Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

அம்மா

 

அம்மாவிடம் போக வேண்டும். அம்மாவைப் பார்க்க வேண்டும்.

அந்த அவா ஒயாத அலையாக மனதின் கரையை நோக்கி ஆர்பரிக்கிறது.

அது என்பிடரி பிடித்து எப்போதும் முன்னே தள்ளிக்கொண்டு இருக்கிறது. நான் அம்மாவிடம் போகாமலும் விடலாம். நான் அங்கு போனாலும் போகாவிட்டாலும் அம்மாவைப் பொறுத்தவரையில் அது ஒன்றுதான்.போக வேண்டும் என்பது என் அவா மட்டும் அல்ல, அது தர்மீகமும் ஆகும். நான் போகாமல் விடலாம். அதில் என் சுயநலத்தைக் காவாந்து செய்யலாம். அசௌகரியத்தைக் குறைத்துக் கொள்ளலாம்.

நான் அம்மாவிடம் போகாமலும் விடலாம். ஏகலைவன் கட்டைவிரலைக் குருதட்சனணயாகக் கொடுக்காமல் விட்டு இருக்கலாம். நானும் அம்மாவிடம் போகாமல் விட்டுவிடலாம். ஏகலைவன் கட்டைவிரலைக் கொடுக்காது விட்டிருந்தால் குருபக்தி தோற்றிருக்கும். நான் அம்மாவிடம் போகாமல் விடமுடியாது. அது என் பிறப்பையே மறுதலிப்பதாகும். அவர்கள் இச்சையில் நான் விளைந்தாலும் அது எனக்கு வழங்கப்பட்ட அரிய பிச்சையாகத்தான் இருக்கிறது. ‘நீங்கள் அங்கு போய் என்ன பிரயோசனம்’ என்கிறாள் என் மனைவி. நான் போகாமல் இருப்பதாக நினைத்தாலே என் இதயம் குமுறுகிறது. நெஞ்சு நோகிறது. அம்மாவின் பாசம் குழந்தையிடம் மாறுவதில்லை. அவள்தான் உலகம் என்பது எம்நினைவில் அழிந்து போவதில்லை.

அம்மா ஊரில் லட்சுமி, சரஸ்வதி, பார்வதி போன்ற முத்தேவி கடாச்சத்தோடு அமோகமாய் இருந்தா. நாங்கள் கணக்கு வாத்தியாருக்கு அம்மாவிடம் கற்கும் கணக்கு வித்தையைப் பந்தா பண்ணிக் காட்டிக் கொடுத்தது உண்டு. இப்படியும் செய்ய முடியுமா என்று அவர்கள் வாயைப் பிளந்து வழிவது கண்டு மகிழ்ந்தோம். அம்மா ஒரு மேதை. அத்தனை உலக அறிவு, இலக்கியம், இலக்கணம், கணக்கு, சமுகவிஞ்ஞானம், சோதிடம் எல்லாம் அவவுக்கு அத்துபடியாகும். தேவாரம், திருவாசகம் படிக்கப் படிக்க நான் கேட்டுக் கொண்டு இருந்து இருக்கிறேன். எப்படி அவவால் அவற்றைப் பாடமாக்க முடிந்தது என்கின்ற வியப்பு இன்றும் என்னிடம் அடங்கவில்லை. எனக்கு மாத்திரம் அவற்றில் ஒரு துளிகூட நியாபகம் நிற்பதே இல்லை. என் வாழைத்தண்டு மூளையைக் கண்டு அம்மாவுக்குச் சிலவேளை பொறுமை தொலைந்து போனது உண்டு. எனக்கு எப்போதும் அம்மாவைப் பார்ப்பதில் மலைப்பு ஒய்வதில்லை. அம்மாவால் இவ்வளவு ஞானச் சுடராய் எப்படி இருக்கமுடிகிறது என்கின்ற வியப்பு தொடர்கதையாகவே இருந்தது.

அம்மாவிடம் அறிவு மட்டும் அல்ல பணமும் இருந்தது. வட்டிக்கு பணம் கொடுத்து வாங்குவது அம்மாவின் பகுதிநேரத் தொழிலாகும். ஒன்றறுமே எழுதி வைத்து அம்மா கணக்குப் பார்ப்பதில்லை. எல்லாம் அந்த மூளையில் இருந்து படபடவென வரும். யாரும் அம்மாவிடம் திருப்பிக் கணக்கு கேட்டது கிடையாது. அம்மா சொன்னால் அதில் மாற்றம் இருக்காது. திருப்பிக் கணக்கு கேட்டவர்களை நான் கண்டது இல்லை. நான் அம்மாவிடம் அதை கற்க நினைத்தேன். எனது மூளை தொடர்ந்தும் அடம் பிடித்தது. எழுதிக்கூட்டினால்கூட நான் மறுமுறை எப்படிச் செய்வது என்பதை மறந்து போய்விடுவேன்.

