போட பியூட்டி பார்லர் போற…உங்கிட்ட இருக்குற புடவைகள்,நகைகள் புள்ளிவிபரம் ஊருக்கே தெரியனும்னு லேடீஸ் கிளப் போற…அப்படியே ஒருவாரம் நம்ம பண்ணைக்கு வா…அப்ப தான் ஏழைகள் படுற கெஷ்டம் என்னான்னு உனக்கு புரியும்.!”

“நான் சொல்றது பொருளாதாரத்துல ஏழைகளை…உழைப்பாலயும் ,மனசாலயும் அவங்கலெல்லாம் பணக்காரங்க தான்.!..டீஸ்பூனில் சாப்பாட்டையும்,கைநிறைய மாத்திரைகளையும் விழுங்கிட்டு ஜீவிக்குற வர்க்கமில்லை.!..வியர்வை உடம்பைவிட்டு வெளியேறினா…வியாதிங்க வாலாட்டாதுங்கற விபரம் தெரிஞ்ச மனுஷங்க.!..இன்னும் ஆழமா சொல்லப்போனா…இதோ நம்ம முற்றத்துல கொண்டி குவிச்சு கிடக்குற நெல்மணிகள்ல உமியும் தோலும் மட்டும்தான் நம்மளோடது..உள்ளே இருக்குற அரிசி ‘பால்கட்டு’கூட அவங்க வியர்வை தான்.!..முதலீடு செஞ்ச என்னைவிட பாத்திவெட்டி,நீர் பாய்ச்சி…நட்டு களைபறிச்சி…நண்டு மோட்டை அடைச்சி மடைமாத்தி…மருந்து தெளிச்சி …முதல் சூல் பிடிச்சு…அது மகசூலாக மாறுற வரைக்கும் அவங்களைத்தான் அந்த பயிர்கள் அன்னியோன்யமா நெனைச்சிருக்கும்…அவங்க அற்பணிப்புக்கு விளைச்சலால வீரவணக்கம் செலுத்தியிருக்கும்…அதை வழிப்பறி மாதிரி நாம சொந்தம் கொண்டாடிகிட்டு நாமளே அவங்களை அவமதிக்கறது நியாயந்தானா…?”என்றார் தயாள்நிதி.

“அம்மா..அப்பாவை சண்டை பிடிக்காதீங்க…வாசல்ல வண்டிமாட்டை கட்டி தீனி வச்சுகிட்டிருக்காரே…குப்புசாமி தாத்தா ..,அவருகிட்ட கேட்டேன்…’ஆமாம் ..கண்ணு..!கீழ்சாதிக்காரங்க தொட்ட எந்த பொருளும் உங்கள மாதிரி மேல்சாதிக்காரங்க வீட்டுக்குள்ளாற போகனும்னா …அதை தண்ணீயால சுத்தப்படுத்திதான் வீட்டுக்குள்ளாற சேர்ப்பாங்க..’ன்னு சொன்னார்மா.!”

“கேளுங்கம்மா…அதனால….நான்…மோட்டாரை போட்டு..டியூப்பால முற்றத்துல கொட்டிவச்சிருக்குற அவ்வளவு நெல்லையும் தண்ணீர் பாய்ச்சி நனைச்சுட்டேன்..!..இனிமே வீட்டுக்குள்ள எடுத்துகிட்டு போகலாம்லம்மா.?!”ராகத்தோடு கேட்டான் சிறுவன்.

“கேட்டியாடீ..உன் குருட்டு போதனையால …உன் பிள்ளை செஞ்சிருக்குற காரியத்தை.?..நான் நெல்லு விதைச்சேன்..அறுவடை பண்ணி கொண்டாந்து ஒப்படைச்சிட்டேன்…நீ வினை விதைச்சதை நீயே அறுவடை பண்ணிக்க..நாளைக்குள்ள அத்தனை மூட்டை நெல்லையும் ..ஒரே ஆளா…அவிச்சி…ஆவாட்டி…அரிசியாக்கிப்பாரு…அப்பதான் ஏழைங்க கெஷ்டம் என்னான்னு உனக்கு புரியும்…பண்ணையாள் செல்லம்மாவும் வரமாட்டா….”என்றபடி தோட்டத்தை நோக்கி நடந்தார் தயாள்நிதி.

- மே 16_22;2008 

தொடர்புடைய சிறுகதைகள்
"என்னப்பா...வந்துடுவாங்களா..?..நான் வேற பள்ளிவாசலுக்கு தொழுக போகனுமே..."பரூக் மரைக்காயரின் கேள்விக்கு பதிலளிக்க அவகாசமின்றி வீதியில் இறங்கி ஓடினார் பண்ணையாள்சவுரிமுத்து. இன்னும் சிலநாட்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.அதன் பொருட்டு வாக்குகேட்டு வரும் வேட்பாளரை வரவேற்க நாட்டாமையின் பண்ணை வீட்டில் குழுமியிருந்தார்கள் அனைவரும். "ஐயா..வேற்பாளர் வந்துகிட்டிருக்காருங்க..தெரு முனையில் ...
மேலும் கதையை படிக்க...
முதலிரவு அறை. பால் சொம்பேந்திய திருவாரூர் தேரை தோழி பொக்லைன்கள் நெட்டி அறைக்குள் தள்ளி விட்டு கதவை வெளிப்பக்கம் சாத்துகின்றன. பால் சொம்பை கையில் கொடுத்துவிட்டு கால் தொட்டு வணங்குதல் இல்லை.சற்று தள்ளியே அமர்ந்து கை வீணையை மீட்டக்கொடுத்துவிட்டு உச்சி சிலிர்க்க காலால் தரையில் ...
மேலும் கதையை படிக்க...
"வளரு..வளரு..!".. குழந்தைகளுக்கு சிக்கெடுத்து தலைவாரிக் கொண்டிருந்த வளர்மதிக்கு குழைந்து இழையோடும் அந்தக்குரல் யாருடையது என்பது தெரியாமல் இல்லை. அதிகாலையில் வீட்டை விட்டு கிளம்புபவன்,இரவு வீடு திரும்புகையில் ...ஒருநாள் கூட இப்படி அன்பொழுக கூப்பிட்டதில்லை. யோசனையோடு தாழ்ப்பாளை விலக்கியவள் "என்ன மாமா.!..இந்நேரமே திரும்பிட்ட..பொழப்புக்கு போகலியா.?"என்றாள். "இல்ல..வளர்,பொழப்புக்குதான் போனேன்.தலைவரு தர்மலிங்கம் ...
மேலும் கதையை படிக்க...
அவன் பொட்டுப்பொட்டாய் நெற்றியில் துளிர்த்த வியர்வையை அழுத்தித் துடைத்தான். அடர்ந்த புதராய் வளர்ந்து செம்பட்டை பாரித்த மீசையில் வழிந்த வியர்வை,வெடித்து பிளவுபட்டிருந்த உதடுகள் வழியாக ஊடுருவி உப்புக்கரித்தது. அவனுக்கு அந்த சுவை புதிது...அந்த சூழ்நிலை புதிது..இப்போதும் கண்கள் இருட்டத்தான் செய்கிறது...ஆனால் அது நியாயமான பசி ...
மேலும் கதையை படிக்க...
"மாப்ளே.!நாளைக்கு மாசி மகம்டா...திருவிழாவுக்கு கோவில்ல நேர்த்திக்கடன் கிடா வெட்டுவாங்கடா...நம்ம ஊர் தலைகட்டுக்கு வீட்டுக்கு நூறுகிராம் கிடைச்சாலே பெருசு...பத்துநாள் விரதத்தை எலும்பு உறிஞ்சாம எப்படிடா முடிக்கறது..?..முந்நூற்றி எண்பது ரூவா விக்குதேடா ஆட்டுக்கறி..."கோவில் திண்டில் ஆரம்பித்தான் கண்ணன். "ஒங்க..கதை அரைகிலோ,முக்கா கிலோவுல முடிஞ்சிடும்டா,என் கதைய கேளு ...
மேலும் கதையை படிக்க...
நீதியின் நிழலில்
தீண்டும் இன்பம்
‘பலான’எந்திரம்
நாளையும் ஓர் புது வரவு
கறிச்சோறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)