தோற்றாலும் அம்மா என்னைத் துாரே விலக்கிவிடவில்லை. ‘ஐந்துவிரலும் ஒரேமாதிரி இல்லை’ எனச் சமாதானம் செய்து கொள்வா.

நோர்வேக்கு வந்த பின்பு பாதுகாப்புக் கருதி அம்மாவையும் அப்பாவையும் நான் இங்கு அழைத்துக் கொண்டேன். அம்மா வந்த புதில் உழைத்ததை எப்படி பெருக்குவது என்பது பற்றி நுட்பமாகச் சொல்லித் தந்தா. எனக்குப் வழமைபோலப் புரிந்தும் புரியாமலும் இருந்தது. அம்மா சிரித்தா. ‘ஐந்து விரலும் ஒரேமாதிரி இல்லை’ என்பது போல அது இருந்ததா அல்லது ‘எனக்கு நீயும் வந்த வாய்த்தாயே’ என்பது போல இருந்ததா என்று எனக்கு விளங்கவில்லை. எனக்கு விளங்காமல் போவது ஒன்றும் புதுமையும் இல்லை.

அப்பா முதலில் இறந்து போனார். அந்த அதிர்ச்சியில் அம்மா சுருண்டு போய் இருந்தா. கீழே கடைக்கு ஒருநாள் சென்ற அம்மா அதிகநேரம் சென்றும் வீட்டிற்குத் திரும்பி வரவில்லை. நான் தேடிப்போய்க் கூட்டி வந்தேன். அம்மா பழைய அம்மாவாக இல்லாது போனது எனக்குப் புரியத் தொடங்கியது. சாந்தமாக இருந்த அம்மாவுக்கு கோபம் வருகிறது. அது ஆற்றாமையில் வருவது என்பது எனக்குப் புரிந்தது. என்மனைவியால் அம்மாவின் குளறுபடிகளைப் பொறுக்க முடியவில்லை. வயோதிபர் இல்லத்தில் அம்மாவை விட்டாகிற்று. நான் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சென்று பார்த்து வருகிறேன். பார்க்காமல் இருக்க என்னால் முடிவதில்லை. அம்மா பழைய அம்மாவாகிவிட வேண்டும் என்கின்ற ஆசை மாறாது நித்தமும் ஆவலோடு அம்மாவை சென்று பார்த்து வருகிறேன். கண்ட கடவுளை எல்லாம் வேண்டி நிற்கிறேன். எந்தக்கடவுளும் கைகொடுப்பதாக எனக்குத் தெரியவில்லை.

இன்றும் போக வேண்டும் என்கின்ற முடிவோடு வெளியே அவசரமாகச் சென்று பேரூந்தில் பாய்ந்து ஏறிக் கொண்டேன். என்னோடு இங்கு அகதிமுகாமில் இருந்து குணன் அந்தப் பேரூந்தில் இருந்தான். அவன் என்னை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. நான் அருகே சென்று ‘தெரியுதா? ‘ என்றேன். இல்லை என்பதுபோல அவன் வாயைப் பிதுக்கினான். ‘நான் பொசைம் முகாமில மூண்டாவது கித்தையில நீங்கள் இருக்கேக்க இருந்தன். என்ர பெயர் தினேஸ். நியாபகம் இருக்கா’ ‘செரியா நியாபகம் இல்லை’ கூறியவன் முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டான். நான் பேசாது தெருவைப் பராக்குப் பார்த்துக் கொண்டு இருந்தேன். அந்த வயோதிபர் இல்லம் வந்துவிட்டது. குணன் என்னைப் பார்க்க விரும்பாது மறுபக்கம் தலையைத் திருப்பிவண்ணமே இருந்தான். நான் பேரூந்தால் இறங்கினேன்.

அந்த வயோதிபர் இல்லத்தின் உள்ளே செல்ல மனம் படபடவென அடித்துக் கொண்டது. இன்று அம்மா என்ன சொல்லுவா? வழமை போலத்தானா? கடவுளே அம்மா ஏதாவது வித்தியாசமாகச் சொல்ல வேண்டும். நான் கடவுளை மனதிற்குள் மன்றாடியபடி உள்ளே சென்றேன். அம்மா இருக்கும் பகுதியில் வேலை செய்யும் தாதிமார் என்னைக் கண்டு வணக்கம் சொல்லிக் கொண்டு போனார்கள். நானும் வணக்கம் சொல்லிக் கொண்டு போனேன். அவர்களைத் தொடர்ந்து பார்த்துப் பார்த்து நல்ல பழக்கமாகிப் போய்விட்டது. எனக்கு ஒருமுறை ஒருவரைப்பார்த்தால் நல்ல நியாபகம் இருக்கும். நான் அடிக்கடி அம்மாவை வந்து பார்த்துச் செல்வது அந்தத் தாதியருக்கு என்மீது ஒருவகை மதிப்பை உண்டு பண்ணி இருக்கிறது. யாருமே வராது அனாதையாக கிடக்கும் சில நோர்வேஜீரோடு ஒப்பிடும்போது எனது பங்களிப்பு அவர்களை மெச்ச வைத்து இருக்க வேண்டும்.

நான் பரபரப்பாகச் சென்று அம்மா முன்பு நின்றேன். அம்மாவில் எந்த பரபரப்போ மற்றமோ இல்லை. நான் அம்மாவின் கையை எனது கையால் பிடித்துக் கொண்டு ‘அம்மா என்றேன்’. அம்மா வெடுக்கென எனது கையைத் தட்டிவிட்டா. ‘நீயாரு? எனக்குக் கலியானமே ஆகேல்ல என்னை அம்மா எண்டுறா… துாரப் போ’ என்றா.

- nortamil.no இல் பிரசுரிக்கப்பட்டது. 

தொடர்புடைய சிறுகதைகள்
அந்தப் பிண்டம் அதன் விருப்பின்றி அதன் மூலத்தின் தேவையில், விருப்பில், இயற்கையின் உந்தலில் வயப்பட்ட காமக் கிளற்சியில், கண்மூடித்தனமான வேகத்தில், அவசர அவசரமாகப் பூமியில் வந்து பிறந்தது. பிறந்த அந்தப் பிண்டத்தின் மூளையில் கேட்காமலே சில கேள்விகள், இரசாயனத்திற்கும் மின்சாரத்திற்கும் ஏற்படும் ...
மேலும் கதையை படிக்க...
அந்தப் பேய் அவன் பிறந்த போதே அவனோடு கூடப் பிறந்து விட்டது. அவனோடு அது கூடப் பிறந்தாலும் அதைப் பற்றி அறிவதற்கு அவனுக்குச் சில காலம் எடுத்தது. அந்தப் பேய் உடன் இருப்பதே தெரியாத ஆரம்பக் காலம். அது குறைவில்லாத மகிழ்வோடு ...
மேலும் கதையை படிக்க...
தம்பிமுத்துவுக்கு இப்போது அறுபத்து எட்டு வயது. கண்பார்வை மங்கிக் கலங்கலாக உருவங்கள் உருகித் தெரிகிறது. அவசரமாய் கண்ணாடியை மாட்டினால் மட்டும் அவை உருப்படியாக மீண்டும் தெரிகின்றன. நினைவுகள் பல கனவுகள்போல தூரத்தில் நிற்கின்றன. சில ஞாபகங்கள் சில வேளைகளில் மட்டும் வருகின்றன. ...
மேலும் கதையை படிக்க...
கோள் விசும்பை நோக்கி வளரும் என்பது அவளுக்குத் தெரிந்து இருந்தும் அதற்கே என்று வாங்கிய பெரியதொரு பூச்சாடியில் அதை வீட்டிற்குள் கொலுவிருத்தினாள். அரம்பையின் எண்ணம் வேறாகியது. இலங்கையில் இருந்து அதைக் கடத்திக் கொண்டு வருவதற்குச் செய்த பிரயத்தனம் சங்கீதாவின் நினைவில் வந்து போயிற்று. ...
மேலும் கதையை படிக்க...
அகல விரிந்த ஆழ்கடல் வருடி வந்த மாலை இளம் காற்றின் மந்தகார மொழி நித்தம் கேட்கும், அது அங்கே நின்று கதை பேசும், கரையோரத்துக் காவலனான பிள்ளையார் கோயில். இருள் கொண்ட நேரத்திலும் இரகசியம் பேசாத அலைகளின் கரைகாணும் கவனயிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள். ...
மேலும் கதையை படிக்க...
அநித்தியம்
உடன் பிறப்பு
பொக்கிசம்
சங்கீதாவின் கோள்
வானத்தால் குதிக்கும் வடலிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)